விஜயவாடா ரயில்வே சந்திப்பில் நடைமேடை எண் 10ல்,ஏறத்தாழ 10 தொழிலாளர்கள் பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்காகக் காத்திருக்கின்றனர். ஆந்திரா பிரதேச மாநிலத்தில் அமராவதி பகுதியில் புதிய தலைநகர் உருவாக்கப் பணிகளில் பல மாதங்கள் ஈடுபட்ட பிறகு ,பீகாரில் உள்ள அவர்களது கிராமமான பெல்கச்ஹி பகுதிக்கு இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

“கடந்த அரைமணி நேரத்தில் மூன்று முறை வெவ்வேறு ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் எங்கள் பயணச்சீட்டை காண்பிக்கச் சொல்லி கூறினார்” என்றார் 24 வயதான முஹம்மது அலாம். அந்த நடைமேடையில் எண்ணற்ற பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருந்தனர். அதில் ஒருவர் கூறுகையில்,”இந்த ‘கூலிக்கார மக்கள்’ பயணச்சீட்டு பெறுவதில்லை, எனவே தான் சில ரயில்களில் அதிகளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்களை நிறுத்தியுள்ளோம். இவர்கள் செல்லக்கூடிய வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு செல்லக்கூடியவர்களிடம் கூடுதல் விசாரணையை மேற்கொள்கிறோம்” என்றார்.

இந்தத் தொழிலாளர்கள் அமராவதி நகரின் நீதித்துறை நகரம்(உயர்நீதிமன்ற வளாகம்),சட்டமன்ற உறுப்பினர் இல்லங்கள், ஆட்சிப்பணியாளர் குடியிருப்புகள் மற்றும் இதரக்குடியிருப்புகள் கட்டுவதற்காக லார்சென் & தௌர்போ(எல்&டி)மற்றும் ஷபூர்ஜி பல்லோஞ்சி கட்டுமான நிறுவனம் போன்ற பெரிய நிறுவங்களில் பணிபுரிந்தனர். தற்போது அந்தப் பணிகள் முடிந்து புர்னியா மாவட்டம் தகருவா பகுதியில் உள்ள அவர்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

People cramped in train
PHOTO • Rahul Maganti
men sitting and hanging in the train.
PHOTO • Rahul Maganti
Men sleeping in train.
PHOTO • Rahul Maganti

அமராவதி நகரின் கட்டுமானப் பணிகளில் பல மாதங்கள் ஈடுபட்டத் தொழிலாளர்கள், அவர்களது திறனுக்கும் அப்பாற்பட்ட மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, முற்றிலும் சோர்வடைந்த நிலையில் பீகாரில் உள்ள அவர்களது கிராமத்திற்கு செல்வதற்காக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்காகக் காத்திருக்கின்றனர்

ரயில் மிகவும் கூட்டமாக வருகின்ற வேளையிலும்,ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்கள் பொதுப்பெட்டியில் ஏறி,கம்பிகளின் விளிம்புகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிற தொழிலாளர்களின், பயணச்சீட்டை பரிசோதிப்பதற்காக கேட்கின்றனர். இதற்கிடையே, அலாம் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களது திறனுக்கும் அப்பாற்பட்ட மூட்டை முடிச்சுகளோடு ரயில் பெட்டிக்குள் ஏறுவதற்கு போராடுகின்றனர்.

“ரயிலில் இந்தக் கூட்டமானது அளவுகதிகமானது. இங்கு வருகின்ற எல்லா ரயில்களும் அதிகமக்கள் நெரிசல் கொண்டதாக உள்ளது. ஏனென்றால்,எல்லா ரயிலும் ஹைதராபாத் அல்லது பெங்களுரு அல்லது சென்னையில் இருந்து இங்கு வருகிறது” என்று அலாம் கூறினார். அவரை முதன்முதலாக குண்டூர் மாவட்டம் துள்ளுர் மண்டல் பகுதியில் உள்ள நீலபாடு கிராமத்தில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் பார்த்தேன்.

நான் அந்த ரயில் பெட்டியில் எத்தனை பயணிகள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க அந்தப்பெட்டிக்குள் ஏற முயன்றேன். ஏறத்தாழ 200 ஆண், 50 பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் பெட்டியின் தரையில் நின்றுக்கொண்டும் அமர்ந்துக் கொண்டும் ஓய்வு எடுத்தபடியும் வந்தனர். பிறர் இருக்கைகளில் நெருங்கி அமர்ந்து கொண்டிருந்தனர்.

“நாங்கள் பாட்னா செல்லுவதற்கு 40 மணிநேரம் இதுபோன்றே பயணிக்க வேண்டும். அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு செல்ல கூடுதலாக 10 மணிநேரம் பேருந்தில் பயணிக்க வேண்டும்” என்றார் 19 வயதான அலாமின் சகோதரர் முஹம்மது ரிஸ்வான். இரண்டு கம்பிக்கு இடையில் போர்வையை தொட்டில் போலக் கட்டி தற்காலிகப் படுக்கைப்போல அதை அவர் செய்திருந்தார். மேலும் அவர் “எங்கள் கிராமத்திலிருந்து அமராவதியில் 22 பேர் வேலை பார்க்கிறோம்,எல்லோரும் ஒருவகையில் ஒருவரை அறிந்தவர்களே” என்று கூறினார்.

Workers routine
PHOTO • Rahul Maganti

கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்கு அருகில்,போதிய காற்று வசதி இல்லாமல் அமைத்து தரப்பட்டுள்ள ஈரமான ஒவ்வொரு சிறிய அறைகளிலும் ஏறத்தாழ 15 முதல் 20 புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்

ஒப்பந்தக்காரர்கள் மூலம் அமராவதி பகுதிக்கு தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவதாக முஹம்மது ஜுபைர் கூறினார். மேலும் கூறுகையில்,”ஏறத்தாழ 100 பேர் எனக்காக வேலை பார்க்கின்றனர். எல்&டி நிறுவனத்தின் கட்டுமான வேலைக்காக சென்னை, ஹைதராபாத்,பெங்களுரு மற்றும் நேபால் வரையும் கூட நான் தொழிலாளர்களை பணிக்கு அனுப்புகிறேன்” என்றார் ஜுபைர். அவரும் புர்னியா மாவட்டத்தைச் சார்ந்தவர் தான்.

கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டு ரிஸ்வானும் அலாமும் அமராவதி பகுதிக்கு முதலில் வந்துள்ளனர்.”எங்கள் குடும்பத்திற்கு ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நாங்கள் நெல்லும் கோதுமையும் விளைவித்துள்ளோம். நாங்கள் அண்ணன் தம்பிகள். எனது இரண்டு தம்பிகள் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் எமது தாய் தந்தையுடன் விவசாயத்தைக் கவனித்துக்கொள்கின்றனர்” என்றார் ரிஸ்வான். மேற்கொண்டு கூறுகையில்,”நான்கு மாதம் இந்தக் கட்டுமானப் பணி முடிந்த பின்னர், நாங்களும்(கிராமத்திற்கு) திரும்பி அறுவடைக் கால வேலைகள் மற்றும் இரண்டாம் விதைப்பு (அதற்கு தான் அதிகப்படியான குடும்ப உறுப்பினர்கள் தேவை) வேளையில் ஈடுபடுவோம். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து, ரயில்பிடித்து தெற்கு நோக்கி பயணிப்போம். எங்கு ஒப்பந்தக்காரர் அலைக்கிறாரோ அங்கு செல்வோம்” என்று ரிஸ்வான் கூறினார்.

“எங்கள் கிராமத்தை விட்டு பயணிப்பதும் தங்குவதும் மிகவும் கஷ்டமானது” என்றார் அலாம். அவர் வருடத்தின் குறிப்பிட்ட ஆறு மாத பருவகாலத்திற்கு கட்டுமானத் தொழிலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அமராவதி நகரக் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் டிரில்லிங் பணியில் 12 மணி நேரம் பணிபுரிந்து ஒருநாளைக்கு 350 ருபாய் வருமானம் ஈட்டி வருகிறார். “பணிநேரம் என்பது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இருக்கும்”என்றார். அலாம் மற்றும் ரிஸ்வான் அந்தப் பருவக்காலத்தில் எவ்வளவு நாட்கள் உழைக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மொத்த வருமானம் அமைகிறது.

அமராவதி நகரை சுற்றியுள்ள கட்டுமானப் பகுதிகளில் ஷாபூர்ஜி பல்லோஞ்சி மற்றும் எல்&டி நிறுவனத்திற்காக ஏறத்தாழ 10,000 பேர் பணிபுரிவதாக தொழிலாளர்கள் கணிக்கின்றனர். அனைவரும் பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, அசாம் ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள்.

Workers going to their job.
PHOTO • Rahul Maganti
Boards of development on construction site
PHOTO • Rahul Maganti

நீதித்துறை நகரம் உட்பட அமராவதி நகரில் வளாகங்கள் கட்டுமானத்திற்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு காலவேலையாக பணிபுரிவதாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகின்றனர்

கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களுக்கு அருகில் தற்காலிக பணியாளர்களுக்காக சிமெண்ட் மற்றும் அஸ்பெஸ்டோஸால் கட்டித்தரப்பட்டுள்ள கொட்டைகைகளில் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். “15-20 தொழிலாளர்கள் ஒரு சிறிய அறையில் ஒன்றாக  தங்கியுள்ளோம். நாங்கள் அங்கு ஒன்றாக சமைத்து உணவு உண்டு அங்கேயே உறங்குகிறோம். மழை வந்துவிட்டால் நாங்கள் வசிக்கும் மொத்த இடமும் சதுப்பு நிலம் போல சேறாக மாறிவிடும்” என்று அலாம் தெரிவித்தார்.

சில தொழிலாளர்கள் அருகில் உள்ள புகையிலை காய வைவைத்துப் பதப்படுத்தப்படும் இடத்தில் வசிக்கின்றனர். இதற்காக அந்த இடத்திற்கு 1௦௦௦ருபாய் கட்டணமாக செலுத்துகின்றனர். “அந்த புகையிலை காயவைக்கும் இடத்தில் காற்று வருவதற்கு எந்த இடமும் இல்லை. மிகவும் வெப்பமாக இருக்கும் அந்த இடமும் அதற்கு தகுந்தவறே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பு மிகவும் மோசமானதாக இருக்கும். எங்களால் முறையான வீடுகளுக்கும் போதிய பணம் அளிக்க இயலாது” என்று 24 வயதான விவேக் சில் கூறினார். இவர் மேற்குவங்க மாநிலத்தின் ஹூக்லி மாவட்டத்தின் தரகேசுவர் கிராமத்திலிருந்து வந்தவர். அமராவதி நகரின் நீதித்துறை நகரம் கட்டுவதற்காக இந்தப்பகுதிக்கு கட்டுமானப்பணிக்கு வேளைக்கு வருவதற்கு முன்னர், கடந்த  2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஹைதராபாத் மெட்ரோ ரயில்வே திட்டப்பணிகளில் கட்டுமானப் பணியாளராக பணிபுரிந்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறுகையில்,”ஹைதராபாத்தில் வேலை  பார்ப்பது நகரமாக மாறிவிடப்போகும் இந்த கிராமங்களில்  பணிபுரிவதை விட நன்றாக இருந்தது. நாங்கள் அங்கு வாரவிடுமுறைக்கு சார்மினார், ஹுசைன் சாகர் மற்றும் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வோம். ஆனால்,இங்கு எதுவுமில்லை” என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகள் கட்டுமானப் பணியில் பணிபுரிந்தாலும் ஒப்பந்தப் பணியாளராகவே நீடித்துள்ளார். “பிற ஊழியர்களைப் போல் எங்களுக்கு மாநில காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதி கூட கிடைக்காது.  கூடுதல்பணிக்கு கூடுதல் தொகை என்பதைக்கூட பற்றி மறந்துவிடுங்கள்”என்று கூறினார். இந்தக் கட்டுமான இடத்தில் பணிபுரியும், மற்றப் பணியாளர்களைப் போல சில்லும் 12 மணிநேரம் வாரத்திற்கு ஏழு நாட்கள் பணிபுரிந்துள்ளார். ஒருவேளை அவர் வேலையை தவறவிட்டால் ஊதியத்தையும் இழக்க நேரிடும்.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

விவேக் சில்(இடது பக்கத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் சிலர் அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை விட சூடான புகையிலை காயவைக்கும் இடத்தில் தங்கியுள்ளனர்

மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த மற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அமராவதி பகுதியில் காய்கறி கடை அல்லது மருந்துக் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் தான் இந்தத் தலைநகர் நகரத்திற்கு முதன்முதலாக வந்த தொழில்முனைவோர்கள் ஆவர். ஆனால், இவர்களை விடுத்து அமராவதியில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு கார்ப்போரேஷன் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு அலுவலகம் அமைத்துத் தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சுபாங்கர் தாஸ் 42 வயதுடையவர், 3,000 ருபாய் மதிப்புள்ள கடையை வாடகைக்கு எடுத்து கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் சிறிய மருந்து கடை நடத்தி வருகின்றார். ”ஒப்பந்க்தகாரர்கள் எங்களை இங்கு கூட்டி வந்தனர். ஏனென்றால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த பகுதி மொழி புரியாது” என்று தாஸ் கூறினார். இவர் பீகார் தொழிலாளர்களிடம் ஹிந்தி மொழியில் தொடர்புகொள்கிறார்.

ரபிகுல் இஸ்லாம் சதர் சில மாதங்களுக்கு முன்னர் கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு காய்கறி கடை அமைத்துள்ளார்.”நான் இங்கு நாளொன்றுக்கு 600 முதல் 700 ரூபாய் வரை சம்பாரித்து வருகிறேன். இங்கு பெங்காலிகள் பணிபுரிகிறார்கள் என்று எனக்கு தெரிந்தவர்கள் கூறிய பிறகு நான்(கொல்கத்தாவில் இருந்து) இங்கு வந்தேன்,”என்று 48 வயதான சதர் கூறினார்.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

சுபாங்கர் தாஸ் நிலபாடு கிராமத்தின் வெளிப்புறங்களில் மருந்தகம் அமைத்துள்ளார். இதேபோன்று ரபிகுல் சதர் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் காய்கறி விற்று வருகின்றார்

அமராவதி நீடித்த தலைநகர் நகரம் உருவாக்கத் திட்டத்தில்,சிங்கப்பூரைச் சார்ந்த கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் மூலமாக 2035 க்குள் 33.6 லட்சம் வேலைவாய்ப்புகளும், 2050க்குள் 56.5 லட்சம் வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சந்திரபாபு நாயுடுவும் 2014 தேர்தலுக்கு முன்பாக “மாநிலத்தில் உள்ள குடும்பங்களில் தலா ஒருவருக்கு வேலை வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆனாலும்,புதிய தலைநகர் பகுதியில் நிலையாக கிடைக்கக்கூடிய ஒரே வேலை கட்டுமானப்பணி மட்டுமே.

அமராவதி உட்பட  பலபகுதிகளில்  நகர உருவாக்கம் மற்றும் திட்டமிடல் குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லில்லி பல்கலைக்கழக புவியியல் மற்றும் திட்டமிடல் துறையைச் சார்ந்த பேராசிரியர் எரிக் லேகிளர்க் கூறுகையில்,”இங்கு கிடைக்ககூடிய மிகச் சிறிய வேலையும் ஒப்பந்த அடிப்படையிலான வேலையாகவே உள்ளது. இது தொழிலாளர் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் கொண்ட முறையான வேலைவாய்ப்பு இல்லை. இது ஒரு மாற்றமாக இருக்கலாம். ஆனால்,அரசு உருவாக்கித் தருவதாகக் கூறும்(வேலைவாய்ப்பு) எண்ணிக்கை நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்டதாகும்” என்றார்.

ஆனாலும்,தொழிலாளர்களுக்கும் மிகக்குறைந்த இதர தொழில் வாய்ப்புகளே உள்ளது. நிரந்தரமற்ற வேலைவாய்ப்பைத் தொடர்வதற்காக,குறிப்பிட்டகால புலம்பெயர்வு. சில சமயம் அறுவடைக்காகவும் பயிரிடுவதற்காகவும் ரயில் ஏறி தங்கள் கிராமங்களுக்கு திரும்பவேண்டிய சூழலும் உள்ளது. விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில், சங்கமித்ரா ரயிலில் அலாம் குழு அமராவதி குறித்து பேசியதைப் போன்று புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தனர். பீகார் மாநிலம் கடீகார் மாவட்டத்தைச் சார்ந்த 30 வயதான விஜய்குமார் கூறும் போது,”வடகிழக்கு மாகாணங்கள், மேற்குவங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் எல்லா ரயில்களும் இவ்வாறு கூட்டமாகத் தான் இருக்கும்”என்று கூறினார். இவர் நிலமற்ற தலித் குடும்பத்தைச் சார்ந்தவர். கடந்த ஜூன் 2017 ஆண்டிலிருந்து அமராவதி பகுதியில் பணிபுரிந்து வருகிறார்; இவரது மனைவியும் மூன்று வயதுடைய மகளும் ஒரு வயதுடைய மகனும் அவரது கிராமத்தில் உள்ளனர். மேற்கொண்டு அவர் கூறுகையில்,”நான் முதன்முதலாக கடந்த 2009 ஆம் ஆண்டு தான் பீகாரை விட்டு கட்டுமானத் தொழிலாளராக பெங்களூரு வரை சென்றேன். நான் ஹைதராபாத்,கர்னூல்,கொச்சி மற்றும் பல இடங்களில் பணிபுரிந்துள்ளேன்” என்று கூறினார்.

PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

தற்காலிகமாக தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு வெளியாக மழையில் தோன்றிய காளான் போன்று எண்ணற்ற மளிகைக் கடைகள், முடிவெட்டும் கடைகள், தேநீர் கடைகள் ஆகியவைத் தொடங்கப்பட்டுள்ளன

“நெரிசலாக உள்ள போது நான் பயணிக்க விரும்பவில்லை. ஆனாலும்,எவ்வளவு நாட்களுக்குத் தான் என் குடும்பத்தை பார்க்காமல் நான் வாழ்வது?” என்று கேள்வியெழுப்பினார். அவருக்கு துணையாக அவருடனே  35 மணி நேரம் பயணிக்கும் அவரது உறவினரான, 25 வயது மனோஜ் குமாரும் கடந்த ஜூன்  2017 லிருந்து அமராவதி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். ரயிலில் சாமான்களை வைக்கும் இடத்தில் துண்டை மேசை போல விரித்து, எதிரே எதிரே அமர்ந்து கொண்டு அவர்கள் சீட்டு விளையாடத் தொடங்கினர்.

சில மணித்துளிகளிலேயே,அருகில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. பயணி ஒருவர் அருகில் சாய்ந்து கொண்டிருந்த இளைஞரிடம் சற்று நகர்ந்து, அவர் அமர இடம் அளிக்குமாறு சத்தாமாக கேட்டார். அதற்க்கு அந்த இளைஞர் உன்னால் முடிந்ததை செய், என்னால் நகர முடியாது என பதில் மொழிந்தார். விஜய் தலையிட்டு: “தம்பி, 30 மணி நேரம் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். நாம் தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு சற்று இடம் கொடு. உனக்கு தேவைப்பட்டால், மற்றவர் உனக்கு கொடுப்பார்கள்”.  அந்த இளைஞன் அமர்ந்து, இருவர் அமர இடம் கொடுத்தார்.

நான் சோர்வு மற்றும்  தசைப்பிடிப்பின் காரணமாக 6 மணி நேரம் கழித்து  விசாகப்பட்டினத்தில் அந்த  ரயிலில் இருந்து இறங்கிவிட்டேன். ஆனால் விஜய், ஆலம் மற்றும் பலரும் அவர்களது வீட்டை அடைவதற்காக 24 மணிநேரத்திற்கும் மேலாக  அந்த ரயில் காத்திருக்க வேண்டும். இடையே இடையே  அவர்களுக்கு சில ஓய்வு மட்டுமே  கிடைக்கிறது.

இதே தொடரில் மேலும்:

இது மக்களின் தலை நகர் இல்லை

புதிய தலைநகர், பழைய பிரிவினை உத்திகள்

வாக்களித்த படி அரசு வேலைகள் தரட்டும்

அதிகரிக்கும் நில விலை, வீழும் விவசாய பலன்

இழந்த விவசாய வேலையின் வீணான நிலம்

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan