Sumukan's descendants சுமுகனின் வழித்தோன்றல்கள்  இப்போதும் ஆழிக்கோட்டில் வாழ்கிறார்கள்.


சுமுகனின் வழித்தோன்றல்கள்  இப்போதும் ஆழிக்கோட்டில் வாழ்கிறார்கள். கல்லியசேரி எப்போதும் போரிடுவதை நிறுத்தியதில்லை. 1947-ல் விடுதலைக்குப் பிறகும் அவர்கள் போராடுவதை நிறுத்தவில்லை. வடக்கு மலபாரில் உள்ள இந்தக் கிராமம் பல்வேறு முனைகளில் போராடியுள்ளது. விடுதலைப் போராட்ட காலத்தில் அது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியது. விவசாயிகள் போராட்ட காலத்தில் நிலச்சுவான்தார்களான ஜன்மிக்களை எதிர்கொண்டு போராடினார்கள். இடதுசாரி சிந்தனை புயல்கள் பாய்ந்த காலத்தில், வேகத்தோடு ஜாதியை எதிர்த்து போராடினார்கள்.

இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றிய K.P.R. ராயரப்பன் "அரசியல் விடுதலை மட்டுமே 1947—ல் கிடைத்தது. அதற்குப் பிறகு போராடவே கூடாது என்றால் எப்படி?" எனக் கேட்கிறார் "இன்னும் நில சீர்திருத்தத்துக்கான போராட்டங்கள் பாக்கி இருக்கின்றன.” என்கிறார் 86 வயதாகும் ராயரப்பன். இன்னும் பல்வேறு போராட்டங்கள் இருப்பதாக ராயரப்பன் எதிர்பார்க்கிறார். 83 வயதில் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை ஐநூறு கிலோமீட்டர்களை தேசிய சுயசார்பு வேண்டி நடந்து கடந்தார் ராயரப்பன்.

கல்லியசேரி சார்ந்து இரு நிகழ்வுகள் அவர் மனதில் பதிந்து போயிருக்கின்றன. இருபதுகளின் ஆரம்பத்தில் காந்தி மங்களூருக்கு வந்தது முதல் நிகழ்வு. “காந்தி பேசுவதைக் கேட்க பள்ளிக்கூடப் பிள்ளைகள் உட்படப் பலரும் ரொம்பத் தூரம் பயணம் செய்து போனோம். அப்போது நாங்கள் எல்லாரும் காங்கிரஸ் கட்சியோடு இருந்தோம்.” என்கிறார் ராயரப்பன்.

“சுமுகன் என்கிற தலித் சிறுவன் வாரிய பள்ளியில் சேர விண்ணப்பித்தான். ஆதிக்கச் சாதியினர் அவனையும், அவன் தம்பியையும் பள்ளிக்கூடத்திற்குத் தைரியமாக வர முயன்றதற்காக அடித்துத் துவைத்தார்கள்.” என்பதே நினைவை விட்டு அகலாத இரண்டாவது நிகழ்வு ஆகும்.

வளங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஜாதி அடக்குமுறையும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. குறிப்பாக நிலத்தை ஆதிக்கச் சாதியினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மலபார் மாவட்டத்தின் சிரக்கல் வட்டத்தில் கல்லியசேரியில் ஜன்மிக்களின் ஆதிக்கம் நிலவி வந்தது. 1928-ல் ஆதிக்க ஜாதி நாயர்கள் கிட்டத்தட்ட 72 % நிலத்தைத் தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.திய்யாக்கள் உட்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகையில் அறுபது சதவிகிதம் இருந்தும் 6.55% நிலங்களுக்கு மட்டுமே உரிமையாளர்களாக இருந்தார்கள். எனினும், 196௦-கள் வரை நீண்ட நில சீர்திருத்தம் சார்ந்த போராட்டங்கள் இப்பகுதியில் வெற்றி பெற்றன.

இன்று, திய்யாக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் அறுபது சதவிகித நிலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

“இதற்குமுன் நாங்கள் அடிமைகளாக இருந்தோம். சட்டைகள் அணிய அனுமதி கிடையாது. துண்டை கை இடுக்கில் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். செருப்பு அணியக்கூடாது. ஒரு துண்டையே இடுப்பில் சுற்றிக்கொள்ள வேண்டும். அது அரை வேட்டி அளவே இருக்கும்.” என்கிறார் 63 வயதாகும் குன்ஹாம்பு. அவரின் தந்தை திய்யா விவசாயி. சமயங்களில் ஒடுக்கப்பட்ட ஜாதி பெண்கள் ரவிக்கை அணியவும் அனுமதி கிடையாது. “சில சாலைகள் வழியாக நாங்கள் போக முடியாது. எந்தப் பிரிவு ஆதிக்க ஜாதி ஆள் வருகிறார் என்பதைப் பொறுத்து நாங்கள் தள்ளி நடக்க வேண்டிய தூரமும் மாறுபடும்.” என்கிறார் குன்ஹாம்பு.

இந்த ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியே ஒடுக்கப்பட்ட ஜாதியினரை பள்ளியை விட்டு தள்ளி வைத்தது. அதிகாரத்தை அடையும் வழிகளை அவர்களுக்கு அடைத்துவிடுவதே நோக்கம். அம்மக்களுக்கு எந்த வகையான மரியாதையும் தரக்கூடாது என்பதும் நோக்கம். ஜன்மிக்கள் ஏழைகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

சுமுகனை அடித்தது மிக முக்கியமான திருப்புமுனையாக மாறியது.

"மலபாரின் எல்லாத் தேசியவாத தலைவர்களும் இங்கே வந்தார்கள். மிகப்பெரிய காங்கிரஸ் தலைவரான கேளப்பன் இங்கேயே சில காலம் தங்கினார். எல்லாரும் ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். சி.எப்.ஆண்ட்ரூஸ் கூட வந்தார். அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எழுப்பப்படுவதை உறுதி செய்தார். பிற்காலத்தில், கல்லியசேரி தலித் கல்விக்கான மையமாக மாறியது.” என்று நினைவுகூர்கிறார் ராயரப்பன். எல்லாச் சமூக மக்களும் ஒன்று கூடும் சமபந்தி போஜன கூட்டங்களை மக்கள் நடத்தினார்கள்.

ஆனால், அதோடு புயல்கள் ஓய்ந்து விடவில்லை. கல்லியசேரிக்கு அருகில் உள்ள அஜானூரில் பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களைச் சேர்த்துக் கொண்டிருந்த பள்ளி சிக்கலுக்கு ஆளானது. 1930-1940கள் காலத்தில் மூன்று முறை அந்தப் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. இருமுறை ஜன்மிக்கள், ஒரு முறை காவல்துறையும் அந்தச் செயலை செய்தன. அஜானூர் பள்ளி, “தேசியவாதிகள், கம்யூனிஸ்ட்களின் கூடாரமாக இருப்பதாக” சந்தேகிக்கப்பட்டது.

அந்த ஐயங்கள் நியாயமானவையே.”இடதுசாரிகள் இந்தப் பகுதியில் 193௦-களிலேயே வளர்ச்சி அடைய ஆரம்பித்து விட்டார்கள். இங்கே நாங்கள் வந்து சேர்ந்த போது இரவுப்பள்ளியை ஆரம்பித்தோம். படிப்பகம், விவசாயிகள் சங்கம் ஆகியவற்றையும் ஆரம்பித்தோம், இப்படிதான் வடக்கு மலபாரில் இடதுசாரிகள் வளர்ந்தார்கள்.” என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரும், அரசியல் செயல்பாட்டாளரும் ஆன அக்னி ஷர்மன் நம்பூதிரி. “இடதுசாரிகளின் தாக்கத்தில் இயங்கியதே கல்லியசேரி தனித்து வெற்றி பெற காரணம்.” என்கிறார் ராயரப்பன்.

1930களின் நடுப்பகுதியில், வடக்கு மலபாரில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி இடதுசாரிகள் வலிமை பெற்றார்கள். 1939-ல் ராயரப்பன், அவரின் நண்பர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆனார்கள். கல்வி மறுப்பு ஆயுதமா இருந்த இடத்தில் ஆசிரியர் கூட்டமைப்பு மிக முக்கியமான அரசியல் பங்களிப்பை வழங்கியது.

"அதனால் தான் இரவுப்பள்ளி, படிப்பகம், விவசாயிகள் சங்கம் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. நாங்கள் எல்லாரும் ஆசிரியர்கள் இல்லையா?” எனக் கேட்கிறார் 81 வயதாகும் யசோதா. அறுபது ஆண்டுகள் கடந்தும் அவரிடம் மாற்றத்துக்கான நெருப்பும், வேட்கையும் அப்படியே இருக்கிறது. பதினைந்து வயதில் இந்த வட்டத்தின் முதல் மற்றும் ஒரே பெண் ஆசிரியராக அவர் மாறினார். அவ்வளவு இளம் வயதில் யாரும் ஆசிரியராக ஆனதில்லை. அதற்கு முன்னால், அவர் பள்ளியின் முதல் பெண் மாணவியும் அவரே. கூட்டமைப்பின் முக்கியமான தலைவராக இருபது வயதிலேயே யசோதா மாறினார்.

"என் அரசியல் கல்வி என் வகுப்பின் மிகச்சிறந்த மாணவர்கள் இருவர் வகுப்பில் அனைவரின் முன்னும் அடித்துத் துவைக்கப்பட்ட போதே துவங்கியது. அவர்கள் செய்த குற்றம்? “மகாத்மா காந்தி வாழ்க” என முழங்கியது. 36 முறை பிரம்பு அவர்களைப் பதம் பார்த்தது. ஒரு நாளைக்கு 12 முறை தான் அடிக்க முடியும் என்று விதி இருந்தது. ஆகவே, சிந்தன் குட்டி, பத்மனாபையா வாரியர் இருவரும் ஒரு நாளைக்கு 12 முறை என்று மூன்று நாட்கள் தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தங்களுடைய நிலத்தை விட்டு ஒரு குடும்பம் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதைக் கண்டேன். அவர்கள் நகர்ந்து விட்டாலும், அவர்களின் துயரம் என்னோடு தங்கி விட்டது. கடந்த ஐம்பது வருடங்களில் நிறைய முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. விடுதலை மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.” என்கிறார் யசோதா டீச்சர்.

கல்வி என்பதே அருங்கனவாக இருந்த கல்லியசேரி ஒன்றும் சோடை போய்விடவில்லை. ஆண், பெண் கல்வியறிவு கிட்டத்தட்ட 1௦௦%. எல்லாக் குழந்தையும் பள்ளிக்குப் போகிறது.

"இந்தப் பஞ்சாயத்தில் 21,௦௦௦ மக்களுக்குப் பதினாறு நூலகங்கள் இருக்கின்றன. இந்தப் பதினாறு நூலகம், படிப்பகங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.” என்று அளவில்லாத பெருமிதத்தோடு பேசுகிறார் கிருஷ்ணன் பிள்ளை படிப்பகத்தின் நூலகர். ஏராளமான மலையாள புத்தகங்கள், சில ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு உண்டு. ஹான் சூயின், டிக்கன்ஸ், டால்ஸ்டாய், லெனின், மார்லோ என்று பலதரப்பட்ட நூல்கள் இங்கு உண்டு. இந்த வேறுபட்ட ரசனைகள் வினோதமான முறைகளில் வெளிப்படுகின்றன. இந்த இந்திய கிராமத்தில் தான் ‘ஷாங்க்ரி லா’ எனப் பெயரிடப்பட்ட வீட்டை பார்க்க முடியும்.

கல்லியசேரியில் ஒரு எட்டாம் வகுப்பில் இடையில் நின்ற ஒருவர் ஏன் அராபத் மேற்கு ஆசியாவில் தோற்றுப் போனார் என்று விவாதிப்பார். எல்லாருக்கும், எல்லாவற்றைப் பற்றியும் கருத்து உண்டு. அதை உரக்க சொல்ல யாரும் கூச்சப்படுவதில்லை.

"விடுதலைப் போராட்டம், கல்வியோடு நில சீர்திருத்தம் சார்ந்து நடந்த திட்டமிடப்பட்ட இயக்கம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.” என்கிறார் ராயரப்பன். திய்யா விவசாயியான குன்ஹாம்பு உடன்படுகிறார். “அதுவே அனைத்தையும் மாற்றியது. ஜாதி படிநிலையை உடைத்து. எங்களுக்குப் புதிய மரியாதையைத் தந்தது. அதற்குமுன்பு வரை ஒரே ஒரு காணி நிலத்துக்கு ஜன்மியின் தயவுக்கு ஏங்கிக்கொண்டு இருந்தோம். உழுபவனுக்கே நிலம் என்பது அனைத்தையும் மாற்றிவிட்டது. இதனால் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களுக்குச் சமமாக நாங்களும் மாறினோம்.” என்கிறார் குன்ஹாம்பு. இதனால் ஏழைகள் உணவு, கல்வி, மருத்துவச் சேவை ஆகியவற்றைப் பெறுவது சாத்தியமானது.

"நாங்கள் 1947 - '57 காலத்திலும், அதற்குப் பின்னரும் நில உரிமைகளுக்காகப் போராடினோம். காங்கிரஸ் ஆதிக்க ஜாதியினர், ஜன்மிக்கள் ஆகியோர் பக்கம் நின்றது. அதனால் தான் கல்லியசேரியில் பெரும்பான்மையானோர் இடதுசாரிகளாக இருக்கிறார்கள்.” என்கிறார் குன்ஹாம்பு.

"கடந்த ஐம்பது, அறுபது வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து விட்டன. என் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதே பெரும்பாடு. விடுதலைக்கு அடுத்த வருடங்கள் வாழ்க்கையை மாற்றிப்போட்டன.” என்கிறார் சுமுகனின் மனைவி பண்ணையன் ஜானகி.

சுமுகன் இறந்து 16 ஆண்டுகள் ஆயன்றன. அவரின் குடும்பம் இன்னமும் ஆழிக்கோடுக்கு அருகில் வாழ்கிறது. சுமுகனின் மகள் தொலைபேசி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக உள்ளார். அவரின் மருமகன் குன்ஹிராமன் கோழிக்கோடில் உள்ள அஞ்சல் நிலையங்களின் தலைமை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். “குறைந்தபட்சம் எங்கள் ஊரிலாவது ஜாதியை வைத்து பாகுபடுத்துவது இல்லை. எங்கள் குடும்பத்தில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு வழக்கறிஞர்கள், ஒரு அறிவியல் பட்டதாரி...” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் குன்ஹிராமன்.


K.P.R. Rayarappan (extreme right) with some of Sumukan's grandchildren. The family has K.P.R ராயப்பன் சுமுகனின் பேரன், பேத்திகளோடு நிற்கிறார். இந்த குடும்பத்தில் “இரண்டு மருத்துவர்கள், இரண்டு வழக்கறிஞர்கள், ஒரு அறிவியல் பட்டதாரி” உள்ளார்கள்.

இவர்கள் தான் பள்ளிக்கு போக முடியாத சுமுகனின் பேரப்பிள்ளைகள்

இக்கட்டுரை முதலில் The Times of India-ல்  ஆகஸ்ட் 28, 1997 அன்று வெளிவந்தது.


இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

(தமிழில்: பூ.கொ.சரவணன்)


P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan