“நமக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடிவதற்குக் காரணம் எது தெரியுமா? அரசியல் சாசனம்.” அவருடைய நடமாடும் புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வாடிக்கையாளரிடம் அரசியல் சாசனப் புத்தகத்தைத் தூக்கிக் காட்டி இப்படிச் சொல்கிறார் அவர். சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்ட கோட்காவோன் கிராமத்து கண்காட்சியிலுள்ள அவரது கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலேயே அடர்த்தியானது அரசியல் சாசனப் புத்தகம்தான். அவரின் ஜொராதாப்ரி கிராமத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் வாரச்சந்தை அது.

எழுதவோ படிக்கவோ தெரியாத ராம்பியாரி, கடைக்கு வரும் அனைவரிடமும் அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அவரைப் போலவே வாடிக்கையாளர்களும் அப்பகுதியின் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களே. புத்தகம் விற்பவர் அரசியல் சாசனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்தான் முனைப்பாக இருந்தார்.

ஒவ்வொருவரும் தம் வீட்டில் வைத்து உரிமைகளையும் கடமைகளையும் கற்றுக் கொள்ள வேண்டிய ”ஒரே புனித நூல்” அதுதான் என ராம்பியாரி சொல்கிறார். “பழங்குடி மற்றும் தலித்களாகிய நமக்கு இட ஒதுக்கீட்டை (உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்) அரசியல்சாசனமும் அதன் ஐந்தாம் ஆறாம் பிரிவுகளும்தான் (பழங்குடிச் சமூகங்கள் பாதுகாப்பு) தருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்கிறார் அவர், சந்தைக்கு பிரதானமாக காய்கறி, மளிகை முதலியவற்றை வாங்க வந்திருக்கும் கோட்காவோன் மக்களிடம்.

ராம்பியாரி கவாச்சிக்கு 50 வயதிருக்கலாம். சட்டீஸ்கரின் பெரிய பழங்குடிச் சமூகமான கோண்ட் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் மூன்றிலொரு பங்கு மக்கள் பட்டியல் பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர் விற்கும் பெரும்பாலான புத்தகங்கள் இந்தி மொழியில் இருக்கின்றன. கோண்டி மொழியிலும் ஆங்கில மொழியிலும் கூட சில புத்தகங்களை அவர் வைத்திருக்கிறார். யாரேனும் ஒரு புத்தகத்தை எடுத்தால் ராம்பியாரி அதன் உள்ளடக்கத்தை விளக்குகிறார். கிட்டத்தட்ட சிறு புத்தக விளக்கவுரை போல் அது தொனிக்கிறது.

Rampyari Kawachi (right) selling books and other materials during World Tribal Day celebrations in Dhamtari, Chhattisgarh, in 2019.
PHOTO • Purusottam Thakur
Rampyari loves wearing a red turban when he goes to haats, melas and madais
PHOTO • Purusottam Thakur

இடது: ராம்பியாரி கவாச்சி (வலது), 2019 ஆண்டின் உலக பழங்குடி நாள் கொண்டாட்டத்தில் புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கிறார். வலது: சந்தைகளுக்கும் விழாக்களுக்கும் செல்கையில் சிவப்பு தலைப்பாகை அணிவது ராம்பியாரிக்கு மிகவும் பிடிக்கும்

“நான் பள்ளிக்குச் சென்றதே இல்லை. எழுதவோ படிக்கவோ தெரியாது,” என்கிறார் ராம்பியாரி. ஓய்வு பெற்ற பஞ்சாயத்துத் தலைவரான, 60 வயதுகளில் இருக்கும் சோப்சிங் மண்டவியின் உதவியை அவர் எடுத்துக் கொள்கிறார். ”புத்தகங்களை வாசிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள்வேன். அதில் என்ன இருக்கிறதென அவர் எனக்குச் சொல்வார். பிறகு அதை வாடிக்கையாளரிடம் நான் விளக்குவேன். புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விலையைக் கூட என்னால் வாசிக்க முடியாது. ஒருமுறை சொல்லிவிட்டால் போதும், மறக்க மாட்டேன்,” என்கிறார் அவர்.

15 வருடங்களுக்கு முன்பு புத்தகங்கள் விற்கத் தொடங்குவதற்கு முன்னால் ராம்பியாரி பிற நிலங்களில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்திருக்கிறார். பிறகு சந்தைகளில் விதைகளையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் விற்கத் தொடங்கியிருக்கிறார். இப்போதும் அவர், 10-15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மத்திய சட்டீஸ்கரின் வாரச் சந்தைகளில் விதைகள் விற்கிறார். வெள்ளரி, தக்காய் முதலிய காய்கறிகளின் விதைகளை தனியாக, புத்தகத்துக்கு அப்புறத்தில், காலண்டர்கள், கடிகாரங்கள் முதலியப் பொருட்களைத் தாண்டி விற்பனைக்கு வைத்திருக்கிறார்.

முதல் பார்வையில் புத்தகங்களையும் விதைகளையும் விற்பவராக ராம்பியாரியை தவறாக நினைத்துவிட முடியும். ஆனால் அவர் அதற்கும் மேல். தன்னை ஒரு செயற்பாட்டாளர் என அவர் சொல்லிக் கொள்கிறார். பழங்குடிச் சமூக மக்கள் பழங்குடி பிரச்சினைகள் மற்றும் தங்கள் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள அவர் புத்தகங்கள் விற்கத் தொடங்கினார். அறுவடை விழா மற்றும் கண்காட்சிகளில் விதைகளை விற்கச் செல்லும்போது, பழங்குடிப் பிரச்சினைகள் பற்றி அங்கு நடக்கும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல் முதலியவை அவரை ஈர்த்து பழங்குடியினரைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறது. எனவே அவர் அதிகமாக செயல்பட விரும்பினார்.

“சக பழங்குடி மக்களிடம் நான் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் ராம்பியாரி. ஆர்வமூட்டும் ஈர்ப்புக் கொடுக்கும் படங்களையும் அவர் விற்கிறார். அவற்றில் ஒன்றில், கோண்ட் பழங்குடிகள் மூதாதையாக கருதும் ராவணனின் படம் இருக்கிறது. “எங்கள் மக்களுக்கு கல்வியும் உரிமைகளும் மறுக்கப்படுவதற்கு அவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமலிருப்பதே காரணம். அரசியல் சாசனம் எங்களுக்கு வலிமையைக் கொடுத்தாலும் எங்களின் உரிமைகளை நாங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எங்கள் மக்களின் அறியாமையால் நாங்கள் சுரண்டப்படுகிறோம்,” என்கிறார் அவர். புத்தகங்கள், படங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து அவரின் கடையில் பழங்குடி விழாக்கள் குறிக்கப்பட்ட நாட்காட்டிகளும் விற்கப்படுகின்றன. பின்பக்கமாக முள் நகரும் பழங்குடி கடிகாரம் , வளைகள் மற்றும் பழங்குடி முத்திரைகள் கொண்ட கழுத்தணிகளும் விற்கப்படுகின்றன.

A floral procession for guardian deities at a madai (harvest festival) in Dhamtari.
PHOTO • Purusottam Thakur
Dhol performers at a mela (right) in Chhattisgarh's Sukma district. Rampyari had set up his stall on both occasions
PHOTO • Purusottam Thakur

காவல் தெய்வங்களுக்கான பூக்கள் ஊர்வலம் (இடது). வலது: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்ட விழாவில் மேளம் வாசிக்கிறார்கள். இரு நிகழ்வுகளிலும் ராம்பியாரி கடை போட்டிருக்கிறார்

சட்டீஸ்கரில் பழங்குடிகள் இருக்கும் பஸ்தர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தெற்கு சட்டீஸ்கரின் பிற பகுதிகளுக்கும் ராம்பியாரி பயணித்திருக்கிறார். அருகே இருக்கும் ஒடிசா, மகாராஷ்டிரா, தெலெங்கானா முதலிய மாநிலங்களில் நடக்கும் கண்காட்சிகள், சந்திப்புகள் போன்றவற்றுக்கும் அவர் 400-500 புத்தகங்களை விற்கச் சென்று விடுவார். இதற்கு முன்பு, இந்தச் செய்தியாளர் அவரை சட்டீஸ்கர் மற்றும் ஒடிசாவில் பல தருணங்களில் சந்தித்திருக்கிறார்..

“ஆரம்பத்தில் நான் புத்தகங்கள் வாங்கி விநியோகித்தேன். இலவசமாக 10,000 - 12,000 புத்தகங்கள் கொடுத்திருப்பேன்,” என்கிறார் புத்தகக் கட்டுகளை மோட்டார் சைக்கிளில் பல காலமாக கொண்டு செல்லும் அவர். மகாராஷ்டிராவின் நாக்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மற்றும் சட்டீஸ்கரின் ராய்ப்பூர் முதலிய இடங்களிலிருந்து அவர் புத்தகங்களை வாங்குகிறார். வருமானம் நிலையாக இருக்காது என்னும் அவர், அதை கணக்கு பார்ப்பதில்லை என்றும் கூறுகிறார்.

10 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை புத்தகங்களின் விலைகள் இருக்கின்றன. “இந்தப் புத்தகங்கள் எங்கள் சமூகத்தைப் பற்றியவை. எனவே அவற்றை மக்களிடம் பரப்ப வேண்டும். அவர்கள் அவற்றை வாசிக்க வேண்டும். உங்களை (செய்தியாளரை) போன்ற ஒருவர் எங்களைக் கேள்விகள் கேட்டால், நாங்கள் கூச்சமடைந்து உங்களிடம் பேச முடியாமல் போய்விடுகிறது. எங்களின் முன்னோருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால்தான் எங்களால் பேசவோ குரலை உயர்த்தவோ முடியவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.

பயணங்களை சுலபமாக்க, பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனத்தை சில ஆண்டுகளுக்கு முன் அவர் வாங்கினார். அவருக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்கினார். மார்ச் 2020லிருந்து தொடங்கிய ஊரடங்கு காலத்தில் கடன் தவணைகள் கட்ட அவர் சிரமப்பட்டார். இப்போதும் கடினமாகத்தான் இருப்பதாக சொல்கிறார்.

Rampyari Kawachi (attired in yellow) and his helpers selling books on a hot summer afternoon at an Adivasi mela in Sukma district
PHOTO • Purusottam Thakur

ராம்பியாரி கவாச்சியும் (மஞ்சள் நிற உடை) அவரின் உதவியாளர்களும் ஒரு கோடைகால மதியவேளையில் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருக்கின்றனர்

அவரின் பொருட்களை சேமிக்கவென எந்த இடமும் இல்லை. அவை எல்லாவற்றையும் ஜோராதப்ரியிலுள்ள மூன்று அறை வீட்டில்தான் ராம்பியாரி வைத்திருக்கிறார். அங்கு அவரின் மனைவி பிரேமா பாயுடன் வசிக்கிறார். அவருக்கோ ராம்பியாரிக்கோ என்ன வயது என தெரியாது. எந்த ஆவணமும் பிறப்புச் சான்றிதழும் அவர்களிடம் இல்லை. வாய்ப்பு கிட்டும்போது பிரேமாவும் ராம்பியாரியுடன் சென்று கடையில் உதவுவார். ஆனால் அவர் வீட்டு வேலைகளிலும் வீட்டுக்கு பின் இருக்கும் சிறு நிலத்தில் விவசாயம் பார்ப்பதிலும்தான் கவனம் செலுத்துகிறார்.

“நிறைவைக் கொடுப்பதால் இந்த வேலையைச் செய்கிறேன்,” என்கிறார் ராம்பியாரி. “விழாக்கள் மற்றும் கண்காட்சி நேரங்களில் பழங்குடி மக்களாகிய நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறோம். எங்கு வேண்டுமானாலும் நான் சம்பாதிக்க முடியும். ஆனால் இந்த இடங்களில் நான் சம்பாதிக்க மட்டும் செய்யவில்லை, நான் வாழ்வதற்கு காரணமான விஷயத்தையும் செய்ய முடிகிறது.”

ராம்பியாரியை ஒரு வியாபாரியாகத்தான் மக்கள் அறிந்திருந்தனர். “பிறகு என்னை வணிகர் என அழைத்தார்கள்,” என்கிறார் அவர். “இப்போது அவர்கள் என்னை இலக்கியவாதியாக பார்க்கிறார்கள். எனக்கு அது பிடித்திருக்கிறது!”

தமிழில் : ராஜசங்கீதன்

Purusottam Thakur

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker and is working with the Azim Premji Foundation, writing stories for social change.

Other stories by Purusottam Thakur
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan