எங்கள் உரையாடல் இயல்பாக தொடங்கியது. குண்டூர் மாவட்டத்திலுள்ள பெனுமாகா கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான சிவா ரெட்டி என்னிடம் கூறும் போது,”எனக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. மூன்று ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன், இரண்டு ஏக்கரில் கொடிவகை சுண்டைக்காயும், ஒரு ஏக்கரில் வெங்காயமும் பயிரிட்டுள்ளேன்...” என்றார். அப்படியென்றால் உங்களிடம் ஐந்து ஏக்கர் இல்லை, ஆறு ஏக்கர் நிலம் உள்ளது அப்படித்தானே, என நான் கேட்டேன்.

Amaravati, Andhra Pradesh

சிவா சிரிக்கிறார். எங்களது பேச்சை தீவிரமாக கேட்டுகொண்டிருந்த சிவாவின் நண்பரும்விவசாயியுமான 60 வயதான சம்பி ரெட்டி கூறுகையில்,”அவருக்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் நிலம் இருந்தது. எங்களால் உண்மையை கூற இயலாது(நிலம் குறித்து) ஏனென்றால்  எங்களுக்கு  யார் யாரென்றே உறுதிபடத் தெரியவில்லை. நீங்கள் இந்தத் தகவலை யாரிடம் கொடுப்பீர்கள்,அவர்கள் அதை வைத்து என்ன செய்வார்கள் என்பது  எங்களுக்குத் தெரியாது” என்றார்.

ஆனால் இது இயல்பாக பத்திரிக்கையாளர்களையோ அல்லது அதிகாரிகளையோ சந்தேகப்படுவது போன்று தோன்றவில்லை. “இந்தத் தலைநகர்(புதிய) அறிவிக்கப்பட்டதில் இருந்து நாங்கள் பயம் மற்றும் நிச்சயமற்றத்தன்மையிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் சம்பி ரெட்டி. மேற்கொண்டு கூறுகையில், “கடந்த காலங்களில் கூட பலமுறை, இப்போது மாநில அரசும் நிலத்தரகர் நிறுவனங்களும் தகவலை அனுப்பியது போன்று  எங்களது சொந்த மக்களாலே நாங்கள் முதுகில் குத்தப்பட்டோம்” என்றார்.

ஆந்திரா பிரதேச மாநிலம், அமராவதி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் ஆற்றுமுனை தலைநகர் அமைக்க கட்டிடங்கள் கட்ட தாங்களும் நிலத்தை விட்டுக் கொடுக்க நேரிடுமோ என்று சிவாவும் சம்பியும் அச்சத்தில் உள்ளனர். கடந்த செப்டம்பர் 2014  ஆம் ஆண்டு,புதிய பசுமைத் தலைநகர் அமைக்க  கிருஷ்ணா ஆற்றின் வடகரைப்பகுதியில் உள்ள 29 கிராமங்களின் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு அறிவித்திருக்கிறது. சிவாவின் கிராமமும் இதில் ஒன்றாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா என மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே,வரும் 2024 ஆம் ஆண்டு,புதிய தலைநகரின் பகுதி I நிறைவடையும் என்று ஆந்திரா பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையம் (APCRDA), பல பத்திரிக்கை வெளியீடுகளில் தெரிவித்துள்ளது. இதேபோன்று பகுதி II வரும் 2030 ஆண்டிலும், பகுதி III 2050 ஆண்டிலும் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய தலைநகர் உலகத்தரம் வாய்ந்த நகரமாக அமையும் என்று மாநில அரசு  விளம்பரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2018 அன்று, விஜயவாடா பகுதியில் நடந்த அமராவதி மாரத்தான் போட்டியின் இறுதி  நிகழ்வில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “அமராவதி மக்களுக்கான தலைநகர், அது உலகிலுள்ள  ஐந்து முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

A sample idea of the future city of Amaravati
PHOTO • Rahul Maganti
Jasmine gardens in Penumaka being grown on lands which have not been given for pooling.
PHOTO • Rahul Maganti

புதிய தலைநகர் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 29 கிராமங்களில் ஒன்றான உத்தந்தராயுனிபாலத்தில் உள்ள அமராவதி நகரின் மாதிரி. வலது: தற்போது வரை அரசின் நிலம் கையகப்படுத்துதல் திட்டத்திற்கு நிலம் அளிக்காத பெனுமாகா கிராமத்தில் உள்ள மல்லிகைத் தோட்டம்

அமராவதி தலைநகர் நீடித்த நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கான திட்டமிடலை சிங்கப்பூரைச் சார்ந்த கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தயாரித்துள்ளது. இந்த மூன்று பகுதி கட்டுமானப்பணிகளுக்காக மொத்தமாக சுமார்   100,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்களில் ஆளுநர் மாளிகை,சட்டமன்றம், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், கட்டமைப்புகள்(சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை), நிறுவனங்கள் மற்றும் தகவல்தொழிற்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும், சில இடங்கள் அரசுக்கு நிலம் வழங்கிய நிலவுரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

எனினும், கடந்த ஆகஸ்ட் 2014 அன்று வெளியான சிவராமகிருஷ்ணன் குழுவின் அறிக்கையின் படி, புதிய தலைநகரில் நிர்வாகக் கட்டிடங்கள் கட்ட 200 முதல் 250 ஏக்கர் நிலம் போதுமானது என்றும், இதோடு, பெரும் தலைநகர் அமைக்க ஒரே இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படுவதை விடுத்து, ஆந்திரா பிரதேசத்தில் பல பகுதிகளில் ஒரே இடத்தில் மையப்படுத்தாதவாறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைத்தது. இந்த குழு கடந்த மார்ச் 2014 ஆம் ஆண்டு  ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டது. இந்தக் குழு தற்போதைய வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த பட்ச இடப்பெயர்வு, மக்களை அவர்கள் வாழ்விடப் பகுதியில் இருந்து  குறைந்தபட்ச தூரத்தில் மீள்குடியமர்த்துதல், அப்பகுதி சூழலியலை பாதுகாத்தல் ஆகியவற்றைக் குறித்து   ஆய்வு மேற்கொள்ள   அமைக்கப்பட்டது. ஆனால், ஆந்திர மாநில அரசு இந்தக் குழுவின் அறிக்கையை கணக்கில் கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

மேலும், ஆந்திரா பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் திட்டத்தின் படி,  வரும் 2050 ஆம் ஆண்டு அமைக்கப்படும் இந்த புதிய நகரின் வழியாக 56.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது ஆனால், எவ்வாறு உருவாக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்தப் புதிய தலைநகர் அமைக்கும் திட்டத்திற்கு ஏறத்தாழ 50,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தலைநகர்  மேம்பாட்டு (APCRDA) ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் செருகுறியிடம்  நான் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன். மேலும், இந்தத் திட்டத்திற்கு ஆந்திரா பிரதேச மாநில அரசு, நிதிவழங்க சாத்தியமான மக்கள் (அரசாங்கத்தால் விற்கப்படும் பத்திரங்கள் வழியாக) உட்பட உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய அமைப்புகள் நிதி உதவி செய்கின்றது.

புதிய தலைநகர் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த, மாநில அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நிலம் திரட்டும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய மாநில அரசு  நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் (LARR) நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மைக்கான உரிமை மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ன் படி கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் ஆகியவற்றை புறக்கணித்துள்ளது. இதோடு, சமூக சூழலியல் ஆய்வுகள், இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 70 விழுக்காட்டு மக்களின் ஒப்புதல் மற்றும் போதிய மீள்குடியேற்ற சலுகைகள் ஆகியவற்றையும் புறந்தள்ளியுள்ளது.

Crops being grown in Undavalli being grown in lands which are not given for pooling
PHOTO • Rahul Maganti
Lands given to LPS are lying barren without any agricultural activity
PHOTO • Rahul Maganti

இடது: கடந்த நவம்பர் 2014 அன்று எடுத்த படத்தில் உத்தந்தராயுனிபாலம் கிராமத்தின் செழுமையான வயல்வெளிகள். வலது:அரசின் நிலம் திரட்டும் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிலங்களில்  தற்போது கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளது, இதேவேளையில், இந்த  நிலங்களில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலம் திரட்டும் திட்டம் நிலவுரிமையளர்கள் குறித்து மட்டுமே அக்கறைக் கொண்டுள்ளது. ஆனால், அந்த நிலங்களை சார்ந்து இருந்த விவசாயக் கூலிகள் போன்றோர்களைக் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.மேலும், அரசுக்கு தானாக முன்வந்து தங்களது நிலத்தை அளித்த நிலவுரிமையாளர்களுக்கு, தலைநகர் நிர்மாணிக்கப்பட்டவுடன் ‘மறுசீரமைக்கப்பட்ட மேம்பாடு’ அடைந்த பகுதியில்(குடியிருப்பு மற்றும் வணிக கூறுகளைக் கொண்ட) நிலமும்  அளிக்கப்படவுள்ளது. இது போக மீதம் உள்ள நிலங்களை சாலைகள், அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, நிலவுரிமையாளர்களுக்கு புதிய நிலம் அளிக்கப்படும் வரை, 10 வருடங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு  30,000-50,000 ரூபாய் (நிலத்தின் தன்மையைப் பொருத்து) வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும்  அரசு உறுதியளித்துள்ளது.

“அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு நாங்கள் நிலம் கொடுக்கவில்லை என்றால், அரசு வலுகட்டாயமாக எங்களது நிலத்தை பிடுங்கிக்கொள்ளும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ் பெரும் இழப்பீட்டோடு ஒப்பிடுகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கிடைக்கும் இழப்பீடு   மிகக்குறைவாகும்” என்றார் சம்பி ரெட்டி.

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏறத்தாழ ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைந்து, இந்தத் திட்டத்திற்கான நிதிஉதவியை நிறுத்த வேண்டுமெனக் கோரி  உலக வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.   அந்தக் கடிதத்தில் இந்தத் திட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அபாயம் விளைவிக்கக்கூடியது, செழுமையான விவசாய நிலங்களை அழித்து உணவுப் பாதுகாப்பை அழிக்கக்கூடியது, வெள்ளம் அதிகம் ஏற்படக் கூடிய பகுதியில் பெருமளவில் கட்டிடங்கள் கட்டுவது பெரும் சூழலியல் சிதைவை உண்டாக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தங்களது பெயர்களை  மறைமுகமாக வைக்க வேண்டுமென எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத, பெனுமகா கிராமத்தின் விவசாயி ஒருவர் கூறுகையில், “நாங்கள் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்ததால் காவல் துறை எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிந்துள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 29 கிராமங்களிலும் முகாம் (மாநில அரசால்) அமைத்துள்ளனர்.” என்றார். கிராமமக்களை அச்சுறுத்தி சம்மதிக்க செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று, அந்த கிராமத்தைச் சார்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு விவசாயி கூறும் போது,”எங்கள் கிராமத்தில் உள்ள  பஞ்சாயத்து அலுவலகம் தற்போது ஆந்திர பிரதேச மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. அது துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு நிகரான அதிகாரியால் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Crops being grown in Undavalli being grown in lands which have not given for pooling
PHOTO • Rahul Maganti
Fresh banana leaves just cut and being taken to the market
PHOTO • Rahul Maganti

இடது:இதுவரை அரசின் நிலம் திரட்டும் திட்டத்திற்கு நிலத்தை கொடுக்காத உண்டவல்லி கிராமத்தில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த டெல்டா பகுதியில் உள்ள பல கிராமங்களில் உள்ள நிலங்கள் ப ல்வித பயிர்கள் விளையக்கூடிய செழுமை வாய்ந்த நிலங்களாகும். மேலும்,சந்தைக்கான தொடர்பும் மிகவும் வலுவாக உள்ளது

ஆந்திரா பிரதேச மாநில தலைநகர் மேம்பாட்டு ஆணையம் உலக வங்கியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 4,060 நிலவுரிமையாளர்கள்(அக்டோபர் 2017 வரை) நிலம் திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் செருகுறி எவ்வித அழுத்தமும் வற்புறுத்தலும் கொடுக்காமலேயே, கடந்த ஜனவரி 2015 லிருந்து விவசாயிகள் “தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியாக” தங்களது நிலத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

இந்த 29 கிராமங்களில், பெனுமகா மற்றும் உண்டவல்லி கிராமத்தின் மக்கள் தங்களது நிலத்தைக் கொடுக்காமல் நிலம் திரட்டும் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த கிராமங்கள் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் இங்குள்ள நிலங்களின் மதிப்பும் அதிகம். இங்குள்ள பெரும்பாலனவர்கள் ரெட்டி சமுகத்தைச் சார்ந்த விவசாயிகள். இவர்கள் இம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் ஆவர்.

இந்த இரண்டு கிராமங்களைத் தவிர்த்து மற்ற 27 கிராமங்களிலும் பெரும்பாலும் கம்மா சமூகத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான ஆதரவாக உள்ளனர். இவர்கள் அமராவதி திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு தனது நிலத்தை அளித்த உத்தந்தராயுனிபாலத்தைச் சேர்ந்த கின்ஜுப்பள்ளி சங்கரா ராவ் கூறுகையில்,”நாங்கள் முன்னேற வேண்டும். எத்தனைக் காலத்திற்கு தான் இந்தக் கிராமத்திலேயே நாங்கள் இருப்பது? நாங்கள் விஜயவாடா, குண்டூர் பகுதி மக்களைப்போல முன்னேற விரும்புகிறோம்” என்றார். இதேப்போன்று  ஆற்றில் இருந்து தொலைவில் உள்ள நீறுகொண்டா கிராமத்தைச் சேர்ந்த, முவ்யா சலபதி ராவ் கூறுகையில்,”நான் நஷ்டங்களையே சந்தித்து வரும் போது, நான் ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? என்றார்.

இந்த நிலம் திரட்டும் திட்டத்தில் நிலமற்றவர்கள் விலக்கப்பட்டாலும்  மற்ற 27 கிராமங்களிலும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நான் ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள கம்மா சமுகத்தைச் சார்ந்த சிறிய விவசாயியான போயபட்டி சுதாராணியை சந்தித்தேன். கடந்த 2015 ஆம் ஆண்டு இணையத்தில் வெளியாகியிருந்த காணொளிளியில் ,அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், “நான் வாக்களிக்க உரிமைப் பெற்றதில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியைத் தவிர எந்த கட்சிக்கும் வாக்களித்ததில்லை. இது எங்களுக்கு நாங்களே  புதைகுழியை தோண்டிக் கொண்டது போன்றது ஆகிவிட்டது. சந்திரபாபுவிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை 10 வருடம் கழித்து அவர் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தால், இப்போது தான் சாகப்போகிறோமா இல்லை நாங்கள்  அப்புறம் தான் பிறக்கப்போகிறோமா?” என்று குறிப்பிட்டிருந்தார். இதேவேளையில்,காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அவரது வீட்டிற்கு வந்து நிலத்தைக் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர்(அவரது கணவருக்கும் உறவினர்களுக்கும் அழுத்தம் கொடுத்ததின் வாயிலாக). மேலும்,நிலம் திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

Foundation stone for plantation of trees across the roads in the capital city
PHOTO • Rahul Maganti
The main arterial road of Amaravati which connects Amaravati to Vijayawada is in construction
PHOTO • Rahul Maganti

இடது:பல பயிர்கள் விளையக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட உள்ள மரம் நடுவிழாவுக்கான திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா. வலது: கட்டப்பட்டு வரும் அமராவதி மற்றும் விஜயவாடா பகுதியை இணைக்கும் சாலை

“இங்கு 10 முதல் 15 அடியிலேயே நிலத்தடி நீர்(இந்தப் பகுதியில்) கிடைக்கும். இது பல்விதமான பயிர்கள் விளையக்கூடியப் பகுதி(இந்த செழுமையான கிருஷ்ணா-கோதாவரி டெல்டா பகுதியில்). இந்தப் பகுதியில் வருடத்தின் ஒருநாள் கூட விவசாயம் நடைபெறாமல் இருந்ததில்லை. இந்தப் பகுதியில் வருடத்தின் 365 நாட்களும் ஒரு பயிர் விட்டு மற்ற பயிர்கள் என விளைச்சல் நடந்துக் கொண்டே இருக்கும்.” என கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். பெனுமகா பகுதியில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. மேலும்,நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். மேலும் கூறுகையில்,”நான் ஒரு வருடத்திற்கு இந்த நிலத்தின் வழியாக பொதுவாக 2 லட்சம் வருமானம் ஈட்டி வந்தேன். ஆனால்,எப்போது சந்தை விலை குறைந்தாதோ, அப்போது எனக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை” என்றார்.

விவசாயக்கூலிகள் நீண்ட காலமாகவே பெனுமகா, உண்டவல்லி மற்றும் இதர  29 கிராமத்திற்கு வெகு தொலைவிலுள்ள ஸ்ரீகாகுளம் மற்றும் ராஜமுந்திரி பகுதியிலிருந்து வேலைக்கு வந்துள்ளனர். ஆண்கள் நாளொன்றுக்கு 500 முதல் 600 ரூபாயும், பெண்கள் நாளொன்றுக்கு 300 முதல் 400 ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளார். அவர்களுக்கு வருடம் முழுவதும் இந்தப்பகுதியில் வேலை கிடைத்துள்ளது. “தற்போது,இந்த 29 கிராம மக்களுக்கே வேலைக்கிடைக்காததால், வெகுதொலைவில் உள்ள கிராமங்களுக்கு வேலை தேடி அலைகின்றனர்” என்றார் கிருஷ்ணா.

“நீங்கள் என்ன பயிர்களையெல்லாம் விளைவிக்கிறீர்கள்? என்று கேட்டேன். உடனே அவர் பதிலளிக்கையில்:”நீங்கள் ஒரு பயிரின் பெயரை மட்டும் கூறுங்கள். அடுத்து ஆண்டு நான் விளைவித்துக் காட்டுகிறேன். நிச்சயமாக அது அமோக விளைச்சலாக இருக்கும்.

நான் உங்களை அழைத்து செல்கிறேன். இந்தப்பகுதியில் என்னால் உங்களுக்கு  வெவ்வேறு வகையான 120 பயிர்களைக் காட்ட முடியும்” என்றார் கிருஷ்ணா. தற்போது அவர் வாழையும் சோளமும் பயிரிட்டுள்ளார். மேலும், இந்தப் பகுதியில் விவசாயிகளுக்கும் சந்தைக்கும் இடையேயான எளிதாக தொடர்புக் கொள்ள முடிகிறது.இது இவரைப் போன்ற விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை அளித்தது போன்று உள்ளது.

தலைநகர் நகரத்திற்காக அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த நிலங்களையெல்லாம் எல்லாம் அரசு  கையகப்படுத்தி விட்டு  என்னவிதமான வேலைவாய்ப்பை  உருவாக்கப்போகிறது என்பது குறித்து சிவாவுக்கு தெரியவில்லை. “அந்த 50 லட்சம் வேலைவாய்ப்புகள் எங்கிருந்து வரும்? எங்கள் வாழ்வாதார வாய்ப்புகள் எல்லாம் சிதைந்த பிறகு, இவை எல்லாம் குப்பை தான். இங்கு வளர்ச்சி என்ற போர்வையில் நிலத் தரகு வியாபாரம் தான் நடக்கிறது. இது மக்களுக்கான தலைநகர் இல்லை. இது பன்னாட்டு முதலாளிகளுக்கும்,கோட் சூட் போட்டவர்களுக்கும், பணக்காரர்களுக்குமான தலைநகர். இது எங்களைப் போன்ற எளிய மக்களுக்கான தலைநகர் இல்லை” என்றார்.

இதே தொடரில் மேலும்:

புதிய தலைநகர், பழைய பிரிவினை உத்திகள்

வாக்களித்த படி அரசு வேலைகள் தரட்டும்

அதிகரிக்கும் நில விலை, வீழும் விவசாய பலன்

இழந்த விவசாய வேலையின் வீணான நிலம்

பெரிய தலைநகர், குறைவான சம்பளம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan