நீங்கள் காட்டுராஜாவை காத்திருக்க வைக்கக் கூடாது.

சிங்கங்கள் வந்து கொண்டிருந்தன. குஜராத்திலிருந்து. அவை வரும்போது சிரமம் இருக்கக் கூடாது என மற்ற அனைவரும் வெளியேற வேண்டியிருந்தது.

அது நல்ல விஷயம் போன்ற தோற்றத்தைத் தந்தது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்குள் இருந்த பைரா போன்ற கிராமங்களுக்கு என்ன நடக்கப் போகிறதென உறுதியாகத் தெரியவில்லை.

“பெரும் பூனைகள் வந்தபிறகு, இந்தப் பகுதி பிரபலமாகிவிடும். சுற்றிக்காட்டும் வேலைகள் எங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் இப்பகுதியில் கடைகளையும் உணவகங்களையும் நடத்த முடியும். எங்கள் குடும்பங்கள் வசதியாகும்.” 70களில் இருக்கும் ரகுலால் ஜாதவ்தான் குனோ பூங்கோவுக்கு வெளியே இருக்கும் அகரா கிராமத்தில் நம்மிடம் இவ்வாறு சொன்னார்.

“நல்ல தரமான நீர்ப்பாசனமுள்ள நிலம் எங்களுக்குக் கிடைக்கும். எல்லா வானிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள், மொத்த கிராமத்துக்குமான மின்சாரம் மற்றும் பல வசதிகளும் கிடைக்கும்,” என்றார் ரகுலால்.

“அப்படித்தான் அரசாங்கம் எங்களுக்கு உறுதியளித்தது,” என்கிறார் அவர்.

எனவே பைரா மற்றும் 24 கிராமங்களில் இருந்த 1,600 குடும்பங்கள், குனோ தேசியப் பூங்காவிலிருந்த அவர்களது வீடுகளை விட்டுவிட்டுக் கிளம்பினார்கள். அவர்களில் பிரதானமாக சகாரியா பழங்குடிகளும் தலித்துகளும் ஏழ்மை நிறைந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் இருந்தனர். அவர்களின் வெளியேற்றம் அவசரத்தில் நிகழந்தது.

டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டன. காட்டில் வசித்தவர்கள் பல தலைமுறைகள் கடந்த உடைமைகளை ஏற்றி அவசரவசரமாக வசிப்பிடங்களை விட்டுக் கிளம்பினர். அவர்கள் பயன்படுத்திய ஆரம்பப்பள்ளிகள், அடிகுழாய்கள், கிணறுகள் மற்றும் நிலம் ஆகியவற்றையும் விட்டுச் சென்றனர். கால்நடைகள் கூட கைவிடப்பட்டன. காட்டில் இருக்குமளவுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாத இடங்களுக்கு அவற்றை அழைத்துச் செல்வது சுமையாகிவிடும்.

இருபத்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன, இன்னும் அவர்கள் சிங்கங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

Raghulal Jatav was among those displaced from Paira village in Kuno National Park in 1999.
PHOTO • Priti David
Raghulal (seated on the charpoy), with his son Sultan, and neighbours, in the new hamlet of Paira Jatav set up on the outskirts of Agara village
PHOTO • Priti David

இடது: 1999ம் ஆண்டு குனோ தேசியப் பூங்காவின் பைரா கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ரகுலால் ஜாதவும் ஒருவர். வலது: ரகுலால் (கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்), அவரது மகன் சுல்தான் மற்றும் அண்டைவீட்டாருடன் அகரா கிராமத்தின் சுற்றுப்புறத்தில் புதிய குக்கிராமத்தை அமைத்தார்

“அரசாங்கம் எங்களிடம் பொய் சொல்லிவிட்டது,” என்கிறார் ரகுலால் அவரது மகன் வீட்டுக்கு வெளியே ஒரு கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தபடி. அவர் கோபப்படும் நிலையில் கூட தற்போது இல்லை. அரசு அதன் வாக்குறுதிகளை காப்பாற்றக் காத்திருந்து சோர்வாகிவிட்டார். ஆயிரக்கணக்கான ஏழைகளும் ரகுலால் போன்ற விளிம்புநிலையினரும் - அவர் ஒரு தலித் - தங்களின் நிலங்களையும் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் விட்டு வந்துவிட்டனர்.

ரகுலாலின் நஷ்டம் குனோ தேசியப் பூங்காவுக்கு லாபமாகவும் அமையவில்லை. யாருக்குமே நல்ல விளைவு கிட்டவில்லை. சிங்கங்களுக்குக் கூட கிடைக்கவில்லை. அவை வரவேயில்லை.

*****

சிங்கங்கள் ஒரு காலத்தில் மத்திய, வடக்கு மற்றும் மேற்கு இந்தியக் காடுகளில் உலவின. இன்றோ ஆசியச் சிங்கங்கள் மட்டும் கிர் காடுகளிலும் அதைச் சுற்றியிருக்கும் குஜராத்தின் வளைகுடாப் பகுதியான 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் மட்டும்தான் காணப்படுகின்றன. அப்பகுதியின் 6 சதவிகிதம்தான் - 1,883 சதுர கிலோமீட்டர் - அவற்றின் கடைசி பாதுகாக்கப்பட்ட வசிப்பிடம். வனவாழ்வு உயிரியலாளர்களையும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் தகவல் இது.

இங்கு பதிவாகியிருக்கும் 674 ஆசியச் சிங்கங்கள், உலகின் பெரிய வன உயிர்ப் பாதுகாப்புச் சங்கமான IUCN-னால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. வன உயிர் ஆய்வாளர் டாக்டர் ஃபயாஸ் ஏ.குத்சார் தற்போது இருக்கும் தெளிவான ஆபத்தைச் சுட்டிக் காட்டுகிறார். “பாதுகாப்புக்கான உயிரியலின்படி, ஒரு உயிரினத்தின் சிறு எண்ணிக்கை ஒரு குறிப்பிட்டப் பரப்பளவுக்குள் முடக்கப்படுகையில், அழிவுக்கான பலவித சவால்களை  அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.

பெரும் பூனைகள் எதிர்கொள்ளும் பல சவால்களைக் குறிப்பிடுகிறார் குத்சார்.  அவற்றில் நாய்கள் மத்தியில் பரவும் வைரஸ், காட்டுத் தீ, காலநிலை மாற்றம், உள்ளூர் எதிர்ப்பு போன்ற பலவும் அடக்கம். இத்தகைய சவால்கள் சிறு எண்ணிக்கையை வேகமாகக் குறைத்துவிடும் என்கிறார் அவர். அரச முத்திரைகளில் பிரதானமாக சிங்கத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் அது ஒரு கொடுங்கனவுதான்.

சிங்கங்கள் வசிப்பதற்கான மாற்று இடமாக குனோவைத் தவிர வேறில்லை என வலியுறுத்துகிறார் குத்சார். அவர் கூறியதாவது: “வரலாற்றுப் பூர்வமாக அவை வசித்து வந்தப் பகுதிகளில் சிலவற்றை சிங்கங்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதால் மரபணு வீரியம் மேம்படும்.”

A police outpost at Kuno has images of lions although no lions exist here.
PHOTO • Priti David
Map of Kuno at the forest office, marked with resettlement sites for the displaced
PHOTO • Priti David

இடது: குனோவின் ஒரு செக்போஸ்ட்டில் சிங்கங்களின் படங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கு சிங்கங்கள் கிடையாது. வலது: குனோவின் வனத்துறை அலுவலகத்தில், வெளியேற்றப்பட்டவர்களுக்கான வசிப்பிடங்கள் குறிக்கப்பட்டிருக்கும் வரைபடம்

கருத்து பல காலத்துக்கு முன்பே இருந்துவந்த போதும் இடப்பெயர்வு, திட்டமானது 1993-95 காலக்கட்டத்தில்தான். அத்திட்டத்தின்படி சில சிங்கங்கள் கிர்ரிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குனோவுக்கு இடம்பெயர்த்தப்படும். சாத்தியம் கொண்ட ஒன்பது இடங்களில், குனோதான் இத்திட்டத்துக்கு சரியாக இருந்ததாக இந்திய வனஉயிர் நிறுவனத்தின் (WII) தலைவரான டாக்டர் யாதவேந்த்ரா ஜாலா கூறுகிறார்.

இந்த நிறுவனம்தான் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறை இலாகா ஆகியவற்றின்  தொழிற்பிரிவு ஆகும். புலிகளை மீண்டும் பந்தவ்கரின் சரிஸ்கா, பன்னா, கவுர் பகுதிகளிலும் சத்புராவின் பரசிங்கா பகுதியிலும் அறிமுகப்படுத்துவதில் அந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

“குனோவின் மொத்த அளவும் (தொடர்ச்சியாக இருக்கும் பரப்பளவு 6,800 சதுர கிலோமீட்டர்), ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் மனிதத் தொந்தரவும் நெடுஞ்சாலைகள் ஏதும் இல்லாதிருப்பதும் அதைச் சரியானப் பகுதியாக ஆக்கியிருக்கிறது,” என்கிறார் பாதுகாப்பு அறிவியலாளர் டாக்டர்.ரவி செல்லம். நாற்பது ஆண்டுகளாக இந்தப் பெரும் பாலூட்டுகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.

பிற நல்ல விஷயங்களாக இருப்பவை: “நல்ல தரமான, புல்வெளி, மூங்கில், நீர்ப்பரப்புகள் எனப் பலவித வசிப்பிடங்கள் ஆகியவை. சம்பல் ஆறின் பெரும் துணை நதிகள் இருக்கின்றன. வேட்டைக்கும் பெருமளவுக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவை எல்லாமும் சேர்ந்துதான் அப்பகுதியை சிங்கங்களுக்கான சரணாலயமாக மாறும் வாய்ப்பை வழங்கியது,” என்கிறார் அவர்.

எனினும் முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் குனோ சரணாலயத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் சார்ந்திருந்த காட்டை விட்டு வெளியேற்றி பல மைல் தூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் வேலை சில வருடங்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.

இருபத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சிங்கங்கள் வந்து சேரவில்லை.

*****

An abandoned temple in the old Paira village at Kuno National Park
PHOTO • Priti David
Sultan Jatav's old school in Paira, deserted 23 years ago
PHOTO • Priti David

இடது: குனோ தேசியப் பூங்காவின் பழைய பைரா கிராமத்தின் கைவிடப்பட்ட கோவில் ஒன்று. வலது: 23 வருடங்களுக்கு முன் சுல்தான் ஜாதவ் பைராவில் படித்தப் பள்ளி

குனோவின் 24 கிராமங்களில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை, வெளியேற்றத்துக்கான முதல் அறிகுறி 1998ம் ஆண்டில் தென்பட்டது. சரணாலயம் ஆளரவமற்ற தேசியப் பூங்காவாக விரைவிலேயே மாற்றப்படும் என காட்டு ரேஞ்சர்கள் பேசத் துவங்கியிருந்தார்கள்.

“சிங்கங்களுடன் (முன்பு) வாழ்ந்திருக்கிறோம் என சொன்னோம். புலிகள் மற்றும் பிற விலங்குகளுடன் கூட நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். நாங்கள் ஏன் இடம்பெயர வேண்டும்?” எனக் கேட்கிறார் மங்கு ஆதிவாசி. 40 வயதுகளில் இருக்கும் அவர் சகாரியா சமூகத்தைச் சேர்ந்தவர். இடம் மாற்றப்பட்டவர்களில் ஒருவர்.

1999ம் ஆண்டின் தொடக்கத்தில் கிராமவாசிகள் ஏற்பதற்காகக் காத்திராமல், வனத்துறை குனோ எல்லைக்கு வெளியே இருக்கும் பெருமளவிலான நிலங்களை பொட்டலாக்கத் தொடங்கியது. மரங்கள் வெட்டப்பட்டன. நிலம் ஜெசிபி இயந்திரங்களால் சமன்படுத்தப்பட்டன.

“இடமாற்றம் தன்விருப்பத்தில் நடந்தது. நான்தான் மேற்பார்வை செய்தேன்,” என்கிறார் ஜெ.எஸ்.சவுகான். 1999ம் ஆண்டில் அவர்தான் குனோவின் மாவட்ட வன அலுவலராக இருந்தார். அவர் தற்போது காடுகளின் பாதுகாப்புக்கான தலைமை அதிகாரியாகவும் மத்தியப் பிரதேசத்தின் வன உயிர்க்காவலராகவும் இருக்கிறார்.

இடமாற்றத்துக்கான கசப்பை போக்குவதற்காக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் உழப்பட்ட, நீர்ப்பாசனம் கொண்ட இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படுமென சொல்லப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண் குழந்தைகளுக்கும் இச்சலுகைப் பொருந்தும். ஒரு புதிய வீடு கட்டுவதற்கென 38,000 ரூபாயும் உடைமைகளை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படும். எல்லா அடிப்படை வசதிகளும் அவர்களின் புதிய கிராமங்களில் இருக்குமென்றும் உறுதியளிக்கப்பட்டது.

பிறகு பல்புர் காவல் நிலையம் கலைக்கப்பட்டது. “கொள்ளைக்காரர்கள் இருக்கும் பகுதி என்பதால் அந்த நடவடிக்கை எச்சரிக்கை மணியாக இருந்தது,” என்கிறார் 43 வயது சையது மெராஜுதின். அச்சமயத்தில் அவரொரு இள சமூகச் செயற்பாட்டாளராக அப்பகுதியில் இருந்தார்.

இந்தக் கிராமங்கள் ஆலோசிக்கப்படவும் இல்லை. அதிக மக்கள் வருகைக்கு ஏற்றார்போன்ற நிவாரணமும் அளிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டக் காடுகளுக்கான இழப்பீடும் வழங்கப்படவில்லை

காணொளி: குனோவின் மக்கள்: வராத சிங்கங்களுக்காக இடம்பெயர்த்தப்பட்டவர்கள்

1999ம் ஆண்டின் கோடை காலம் வந்தது. அடுத்தப் பயிர் சாகுபடிக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், நடவு செய்வதற்குப் பதிலாக குனோவில் வசித்தவர்கள் இடம்பெயரத் தொடங்கினர். அகரா மற்றும் அதன் சுற்றுப்பகுதிக்கு வந்து சேர்ந்த அவர்கள் நீல நிறப் பாலிதீன் குடிசைகளை அமைத்தனர். அடுத்த 2-3 வருடங்களுக்கு அவர்கள் அவற்றில்தான் வாழ்ந்தனர்.

“வருவாய்த்துறை, நிலத்தின் புதிய உரிமையாளர்களை அங்கீகரிக்கவில்லை. எனவே ஆவணங்களும் வழங்கப்படவில்லை. சுகாதாரம், கல்வி மற்றும் நீர்ப்பாசனம் போன்ற மற்றத் துறைகள் அசைய 7-8 வருடங்கள் பிடித்தன,” என்கிறார் மெராஜுதீன். ஆதார்ஷிலா ஷிக்‌ஷா சமிதியின் செயலாளராக அவர் ஆனார். அகராவுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்காக இயங்கிப் பள்ளிக்கூடம் நடத்தும் ஒரு தொண்டு நிறுவனம் அது.

இருபத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டதற்கு, “கிராமங்களை இடம் பெயர்த்துவது வனத்துறையின் வேலை இல்லை. அரசாங்கம்தான் அதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இடம் பெயர்ந்தவருக்கு முழு நிவாரணமும் கிடைக்கும். எல்லா துறைகளும் மக்களிடம் செல்ல வேண்டும். அதுதான் நம் கடமை,” என ஒப்புக் கொண்டார்  PCCF சவுகான்.

ஷியோபூர் மாவட்டத்தின் விஜய்பூர் தாலுகாவிலுள்ள தியோரி, செந்திகெடா, அர்ரோத், அகரா மற்றும் உம்ரி ஆகிய கிராமங்களை நோக்கி 24 இடம்பெயர்த்தப்பட்ட கிராமங்களின் மக்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர். இந்தக் கிராமங்கள் ஆலோசிக்கப்படவும் இல்லை. அதிக மக்கள் வருகைக்கு ஏற்றார்போன்ற நிவாரணமும் அளிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டக் காடுகளுக்கான இழப்பீடும் வழங்கப்படவில்லை.

ராம் தயாள் ஜாதவும் அவரது குடும்பமும் அகாராவுக்கு வெளியே இருக்கும் பைரா ஜாதவ் குக்கிராமத்துக்கு ஜூன் 1999-ல் வந்தனர். குனோ பூங்காவின் உண்மையான பைரா கிராமத்தில் வசித்தவரும் தற்போது 50 வயதுகளில் இருப்பவருமான அவர் அம்முடிவு எடுத்ததற்கு இன்னும் வருந்துகிறார். “இடப்பெயர்ச்சி எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பல பிரச்சினைகளை எதிர்கொண்டோம். இன்னும் எதிர்கொள்கிறோம். இப்போதும் கூட எங்களின் கிணறுகளில் நீர் இல்லை. எங்களின் நிலங்களுக்கு வேலி இல்லை. மருத்துவ ரீதியான நெருக்கடிகளுக்கான பொருளாதாரச் சுமையையும் சுமக்க வேண்டியிருக்கிறது. நிலையான வேலைவாய்ப்பும் இல்லை. மேலும் பல்வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன,” என்கிறார் அவர். அவரின் குரல் தோய்ந்தபடி, “அவர்கள் விலங்குகளுக்குதான் நன்மை செய்தார்கள். எங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை,” என்கிறார்.

Ram Dayal Jatav regrets leaving his village and taking the resettlement package.
PHOTO • Priti David
The Paira Jatav hamlet where exiled Dalit families now live
PHOTO • Priti David

இடது: ராம் தயாள் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தது குறித்து வருந்துகிறார். வலது: வெளியேறிய தலித் குடும்பங்கள் தற்போது வசிக்கும் பைரா ஜாதவ் குக்கிராமம்

அடையாளமின்மைதான் பெரும் பிரச்சினை என்கிறார் ரகுலால் ஜாதவ். “23 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததோடு எங்களின் தன்னாட்சியான பஞ்சாயத்துகள் ஏற்கனவே இருக்கும் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டிருகிறது.”

ரகுலால் வசிக்கும் பைரா உள்ளிட்ட 24 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து ரகுலால் போராடி வந்தார். ரகுலாலைப் பொறுத்தவரை, புதியப் பஞ்சாயத்துகள் 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது, பைரா கிராமம் வருவாய் கிராமப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. மக்கள் அனைவரும் பிறப் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டனர். “இப்படித்தான் எங்கள் பஞ்சாயத்தை நாங்கள் இழந்தோம்.”

PCCF சவுகான் அந்த வலியைத் தீர்க்க முயன்றதாகக் கூறுகிறார். “அவர்களுக்கானப் பஞ்சாயத்தை திரும்பக் கொடுக்க வேண்டி அரசாங்கத்தின் பலரைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். ‘நீங்கள் (மாநில அரசுத் துறைகள்) இதைச் செய்திருக்கக் கூடாது’ எனக் கூறுவேன். இந்த வருடம் கூட நான் முயன்றேன்,” என்கிறார் அவர்.

சொந்தப் பஞ்சாயத்து இல்லாமல், தங்களுக்கான குரல்கள் கேட்கப்பட வேண்டி சிக்கலான சட்டப்பூர்வ, அரசியல்ரீதியிலான போராட்டத்தை அம்மக்கள் எதிர்கொள்கின்றனர்.

*****

மங்கு ஆதிவாசி சொல்கையில், வெளியேற்றத்துக்குப் பிறகு “காடு எங்களிடமிருந்து மூடப்பட்டுவிட்டது. புற்களைத் தீவனமாக விற்றுக் கொண்டிருந்தோம். இப்போது ஒரு மாட்டுக்கானப் புல் கூடக் கிடைக்கவில்லை.” மேய்ச்சல், விறகு சேகரிப்பு, விறகில்லாத பிற காட்டுப் பொருட்கள் சேகரிப்பு போன்ற பலவும் இல்லாமலாகி விட்டது.

சமூக விஞ்ஞானியான பேராசிரியர் அஸ்மிதா காப்ரா முரணைச் சுட்டிக் காட்டுகிறார்: “கால்நடைகளுக்கு (வரவிருந்தச் சிங்கங்களால்) ஏற்படப் போகும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு வனத்துறை மக்களை வெளியேற்றியது. ஆனால் இறுதியில், மேய்ச்சலுக்கான வாய்ப்பு வெளியே இருக்காது என்பதால் கால்நடைகள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டன.”

Mangu Adivasi lives in the Paira Adivasi hamlet now.
PHOTO • Priti David
Gita Jatav (in the pink saree) and Harjaniya Jatav travel far to secure firewood for their homes
PHOTO • Priti David

இடது: பைரா ஆதிவாசி குக்கிராமத்தில் தற்போது வாழும் மங்கு ஆதிவாசி. வலது: கீதா ஜாதவ் (பிங்க் நிற புடவையிலிருப்பவர்) மற்றும் ஹர்ஜனியா ஜாதவ், வீட்டுக்குத் தேவையான விறகுகளைச் சேகரிக்க வெகுதூரம் செல்கின்றனர்

விவசாயத்துக்கென நிலம் திருத்தப்பட்டதால் மரங்கள் இருக்கும் பகுதி இன்னும் தள்ளிப் போய்விட்டது. “இப்போது நாங்கள் விறகு சேகரிக்க, 30-40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. எங்களுக்கு உணவு இருக்கலாம். ஆனால் அவற்றை சமைக்க விறகு இல்லை,” என்கிறார் 23 வயது ஆசிரியரான கேதார் ஆதிவாசி. வெளியேற்றப்பட்ட சகரியாக்கள் வசிக்கும் கிராமங்களில் ஒன்றான அகர்வானியைச் சேர்ந்தவர்.

50 வயதுகளில் இருக்கும் கீதாவும் 60 வயதுகளில் இருக்கும் ஹர்ஜனியாவும் மணம் முடித்து ஷியோபுர் கரகல் தாலுகாவிலிருந்து கிளம்பி சரணாலயத்துக்கு வந்தபோது இளைய வயதில் இருந்தனர். “(இப்போது) விறகு சேகரிக்க நாங்கள் மலைகளுக்குச் செல்ல வேண்டும். ஒருநாளாகிவிடுகிறது. அவ்வப்போது வனத்துறையினரால் நிறுத்தப்படுகிறோம். எனவே நாங்கள் ரகசியமாக சென்று வர வேண்டியிருக்கிறது,” என்கிறார் கீதா.

பிரச்சினைகளை முடிக்கும் அவசரத்தில் வனத்துறை, முக்கியமான மரங்களையும் மூலிகைகளையும் அழித்துவிட்டதாகச் சொல்கிறார் கப்ரா. “பல்லுயிர்ச் சூழல் அழிவைப் பற்றிக் கவலைப்படவில்லை,” என்னும் சமூக விஞ்ஞானி, அவருடைய முனைவர் ஆய்வுக்கட்டுரையை குனோவின் வறுமை, வாழ்வாதார உத்தரவாதம் மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். அப்பகுதியில் இருக்கும் முன்னணி பாதுகாப்பு வெளியேற்ற வல்லுனராக அவர் கருதப்படுகிறார்.

சீமை தேவதாரு மற்றும் பிற மரங்களின் பிசின்களை சேகரிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. சீமை தேவதாருவின் பிசின் உள்ளூர் சந்தையில் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் 4-5 கிலோ பிசினை சேகரித்து விடும். “தும்பிலை (பீடி தயாரிக்கப் பயன்படும் இலை) போன்ற பல வகைகளில் நிறையப் பிசின்கள் கிடைக்கும். வில்வம், இலுப்பை போன்ற பழங்களும் தேனும் வேர்களும் கிடைத்தன. இவை எல்லாமும் எங்களுக்கு உணவும் உடையும் கொடுத்தன. ஒரு கிலோ பிசினைக் கொடுத்து ஐந்து கிலோ அரிசியை நாங்கள் பெறுவோம்,” என்கிறார் கேதார்.

சில பிகா வானம் பார்த்த பூமி மட்டுமே இருக்கும் கேதாரின் தாயான குங்கை ஆதிவாசி போன்றோர் இப்போது ஒவ்வொரு வருடமும் மொரெனா மற்றும் ஆக்ரா நகரங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடத்தின் சில மாதங்களும் அங்கு அவர்கள் கட்டுமானத் தளங்களில் பணிபுரிகின்றனர். “விவசாய வேலை இங்குக் கிடைக்காத காலத்தில் நாங்கள் பத்து, இருபது பேர் ஒன்றாகச் செல்வோம்,” என்கிறார் 50 வயதுகளில் இருக்கும் குங்கை.

Kedar Adivasi and his mother, Kungai Adivasi, outside their home in Aharwani, where displaced Sahariyas settled.
PHOTO • Priti David
Large tracts of forests were cleared to compensate the relocated people. The loss of biodiversity, fruit bearing trees and firewood is felt by both new residents and host villages
PHOTO • Priti David

இடது: கேதார் ஆதிவாசியும் அவரது தாய் குங்கை ஆதிவாசியும் வெளியேற்றப்பட்ட சகாரியாக்கள் தங்கியிருக்கும் அகர்வானியிலுள்ள அவர்களின் வீட்டுக்கு வெளியே. வலது: இடம்பெயர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவென பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டன. உயிர்ச்சூழல், பழங்கள் தரும் மரங்கள், விறகுகள் ஆகியவற்றின் இழப்பை இடம்பெயர்த்தப்பட்டவர்களும் இடம் தந்த கிராமத்தினரும் வெகுவாக உணர்கின்றனர்

*****

2021ம் ஆண்டின் ஆகஸ்டு 15ம் தேதி பிரதமர் மோடி செங்கோட்டையிலிருந்து வழங்கிய சுதந்திர தின உரையில் ‘ Project Lion ’-ஐ அறிவித்தார். ”இந்த நடவடிக்கை ஆசியச் சிங்கங்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும்,” என்றார் அவர்.

சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சிங்கங்களை இடம் மாற்றச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 2013ம் ஆண்டின்போது குஜராத்தின் முதல்வராக இருந்தார் மோடி. நீதிமன்றம் சொல்கையில், “இன்றிலிருந்து 6 மாதத்தில் நடக்க வேண்டும்,” என்றது. செங்கோட்டை உரையில் சொல்லப்பட்டக் காரணம்தான் அப்போதும் சொல்லப்பட்டது. ஆசியச்சிங்கங்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கை. அப்போதும் சரி, இப்போதும் சரி குனோவுக்கு சிங்கங்களை அனுப்பச் சொன்ன நீதிமன்ற உத்தரவை குஜராத் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதற்கான விளக்கம் கொடுக்கப்படவே இல்லை.

குஜராத் வனத்துறையின் இணையதளமும் கூட இடமாற்றம் குறித்து அமைதி காக்கிறது. 2019ம் ஆண்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை ‘ஆசியச் சிங்கப் பாதுகாப்புத் திட்டத்’துக்கென 97.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால் அது குஜராத் அரசாங்கத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது.

2006ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று தொடுத்த பொது நல மனுவின் விளைவாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, ஏப்ரல் 15, 2022வரை ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுநல மனு “ஆசியச் சிங்கங்கள் சிலவற்றைக் குனோவுக்கு வழங்க குஜராத் அரசாங்கத்துக்கு உத்தரவிடக்” கேட்டுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

“உச்சநீதிமன்றத்தின் 2013ம் ஆண்டின் தீர்ப்புக்குப் பிறகு, குனோவில் சிங்கங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதை மேற்பார்வையிட ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கடந்த இரண்டரை வருடங்களாகக் கூடவே இல்லை. குஜராத் அத்திட்டத்தை ஏற்கவில்லை,” என்கிறார் ஜாலா.

In January 2022, the government announced that African cheetahs would be brought to Kuno as there were no Asiatic cheetahs left in India.
PHOTO • Priti David
A poster of 'Chintu Cheetah' announcing that cheetahs (African) are expected in the national park
PHOTO • Priti David

வலது: இந்தியாவில் ஆசியச் சிங்கங்கள் இல்லாததால் ஆப்பிரிக்கச் சிறுத்தைப் புலிகள் குனோவுக்கு கொண்டு வரப்படும் என அரசாங்கம் ஜனவரி 2022-ல் அறிவித்தது. வலது: தேசியப் பூங்காவில் ஆப்பிரிக்கச் சிறுத்தைப் புலிகள் வரவிருப்பதை அறிவிக்கும் ‘சிண்டு சீட்டா’ போஸ்டர்

அதற்கு பதிலாக, ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் வரும் இடமாக  குனோ இந்தாண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆப்பிரிக்க சிறுத்தைகளை குனோவில் அறிமுகப்படுத்தும் அமைச்சகத்தின் உத்தரவு சட்டத்தின் பார்வையில் செல்லாது, அது ரத்து செய்யப்படுகிறது," என வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு பொருட்படுத்தப்படவில்லை.

Project Lion பற்றிய 2020ம் ஆண்டின் ஓர் அறிக்கையின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பினர் முன்னெச்சரித்த ஆபத்துகள் நேரத் துவங்கி விட்டன. இந்திய வனத்துறை நிறுவனம் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அரசாங்கங்கள் அளித்த அறிக்கை, சூழலின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. “கிர் பகுதியின் சமீபத்திய பெபெசியோசிஸ் மற்றும் நாய்கள் தொற்று வைரஸ் (CDV) ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட சிங்கங்களின் உயிரைக் கடந்த இரு வருடங்களில் பறித்திருப்பதாக அறிக்கைக் குறிப்பிடுகிறது.”

”மனித அகம்பாவம்தான் இடமாற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார் வன உயிரியலாளரான ரவி செல்லம். உச்சநீதிமன்றத்தில் இடமாற்றத்தை தீர்மானிப்பதற்கான பெஞ்சின் அறிவியல் ஆலோசகராக இயங்கியவர் அவர். இயற்கைப் பாதுகாவலராகவும் மெடாஸ்ட்ரிங் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் செல்லம், சிங்கங்கள் இடம் மாற்றப்படவென காத்திருந்தார்.

“சிங்கங்கள் அதிக பாதிப்புக்கான காலத்தைக் கடந்திருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆனால் பாதுகாப்பைப் பொறுத்தவரை, நீங்கள் நிம்மதியடைய முடியாது. குறிப்பாக அழிந்து கொண்டிருக்கும் இனங்களைப் பொறுத்தவரை. ஏனெனில் சவால்கள் எப்போதுமே நிறைந்திருக்கின்றன. தொடர் கண்காணிப்புக்கான அறிவியல் இது,” என்னும் செல்லம் பயோடைவர்சிட்டி கொலாபரேட்டிவ் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: தேசியப் பூங்காவின் பழைய பைரா கிராமத்திலுள்ள ஒரு அறிவிப்புப் பலகை. வலது: காலியான கிராமத்தின் பல வீடுகள் விழுந்துவிட்டன. ஆனால் ஒரே ஒரு வாசல் மட்டும் நின்று கொண்டிருக்கிறது

“மனிதர்கள் விரட்டப்பட்டுவிட்டனர். ஆனால் சிங்கங்கள் வரவில்லை.”

குனோவில் இருந்த வீட்டை இழந்தது பற்றி நகைச்சுவையாகக் கூறுகிறார் மங்கு ஆதிவாசி. ஆனால் அவரது குரலில் சிரிப்பு இல்லை. அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது அவர்களை திரும்ப அனுப்ப வேண்டுமெனக் கோரி நடந்த போராட்டத்தில் சில அடிகளையும் அவர் தலையில் வாங்கியிருக்கிறார். “பல நேரங்களில் திரும்பிச் சென்றுவிட நாங்கள் யோசிக்கிறோம்.”

நியாயமான நிவாரணம் வேண்டி ஆகஸ்டு 15, 2008 அன்று நடந்தப் போராட்டம்தான் இறுதி முயற்சி. “(பிறகு) எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை விட்டுச் செல்ல முடிவெடுத்தோம். எங்களின் பழைய நிலத்தை நாங்கள் விரும்பினோம். இடம்பெயர்த்தப்பட்ட 10 வருடங்களில் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இருப்பதை நாங்கள் அறிவோம்,” என்கிறார் ரகுலால்.

அந்த வாய்ப்பையும் தவறவிட்டபிறகு ரகுலால் தளரவில்லை. அவரின் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் நிலைமையைச் சரி செய்யும் பொருட்டு செலவழித்தார். மாவட்ட, தாலுகா அலுவலகங்களுக்கு அவர் பல முறை சென்றார். பஞ்சாயத்தை இழந்த பிரச்சினை குறித்துப் பேச போபாலிலிருக்கும் தேர்தல் கமிஷனுக்குக் கூட அவர் சென்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அரசியல்ரீதியான ஆதரவு இல்லாமலிருத்தல், இடம்பெயர்ந்தவர்களை புறக்கணித்து அமைதிப்படுத்துவதை எளிமையாக்கி விடுகிறது. “நாங்கள் எப்படி இருக்கிறோம், எங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்றேல்லாம் ஒருவர் கூட கேட்கவில்லை. யாரும் இங்கு வருவதில்லை. வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றால் எந்த அதிகாரியும் இருப்பதில்லை,” என்கிறார் ராம் தயாள். “அவர்களைச் சந்திக்கும்போது எங்களுக்கான வேலையை உடனடியாகச் செய்து தருவதாக வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் 23 வருடங்களாக ஒன்றும் நடக்கவில்லை.”

முகப்புப் படம்: சுல்தான் ஜாதவ் பைராவில் உள்ள தனது குடும்பத்தின் பழைய இல்லத்தின் தளத்தில் அமர்ந்துள்ளார், அது இப்போது இல்லை

இக்கட்டுரை எழுத ஆய்வுகள் செய்யவும் மொழிபெயர்ப்புகளிலும் பேருதவி செய்த சவுரப் சவுத்ரிக்கு செய்தியாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan