ஷாந்தி மஞ்சி முதன்முறையாக இந்த வருட ஜனவரி மாதம் பாட்டியானபோது அவருக்கு வயது 36. இருபது வருடங்களில் ஏழு குழந்தைகளை எந்த உதவியுமின்றி வீட்டிலேயே பெற்றெடுத்த அந்த பெண் இறுதியாக மருத்துவமனைக்கு சென்றார்.

“பல மணி நேரங்களாக என் மகள் வலியுடன் போராடினாள். குழந்தை வெளியே வரவில்லை. நாங்கள் ஒரு டெம்போவை வரவழைத்தோம்,” என அவரின் மூத்த மகளுக்கு பிரசவ வலி வந்த சமயத்தை நினைவுகூர்கிறார். அவர் குறிப்பிட்ட டெம்போ என்பது மூன்று சக்கர பயணியர் வாகனம் ஆகும். நான்கு கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஷியோகர் டவுனுக்கு வாகனம் வந்தடைய ஒரு மணி நேரம் ஆனது. மாவட்ட மருத்துவமனைக்கு மம்தா அவசரமாக கொண்டு செல்லப்பட்டு, பல மணி நேரங்களுக்கு பிறகு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

“அவன் 800 ரூபாய் வாங்கிவிட்டான்,” என டெம்போவுக்கான வாடகையை கோபத்துடன் முணுமுணுக்கிறார் ஷாந்தி. “இங்கிருக்கும் எவரும் மருத்துவமனை சென்றதில்லை. எனவே அவசர ஊர்தியை பற்றி எங்களுக்கு தெரியாது.”

அன்றைய இரவு, அவரின் குழந்தையான நான்கு வயது காஜல் இரவுணவு சாப்பிடுவதற்காக ஷாந்தி வீடு திரும்ப வேண்டியிருந்தது. “நான் பாட்டியாகி விட்டேன்,” என்னும் அவர், “எனினும் ஒரு தாயின் பொறுப்புகளும் எனக்கு உண்டு,” எனக் கூறுகிறார். மம்தா, காஜலை தாண்டி அவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

மஞ்சியின் குடும்பம், ஷியோகர் மாவட்டத்தில் இருக்கும் மதோப்பூர் அனந்த் கிராமத்துக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குடிசைப்பகுதியான முசாகர் தொலாவில் வசிக்கிறது. மண்ணாலும் மூங்கிலாலும் கட்டப்பட்ட 40 குடிசைகளில் கிட்டத்தட்ட 300-400 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் முசாகர் சாதியை சேர்ந்தவர்கள். பிகாரின் மிகவும் பின்தங்கிய மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். உள்ளே, தடுக்கப்பட்ட ஒரு மூலையில் சில ஆடுகளோ மாடோ கட்டப்பட்டிருக்கும்.

Shanti with four of her seven children (Amrita, Sayali, Sajan and Arvind): all, she says, were delivered at home with no fuss
PHOTO • Kavitha Iyer

ஏழில் நான்கு (அம்ரிதா, சாயாளி, சஜன் மற்றும் அர்விந்த்) குழந்தைகளுடன் ஷாந்தி. வீட்டிலேயே எந்த சிக்கலுமின்றி பெற்றெடுத்ததாக சொல்கிறார்

தொலாவின் ஒரு முனையிலிருந்து அடிகுழாயில் நீரெடுத்து வந்திருக்கிறார் ஷாந்தி. காலை 9 மணி. வீட்டுக்கு வெளியே இருக்கும் குறுகலான சாலையில் அவர் நின்று கொண்டிருந்தார். சாலையோரத்தில் இருக்கும் ஒரு தொட்டியில் இருந்த நீரை பக்கத்து வீட்டுக்காரரின் எருமை மாடு குடித்துக் கொண்டிருந்தது. வட்டார வழக்கில் பேசும் அவர், தனக்கு நேர்ந்த பிரசவங்களில் பெரிய சிக்கல் ஏற்படவில்லை என்கிறார். ஏழு பிரசவங்கள் வீட்டிலேயே குறைவான சிக்கல்களுடன் நேர்ந்ததாக கூறுகிறார்.

தொப்புள் கொடியை வெட்டியவர் யார் என கேட்டதும் கணவரின் சகோதரரின் மனைவி என சொல்லி தோளை குலுக்குகிறார் அவர். கொடியை வெட்ட என்ன பயன்படுத்தப்பட்டது? தெரியவில்லை என தலையசைக்கிறார். சுற்றி கூடியிருந்த 10-12 பெண்கள், வீட்டிலிருந்து கத்தி ஒன்று கழுவப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறினர். அதை முக்கியமான விஷயமாக பொருட்படுத்த வேண்டுமென அவர்களுக்கு தெரியவில்லை.

முசாகர் தொலாவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் அவரவரின் குடிசைகளிலேயே குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். சிலர் மட்டும் பிரச்சினைகள் நேர்ந்ததால் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்கின்றனர். பிரசவம் பார்க்கவென தேர்ந்த, சுகாதார ஊழியர் எவரும் கிராமத்தில்  கிடையாது. பெரும்பாலான பெண்களுக்கு நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. கிராமத்தில் ஓர் ஆரம்ப சுகாதார மையம் இருக்கும் விஷயமே யாருக்கும் தெரியவில்லை. அங்கு பிரசவங்கள் நடக்குமென்பதும் தெரியவில்லை.

கிராமத்தில் சுகாதார மையமோ அரசு மருந்தகமோ இருக்கிறதா என்ற கேள்விக்கு “தெரியவில்லை,” என்கிறார் ஷாந்தி. 68 வயது பகுலானியா தேவி மதோபூர் அனந்தில் ஒரு புது மருத்துவ மையத்தை பற்றி கேள்விப்பட்டதாக சொல்கிறார். “ஆனால் அங்கு நான் செல்லவில்லை. அங்கு பெண் மருத்துவர் இருக்கிறாரா என தெரியவில்லை.” புதிய ஒரு மையம் இருக்கும் தகவலை யாரும் சொல்லவில்லை என்கிறார் 70 வயது ஷாந்தி சுலாய் மஞ்சி.

மதோபூர் அனந்தில் ஆரம்ப சுகாதார மையம் இல்லை. ஆனால் ஒரு துணை மையம் இருக்கிறது. எப்போதும் அது மூடப்பட்டிருப்பதாக கிராமவாசிகள் சொல்கின்றனர். நாம் சென்றிருந்தபோதும் அது மூடிதான் இருந்தது. 2011-12ம் ஆண்டுக்கான மாவட்ட சுகாதார செயல்பாட்டு திட்டத்தின்படி ஷியோகர் ஒன்றியத்துக்கு 24 துணை மையங்கள் தேவை. ஆனால் 10 மட்டுமே இருக்கிறது.

பிரசவகாலத்தில் அங்கன்வாடியிலிருந்து இரும்புச்சத்து அல்லது சுண்ணாம்புச் சத்து மாத்திரைகள் எதுவும் தனக்கு கொடுக்கப்படவில்லை என்கிறார் ஷாந்தி. அவரின் மகளுக்கும் கிடைக்கவில்லை. பரிசோதனைக்கும் அவர் எங்கும் செல்லவில்லை.

ஒவ்வொரு பிரசவகாலத்தின்போதும் பிரசவ நாள் வரை அவர் வேலை பார்த்தார். “பத்து நாட்கள் கழித்து மீண்டும் வேலைக்கு திரும்பினேன்,” என்கிறார் அவர்.

Dhogari Devi (left), says she has never received a widow’s pension. Bhagulania Devi (right, with her husband Joginder Sah), says she receives Rs. 400 in her account every month, though she is not sure why
PHOTO • Kavitha Iyer
Dhogari Devi (left), says she has never received a widow’s pension. Bhagulania Devi (right, with her husband Joginder Sah), says she receives Rs. 400 in her account every month, though she is not sure why
PHOTO • Kavitha Iyer

தோகரி தேவி (இடது) கைம்பெண் தொகையை பெற்றதே இல்லை என்கிறார். பகுலானியா தேவி (வலதில் கணவர் ஜோகிந்தர் சாவுடன்), மாதந்தோறும் 400 ரூபாய் அவரின் வங்கிக் கணக்கில் வருவதாக சொல்கிறார். காரணம் தெரியவில்லை என்கிறார்

அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் திட்டத்தின்படி கர்ப்பமான பெண்களும் பாலூட்டும் பெண்களும் குழந்தைகளும் உணவுப் பொருட்களாகவோ சூடாக சமைக்கப்பட்ட உணவுகளாகவோ அங்கன்வாடியில் பெற்றுக் கொள்ளலாம். கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளும் சுண்ணாம்பு சத்து மாத்திரைகளும் குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஏழு குழந்தைகளும் ஒரு பேரனையும் பெற்றெடுத்திருக்கும் ஷாந்தி அத்தகைய ஒரு திட்டத்தை கேள்விப்பட்டதே இல்லை என்கிறார்.

அருகாமை ஊரான மாலி பொக்கார் பிந்தா கிராமத்தில் சமூக சுகாதார செயற்பாட்டாளராக பணிபுரியும் கலாவதி தேவி சொல்கையில் முசாகர் தொலாவில் இருக்கும் பெண்கள் எவரும் எந்த அங்கன்வாடியிலும் பதிவு செய்யவில்லை என்கிறார். “இப்பகுதிக்கென இரண்டு அங்கன்வாடிகள் இருக்கின்றன. ஒன்று மாலி பொக்கர் பிந்தாவிலும் ஒன்று கைர்வா தரப்பிலும் இருக்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டுமென பெண்களுக்கு தெரியாததால் எங்குமே பதிவு செய்யாமல் இருந்து விடுகிறார்கள்.” இரு கிராமங்களும் முசாகர் தொலாவிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. நிலமற்ற குடும்பங்களில் வசிக்கும்  ஷாந்தியும் பிற பெண்களும் தினக்கூலி வேலைகளுக்கு நடக்கும் தூரத்திலிருந்து 4-5 கிலோமீட்டர் அதிக தூரம்.

சாலையில் ஷாந்தியை சுற்றி திரண்ட பெண்கள் எந்த உணவும், அதை அங்கன்வாடியில் பெறும் எந்த வழியும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.

அரசின் பிற வசதிகளை பெறுவதும் முடியாத விஷயமாக இருப்பதாக முதிய பெண்கள் புகார் கூறுகின்றனர். 71 வயது தோகரி தேவி சொல்கையில், கைம்பெண் தொகை தனக்கு கிடைத்ததே இல்லை என்கிறார். பகுலானியா தேவிக்கோ என்ன தொகை என தெரியாமலே ஒரு 400 ரூபாய் வங்கிக் கணக்குக்கு வருவதாக சொல்கிறார்.

சமூக சுகாதார ஊழியரான கலாவதி, கல்வியறிவு இல்லாததாலேயே கிடைக்க வேண்டிய சலுகைகளை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்கிறார். “ஒவ்வொருவருக்கும் ஐந்து, ஆறு, ஏழு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு நாளின் எல்லா பொழுதுகளும் அக்குழந்தைகள் சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன. கைர்வா தரப் அங்கன்வாடியில் பதிவு செய்யுமாறு பலமுறை நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை,” என்கிறார் அவர்.

தொப்புள் கொடியை வெட்ட எது பயன்படுத்தப்பட்டது? சுற்றி கூடியிருந்த 10-12 பெண்கள், வீட்டிலிருந்து கத்தி ஒன்று கழுவப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறினர். அதை முக்கியமான விஷயமாக பொருட்படுத்த வேண்டுமென அவர்களுக்கு தெரியவில்லை

மதோபூர் அனந்துக்கான அரசு ஆரம்பப் பள்ளி தொலாவுக்கு அருகே அமைந்திருக்கிறது. ஆனாலும் முசாகர் சமூகத்திலிருந்து மிகக் குறைந்த அளவு குழந்தைகளே அங்கு படிக்கின்றனர். ஷாந்திக்கும் அவரது கணவருக்கும் அவர்களின் ஏழு குழந்தைகளுக்கும் படிப்பறிவு கிடையாது. ”எப்படி இருந்தாலும் அவர்கள் அன்றாடக் கூலியாகதானே வேலை செய்ய வேண்டும்,” என்கிறார் மூத்தவரான தோகரி தேவி.

பிகாரின் பட்டியல் சாதிகள் மிகக் குறைந்த அளவிலேயே படிப்பறிவு பெற்றிருக்கின்றனர். மொத்த இந்தியாவில் வசிக்கும் பட்டியல் சாதியின் படிப்பறிவு விகிதம் 54.7. கிட்டத்தட்ட அதில் பாதியளவான 28.5 சதவிகிதம்தான் பிகாரில் வசிக்கும் பட்டியல் சாதியினரின் படிப்பறிவு விகிதமாக இருக்கிறது. அதிலும் மிகக் குறைவான 9 சதவிகிதம்தான் முசாகர் சமூகத்தின் படிப்பறிவு விகிதமாக இருக்கிறது.

முசாகர் குடும்பங்களுக்கு வரலாற்றுப்பூர்வமாக விவசாய நிலம் சொந்தமாக இருந்ததில்லை.  பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க பட்டியல்சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் சமூக வளர்ச்சி பற்றிய நிதி அயோக் அறிக்கையின்படி 10.1 சதவிகித பிகாரி முசாகர்களிடம்தான் பால் மாடுகள் சொந்தமாக இருக்கிறது.. பட்டியல் சாதி குழுக்களிலேயே குறைந்த அளவு அது. 1.4 சதவிகித முசாகர் குடும்பங்களிடம்தான் சொந்தமாக காளை மாடு இருக்கிறது. அந்த விகிதமும் இருப்பவற்றிலேயே குறைந்த விகிதம்தான்.

சில முசாகர்கள் பன்றிகள் வளர்க்கின்றனர். ஆனால் அவர்களின் பன்றி வளர்ப்பை பிற சாதிகள் அசுத்தமாக கருதுவதாகவும் நிதி அயோக் அறிக்கை தெரிவிக்கிறது. பிற பட்டியல் சாதி குடும்பங்களிடம் சைக்கிள்கள், ரிக்‌ஷாக்கள், இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. ஆனால் முசாகர் குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட கிடையாது.

ஷாந்தியின் குடும்பம் பன்றி வளர்ப்பதில்லை. கொஞ்சம் ஆடுகளும் கோழிகளும் இருக்கின்றன. அவையும் விற்பனைக்கல்ல. அவற்றின் பால் மற்றும் முட்டைகளை சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றனர். “நாங்கள் வாழ்வாதாரத்துக்காக எப்போதுமே உழைத்திருக்கிறோம். பிகாரின் பிற பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் பல வருடங்கள் நாங்கள் உழைத்திருக்கிறோம்,” என்கிறார் அவர். கணவனும் மனைவியும் மாநிலத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிகையில் குழந்தைகளும் சேர்ந்து கொள்கின்றனர்.

A shared drinking water trough (left) along the roadside constructed with panchayat funds for the few cattle in Musahar Tola (right)
PHOTO • Kavitha Iyer
A shared drinking water trough (left) along the roadside constructed with panchayat funds for the few cattle in Musahar Tola (right)
PHOTO • Kavitha Iyer

பஞ்சாயத்து நிதியில் முசாகர் தொலாவின் மாடுகளுக்கென சாலையோரத்தில் (வலது) அமைக்கப்பட்டிருக்கும் பொது குடிநீர் தொட்டி (இடது)

“மாதக்கணக்கில் அங்கு வசிப்போம். சமயங்களில் ஆறு மாதம் வரை கூட இருப்போம். ஒருமுறை காஷ்மீரிலுள்ள ஒரு செங்கல் சூளையில் பணிபுரிய அங்கு ஒரு வருடம் இருந்தோம்,” என்கிறார் ஷாந்தி. அச்சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார். எந்த மகனை அல்லது மகளை கர்ப்பத்தில் அச்சமயம் சுமந்திருந்தார் என்பது அவருக்கு நினைவில் இல்லை. “அது ஆறு வருடங்களுக்கு முன் நடந்தது.” காஷ்மீரின் எந்த பகுதி என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பிகார் தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்த ஒரு பெரிய செங்கல் சூளை என மட்டும் சொல்கிறார்.

பிகாரில் கொடுக்கப்படும் 450 ரூபாய் தினக்கூலியை விட அங்கு அதிகமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு 1000 செங்கல்களுக்கும் 600லிருந்து 650 ரூபாய் வரை பெற்றிருக்கின்றனர். ஷாந்தியும் அவரது கணவரும் குழந்தைகளுடன் சேர்ந்து வேலை பார்த்ததில் நாளொன்றுக்கு 1000 செங்கல்களுக்கும் மேல் சுலபமாக செய்ய முடிந்திருக்கிறது. அந்த வருடத்தில் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதும் ஷாந்திக்கு நினைவிலில்லை. “ஆனால் குறைவாக பணம் கிடைத்தாலும் சொந்த ஊருக்கு திரும்பிடவே நாங்கள் விரும்பினோம்,” என அவர் நினைவுகூர்கிறார்.

தற்போது அவரது கணவரான 38 வயது தோரிக் மஞ்சி பஞ்சாபில் விவசாயக் கூலியாக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு மாதந்தோறும் 4000-லிருந்து 5000 ரூபாய் வரை அனுப்புகிறார். ஷாந்தியும் அங்கு செல்லாமல் இங்குள்ள நெல்வயல்களில் ஏன் வேலை செய்கிறார் என்கிற கேள்விக்கு, தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக வேலைகள் குறைந்துபோய் ஒப்பந்ததாரர்கள் ஆண்களை மட்டும் பணிக்கு எடுப்பதாக சொல்கிறார் அவர். “பணம் கொடுப்பது பிரச்சினைதான். பணம் கொடுப்பதற்கான நாளை தேர்ந்தெடுக்க உரிமையாளர் காத்திருப்பார்,” என்கிறார் அவர். ஊதியம் பெறுவதற்கென ஒரே விவசாயியின் வீட்டுக்கு பல முறை அலைய வேண்டும் என கூறுகிறார் அவர்.

விடிகாலைப் பொழுதில் அவரின் மகள் காஜலும் கிராமத்தின் பிற குழந்தைகளும் சேர்ந்து மழையின் நனைந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். நாம் எடுக்கும் புகைப்படங்களுக்காக, காஜலுக்கென இருக்கும் இரண்டு நல்ல பாவாடைகளில் ஒன்றை அணிந்து கொள்ளுமாறு சொல்கிறார் ஷாந்தி. பிறகு மீண்டும் அக்குழந்தை சகதி நிறைந்த சாலைக்கு சென்று விட்டது. உருண்ட கல் ஒன்றை குச்சிகள் கொண்டு விரட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளுடன் அவளும் சேர்ந்துவிட்டாள்.

ஷியோகர் 1994ம் ஆண்டில் சிதாமர்கியிலிருந்து பிரிக்கப்பட்ட பிகாரின் சிறிய மாவட்டம் ஆகும். குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம். அதன் தலைநகர் மட்டும்தான் மாவட்டத்திலுள்ள ஒரே டவுன். நேபாளில் தோன்றி, மழை நீர் பெருகி, கங்கையின் துணை ஆறாக ஓடி வரும், மாவட்டத்தின் பெரிய ஆறான பாக்மதி, பருவகாலங்களில் பலமுறை கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும். வட பிகாரில் எச்சரிக்கை அளவை எட்டி ஓடும் கோசி மற்றும் பிற ஆறுகளுடன் ஒருங்கிணைந்துவிடும். நெல்லும் கரும்பும்தான் அப்பகுதியின் பிரதான பயிர்கள். இரண்டுமே அதிக நீர் தேவைப்படும் பயிர்கள்.

முசாகர் தொலா-மதாபூர் அந்தில் வசிக்கும் மக்கள் உள்ளூர் நெல் வயல்களிலும் தூரப் பகுதிகளில் இருக்கும் கட்டுமான தளங்களிலும் செங்கல் சூளைகளிலும் வேலை பார்க்கின்றனர். சிறு அளவிலான நிலம் கொண்ட உறவினர்கள் சிலருக்கு உண்டு. ஆனால் இங்குள்ள எவருக்கும் நிலம் சொந்தமாக கிடையாது.

Shanti laughs when I ask if her daughter will also have as many children: 'I don’t know that...'
PHOTO • Kavitha Iyer
Shanti laughs when I ask if her daughter will also have as many children: 'I don’t know that...'
PHOTO • Kavitha Iyer

அவரின் மகளும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்கு, ‘எனக்கு தெரியவில்லை’ என சொல்லி சிரிக்கிறார் ஷாந்தி

ஷாந்தியின் புன்னகையையும் தாண்டி ஜடாமுடி போன்ற அவரின் ஜடைகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றைப் பற்றி கேட்டதும் உடனிருந்த சில பெண்கள் தங்களின் ஜடைமுடிகளை காட்டுவதற்காக சேலை முகப்புகளை எடுத்து செருகிக் கொள்கின்றனர். “அகோரி வடிவ சிவனுக்கானது இது,” என்கிறார் ஷாந்தி. காணிக்கை கொடுப்பதற்காக வளர்க்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறார். “அப்படியே விட்டதில் முடி அதுவாகவே அப்படி ஆகிவிட்டது,” என்கிறார் அவர்.

கலாவதி நம்ப மறுக்கிறார். முசாகர் தொலாவின் பெண்கள் சுகாதாரத்தை பேணுவதில்லை என சொல்கிறார். அவரை போன்ற சுகாதார ஊழியர்கள் பார்க்கும் ஒவ்வொரு பிரசவத்துக்கு 600 ரூபாய் வழங்கப்படும். ஆனால் தொற்று காலத்தில் அப்பணத்தில் ஒரு பகுதி மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாக கலாவதி சொல்கிறார். “மக்களை மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக் கொள்ள வைப்பது கடினமாக இருக்கிறது. பணமும் எங்களுக்கு சரியாக கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் அவர்.

’இந்த மக்கள்’ அனைவரும் தங்களின் பழக்கவழக்கங்களில் விடாப்பிடியாக இருப்பார்களென பார்க்கும் முசாகர் அல்லாத சமூகங்களை பற்றி தெரிந்ததாலோ என்னவோ தன் சமூகத்தின் சடங்குகளை பற்றி சொல்கையில் எச்சரிக்கையாக பேசுகிறார் ஷாந்தி. சத்துணவை பற்றி அவர் பேச விரும்பவில்லை. அவர்களை பற்றி சொல்லப்படும் விஷயத்தை குறிப்பாக நான் கேட்டபோது மட்டும்தான் “நாங்கள் எலிகளை சாப்பிடுவதில்லை,” என சொன்னார்.

கலாவதியும் ஒப்புக் கொள்கிறார். முசாகர் தொலாவில் உணவு பொதுவாக அரிசியும் உருளைக்கிழங்குகளும்தான். “யாரும் பச்சை காய்கறிகளை உண்பதில்லை என உறுதியாக தெரியும்,” என்கிறார் கலாவதி. அப்பகுதியின் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ரத்தசோகை பரவலாக இருப்பதாகவும் சொல்கிறார்.

ஊரின் நியாயவிலைக் கடையிலிருந்து ஒவ்வொரு மாதமும் 27 கிலோ அரிசியும் கோதுமையும் மானிய விலையில் பெறுகிறார் ஷாந்தி. “எல்லா குழந்தைகளையும் குடும்ப அட்டையில் சேர்க்கவில்லை. எனவே இளைய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கு எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். இன்றைய உணவு சோறு, உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பயறு என்கிறார் அவர். இரவில் ரொட்டிகள் இருக்கும். முட்டை, பால் மற்றும் பச்சை காய்கறிகள் அரிதாகவே கிடைக்கும். பழங்களுக்கு வாய்ப்பே இல்லை.

அவரின் மகளும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்கு அவர் சிரிக்கிறார். மம்தாவின் கணவன் வீடு எல்லை தாண்டி நேபாளில் இருக்கிறது. ”எனக்கு அது தெரியவில்லை. ஆனால் அவளுக்கு மருத்துவமனை வேண்டுமென்றால் இங்கு வருவாள்.” என சொல்லி சிரிக்கிறார் ஷாந்தி

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Editor and Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan