ஷோபா சாஹ்னி தனது மகனின் மரணத்திற்கான காரணம் தனக்குத் தெரியும் என்று நினைத்திருந்தார். ஆனால் ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவரால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பிப்ரவரி மாதம் மதிய வேளையில், பிரம்மசரி கிராமத்தில் உள்ள தனது ஒற்றை அறை கொண்ட வீட்டின் வாசலில் அமர்ந்தபடி, ஆறு வயது மகன் ஆயுஷ் உடல்நலம் குன்றியதை நினைவுகூர்ந்தார். “அவனுக்கு காய்ச்சலும், வயிற்று வலியும் இருந்தது,” என்றார் அவர்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள 2021 ஜூலை கடைசியில் மழை பெய்ததால் அவர்களின் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் அந்த வெள்ளம் அசாதாரணமானது. “இது ஆண்டுதோறும் நிகழ்கிறது,” என்கிறார். “தண்ணீர் செல்வதற்கு வழியில்லை.”

ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் பிரம்மசரியில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. பசுச்சாணம், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மனித கழிவுகள், கிராமம் முழுவதும் சிதறிக் கிடக்கும் குப்பைகள் யாவும் தண்ணீரில் கலந்து விடுகின்றன. “தண்ணீரில் விஷப்பூச்சிகளும், கொசுக்களும் உற்பத்தியாகின்றன. சமைக்கும் இடம் வரை அழுக்கு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகிறது,” என்கிறார் ஷோபா. “எவ்வளவு முயன்றாலும் எங்கள் பிள்ளைகள் தண்ணீரில் விளையாடுவதைத் தடுக்க முடியவில்லை. மழைக்காலங்களில் இங்குள்ள மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.”

கடந்த ஆண்டு அவரது மகனை பாதித்துவிட்டது. “நாங்கள் முதலில் பர்ஹல்கஞ்ச், கிச்ரிகஞ்சில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அவனுக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் பலனில்லை,” என்கிறார் ஷோபா.

காய்ச்சல் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, 7 கிலோமீட்டர் தொலைவில்  பெல்காட்டில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு (CHC) ஆயுஷை ஷோபா அழைத்துச் சென்றார். பிரம்மசரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்  கொரக்பூரில் உள்ள பாபா தாஸ் மருத்துவக் கல்லூரிக்கு அவனை (பிஆர்டி மருத்துவக் கல்லூரி) அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது.

PHOTO • Parth M.N.

கொரக்பூர் மாவட்டம் பிரம்மசரி கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே குழாயில் தண்ணீர் அடிக்கும் ஷோபா சாஹ்னி

மாநில அரசின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையான பிஆர்டி மருத்துவக் கல்லூரி அப்பகுதியில் இருக்கும் ஒரே மூன்றாம் நிலை வசதி மருத்துவமனை ஆகும். கிழக்கு உத்தரப்பிரதேசம், அண்டை மாநிலமான பீகார், நேபாளத்திலிருந்து வரும் நோயாளிகளுக்குக் கூட இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5 கோடி பேருக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை கூறுகிறது. மருத்துவமனை அவ்வப்போது நிரம்பி வழிவதோடு, சுகாதாரப் பணியாளர்களுக்கும் பணிச்சுமை கூடுகிறது.

கோரக்பூர் மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆயுஷிற்கு வலிப்பு ஏற்பட்டது. “அவனுக்கு மூளைக் காய்ச்சல் வந்துவிட்டதாக எங்களிடம் மருத்துவர்கள் சொன்னார்கள்,” என ஷோபா நினைவுகூர்கிறார். ஐந்து நாட்கள் கழித்து 2021 ஆகஸ்ட் 4ஆம் தேதி அவன் இறந்துவிட்டான். “அது அவனுக்கு நிகழ்ந்திருக்கக் கூடாது. என் மகன் நல்லப் பிள்ளை,” என்று கூறும்போதே அவர் கண் கலங்குகிறார்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் முதன்முதலில் பரவிய 1978ஆம் ஆண்டிலிருந்து கோரக்பூர் மாவட்டத்தை மூளைக் காய்ச்சல் பீடித்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கானோரது உயிரை தீவிர மூளைக்காய்ச்சல் நோய்க்குறி  தொடர்ந்து பாதித்து வருகிறது.

மூளை வீக்கத்துடன் தொடர்புடைய நிலைமைகளுக்கான சொல்லான, AES என்பது இந்தியாவில் தீவிர பொது சுகாதாரப் பிரச்சனையாகும். கொசுக்களில் இருந்து தோன்றும் வைரசில் உருவாகும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரசால்தான் ஏஇஎஸ் எனும் முதன்மை பாதிப்பு ஏற்படுகிறது. நோய்க்காரணியில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் தொற்று அல்லாத பலவகையான வைரஸ்கள் உள்ளன.

இந்த நோய் கடுமையான காய்ச்சல், மன நிலையில் மாற்றம் (மனக்குழப்பம், திசைத்திருப்பல், மயக்கம் அல்லது கோமா) மற்றும் வலிப்புத் தாக்கங்களின் தொடக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. AES எந்த வயதினரையும் ஆண்டின் எந்தப் பருவத்திலும் பாதிக்கலாம் என்றாலும், இது பொதுவாக 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. கடுமையான நோயுற்ற தன்மை, இயலாமை மற்றும் இறப்புக்கு இது வழிவகுக்கும். மழைக்காலம் மற்றும் அதற்கு பிறகு இது உச்சத்தை தொடுகிறது.

சுகாதாரம், துப்புரவு, தூய்மையான தண்ணீர் இல்லாத பகுதிகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.

பிரம்மசரி இவை அனைத்திற்குமான இடமாக உள்ளது.

PHOTO • Parth M.N.

வெள்ளத்தால் ஏற்படும் சேறு, சகதி ஆகியவை மூளைக் காய்ச்சல் நோய்தொற்றுக்கான இடமாக பிரம்மசரியை மாற்றுகின்றன

ஆயுஷிற்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதை உறுதி செய்ய பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் அவனது இறப்புச் சான்றிதழை நாங்கள் கேட்டோம். “இது என் கணவரின் சகோதரர்,” என்றார் ஷோபா. “அவரது செல்பேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள், அவரிடம் நான் வாட்ஸ்ஆப் செய்யச் சொல்கிறேன்.”

நாங்கள் அவ்வாறு செய்த சில நிமிடங்களில் எங்கள் செல்பேசிக்கு ஆவணம் வந்தது. அதில் கடுமையான மூளைச் சவ்வுக் காய்ச்சல் மற்றும் இதய நுரையீரல் செயலிழந்ததால் அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. “ஆனால் ஆயுஷிற்கு மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்று வியப்புடன் விளக்குகிறார் ஷோபா. “என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு இறப்புச் சான்றிதழில் ஏன் மாற்றி எழுத வேண்டும்?”

*****

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி தலைப்புச் செய்தியானது. அங்கு ஆக்சிஜன் குழாய் விநியோகத்தில் ஆக்சிஜன் தீர்ந்து போனதால் இரண்டு நாட்களில் (ஆகஸ்ட் 10) 30 குழந்தைகள் உயிரிழந்தனர். மாநில அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 7 மற்றும் 9ஆம் தேதிகளுக்கு இடையில் சமமான எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்ததாகக் கூறியது, மூளைக் காய்ச்சல் உட்பட இயற்கையான காரணங்களால் இறப்பு ஏற்பட்டது என்றது.

இந்த மருத்துவமனையின் அதிக இறப்பு எண்ணிக்கை புதிதல்ல.

2012 முதல் 2017 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். மூன்று தசாப்தங்களில் உயிரிழந்த 50,000 குழந்தைகளில் பெரும்பாலானவை ஜேஇ அல்லது ஏஇஎஸ் ஆகியவற்றால் மரணமடைந்திருக்கின்றனர். 2017இல் நடந்த இறப்புகள் கோரக்பூரையும், பிராந்தியத்தின் அனைத்து AES நோய்களையும் கையாளும் பரபரப்பான மருத்துவமனையையும் மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கின.

சொந்தத் தொகுதியான கோரக்பூரில் இப்படி நிகழ்ந்தது உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர் முதலமைச்சராவதற்கு முன்பு 1998ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2017ஆம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. “கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க நாங்கள் தொடர்ந்து தடுப்பான்களை [பூச்சிக்கொல்லியை] தெளித்தோம்,” என்கிறார் கோரக்பூர் முதன்மை மருத்துவ அலுவலர் (சிஎம்ஓ) டாக்டர் அஷூடோஷ் துபே. “நாங்கள் ஏப்ரலில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை [ஜேஇயை கட்டுப்படுத்த] தொடங்கினோம். பொதுவாக நோய் பாதிப்பு மழைக்காலங்களில் உச்சத்தில் இருக்கும் என்பதால் முன்பு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் செய்யப்பட்டது.”

PHOTO • Parth M.N.

மலம், பசுச்சாணம், குப்பைகளால் நிலத்தடி நீர் மாசடைவதே கோரக்பூர் மாவட்டத்தில் தொற்று அதிகமிருப்பதற்கு காரணம்

கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் ஏஇஎஸ் பாதிப்பை தனது அரசு கட்டுப்படுத்திவிட்டதாக முதலமைச்சர் ஆதித்யநாத் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கூற்றை, பூச்சிகளால் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தேசிய இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளும் ஆதரிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஏஇஎஸ், ஜேஇ தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2017ஆம் ஆண்டில் ஏஇஎஸ் பாதிப்பு 4,742ஆகவும், ஜேஇ பாதிப்பு 693ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேஇ தொற்றினால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கை 654-93.

2020ஆம் ஆண்டில் மாநிலத்தில் ஏஇஎஸ் தொற்று பாதிப்பு 1,646 என்றும் மரணங்களின் எண்ணிக்கை 83 என்றும் பதிவாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளான 1,657 பேரில் 58 பேர் இறந்துள்ளனர். நான்கு பேர் மட்டுமே ஜேஇ பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

2017 முதல் 2021 வரை AES மற்றும் JE இறப்புகள் முறையே 91 மற்றும் 95 சதவீதம் என்று குறைந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் ஒழிப்பு செயல்பாட்டை வெற்றிகரமாக தனது அரசு செய்துவிட்டதாக ஆதித்யநாத் 2022 ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தெரிவித்தார்.

இருப்பினும், ஆயுஷின் விஷயத்தைப் போலவே, இறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட இறப்புக்கான காரணங்களில் உள்ள முரண்பாடுகள், தவறு நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

பிரம்மசரி அமைந்துள்ள பெல்காட் வட்டாரத்தின் சமூக நல மையத்தின் பொறுப்பு அலுவலர் டாக்டர் சுரேந்திர குமார் பேசுகையில், “நீங்கள் யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது,” என்றார். “அது ஏஇஎஸ் மரணம் கிடையாது. எங்கள் பகுதியில் ஏஇஎஸ் நோயாளி யாரேனும் வந்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் எனக்கு தெரியப்படுத்துவார்கள்.”

பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேஷ் குமாரை பிப்ரவரி மாதம் பாரி குழுவினர் சந்தித்த போது அவர் பெல்காட் சமூக நல மையப் பொறுப்பாளரின் கருத்துடன் முரண்பட்டார். “தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் என்பதும் ஏஇஎஸ்-ன் கீழ்தான் வருகிறது,” என்றார். “நோயாளி சேர்க்கப்படும்போது ஏஇஎஸ் என்றுதான் கருதப்படுவார்.”

தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் என்று கூறப்பட்டுள்ள ஆயுஷின் இறப்புச் சான்றிதழை நாங்கள் அவரிடம் காட்டினோம். “இதில் ஏஇஎஸ் எண் இல்லை. ஏதேனும் எண் ஒன்று நிச்சயம் இருந்திருக்கும்,” என்று கூறிய கணேஷ் குமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ளதைக் கண்டு குழம்பினார்.

PHOTO • Parth M.N.

'நாங்கள் எவ்வளவு தடுத்தாலும் எங்கள் குழந்தைகள் அசுத்தமான தண்ணீரில் விளையாடுகின்றனர்,' என்கிறார் ஷோபா

ஏஇஎஸ் நோயாளியைக் கண்டறிவது கடினமில்லை என்கிறார் டாக்டர் கஃபீல் கான். “ஏஇஎஸ் என்பதே தற்காலிக நோயறிதல்தான். நோயாளிக்கு 15 நாட்களுக்கும் குறைவாக [காலம்] இருந்து ஏதேனும் மாற்றம் [வலிப்பு போன்றவை] ஏற்பட்டால், உங்களுக்கு ஏஇஎஸ் எண் ஒதுக்கீடு செய்வோம். உங்களுக்கு பரிசோதனைகளும் தேவையில்லை. அப்படித்தான் 2017 ஆகஸ்ட் சம்பவம் வரை வைத்திருந்தோம்,” என்று அவர் விளக்கினார்.

2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 குழந்தைகள் இறந்த நாளன்று கான் பணியிலிருந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அவர் கடமையில் அலட்சியம் காட்டியதாக கூறி உ.பி. அரசினால் இடைநீக்கம் செய்யப்பட்டார். மருத்துவ கவனக்குறைவு உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறையில் இருந்து 2018 ஏப்ரல் மாதம் பிணையில் வெளிவந்தார்.

2017 துயர சம்பவத்திற்கு, தான் பலிகடாவாக ஆக்கப்பட்டதாக அவர் நம்புகிறார். “தரவுகளை மருத்துவமனை மாற்றுவதால் எனக்கு வேலை மறுக்கப்படுகிறது,” என்றார் அவர். 2021 நவம்பர் மாதம் பிஆர்டியில் குழந்தைகள் நலத்துறை விரிவுரையாளர் சேவையிலிருந்து அவரை உ.பி. அரசு நீக்கியது. இதை எதிர்த்து அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

AES பாதிப்புகள் பற்றி சாதகமான எண்களைக் காட்ட தீவிரக் காய்ச்சல் நோய் (AFI) என அவைப் பட்டியலிடப்பட்டுள்ளன என்கிறார் கான்.  “ஆனால் ஏஎஃப்ஐ பாதிப்பில் மூளைக்கு பங்கில்லை. அது தீவிரக் காய்ச்சல் மட்டுமே.”

மாவட்டத்தின் சிஎம்ஓ அஷூடோஷ் துபே, இதுபோன்ற தவறான எண்ணிக்கையை மறுக்கிறார். “சில ஏஎஃப்ஐ பாதிப்புகள் ஏஇஎஸ் என்று மாறலாம்,” என்றார். “அதனால்தான் பாதிப்புகளை முதலில் புலனாய்வு செய்து அதற்கேற்ப வகை பிரிக்கிறோம். அனைத்து ஏஎஃஐ பாதிப்புகளும் ஏஇஎஸ் பாதிப்புகள் கிடையாது.”

தீவிர ஃபிப்ரைல் நோய் தீவிர மூளைக்காய்ச்சல் நோய்குறியாக முன்னேற்றம் அடையலாம். ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று உட்பட, இரண்டு நோய்களும் சில நோய்க்குறியீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. கோரக்பூர் பிராந்தியத்தில் இத்தொற்றுதான் ஏஇஎஸ் பரவலுக்கு முதன்மைக் காரணம் என பின்னர் அடையாளம் காணப்பட்டது. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் செய்த ஆய்வுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஏஇஎஸ் பாதிப்புகளுக்கு ஸ்கரப் டைஃபஸ் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் 2019ஆம் ஆண்டில் பிஆர்டி மருத்துவக் கல்லூரி தீவிர ஃபிப்ரைல் நோயை தனிவகை நோய் என்று வகைப்படுத்தியது. எனினும் இந்த எண்ணிக்கை குறித்த தகவல்களை துபேயோ, கணேஷ் குமாரோ தெரிவிக்கவில்லை.

PHOTO • Parth M.N.

தனது மகன் ஆயுஷுக்கு மூளைக்காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஷோபா கூறினாலும், அவனது இறப்புச் சான்றிதழில் வேறு நோய் தெரிவிக்கப்பட்டுள்ளது

AES கடுமையான காய்ச்சல், மன நிலையில் மாற்றம் மற்றும் வலிப்புத் தாக்கங்களின் தொடக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. ஆண்டில் எந்த வயதினரையும் இந்நோய் தாக்கினாலும், 15 வயதிற்குள் உள்ள குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது

மருத்துவக் கல்லூரியில் அந்தாண்டு சிகிச்சைப் பெற்றவர்களின் பட்டியலை பாரி கண்டறிந்தது. ஏஇஎஸ், ஜேஇ போன்று மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை உச்சமடைந்துள்ளது. (டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற தொற்றுகளும் ஏஎஃப்ஐக்கு வழிவகுக்கிறது.) பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 1,711 ஏஎஃப்ஐ பாதிப்புகளில் 2019 ஆகஸ்ட் மாதம் 240ம், செப்டம்பர், அக்டோபர் முறையே 683 மற்றும் 476 பாதிப்புகள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு பாதிப்புக் கூட பதிவாகவில்லை.

இத்தரவுகளில் சிலவற்றை 2019 இறுதியில் கோரக்பூர் நியூஸ்லைன்  என்ற தனது இணையதளத்தில் பத்திரிகையாளர் மனோஜ் சிங் முதலில் வெளியிட்டு இருந்தார். நீண்ட காலமாக பிஆர்டி மருத்துவக் கல்லூரி மூளைக்காய்ச்சல் குறித்து செய்தி சேகரித்து வரும் அவர் பேசுகையில், “மருத்துவமனையில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், ஏன் அவர்கள் வழக்கமாக வெளியிடும் எண்ணிக்கையை வெளியிடவில்லை?” என்கிறார். 2019 ஆம் ஆண்டுப் பட்டியலில் மொத்தமுள்ள 1,711 ஏஎஃப்ஐ பாதிப்புகளில் ஜேஇ பாதிப்பு 288.

அந்தாண்டு உ.பியில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட ஜேஇ பாதிப்பு 235 மட்டுமே.

“மேற்கு பீகார், நேபாளத்தில் இருந்துகூட நோயாளிகள் வருவார்கள் என்பதால், 288 நோயாளிகளில் [BRDல்] சிலர் உ.பியை சேராதவர்களாக இருக்கலாம்,” என்றார் சிங். “ஆனால் பெரும்பாலானவர்கள் [உ.பி] மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த எண்ணிக்கையில் சந்தேகம் எழுகிறது.”

பிஆர்டி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கணேஷ் குமார்  பேசுகையில், “பீகார் மற்றும் நேபாளத்திலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக சொல்வது கடினம்,” ஆனால் பொதுவாக “10 சதவீதத்திற்கு மேல் இருக்காது.”

ஏஇஎஸ் பாதிப்புகள் குறைவாக கணக்கிடப்பட்டிருக்கலாம் அல்லது தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றக் கருத்தை இது அதிகரிக்கிறது.

*****

PHOTO • Parth M.N.

இளைய மகன் குணாலுடன் ஷோபா. மழைக்காலங்களில் தனது மகன்களுக்கு மூளைக்காய்ச்சல் வந்துவிடும் ஆபத்து உள்ளதாக அவர் அஞ்சுகிறார்

AES பாதிப்பை AFI ஆகக் கருதுவதால் ஏற்படும் விளைவுகள் கணிக்க முடியாதவை. “ஏஇஎஸ், ஏஎஃப்ஐ சிகிச்சைக்கான முதன்மை வேறுபாடு மன்னிடால் எனும் மருந்து. அது மூளை வீக்கத்தை தடுக்கிறது. இந்த மருந்து பயன்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து ஏஇஎஸ் என வகைப்படுத்தப்படுகிறது,” என்கிறார் கஃபீல் கான். “AES நோயாளியை AFI என்று கருதுவதால் மன்னிடோலைப் பயன்படுத்தக் கூடாது என்பதாகும். நீங்கள் அதை பயன்படுத்தாவிட்டால் [AES உடன்] குழந்தைகள் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் உடல் குறைபாட்டுடன் இருக்க நேரிடும்.”

AES எண்ணிக்கையில் சேர்க்காமல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பம் அரசு இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது. ஒருவேளை மரணம் நிகழ்ந்தால், அக்குடும்பம் மாநில அரசிடமிருந்து ரூ.50,000 பெறுவதற்கு தகுதியாகிறது. உயிர் பிழைப்பவருக்கு மூளைக்காய்ச்சலின் தொடர் தாக்கத்தினால் நீண்ட காலமாக பல போராட்டங்கள் செய்ய வேண்டி உள்ளதால்  ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

இழப்பீடு தேவைப்படும் ஏழைகள், விளிம்பு நிலை மக்களைத் தான் AES முதன்மையாக பாதிக்கிறது.

அவர்களில் ஷோபாவும் ஒருவர்.

பிஆர்டி மருத்துவக் கல்லூரிக்கு ஆயுஷை அழைத்துச் செல்லும் முன் அவர் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1 லட்சம் செலவிட்டார். “எங்கள் உறவினர்களிடமிருந்து பணத்தை கடன் வாங்கினேன்,” என்றார் உ.பியின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நிஷாத் சமூகத்தைச் சேர்ந்த ஷோபா. அவரது கணவர் கிராமத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அசம்கார் மாவட்டம் முபாரக்பூர் நகரில் சிறிய அளவில் துணிக் கடை நடத்தி வருகிறார். அவர் அதில் மாதம் ரூ.4000 சம்பாதிக்கிறார்.

ஆயுஷை AES  எண்ணிக்கையில் சேர்த்திருந்தால் கூட ஷோபாவினால் தனது கொழுந்தனாரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியிருக்கலாம். “எனது கொழுந்தனார் அவரது படிப்பிற்காக ரூ.50,000 சேமித்து வைத்திருந்தார். நாங்கள் அதையும் பயன்படுத்திவிட்டோம்.”

குடும்பத் தேவைக்காக அரை ஏக்கருக்கும் குறைவான தங்களின் விளைநிலத்தில் அவர்கள் கோதுமை விளைவிக்கின்றனர். “மழைக்காலங்களில் எங்கள் நிலம் வெள்ளத்தில் மூழ்கிவிடுவதால் நாங்கள் ஓராண்டு பயிர் மட்டுமே செய்கிறோம்,” என்று பிரம்மசரியில் தனது வீட்டிற்கு வெளியே உள்ள கைக்குழாயில் தண்ணீர் அடித்தபடி பேசிய ஷோபா.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

பெல்காட் ஊராட்சி ஒன்றியத்தில் தனது வீட்டிற்கு வெளியே உள்ள கரம்பிர் பெல்டார். அவரது சகோதரியின் மகளான ஐந்து வயது ரியா கடந்தாண்டு மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறியால் இறந்தார். ' மூளைக்காய்ச்சல் குறித்து அவளது இறப்புச் சான்றிதழில் எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் ஆண்டுதோறும் குழந்தைகள் இறக்கின்றனர்'

கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில், பெல்காட் கிராமப் பஞ்சாயத்தில், 26 வயதான கரம்பிர் பெல்தார், பிஆர்டி கல்லூரி மருத்துவமனையில் தனது மருமகளின் உடல்நிலையைக் கண்டறியும்படி மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டதை நினைவுகூர்ந்தார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை – அவர் இறந்த பிறகும் கூட.

2021 ஆகஸ்ட் மாதம் அவரது ஐந்து வயது மருமகளுக்கு காய்ச்சல் வந்தது. பிறகு அவளுக்கு வலிப்பு ஏற்பட்டது. “அறிகுறிகள் யாவும் AES நோயுடன் பொருந்தியது,” என்றார் அவர். “மழைக்காலம் என்பதால் எங்கள் வீட்டைச் சுற்றி கழிவு நீர் தேங்கியது. நாங்கள் அவளை சமூக மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றோம். அவர்கள் பிஆர்டி போக பரிந்துரைத்தார்கள்.”

பிரபலமில்லாத ரியா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “அவளுக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்களிடம் நாங்கள் கேட்டோம், ஆனால் அவர்கள் சொல்லவே இல்லை,” என்கிறார் பெல்டார். “கேள்விகள் கேட்டால் எங்களை அவர்கள் வார்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுக்கு சிகிச்சை அளிப்பதா, வேண்டாமா என்று பணியாளர் என்னிடம் கேட்டார்.”

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே ரியா இறந்துவிட்டார். அவரது இறப்புச் சான்றிதழில் ‘செப்டிக் அதிர்ச்சி மூளை தசை உருக்குலைவு’ காரணமாக மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதன் பொருள் கூட எனக்குத் தெரியாது,” என்றார் பெல்டார். “ரகசியம் காப்பதற்கான காரணம் என்ன? இறப்புச் சான்றிதழில் மூளைக்காய்ச்சல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஆண்டுதோறும் குழந்தைகள் இறக்கின்றனர்.”

ஷோபா அதற்குத்தான் அஞ்சுகிறார்.

ஆயுஷ் போய்விட்டாலும், அவரது இளைய மகன்களான 5 வயது ராஜ்வீர், 3 வயது குணால் குறித்து அவர் கவலை கொள்கிறார். எதுவும் மாறவில்லை. இந்தாண்டு மழைக்காலத்திலும் அவர்களின் கிராமம் பாதிக்கப்படலாம். தண்ணீர் மாசடையலாம். மாசடைந்த நிலத்தடி நீரை கைக்குழாயிலிருந்து அவர் எடுத்து பயன்படுத்தக் கூடும். ஆயுஷின் உயிரைப் பறித்த அதேச் சூழல் அவனது இளைய சகோதரர்களுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இதன் தொடர்ச்சியை மற்றவர்களை விட ஷோபா நன்கு அறிந்துள்ளார்.

பார்த் எம்.என்., தாக்கூர் குடும்ப அறக்கட்டளையின் சுதந்திரமான பத்திரிகை மானியம் மூலம் பொதுச் சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றி அளித்துள்ளார். இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் தாக்கூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

தமிழில்: சவிதா

Reporter : Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha