“கோடை காலத்தை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம்! இந்த நேரத்தில்தான் மண் பானைகள் அதிகம் விற்கும். இப்போது எங்களால் விற்க முடியவில்லை,” என்கிறார் ரேகா கும்ப்கர். அடுப்பில் காய வைப்பதற்கு முன் பானைக்கு வண்ணம் பூசிக் கொண்டே பேசினார். ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து பானைகள் உருவாக்குகிறார். சில சமயங்களில் வெளியே அமர்ந்தும் வேலை பார்க்கிறார்.

சட்டீஸ்கரின் தம்தரி டவுனின் குயவர் காலனியான கும்ஹர்பராவெங்கும் வீடுகளுக்கு வெளியே செம்மண் பானைகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை சந்தையில் விற்கப்பட்டிருக்க வேண்டிய பானைகள் அவை. “காய்கறி வியாபாரிகள் 7 மணியிலிருந்து 12 மணி வரை சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதுபோல், நாங்களும் பானைகள் விற்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் சிரமத்துக்குள்ளாவோம்,” என்கிறார் ரேகா.

தலையில் காலி கூடையுடன் கும்ஹர்பராவுக்கு புபனேஸ்வரி கும்ப்கர் திரும்பினார்.  “மண் பானைகள் விற்பதற்காக காலையிலிருந்து டவுனின் பல காலனிகளுக்கு சென்று வருகிறேன். எட்டு பானைகள் விற்றுவிட்டேன். இன்னொரு எட்டுப் பானைகள் எடுத்துக் கொண்டு மீண்டும் தெருக்களுக்கு போக வேண்டும். ஆனால் நான் சீக்கிரமே திரும்பி விட்டேன். ஏனெனில் நண்பகலிலிருந்து மீண்டும் ஊரடங்கு தொடங்குகிறது. சந்தையில் விற்க அனுமதிக்கப்படாததால், நாங்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை. ஐநூறு ரூபாயும் அரசு கொடுக்கும் அரிசியும் மட்டும் வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்தால் எப்படி வாழ முடியும்?”

கும்ஹர்பராவில் உள்ள எல்லா குடும்பங்களும் கும்ஹர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். தாம் செய்யும் பானைகளை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்றிருக்கின்றனர். மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை விற்பனை உச்சத்தில் இருக்கும் காலத்தில் 200 முதல் 700 வரை பானைகளை ஒவ்வொரு குடும்பமும் உருவாக்கும். நீரை குளிர்ச்சியாக வைப்பதற்காக மக்கள் பானைகளை வாங்குவார்கள். குடும்பத்தினர் எவ்வளவு உதவுகிறார்கள் என்பதை பொறுத்து ஒவ்வொரு குடும்பம் உருவாக்கும் பானைகளின் எண்ணிக்கையும் மாறுகிறது. பிற மாதங்களில் விழாக்களுக்கு என சிறு சிலைகளையும் தீபாவளிக்கான விளக்குகளையும் திருமண நிகழ்வுகளுக்கான சிறிய பானைகளையும் செய்கிறார்கள்.

மழைக்காலங்களில் அவர்களின் வேலை நின்றுவிடும். ஜூன் மத்தியில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதி வரை மண் காயாது. வீட்டுக்கு வெளியே வைத்து வேலைகளையும் செய்ய முடியாது. இந்த காலத்தில், சில குயவர்கள் (எந்த குடும்பத்துக்கும் சொந்தமாக நிலம் கிடையாது) விவசாயக் கூலி வேலை பார்க்கச் செல்கிறார்கள். நாட்கூலியாக 150லிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும்.

PHOTO • Purusottam Thakur

புபனேஸ்வரி கும்ப்கர் (மேல் வரிசை) ஊரடங்கு மீண்டும் தொடங்குவதற்கு முன் சில பானைகளை விற்கும் முயற்சியில் இருக்கிறார். ‘எங்கள் வேலைகள் ஊரடங்கால் முடக்கப்பட்டிருக்கிறது,’ என சொல்கிறார் சூரஜ் கும்ப்கர் (கீழே இடப்பக்கம்). ரேகா கும்ப்கர் (கீழே வலப்பக்கம்) அடுப்பில் காய வைக்கும் முன் பானைகளுக்கு வண்ணம் பூசுகிறார்

சட்டீஸ்கரின் பொது விநியோகத் திட்டப்படி, ஒவ்வொருவருக்கும் மாதத்துக்கு 7 கிலோ அரிசி கிடைக்கும். ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இரண்டு மாதங்களுக்கான தானியத்தையும் ஐந்து கிலோ உபரி தானியத்தையும் ஒரே நேரத்தில் பெற முடிந்தது. புபனேஸ்வரியின் குடும்பம் 70 கிலோ அரிசியை மார்ச் மாத இறுதியிலும் (இரண்டு மாதங்களுக்கானது) பிறகு மீண்டும் மே மாதத்தில் 35 கிலோவும் பெற்றது. கும்கர்பராவில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கொடுக்கப்பட்டது. “ஆனால் 500 ரூபாய் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் புபனேஸ்வரி. “அதனால்தான் வீட்டுச்செலவை சமாளிக்க தெருக்களுக்கு சென்று பானைகள் விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.”

”இப்போதுதான் நான் வேலை பார்க்கத் தொடங்கினேன் (என்னை சந்திக்கும் ஒரு நாளுக்கு முன்),” என்கிறார் சூரஜ் கும்ப்கர். ”என் மனைவி அஷ்வனிக்கு அறுவை சிகிச்சை நடந்தது (தம்தரியிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது). இது எங்களின் குடும்பத் தொழில். ஒருவருக்கு மேற்பட்டோர் இவ்வேலை செய்யத் தேவைப்படும்.” சூரஜ்ஜுக்கும் அஷ்வனிக்கும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் 10 வயது தொடங்கி 16 வயது வரை இருக்கின்றனர். ”ஊரடங்கினால் எங்கள் வேலை முடங்கிவிட்டது. தீபாவளியிலிருந்து இருக்கும் மோசமான வானிலை (அவ்வப்போது மழை பெய்கிறது) ஏற்கனவே பானைகளை உருவாக்க சிரமம் கொடுக்கிறது,” என்கிறார் சூரஜ். “காவலர்கள் பிற்பகலில் வந்து நாங்கள் வெளியே வேலை செய்வதை தடுக்கிறார்கள். எங்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.”

சூரஜ்ஜை சந்தித்தபோது பெரிய விளக்குகளை செய்து கொண்டிருந்தார். தீபாவளி சமயத்தில் 30, 40 ரூபாய்க்கு விற்கப்படுபவை அவை. சிறிய விளக்குகள், அளவை பொறுத்து 1 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. துர்க்கை பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற பல விழாக்களுக்கு சிலைகளையும் அக்குடும்பம் செய்து கொடுக்கிறது.

கும்கர்பராவிலுள்ள 120 குடும்பங்களில் 90 குடும்பங்கள் வரை இன்னும் பானைகளையும் பிற மண்பாண்டங்களையும் செய்துதான் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறார் சூரஜ். மிச்ச பேர் விவசாயக் கூலி, அரசு வேலை போன்ற பிற வேலைகளுக்கு நகர்ந்து விட்டனர்.

PHOTO • Purusottam Thakur

பூரப் கும்ப்கர் (மேலே இடப்பக்கம்) இந்த அட்சய திருதியையில் சில மணமகன் சிலைகள் மட்டுமே விற்றிருக்கிறார். கும்ஹர்பராவில் இருக்கும் பல குயவர்கள் இந்த கோடைகாலத்தில் ஊரடங்கினால் பானைகள் விற்க முடியவில்லை

ஏப்ரல் மாத இறுதியில் நாங்கள் ஒரு பழைய மண்டிக்கு சென்றோம். தம்தாரி மாவட்ட நிர்வாகம், 7 மணியிலிருந்து 1 மணி வரை அங்கு தற்காலிக காய்கறி சந்தையை ஒருங்கிணைத்திருந்தது. சில குயவர்கள் மண் பொம்மைகளை (திருமண ஜோடி பொம்மைகள்) சில பானைகளுடன் விற்றுக் கொண்டிருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டோம். ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் குயவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்க அனுமதி இருந்தது.

இந்து மத நாட்காட்டியின்படி, அட்சய திருதியை ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் நடவு தொடங்குவார்கள். சட்டீஸ்கரில் இருக்கும் பலர் மணப்பெண்-மணமகன் சிலைகளை வைத்து பாரம்பரிய திருமண விழா கொண்டாடுவார்கள். “என்னிடம் 400 ஜோடிகள் இருக்கின்றன. இப்போது வரை 50 மட்டுமே விற்றிருக்கிறேன்,” என்கிறார் புரப் கும்ப்கர். வழக்கமாக அவர் ஒரு ஜோடியை 40, 50 ரூபாய்க்கு விற்பார். “கடந்த வருடம் இந்த நேரத்தில், 15000 ரூபாய் வரை நான் வியாபாரம் செய்தேன். இந்த வருடம் வெறும் 2000 ரூபாய்க்குதான் வியாபாரம் செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் (விழாக்காலம்) இருக்கின்றன. பார்க்கலாம். ஊரடங்கினால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது சார்.”

கும்கர்பராவில் இருக்கும் பல குடும்பங்களின் குழந்தைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்றனர். கல்விக்கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை செலவு போன்றவை இருக்கிறது. கோடைகாலத்தில்தான் குயவர்களால் ஓரளவேனும் நல்ல வருமானம் பார்க்க முடியும். வருடத்தின் மிச்ச காலத்துக்கு அந்த பணத்தையே சேமித்தும் வைப்பார்கள்.

”அடிக்கடி பெய்யும் மழையால் பானைகள் விற்பனையும் ஆவதில்லை,” என்கிறார் புரப். வெயில்காலத்தில் மக்களுக்கு பானைகள் தேவைப்படும். வானிலையும் ஊரடங்கும் எங்கள் வாழ்க்கைகளை கடினமாக்கி விட்டது.”

மே மாதத்தின் மத்தியிலிருந்து ஊரடங்கு மெல்ல தளர்த்தப்படுகிறது. தம்தரியில் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தை உட்பட பல சந்தைகளுக்கு குயவர்கள் செல்ல முடியும். வழக்கமான சந்தைகள் இப்போது காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இயங்குகின்றன. ஆனால் மே மாதத்திலெல்லாம், குயவர்களின் விற்பனை உச்சத்தில் இருக்கும் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஆகவே மிச்ச வருடம் முழுக்க கும்கர் குடும்பங்களில் நஷ்டங்களின் தாக்கம் நீடித்திருக்கும்.

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Purusottam Thakur

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker. At present, he is working with the Azim Premji Foundation and writing stories for social change.

Other stories by Purusottam Thakur