மீனாவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கவிருந்தது. அதற்குக் காரணமாக சில மாதங்களுக்கு  “நான் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டேன்” என்கிறார். மீனாவைப் போலவே அப்பிரச்சினைக்கு ஆட்பட்ட அவரின் உறவினரான சோனுவும் விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்களைப் போன்ற சிறுமிகள் மாதவிடாய்க்கு பிறகு என்னவாக மாறுகிறார்கள் என்பதே அப்பிரச்சினைகளின் அடித்தளங்களாக இருக்கின்றன.

14 வயது மீனாவும் 13 வயது சோனுவும் ஒரு படுக்கையின் பக்கம் பக்கமாக அமர்ந்திருக்கின்றனர். பேசும்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். தெரியாத ஒருவரிடம் தங்களுக்கு நேர்ந்திருக்கும் மாதவிடாய் மாற்றத்தைப் பற்றிப் பேச தயங்கிக் கொண்டு பெரும்பாலும் மீனா வீட்டின் மண் தரையை இருவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின் இருந்த அறையில் ஒரு ஆட்டுக்குட்டி சிறு கயிறைக் கொண்டு கட்டிப் போடப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் பைதாக்வா என்கிற அந்த கிராமத்தை சுற்றி காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் அதை வெளியே விட முடியாது. எனவே அது உள்ளே இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.

மாதவிடாய் என்பது என்னவென்பதை இப்போதுதான் அச்சிறுமிகள் புரிந்திருக்கிறார்கள். அது வெட்கப்பட வேண்டிய விஷயமாக அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அச்சப்பட வேண்டிய விஷயமாகவும் அதை நினைக்கின்றனர். சிறுமிகளின் பாதுகாப்புப் பற்றிய அச்சம் மற்றும் பூப்பெய்திய பிறகு திருமணத்துக்கு முன்பே நேரக்கூடிய கர்ப்பம் குறித்த பதற்றம் ஆகியவற்றால் இந்த கிராமத்தின் குடும்பங்கள் மகள்களுக்கு வெகுசீக்கிரமே திருமணம் முடித்து விடுகின்றன. பல நேரங்களில் 12 வயதிலேயே திருமணங்கள் முடித்து வைக்கப்படுகின்றன.

“கருத்தரிக்கும் தன்மை பெற்ற பிறகு எங்கள் குழந்தைகளை எப்படி நாங்கள் பாதுகாக்க முடியும்??” எனக் கேட்கிறார் மீனாவின் 27 வயது தாய் ராணி. அவரும் குழந்தைத் திருமணம் செய்து கொண்டவர்தான். 15 வயதிலேயே தாயானவர். சோனுவின் தாயான சம்பாவுக்கு தற்போது 27 வயது. மகளுக்கு திருமணம் நடந்த அதே 13 வயதில்தான் தனக்கும் திருமணமானதாக நினைவுகூர்கிறார். எங்களைச் சுற்றிக் கூடியிருந்த ஆறு பெண்களும் 13, 14 வயதுகளில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதே ஊரின் வழக்கம் என்கிறார்கள். “எங்கள் கிராமம் வேறொரு யுகத்தில் வாழ்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் ஏதும் செய்ய முடியாது,” என்கிறார் ராணி.

குழந்தைத் திருமணம் என்பது உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் வடக்கு மத்திய மாவட்டங்களில் சாதாரண வழக்கமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் பெண்களைப் பற்றிய சர்வதேச ஆய்வு மையமும் யுனிசெஃப்ஃபும் நடத்திய மாவட்ட அளவிலான ஆய்வின்படி , “இந்த மாநிலங்களின் மூன்றில் இரண்டு பகுதி மாவட்டங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் சட்டப்பூர்வ வயதுக்கு முன்னமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.”

குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டம் 18 வயதுக்கு குறைவான பெண்ணும் 21 வயதுக்கு குறைவான ஆணும் திருமணம் செய்வதைத் தடை செய்கிறது. இத்தகைய திருமணங்களை நடத்துவோருக்கும் அனுமதிப்போருக்கும் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் 1 லட்ச ரூபாய் வரை அபராதமும் உண்டு.

PHOTO • Priti David

மீனாவும் சோனும் சமீபத்தில்தான் மாதவிடாய் என்னவென்பதை கண்டறிந்தார்கள். வெட்கப்படுவதற்கான விஷயமாக அதைப் புரிந்துள்ளார்கள்

“சட்டத்தை மீறியதற்காக பிடிபடும் சூழல் என்பதே ஏற்படுவதில்லை,” என்கிறார் 47 வயது அங்கன்வாடிப் பணியாளரான நிர்மலா தேவி. “ஏனெனில் சரி பார்ப்பதற்கென பிறப்புச் சான்றிதழே இங்குக் கிடையாது.” அவர் சொல்வது உண்மைதான். உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புற பகுதிகளில் பிறக்கும் 42 சதவிகித குழந்தைகளின் பிறப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை என்கிறது தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு. பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அளவு இன்னும் அதிகம். 57 சதவிகிதம்.

“மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை,” என்கிறார் அவர். “தொடக்கத்தில் நாங்கள் தொலைபேசியில் அழைத்து, 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொராவோன் சமூக மருத்துவ மையத்திலிருந்து அவசர ஊர்தியை வரவழைப்போம். ஆனால் இப்போது நாங்கள் மொபைல் செயலி 108-ஐ பயன்படுத்தி அழைக்க வேண்டும். அதற்கு 4ஜி அலைக்கற்றை இணையத் தொடர்பு வேண்டும். இங்கு இணையம் கிடையாது. எனவே நீங்கள் பிரசவத்துக்கு மருத்துவ மையத்துக்கு செல்ல முடியாது,” என அவர் விளக்குகிறார். மொபைல் செயலிக்கு மாறியது ஒரு மோசமான சூழலை கொடுமையானதாக மாற்றியிருக்கிறது எனச் சொல்லலாம்.

சோனு, மீனாவைப் போல் ஒவ்வொரு ஆண்டிலும் 15 லட்ச குழந்தை மணப்பெண்கள் உருவாகக் கூடிய நாட்டில் வெறும் சட்டத்தைக் கொண்டு குடும்ப வழக்கத்தை நிறுத்தி விட முடியாது. உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பெண்களில் ஒருவர் சட்டப்பூர்வ வயதுக்கு முன்னமே திருமணம் முடித்திருக்கிறார் என்கிறது குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு.

“அவர்கள் என்னை விரட்டி விடுவார்கள்,” என்கிறார் 30 வயது சுனிதா தேவி படேல். பைதாக்வா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுகாதாரச் செயற்பாட்டாளராக பணிபுரியும் அவர், பெற்றொரிடம் பேச முயலும்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரிக்கிறார். “சிறுமிகள் வளரட்டுமென அவர்களிடம் நான் கெஞ்சுவேன். இந்த சிறுவயதில் கருத்தரிப்பது அவர்களுக்கு ஆபத்தாக முடியுமென கூறுவேன். அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் என்னை கிளம்பச் சொல்வார்கள். கொஞ்ச காலம் கழித்தோ அல்லது ஒரு மாதம் கழித்தோ செல்லும்போது அச்சிறுமிக்கு திருமணம் முடிந்திருக்கும்!”

ஆனால் பெற்றோர்களுக்கோ வேறு கவலைகள் இருந்தன. “வீட்டில் கழிவறை இல்லை,” என்கிறார் மீனாவின் தாயான ராணி. “அதற்காக 50, 100 மீட்டர் தொலைவிலுள்ள நிலங்களுக்கு செல்லும்போதோ விலங்குகளை மேய்க்க செல்லும்போதோ கூட, அவர்களுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்திடுமோ என நாங்கள் கவலைப்பட வேண்டியிருக்கிறது.” செப்டம்பர் 2020ல் உயர்சாதி ஆண்களால் ஹத்ராஸ் மாவட்டத்தில் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட 19 வயது தலித் பெண்ணை அவர் நினைவுகூர்கிறார். “ஹத்ராஸ் சம்பவம் போல ஏதேனும் நடந்திடுமோ என எப்போதும் நாங்கள் அஞ்சுகிறோம்.”

மாவட்டத் தலைநகரான கொராவோனிலிருந்து பைதாக்வாவுக்கு வரும் 30 கிலோமீட்டர் தொலைவு ஆளரவமற்ற சாலை, திறந்த வெளி நிலங்கள் மற்றும் மூலிகைக் காட்டுக்கு ஊடாக வருகிறது. காடு மற்றும் குன்று ஆகியவற்றுக்கு ஊடாக வரும் ஐந்து கிலோமீட்டர் நீளச்சாலையில் அரவமே இருக்காது. ஆபத்து நிறைந்தப் பகுதி. தோட்டாக்கள் துளைத்த சடலங்கள் அங்கிருக்கும் புதர்களில் கண்டிருப்பதாக உள்ளூர்க்காரர்கள் தெரிவிக்கின்றனர். காவல் பரிசோதனை மையமும் நல்ல சாலைகளும் அமைந்தால் உதவியாக இருக்கும் என்கிறார்கள். மழைக்காலங்களில் பைதாக்வாவை சுற்றி இருக்கும் 30 கிராமங்கள் மொத்தமாக கைவிடப்பட்டு விடுகின்றன. வாரக்கணக்கில் எவரும் கண்டுகொள்வதில்லை.

PHOTO • Priti David
PHOTO • Priti David

பைதாக்வா கிராமம்: சுற்றிக் கூடியிருக்கும் பெண்கள் 13 அல்லது 14 வயதில் திருமணம் முடிப்பதுதான் ஊர் வழக்கம் என்கிறார்கள்

கிராமத்தைச் சுற்றி பழுப்பாக, தாழ்வாக புதர்களாலும் மூலிகைகளாலும் சூழப்பட்ட விந்தியாச்சல் மலைகள் ஒரு பக்கம் மட்டும் உயர்ந்து மத்தியப்பிரதேசத்துடனான மாநிலத்தின் எல்லையைச் சுட்டுகின்றன. இருக்கும் ஒரே அரைகுறை தார்ச்சாலையில் கொல் குடும்பங்கள் வசிக்கின்றன. நிலங்களும் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குடும்பங்களிடம் இருக்கிறது (மிகச் சிலவை மட்டும்தான் பட்டியல்சாதி குடும்பங்களிடம் இருக்கிறது).

ஊருக்குள் 500 பட்டியல் சாதிக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் கொல் பிரிவைச் சேர்ந்தவர்கள். 20 பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் குடும்பங்களும் இருக்கின்றன. “சில மாதங்களுக்கு முன், எங்களின் ஒரு சிறுமி கிராமத்தில் நடந்து கொண்டிருந்தாள். உயர்சாதிச் சிறுவர்கள் சிலர் தங்களுடைய பைக்கில் அவளைக் கட்டாயப்படுத்தி அமர வைத்தனர். எப்படியோ சமாளித்து அவள் கீழே குதித்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாள்,” என்கிறார் ராணி பதற்றம் தொனிக்க.

ஜூன் 12, 2021-ல் 14 வயது கொல் பெண் காணாமல் போனார். இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரின் குடும்பம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாகக் கூறினார்கள். ஆனால் அதை எங்களிடம் அவர்கள் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் மீது கவனம் விழுந்து அதனால் காவலர்களின் கோபத்துக்கு ஆளாக அவர்கள் விரும்பவில்லை. காவலர்களும் சம்பவம் நடந்த இரு வாரங்களுக்கு பிறகுதான் விசாரிக்க வந்ததாக மற்றவர்கள் சொல்கின்றனர்.

“நாங்கள் எல்லாரும் பட்டியல் சாதியை சேர்ந்த ஏழை மக்கள். நீங்கள் சொல்லுங்கள். காவல்துறை பொருட்படுத்துமா? யாரேனும் பொருட்படுத்துவார்களா? நாங்கள் (வன்புணர்வு அல்லது கடத்தலுக்கான) அச்சத்திலும் அவமானத்திலும் வாழ்கிறோம்,” என்கிறார் நிர்மலா தேவி தணிந்த குரலில்.

கிராமத்தில் இளங்கலை படிப்பு படித்த மிகச் சிலரில் கொல் பிரிவை சேர்ந்த நிர்மலாவும் ஒருவர். முராரிலால் என்கிற விவசாயியை மணந்ததற்கு பின் அவர் படித்த படிப்பு அது. நான்கு மகன்களையும் படிக்க வைத்திருக்கிறார். சொந்த சம்பாத்தியத்தில் அருகே இருக்கும் த்ரமாந்த்கஞ்ச் டவுனின் தனியார் பள்ளி ஒன்றில் அவர்களை அவர் படிக்க வைத்திருக்கிறார். “மூன்று குழந்தைகள் பெற்ற பிறகுதான் வீட்டை விட்டு நான் வெளியே வர முடிந்தது,” என்கிறார் அவர் விரக்தியான சிரிப்புடன். “என் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென நான் விரும்பினேன். அதுதான் என்னை செலுத்தும் ஆற்றலாக இருக்கிறது.” அவர் தன்னுடைய மருமகளான ஸ்ரீதேவி துணை செவிலியராக படிப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறார். 18 வயதானதும் ஸ்ரீதேவி அவரின் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்.

ஆனால் கிராமத்தில் இருக்கும் பிற பெற்றோர் அச்சத்திலேயே இருக்கின்றனர். தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின்படி, உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக 59,853 குற்றங்கள் 2019ம் ஆண்டில் பதிவாகியுள்ளன. சராசரியாக ஒருநாளுக்கு 164 குற்றங்கள். அதில் சிறுமி, இளம்பெண், பெண் முதலியோரை வல்லுறவு செய்தது, கடத்தியது, மிரட்டுதல், விற்பனை செய்தல் ஆகியக் குற்றங்கள் அடக்கம்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

அங்கன்வாடிப் (இடது) பணியாளரான நிர்மலாதேவி (வலது) சொல்கையில் பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாதென்பதால் குழந்தைத் திருமணத்துக்கென கைது செய்யப்படும் கேள்வியே இல்லை என்கிறார்

“சிறுமிகள் (ஆண்களால்) கவனிக்கத் தொடங்கப்படும்போது அவர்களைப் பாதுகாப்பது சிரமமாகி விடுகிறது,” என்கிறார் சோனு மற்றும் மீனாவின் உறவினர் மிதிலேஷ். “இங்கிருக்கும் தலித்களுக்கு ஒரே ஒரு ஆசைதான். எங்களுடைய பெயரையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான். எங்கள் பெண்களை சீக்கிரமாகவே மணம் முடித்துக் கொடுப்பது அதை உறுதி செய்கிறது.”

ஒவ்வொரு முறை செங்கல் சூளைகளிலோ மண் எடுக்கும் இடங்களிலோ வேலை கிடைத்து அங்கு செல்லும்போது தன்னுடைய 9 மற்றும் 8 வயதான மகனையும் மகளையும் கவலையுடன்தான் விட்டுச் செல்கிறார் மிதிலேஷ்.

அவருடைய மாத வருமானமான 5,000 ரூபாய் மனைவியின் வருமானத்துக்கு துணையாக இருக்கிறது. அவரின் மனைவி விறகுகளை விற்றும் அறுவடைக் காலங்களில் நிலங்களில் பணிபுரிந்தும் வருமானம் ஈட்டுகிறார். அவர்களின் ஊரைச் சுற்றி விதைப்பு நடக்கும் சாத்தியமில்லை. “காட்டு விலங்குகள் தின்று விடுவதால் நாங்கள் எந்த பயிரையும் விளைவிக்க முடிவதில்லை. காடுகளுக்கு அருகே வசிப்பதால் காட்டுப் பன்றிகள் எங்களின் வளாகத்துக்குள்ளே வரும்,” என்கிறார் மிதிலேஷ்.

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பைதாக்வா குக்கிராமம் இருக்கும் தியோகாட் கிராமத்தின் மக்கள்தொகையில் 61 சதவிகிதம் விவசாயக் கூலியாகவும் வீட்டு வேலைகளிலும் பிற வேலைகளில் பணிபுரிகின்றனர். “ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் கூலி வேலைக்காக இடம்பெயருகின்றனர்,” என்கிறார் மிதிலேஷ். அலகாபாத், சூரத் மற்றும் மும்பை முதலிய இடங்களில் வேலை தேட அவர்கள் செல்கின்றனர் என்கிறார் அவர். செங்கல் சூளை வேலையிலும் பிற தினக்கூலி வேலைகளிலும் ஒரு நாளுக்கு 200 ரூபாய் கிடைக்கும் என்கிறார்.

”பிரயாக்ராஜ் மாவட்டத்திலேயே அதிகம் புறக்கணிக்கப்படுவது கொராவோன்தான்,” என்கிறார் டாக்டர் யோகேஷ் சந்திரா ஸ்ரீவாஸ்தவா. அவர் சாம் ஹிக்கின்பாதம் பல்கலைக்கழகத்தில் அறிவியலாளராக இருக்கிறார். இப்பகுதியில் 25 வருடங்களாக பணிபுரிந்திருக்கிறார். “மாவட்ட ரீதியிலான தரவுகள் இங்குள்ள சூழலின் துயரை பிரதிபலிப்பதில்லை,” என்கிறார். “அறுவடை, கல்வி இடைநிற்றல், குறைந்த ஊதியத்துக்கான இடப்பெயர்வு, வறுமை, குழந்தைத் திருமணம், குழந்தைகள் மரணம் என எதை எடுத்துக் கொண்டாலும் கொராவோன் மேம்படாமல்தான் இருக்கிறது.”

திருமணம் முடிந்துவிட்டால் சோனுவும் மீனாவும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கணவர்களின் வீட்டுக்கு செல்ல வேண்டும். “நான் இன்னும் அவரை (மணமகனை) சந்திக்கவில்லை,” என்கிறார் சோனு. “ஆனால அவரின் புகைப்படத்தை என்னுடைய உறவினரின் செல்பேசியில் பார்த்தேன். அவரிடம் அடிக்கடி நான் பேசுகிறேன். அவர் என்னை விட சில வருடங்கள் மூத்தவர். 15 வயதில் இருக்கலாம். சூரத்தில் ஒரு சமையலறையில் உதவியாளராக பணிபுரிகிறார்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: “சிறுமிகள் (ஆண்களால்) கவனிக்கத் தொடங்கப்படும்போது அவர்களை பாதுகாப்பது சிரமமாகி விடுகிறது,” என்கிறார் மிதிலேஷ். வலது: “எல்லா அம்சங்களிலும் கொராவோன் ஒன்றியம் மட்டும் மேம்படாமலே இருக்கிறது,” என்கிறார் டாக்டர் யோகேஷ் சந்திரா ஸ்ரீவாஸ்தவா

இந்த வருட ஜனவரி மாதத்தில் பைதாக்வா அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின், ஒரு சோப் மற்றும் துண்டு ஆகியவை கொடுக்கப்பட்டன. மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரமான வழிமுறைகள் பற்றிய காணொளி ஒன்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் காண்பிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் கிஷோரி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின்படி 6லிருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள் கிடைக்கும். இத்திட்டம் 2015ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் சோனுவும் மீனாவும் பள்ளிக்கு இனி செல்லவில்லை. “நாங்கள் பள்ளிக்கு செல்வதில்லை என்பதால் எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது,” என்கிறார் சோனு. இருவரும் தற்போது பயன்படுத்தும் துணிகளுக்கு பதிலாக இலவச சானிடரி நாப்கின்களை விரும்பியிருப்பார்கள்.

திருமணமாகும் நிலையில் இருந்தாலும் இரு சிறுமிகளுக்கும் உடலுறவு, கர்ப்பம், மாதவிடாய் சுகாதாரம் முதலிய விஷயங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. “என் தாய் அண்ணியிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார். என்னுடைய அண்ணி கணவரின் அருகே இனி படுக்குமாறு என்னிடம் சொன்னார். இல்லையெனில் பெரிய பிரச்சினையாகி விடும் என்றும் கூறினார்,” என்கிறார் சோனு ரகசியமான குரலில். குடும்பத்தில் இருக்கும் மூன்று சிறுமிகளில் மூத்தவரான சோனு, 7 வயதாக இருக்கும் போது, தங்கைகளை பார்த்துக் கொள்வதற்காக இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார்.

பிறகு தாயுடன் விவசாய வேலைகளுக்காக நிலத்துக்கு செல்லத் தொடங்கினார். வீட்டுக்கு பின் இருந்த காடு நிறைந்த மலைகளுக்கு தாயுடன் விறகு சேகரிக்கச் செல்வார். இரண்டு நாட்கள் சேகரித்தால் 200 ரூபாய் மதிப்புக்கான விறகுகள் கிடைக்கும். “சில நாட்களுக்கான எண்ணெய் மற்றும் உப்பு வாங்க போதுமான பணம்,” என்கிறார் மீனாவின் தாய் ராணி. குடும்பத்தின் ஆடுகளை மேய்க்கவும் சோனு உதவியிருக்கிறார். இந்த வேலைகளைத் தாண்டி, தாய் சமைப்பதிலும் உதவுகிறார் அவர். வீட்டு வேலைகளும் செய்வார்.

சோனு மற்றும் மீனாவின் பெற்றோர்கள் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். பெண்களுக்கு ரூ.150ம் ஆண்களுக்கு ரூ.200ம் தினக்கூலியாகக் கிடைக்கும். அதுவும் வேலை கிடைக்கும்போதுதான். அத்தகைய சூழலும் சாதாரண காலத்தில் மாதத்துக்கு 10-12 நாட்கள்தான் வாய்க்கும். சோனுவின் தந்தை ராம்ஸ்வரூப், அருகாமை டவுன்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றுக்கு பயணித்து தினக்கூலி வேலை செய்தார். 2020ம் ஆண்டின் இறுதியில் அவருக்கு காசநோய் வந்து இறந்து போனார்.

“அவரின் சிகிச்சைக்காக 20,000 ரூபாய் செலவழித்தோம். குடும்பத்திடமிருந்தும் பிறரிடமிருந்தும் நான் கடன் வாங்க வேண்டியிருந்தது,” என்கிறார் சம்பா. “அவரின் ஆரோக்கியம் குறையத் தொடங்கியதும் இன்னும் அதிகமாக கடன் வாங்க வேண்டி வந்தது. ஆடுகளை தலா 2,000லிருந்து 2,500 ரூபாய் வரை விற்றேன். இந்த ஒரு ஆடு மட்டும்தான் எங்களிடம் இப்போது இருக்கிறது,” என்கிறார் அவர் அறையில் சிறு கயிற்றில் கட்டிப் போடப்பட்டிருக்கும் குட்டி ஆட்டை காட்டி.

“என் தந்தை இறந்தபிறகுதான் என் தாய் திருமணப் பேச்சைத் தொடங்கினார்,” என்கிறார் சோனு தன் கையில் போடப்பட்டிருக்கும் மருதாணியைப் பார்த்தபடி.

PHOTO • Priti David
PHOTO • Priti David

மீனா மற்றும் சோனு வசிக்கும் கூட்டுக் குடும்ப வீடு. “என் தந்தை இறந்தபிறகுதான் என் தாய் திருமணப் பேச்சைத் தொடங்கினார்,” என்கிறார் சோனு

சோனு மற்றும் மீனா ஆகியோரின் தாய்களான சம்பாவும் ராணியும் சகோதரிகள் ஆவர். இருவரும் சகோதரர்கள் இருவரை மணம் முடித்துக் கொண்டனர். கூட்டுக் குடும்பமாக 25 பேர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டு கட்டிய வீட்டில் வசிக்கின்றனர். அவர்களின் பழைய வீடுகள் குடிசை வீடுகள் ஆகும். அங்குதான் சமைக்கிறார்கள். சிலர் அங்குதான் உறங்கவும் செய்கிறார்கள். இந்த வீட்டுக்கு பின்னால் அவை இருக்கின்றன.

மீனாவுக்குதான் முதலில் மாதவிடாய் வந்தது. அவருக்கு பார்த்த மணமகச் சிறுவனுக்கு ஒரு சகோதரன் இருந்தது நல்ல விஷயமாகிப் போனது. சோனுவுக்கும் அதே வீட்டில் திருமணம் என முடிவானது. இருவரின் தாய்களுக்கும் வேலை மிச்சம்.

குடும்பத்தில் மீனாதான் மூத்தவர். இரண்டு தங்கைகளும் ஒரு சகோதரனும் அவருக்கு உண்டு. ஒரு வருடத்துக்கு முன் 7ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். “என்னுடைய வயிற்றில் கொஞ்சம் வலி இருந்தது. நாள் முழுக்க என் வீட்டில் படுத்தே கிடப்பேன். என் தாய் விவசாய வேலைக்கு சென்றிருப்பார். தந்தை தினக்கூலி வேலைக்கு சென்றிருப்பார். யாரும் பள்ளிக்கு செல்ல என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. எனவே நான் செல்லவில்லை,” என்கிறார் அவர். பிறகு அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு செலவு அதிகம். சிகிச்சைக்கென 30 கிலோமீட்டர் தூரத்துக்கு பல முறை பயணிக்க வேண்டும். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. யோசனையைப் போலவே கல்வியும் கைவிடப்பட்டது.

அவ்வப்போது இப்போதும் அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுவதுண்டு.

குறைவான வருமானத்திலிருந்து மகள்களின் திருமணத்துக்கென பணம் சேமிக்க கொல் குடும்பங்கள் சிரமப்படுகின்றன. “அவர்களின் திருமணத்துக்கென நாங்கள் 10,000 ரூபாய் சேமித்திருக்கிறோம். 100, 150 பேருக்கேனும் விருந்து வைக்க வேண்டும்,” என்கிறார் ராணி. திட்டம் என்னவென்றால் இரு சிறுமிகளும் ஒரே நாளில் ஒரே நிகழ்வில் இரு சிறுவர்களுக்கு மணம் முடித்து வைக்கப்படவிருக்கின்றனர்.

கடமை முடிந்து விடும் என பெற்றோரும் குழந்தைமை முடிந்துவிடும் என சிறுமிகளும் நினைக்கின்றனர். சூழலும் சமூகக் கட்டுப்பாடுகளும் கொடுத்த நியாயங்களை சோனுவும் மீனாவும் முன்வைக்கின்றனர். “உணவுக்கு காத்திருக்கும் வயிறுகளின் எண்ணிக்கை குறையும். தற்போது நாங்கள் பிரச்சினையாக இருக்கிறோம்.”

PHOTO • Priti David

மீனாவுக்குதான் முதலில் மாதவிடாய் வந்தது. அவருக்கு பார்த்த மணமகச் சிறுவனுக்கு ஒரு சகோதரன் இருந்தது நல்ல விஷயமாகிப் போனது. சோனுவுக்கும் அதே வீட்டில் திருமணம் என முடிவானது

குழந்தைத் திருமணம் , பிரசவம் மற்றும் கர்ப்பம் ஆகிய காலங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு பெண்கள் உயிரிழக்கும் வாய்ப்புகளை அதிகமாக்குவதாக யுனிசெஃப் குறிப்பிடுகிறது. இங்குள்ள பெண்கள் மிக இளம்வயதிலேயே திருமணம் செய்து கொள்வதால், “இரும்புச்சத்தை பரிசோதிப்பதோ ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுப்பதோ இயலாத காரியமாகி விடுகிறது,” என்கிறார் சுகாதார செயற்பாட்டாளரான சுனிதா தேவி. சொல்லப் போனால், உத்தரப்பிரதேசத்தில் வெறும் 22 சதவிகித இளவயது தாய்மார்கள்தான் குழந்தை வேண்டாமென மருத்துவமனைகளை நாடுகின்றனர். நாட்டிலேயே குறைந்த சதவிகிதம் இருப்பது இங்குதான்.

இந்த தரவு, குடும்ப சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை யில் இடம்பெற்றிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் 15-49 வயதுகள் கொண்ட பெண்களில் பாதி பேர் - 52 சதவிகிதம் - ரத்தசோகை கொண்டிருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த உண்மை, கர்ப்பகாலத்தில் அவர்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த குறைபாட்டை கடத்துகிறது. மேலும் உத்தரப்பிரதேச கிராமப்புறத்தில் வசிக்கும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 49 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டைக் கொண்டிருக்கின்றன. 62 சதவிகித குழந்தைகள் ரத்தசோகை கொண்டிருக்கின்றன.

“சிறுமிகளின் ஆரோக்கியம் முக்கியமே கிடையாது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் சிறுமிகளுக்கு பால் கொடுப்பதைக் கூட அவர்கள் நிறுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவள் வெளியேறப் போவதால் கொடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறார்கள். எத்தகைய சேமிப்பும் நல்லதென நினைக்கும் அளவுக்கு அவர்களின் நிலை இருக்கிறது,” என்கிறார் சுனிதா.

ராணி மற்றும் சம்பா ஆகியோரின் மனங்களோ வேறு விஷயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தன.

“நாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம், திருமணத்துக்கு முன் களவு போய்விடக் கூடாதென நாங்கள் கவலைப்படுகிறோம். எங்களிடம் பணம் இருப்பது இப்போது அனைவருக்கும் தெரியும்,” என்கிறார் ராணி. “50,000 ரூபாய் அளவுக்கு நான் கடனும் வாங்க வேண்டும்.” அதை வைத்துக் கொண்டு அவர்களை காவல் காத்துக் கொண்டிருக்கும் வேலைக்கு முடிவு கட்டி விடலாம் என நம்புகிறார் அவர்.

SHUATS-ல் விரிவாக்கச் சேவைகளின் இயக்குநராக இருக்கும் பேராசிரியர் ஆரிஃப் ஏ.பிராட்வே அளித்த உதவி மற்றும் தரவுகளுக்காக செய்தியாளர் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

இக்கட்டுரையில் உள்ள சிலரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கிறது

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan