“இத்தன வருஷமா என்னை போட்டோ பிடிச்சிக்கிட்டுருக்கே..  என்னப் பண்ணப் போறா?” என உடைந்தபடி கோவிந்தம்மா வேலு என்னைக் கேட்கிறார். இந்த வருடத்தின் மார்ச் மாதம் நேர்ந்த அவரின் மகன் செல்லய்யாவின் மரணம் அவரை நொறுக்கி விட்டிருக்கிறது. “என் பார்வை மொத்தமா போயிடுச்சு. உன்னை என்னால பார்க்க முடியல. என்னையும் வயசான என் அம்மாவையும் யாரு பார்த்துப்பா?”

அவரின் கைகளில் இருந்த வெட்டுக்காயங்களையும் சிராய்ப்புகளையும் என்னிடம் காட்டினார். “வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்படுவேன். இறால் பிடிக்க வலை வீசுற வயசா எனக்கு? என்னால வலை வீச முடியாது. கைய மட்டும்தான் பயன்படுத்த முடியும்,” என்கிறார் கோவிந்தம்மா. பலவீனமாக சிறிய அளவில் இருக்கும் அவர் தனக்கு 77 வயது என நம்புகிறார். “எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க,” என்கிறார் அவர். “மண்ணைத் தோண்டி இறாலைப் பிடிக்கிறதால வெட்டுக்காயம் வருது. தண்ணில என் கை முங்கியிருக்கும்போது ரத்தம் வர்றது தெரியறதில்ல.”

2019ம் ஆண்டில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று கொண்டிருக்கும்போது அவரை முதன்முறையாக நான் கவனித்தேன். வடசென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வரை பரவியிருக்கும் எண்ணூர் பகுதியின் கொசஸ்தலையாறுக்கு இணையாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிறது. முக்குளிப்பான் பறவை போல கால்வாயில் குதித்து நீருக்கடியில் நீந்தும் அவரது திறனே என்னை கவனிக்க வைத்தது. கரடுமுரடான ஆற்றுப்படுகை மணலில் துழாவி அங்கிருக்கும் எவரையும் விட வேகமாக இறால்களை எடுத்தார். இடுப்பு வரையிலான நீரில் நின்று கொண்டு இடுப்பில் கட்டியிருக்கும் பனங்கூடையில் அவற்றை சேகரிக்கும்போது அவரின் தோலின் நிறம் கால்வாய் நீரின் நிறத்தைக் கொண்டிருந்தது.

19ம் நூற்றாண்டில் போக்குவரத்துக்காகக் கட்டப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூரின் கொசஸ்தலையாறு மற்றும் ஆரணி ஆறு ஆகியவற்றுடன் இணைந்து ஓடி, சென்னை நகரத்துக்கான உயிர்நாடியாக செயல்படும் நீரமைப்பாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

PHOTO • M. Palani Kumar

வடசென்னையில் எண்ணூரின் காமராஜர் துறைமுகம் அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றிலிருந்து கோவிந்தம்மா வேலு (வலது) ஓர் உறவினருடன் (இடது) வெளியே வருகிறார். போதுமான அளவில் இறால்கள் கிடைக்காததால் அவர்கள் கொசஸ்தலை ஆற்றுக்கு இணையாக ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை நோக்கிச் செல்கின்றனர்

PHOTO • M. Palani Kumar

கோவிந்தம்மா (இடது ஓரம்), இருளர் சமூகம் சேர்ந்த பிறருடன் சேர்ந்து கொசஸ்தலையாற்றில் இறால் பிடிக்கிறார். ஆற்றினூடாக 2-4 கிலோமீட்டர் சென்று இறால் பிடிக்கின்றனர்

அலையாத்திக் காடுகள் சூழ இருக்கும் கொசஸ்தலையாறு எண்ணூரிலிருந்து வளைந்து நெளிந்து பழவேற்காடு வரை ஓடுகிறது. 27 கிலோமீட்டர் நீளும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு அந்த நீர் மற்றும் நில ஆதாரங்களுடன் வலுவான உறவு இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இங்கு மீன் பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். இப்பகுதியில் கிடைக்கும் இறால் வகைகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.

2019ம் ஆண்டில் முதன்முறையாக நாங்கள் சந்தித்தபோது, “எனக்கு ரெண்டு குழந்தைங்க. என் மகனுக்கு 10 வயசாகும்போதும் மகளுக்கு எட்டு வயசாகும்போதும் புருஷன் செத்துட்டாரு. 24 வருஷம் ஆயிடுச்சு. மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலு மகளுங்க இருக்காங்க. என் பொண்ணுக்கு ரெண்டு மகளுங்க இருக்காங்க. வேறென்ன வேணும்? வீட்டுக்கு வாப்பா, பேசலாம்,” என்றார் கோவிந்தம்மா. அழைத்துவிட்டு வேகமாக அத்திப்பட்டு புதுநகர் நோக்கி நடை போட்டார். ஏழு கிலோமீட்டார் நடையில் இருக்கும் அப்பகுதியின் சாலையோரத்தில் அவர் பிடித்த மீன்களை விற்பார். கோவிட் தொற்று முடக்கத்தால் அவரை நான் சந்திக்க அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பிடித்தது.

தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மா. அவர் இறால் பிடித்துக் கொண்டிருந்த கொசஸ்தலையாறுக்கு அருகே இருக்கும் காமராஜர் துறைமுகத்துக்கு அருகேதான் வசித்து வந்தார். ஆனால் சுனாமி அவரது குடிசையை 2004ம் ஆண்டில் அழித்தது. அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலிருக்கும் அத்திப்பட்டுக்கு இடம்பெயர்ந்தார். சுனாமி பாதித்த இருளர் மக்களில் பெரும்பான்மையானோர் அருணோதயம் நகர், நேசா நகர் மற்றும் மாரியம்மா நகர் ஆகியப் பகுதிகளில் இருக்கும் மூன்று காலனிகளில் இடம்பெயர்த்தப்பட்டனர்.

சுனாமிக்குப் பிறகு அருணோதயம் நகரில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பல வரிசைகளில் இருந்தன. கோவிந்தம்மா அங்குதான் வசிக்கிறார். வீடுகளின் நிறங்கள் மங்கியிருந்தன. சில வருடங்களுக்கு முன் பேத்திக்கு திருமணமானதும் அவருக்கு வீட்டை காலி செய்து கொடுத்துவிட்டு, தற்போது கோவிந்தம்மா அருகே இருக்கும் ஒரு வேப்பமரத்தடியில் வசித்து வருகிறார்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: கோவிந்தம்மாவும் (பச்சைப் புடவை) அவரின் தாயும் (வலது) அருணோதயம் நகரின் அவர்களது வீட்டுக்கு வெளியே. வலது: கோவிந்தம்மா, அவரது மகன் செல்லய்யா (நீலக் கட்டம் போட்ட லுங்கியில் நடுவே), அவரது பேரக் குழந்தைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள்.  குடும்பத் தகராறினால் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் செல்லய்யா தற்கொலை செய்து கொண்டார்

நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு எழுந்தபிறகு கோவிந்தம்மா அத்திப்பட்டு ரயில் நிலையம் நோக்கி இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்வார். இரண்டு நிறுத்தங்களை தாண்டியிருக்கும் அத்திப்பட்டு புதுநகருக்கு ரயிலில் செல்வார். அங்கிருந்து அவர், காமராஜர் துறைமுகத்துக்கு அருகே இருக்கும் மாதா கோவிலுக்கு ஏழு கிலோமீட்டர் நடப்பார். சில நேரங்களில் ஷேர் ஆட்டோவிலும் செல்வார். துறைமுகத்துக்கு அருகே சில இருளர்கள் இறால் பிடிக்கவென சிறு குடிசைகள் போட்டு வசிப்பார்கள். கோவிந்தம்மா அவர்களுடன் சேர்ந்து ஆற்றில் இறங்கி இறால் பிடிக்கத் தொடங்குவார்.

மங்கிக் கொண்டிருக்கும் கண் பார்வை அவரின் பயணத்தில் சிரமத்தைக் கொடுக்கிறது. “கண்ணு முன்ன மாதிரி இல்ல. ரயிலு ஏறவும் ஆட்டோ ஏறவும் யாராவது உதவி பண்ணாட்டி ரொம்ப சிரமமா இருக்கு,” என்கிறார். பயணத்துக்கு மட்டும் குறைந்தது 50 ரூபாய் அவருக்குத் தேவைப்படுகிறது. “ஒருநாளுக்கு இறா வித்து வரக் காசு 200 ரூபா. போக்குவரத்துக்கே காசு போயிட்டா, எப்படி வாழ்க்கைய ஓட்டுறது?” எனக் கேட்கிறார் அவர். சில நேரங்களில் 500 ரூபாயும் வருமானம் ஈட்டுகிறார் கோவிந்தம்மா. ஆனால் பெரும்பாலான நேரம் 100 ரூபாய்தான் கிடைக்கிறது. வருமானமின்றி போகும் நாட்களும் இருக்கின்றன.

காலையில் அலை அதிகமாக இருக்கும் நாட்களில் கோவிந்தம்மா நீரளவு குறைந்த இரவில்தான் அங்கு செல்கிறார். பார்வை குறைந்திருந்தாலும் இருளில் கூட சுலபமாக இறால் பிடிக்கிறார். ஆனால் நீர் பாம்புகளும் குறிப்பாக இறுங்கெழுத்தி மீன்களும் அவருக்கு அச்சத்தைக் கொடுப்பவை. “என்னால சரியா பார்க்க முடியாது… என் கால்ல படறது பாம்பா வலையான்னு கூட தெரியாது,” என்கிறார் அவர்.

“அந்த மீன் போட்டுடாம வீட்டுக்கு வந்துடணும். ஒருவேளை அது கையில் அடிச்சிருச்சுனா, ஏழெட்டு நாளுக்கு எந்திரிக்க முடியாது,” என்கிறார் கோவிந்தம்மா. மீனின் முன்பகுதியில் இருக்கும் கொடுக்குகள் விஷம் கொண்டவையாக கருதப்படுகிறது. வலிமிகுந்த காயங்களை ஏற்படுத்த வல்லவை. “மாத்திரை, மருந்துக்கும் அந்த வலி போகாது. எளவயசு கைங்க வலி தாங்கும். என்ன மாதிரி ஆள் எப்படி தாங்க முடியும், சொல்லு?”

PHOTO • M. Palani Kumar

பக்கிங்ஹாம் கால்வாயில் கோவிந்தம்மா இறால்களை எடுத்து வாயில் பிடித்திருக்கும் கூடையில் சேகரிக்கிறார்

PHOTO • M. Palani Kumar

கோவிந்தம்மாவின் கைகளில் வெட்டுக்காயங்களும் சிராய்ப்புகளும். ‘மணலைத் தோண்டி இறால் பிடிப்பதால் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்படுகின்றன’

அனல் மின் நிலையங்களிலிருந்து தொடர்ந்து கொட்டப்படும் கழிவும் சாம்பலும் கால்வாயில் குவிந்து மேடுகளாகி அவரின் பிரச்சினைகளை அதிகமாக்குகின்றன. “அந்தச் சகதியப் பாரு,” என அவரைப் புகைப்படம் எடுக்க நான் நீரில் இறங்கியதும் சுட்டிக் காட்டுகிறார். “காலை எடுத்து வச்சுப் போக நமக்குச் சத்துப் போயிடுது.”

பக்கிங்ஹாம் கால்வாய்ப்பகுதி வீடுகளைச் சுற்றி அமைந்திருக்கும் எண்ணூர் - மணலி தொழிற்பேட்டையில் அனல் மின் நிலையங்கள், பெட்ரோல் ரசாயனம் மற்றும் உரத் தொழிற்சாலைகள் எனக் குறைந்தபட்சம் 34 அபாயகரமான பெருந்தொழிற்சாலைகள் இருக்கின்றன. மூன்று பெரிய துறைமுகங்களும் அங்கு அமைந்திருக்கின்றன. இங்கிருக்கும் நீராதாரங்களை ஆலைக் கழிவுகள் மாசுபடுத்தி கடல் வளத்தை அழிக்கிறது. 60, 70 வருடங்களுக்கு முன் கிடைத்தது போலன்றி இப்போது வெறும் 2, 3 இறால் வகைகள்தான் கிடைப்பதாக உள்ளூர் மீனவர்கள் சொல்கின்றனர்.

கடந்த வருடங்களில் குறைந்து வரும் இறால் அளவு கோவிந்தம்மாவை கவலைக்குட்படுத்தி இருக்கிறது. “கன மழைக்காலத்துல இறால் அதிகமா கெடைக்கும். காலைல 10 மணிக்கெல்லாம் பிடிச்சுட்டு கெளம்பிடுவோம். இப்போல்லாம் அந்தளவுக்கு எங்களுக்குக் கிடைக்கறதில்லை,” என்கிறார் அவர். “மத்த காலத்துல அரை கிலோ இறால் பிடிக்க 2 மணி ஆகிடும்.” பிடிக்கப்பட்ட இறால் மீன்கள் அந்த நாளின் மாலையில் விற்கப்பட்டுவிடும்.

பெரும்பாலான நாட்களில் இரவு 9, 10 மணி வரை இறால் விற்க அவர் காத்திருக்க வேண்டும். “என்கிட்ட வாங்க வர்றவங்க, ரொம்பக் குறைவான விலைக்கு பேரம் பேசுறாங்க. நான் என்ன பண்றது? அடிக்கிற வெயில்ல இதை விற்க நாங்க உட்கார்ந்திருக்கணும். வாங்க வர்றவங்களுக்கு இது புரியறதில்ல. நீயும்தான் பார்க்கிறேல்ல… இந்த இரண்டு கூறு எறாவ விற்க எவ்ளோ கஷ்டப்படறேன்னு,” என்கிறார் கோவிந்தம்மா. 100-லிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படும் ஒரு கூறில் 20-25 இறால்கள் இருக்கின்றன. “எனக்கு வேற வேலையும் தெரியாது, இதுதான் எனக்குப் பொழப்பு,” என்கிறார் அவர் பெருமூச்செறிந்தபடி.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: அவரது ஒரே உயிர்நாடியான மீன்பிடி உபகரணம். வேலை முடிந்தபிறகு தண்ணீர் குடிக்க பக்கிங்ஹாம் கால்வாய்க்கருகே அமர்கிறார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: காமராஜர் துறைமுகத்துக்கு அருகே, மாதா கோவில் செல்லும் வாகனம் வரக் காத்திருக்கிறார். வலது: அத்திப்பட்டு புதுநகரின் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கருகே இருக்கும் சாலையோரத்தில் கோவிந்தம்மா இறால்களை விற்கிறார். 100-150 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கூறில் 20-25 இறால்கள் இருக்கும்

கோவிந்தம்மா இறால்களை ஐஸ் கட்டிகளில் வைத்து பாதுகாப்பதில்லை. மண்ணைக் கொண்டு அவை கெடாமல் பார்த்துக் கொள்கிறார். “வாங்குறவங்க வீட்டுக்குக் கொண்டு போய் சமைக்கிற வரைக்கும் கெடாது. சமைச்சதுக்கப்புறம் எவ்ளோ ருசியா இருக்கும் தெரியுமா?” என அவர் என்னிடம் கேட்கிறார். “அன்னன்னைக்கு பிடிச்ச எறாவ அன்னன்னைக்கே வித்துடணும். அப்போதான் வீட்ல கஞ்சி குடிக்க முடியும். பேரப்புள்ளைகளுக்கு எதுனா வாங்கிட்டுப் போக முடியும். இல்லைன்னா, பட்டினிதான்.”

இறால் பிடிக்கும் ‘கலை’க்கு அவர் வெகுமுன்பே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டார். “என் அப்பா, அம்மா என்னை படிக்க ஸ்கூலுக்கு அனுப்பல. ஆத்துக்குக் கூட்டிட்டுப் போய் இறால் பிடிக்கக் கத்துக் குடுத்தாங்க,” என கோவிந்தம்மா நினைவுகூருகிறார். “வாழ்க்கை முழுக்க தண்ணில இருந்துட்டேன். இந்த ஆறுதான் எனக்கு எல்லாமும். இதில்லாம என்னால ஒண்ணும் பண்ணிருக்க முடியாது. புருஷன் செத்ததுக்கு பிறகு குழந்தைகளுக்கு சோறு போட எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு அந்தக் கடவுளுக்குதான் தெரியும்.  ஆத்துல இறால் பிடிக்காம போயிருந்தா, நான் வாழ்ந்திருக்கவே முடியாது.”

கோவிந்தம்மாவையும் நான்கு உடன்பிறந்தாரையும் இறால் பிடிக்கவும் வாங்கவும் மீன் வகைகளை விற்கவும் கற்றுக் கொடுத்துதான் அவர்களின் தாய் வளர்த்திருக்கிறார். தந்தை, கோவிந்தம்மாவுக்கு 10 வயதாகும்போது இறந்துவிட்டார். “என் அம்மா திரும்ப கல்யாணம் கட்டிக்கல. எங்களப் பார்த்துக்கறதுக்கே மொத்த ஆயுசையும் செலவு பண்ணுச்சு. இப்போ அவங்களுக்கு நூறு வயசுக்கு மேல ஆகுது. சுனாமி காலனில இருக்கறவங்க, காலனியில மூத்தவங்கன்னு அம்மாவதான் சொல்வாங்க.”

கோவிந்தம்மாவின் குழந்தைகளின் வாழ்க்கைகளும் இந்த ஆற்றைச் சார்ந்துதான் இருக்கிறது. “என் மகள் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன். எந்த வேலைக்கும் சரியாப் போறதில்ல. அவளோட மாமியார்தான் எறா பிடிக்கப் போய் கஞ்சி வாங்கிப் போடுது,” என்கிறார் அவர்.

PHOTO • M. Palani Kumar

கொசஸ்தலையாற்றில் இறால்கள் பிடிக்க செல்லய்யா தயாராகிறார். புகைப்படம் 2021-ல் எடுக்கப்பட்டது

PHOTO • M. Palani Kumar

செல்லய்யா (இடது) பிடித்த மீன்களுடனான வலையைப் பிடித்திருக்க, கொசஸ்தலையாற்றங்கரையில் இருக்கும் குடிசைக்கு அருகே அவரது மனைவி குடும்பத்துக்கான உணவை சமைக்கிறார்

அவரின் மூத்த மகனான செல்லய்யாவும் குடும்ப வருமானத்துக்காக இறால் பிடித்துக் கொண்டிருந்தார். 45 வயதில் இறந்துவிட்டார். அவரை 2021ம் ஆண்டில் சந்தித்தபோது, “எனக்கு சின்ன வயசா இருக்கும்போது அப்பா அம்மா காலைல 5 மணிக்கு எறா பிடிக்க ஆத்துக்கு போயிடுவாங்க. வீடு வர நைட்டு 9, 10 மணி ஆகிடும். நானும் தங்கச்சியும் பசில தூங்கிருவோம். அம்மா, அப்பா எறா வித்தக் காசுல அரிசி வாங்கி வந்து, அதுக்கு அப்புறம் சமைச்சு, எங்களை எழுப்பி சாப்பிட வைப்பாங்க,” என்றார்.

பத்து வயதில் ஆந்திரப் பிரதேச கரும்பு ஆலை ஒன்றில் பணிபுரிய செல்லய்யா சென்றிருந்தார். “அங்க நான் இருக்கும்போதுதான் என் அப்பா எறா பிடிச்சு வீடு திரும்பும்போது ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அப்பா முகத்தைக் கூட என்னால பார்க்க முடியல,” என்றார் அவர். “அவர் இறந்ததுக்குப் பிறகு, அம்மாதான் எல்லாம் பண்ணாங்க. ஆத்துலதான் பெரும்பாலான நேரம் இருந்தாங்க.”

ஆலை, ஊதியத்தை சரிவரக் கொடுக்காததால் செல்லய்யா ஊர் திரும்பினார். அம்மாவின் வேலையை அவருடன் சேர்ந்து பார்க்கத் தொடங்கினார். அம்மாவைப் போலில்லாமல் செல்லய்யாவும் அவரின் மனைவியும்  இறால் பிடிக்க வலைகளை பயன்படுத்தினர். அவர்களுக்கு நான்கு மகள்கள். “மூத்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். ஒரு பொண்ணு பி.ஏ.இங்கிலிஷ் படிக்கிறா. மத்த ரெண்டு பொண்ணுங்களும் ஸ்கூலுக்குப் போறாங்க. இந்த ஆத்துல எறா பிடிச்சுதான் அவங்களப் படிக்க வச்சுக்கிட்டு இருக்கேன் ,” என்றார் அவர்.  “பி.ஏ. படிக்கிற பொண்ணு அடுத்து சட்டம் படிக்கணுமாம். நான்தான் படிக்க வைக்கணும்.”

ஆனால் அவரின் விருப்பம் நிறைவேறவில்லை. 2022 மார்ச் மாதம் செல்லய்யா ஒரு குடும்பத் தகராறினால் தற்கொலை செய்து கொண்டார். மனமுடைந்து கோவிந்தம்மா சொல்கையில், “என் புருஷனும் முன்னாலேயே போய் சேர்ந்துட்டாரு. இப்போ என் பையனும் போயிட்டான். எனக்குக் கொள்ளிப் போடக் கூட யாருமில்ல. என் பையன் பார்த்துக்கிட்ட மாதிரி என்னை யாராவது பார்த்துப்பாங்களா?”  என்கிறார்.

PHOTO • M. Palani Kumar

அருணோதயம் நகரிலுள்ள வீட்டில் செல்லய்யாவின் மரணத்துக்குப் பின் அவரின் புகைப்படத்தைப் பார்க்கும் கோவிந்தம்மா உடைந்து அழுகிறார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: மகனின் மரணத்தால் கோவிந்தம்மா நொறுங்கிப் போயிருக்கிறார். ‘என் புருஷனை முன்னாலேயே இழந்தேன். இப்போ என் மகனும் போயிட்டான்.’ வலது: அருணோதயம் நகர் வீட்டுக்கு வெளியே இறால் கூடையுடன் நிற்கும் கோவிந்தம்மா. குடும்பத்துக்காக அவர் தொடர்ந்து வேலைக்கு செல்கிறார்

இக்கட்டுரையின் மூலமொழி தமிழ். கட்டுரையைத் தொகுக்க உதவிய பாரியின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆசிரியர் ராஜசங்கீதனுக்கும் பாரியின் உதவி ஆசிரியர் எஸ்.செந்தளிருக்கும்  கட்டுரையாளர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan