அமைதியாக அமர்ந்திருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு முன் அவர் கொண்டு வந்த அணையின் சிறு பாலத்தின் மேல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தவில்லை. மதிய உணவுவேளையின் போது நாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாக பதிலளித்தார். உற்சாகமாவும் துடிப்புடனும் நடந்தபடி 1959ம் ஆண்டில் இந்த அணை எப்படி உருவாக்கப்பட்டது என விளக்கினார்.

60 வருடங்களுக்கு பிறகும் கண்பதி ஈஷ்வர பாட்டில் நீர்ப்பாசனத்தை பற்றி பேசுகிறார். விவசாயிகளையும் விவசாயத்தையும் புரிந்து கொள்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு அவருக்கு தெரியும். அதில் அவர் பங்கும் வகித்தார். அவருக்கு வயது 101. இந்தியாவில் வாழும் முதிர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்.

“நான் வெறும் தூதுவன்தான்,” என 1930களிலிருந்தான அவரது வாழ்க்கையை பற்றி தன்னடக்கத்துடனும் பணிவுடனும் சொல்கிறார். “தலைமறைவாக இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களுக்கான தகவல் கொண்டு செல்லும் தூதுவன்.” கம்யூனிச போராளிக் குழுக்கள், சோசலிஸ்டுகள், 1942ம் ஆண்டு நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போதான காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தலைமறைவு குழுக்கள். ரகசியமாய் தகவல் கொண்டு சேர்ப்பதில் திறமை வாய்ந்தவராக இருந்திருக்க வேண்டும். ஒரு முறை கூட அகப்பட்டதில்லை. “நான் சிறை சென்றதில்லை,” என்கிறார் அவர். அவருக்கு என தாமரைப்பட்டயமோ தியாகி பென்ஷனோ கூட கிடைக்கவில்லை என சொல்கின்றனர்.

PHOTO • P. Sainath

கண்பதி பாட்டில், இறந்து போன அவரின் நண்பரான சாந்த்ராம் பாட்டிலின் (லால் நிசான் கட்சியின் துணை நிறுவனர்) மகன் அஜித் பாட்டிலுடன்

“நான் சிறை சென்றதில்லை,” என்கிறார் அவர். அவருக்கு என தாமரைப்பட்டயமோ தியாகி பென்ஷனோ கூட கிடைக்கவில்லை என சொல்கின்றனர்

கொல்ஹாப்பூர் மாவட்ட ககல் தாலுகாவின் சித்தனெர்லி கிராமத்திலிருக்கும் மகன் வீட்டில் இருந்த அவரிடம் கேட்டபோது “அதை எப்படி நான் செய்வது?” எனக் கேட்கிறார். “சாப்பாடு போடவென சொந்தமாக ஒரு நிலம் இருக்கும்போது ஏன் கேட்க வேண்டும்?”. அவரிடம் அப்போது 18 ஏக்கர் நிலம் இருந்தது. “ஆகவே நான் எதுவும் கேட்கவில்லை. அதற்கும் விண்ணப்பிக்கவும் இல்லை.” இடதுசாரிகளில் இருக்கும் பிற விடுதலைப் போராட்ட வீரர்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்: “நாட்டு விடுதலை பெறத்தான் நாங்கள் போராடினோம். ஓய்வூதியம் பெற அல்ல.” மேலும் விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு குறைவானது என்றே சொல்லிக் கொண்டிருந்தார். தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு தகவல் எடுத்து செல்வது மிகவும் ஆபத்தான வேலை. குறிப்பாக போர்க்காலத்தில் செயற்பாட்டாளர்களை வழக்கத்தை விட வேகமாக காலனியாதிக்க அரசு தூக்கில் போட்டுக் கொன்று கொண்டிருக்கும்போது.

அந்த வேலைகள் யாவும் அப்போது புரியாததால், அவரின் தாயும் அவரது தூது வேலைக்கு ஒப்புக் கொண்டிருந்தார். பொதுவெளியில் வேலைகள் செய்து அவர் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்பதுதான் அவரின் சிந்தனையாக இருந்தது. தாயைத் தவிர்த்து அவருடைய மொத்த குடும்பமும் தொற்று நோயில் அழிந்து போனது. பிறகு ககலில் இருக்கும் தாயின் ஊரான சித்தனெர்லி கிராமத்துக்கு இடம்பெயர்ந்தனர். அந்த சூழலில் 1918ம் ஆண்டு மே 27ம் தேதி பிறந்த கண்பதி ”நான்கரை மாத குழந்தையாக இருந்தார்” என சொல்கிறார்.

குடும்ப நிலத்துக்கு ஒரே வாரிசாக அவர் இருந்தார். ஆகவே எந்த ஆபத்தும் அவரின் உயிருக்கு நேர்ந்துவிடக் கூடாதென்பதில் தாய் உறுதியாக இருந்தார். “பொதுவெளியில் ஊர்வலங்களை (1945-ல்) ஒருங்கிணைத்தபோதுதான் மக்கள் என்னுடைய அரசியல் ஈடுபாட்டை பற்றி தெரிந்து கொண்டனர்.” சித்தனெர்லியில் இருந்த அவருடைய நிலத்தை 1930களிலிருந்து 1940கள் வரை, செயற்பாட்டாளர்கள் ரகசியமாக சந்திப்பதற்கென பயன்படுத்தினார். “தாயும் நானும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். ஆகவே மக்கள் எங்களிடம் கனிவு காட்டினார். என்னையும் பார்த்துக் கொண்டனர்.”

PHOTO • Samyukta Shastri
PHOTO • P. Sainath

12 வயது கண்பதி பாட்டில், சித்தனெரிலியிலிருந்து நிப்பானி வரை 28 கிலோமீட்டர் நடந்து காந்தி பேச்சை கேட்க சென்றதிலிருந்து எல்லாம் தொடங்கியது

அச்சமயத்திலிருந்த லட்சக்கணக்கானோருக்கு நேர்ந்ததை போல, 12 வயது கண்பதி பாட்டில், அந்த வயதிலேயே ஐந்து முறை அவரை சந்தித்திருந்தார். சித்தனெர்லியிலிருந்து நிப்பானி வரை 28 கிலோமீட்டர் காந்தியின் பேச்சை கேட்க பாட்டில் நடந்தே சென்றார். அவருடைய வாழ்க்கை மாறியது. சிறு வயது கண்பதி நிகழ்ச்சியின் முடிவில் கூட்டத்தில் புகுந்து மேடை வரை சென்றிருக்கிறார். “மகாத்மாவின் உடலை தொட முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.”

1941ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்ட காலத்தில்தான் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார். அப்போதும் பிற அரசியல் சக்திகளுடன் இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 1930ம் ஆண்டில், நிப்பானிக்கு சென்று அவர் காங்கிரஸ்ஸில் இணைந்தவரை, அவருடைய முக்கியத் தொடர்புகள் கட்சியின் சோசலிசக் குழுவினருடன்தான் இருந்தது. 1937ம் ஆண்டில் பெல்காமில் இருக்கும் அப்பாச்சிவாடியில் எஸ்.எம்.ஜோசி மற்றும் என்.ஜி.கோரே ஒருங்கிணைத்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். நாக்நாத் நாய்க்வாடியும் கூட்டத்தில் பேசினார். அங்கிருந்த அனைவருடன் கண்பதிக்கும் சேர்த்து ஆயுதப்பயிற்சியும் வழங்கப்பட்டது. (காண்க: Captain Elder Brother' and the whirlwind army மற்றும் The last hurrah of the prati sarkar )

மேலும் அவர் சொல்கையில், 1942-ல், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சாந்தராம் பாட்டில், யஷ்வந்த் சவன் (காங்கிரஸ் தலைவர் ஒய்.பி.சவன் இல்லை), எஸ்.கே.லிமாயே, டி.எஸ்.குல்கர்னி போன்ற தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் சேர்ந்து நவ்ஜீவன் சங்கதன் (புதிய வாழ்க்கை சங்கம்) உருவாக்கினர்.” கண்பதி பாட்டிலும் அவர்களுடன் சேர்ந்தார்.

அந்த சமயத்தில் அந்த தலைவர்கள் தனிக் கட்சியை தொடங்கிவிடவில்லை. ஆனால் அவர்கள் உருவாக்கிய குழு லால் நிஷான் (செங்கொடி) என அழைக்கப்பட்டது. (அது 1965ம் ஆண்டு ஒரு கட்சியாக மலர்ந்தது. பிறகு 1990களில் அதுவும் உடைந்தது).

காணொளி: கண்பதி பாட்டில், விடுதலைக்கான தூதுவர்

விடுதலைக்கு முன்னான காலகட்டம் முழுவதும், “தகவல்களையும் ஆவணங்களையும் எங்களில் பல்வேறு குழுக்களுக்கும் தோழர்களுக்கும் கொண்டு சென்றேன்,” என்கிறார் கண்பதி பாட்டில். அந்த வேலைகளின் தன்மைகளை சொல்ல தன்னடக்கத்துடன் தவிர்த்துவிடுகிறார். முக்கியமான வேலையொன்றும் இல்லை என்கிறார். ஆனாலும் உணவுவேளை சந்திப்பில் இருக்கும் எவரும், நிப்பானிக்கு 12 வயதில் அமைதியாக அவர் சென்று வந்த 56 கிலோமீட்டர் பயணமே தூது செல்லும் திறனுக்கான அடையாளம் என சொல்லும்போது அந்த முதியவர் புன்னகைக்கிறார்.

“இந்திய விடுதலைக்கு பின், லால் நிஷான் கட்சி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கம்கர் கிசான் கட்சியை (தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி) உருவாக்கியது,” என்றார் அவர். அக்கட்சி உடைந்து பிரபலம் வாய்ந்த நானா பாட்டில் அவரின் நண்பர்களுடன் கூட்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு லால் நிஷான் குழுவும் மீண்டும் உருவாக்கப்பட்டது. 2018ம் ஆண்டில் லால் நிஷன் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தது.

1947ம் ஆண்டின் இந்திய விடுதலைக்கு பிறகு கொல்காப்பூரின் நிலச் சீர்திருத்தப் போராட்டம் முதலிய இயக்கங்களில் பாட்டிலின் பங்கு பிரதானமாக இருந்தது. அவரே ஒரு நிலவுடமையாளராக இருந்த போதும் விவசாயக் தொழிலாளர்களுக்கான நல்ல கூலியை விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பெற்றுக் கொடுத்தார். கொல்ஹாப்பூர் மாதிரி அணையை நீர்ப்பாசனத்துக்கென உருவாக்க அழுத்தம் கொடுத்தார். நாங்கள் அமர்ந்திருந்த கொல்காப்பூரின் அந்த முதல் அணை பல கிராமங்களுக்கு இன்னும் உதவிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

”20 கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து நிதி திரட்டி இதை கூட்டுறவு முறையில் நாங்கள் கட்டினோம்,” என்கிறார் கண்பதி. துத்கங்கா ஆற்றின் மேல் கல்லால் கட்டப்பட்டிருக்கும் அணை 4000 ஏக்கர் நிலங்களுக்கான பாசன வசதியாக இருக்கிறது. யாரையும் அகற்றாமல் கட்டியெழுப்பியிருப்பதாக பெருமையுடன் சொல்கிறார். இன்றைய நிலையில் அது மாநிலத்தின் மத்தியதர நீர்ப்பாசனாக குறிக்கப்பட்டிருக்கும்.

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

இடது: ‘இத்தகைய அணை குறைந்த செலவு கொண்டது. உள்ளூரிலேயே நிர்வகிக்கத்தக்கது. சுற்றுப்புறத்துக்கு அதிக பாதிப்பை கொடுக்காதது,” என்கிறார் அஜித் பாட்டில். வலது: பேரனால் கண்பதி பாட்டிலுக்கு பரிசளிக்கப்பட்ட ராணுவ ஜீப்

“இந்த அணை ஆற்றின் ஓட்டத்துக்கு நிகராக கட்டப்பட்டது,” என்கிறார் கொல்காப்பூரின் பொறியாளரான அஜித் பாட்டில். அவர் கண்பதியின் இறந்து போன நண்பரான சாந்த்ராம் பாட்டில் (லால் நிஷான் கட்சியின் துணை நிறுவனர்) மகன் ஆவார். “எந்தவித நிலமும் மூழ்கடிக்கப்படவில்லை. ஆற்றின் ஓட்டமும் கட்டுப்படுத்தப்படவில்லை. வருடம் முழுக்க தேக்கப்படும் நீர் இரு பக்கங்களிலும் உள்ள நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நேரடிப் பாசனத்துக்கு உட்படாத பகுதிகளிலிருக்கும் கிணறுகளின் வழியாக பாசனத்துக்கும் பயன்படுகிறது. குறைந்த செலவு. உள்ளூரிலேயே நிர்வகிக்கத்தக்கது. சூழலுக்கும் எந்த பாதிப்பையும் உருவாக்காதது.”

மே மாத கோடை கால உச்சத்தில், தேவையான அளவுக்கான நீர் அணையில் இருக்கும். அதன் கதவுகள் திறக்கப்பட்டு ஆற்றின் ஓட்டம் சரி செய்யப்படும். அணையின் காயல் நீரில் மீன் வளர்ப்பும் நடக்கிறது.

“1959ம் ஆண்டில் இதை தொடக்கினோம்,” எனப் பெருமையுடன் சொல்கிறார் கண்பதி பாட்டில். அணையிலிருந்து பாசனம் கிடைக்கும் பல ஏக்கர் நிலத்தை அவர் குத்தகை முறையில் சாகுபடி செய்திருக்கிறார். பிறகு குத்தகையை ரத்து செய்து நிலவுடமையாளரிடம் நிலத்தை ஒப்படைத்துவிட்டார். “என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக இந்த விஷயத்தை செய்ததாக பார்க்கப்பட்டுவிடக் கூடாது,” என்பது அவருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அந்த வெளிப்படைத்தன்மையும் முரண்களை களையும் திறனும்தான் இன்னும் அதிக விவசாயிகளை கூட்டு முயற்சிக்கு அவர் ஒப்புக் கொள்ள வைக்கக் காரணங்களாக இருந்தது. ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வாங்கி 75000 ரூபாயிலேயே அணை கட்டி முடித்து விட்டார்கள். மிச்ச 25000 ரூபாயை வங்கிக்கு உடனே திருப்பிக் கொடுத்திருக்கின்றனர். வங்கிக் கடனை சொன்ன மூன்று வருடங்களில் சரியாக திருப்பி அடைத்து விட்டார்கள். (இன்றைய நிலையில் இத்தகைய திட்டத்துக்கு 3-4 கோடி ரூபாய் தேவைப்படும். அதுவும் முறையான திட்டமின்றி அதிக செலவில் முடிந்து கட்ட முடியாத நிலையைச் சந்திக்கும்).

முதிய விடுதலை போராட்ட வீரரை நாள் முழுக்க பேச வைத்து விட்டோம். அதிலும் பெரும்பான்மை மே மாத மதிய வெயில் நேரத்தில். ஆனாலும் அவர் களைப்படையவில்லை. எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்து சென்று காட்டினார். எங்களின் ஆர்வம் அனைத்துக்கும் பதிலளித்தார். இறுதியில் பாலத்திலிருந்து நகர்ந்து எங்களின் வாகனங்களை நோக்கி நடந்தோம். அவரிடம் ஒரு ராணுவ ஜீப் இருந்தது. அவரின் பேரன் கொடுத்த அன்பளிப்பு. முரணாக, பிரிட்டிஷ் கொடி அதன் முகப்பில் வரையப்பட்டிருந்தது. இருபக்கங்களிலும் USA C 928635 என எழுதப்பட்டிருந்தது. தலைமுறைகளுக்கு இடையிலிருக்கும் இடைவெளியை பாருங்கள்.

ஜீப்பின் சொந்தக்காரர் என்னவோ வேறு கொடியை வாழ்க்கை முழுக்க பிடித்துக் கொண்டிருக்கிறார்.

PHOTO • Sinchita Maji

கொல்காப்பூர் மாவட்ட ககல் தாலுகாவின் சித்தனெரி கிராமத்திலிருக்கும் மகனின் வீட்டில் கண்பதி பாட்டிலின் குடும்பத்துடன்

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan