அவரது பிரசவ வலி துவங்கியவுடன், 23 வயதான ரனோ சிங், அவரது கணவர் மற்றும் மாமியாருடன் மலையோரத்தில் உள்ள அவர்களின் சிறிய வீட்டிற்கு அவசர அவசரமாகச் சென்றனர். அது அதிகாலை 5 மணி, இருள் சூழ்ந்திருந்தது. அவர்களுக்கு முன்னால் கடக்க வேண்டிய 1.5 கிலோ மீட்டர் மலை இருந்தது. அது அவர்களை முக்கிய சாலைக்கு அழைத்துச்செல்லும். அங்கிருந்து அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வண்டி காத்திருக்கும், அது அவர்களை தோராயமாக அவர்களது கிராமமான சிவாலியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்.

அவர்கள் டோலி ஏற்பாடு செய்ய முயற்சி செய்தார்கள். டோலி என்பது கர்ப்பிணி பெண்களை சுமந்து செல்லும் பல்லக்கு. அதில் பெண்களை வைத்து 4 மூலையையும் 4 பேர் சுமந்து செல்வார்கள். அவர்கள் முக்கிய சாலையில் பெண்களை இறக்கிவிடுவார்கள். எப்போதும் அங்கு காத்திருக்கும் வாகனம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும். அது அதிகாலை நேரம் என்பதால் அவர்களுக்கு டோலி கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் நடக்கத்துவங்கிவிட்டார்கள்.

ரனோவால் பாதி தூரம் மட்டுமே ஏற முடிந்தது. “வலியால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில், நாங்கள் பாதி தூரம் மட்டுமே கடந்திருந்தோம். அப்போதே நான் நடக்காமல் சாலையில் அமர்ந்துவிட்டேன். எனது கணவர் எனது பிரச்னையை உணர்ந்து, அருகில் இருந்த வீட்டிற்கு ஓடிச்சென்றார். அவர்கள் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான், அந்த வீட்டிலிருந்த அத்தை 10 நிமிடத்தில் போர்வை மற்றும் தண்ணீருடன் வந்தார். அவர் மற்றும் எனது மாமியாரின் உதவியுடன், நான் பிரசவித்தேன். (ரனோவின் கணவருக்கு 34 வயதாகிறது. அவர் நியாயவிலைக்கடையில் உதவியாளராக உள்ளார். அவரின் மாத வருமானம் ரூ.8 ஆயிரம் ஆகும். அதை வைத்து அவர்களின் 3 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை கொண்ட குடும்ப செலவுகளை கவனித்துக்கொள்கின்றனர். அவரது கணவர் பெயரை குறிப்பிட ரனோ விரும்பவில்லை).

“எனது மகன் (ஜகத்), நாங்கள் முக்கிய சாலையை கடந்து சென்றுகொண்டிருக்கும் வழியிலேயே இந்த காட்டில் பிறந்தான்“ என்று பயமுறுத்தும் வகையில், மரங்கள் சூழ்ந்த குறுகலான மலைப்பாதையில் நடந்த, அவரது முதல் குழந்தை பிறப்பை நினைவுகூர்ந்து தொடர்ந்து பேசுகிறார். “இதுபோன்ற ஒரு குழந்தைபிறப்பை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது நினைத்தாலும், மயிர் கூச்செரியச்செய்யும் ஒன்றாக அது உள்ளது. ஆனால், எனது குழந்தை பாதுகாப்பாக வெளியே வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மதிப்பு மிக்க ஒன்று“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலை, ஜகத் பிறந்த உடனே ரனோ அவரது வீட்டிற்கு நடந்து திரும்பிச்சென்றுவிட்டார். அவரது மாமியார் 58 வயதான பிரதிமா சிங் குழந்தையை தூக்கிக்கொண்டார்.

In February 2020, Rano Singh of Almora district gave birth on the way to the hospital, 13 kilometres from Siwali, her village in the mountains (right)
PHOTO • Jigyasa Mishra
In February 2020, Rano Singh of Almora district gave birth on the way to the hospital, 13 kilometres from Siwali, her village in the mountains (right)
PHOTO • Jigyasa Mishra

அல்மரா மாவட்டத்தைச் சேர்ந்த ரனோ, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அவரது கிராமமான சிவாலியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரசவித்தார். மலையில் உள்ள அவரின் மலை கிராமம் (வலது)

தனது கர்ப்பகாலத்தின் 2வது மாதத்தில் ஏற்பட்ட வலிக்காக, ரனோ, ராணிகட்டில் உள்ள ஒரு தனியார் கிளிக்குக்கு ஸ்கேன் செய்வதற்காக சென்றார். அப்போது மட்டும்தான் மருத்துவரை சந்தித்துள்ளார். அவரது குழந்தை பிறந்து 3வது நாள் உள்ளூர் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர் அவரது வீட்டிற்கு வருகை தந்தார். “அவர் எனது குழந்தையின் எடையை பார்க்கவும், தேவையான பரிசோதனைகளை செய்வதற்காகவும் வந்திருந்தார். அவர் பரிசோதனை முடித்து, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். எனது ரத்த அழுத்தம் ஒரு வாரத்திற்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்று கூறினார். ஆனால், தற்போது நானும் நலமாக உள்ளேன். மலையில் நாங்கள் இதுபோன்ற சவால்களுக்கெல்லாம் பழக்கப்பட்டுள்ளோம்“ என்று ரனோ கூறுகிறார்.

ரனோவின் கிராமமான சிவாலியின் மக்கள் இதுபோல் பாதிவழியில் பிரசவம் இதற்கு முன் நடந்ததில்லை என்று கூறுகின்றனர். உத்ரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டம் தரிகெட் வட்டாரத்தில் உள்ள அவர்களின் குடியிருப்பில் 68 வீடுகளும், 318 பேரும் வசிக்கின்றனர். அங்கு பெரும்பாலான குழந்தை பிறப்பு வீடுகளிலேயே நடைபெறும். உத்ரகாண்ட் மாநிலம் முழுவதிலுமே 31 சதவீத குழந்தை பிறப்பு வீடுகளிலே நடைபெறுவதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 4 ( NFHS-4 2015-2016) குறிப்பிடுகிறது. எனினும், சுகாதார மையங்களில் (குறிப்பாக மாநில அரசின் சுகாதார மையங்களில்) நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது. கணக்கெடுப்பு – 3 (2005-06)ல் 33 சதவீதம் பதிவாகியிருந்தது, 69 சதவீதமாக அதிகரித்து உள்ளது.( உத்ரகாண்டில் மூன்றில் இரண்டு பிரசவம்)

பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு செல்வதற்கு,  குமாயன் மலைப்பகுதியில் இன்னும் சவாலகவே உள்ளது என்று ராணிகட்டில் பயிற்சி செய்யும் ஒரு மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். வாகனங்கள் செல்லும் வசதியுடைய சாலையே தொலைதூரத்தில் உள்ளது. போக்குவரத்து வாகன வசதி பற்றாக்குறையாக உள்ளது. வாடகைக்கு வாகனங்கள் எடுப்பது அதிக செலவைத்தரும்.

குறிப்பாக கடந்தாண்டு தொற்றுநோயால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, தரிகட் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கூடுதல் பிரச்னைகளை உருவாக்கிவிட்டது. ரனோவின் கிராமத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலிநடோலி கிராமத்தில் மணிஷா சிங் ராவத் என்பவரும் ஆகஸ்ட் 2020ல் தனது மகளை வீட்டிலேயே பிரசவிக்கநேரிட்டது. அந்த பிரசவத்தை, அவர்களுக்கு தெரிந்த பாரம்பரியமாக பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி செய்தார். “நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. எனது மகள் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இங்கேதான் பிறந்தாள்“ என்று அருகில் உள்ள ஒரு அறையை காட்டி அவர் கூறுகிறார். அந்த அறையில் உள்ள கட்டிலின் ஒரு காலை அடுக்கிவைக்கப்பட்ட செங்கற்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. மணிஷா மற்றும் அவரது கணவர் 31 வயது தீரஜ் சிங் ராவத் ஆகியோரின் திருமண புகைப்படம் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் எட்டரை மணியை கடந்த ஒரு காலை வேளையில், மணிஷா ஒரு தீவணப்பயிர் கட்டை தலையில் வைத்து வலது கரத்தில் தாங்கியபடி வீடு திரும்புகிறார். அதை வெளியே ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, ஊதா வர்ணம் பூசப்பட்டஇ அந்தகால மர ஜன்னல் வழியாக தனது தலையை எட்டி பார்த்து, தனது ஒரு மாத குழந்தையை, ராணி என்று அழைத்து, “செல்லக்குட்டியே, யாரு வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்க பாரு“ன்னு அழைக்கிறார்.

Manisha Singh Rawat gave birth to her daughter (in pram) at home, assisted by a dai or traditional birth attendant
PHOTO • Jigyasa Mishra
Manisha Singh Rawat gave birth to her daughter (in pram) at home, assisted by a dai or traditional birth attendant
PHOTO • Jigyasa Mishra

மணிஷா சிங் ராவத் அவரது குழந்தையை வீட்டிலேயே பெற்றெடுத்தார். பாரம்பரியமாக குழந்தை பேறுகளை செய்யும் மருத்துவச்சி அதற்கு உதவியாக இருந்தார்

ராணி பிறந்து இரண்டு வாரங்கள் கழிந்த பின்னர், மணிஷா அவரது வழக்கமான வேலைகளை செய்யத்துவங்கிவிட்டார். அவரது பலி நடோலி கிராமத்தில் இருந்து ஒன்னரை கிலோ மீட்டர் தொலைவில், குறைந்தது 30 நிமிட நடைதூரத்தில் உள்ள புதர்கள் நிறைந்த மலை பகுதிக்கு சென்று தீவணப்பயிர்கள் கொண்டு வருவது அவரது வழக்கமான வேலை. அது அவர்கள் வீட்டில் உள்ள 3 ஆடுகளுக்கு உணவாகப்பயன்படும். தரிகட் வட்டாரத்தில் உள்ள அவரது கிராமத்தில் 873 பேர் வசிக்கிறார்கள். இந்தப்பகுதிகளில் குடிநீர், தீவணப்பயிர் மற்றும் விறகு தேடி பெண்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்ல நேரிடும். மணிஷாவிற்கு அவரது இரண்டு அறைகொண்ட மண் மற்றும் சிமெண்ட் வீட்டின் அருகிலேயே அடிப்பம்பு இருப்பதால், சிறிது நேரம் மிச்சமாகும்.

அவரது மகள் குழந்தைகள் தொட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறார். அதன் இரும்பு கம்பிகள், ஊதா நிற ஜன்னலின் வழியாக வரும் சூரிய ஒளிக்கதிர்களில் பட்டு பொன்னிறமாக ஜொலிக்கிறது. “அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர், குழந்தையை காலை நேர சூரிய ஒளியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். அதன் மூலம் குழந்தைக்கு சிறிது வைட்டமின் சத்து கிடைக்கும் என்று கூறினார். எந்த வைட்டமின் என்பது எனக்கு தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் இங்கு வந்தபோது, குழந்தை எடை குறைவாக இருந்தது. அவர் அடுத்த வாரம் மீண்டும் வரவேண்டும்“ என்று மணிஷா என்னிடம் கூறுகிறார். குழந்தை ஒரு மாதத்தில், 4.2 கிலோவுக்கு பதிலாக 3 கிலோ எடை இருக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர் 41 வயதான மம்தா ராவத் கூறுகிறார்.

மணிஷா ஏன் மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை? எனக்கும் மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்தான். அங்கு சில வசதிகள் இருக்கும். ஆனால், எனது குடும்பத்தினர் என்ன முடிவெடுக்கிறார்களோ அது எனக்கு சரி‘ என்று அவர் கூறுகிறார்.

மணிஷாவின் மாமனார், பான் சிங் ராவத், பிரசவம் செய்யும் மருத்துவச்சியை வீட்டிற்கு அழைத்து பிரசவம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தார். “எனது முதல் குழந்தை பிறப்பதற்கு நிறைய பணம் (ரூ.15 ஆயிரம்) செலவாகிவிட்டது என்று அவர் கூறினார். அவரது இரண்டு வயது மகன் ரோஹன், ராணிகட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தான். அது பலி நடோலி கிராமத்தில் இருந்து குறைந்தபட்சமாக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (அதற்காக, அவர் வாகனம் இயக்கப்படும் சாலை வரையில் பல்லக்கில் தூக்கிச்செல்லப்பட்டார்). கொரோனா அச்சம் வேறு இருந்தது. (அவரது பெண் குழந்தை பிறந்த ஆகஸ்ட் 2020ல் தொற்று அதன் உச்சத்தில் இருந்தது). அதுவும் மருத்துவமனை செல்வதை தவிர்ப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது“ என்று மணிஷா கூறுகிறார்.

'We did not want to risk going all the way to Almora [for the delivery] in the pandemic,' says Pan Singh Rawat (left), Manisha’s father-in-law; they live in a joint family of nine
PHOTO • Jigyasa Mishra
'We did not want to risk going all the way to Almora [for the delivery] in the pandemic,' says Pan Singh Rawat (left), Manisha’s father-in-law; they live in a joint family of nine
PHOTO • Jigyasa Mishra

’அல்மொரா வரை செல்லும் ஆபத்தை இந்த பெருந்தொற்று காலத்தில் நாங்கள் எடுக்க விரும்பவல்லை என்கிறார் மணிஷாவின் மாமனாரான பான் சிங்க் ரவத் (இடது). அவர்கள் 9 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறார்கள்.

மணிஷா ஒன்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறார். அதில் அவரின் இரண்டு குழந்தைகள், அவரது கணவர், கணவரின் பெற்றோர் மற்றும் மைத்துனர், அவரது மனைவி, குழந்தை என்ற பெரிய குடும்பம் அது. 9ம் வகுப்பு வரை படித்து முடித்த பின்னர், மணிஷாவுக்கு 18 வயதில் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் தீரஜ் சிங் ராவத்  12ம் வகுப்பு வரை படித்துள்ளார். உள்ளூர் பயண நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிகிறார். “அவர் சுற்றுலாப்பயணிகளை அல்மோராவில் இருந்து நைனிடால், பீம்டால், ராணிக்ட் மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச்செல்வார். அவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கும்“ என்று மணிஷா கூறுகிறார். ஊரடங்கின்போது, வருமானம் இல்லாத நாட்களில் அவரது மாமனார் பான்சிங்கின் சேமிப்பில் இருந்து சமாளித்தார்கள்.

“இந்த தொற்று காலத்தில், எங்கள் கிராமத்தில் இருந்து அல்மோராவுக்கு சென்று நாங்கள் ஆபத்தை வரவழைத்துக்கொள்ள விரும்பவில்லை. (மாவட்ட தலைநகரம், 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது). எனவே நாங்கள் பிரசவத்தை இங்கு எங்கள் வீட்டிலேயே பாரத்துக்கொண்டோம்“ என்று 67 வயதான பான்சிங் விளக்கிக்கூறினார். அவர் ராணிகட்டில் அரசுப்பணியில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். “இதற்கிடையில் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் செல்ல அருகில் உள்ள சந்தையில் இருந்து வாகனம் வரவழைக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து 80 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்“என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவர்கள் பிரசவத்தின்போது தாய் மற்றும் சேயின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டார்களா? என்ற கேள்விக்கு, “நானும், எனது மனைவியும் வயதானவர்கள்“ என்று அவர் பதிலளித்தார். “அந்த நேரத்தில் கொரோனா வேறு தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தது. மருத்துவமனைக்குச் செல்வது எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எங்கள் வீட்டிற்கு வந்து பிரசவம் செய்துகொடுத்த மருத்துவச்சி எங்களுக்கு தெரிந்தவர் என்பதால் கோவிட் தொற்றுக்கான ஆபத்து குறைவு. அவர் எங்கள் கிராமம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் நல்ல முறையில் பிரசவம் பார்த்துள்ளார்“ என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 4 (2015-16), ஐந்தாண்டு முந்தைய கணக்கெடுப்பில், உத்ரகாண்டில் நடக்கும் 71 சதவீத அனைத்து குழந்தை பிறப்பும், மருத்துவர், செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார வருகையாளர்கள் அடங்கிய தேர்ந்த சுகாதார ஊழியர்கள் உதவியோடுதான் நடைபெறுகிறது. 4.6 சதவீத வீட்டு பிரசவங்கள் திறன்பெற்ற சுகாதார ஊழியர்களின் உதவியோடு நடைபெறுகிறது. பெரும்பாலான வீட்டு பிரசவங்கள், அதாவது 23 சதவீதம், மருத்துவச்சிகள் எனப்படும் பாரம்பரியமாக பிரசவம் செய்து வரும் பெண்கள் மூலம் நடைபெறுகிறது என்று கூறுகிறது.

Left: Manisha proudly discusses her husband Dheeraj’s cricket accomplishments. Right: Her two-year-old son Rohan was born in a private hospital
PHOTO • Jigyasa Mishra
Left: Manisha proudly discusses her husband Dheeraj’s cricket accomplishments. Right: Her two-year-old son Rohan was born in a private hospital
PHOTO • Jigyasa Mishra

இடது: மணிஷா, தனது கணவரின் கிரிக்கெட் சாதனைகள் குறித்து பெருமையாக உரையாடுகிறார். வலது: தனியார் மருத்துவமனையில் பிறந்த அவரது 2 வயது மகள் ரோஹன்

மம்தா ராவத், தரிகட் வட்டாரத்தில் உள்ள பலி நடோலி, தோபா மற்றும் சிங்கோலி (இம்மூன்று கிராமங்களிலும் 1273 பேர் வசிக்கிறார்கள்) ஆகிய 3 ஊர்களுக்கும் பணி செய்யும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர். குழந்தை பிறப்பதற்கு முன்னரும், பின்னரும் மணிஷாவின் குடும்பத்திருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு,  தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். “மணிஷாவை நான் முதல் மூன்று மாதத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன்“ என மம்தா என்னிடம் கூறினார். பலி நடோலிக்கு அருகில் உள்ள தரிகட் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருவரும் மம்தாவின் வண்டியில் சென்றனர்.

“ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவரது பிரசவத்திற்கு 10 நாட்கள் முன்னர், நான் அவர்களிடம் பேசினேன். முன்னெச்சரிக்கையாக அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினேன். (ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு உள்ளது). பிரசவ தேதி கடந்தபோது, அவரிடம் இருந்தோ அல்லது அவரது குடும்பத்தினரிடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே நான் அவர்களை தொடர்புகொண்டபோது, மணிஷாவிற்கு வீட்டிலே பிரசவம் நடைபெற்றது எனக்கு ஆச்சர்யமளித்தது. நான் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியது வீணானது“ என்று மம்தா கூறினார். அவரது அறிவுரை புறந்தள்ளப்பட்டது.

இதற்கிடையில், செப்டம்பர் மாத காலையில் மணிஷாவின் இல்லம் சூரிய ஒளியால் மின்னியது. அவர் தூங்கிக்கொண்டிருக்கும் அவரது மகன் ரோஹனை அவரது படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார். “எழுந்திரு செல்லம், இங்க பாரு உன்னோட தங்கச்சி பாப்பாலாம் ஏற்கனவே முழிச்சுட்டா“ என்று கூறிக்கொண்டே தனது மகனை எழுப்பினார்.

பின்னர் நாங்கள் மகப்பேறு குறித்த தலைப்பில் இருந்து மற்றொரு தலைப்பிற்கு மாறிவிட்டோம். அவர் பெருமையாக தனது கணவர் தீரஜின் கிரிக்கெட் மீதான பற்று குறித்து பேசினார். “எங்களுக்கு திருமணமான புதிதில் அவர் தினமும் பயிற்சி செய்தார். பின்னர் பொறுப்புகள் அதிகரித்துவிட்டது. நீங்கள் அந்த சுவற்றில் உள்ள விருதுகள் மற்றும் ஷீல்ட்களை பாருங்கள் என்று ஊதா வர்ணம் பூசப்பட்ட சுவற்றை நம்மிடம் காட்டினார். அதில் இந்த கடைசி முதல் அந்த கடைசி வரை அவர் பெற்ற விருதுகள் நிறைந்திருந்தது. அது எல்லாம் அவர் பெற்ற பரிசுகள்“ என்று மணிஷா கூறினார்.

பாரி மற்றும் கவுண்டர் மீடியா அறக்கட்டளையின், கிராமப்புற இந்தியாவின் வளரிளம்பெண்கள் மற்றும் பெண்கள் குறித்த தேசியளவிலான செய்தி சேகரிப்பு, இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின்  உதவியுடன் செய்யப்படும் ஒரு முன்னெடுப்பாகும். முக்கியமான மற்றும் ஒடுக்கப்பட்ட இந்த பிரிவினரின் நிலை குறித்து, எளியமக்களின் குரல் மற்றும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அறிந்துகொள்வதற்காக செய்யப்படும் ஒரு முன்னெடுப்பு ஆகும்.

இந்த கட்டுரையை மறுப்பதிப்பு செய்யவேண்டுமா? [email protected] , [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

தாகூர் குடும்ப அறக்கட்டளையில் இருந்து ஜிக்யசா மிஸ்ரா பொதுசுகாதாரம் மற்றும் குடிமை சுதந்திரம் குறித்து சுதந்திர பத்திரகையாளராக எழுதிக்கொண்டிருக்கிறார். தாகூர் குடும்ப அறக்கட்டளை ஆசிரியர் பிரிவு, இந்தக்கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

தமிழில்: பிரியதர்சினி. R.

Jigyasa Mishra

Jigyasa Mishra is an independent journalist based in Chitrakoot, Uttar Pradesh.

Other stories by Jigyasa Mishra
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Editor and Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.