குண்டூர் மாவட்டம் நீறுகொண்டா கிராமத்தில், புதிதாக கட்டப்படும் வரும்  எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்,  தரையில்  சிந்திய  பெயிண்ட்டை  சுத்தம்  செய்யும் பணியில்   ஈடுபடுத்தப்பட்டிருந்த வளப்பர்ல திருப்பதம்மா,  தற்போது  அந்த   பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார் . இதுகுறித்து அவர்  கூறுகையில்," 3-4 ஆண்டுகளாக  எங்களுக்கு போதிய வேலைகள்  கிடைக்கவில்லை, எனவே எங்களுக்கு இந்த  வேலை  கிடைத்தப் போது,  நாங்கள்  மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானோம்.ஆனால்,அது ரொம்பக் காலத்திற்கு  நீடிக்கவில்லை" என்றுத்  தெரிவித்துள்ளார். மேலும்,இரண்டு வாரங்களுக்கு பிறகு,29 வயதான வளப்பர்ல  திருப்பதம்மா,  எவ்வித காரணங்களும் கூறாமல் பணியிலிருந்து விலக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, 40 வயதான  உஸ்தல மேரி மாதாவும் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,   "அவர்கள் தரையில் சிந்திய பெயிண்ட் சுத்தம் செய்ய ஒருநாளைக்கு 250 ரூபாய்  ஊதியம் அளித்தனர். எப்போது பணி முடிந்ததோ, அப்போது  பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறும், நாங்கள் வயதானவர்களாக  உள்ளதால்  இந்த பணிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று கூறினர்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 2018 ஆம் ஆண்டு,ஏறத்தாழ 1500 பேர் வசிக்கக்கூடிய,   நீறுகொண்டாப்  பகுதியிலுள்ள தலித் காலனிக்கு வேலையாட்கள்  தேடிவந்த  வந்த ஒப்பந்தக்காரர்கள்,மொத்தமாக 20  ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட ஒரு குழுவைப்  பணிக்கு  எடுத்துள்ளனர. இதுகுறித்து 60 வயதான  குரகந்தி வஜ்ரம் கூறுகையில்,"எப்போது வேலை இருக்கிறதோ, அப்போது அவர்கள் வந்து  எங்களைக் கூட்டிச்செல்வார்கள். சில சாக்குபோக்குகளைக் கூறி, எங்கு  வேலை நடைபெறுத்துகிறதோ  அங்கு தூரமாக   அனுப்பி வைப்பார்கள். எப்போது வேலையாட்களுக்கு பஞ்சமே இல்லையோ, அப்போதிருந்து  நாங்கள் வேலையற்றவர்களாக  ஆனோம்" என்று கூறியுள்ளார்.

மேலும்,மற்றக்  கிராமங்களைச்  சேர்ந்த சிலர்,  அந்தப்  பல்கலைக்கழகத்தின்  தோட்டவேலை மற்றும் பராமரிப்புப்  பணிகளில்,  தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அதுவும் எத்தனை நாட்கள்  என்று  உறுதியாக  கூற இயலாது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்படும் தலைநகர்  அமராவதியில்   'அறிவுசார் நகரம்'  அமைக்கும்  திட்டத்தின்   பகுதியாக உருவாக்கப்படும், 'அறிவுசார்  மையங்களில்'  கட்டப்படும் எண்ணற்ற கல்வி நிலையங்களைப் போன்றே    தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகமும்  கட்டப்பட்டு வருகிறது. மேலும், இந்த அறிவுசார் மையத்தில்   உயர்கல்வி  நிலையங்கள்,தனியார்  மற்றும்  பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்  துறைகள், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்  நிறுவனங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இந்த நகரில் திட்டமிடப்பட்டுள்ள   74 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பகுதி-1 வரும்  2022 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருமென்றும், பகுதி 2 வரும் 2037 ஆம் ஆண்டு பயன்பட்டு வருமென்றும் ஆந்திர பிரதேச தலைநகர் பகுதி  மேம்பாட்டு ஆணையத்தின் (APCRDA)ஆவணம் கூறுகிறது.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

உஸ்தல அஜரய்யா மற்றும் உஸ்தல மேரி மாதா: ' விவசாயிகள் தங்கள் நிலத்தை அரசாங்கத்திற்கு அளிக்கும் வரை நாங்கள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டோம் '

இந்த மையத்தைச் சுற்றியுள்ள  நிலங்கள் எல்லாம்  தரிசாகிப் போனதால்   விவசாய வேலைகளை பெருமளவில்  இழக்க செய்துள்ளது.  இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்றும் பணியிலிருந்து விலக்கப்பட்ட      அனைத்து  தொழிலாளர்களும் பெரும்பாலும்   நிலமற்ற தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களே,குறிப்பாக பெரும்பாலானோர்கள் மாலா சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2014 லிருந்து, அமராவதி நகருக்காக  ஆந்திரபிரதேச மாநில அரசின்  நிலம்  திரட்டும் திட்டத்திற்கு,  நில உரிமையாளர்கள்  தங்கள் நிலத்தை தன்னிச்சையாக  அளித்ததிலிருந்து, இந்தப் பகுதியில் விவசாய வேலைகள் குறையத்தொடங்கியுள்ளது. 52 வயதான மேரியின் கணவர் உஸ்தல அஜரய்யா கூறுகையில், "நானும் எனது மனைவியும்,  விவசாயிகள் தங்கள் நிலத்தை அரசாங்கத்திற்கு அளிக்கும் வரை வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டோம். அதன் பின்னர்  எங்களுக்கு  போதிய வேலைவாய்ப்புகள் இல்லை" என்றும்  தெரிவித்துள்ளார்.

நீறுகொண்டா கிராமம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் குண்டூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விரிவடைந்துள்ள   கிருஷ்ணா-கோதாவரி டெல்டா பகுதியில்  உள்ள செழுமையான கிராமப் பகுதியாகும்.  இந்த கிராமம்  மலையின் அடிவாரத்தில், கொண்டவீதி வாகு (கால்வாய்) க்கு அருகில் உள்ளது. இந்த டெல்டாப்  பகுதி கிராமங்களைச்  சேர்ந்த விவசாயிக் கூலிகள், ஆந்திர மாநிலத்திலேயே  அதிக ஊதியமாக,    ஆண்கள் 400-500 ரூபாயும்,பெண்கள் 150-200 ரூபாயும் தினக்கூலியாகப்   பெற்று வந்துள்ளனர்,இதுகுறித்து மேரி கூறுகையில்,"இரண்டு விவசாயக்கூலிகளைக் கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு  12,000 முதல் 15,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்"  என்று கூறியுள்ளார்.மேலும், 2015க்கு முன்பு வரை அவரும், அவரது கணவரும் , கடைசியாக அந்தளவுக்கு  சம்பாதித்தாகவும்,ஆனால்,  அதன் பின்னர்  அமராவதி நகர்ப் பணிகள் தொடங்கப்பட்டத்தில் இருந்து  பணிகளே  இல்லை  என்றும்  தெரிவித்துள்ளார்.

மாநில அரசு  புதிய 'பசுமைநிலத்' தலைநகர் அமைப்பதற்காக,  நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை அளித்த நிலஉரிமையாளர்களுக்கு  இழப்பீடு வழங்கியுள்ளது . ஆனால், அதனால் பாதிக்கப்பட்ட

விவசாயக் குத்தகைக்காரர்களுக்கோ, விவசாயக் கூலிகளுக்கோ எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ், வாழ்வாதாரத்தை   இழந்த  விவசாயக் கூலிகளுக்கு, மாதம் 2,500 ரூபாய் ஓய்வூதியமாக 10 ஆண்டுகளுக்கு   வழங்குவதாக  மாநில அரசு   உறுதியளித்தது. அதேசமயம் , 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,உலக வங்கியின் ஆய்வு குழுவின்  ஆய்வறிக்கையில், இந்த பகுதியில் வாழும்   நிலமற்ற விவசாயக்கூலிகளின்   மாத ஊதியம் சராசரியாக    8476 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த தொகையுடன்  ஒப்பிடும் போது அரசு வழங்கும் ஓய்வூதியம் என்பது  மிகக்குறைவாகும். மேலும், இந்த குறைந்த  ஓய்வூதியத் தொகையும் கூட,   நீறுகொண்டா பகுதியிலிருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயவாடாவின் துள்ளூர் மண்டல்  பகுதியில் உள்ள,   தலைநகர் பகுதி  மேம்பாட்டு ஆணையத்தின் கிளை அலுவகத்தின் முன் விவசாயிகள் நடத்திய எண்ணற்ற போராட்டங்களுக்கு  பின்னரே வழங்கப்பட்டுள்ளது.

PHOTO • Rahul Maganti

நீலப்படு கிரமத்தில், நிலமற்ற தலித் பெண்கள் மற்றும் வயதில் மூத்தவர்களுக்கு  வேலை கிடைக்காததால், அக்குடும்பத்தில் உள்ள ஆண்கள் குறைந்த ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்காக தொலைதூரம் சென்று வருகின்றனர்.

இந்த ஓய்வூதியம் குறித்து  மேரி கூறுகையில்,"நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு 2,500 ரூபாய் எவ்வாறு போதுமானதாக  இருக்கும், இந்த சிறிய தொகையையும்  மாநில அரசு  இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை  காலம் தாழ்த்தி வழங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,  மேரியின் குடும்பம் அந்த கிராமத்திலுள்ள   ஆதிக்க சாதியைச் சார்ந்த  விவசாயிகளிடம்  கடன் பெற்று வாழ்வை சமாளிக்க முயன்று வருகின்றனர்.

மாநில அரசுக்கு விவசாய நிலங்களை அளித்த   நிலவுரிமையாளர்களை உடைய   29 கிராமங்களில் ஒன்று  நீறுகொண்டா கிராமம்  ஆகும் . மேலும், இந்த கிராமம் அமராவதி நகரின் தெற்கு பகுதியில் அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த கிராமத்தின்   வடக்குப் பகுதியில் கிருஷ்ணா நதி பக்கமாக  இதர கிராமங்கள்  உள்ளது. புதிய தலைநகர்  திட்டத்தின் முதல் பகுதிக்கு, மொத்தமாக  33,000 ஏக்கர்  நிலத்தை  அரசு கையகப்படுத்தியுள்ளது.(மொத்தமாக   100,000  ஏக்கர் நிலத்தை மூன்றாம் பகுதிக்காக வரும் 2050 ஆண்டு கையகப்படுத்தவுள்ளது).

கிருஷ்ணா நதியின் எதிர் கரையில்  நீலப்படு கிராமமும் , இதர 29 கிராமங்களும் உள்ளது. நீலப்படு   கிராமத்தை சேர்ந்த 40 வயதான பி.மாரியம்மா கூறுகையில் , "நாங்கள் வாரத்தில் 5-6 நாட்கள்  விவசாயக் கூலிகளாக  இருந்தோம்.வேலை  மட்டும்  இருந்திருந்தால்   எங்களை அப்போது நீங்கள்  வீட்டில் பார்த்திருக்கவே  முடியாது" என்றும்  தெரிவித்துள்ளார்.

நீலப்படு கிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த,நிலமற்ற  ஏறத்தாழ 100 குடும்பங்கள் விவசாய வேலைகளை மட்டுமே நம்பி இருந்திருக்கின்றனர். ஆனால்,2014 ஆம் ஆண்டு, அரசு நிலத்தை கையகப்படுத்தப் தொடங்கியதில் இருந்து  வேலை தேடி வெகுதூரம்  அலைய வேண்டிவந்துள்ளது. மாலா சமூகத்தைச் சார்ந்த 35 வயதான  விவசாயக்கூலி  கொம்முறி சீத்தாம்மா தெரிவிக்கையில்,"இங்கிருந்து 30-40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகுண்டபுரம், கராபாடு மற்றும் லிங்கபுரம் கிராமங்களுக்கு வேலைக்காக செல்கிறோம். அங்கு நவம்பர் முதல் மார்ச் வரை , மிளகாய் செடிகளுக்கான வேலை இருக்கும்  இந்த ஐந்து மாதங்களிலும் ,50-70 நாட்களே எங்களுக்கு வேலை கிடைக்கும் ( ஒரு நாளைக்கு 150-200 ரூபாய்  ஊதியம்)." என்று கூறியுள்ளார்.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

மாரியம்மா மற்றும் பக்கா தோணேஷ் :"எப்போது வேலை இருக்கிறதோ அப்போது மட்டுமே சாப்பிடுகிறோம், இல்லையென்றால் பசியோடே  உறங்குகிறோம் "

வேலைக்கான பயணம் குறித்தும்,  அது மிகுந்த சோர்வை  ஏற்படுத்துவது குறித்தும்   35 வயதான   கொம்முறி சீத்தாம்மா கூறுகையில்,"நாங்கள் அதிகாலை ஐந்து  மணிக்கு எழுந்து, மதிய உணவைத் தயார் செய்து, அதை  எடுத்துக்கொண்டு காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்புவோம். பணி முடித்து எங்கள் கிராமத்திற்கு  திரும்ப மணி இரவு 8 ஆகிவிடும்"  என்றும்   கூறினார்.

விவசாயக் கூலிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடர்பாக  துள்ளூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான 50 வயதான கொய்யாகுரா நிர்மலா குறிப்பிடுகையில்,"நிலமற்ற அனைத்து குடும்பங்களுக்கும்  மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம்  10,000 ருபாயாவது  அரசு வழங்கவேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளோம். ஒரு முறை துள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து  போகும் செலவே 500 ஆகிறது,இதில்   அரசு வழங்கும் 2,500 ரூபாய்  எதற்கு பயன்படும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, மாநில அரசு மகாத்மாகாந்தி  தேசிய  ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வருடத்தின்   365 நாட்களும் வேலைவழங்குவதாக உத்தரவாதமும்  அளித்திருக்கிறது, ஆனால் அந்த திட்டத்தின்  கீழ் கடந்த 2014 லிருந்து ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்று அந்த கிராமத்தினர்  குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ,இதுகுறித்து   நீலப்படு கிராமத்தில் உள்ள அரசு மையத்தை  சார்ந்த  அதிகாரிகளிடம் கேட்ட போது(தெலுங்கில் கூறியது),ஊரக  வேலைவாய்ப்புத் திட்ட நிதியின் வழியாக   சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால்,   அப்பகுதியை சார்ந்த நிர்மலா தெரிவிக்கையில்,"ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தின் கீழ் யாரும் எந்த வேலையும் பெறவில்லை"என்று  கூறினார்.  மேலும், அதிகாரிகள்  கூறியத்   தகவலை நாங்கள் தெரிவித்தபோது,"எப்போது  எவ்வாறு இந்த மையங்கள்  இங்கு வந்தது  என்பதே புரியவில்லை"  என்றும் மேற்கொண்டு தெரிவித்தார்.

இந்நிலையில்,துள்ளூர் மண்டல் பகுதியின் வருவாய் அலுவலர் ஏ.சுதிர் பாபுவை  தொடர்பு கொண்ட  போது," நீலப்படு கிராமத்தைச்  சேர்ந்தவர்களுக்கு  ஆந்திர பிரதேச தலைநகர் பகுதி  மேம்பாட்டு ஆணையத்தின் விதிகளின் படி  கடந்த 2017 ஆம் ஆண்டு சிமெண்ட் சாலை வழங்கப்பட்ட போது பணி வழங்கப்பட்டது" என்றும்   குறிப்பிட்டார்.

அமராவதி தலைநகர் உருவாக்கத்திற்காகப்   புதிய  கட்டிடங்கள் கட்டும்  பணிகள் தொடங்கப்பட்டுள்ள மூன்று அல்லது  நான்கு கிராமங்களில் ஒன்று  நீலப்படு கிராமம் ஆகும். பெரும் நிறுவனங்களான லார்சன்&டூப்ரோ  மற்றும்  ஷாபூரிஜி பலோன்ஜி போன்ற நிறுவனங்கள்,  இந்த பகுதியில்  சட்டமன்ற உறுப்பினர் விடுதி,ஆட்சிப்பணியாளர்கள்  குடியிருப்பு , உயர்நீதிமன்ற வளாகம், இதர வளாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'நீதித்துறை நகரம்' அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

இடது: நீலப்படு கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்  கீழ்  பணிநிறைவு பெற்றத்தை அறிவிக்கும்  அறிவிப்புப்பலகை, ஆனால் அந்தப்பகுதி மக்கள் கடந்த 2014 லிருந்து அந்தத்திட்டத்தின்  கீழ்  எந்த பணியும் வழங்கப்படவில்லை  என்று  கூறுகின்றனர். வலது: நீறுகொண்டா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள  எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின்  விளையாட்டுத் திடல் ; இந்தப் பல்கலைக்கழகம்  அமராவதி நகரில் அமைக்கப்படும்   ' அறிவுசார் மையம்' பகுதியில்  இடம்பெற்றுள்ளது .

மாரியம்மாவின் கணவர்,48 வயதான  பக்கா தோணேஷ் கூறுகையில்,"எல்லா கட்டிடத்  தொழிலாளர்களும் பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்தவர்கள்,குறைந்தக் கூலிக்கு அவர்கள் வேலைக்கு வருவதால்  கட்டுமான  நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.  ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த  ஒரு தொழிலாளர் கூட அங்குப்  பணியமர்த்தப்படவில்லை,இங்குள்ள  கிராமங்களையே அவர்கள்  மறந்துவிட்டனர்." என்று தெரிவித்துள்ளார்.

தோணேசும் ஒரு முறை  கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்குப்  பாதுகாவலராக சென்றுள்ளார். அதுகுறித்து  தெரிவித்த தோணேஷ்,"அவர்கள் என்னை  பாம்பு பிடிக்கச் சொன்னார்கள். எப்போது நான் பாம்பைக் கொன்றேனே,  அப்போது பாம்பை   உயிருடனே பிடிக்கச் சொல்லியதாக கூறினார்கள். இந்த மாவட்டப்பகுதிருந்து பாம்பு பிடிக்க தெரிந்த, எந்த பாதுகாவலரையும்  நீங்கள் கண்டுபிடிக்க  முடியாது  என்று  கூறிவிட்டு  திரும்பிவிட்டேன் " என்று  கூறினார். தோணேஷ் தற்போது  துள்ளூர்  பகுதியில் எங்கு கட்டுமானப் பணி கிடைக்கிறதோ, அங்கு  சென்று பணிபுரிந்து  வருகிறார்.

நீலப்படு கிராமத்தில்  உள்ள தலித் குடும்பங்கள் கிடைக்கின்ற   குறைவான வேலைகள் செய்துகொண்டு,அரசின்  எந்த உதவியும் கிடைக்காத நிலையில்  எவ்வாறு அவர்கள் சமாளிக்கிறார்கள்? என்று மாரியம்மாவிடம்   கேட்டபோது,   ,"எப்போது வேலை இருக்கிறதோ அப்போது மட்டுமே சாப்பிடுவோம், இல்லையென்றால் பசியோடே  உறங்கிவிடுவோம்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

மீண்டும் நீறுகொண்டா கிராமத்தை  திரும்பி பார்த்தோமானால், அங்கு  குண்டூர், பிரகாசம் மாவட்டங்களின்  வறட்சிப்  பாதித்த  கிராமங்களைச்  சேர்ந்த,  ஏறத்தாழ 20 குடும்பங்கள் நீறுகொண்டா கிராமத்தின்  புறநகர்ப் பகுதியில்,   தார்பாய் கூடாரங்களில்  வசித்துவருகின்றனர். இவர்கள்   பல்கலைக்கழக தோட்டப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து  அங்கு பணிபுரியும்  40 வயதான  ரமாதேவி கூறுகையில்,"தோட்டப்பணி ஒப்பந்தக்காரர்  எங்களை  இங்கு அழைத்து  வந்தார், நாங்கள் இங்கு  கடந்த அக்டோபர் 2017 லிருந்து ஏறத்தாழ ஒரு வருடமாக  பணிபுரிகிறோம்.  இந்த ஒப்பந்தம்  எப்போது  முடியும் என்பது குறித்து   எங்களுக்கு  எந்த யோசனையும்  இல்லை" என்று  தெரிவித்தார். இங்கு  அவர்  ஒருநாளைக்கு  250 ரூபாய் ஊதியமாக  பெற்று வருகிறார்.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

நீறுகொண்டா கிராமத்தின்  புறநகர்ப் பகுதியில், குண்டூர், பிரகாசம் மாவட்டங்களின்  வறட்சி பாதித்த  கிராமங்களை சேர்ந்த, குடும்பங்கள் தற்காலிகத்   தார்பாய் கூடாரங்களில்  வசித்துவருகின்றனர். ரமாதேவி கூறுகையில்," ஒப்பந்தக்காரர்  எங்களை  இங்கு அழைத்து  வந்தார், இந்த ஒப்பந்தம்  எப்போது  முடியும் என்பது குறித்து   எங்களுக்கு  எந்த யோசனையும் இல்லை" என்று கூறியுள்ளனர் .

பிரகாசம் மாவட்டத்தின்  மர்க்கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான கோரலம்மா கூறுகையில்," எங்கள் கிராமங்களில்  தண்ணீர் பஞ்சம்  நிலவுவதால், அங்கு   விவசாய வேலைகள்  இல்லை. எனவே, நாங்கள் எங்கள் வீட்டை விட்டு, இங்கு வந்தோம். நான் எனது  வீட்டுக்கு திரும்பச் செல்ல விரும்புகிறேன்,ஆனால்  எங்கள் கிராமத்தில் எந்த  வேலையுமே  இல்லை " என்று கூறினார். கோரலம்மா அவரது  கிராமத்தில்  அவரது பிள்ளைகளை அவரது தாத்தா,பாட்டியின் பொறுப்பில்  விட்டுவந்துள்ளார்.

அமராவதி புதிய  தலைநகர் உருவாக்கும்   திட்டத்தில், நீருகொண்டாவுக்கு மேலே உள்ள மலையின் மேல், ஆந்திரபிரதேச மாநிலத்தின்  முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்  நிறுவனருமான  என்.டி.ராமராவின்  நினைவாக  பெரிய சிலையும்,நினைவிடமும் எழுப்படவிருக்கிறது. இதன் காரணமாகவே அந்த கிராமத்தார்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்னர்.ஆனால் இதுகுறித்து அந்த மக்களுக்கு,  அரசு எந்தத்  தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தலித்  சமூகத்தைச் சார்ந்த  குடும்பங்கள் வசிக்கக்கூடிய, அந்த மலையில் வாழும்   மேரி, தங்கள் நிலத்திற்கு பட்டா இல்லாததால், தங்கள் வீட்டையும்  இழக்க நேரிடும்  என்ற அச்சத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,"எங்கள் வீட்டிற்கு பட்டா வேண்டும், அப்போது தான்   அரசு  எங்களை இங்கிருந்து  வெளியேற்ற நேர்ந்தால் கூட , குறைந்தபட்ச இழப்பீடாவது பெற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேச மாநிலத்தின்  அமராவதி  தலைநகர்  உருவாக்கத்தின் காரணமாக,  நீறுகொண்டா கிராமத்து மக்கள்  பல்லாண்டுகளாக  வாழ்ந்து வந்த, அந்த பகுதியில் இருந்து அகற்றப்படும் போது, குறைத்தபட்சம் எங்காவது  ஒரு வீட்டை, அரசு  இழப்பீடாக வழங்குமென்று அந்த கிராமத்து மக்கள்  நம்பிக்கை  கொண்டுள்ளார். எனினும்,பெருநகர உருவாக்கப்படும்  போது   அவர்களைப் போன்ற  எளியமக்களுக்கு அங்கு  எவ்விதம் இடமும் இருப்பதில்லை என்றும் கருதுகின்றனர்.

இதே தொடரில் மேலும் சில கட்டுரைகள்:

இது மக்களின் தலைநகர் இல்லை

புதிய தலைநகர், பழைய பிரிவினை செயல்பாடுகள்

‘அரசு உறுதி தந்ததை போல வேலைகள் தர வேண்டும்’

அதிகரிக்கும் நிலத்தின் விலை, வீழும் விவசாய வளம்

பெரிய தலைநகர், குறைவான சம்பளம் பெறும் புலம்பெயர தொழிலாளர்கள்

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan