ஒட்டுமொத்த பம்தாபைசா பகுதியும் ஓடுகள் உருவாக்க நககுல் பாண்டோவுக்கு உதவிக் கொண்டிருந்தது. குழு முயற்சி மற்றும் ஆதரவுக்கான வெளிப்பாடாக அது இருந்தது. வீட்டில் உருவாக்கப்பட்டு நககுல் கொடுக்கும் சிறு அளவிலான மதுவைத் தாண்டி எந்த பிரதிபலனும் எதிர்பாராமல்  மக்கள் அனைவரும் இலவசமாக வேலை பார்த்தனர்.

ஆனால் அவரின் கூரைக்கு ஏன் ஓடுகள் செய்து கொண்டிருக்கின்றனர்? ஏற்கனவே இருந்தவற்றை எப்படி அவர் இழந்தார்? அவரின் வீடு, பெருமளவில் ஓடுகள் இன்றி மொட்டையாக நின்று கொண்டிருந்தது.

”அரசின் கடன்தான் காரணம்,” என்கிறார் சோர்வுடன். “4,800 ரூபாய் கடன் வாங்கி இரண்டு மாடுகள் வாங்கினேன்.” அரசுத் திட்டத்தின் அடிப்படை அதுதான். மாடுகளுக்கு வாங்கப்படும் கடன்கள் குறிப்பிட்ட அளவு மானியமும் குறிப்பிட்ட அளவு வட்டியுடனான கடனும் கொண்டிருக்கும். அந்தத் தொகையில் சுர்குஜாவின் இந்தப் பகுதியில் 1994ம் ஆண்டில் இரண்டு மாடுகள் வாங்க முடியும். (மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த மாவட்டம் தற்போது சட்டீஸ்கரில் இருக்கிறது).

கடன் வாங்குவதில் நககுல்லுக்கு முதலில் ஆர்வம் இருக்கவில்லை. அவர் சார்ந்த பாண்டோ பழங்குடிக் குழுவின் சில உறுப்பினர்கள் கடன்களால் பாதிக்கப்பட்ட அனுபவமும் இருக்கிறது. நிலங்களையே வாங்கிய கடன்களுக்கு இழந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் கடன் அரசிடமிருந்து கிடைப்பது. குறிப்பாக பழங்குடிகள் நலனுக்காக உள்ளூர் வங்கியிலிருந்து கொடுக்கப்படும் கடன். அதை வாங்குவதில் எந்தவிதப் பிரச்சினையும் இருக்கும் வாய்ப்பு இல்லை. அந்தச் சூழலில் அது ஒரு சிறந்த யோசனையாக இருந்தது.

”ஆனால் என்னால் கடனை அடைக்க முடியவில்லை,” என்கிறார் நககுல். பாண்டோக்கள் வறுமையில் உழலும் மக்கள் ஆவர். ‘அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினராக’ பட்டியலிடப்பட்டிருப்பவர்கள். நககுல்லும் அவர்களின் நிலைக்கு விதிவிலக்கல்ல.

PHOTO • P. Sainath

நககுல்லும் திட்டத்தை தண்டனையாகவே அனுபவித்தார்

“தவணைகளைக் கட்ட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். வங்கி அதிகாரிகளிடமிருந்து அதிகமாக வசவுகளும் கிடைத்திருக்கிறது. “வெவ்வேறு பொருட்களை விற்றுக் கொஞ்சம் கடனை அடைத்தேன். இறுதியில், கூரையின் ஓடுகளை விற்றும் கொஞ்சத்தை அடைத்தேன்.”

நககுல்லை வறுமையிலிருந்து காக்க வேண்டியக் கடன் அவரின் கூரையையே பறித்திருந்தது. மாடுகளும் அவரிடம் இருக்கவில்லை. அவற்றையும் அவர் விற்க வேண்டியிருந்தது. அவரின் நலனுக்காகத்தான் கடன் திட்டம் என அவர் நம்பிக் கொண்டிருக்க, வங்கிக்கோ அவர் மாதந்தோறும் எட்ட வேண்டிய இலக்கில் ஒருவர் மட்டும்தான். அங்கிருந்த பிற ஏழை பழங்குடியினர் பலரும் இந்தத் திட்டத்துக்கு ஆட்பட்டு இதே தண்டனையை அனுபவித்திருப்பதை பிறகு நாங்கள் அறிந்து கொண்டோம்.

“நககுல்லுக்கும் பிறருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கிடைத்த பணம் உண்மையில் தேவைதான். ஆனால் அவர்கள் விரும்பியப் பொருட்களுக்காக அதை அவர்கள் பெற முடியவில்லை,” என்கிறார் எங்களுடன் வந்திருந்த வழக்கறிஞர் மோகன் குமார் கிரி. அவரின் சொந்த ஊரும் சுர்குஜாதான். “அவர்களின் தேவைகளுக்கு பொருந்தாத திட்டங்களிலிருந்து அந்தப் பணத்தை அவர்கள் பெற வேண்டியிருக்கிறது. வழக்கமாக, உங்களின் கூரையைக் காக்க நீங்கள் கடன் வாங்குவீர்கள். ஆனால் நககுல் வாங்கிய கடன்தான் அவரது வீட்டுக்கூரையைப் பறித்திருக்கிறது. மக்கள் வட்டிக் கொடுப்பவரை தேடி ஏன் இன்னும் போகிறார்கள் என இப்போது உங்களுக்கு புரிகிறதா?”

ஒன்றுமற்ற களிமண்ணிலிருந்து மாயாஜாலமாக ஓடுகளை உருவாக்கும் திறன் பெற்ற மக்களை வியப்புடன் பார்த்தபடி நாங்கள் இருவரும் நகர்ந்தோம். எங்கள் குழுவின் இன்னொரு இரண்டு பேர், ஓடு தயாரிப்பவர்கள் குடிக்கும் மதுவை பொறாமையுடன் பார்த்தபடி நகர்ந்தனர்.

Everybody Loves a Good Drought புத்தகத்தில் இடம்பெற்ற ‘Take a loan, lose your roof’ என்கிற கட்டுரை. ஆனால் புத்தகக் கட்டுரையில் இப்புகைப்படங்கள் இடம்பெறவில்லை

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan