பேசிக் கொண்டிருக்கும்போதே அவரின் நெற்றியில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. அவரின் வெளிறிய முகத்தில் அந்த சுருக்கங்கள் அப்பட்டமாக தெரிகின்றன. கூன் போட்டு மெதுவாக தாங்கி தாங்கி நடக்கும் அவர் சில நூறு மீட்டர்களுக்கு ஒருமுறை நின்று மூச்சு வாங்கிக் கொள்கிறார். மெல்லிய காற்று அவரது நரை முடியை விலக்கி முகத்தை காட்டி வீசிச் சென்றது.

இந்திராவதி ஜாதவுக்கு 31 வயதுதான் ஆகிறது என்பதை எவராலும் நம்ப முடியாது.

மகாராஷ்டிராவின் நாக்பூரருகே உள்ள குப்பத்தில் வசிக்கும் ஜாதவ், நாள்பட்ட தீவிர நுரையீரல் அடைப்பு நோயால் (COPD) பாதிக்கப்பட்டிருக்கிறார். உயிரை பறிக்கவல்ல அந்த நோய் நுரையீரலுக்கு காற்று போவதை தடுத்து சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும். நுரையீரலை பாதிக்கக்கூடிய தீவிர இருமல் அடிக்கடி வரும். ‘புகைபிடிப்பவர்களின்’ நோய் என அழைக்கப்படும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30, 40 சதவிகித மக்கள் நடுத்தர, அடிமட்ட வருமானம் கொண்ட நாடுகளில் புகைப்பழக்கம் கொண்டிருந்த மக்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை

ஜாதவ், சிகரெட்டை தொட்டது கூட இல்லை. ஆனால் அவரின் இடது நுரையீரல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள காற்று, விறகு அல்லது நிலக்கரி அடுப்பு பயன்படுத்துவதால் மாசடைகிறது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

சுத்தமான சமையல் எரிவாயு ஜாதவுக்கு கிடைத்ததில்லை. “நாங்கள் எப்போதும் விறகையோ கரியையோ கொண்ட அடுப்பில்தான் உணவு சமைப்போம். நீரை காய வைப்போம். இந்த திறந்த அடுப்பில் சமைத்து என் நுரையீரல் ஒன்றுக்கும் ஆகாமல் போய்விட்டது,” என்கிறார் அவர் மருத்துவர்கள் சொன்னதை குறிப்பிட்டு. அவரின் அடுப்பிலிருந்து வெளியாகும் மாசு அவரது நுரையீரலை பாதித்துவிட்டது.

2019ம் ஆண்டின் லான்செட் ஆய்வின் படி கிட்டத்தட்ட ஆறு லட்சம் இந்தியர்கள் ஒவ்வொரு வருடமும் முதுமைக்கு முன்னமே காற்றுமாசால் இறந்து போகின்றனர். வீட்டுக்காற்றின் மாசு, காற்று மாசில் முக்கியமான பங்கு வகிப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

Indravati Jadhav has never had access to clean cooking fuel. She suffers from Chronic Obstructive Pulmonary Disease (COPD), a potentially fatal condition causing restricted airflow in the lungs, breathing difficulties and, most often, a chronic cough that may eventually damage the lungs
PHOTO • Parth M.N.

இந்திராவதி ஜாதவுக்கு சுத்தமான சமையல் எரிவாயு கிடைத்ததில்லை. நுரையீரலுக்கான காற்றை தடுத்து, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, நுரையீரலை பாதிக்குமளவு தீவிர இருமலை அடிக்கடி கொடுக்கும் நாள்பட்ட தீவிர நுரையீரல் அடைப்பு நோயால் (COPD) அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்

சிக்காலி குப்பத்தின் பங்குல் பகுதியிலுள்ள ஓரறை குடிசை ஒன்றின் வெளியே போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து தன் ஆரோக்கியத்தை பற்றி சோர்வுடன் பேசுகிறார் ஜாதவ்.

ஆரோக்கியமடையலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும் பட்சத்தில், அறுவை சிகிச்சை அவருக்கு தேவை. ஆனால் அது ஆபத்து நிறைந்தது. அவரின் கணவர் எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார். 10-15 நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்.

ஜாதவ், தன் குழந்தைகளான 13 வயது கார்த்திக் மற்றும் 12 வயது அனு ஆகியோருக்குதான் அதிகம் கவலைப்படுகிறார். “என் கணவர் என்ன செய்கிறார், என்ன உண்கிறார், எங்கு தூங்குகிறார் என எனக்கு தெரியாது,” என்கிறார் அவர் சற்று இடைவெளி விட்டு பெருமூச்சை போல் சுவாசத்தை இழுத்தபடி. “என் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்களா இல்லையா என கவனிக்கக் கூட எனக்கு சக்தி இல்லை. எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், குழந்தைகள் ஒருவகையில் அநாதைகளாகி விடுவார்களே என்பதால் அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டிருக்கிறோம்.”

ஜாதவ், குப்பை சேகரிக்கும் பணி செய்திருக்கிறார். குப்பை குவியல்களை அலசி பார்த்து மறுஉபயோகம் செய்யத்தக்க பொருட்களை கண்டுபிடித்து சேகரிக்கும் வேலை அது. அப்பொருட்களை விற்று மாதத்துக்கு 2,500 ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார். ஒரு வருடத்துக்கு சற்று முன்னால், அவரின் ஆரோக்கியம் மோசமடைந்தது. விளைவாக கொஞ்ச வருமானமும் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

“ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்புமளவுக்கு என்னிடம் பணம் கிடையாது. ஒவ்வொரு முறை நிரப்பவும் எரிவாயு சிலிண்டர் நிரப்பவும் 1,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. “என் வருமானத்தில் பாதியை நான் சமையல் எரிவாயுவுக்கு செலவிட வேண்டும். மிச்சத்தை கொண்டு எப்படி குடும்பத்தை நடத்துவது?”

Jadhav seated outside her home in Nagpur city's Chikhali slum.
PHOTO • Parth M.N.
The pollution from her biomass-burning stove has damaged her lungs
PHOTO • Parth M.N.

இடது: ஜாதவ் நாக்பூர் நகர சிகாலி குப்பத்திலுள்ள வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். வலது: இயற்கை அடுப்பின் மாசு அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது

சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் 2021ம் ஆண்டு அறிக்கை யின்படி வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் 60 சதவிகித மக்கள்தொகை, பொருளாதாரக் காரணங்களால் சமையல் எரிவாயு கிட்டாத நிலையில் இருக்கின்றனர்.

சரியாக சொல்வதெனில் ஆசியாவின் 150 கோடி மக்கள், விறகடுப்பை பயன்படுத்துவதால் வரும் விஷத்தன்மை மாசை வீட்டுக் காற்றில் அதிக அளவில் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

*****

மத்திய இந்தியாவின் நாக்பூர் நகரத்துக்கு வெளியே இருக்கும் சிகாலி குப்பம், தொடரும் இந்த துயரத்தின் ஒரு உதாரணம்தான். இங்கு இருக்கும் பெரும்பாலான பெண்கள் நீர் வழியும் கண்கள், மூச்சுத்திணறல், இருமல் ஆகியவற்றை கொண்டிருக்கின்றனர்.

குடிசைகளும் தகரக்கூரை, சிமெண்ட் தளம் கொண்ட வீடுகளும் கொண்ட வசிப்பிடத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் செங்கல்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு சிறு அடுப்பு இருக்கிறது. விறகுகளும் வைக்கோலும் முகப்பில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அடுப்பை தொடர்ந்து எரிய வைப்பதுதான் கடினமான வேலை. ஒரு தீக்குச்சியும் கொஞ்சம் மண்ணெண்ணெயும் உதவாது. தொடர்ச்சியாக ஊதுகுழல் வைத்து குறைந்தபட்சம் ஒரு நிமிடமேனும் காற்றை ஊத வேண்டும். அப்போதுதான் நெருப்பு தங்கி, தொடர்ந்து எரியும் நிலையை அடையும். ஆரோக்கியமான நுரையீரல்கள் இதற்கு அடிப்படை தேவை.

ஜாதவால் அடுப்பை பற்ற வைக்க முடிவதில்லை. ஊதுகுழலில் அவரால் காற்றை ஊத முடியவில்லை. 80 கோடி இந்தியர்களுக்கு அரசாங்கத்தின் நியாய விலைக் கடைகளின் வழியாக சென்று சேரும் உணவு தானியங்களை அவரும் பெறுகிறார். உணவு சமைக்க அடுப்பு பற்ற வைப்பதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் உதவியை ஜாதவ் எடுத்துக் கொள்கிறார். “சில நேரங்களில் என் சகோதரர்கள் அவர்களது வீடுகளில் உணவு சமைத்து எனக்குக் கொண்டு வருவார்கள்,” என்கிறார் அவர்.

Jadhav can no longer fire up her stove. To cook a meal she has to request a neighbour to help with the stove. 'Sometimes my brothers cook food at their house and bring it to me,' she says
PHOTO • Parth M.N.

ஜாதவால் அடுப்பை பற்ற வைக்க முடிவதில்லை. உணவு சமைக்க நெருப்பு பற்ற வைக்க பக்கத்து வீட்டுக்காரரின் உதவியை அவர் கேட்க வேண்டியிருக்கிறது. ‘சில நேரங்களில் என் சகோதரர்கள் அவர்களது வீட்டில் உணவு சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள்’ என்கிறார் அவர்

ஆசியாவின் 150 கோடி மக்கள், விறகடுப்பை பயன்படுத்துவதால் வரும் விஷத்தன்மை மாசை வீட்டுக் காற்றில் அதிக அளவில் கொண்டிருக்கின்றனர். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய், காசநோய், சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அவர்கள் கொண்டிருக்கின்றனர்


இத்தகைய சூழலில் அடுப்பை பற்ற வைப்பதுதான் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு மற்றும் பல சுவாசக்கோளாறு நோய்கள் ஏற்படவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் நாக்பூரை சேர்ந்த நுரையீரல் மருத்துவர் டாக்டர் சமீர் அர்பத். “அழுத்தமாக கட்டாயப்படுத்தப்பட்டு காற்றை உள்ளே ஊதியதும் மீண்டும் அதை தொடர வேகமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்,” என்கிறார் அவர். ஊதுகுழலின் மறுமுனையில் இருக்கும் கரித்தூள், காற்றை இழுக்கும்போது உள்ளே சென்றுவிடும்.”

நாள்பட்ட  தீவிர நுரையீரல் அடைப்பு நோய் சர்வதேச அளவில் நேரும் மரணங்களுக்கான மூன்றாவது காரணமாக 2030-க்குள் ஆகிவிடுமென உலக சுகாதார நிறுவனம் 2004ம் ஆண்டு கணித்தது. அந்த இடத்தை இந்த நோய் 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது.

”காற்று மாசு என்பது நம்முடன் ஏற்கனவே இருக்கும் தொற்றுநோய். கடந்த 10 வருடங்களில் நாம் கொண்டிருக்கும் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு நோயாளிகளில் பாதி பேர் புகைப்பழக்கம் இல்லாதவர்கள்,” என்கிறார் டாக்டர் அர்பத்.

பேசும் திறனற்ற 65 வயது ஷகுந்தலா லோந்தே, ஒரு நாளில் இரண்டு மூன்று மணி நேரங்கள் அடுப்பு உருவாக்கும் புகையை சுவாசிப்பதாக சொல்கிறார். “நாளொன்றில் இருவேளை உணவு எனக்கும் பேரனுக்கும் நான் சமைக்க வேண்டும்,” என்கிறார் அவர். “குளிப்பதற்கு சுடுநீர் வைக்க வேண்டும். எங்களிடம் சமையல் எரிவாயு இணைப்பு இல்லை.”

லோந்தேவின் மகன் 15 வருடங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவரின் மருமகள் வீட்டை விட்டு வெளியேறியவர், திரும்பவே இல்லை.

லோந்தேவின் பேரனான 18 வயது சுமித், ட்ரம் கழுவும் வேலை பார்த்து வாரத்துக்கு 1,800 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் பாட்டிக்கு அவர் பணம் கொடுப்பதில்லை. “பணம் தேவைப்படும்போதெல்லாம் நான் தெருக்களில் பிச்சை எடுப்பேன்,” என்கிறார் அவர். “எனவே சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்கும் வாய்ப்பே இல்லை.”

Shakuntala Londhe, 65, has a speech impairment. She spends two to three hours a day inhaling smoke generated by the stove
PHOTO • Parth M.N.

வாய் பேச முடியாத 65 வயது ஷகுந்தலா லோந்தே அடுப்பு உருவாக்கும் புகையை நாள்தோறும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் சுவாசிக்கிறார்

உதவக் கூடிய பக்கத்து வீட்டுக்காரர்கள், நாள்தோறும் அருகாமை கிராமங்களிலிருந்து ஒருமணி நேரம் நடந்து தலையில் வைத்துக் கொண்டு வரும் விறகுகளில் கொஞ்சத்தை  அவருக்குக் கொடுப்பார்கள்.

அடுப்பை பற்ற வைக்கும் ஒவ்வொரு முறையும் லோந்தே கிறுகிறுப்பையும் மயக்க நிலையையும் பெறுகிறார். ஆனால் முறையான சிகிச்சை ஒருபோதும் பெற்றதில்லை. “மருத்துவரிடம் சென்று தற்காலிக நிவாரணத்துக்காக மாத்திரைகளை பெறுவேன்,” என்கிறார் அவர்.

ஆகஸ்ட் 2022-ல் நற்காற்றை சுவாசிப்பதற்காக போராடும் தாய்களின் அகில இந்திய கூட்டமைப்பான வாரியர் மாம்ஸ் அமைப்பும், நாக்பூரை சேர்ந்த தொண்டு நிறுவனமான, நிலைத்து நீடித்த வளர்ச்சிக்கான மையமும் நாக்பூர் மாநகராட்சியும் கணக்கெடுப்பு மற்றும் சுகாதார மையம் நடத்த இணைந்தன. சிகாலியில் அவர்கள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கான சுவாசக் காற்றின் உச்சத்தை (PEFR) அளந்து பார்த்தார்கள்.

350க்கு மேலான மதிப்பெண் நல்ல நுரையீரல்களை குறிப்பவை. சிகாலியில் பரிசோதிக்கப்பட்ட 41 பெண்களில் 34 பேர் 350க்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தனர். 11 பேர், நுரையீரல் குறைபாடை குறிக்கும் வகையில் 200க்கும் குறைவான மதிப்பெண் பெற்றனர்.

லோந்தே எடுத்த 150 மதிப்பெண், தேவைப்படும் மதிப்பெண்ணில் கிட்டத்தட்ட பாதியளவு.

நாக்பூர் நகர குப்பங்களின் 1,500 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 43 சதவிகித பேர் விறகடுப்பு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. வீட்டிலுள்ள குழந்தைகளை காக்க திறந்தவெளியில் பலர் சமைத்தனர். ஆனால் அடுப்பிலிருந்து உருவான காற்றுமாசு அருகருகே குடிசைகள் இருப்பதால் மொத்த குப்பத்தையும் பாதித்திருக்கிறது.

Londhe feels lightheaded and drowsy each time she fires up the stove, but has never sought sustained treatment. 'I go to the doctor and get pills to feel better temporarily,' she says.
PHOTO • Parth M.N.
Wood for the stove is sold here at the village shop
PHOTO • Parth M.N.

அடுப்பை பற்றவைக்கும் போதெல்லாம் கிறுகிறுப்பும் மயக்க நிலையும் உணருகிறார் லோந்தே. ஆனால் முறையான சிகிச்சை பெற்றதே இல்லை. ‘மருத்துவரிடம் செல்வேன். தற்காலிக நிவாரணத்துக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வேன்,’ என்கிறார் அவர். வலது: அடுப்புக்கான விறகு இந்த கடையில் விற்கப்படுகிறது

சமையல் எரிவாயு கிட்டாத ஏழை இந்தியர்களின் சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்த சிக்கல்களை சரி செய்யவென பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மே 2016ல் பிரதமர் மோடி அமல்படுத்தினார். விளைவாக எரிவாயு சிலிண்டர்கள் ஏழை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டன. திட்டத்தின் இலக்கு, 8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான எரிவாயுவை கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த இலக்கை 2019ம் ஆண்டில் எட்டிவிட்டதாக திட்டத்துக்கான இணையதளம் குறிப்பிடுகிறது.

ஆனால் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5 (2019-21) , இந்தியாவின் 41 சதவிகிதம் பேர் சமையல் எரிவாயு கிடைக்காமல் இருப்பதாக குறிப்பிடுகிறது.

கூடுதலாக சமையல் எரிவாயு கிடைக்கும் பலரும் அதை முதன்மையாக பயன்படுத்துவதில்லை. 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரை நிரப்ப மகாராஷ்டிராவில் 1,100லிருந்து 1,120 ரூபாய் வரை ஆகிறது. 93.4 மில்லியன் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டப் பயனாளிகளில் சிறு சதவிகிதம்தான் எரிவாயு மீண்டும் நிரப்புமளவு வசதி கொண்டிருக்கிறார்கள் எனப் பரவலாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சிகாலியில் அரசுத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்த 55 வயது பார்வதி ககடே ஏன் என விளக்குகிறார். “அடுப்பு பயன்படுத்துவதை நான் முற்றாக நிறுத்திவிட்டால், ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் மாற்ற வேண்டும்,” என விளக்குகிறார். “அந்தளவுக்கு வசதி எனக்கு கிடையாது. எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு சிலிண்டரை பயன்படுத்துகிறேன். வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போதோ கனமழை பெய்யும்போதே மட்டும்தான் சிலிண்டர் பயன்படுத்துகிறேன்.”

மழைக்காலத்தில் நனைந்த விறகு சூடு பெறவும் அடுப்பு பற்ற வைக்கும் இன்னும் வலிமையான நீடித்த நேரத்துக்கு மூச்சை இழுத்து ஊத வேண்டும்.  நெருப்பு வந்ததும் அவரின் பேரக் குழந்தைகள் எரிச்சலில் கண்களை கசக்கி, அழத் தொடங்கி விடுகின்றனர். சுவாசக்கோளாறு குறித்த நோய்கள் பற்றி ககடேவுக்கு தெரியும். இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லை.

Parvati Kakade, 55, got an LPG connection under the government scheme. "I stretch it out for six months or so by using it only when we have guests over or when it is raining heavily,' she says
PHOTO • Parth M.N.

55 வயது பார்வதி ககடே அரசு திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிறார். “ஆறு மாதங்களுக்கு அதை பயன்படுத்துவேன். விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தாலோ கனமழை பெய்தாலோதான் பயன்படுத்துகிறேன்,’ என்கிறார் அவர்

“அதைப் பற்றி நான் ஏதும் செய்ய முடியாது,” என்கிறார் ககடே. “பிழைப்பு ஓட்டுவதே சிரமமாக இருக்கிறது.”

ககடேவின் மருமகனான 35 வயது பலிராம்தான் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே உறுப்பினர். குப்பை சேகரிக்கும் அவர் மாதந்தோறும் 2,500 ரூபாய் சம்பாதிக்கிறார். விறகடுப்பைதான் முதன்மையாக குடும்பம் பயன்படுத்துகிறது. மூச்சிரைப்பு நோய், நுரையீரல் பலவீனம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாசக் கோளாறு தொற்று ஆகியவற்றுக்கான சாத்தியங்களை அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

“தீவிர நுரையீரல் நோய் எதுவாக இருந்தாலும் திசு அழிவையும் தசை அழிவதையும் ஏற்படுத்தும். விளைவாக முதுமை விரைவிலேயே நேரும்,” என்கிறார் டாக்டர் அர்பத். “நோயாளிகள் சுருங்கிப் போவார்கள். சுவாசப் பிரச்சினைகளின் காரணமாக, அவர்கள் வீட்டிலேயேயே தங்க விரும்புவார்கள். விளைவாக நம்பிக்கையின்மையும் மன அழுத்தமும் அவர்களுக்கு உருவாகும்.”

அர்பத்தின் கருத்துகள் ஜாதவை சரியாக விளக்குகிறது.

அவரின் குரலில் நிச்சயமில்லை. கண்ணை பார்க்காமல் பேசுகிறார். அவரின் சகோதரர்களும் அவர்தம் மனைவிகளும் ஒரு திருமண விழாவுக்காக வெளி மாநிலம் சென்றிருக்கின்றனர். பிறர் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவர் வீட்டிலேயே தங்கிக் கொள்வது என முடிவெடுத்திருக்கிறார். “வார்த்தைகளில் எவரும் சொல்லவில்லை. ஆனாலும் என்னைப் போன்ற ஒருவருக்கு ஏன் டிக்கெட் எடுத்து பணத்தை வீணடிக்க வேண்டும்?” எனக் கேட்கிறார் அவர் ஏக்கப்புன்னகையுடன். “என்னால் பயனேதுமில்லை.”

பார்த் எம்.என், தாகூர் குடும்ப அறக்கட்டளையில் பெறும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றிய செய்திகளை எழுதுகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan