Panimara

பனிமாராவின் பாக்கியிருக்கும் விடுதலை வீரர்கள் காலை வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

பனிமாராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பல்வேறு முனைகளில் போராட வேண்டியிருந்தது. இவற்றில் சில சொந்த ஊரிலேயே நடைபெற்றன.

காந்தியடிகளின் தீண்டாமை எதிர்ப்பு குரலுக்குச் செவிமடுத்துக் களம் புகுந்தார்கள்.

"எங்கள் கிராமத்தில் உள்ள ஜெகன்நாத் ஆலயத்திற்குள் நானூறு தலித்துகளுடன் நுழைந்தோம். அது பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. எனினும், சிலர் ஆதரவு தந்தார்கள். அப்படி ஆதரவு தரும் கட்டாயத்தில் அவர்கள் இருந்திருக்கலாம். அது தான் அப்போது நிலைமை. கிராமத் தலைவர் தான் கோயிலின் அறங்காவலர். அவர் பெருங்கோபம் கொண்டு ஊரை விட்டே வெளியேறினார். அவரின் செயலை நிராகரித்து, கிராமத் தலைவரின் சொந்த மகனே எங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.” என்கிறார் சமரு.

"ஆங்கிலேய பொருட்களுக்கு எதிரான இயக்கம் தீவிரமாக இயங்கியது. நாங்கள் காதி மட்டுமே அணிந்தோம். அதிலும் கையிலேயே நூற்பு செய்தோம். அதற்குக் கொள்கையும் காரணம். அதைவிட நாங்கள் ஏழைகள், அவ்வாறு நாங்களே நெய்து அணிவதே வசதியாக இருந்தது.”

அதையே விடுதலைப்போராட்ட வீரர்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள். இதை விரல்கள் ராட்டையைச் சுற்றவோ, நூல் நூற்கவோ முடியாது என்கிற நிலை வந்ததுமே நிறுத்தியிருக்கிறார்கள். “நான் 90 வயதானதும் தான் போதும் என்று நிறுத்தினேன்” என்கிறார் சமரு.

1930-களில் காங்கிரஸ் கட்சியின் தாக்கத்தில் சம்பல்பூரில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. “அந்தப் பயிற்சிக்கு ‘சேவை’ என்று பெயர். எனினும், அந்த முகாமில் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அங்கே எப்படிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது, மோசமான உணவோடு எப்படி வாழ்வது என்று கற்பிக்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் இருந்து 9 பேர் அந்த முகாமின் உண்மை நோக்கம் தெரிந்தே கலந்து கொண்டோம்.” என்கிறார் சமரு.

“அந்த முகாமுக்கு ஒட்டுமொத்த கிராமமே வழியனுப்பி வைத்தது. மாலைகள், திலகம், பழங்கள் என்று தடபுடலாக இருந்தது. விடுதலை வேட்கையும், முக்கியத்துவமும் பரவியிருந்ததை உணர முடிந்தது.”

இதற்குப் பின்னால் எல்லாம் மகாத்மாவின் மாயம் இருந்தது. அவர் மக்களைச் சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து எழுதிய கடிதம் எங்களுக்குள் விடுதலைக்கனலை எழுப்பியது. எங்களைப்போன்ற ஏழைகள், படிக்காதவர்கள் தீரத்தோடு போராடி உலகை மாற்றமுடியும் என்கிற நம்பிக்கையை அக்கடிதம் தந்தது.” இந்த நம்பிக்கை பனிமாராவின் போராளிகளின் வாழ்க்கையின் வழிகாட்டி ஆனது.

காந்தியடிகளை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அவரின் குரலுக்குக் கட்டுண்டு களம் புகுந்தார்கள். “இங்கே இருந்த காங்கிரஸ் தலைவர்களான மன்மோகன் சௌத்ரி, தயானந்த் சத்பதி ஆகியோரால் உத்வேகம் பெற்றோம்.” வெள்ளையனே வெளியேறு இயக்கம் நிகழ்ந்த ஆகஸ்ட் 1942-க்கு முன்னரே சிறை புகுந்தார்கள். “நாங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். உலகப்போருக்குப் பணம், ஆள் சேர்ப்பு என்று எப்படி உதவி செய்தாலும் அது துரோகம் என அறிவித்தோம். போரை வன்முறையற்ற வழியிலேயே எதிர்கொள்ள வேண்டும். இதைக் கிராமத்து மக்கள் அனைவரும் ஆதரித்தார்கள்.” .

தீண்டாமைக்கு எதிரான இயக்கத்திற்கு உள்ளூரில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அவற்றை வெற்றிகரமாக முறியடித்தார்கள். “இன்றுவரை எங்களுடைய சடங்குகளுக்கு நாங்கள் பிராமணர்களைப் பயன்படுத்துவது இல்லை. எங்களுடைய ஆலய நுழைவு அவர்களில் சிலரை காயப்படுத்தியது. அதேசமயம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எங்களோடு அவர்களும் ஆர்வத்தோடு கைகோர்த்தார்கள்.” என்று சொல்கிறார் தயாநிதி.

ஜாதி வேறு வகையான அழுத்தங்களைத் தந்தது. “ஒவ்வொரு முறை நாங்கள் சிறையை விட்டு வந்ததும், எங்களுடைய அக்கம் பக்கத்து கிராம சொந்தக்காரர்கள் தீட்டுக் கழிப்புச் சடங்குகளில் ஈடுபட்டார்கள். சிறைச்சாலையில் தீண்டப்படாத மக்களுடன் தங்கினோம் என்று சொல்லி இவற்றை அரங்கேற்றினார்கள்.” என்கிறார் மதன் போஹோய். (இந்தச் சுத்தப்படுத்தும் சடங்கு இன்றும் கிராமப்புற ஒரிசாவில் சிறை சென்று வரும் ஆதிக்க ஜாதி சிறைக்கைதிகளிடம் மேற்கொள்ளப்படுகிறது-பி.சாய்நாத்)

"நான் சிறையில் இருந்து வீடு திரும்பியிருந்தேன். என்னுடைய தாய்வழி பாட்டியின் பதினோராவது நாள் காரியம் அது. நான் சிறையில் இருக்கும் போது அவர் இறந்திருந்தார். என் மாமா, “மதன் தீட்டு கழிச்சிட்டியா?” என்று கேட்டார். நான் இல்லை என்று மறுத்துவிட்டு, “சத்தியாகிரகிகளான நாங்கள் எங்களுடைய செயல்களின் மூலமே மற்றவர்களைச் சுத்தப்படுத்துவோம்” என்றேன். என்னை மட்டும் தனியாக அமரவைத்தார்கள். குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு. தனியாக அமர்ந்து உணவை சாப்பிட்டேன்.” என்கிறார் மதன் போஹோய்.

"நான் சிறைக்குப் போவதற்கு முன்பு எனக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. நான் சிறையில் இருந்து திரும்பியதும் சிறைக்குப் போய் வந்தவனுக்குப் பெண் கிடையாது என்கிற பெண்ணின் தகப்பனாரின் பிடிவாதத்தால் திருமணம் நின்றது. எனினும், காங்கிரஸ் கட்சியின் தாக்கம் பெருமளவில் இருந்த சரண்டபள்ளியில் எனக்குப் பெண் கிடைத்தது.”

சமரு, ஜிதேந்திரா, பூர்ணசந்திரா ஆகியோர் ஆகஸ்ட் 1942-ல் சிறையில் தங்கிய போது இந்தத் தீட்டுக் கழிப்பது சார்ந்த எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

"எங்களைக் கிரிமினல்கள் இருந்த சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம். ஜெர்மனிக்கு எதிரான போரில் ஈடுபடப் பல்வேறு பேர்களை ராணுவத்தில் ஆங்கிலேய அரசு சேர்த்துக்கொண்டு இருந்தது. பல காலமாகச் சிறையில் இருக்கும் குற்றவாளிகளைப் போரில் ஈடுபட விருப்பம் தெரிவித்தால் நூறு ரூபாய் தருவதாகவும், அவர்களின் குடும்பத்துக்கு ஐநூறு ரூபாய் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். போருக்கு பின்னர் அவர்களை விடுவிப்பதாகவும் அரசு வாக்கு கொடுத்தது.”

“நாங்கள் சிறைச்சாலை கைதிகளிடம் பரப்புரை புரிந்தோம். இந்த ஆங்கிலேயர்களின் கேடுகெட்ட போர்களுக்காக ஐநூறு ரூபாய்க்கு உயிர் இழப்பதா? போரில் முதலில் இறக்கப்போவது நீங்கள் தான். ஆங்கிலேயரின் பீரங்கிக்கு நீங்கள் ஏன் தீவனமாக மாற வேண்டும்?” என்றெல்லாம் பேசினோம்.

"ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கள் குரல் எடுபட ஆரம்பித்தது. எங்களைக் காந்தி, காங்கிரஸ் என்று அவர்கள் அழைப்பார்கள். பலர் ஆங்கிலேய அரசின் திட்டத்தை விட்டு விலகினார்கள். அவர்கள் கிளர்ந்து எழுந்து, போருக்கு செல்ல மறுத்தார்கள். சிறை கண்காணிப்பாளர் மிக மோசமாகக் கோபமடைந்தார். “ஏன் அவர்களைக் குழப்பினீர்கள்? இதற்கு முன்வரை போருக்குப் போகத் தயாராக இருந்தார்கள்” என எங்களைக் கடிந்து கொண்டார். “நாங்கள் கிரிமினல்களுக்கு நடுவில் இருக்க மகிழ்ச்சி அடைகிறோம்” என்றோம். என்ன நடக்கிறது என்கிற உண்மையை அவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்க வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பு.” என்று நன்றி சொன்னோம்.

“அடுத்த நாள் அரசியல் கைதிகள் சிறைக்கு மாற்றப்பட்டோம். கடுங்காவல் தண்டனை ஆறு மாத கால எளிய சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.”

ஆங்கிலேயர்கள் அப்படி என்ன அநீதி இழைத்து விட்டார்கள் என்று இத்தனை தீரத்தோடு எதிர்த்தார்கள்?

“ஆங்கிலேய அரசாட்சியில் என்ன நீதி வாழ்ந்தது என்று கேளுங்கள். முழுக்க முழுக்க அநீதி மட்டுமே அவர்களின் ஆட்சியின் அடையாளமாக இருந்தது.”என்று சற்றே கடுப்போடு பதில் சொன்னார் சமரு. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது என்று உணர்ந்து கொண்டேன்.

"நாங்கள் ஆங்கிலேயரின் அடிமைகளாக இருந்தோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்தார்கள். இந்திய மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மக்கள் மிக மோசமான வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.1942-ன் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இங்கே இருந்த நானூறு குடும்பங்களில் ஐந்து/ஏழு குடும்பங்கள் மட்டுமே வயிறார சாப்பிட்டன. மற்ற எல்லாரும் பசி, அவமானத்தோடு போராடினோம்.” என்கிறார் சமரு.

"இப்போதைய ஆட்சியாளர்களும் மானமற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் ஏழைகளைக் கொள்ளையடிக்கிறார்கள். அதற்காக இவர்களை ஆங்கிலேயரோடு ஒப்பிட மாட்டேன். தற்காலத் தலைவர்கள் இன்னமும் மோசமாக இருக்கிறார்கள்.”

பனிமாராவின் விடுதலைப்போராட்ட வீரர்கள் இப்போதும் அதிகாலையில் ஜெகன்நாத் ஆலயத்துக்குப் போகிறார்கள். அங்கே இருக்கும் மேளத்தை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடித்துக் காலை பூஜையை ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பேரொலி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கேட்கிறது.

வெள்ளிக்கிழமை இந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மாலை 5:17 க்கு கூட முயல்கிறார்கள். ஏனெனில், ஒரு வெள்ளிக்கிழமை அதே நேரத்துக்குத் தான் காந்தி கொல்லப்பட்டார். மாலை 5:17-க்கு கூடும் பாரம்பரியத்தை ஐம்பத்தி நான்கு வருடங்களாகக் கடைபிடிக்கிறார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை. அங்கே இருக்கும் நான்கு விடுதலைப்போராட்ட வீரர்களோடு கோயில் நோக்கி போகிறோம். சமரு, தயாநிதி, மதன். ஜிதேந்திரா உடன் ஆலயத்துக்குள் நுழைகிறோம். மற்ற மூவரான சைதன்யா, சந்திரசேகர் சாஹூ, சந்திரசேகர் பரிதா ஆகியோர் இப்போது கிராமத்தில் இல்லை.

ஆலயத்தின் பிரகாரம் மக்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் காந்திக்கு விருப்பமான பஜனை பாடுகிறார்கள். “காந்தி கொல்லப்பட்டார் என்கிற செய்தி 1948–ல் வந்தது. அந்தச் செய்தியை கேட்டவுடனே இங்கே பலர் எதோ தங்களுடைய அப்பா இறந்து விட்டதைப் போலத் துக்கம் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டார்கள். இன்றுவரை பலர் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்கிறார்கள்.” என்கிறார் சமரு.

Panimara
ஜிதேந்திர பிரதான் 81, பிறரும் காந்திக்கு விருப்பமான பஜனையை பாடுகிறார்கள்.

சில குழந்தைகள் ஆர்வத்தால் கோயிலில் நிற்கலாம். எனினும், இந்தக் கிராமத்து மக்களுக்கு வரலாற்று விழிப்புணர்வு அதிகம். தணியாத தீரத்தோடு, விடுதலைக்கனலை காப்பாற்ற வேண்டியது கடமையாகும்.

பனிமாரா சிறு விவசாயிகள் நிரம்பிய கிராமமாகும். இங்கே நூறு குல்டா விவசாயக் குடும்பங்கள் உள்ளன. எண்பது ஒரியா விவசாயக் குடும்பங்கள் உள்ளன. ஐம்பது சௌரா ஆதிவாசி குடும்பங்கள், பத்து பொற்கொல்லர் குடும்பங்கள் உள்ளன. சில கவுட்(யாதவர்) குடும்பங்கள் உள்ளன.” என்கிறார் தயாநிதி.

பெரும்பாலான விடுதலைப் போராட்ட வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். “இங்கே கலப்புத் திருமணங்கள் குறைவு என்பது உண்மை தான். ஆனால், பல்வேறு குழுவினரிடையே உறவு சுமூகமாகவே இருக்கிறது. கோயில் எல்லாருக்கும் பொதுவானது. அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படுகின்றன.” என்கிறார்

சிலர் தங்களுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.; அப்படி ஒருவர் தான் திபித்தியா போஹோய். “நான் இளைஞனாக இருக்கும் போது ஆங்கிலய அரசால் அடித்துத் துவைக்கப்பட்டேன்.” என்கிறார். அப்போது அவருக்கு வெறும் 13 வயது என்பதால் சிறைக்கு அனுப்பப்படவில்லை. அவருடைய பெயர் இதனால் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறவில்லை. இவரைப்போலவே கடுமையாகத் தாக்கப்பட்ட பலர் சிறைக்குள் அடைக்கப்படாமல் போனதால் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் அவர்கள் பெயரில்லை.

விடுதலைப்போரில் பங்குகொண்டவர்களின் பெயர்களைக் கொண்ட தூணில் யாரெல்லாம் சிறைக்குச் சென்றார்களோ அவர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. இப்படிதான் அதிகாரப்பூர்வமாக விடுதலை போராட்ட வீரர்களைக் கணக்கில் எடுத்து, அங்கீகாரம் தேவைப்படும் மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுகிறோம்.

Panimara

பனிமாராவின் விடுதலைப் போராட்ட வீரர்களின் முழுப்பட்டியலை ஒரு வருகையாளருக்கு காட்டுகிறார்கள்.

ஆகஸ்ட் 2௦௦2-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராடி அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு பனிமாராவின் விடுதலை போராட்ட வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த ஏழு பேரில் மிகவும் ஏழையான, அரை ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான மதன் போஹோயும், அவரின் நண்பர்களும் தர்ணாவில் அமர்ந்தார்கள். அவர்கள் சொஹெலா தொலைபேசி அலுவலகம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். “விடுதலை கிடைத்து இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு தொலைபேசி கூட எங்கள் கிராமத்தில் இல்லை.” என்று பொருமுகிறார்கள்.

“ஆகவே தான் தர்ணாவில் உட்கார்ந்தோம். உதவி வட்டார அலுவலர் எங்கள் கிராமத்து பெயரை கேள்விப்பட்டதே இல்லை என்றார். இப்படிப் பேசுவது பர்கர்ஹாவில் தெய்வ குற்றத்திற்கு ஒப்பாகும். வேடிக்கையாக இந்த முறை காவல்துறை எங்கள் உதவிக்கு வந்தது.”

இவர்கள் யார் என்று அறிந்திருந்த காவல்துறையினர் துணை வட்டார அலுவலரின் அறியாமையில் கடுப்பானார்கள். எண்பது வயதுக்கு மேலான விடுதலை போராட்ட வீரர்களின் உடல்நலம் என்னாகும் என்றும் கவலை கொண்டார்கள். “தர்ணா ஆரம்பித்த சில மணிநேரத்தில் காவல்துறை, மருத்துவர், மருத்துவ அதிகாரிகள் எல்லாரும் தலையிட்டார்கள். தொலைபேசி இணைப்பு செப்டம்பர் 15 தேதிக்குள் தரப்படும் என்றிருக்கிறார்கள். பார்ப்போம்.” என்கிறார் சமரு.

பனிமாராவின் போராளிகள் மீண்டும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கான போராட்டம் இல்லை அது. இந்தப் போராட்டங்களில் இருந்து என்ன பலன் தான் இவர்களுக்குக் கிட்டியது?

“விடுதலை” என்கிறார் சமரு.

ஆமாம்! உனக்கும், எனக்குமான விடுதலை.

இரண்டு பாகங்கள் கொண்ட இந்த கட்டுரையின் இரண்டாம் பாகம் The Hindu Sunday Magazine-ல்அக்டோபர்  27, 2002 அன்று வெளிவந்தது. முதல் பகுதி அக்டோபர் r 20, 2002 அன்று வெளிவந்தது.

(தமிழில்: பூ.கொ.சரவணன்)

இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil You can contact the translator here:

P. Sainath is Founder Editor of the People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath