கடையின் உரிமையாளர், தான் இல்லையென்றார் அவர். நண்பர்தான் கடை உரிமையாளர் என்றார். சற்று நேரம் கழித்து, ’உரிமையாளரின் உறவினர்’ என்கிற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். சில கணங்கள் கழித்து “அக்கடையில் பணிபுரிந்த ஒருவரது உறவினர்” ஆனார். இன்னும் கொஞ்ச நேரம் கேள்விகளைத் தொடர்ந்திருந்தால், தான்தான் கடையின் உரிமையாளர் என அவர் சொல்லியிருப்பார்.

புகைப்படம் எடுக்கப்பட மறுத்தார். கடைக்குள்ளும் படம் பிடிக்கக் கூடாது என சொல்லிவிட்டார். ஆனால் கடைக்கு வெளியே இருந்த பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில் அவர் சந்தோஷமடைந்தார்.

‘வெளிநாட்டு மதுக் கடை’ எனப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. நுழைவாயிலிலிருந்து சற்றுத் தள்ளிப் பலகை இருந்தது. உரிமையாளர்: ரமேஷ் பிரசாத். சுர்குஜா மாவட்டத்தின் முனையில் இருக்கும் கட்கோரா டவுனில் இருக்கும் பகுதி அது. அப்போது மத்தியப்பிரதேசத்தில் இருந்தது. இப்போது சட்டீஸ்கரில் இருக்கிறது. நம்முடன் தடுமாற்றத்துடன் பேசிக் கொண்டிருக்கும் பேச்சாளர் நிச்சயமாக ரமேஷ் பிரசாத் இல்லை. கடையுடனான அவருடையத் தொடர்பு அநேகமாக அக்கடையின் பெரிய வாடிக்கையாளராக  இருப்பது மட்டும்தான் என நம்பத் தொடங்கி விட்டோம்.

வெளிநாட்டு மதுவா? இல்லை. IMFL என்கிற சுருக்கத்தை கடைசியாக எப்போது கேட்டேன் என்பது நினைவில் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது என்பதே அதன் விரிவாக்கம். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட 1994ம் காலகட்டத்தில், தேசிய மதுவுக்கும் வெளிநாட்டு மதுவுக்கும் இடையேயான ஆதரவாளர்கள் விவாதம் பற்றியெரிந்து கொண்டிருந்தது.

லா இன்சைடர் இணையதளத்தில் தெரிந்து கொண்ட வகையில், “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜின், பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவை தயாரிக்கப்படும் முறையிலேயே இந்தியாவுக்குள் தயாரித்து, உற்பத்தி செய்யப்பட்டு அல்லது கலப்பு செய்யப்படும் மதுவகை என  அதற்கு அர்த்தம். ஆனால் அவற்றில் பீர், ஒயின் மற்றும் வெளிநாட்டு மது வராது.” கவனியுங்கள். “பீரும் ஒயினும் வெளிநாட்டு மதுவும்” அதில் கிடையாது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவில் இறக்குமதி செய்யப்பட்ட மதுவும் ஓர் உள்ளூர் அம்சமும் (வெல்லப்பாகாக இருக்கலாம். அல்லது உள்ளூர் கலவை அல்லது பாட்டிலாகவோ இருக்கலாம்) இருக்கும்.  நிச்சயமாக எங்களுக்குத் தெரியவில்லை.

PHOTO • P. Sainath

உள்ளூர் மது தயாரிப்பவர்களின் கோபம் அக்காலத்தில் நியாயப்படுத்தப்பட்டது. கள், பட்டைச் சாராயம் போன்ற உள்ளூர் மது வகைகள் அவ்வப்போது மாநிலங்களில் தடை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டு  மதுக் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் 1993ம் ஆண்டில் நான் பார்த்த விஷயம் நினைவுக்கு வந்தது. பட்டைச் சாராயத்துக்கு எதிரான அதிகாரிகளை நான் சந்திக்கச் சென்றபோது, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுக்கடைகளான ‘பிராந்திக் கடைகளை’ ஏலம் விடுவதில் பிசியாக இருந்தனர் அதிகாரிகள். சட்டப்பூர்வ மதுவின் கலால் வருமானத்தை பாதிப்பதால் பட்டைச் சாராயம் பெரும் பிரச்சினையாக இருந்தது.

மதுத்தடையை ஊக்குவிக்கும் ஒருப் பொதுக்கூட்டத்தில் திமுககாரர் ஒருவர், ஓர் அதிகாரிக்கு ஐந்து ரூபாய் கொடுத்து அவமானப்படுத்தினார். “பிராந்திக் கடைகளை திறந்து கொண்டே  மதுத்தடைக்காக போராடும் உங்களுக்கு என் அன்பளிப்பு இது,” என்றார் அவர்.

கட்கோராவில் எங்களுக்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. வெளிநாட்டுத் தாக்கங்களை வெளிப்படையாக ஏற்கும் நற்பண்பு கொண்டிருந்த நிதானமான எங்களின் வழிகாட்டியை விட்டுக் கிளம்பினோம். வெளிநாட்டு மதுக் கடையின் உரிமையாளரான ரமேஷ் பிரசாத்தை நாங்கள் பார்க்க முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்குள் அம்பிகாபூரை அடைய வேண்டுமென்பதால் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்றோம்..

டிசம்பர் 22ம் தேதி, மத்தியப்பிரதேசத்தின் கலால்துறை அமைச்சர் ஜக்திஷ் தேவ்டா சட்டசபையில் (பெருமையுடன்) “இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பயன்பாடு, 2010-11 ஆண்டில் இருந்த 341.86 உறுதியான லிட்டரிலிருந்து  420.65 லட்ச உறுதியான லிட்டர்களாக 2020-21-ல் அதிகரித்துள்ளது” எனக் கூறியபோதுதான் எனக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பற்றி நினைவுக்கு வந்தது.

அதென்ன ‘உறுதியான’ லிட்டர்? இங்கிலாந்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மதுவில் உள்ள சாராயத்தின் அளவை பரிசோதிப்பதற்காக உருவான பரிசோதனை முறை அது. இந்த பாணியிலான வரலாற்றுப் பரிசோதனை இப்போது இல்லை என்கின்றனர் வல்லுநர்கள். ஆனால் மத்தியப்பிரதேச அமைச்சர் தேவ்டா இன்னும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு  மது பயன்பாடு 23 சதவிகிதம் அதிகரித்த அதே காலத்தில் நாட்டுச் சாராய பயன்பாட்டின் அளவு 8.2 சதவிகிதம் உயர்ந்தது. அதன் மொத்த நுகர்வு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவின் நுகர்வைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். எனவே தேசியம் பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு மது அதன் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. சுயமரியாதை கொண்ட தேசபக்தாளர்களை திகைக்க வைக்கும் முரண்பாடு இது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan