"பட்டா வைத்துள்ள நிலவுடைமையாளர்களுக்கு அளித்ததுபோல் அல்லாமல் எங்களுக்கு ஏன் வேறுவகையான  இழப்பீடு வழங்கப்பட்டது?" என 55 வயதான  துரக்க பாபுராவ் கேட்டுள்ளார். இவர் குண்டூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 4800 பேர் வசிக்கக்கூடிய ராயப்புடி கிராமத்தில் வசிக்கும் ஒரு ஏக்கருக்கும் குறைவாக  நிலம் வைத்துள்ள தலித் விவசாயி ஆவார். அமராவதி நகரில் புதிய உலகத்தரம் வாய்ந்த நகரம் அமைப்பதற்கு ஆந்திரபிரதேச மாநில அரசுக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு   அரசு வழங்கிய இழப்பீடு குறித்து அவர் இவ்வாறு பேசி இருந்தார். மேற்கொண்டு கூறுகையில்,”உண்மையில், பட்டா நிலங்களை விட எங்கள் நிலங்கள் அதிக வளமுடையது. ஏனென்றால்,அவை கிருஷ்ணா ஆற்றுக்கு வெகு அருகில் இருந்தன” என்றார்.

ராயப்புடி பகுதியின் விவசாயியான பாபுராவ்வுடன், பெரும்பாலும் பட்டியலின,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 800 விவசாயிகளும்,  நில விவசாயிகள் நலச் சங்கத்தில்  உறுப்பினர்களாக  உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலஅரசு, நிலச்சீர்திருத்தச் சட்டம் [வேளாண் நிலங்கள் கையகப்படுத்துதல்] , 1973ன் கீழ் ராயப்புடி பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் கரை மற்றும் அதையொட்டிய தீவுப்பகுதிகளில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் நிலத்தை [விவசாயிகளின் கணிப்பின் படி] ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட  குடும்பத்தினர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களே.

“மூன்று தலைமுறைகளாக இந்த நிலத்தில்  நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம், இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இந்திரா காந்தி காலத்தில் இந்த நிலத்திற்கான   பட்டா எங்களுக்கு அளிக்கப்பட்டது” என்கிறார் பாபுராவ். இந்த நிலங்களை பொறுத்த வரை ஆந்திரா பிரதேச மாநில ஒதுக்கீடு செய்யப்பட்ட [இடமாற்றங்கள் தடை]நிலங்கள் சட்டம், 1977 ன் படி தனிநபர்களுக்கு   விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. ஆனால், ஒரு குடும்ப உறுப்பினரிடம் இருந்து அடுத்தவருக்கு அளிக்க இயலும்.

பசுமைத் தலைநகர் அமைப்பதற்காக கட்டிடங்கள் கட்ட முதற்கட்டமாக 33,000 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இவற்றில் சுமார் 10,000 ஏக்கர் நிலம்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் ஆகும்.  மீதமுள்ள நிலங்கள்   ஆதிக்கச் சாதியினரான  கம்மா, கபு மற்றும் ரெட்டி விவசாயிகளால் பயிரிடப்பட்ட பட்டா நிலங்கள் ஆகும் என்று இப்பகுதி செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Turaka Baburao
PHOTO • Rahul Maganti

“நாங்கள் மூன்று தலைமுறைகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம், ஏன் இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே விவசாயம் செய்து வருகிறோம்” என்று ராயப்புடி கிராமத்தைச் சார்ந்த  பாபுராவ் கூறிகிறார். அக்கிராமத்தில், சுமார் 10,000 ஏக்கர் விவசாயிகளுக்கு  'ஒதுக்கீடு செய்யப்பட்ட' நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிலம் கையகப்படுத்தப்படுதலில் நியாயமான இழப்பீடு,  வெளிப்படைத்தன்மைக்கான உரிமை,  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச்    (LARR) சட்டத்தை  இயற்றியது. இதேவேளையில்,  புதிய தலைநகர் அமைப்பதற்காக மாநில அரசு தனது சொந்த நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தின் கீழ்   நிலங்களை கையகப்படுத்தியது. இந்த  நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குறிப்பாக இந்த நிலம் கையகப்படுத்துதல்  திட்டத்தால் ஏற்படக்கூடிய சமூக, சூழலியல் ரீதியிலான பாதிப்புகள்,இதனால் பாதிப்படையக்கூடிய குறைந்தபட்ச 7௦% மக்களின் ஒப்புதலை பெறுதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை புறக்கணித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 2015 ஆம் ஆண்டு  நடைமுறைக்கு வந்த இந்தத்திட்டம் யார் நிலங்களை சொந்தமாக வைத்துள்ள நிலவுரிமையாளர்களைக்  கவனத்தில் கொண்டு, அந்த நிலங்களை சார்ந்து பணிபுரிந்த   விவசாயக்கூலி போன்றவர்களை கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், இந்த திட்டத்திற்காக நிலவுரிமையாளர்கள் தானாக முன்வந்து தங்களது நிலங்களை மாநில அரசிடம் அளித்துள்ளனர். இதற்கு இழப்பீடாக  நிதி பெறுவதற்கு பதிலாக புதிய நகரம் நிர்மாணிக்கப்பட்டவுடன் புதிய  நிலத்தையும்  பெற உள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று, ஆந்திரா பிரதேச மாநில அரசின்  நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை  தானாக முன்வந்து தங்களது  பட்டா  நிலத்தை அரசுக்கு அளித்த நிலவுரிமையாளர்களின் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் ஈடாக புதிய தலைநகர் அமைக்கபட்டவுடன்,1000 சதுர கஜம்(YARD) கொண்ட  குடியிருப்பு நிலமும்,  கடை அல்லது வணிகம் தொடங்கும் வகையில்  450 சதுர கஜம் கொண்ட  வணிக நிலமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்திருந்தது. ஆனால், ஆந்திரபிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் (APCRDA) அல்லது நிலம் கையகப்படுத்தும் ஆணையம் தலைநகர பகுதி உருவாக்கியது போக மீதமுள்ள நிலத்தை  கட்டிடங்களுக்கு இடையே சாலை அமைக்கவும்,நிறுவனங்கள் மற்றும் மக்கள் வசதிகளுக்கான பிற இடங்கள் அமைக்கவும் தன் கைவசம் வைத்துகொள்ளும் என்றும்  கூறியுள்ளது.

இதேபோன்று விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட நிலங்களுக்கு இழப்பீடாக ,  800 சதுர கஜம் கொண்ட  குடியிருப்பு நிலமும் 250 சதுர கஜம் கொண்ட  வணிக நிலமும் வழங்கப்படும் என்றும், கிருஷ்ணா ஆற்றின் பகுதியில் உள்ள தீவுகளில்  விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட நிலங்களுக்கு இழப்பீடாக 500 சதுர கஜம் கொண்ட  குடியிருப்பு நிலமும், 100 சதுர கஜம் கொண்ட  வணிக நிலமும் வழங்கப்படும் என்றும் ஆந்திரா பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

PHOTO • Sri Lakshmi Anumolu
Field of maize. The fertile fields of Uddandarayunipalem, Lingayapalem and Venkatapalem villages in November 2014, before the whole land pooling exercise for the capital region has started.
PHOTO • Sri Lakshmi Anumolu

கடந்த 2014 ஆண்டு தலைநகர் பகுதிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் முன்னர் வரை,கிருஷ்ணா ஆற்றின் வடகரையில் உள்ள கிராமத்தில்  விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் செழுமையானப் பகுதிகளில் அவர்கள்  விவசாயம்  செய்து வந்துள்ளனர்

எவ்வாறாயினும்,பெரும்பாலான பட்டா வைத்துள்ள நிலவுரிமையாளர்கள் வேறுபட்ட இழப்பீடு வழங்கபடுவது சரி என்றே எண்ணி உள்ளனர்.”நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து,இந்த  நிலத்தைச் சம்பாதித்தோம். ஆனால்,அவர்கள் (அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள்) ஏழ்மையின் காரணமாக  அரசிடம் இருந்து இந்த நிலத்தை இலவசமாக பெற்றனர். எவ்வாறு இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியும்?” என்று ராயப்புடி கிராமத்தைச் சார்ந்த கம்மா சாதியைச் சார்ந்த விவசாயி கூறினார். அவர் அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

ராயப்புடி கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள உத்தந்தராயுனிபாலம் கிராமத்தில் பட்டா வைத்துள்ள நிலவுரிமையாளரும்  சூழலியல் செயல்பாட்டாளருமான அனுமோலு காந்தி, பிரம்மாண்டமான தலைநகர் உருவாக்கத்தால் கிருஷ்ணா ஆற்றின் சதுப்பு நிலங்களில்  ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,”இரு வேறுபட்ட இழப்பீடு வழங்கப்படுவது நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு தானாக முன்வந்து நிலம் வழங்கிய பட்டா வைத்துள்ள விவசாயிகளை சமாதானப் படுத்துவதற்கு   நாயுடு(முதலமைச்சர் சந்திரபாபு) செய்த முக்கிய சூழ்ச்சித் திட்டமாகும். ஒருவேளை ஒரே இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால்,பட்டா வைத்துள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தைக் கட்டாயம் அரசுக்கு தந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால்,அதில் பெரும்பாலானவர்கள் அரசு வழங்கிய ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை அரசு ஏழைகளுக்கு கருணையால் வழங்கிய சிறுதுண்டு நிலம் என்பது போலத்தான் கருதினார்கள்” என்று அனுமோலு கூறுகிறார்.

ஆந்திரா பிரதேசம்,தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் அரசு வற்புறுத்தி நிலம் கையகப்படுத்தியதால் புலம்பெயர்ந்தலுக்கு ஆளாகிய மக்களின் சார்பாக ஆந்திரா பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் ரவிக்குமார் கூறுகையில்,”இருவேறு இழப்பீடு அளிக்கும் அரசின் உத்தரவானது நீதிமன்றத்தில் சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தாது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரம்  செவெல்லா பகுதியின் நிலம் கையகப்படுத்தும் அலுவலருக்கும், மேகலா பாண்டு என்பவருக்கும்  இடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசால் வழங்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் மற்றும் பட்டா நிலம் ஆகிய இரண்டுக்கும் ஒரே மாதிரியான  இழப்பீடு வழங்கவேண்டுமென  அரசுக்கு  உத்தரவிட்டிருந்தது” என்று கூறினார்.

இது போன்ற நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் எல்.ஏ.ஆர்.ஆர் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த ஜூன் 2016 அன்று ஆந்திரா பிரதேச மாநில வருவாய்த் துறை (அரசாணை எண். 259) அரசால் வழங்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நில உரிமையாளர்கள்  மற்றும் பட்டா நில உரிமையாளர்  ஆகிய இருவருக்கும் சம இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த நடைமுறை எவ்வாறு சென்றது என்று கூறவேண்டுமானால், எப்பொழுதெல்லாம் பொதுத் திட்டத்திற்காக (அ) அரசுத் துறைக்கு (அ) நகராட்சி நிர்வாகத்திற்கு அரசால் வழங்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அப்போதெல்லாம் பட்டா (நிலம்)வின் அடிப்படையில் பழைய இழப்பீடுடனே  நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்தது” என்றார்.

Thokala Pulla Rao
PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

இடது; தொகல புள்ளராவ் கடந்த 2016  ஆம் ஆண்டு செழுமைமிகுந்த தனது நிலத்தை 6 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டோமே என கவலையில் உள்ளார். தற்போது, அவரது நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு 5 கோடி ரூபாயாகும். வலது:புலி சின்னா லாசரஸ் அவரது நிலத்தின் பட்டவிற்கான கணக்கு புத்தகத்தோடு உள்ளார்

ராயப்புடி கிராமத்தைச் சார்ந்த பாபுராவ் உட்பட  ஏறத்தாழ 4,000 பட்டா மற்றும் ஒதுக்கப்பட்ட நில உரிமையாளர்கள், மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக கூட்டங்கள் மற்றும் போரட்டங்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால்,வேறுவாய்ப்புகளே இல்லாத வகையில்,மாநில அரசு எல்.ஏ.ஆர்.ஆர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வெவ்வேறு கிராமங்களைச் சார்ந்த  பல குழுக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, எல்.ஏ.ஆர்.ஆர் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த ஜூன் 2017 முதல் தடை பெற்றுள்ளனர்.

கிருஷ்ணா ஆற்றின் வடகரை மற்றும் ஆற்றின் தீவுகளின் பகுதிகளில் உள்ள  ராயப்புடி, உத்தண்டரயுனிபாலம் மற்றும் வெங்கடபாலம் ஆகிய  கிராமங்களில் உள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள், ஆற்றங்கரையில் தலைநகர் அமைக்க மாநில அரசுக்கு மிகமுக்கியமாக தேவையாக உள்ளது. அமராவதி நகருக்கு திட்டமிடல் பணியை மேற்கொண்ட சிங்கப்பூரை சார்ந்த கட்டுமான நிறுவனகளின் கூட்டமைப்பு   1,600 ஏக்கர் பரப்பளவில் மையப்பகுதியில் ‘தலைநகரின் மையப்பகுதி’ (‘seed capital’) கட்டுவதற்கு முன்மொழிந்துள்ளது. இதனுடன் தொழிர்ச்சாலைகளுக்கான பகுதி,புராதன மற்றும் சுற்றுலா மையம் மற்றும் சுற்றுலா பகுதிகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும்,ஆற்றின் பகுதியில் நீர் பூங்கா,சாகச மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme parks), மற்றும் கோல்ப் விளையாட்டு மைதானங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமராவதி தலைநகர் உருவாக்க கட்டுமான மற்றும் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்,  இங்கு அதன் தொழிலைத் தொடங்குவதற்கு மொத்தமாக  6,000 ஏக்கரிலிருந்து 10,000 ஏக்கர் வரை நிலத்தை  பெறவுள்ளதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால்,சரியாக எவ்வளவு நிலத்தை பெறுவதற்கு நிறுவனங்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பதை மாநில அரசு மக்கள் மத்தியில் வெளிப்படையாக வெளியிடவில்லை.

பாபுராவின் நண்பரும்,விவசாயியுமான 60 வயதான தொகல புள்ளராவும்  ராயபுடி கிராமத்திலுள்ள ஒதுக்கப்பட்ட நில விவசாயிகள் நலச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு சொந்தமாக 0.77 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அந்த செழுமையான நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு புள்ளராவ் சொத்துமனை விற்பனையாளர்களிடம் சுமார் 6 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார்.(இந்த விற்பனை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல). ஆனால், இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாயாக உள்ளது.

A signboard showing the directions to the yet to be constructed Ambedkar Smriti Vanam
PHOTO • Rahul Maganti

இடது:நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக மாநிலக்  கட்சிகளும்,செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலது:அம்பேத்கர் நினைவிடம் மற்றும் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பதை கூறும் அறிவிப்புப் பலகை

“எனக்கு இழப்பீடு கிடைக்காதோ என்று நான் பயந்து போயிருந்தேன். ஏனென்றால் அரசு இந்த நிலங்கள் எல்லாம் அதனுடையது என்று கூறிக்கொண்டிருந்தது. இந்த நிலங்களை அரசு உங்களுக்கு அளித்தது,எனவே அரசுக்கு எப்போது தேவையோ அப்போது உங்கள் எடுத்துகொள்ளும் என்று   வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களிடம் கூறினர்” என்று கூறினார். மேற்கொண்டு கூறுகையில்,”எங்களுக்கு சட்டம் குறித்த எந்த அறிவும் இல்லை. எனவே, இதையெல்லாம் உண்மை என்றே  நினைத்துக் கொண்டிருந்தோம்” என்றார். புள்ளராவ்  போன்ற நிலவுரிமையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த பயத்தை நிலத்தரகர்கள்(ரியல் எஸ்டேட்) தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலத்தரகர்களில் பெரும்பாலானோர் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகளின் பினாமிகள் மற்றும் சில சமயம் அரசியல்வாதிகளே பினாமிகளாக செயல்பட்டுள்ளதாக விவசாயிகளும்,அப்பகுதி ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன. .

கடந்த  டிசம்பர் 2014 ஆம் ஆண்டு மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த உண்மைக் கண்டறியும் குழு (NAPM), ஏறத்தாழ  3,500 ஏக்கர் ஒதுக்கபட்ட நிலம்  2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விற்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளதும், அதன் வழியாக அதே மாதத்தில்  4,000 கோடி ரூபாய் கைமாறியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்த விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும், நிலத்தரகர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளதால் இது நடந்தேறியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

அமராவதி நகரப் பணிகள் முடிவடைந்ததும்,இந்த நகரம் குறிப்பிட்ட பிரிவினர் வாழக்கூடிய நகரமாக மாறிவிடும் என்றும் புள்ளராவ் நினைக்கிறார். “சாதி ரீதியிலான பாகுபாடு இந்த தலைநகர் நகரத்திலும் கூட இடம் பெற்றிருக்கும். இந்த நகரத்தில் அரசினால் வழங்கப்பட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு பகுதியிலும், பட்டா வைத்துள்ள நிலவுரிமையாளர்களுக்கு மற்றொரு பகுதியிலும் நிலம் ஒதுக்கப்படும். இதனால்,கிராமங்களில் உள்ளது போன்று  சாதிகளுக்கு இடையிலான எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 14, 2017 அன்று, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  புதிய தலைநகரில்  பி.ஆர்.அம்பேத்கரின்  125 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும், 20 ஏக்கர் நிலம் அம்பேத்கர் ஸ்ம்ருதிவனம்  என்று அழைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும், இந்தத் தோட்டமும் சிலையும் அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று  ஊடகங்களும்  செய்தி வெளியிட்டிருந்தது. அதுமட்டுமல்லாது, அந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர்,  அமராவதி நகரம் தக்காணப் பகுதியில் இருந்த  2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பௌத்த சதவாகன பேரரசின் தலைநகரினால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அதனாலேயே  அமராவதி என்று அழைக்கப்படுகிறது  என்றும்  கூறினார்.

ஆனால், இதுகுறித்து பாபுராவ் கேள்வி எழுப்புகையில்,”நீங்கள் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றாத போது, ஏழைகளையும்,தலித்துகளையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போது, அம்பேத்கரின் பெயரில் பூங்காவும்,சிலையும் அமைத்து  என்ன பயன்? என்றார்.

முகப்பு படம்: ஸ்ரீ லக்ஷ்மி அனுமோலு

இதே தொடரில் மேலும்:

இது மக்களின் தலை நகர் இல்லை

வாக்களித்த படி அரசு வேலைகள் தரட்டும்

அதிகரிக்கும் நில விலை, வீழும் விவசாய பலன்

இழந்த விவசாய வேலையின் வீணான நிலம்

பெரிய தலைநகர், குறைவான சம்பளம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan