“எங்கள் வாழ்க்கை ஒரு சூதாட்டம். கடந்த இரண்டு வருடங்களை நாங்கள் எப்படி சமாளித்தோம் என்பது அந்த கடவுளுக்குதான் தெரியும்,” என்கிறார் வி.தர்மா. “எனது 47 வருட கலை வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களில்தான் சாப்பிடக் கூட வழியின்றி தவித்தோம்.”

60 வயது தர்மா அம்மா ஒரு திருநங்கை நாட்டுப்புறக் கலைஞர். தமிழ்நாட்டின் மதுரையில் வாழ்கிறார். “எங்களுக்கென நிலையான ஊதியம் இல்லை,” என்கிறார் அவர். “இந்த கொரோனாவால் எங்கள் வருமானத்துக்கு இருந்த கொஞ்ச வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம்.”

மதுரை மாவட்டத்தின் திருநங்கை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வருடத்தின் முதல் ஆறு வருடங்கள் மிகவும் முக்கியம். இந்த காலக்கட்டத்தில்தான், கிராமங்கள் விழாக்களையும் கோவில்கள் கலாசார நிகழ்வுகளையும் நடத்துகின்றன. ஊரடங்கு காலத்தால் பொது நிகழ்வுகளுக்கு போடப்பட்ட தடை, திருநங்கை கலைஞர்களை பெரிதும் பாதித்திருக்கிறது. கிட்டத்தட்ட 500 திருநங்கை கலைஞர்கள் இருப்பதாக சொல்கிறார் 60 வயது தர்மா அம்மா. நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் இருக்கும் திருநங்கைகளுக்கான மாநில அமைப்பின் செயலாளராக இருக்கிறார் அவர்.

தர்மா அம்மா மதுரை ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு அறையில் வாடகைக்கு இருக்கிறார். அங்கு அவரது உறவினரும் உறவினரின் இரு குழந்தைகளும் உடன் வசிக்கின்றனர். உறவினர் பூ வியாபாரியாக இருக்கிறார். தினக்கூலி பெற்றோருக்கு பிறந்த தர்மா அம்மா மதுரையில் வளர்ந்தபோது கோவில்களிலும் விழாக்களிலும் நடனமாடும் திருநங்கை கலைஞர்களை பார்த்து வளர்ந்திருக்கிறார்.

PHOTO • M. Palani Kumar

மதுரை அறையில் இருக்கும் தர்மா அம்மா: ‘எங்களுக்கென நிலையான ஊதியம் இல்லை. இந்த கொரோனாவால் எங்கள் வருமானத்துக்கென இருந்த கொஞ்ச வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது’

14 வயதில் அவர் பாடத் தொடங்கினார். “பணம் படைத்தவர்கள் அவர்களின் குடும்பங்களில் நடக்கும் இறுதி அஞ்சலி சடங்குகளில் பாட எங்களை அழைப்பார்கள்,” என்கிறார் தர்மா அம்மா. “ஒப்பாரி பாடவும் மாரடி பாட்டு பாடவும் எங்களுக்கு பணம் கொடுப்பார்கள். அப்படிதான் நான் நாட்டுப்புறக் கலைக்குள் நுழைந்தேன்.”

அந்த நாட்களில் நான்கு திருநங்கை கலைஞர்கள் கொண்ட குழுவுக்கு 101 ரூபாய் கொடுக்கப்படும். இந்த வேலையை தர்மா அம்மா தொடர்ந்து, மார்ச் 2020ல் போடப்பட்ட ஊரடங்கு வரை செய்தார். அந்த நேரத்தில் ஒரு நபருக்கு 600 ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டது.

1970-களில் தாலாட்டு பாடவும் நாட்டுப்புற பாடல்கள் பாடவும் மூத்த கலைஞர்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார். நாளடைவில் ஆட்டங்களை கவனித்து நடன அசைவுகளையும் கற்றுக் கொண்டார். ராஜா ராணி ஆட்டத்தில் ராணி பாத்திரத்தில் அவர் நடிக்கத் தொடங்கினார்.

”1970-களில், நடன ஆட்டத்தில் வரும் நான்கு பாத்திரங்களையும் ராஜா, ராணி, கோமாளி என உடை உடுத்தி ஆண்களே நடித்தனர்,” என நினைவுகூர்கிறார் தர்மா அம்மா. இன்னொரு மூன்று பேருடன் இணைந்து முதன்முறையாக திருநங்கை கலைஞர்கள் மட்டுமே பங்குபெற்ற ராஜா ராணி ஆட்டத்தை கிராமத்தில் நடத்தியதாக அவர் கூறுகிறார்.

A selfie of Tharma Amma taken 10 years ago in Chennai. Even applying for a pension is very difficult for trans persons, she says
PHOTO • M. Palani Kumar
A selfie of Tharma Amma taken 10 years ago in Chennai. Even applying for a pension is very difficult for trans persons, she says
PHOTO • M. Palani Kumar

10 வருடங்களுக்கு முன் சென்னையில் தர்மா அம்மா எடுத்த செல்ஃபி. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பது கூட திருநங்கைகளுக்கு மிகவும் கடினம் என்கிறார் அவர்

உள்ளூர் ஆசிரியர்களின் வழிகாட்டலில் கரகாட்டத்தையும் அவர் கற்றுக் கொண்டார். “கலாசார நிகழ்வுகளிலும் அரசு நிகழ்வுகளிலும் ஆடும் வாய்ப்பை இது பெற்றுக் கொடுத்தது,” என்கிறார் அவர்.

பிறகு அவர் தன்னுடைய திறமையை பிற கலை வடிவங்களுக்கும் விரிவாக்கினார். மாடு ஆட்டம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலியவற்றையும் ஆடக் கற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இந்த நிகழ்வுகள் நடந்தன. “முகத்துக்கு பவுடர் போட்டு எங்களின் ஆட்டத்தை இரவு 10 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 4 அல்லது 5 மணி வரை தொடருவோம்,” என்கிறார் தர்மா அம்மா.

ஜனவரி தொடங்கி ஜூன், ஜூலை மாதம் வரை, பல இடங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வரும். 8000-லிருந்து 10,000 ரூபாய் வரை மாதத்துக்கு சம்பாதித்தார். வருடத்தின் மீத மாதங்களில் தர்மா அம்மா மாதத்துக்கு 3000 ரூபாய்தான் சம்பாதித்தார்.

அவற்றையெல்லாம் ஊரடங்கு மாற்றி விட்டது. “தமிழ்நாட்டின் இயல் இசை நாடக மன்றத்தில் பதிவு செய்ததும் கூட உதவவில்லை,” என்கிறார் அவர். இசை, நடனம், நாடகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான தமிழ்நாட்டு அரசின் மையம் இது. “ஆண், பெண் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஓய்வூதியத்துக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். திருநங்கை கலைஞர்களுக்கு கடினம். என்னுடைய விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பரிந்துரைகள் பெற்று வரும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். யாரிடமிருந்து இவற்றை பெறுவது என எனக்கு தெரியவில்லை? எனக்கு சில சலுகைகள் கிடைத்தால் இத்தகைய கொடும் காலத்தில் எனக்கு உதவும். ரேஷன் அரிசியைத்தான் சமைக்கிறோம். காய்கறி வாங்கக் கூட பணமில்லை.”

*****

மதுரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விளாங்குடி டவுனில் இருக்கும் மேகியும் இதே சூழலைத்தான் எதிர்கொள்கிறார். கடந்த வருடம் வரை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு பயணித்து கும்மிப்பாட்டு பாடி அவர் சம்பாதித்து வந்தார். நடவு துளிர்க்கத் தொடங்குவதை கொண்டாட பாடப்படும் இப்பாடல்களை பாட மதுரையில் சில திருநங்கை கலைஞர்கள்தான் இருக்கின்றனர். அவர்களில் இவரும் ஒருவர்.

PHOTO • M. Palani Kumar

மேகி (கேமிராவுக்கு முதுகை காண்பிப்பவர்) நண்பர்கள் மற்றும் சக கலைஞர்களுடன் அவரது அறையில். ஷாலினி (இடது), பவ்யஸ்ரீ (ஷாலினிக்கு பின்), அரசி (மஞ்சள் குர்தாவில்), கே.ஸ்வெஸ்திகா (அரசிக்கு அருகே), ஷிஃபானா (அரசிக்கு பின்னால்). விழா அழைப்புகளுக்கான காலம் ஜூலையோடு முடிவுறும் நிலையில், மிச்ச வருடத்தை ஓட்ட அவர்களுக்கு பெரிய வழிகள் எதுவும் இல்லை

“நான் திருநங்கை என்பதால் (மதுரையில் உள்ள) வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது,” என்கிறார் 30 வயது மேகி. இவரின் பெற்றோர் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். ”அச்சமயத்தில் எனக்கு வயது 22. ஒரு நண்பர் என்னை முளைப்பாரி விழாவுக்கு அழைத்து சென்றார். அங்குதான் கும்மிப்பாட்டு கற்றுக் கொண்டேன்.”

மேகி தங்கியிருக்கும் விளாங்குடி தெருவில் 25 திருநங்கைகள் வசிக்கின்றனர். அவர்களில் இருவர் மட்டும்தான் கும்மிப்பாட்டு பாடுபவர்களென சொல்கிறார் அவர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜூலை மாதமும் 10 நாட்களுக்குக் கொண்டாடப்படும் முளைப்பாரி விழாவில், கிராம தெய்வத்திடம் மழையும் மண்வளமும் நல்ல விளைச்சலும் வேண்டி பாடப்படும் பாடல் இது. “விழாவில், 4000-லிருந்து 5000 ரூபாய் வரை எங்களுக்கு கொடுப்பார்கள்,” என்கிறார் மேகி. “கோவில்களில் பாடவும் சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அவை கிடைக்குமென உறுதியாக சொல்ல முடியாது.”

ஆனால் அந்த விழா ஜூலை 2020-ல் நடக்கவில்லை. இந்த மாதமும் நடக்கவில்லை. கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஊரடங்குகள் தொடங்கியதால், மேகிக்கு மிகக் குறைவான இடங்களிலிருந்தே அழைப்புகள் வருகின்றன. “இந்த வருடத்தில் ஊரடங்குக்கு முன் மதுரை கோவில் ஒன்றில் மூன்று நாட்கள் (மார்ச் மாதத்தின் நடுவே) பங்குபெறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது,” என்கிறார் அவர்.

விழா அழைப்புகளுக்கான காலம் ஜூலையோடு முடிவுறும் நிலையில், மிச்ச வருடத்தை ஓட்ட அவர்களுக்கு பெரிய வழிகள் எதுவும் இல்லை.

At Magie's room, V. Arasi helping cook a meal: 'I had to leave home since I was a trans woman' says Magie (right)
PHOTO • M. Palani Kumar
At Magie's room, V. Arasi helping cook a meal: 'I had to leave home since I was a trans woman' says Magie (right)
PHOTO • M. Palani Kumar

மேகியின் அறையில் சமையலுக்கு வி.அரசி உதவுகிறார்: ‘ திருநங்கை என்பதால் நான் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது,’ என்கிறார் மேகி (வலது)

கடந்த வருடம் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தன்னார்வலர்கள் சில தடவை திருநங்கை கலைஞர்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்தனர். மேலும் மேகி, கலை மற்றும் கலாசாரத்துறையில் பதிவு செய்திருப்பதால், இந்த வருடத்தின் மே மாதம் அரசிடமிருந்து ரூ.2000 கிடைத்தது. “மற்றவர்கள் பெற முடியாதது துரதிர்ஷ்டவசமானது,” என்கிறார் அவர்.

அதிக வாய்ப்புகள் கிடைக்கும் மாதங்களில் கூட, ஊரடங்குக்கு முன்னமே அழைப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார் மேகி. “நிறைய ஆண்களும் பெண்களும் கும்மிப்பாடல்களை கற்கின்றனர். கோவில் நிகழ்வுகளில் அவர்களே அழைக்கப்படுகின்றனர். பல இடங்களில் திருநங்கைகளாக இருப்பதால் நாங்கள் ஒதுக்கப் படுகிறோம். ஆரம்பத்தில் இந்த கலைவடிவம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கானதாக இருந்தது. அதனால் பல திருநங்கை கலைஞர்கள் பங்குபெற்றனர். ஆனால் அதன் புகழ் அதிகரிக்கத் தொடங்கியதும் எங்களுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன.”

*****

மதுரையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலையில் வர்ஷாவும் 15 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அடிப்படை உணவுப்பொருட்களை வாங்கக் கூட பணமில்லாததால் தம்பியை சார்ந்து அவர் இருக்கிறார். அவரின் தம்பி இயந்திர பொறியியலில் பட்டய படிப்பு படித்துவிட்டு உள்ளூர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

29 வயது வர்ஷா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக் கலையில் முதுகலை படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தொற்று தொடங்குவதற்கு முன் வரை, இரவு நேரங்களில் விழாக்களிலும் கோவில்களிலும் நாட்டுப்புற நடனம் ஆடி சம்பாதித்து, பகல் நேரங்களில் படித்தார். 2-3 நேரங்கள் மட்டுமே ஓய்வு கிடைக்கும்.

Left: Varsha at her home in Pudukkottai district. Behind her is a portrait of her deceased father P. Karuppaiah, a daily wage farm labourer. Right: Varsha dressed as goddess Kali, with her mother K. Chitra and younger brother K. Thurairaj, near the family's house in Viralimalai
PHOTO • M. Palani Kumar
Left: Varsha at her home in Pudukkottai district. Behind her is a portrait of her deceased father P. Karuppaiah, a daily wage farm labourer. Right: Varsha dressed as goddess Kali, with her mother K. Chitra and younger brother K. Thurairaj, near the family's house in Viralimalai
PHOTO • M. Palani Kumar

இடது: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீட்டில் வர்ஷா. அவருக்கு பின்னால் இறந்துபோன அவரின் தந்தை, பி.கருப்பையாவின் படம் இருக்கிறது. வலது: காளியாக உடை அணிந்திருக்கும் வர்ஷா தாய் சித்ரா மற்றும் தம்பி கே.துரைராஜ் ஆகியோருடன் விராலிமலையில் வீட்டுக்கு அருகே

கட்டக்கல் ஆட்டம் ஆடும் முதல் திருநங்கை அவர்தான் என்கிறார் (உள்ளூர் செய்தித்தாளில் அது பற்றி வெளியான செய்தியை எனக்கு அனுப்பினார்). இரண்டு நீளமான கட்டைகளை கால்களுடன் கட்டிக் கொண்டு இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் அது. அதற்கு நிறைய அனுபவமும் சமநிலை காக்கும் திறனும் இருக்க வேண்டும்.

வர்ஷாவின் திறமைகள் இன்னும் பல வடிவங்களுக்கு விரிவடைகிறது. தலித்களின் பாரம்பரிய இசைக்கருவியான தப்பு இசைக்கு ஏற்ப ஆடும் தப்பாட்டம் ஆடுவார். தெய்வீக நடனம்தான் தனக்கு பிடித்த நடனம் என்கிறார் அவர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் அவர். அவரின் நடனங்கள் பல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி இருக்கின்றன. பல உள்ளூர் அமைப்புகளால் பாராட்டப்பட்டிருக்கிறார். பெங்களூரு, சென்னை, தில்லி முதலிய நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று நிகழ்வுகளில் பங்குபெற்றிருக்கிறார்.

அர்த்தநாரி கலைக்குழுவின் நிறுவனரும் வர்ஷாதான். திருநங்கை கலைஞர்களுக்காக 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்குழுவில் இருக்கும் ஏழு உறுப்பினர்கள் மதுரையின் வெவ்வேறு கிராமங்களில் வசிக்கின்றனர். முதல் மற்றும் இரண்டாம் கோவிட் அலைகள் தொடங்குவதற்கு முன், ஜனவரியிலிருந்து ஜுன் மாதம் வரை குறைந்தது 15 நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வரும். “மாதத்துக்கு 10000 ரூபாயாவது சம்பாதித்து விடுவோம்,” என்கிறார் வர்ஷா.

“கலைதான் எனக்கு வாழ்க்கை,” என்கிறார் அவர். “நாங்கள் ஆடினால்தான் உணவு கிடைக்கும். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சம்பாதிப்பதை கொண்டுதான் மிச்ச ஆறு மாதங்களுக்கு நாங்கள் வாழ்க்கை ஓட்ட முடியும்.” அவருக்கு பிற திருநங்கை கலைஞர்களுக்கும் கிடைக்கும் வருமானம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே சரியாக இருக்கிறது. “சேமிக்கும் அளவுக்கு வருமானம் இருப்பதில்லை,” என்கிறார் அவர். “உடை, பயணம், உணவு ஆகியவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் சேமிக்க ஒன்றும் இருப்பதில்லை. கடன் கேட்டு பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு சென்றால் எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. எந்த வங்கியிடமிருந்தும் எங்களுக்கு கடன் கிடைக்காது (தேவையான ஆவணங்கள் இருக்காது). 100 ரூபாய் கிடைத்தாலும் ஆடுவதற்கு தயாரான சூழ்நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.”

Varsha, a popular folk artist in Tamil Nadu who has received awards (displayed in her room, right), says 'I have been sitting at home for the last two years'
PHOTO • M. Palani Kumar
Varsha, a popular folk artist in Tamil Nadu who has received awards (displayed in her room, right), says 'I have been sitting at home for the last two years'
PHOTO • M. Palani Kumar

தமிழ்நாட்டின் பிரபல நாட்டுப்புற கலைஞராக இருந்து பல விருதுகளை பெற்ற (அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது) வர்ஷா, “கடந்த இரண்டு வருடங்களாக வீட்டிலேயே அமர்ந்திருக்கிறேன்,” என்கிறார்

தன்னுடைய திருநங்கை அடையாளத்தை வர்ஷா ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது 10. 12ம் வயதில் மேடையில் நாட்டுப்புற நடனம் ஆடினார். உள்ளூர் விழாக்களில் ஆடப்படும் நடனங்களை பார்த்து அவர் நடனம் கற்றுக் கொண்டார். நாட்டுப்புற கலைக்கான பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்த பிறகுதான் அவர் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார்.

“என்னுடைய குடும்பம் என்னை ஏற்க மறுத்தது. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. நாட்டுப்புற கலையில் நான் கொண்டிருக்கும் ஈடுபாடுதான் என் குடும்பம் (இறுதியில்) என்னை ஏற்க காரணமாக இருந்தது,” என்னும் வர்ஷா, தாய் (முன்னாள் விவசாயக் கூலி) மற்றும் தம்பி ஆகியோருடன் விராலிமலை கிராமத்தில் வசிக்கிறார்.

“ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நான் வீட்டில்தான் இருக்கிறேன் (மார்ச் 2020ல் வந்த முதல் ஊரடங்கிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை (நண்பர்களை தவிர). தொண்டு நிறுவனங்களிடமும் தனி நபர்களிடமும் உதவி கேட்டு பார்த்தேன். ”கடந்த வருடம் எங்களுக்கு உதவ முடிந்தவர்களுக்கு இந்த வருடம் உதவ முடியவில்லை,” என்கிறார் அவர். “கிராமப்புறத்தை சேர்ந்த திருநங்கை கலைஞர்கள் அரசிடமிருந்தும் எந்தவித உதவியை பெற முடியவில்லை. கடந்த வருடம் போலவே இந்த வருடமும் வேலை ஏதுமின்றி  எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எவரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை.”

இந்த கட்டுரைக்கான நேர்காணல்கள் தொலைபேசியில் எடுக்கப்பட்டவை.

தமிழில் : ராஜசங்கீதன்

Reporting : S. Senthalir

S. Senthalir is a Reporter and Assistant Editor at the People's Archive of Rural India. She was a PARI Fellow in 2020.

Other stories by S. Senthalir
Photographs : M. Palani Kumar

M. Palani Kumar is PARI's Staff Photographer and documents the lives of the marginalised. He was earlier a 2019 PARI Fellow. Palani was the cinematographer for ‘Kakoos’, a documentary on manual scavengers in Tamil Nadu, by filmmaker Divya Bharathi.

Other stories by M. Palani Kumar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan