மதுரையில் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு தெருவிளக்கு கம்பம் உண்டு. பல மறக்க முடியாத உரையாடல்களை அதோடு நிகழ்த்தியிருக்கிறேன்.  தெருவிளக்குடன் தனித்துவமான உறவு எனக்கு உண்டு. நான் பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை பல ஆண்டுகளுக்கு எங்கள் வீட்டில் மின் இணைப்பு கிடையாது. 2006ம் ஆண்டில் மின் இணைப்பு கிடைத்தப்போது, நாங்கள் எட்டுக்கு எட்டு அடி பரப்பளவு கொண்ட வீட்டில் வசித்தோம். ஐந்து பேர் ஓரறையில் வசித்தோம். அதனாலேயே நான் தெருவிளக்குக்கு நெருக்கமானேன்.

என்னுடைய குழந்தைப்பருவத்தில் பலமுறை வீடு மாற்றியிருக்கிறோம். குடிசையிலிருந்து மண் வீடு, வாடகை அறை என நகர்ந்து தற்போது 20X20 அடி வீட்டுக்கு வந்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர் செங்கல் செங்கல்லாக பார்த்து 12 வருடங்கள் கட்டிய வீடு அது. அவர்கள் ஒரு கொத்தனாரை பணிக்கு அமர்த்தினார்கள்தான். ஆனால் அவர்களின் சொந்த உழைப்பைதான் அதற்குள் போட்டார்கள். அந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே நாங்கள் குடிபுகுந்தோம். எங்களின் எல்லா வீடுகளும் நெருக்கமாக இருந்தன. தெருவிளக்கின் வெளிச்சக் கற்றைக்குள்ளேயே அவை இருந்தன. சே குவேரா, நெப்போலியன், சுஜாதா மற்றும் பலரின் புத்தகங்களை அந்த தெருவிளக்குக் கொடுத்த வெளிச்சத்தில் அமர்ந்துதான் படித்தேன்.

அதே தெருவிளக்குதான் இப்போது இந்த எழுத்துக்கும் சாட்சியாக இருக்கிறது.

*****

கொரொனா காரணமாக, ரொம்ப காலம் கழித்து என் தாயுடன் அதிக நாட்கள்  தங்கியிருந்தேன். 2013ம் ஆண்டில் முதல் புகைப்படக் கருவியை நான் வாங்கியதிலிருந்து, வீட்டில் கழிக்கும் நேரம் குறைவாகி விட்டது. பள்ளி நாட்களில் வேறு விதமான மனநிலையைக் கொண்டிருந்தேன். பிறகு புகைப்படக் கருவி வாங்கியதும் முற்றிலும் வித்தியாசமான மனநிலை உருவானது. இந்தத் தொற்றுக்காலத்திலும் கோவிட் ஊரடங்குகளிலும் பல மாதங்கள் நான் வீட்டில் அம்மாவுடன் இருந்தேன். முன்னெப்போதும் அவருடன் நான் அதிக நேரம் கழித்ததில்லை.

My mother and her friend Malar waiting for a bus to go to the Madurai Karimedu fish market.
PHOTO • M. Palani Kumar
Sometimes my father fetches pond fish on his bicycle for my mother to sell
PHOTO • M. Palani Kumar

இடது: என் தாயும் அவரின் தோழி மலரும் மதுரை கரிமேடு மீன் சந்தைக்கு செல்ல பேருந்துக்குக் காத்திருக்கின்றனர். வலது: சில நேரங்களில் குளத்து மீன்களைப் பிடித்து என் தாய் விற்பதற்காக சைக்கிளில் என் தந்தை கொண்டு வருவார்

ஒரு இடத்தில் அம்மா அமர்ந்து எனக்கு நினைவே இல்லை. ஏதோவொரு வேலையை எப்போதும் அவர் செய்து கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் முடக்குவாத நோய் வந்த பிறகு, அவரது நடமாட்டம் மிகவும் குறைந்தது. இது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் அம்மாவை இப்படி நான் பார்த்ததே இல்லை.

அது அவருக்கும் அதிகக் கவலை கொடுத்தது. “இந்த வயதில் என் நிலைமையைப் பார். என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?”. “என்னுடைய கால்களை மட்டும் சரியாக்கி விடு குமார்,” என அவர் சொல்லும்போதும் நான் குற்றவுணர்வுக்கு ஆளாகிறேன். அவரை நான் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

என்னுடைய அம்மாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. புகைப்படக் கலைஞராக நான் ஆனதற்கும், பலரை நான் சந்திக்க முடிவதற்கும், என்னுடைய சாதனைகளுக்கும் என்னுடைய ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்னால் என் பெற்றோரின் முதுகொடியும் கடின உழைப்பு இருக்கிறது. குறிப்பாக என்னுடைய அம்மாவின் உழைப்பு இருக்கிறது. அவரது பங்களிப்பு அளப்பரியது.

அம்மா அதிகாலை 3 மணிக்கு எழுந்து விடுவார். மீன் விற்கக் கிளம்பி விடுவார். அந்த நேரத்திலேயே அவர் என்னையும் எழுப்பிவிட்டுப் படிக்கச் சொல்வார். அது அவருக்கு ஒரு கடினமான வேலை. அவர் செல்லும்வரை, நான் தெருவிளக்குக்குக் கீழ் அமர்ந்து படிப்பேன். அவர் தூரச் சென்றபிறகு, மீண்டும் உறங்கச் சென்றுவிடுவேன். பல நேரங்களின் என் வாழ்க்கைச் சம்பவங்களுக்கு அந்தத் தெருவிளக்குதான் சாட்சியாக இருந்திருக்கிறது.

My mother carrying a load of fish around the market to sell.
PHOTO • M. Palani Kumar
My mother selling fish by the roadside. Each time the government expands the road, she is forced to find a new vending place for herself
PHOTO • M. Palani Kumar

இடது: விற்பதற்காக மீன்களை என் தாய் தூக்கிக் கொண்டு சந்தையைச் சுற்றிச் செல்கிறார். வலது: சாலையோரத்தில் என் தாய் மீன்கள் விற்கிறார். சாலையை அரசு விரிவாக்கும் ஒவ்வொரு முறையும் வியாபாரத்துக்கான புதிய இடத்தை கண்டுபிடிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்

என் அம்மா மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். மூன்று முறையும் அவர் பிழைத்தது சாதாரண விஷயம் அல்ல.

ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். நான் குழந்தையாக இருந்தபோது என் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். நான் அப்போது மிக சத்தமாக அழுதேன். என்னுடைய அழுகுரலைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நடக்கிறதென பார்க்க ஓடி வந்தனர். என் அம்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரைக் காப்பாற்றினார்கள். காப்பாற்றும்போது அவரின் நாக்கு வெளியே வந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். “நீ அழாமல் இருந்திருந்தால், என்னைக் காப்பாற்ற யாரும் வந்திருக்க மாட்டார்கள்,” என இப்போதும் அம்மா சொல்வார்.

என் தாயைப் போல பல தாய்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற கதைகள் கேட்டிருக்கிறேன். ஏதோவொரு வகையில் அவர்கள் தைரியத்தை மீட்டெடுத்து குழந்தைகளுக்காக உயிர் வாழ்கின்றனர். இந்த விஷயத்தைப் பற்றி எப்போது என் அம்மா பேசினாலும் அவருக்குக் கண்ணீர் வந்து விடும்.

ஒருமுறை அவர் அருகே இருந்த கிராமம் ஒன்றில் நெல் நடவுக்கு சென்றார். அப்போது ஒரு மரத்தில் தொட்டில் கட்டி என்னை அதில் தூங்க வைத்தார். என் அப்பா அங்கே வந்து என் அம்மாவை அடித்து, என்னைத் தொட்டிலிலிருந்து வெளியே தூக்கிப் போட்டார். வயல்களின் ஓரத்தில் இருந்த சேற்றில் சென்று நான் விழுந்தேன். என்னுடைய சுவாசம்  நின்றுவிட்டது.

என்னை நினைவுக்குக் கொண்டு வர தன்னால் முடிந்த எல்லாவற்றையும் என் அம்மா முயன்றார். என் சித்தி என்னை தலைகீழாய் தொங்கவிட்டு, பின்னால் அடித்தார். உடனே, எனக்கு மூச்சு வந்து அழத் தொடங்கியதாகச் சொல்வார்கள். அம்மா அச்சம்பவத்தை நினைவுகூரும் ஒவ்வொரு முறையும் அவருக்கு முதுகுத் தண்டு சில்லிட்டுப் போகும். இறப்பிலிருந்து மீண்டவன் என அவர் என்னைக் குறிப்பிடுவார்.

My mother spends sleepless nights going to the market to buy fish for the next day’s sale in an auto, and waiting there till early morning for fresh fish to arrive.
PHOTO • M. Palani Kumar
She doesn’t smile often. This is the only one rare and happy picture of my mother that I have.
PHOTO • M. Palani Kumar

இடது: அடுத்த நாள் விற்பனைக்கு மீன் வாங்கவென இரவுகளில் தூக்கமிழந்து சந்தைக்கு ஆட்டோவில் செல்லும் என் தாய், புது மீன்கள் வருவதற்காக அங்கேயே அதிகாலை வரை காத்திருப்பார். வலது: அதிகமாக அவர் புன்னகைக்க மாட்டார். அவர் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இது மட்டும்தான்

*****

எனக்கு இரண்டு வயதானபோது விவசாயக் கூலி உழைப்பிலிருந்து நகர்ந்து என் அம்மா மீன் விற்கத் தொடங்கினார். அது அவரது பிரதான வருமானம் ஈட்டும் வழியாக மாறி நீடிக்கிறது. கடந்த ஒரு வருடமாகதான் நான் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறேன். அதுவரை என் அம்மாதான் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர். முடக்குவாதம் வந்தபிறகும் கூட மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு அவர் மீன் விற்கக் கிளம்பி விடுவார். எப்போதுமே அவர் கடினமாக உழைப்பவர்.

என் அம்மாவின் பெயர் திருமாயி. கிராமவாசிகள் அவரைக் குப்பி என்றழைப்பார்கள். என்னை குப்பியின் மகன் எனக் குறிப்பிடுவார்கள். களை எடுத்தல், நெல் அறுத்தல், கால்வாய் வெட்டுதல் போன்ற வேலைகள்தான் அவருக்கு பல வருடங்களாகக் கிடைத்தன. என்னுடைய தாத்தா ஒத்திக்கு ஒரு துண்டு நிலத்தை வாங்கியபோது ஒற்றை ஆளாக மொத்த நிலத்துக்கும் உரம் போட்டு என் அம்மா தயார் செய்தார். இந்த நாள் வரை என் அம்மாவைப் போல் கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை. கடின உழைப்பின் மறு உருவம் என் அம்மா என என் அம்மாயி குறிப்பிடுவார். முதுகை ஒடிக்கும் உழைப்பை ஒருவர் எப்படி செலுத்த முடியுமென நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

பொதுவாகவே தினத்தொழிலாளிகளும் தொழிலாளிகளும் அதிக வேலை பார்ப்பதை கவனித்திருக்கிறேன் - குறிப்பாக பெண்கள். என் அம்மாயிக்கு என் அம்மாவைச் சேர்த்து 7 குழந்தைகள். ஐந்து மகள்கள். இரண்டு மகன்கள். என் அம்மாதான் மூத்தவர். என் அப்பா ஒரு குடிகாரர். சொந்த வீட்டை விற்றுக் குடித்தவர். என் அம்மாயிதான் எல்லாவற்றையும் செய்தார். சொந்தக் காலில் நின்று சம்பாதித்தார். குழந்தைகளுக்கு மணம் முடித்து வைத்தார். பேரக் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார்.

உழைப்பின் மீதான அந்த அர்ப்பணிப்பை என் அம்மாவிடமும் பார்க்கிறேன். என் சித்தி, அவர் காதலித்தவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, அம்மா தைரியமாக நின்று திருமணம் நடக்க உதவி செய்தார். ஒருமுறை நாங்கள் குடிசையில் வாழ்ந்த காலத்தில் குடிசை தீ பற்றியது. என்னையும் தம்பி மற்றும் சகோதரி ஆகியோரையும் என் அம்மா பிடித்து வெளியேற்றிக் காப்பாற்றினார். அவர் எப்போதும் அஞ்சியதே இல்லை. குழந்தைகளை முதலில் யோசித்து அதற்குப் பிறகு தங்களின் வாழ்க்கைகளை யோசிப்பது தாய்கள் மட்டும்தான்.

Amma waits outside the fish market till early in the morning to make her purchase.
PHOTO • M. Palani Kumar
From my childhood days, we have always cooked on a firewood stove. An LPG connection came to us only in the last four years. Also, it is very hard now to collect firewood near where we live
PHOTO • M. Palani Kumar

இடது: மீன் வாங்குவதற்காக அதிகாலை வரை மீன் சந்தையின் வெளியே காத்திருக்கும் அம்மா. வலது: என்னுடைய பால்ய காலத்திலிருந்தே விறகடுப்பில்தான் நாங்கள் சமைத்திருக்கிறோம். கடந்த நான்கு வருடங்களாகதான் எரிவாயு அடுப்பு பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்தினருகே விறகுகள் சேகரிப்பதும் கஷ்டம்

வீட்டுக்கு வெளியே இருக்கும் விறகு அடுப்பில் என் அம்மா பணியாரம் செய்வார். மக்கள் நடந்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் சாப்பிடக் கேட்பார்கள். “அனைவருக்கும் முதலில் பகிர்ந்து கொடு,” என எப்போதும் சொல்வார் அவர். நானும் கை நிறைய எடுத்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கொடுப்பேன்.

பிறர் மீதான அவரின் அக்கறை பல விதங்களில் வெளிப்படும். ஒவ்வொரு முறை நான் இரு சக்கர வாகனத்தில் கிளம்பும்போதும், “உனக்கு காயம்பட்டால் கூட பரவாயில்லை. அடுத்தவர்களை காயப்படுத்திவிடாதே,” என்பார்.

அம்மா சாப்பிட்டாரா என ஒருமுறை கூட என் அப்பா கேட்டதில்லை. அவர்கள் இருவரும் ஒருமுறை கூட ஒன்றாக படத்துக்கோ கோயிலுக்கோ சென்றதில்லை. அம்மா எப்போதும் உழைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். “நீ இல்லாதிருந்தால் நான் எப்போதோ இறந்திருப்பேன்,” என என்னிடம் சொல்வார்.

புகைப்படக் கருவி வாங்கிய பிறகு, கட்டுரைகளுக்காக நான் சந்திக்கும் பெண்கள், “என் குழந்தைகளுக்காகதான் நான் வாழ்கிறேன்,” எனச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது முழு உண்மை என்பதை இப்போது என் 30 வயதில் நான் உணர்ந்திருக்கிறேன்.

*****

என் அம்மா மீன் விற்கும் வீடுகளில், அந்த வீட்டுக் குழந்தைகள் வென்ற கோப்பைகளும் பதக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். தன் குழந்தைகளும் கோப்பைகள் பெற்று வீட்டுக்கு வர விரும்பியதாக அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் அச்சமயத்தில் ஆங்கிலத் தேர்வுகளில் தேர்ச்சியடைய முடியாத மதிப்பெண்களைத்தான் அவருக்கு என்னால் காட்ட முடிந்தது.  அந்த நாளில் அவர் கோபமடைந்து என் மீது வருத்தத்தில் இருந்தார். “தனியார் பள்ளிக்கு நான் கட்டணம் கட்டுகிறேன். ஆனால் உனக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சியடைய முடியவில்லை,” எனக் கோபமாக சொல்லி இருக்கிறார்.

My mother waiting to buy pond fish.
PHOTO • M. Palani Kumar
Collecting her purchase in a large bag
PHOTO • M. Palani Kumar

இடது: குளத்து மீன்களை வாங்க என் தாய் காத்திருக்கிறார். வலது: வாங்கியவற்றை பெரிய பையில் வாங்குகிறார்

அவருடைய கோபம்தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற என் உறுதிக்கான விதை. அதற்கான முதல் திருப்புமுனை கால்பந்தில் வந்தது. எனக்குப் பிடித்த விளையாட்டுக்கான பள்ளிக்கூட அணியில் சேர இரண்டு ஆண்டுகள் நான் காத்திருந்தேன். எங்கள் அணியுடன் நான் ஆடிய முதல் ஆட்டத்தில், நாங்கள் கோப்பையை வென்றோம். அந்த நாளில் பெருமையுடன் நான் வீட்டுக்கு வந்து அவரின் கைகளில் கோப்பையைக் கொடுத்தேன்.

கால்பந்தும் என் கல்விக்கு உதவியது. விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில்  ஓசூரின் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரி ஆனேன். ஆனாலும் புகைப்படக் கலைக்காக பொறியியல் படிப்பைக் கைவிட நேர்ந்தது. எது எப்படியோ இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம் என் அம்மாதான்.

குழந்தையாக இருந்தபோது சந்தையில் கிடைக்கும் பருத்திப்பால் பணியாரம் சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறேன். அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

தூக்கமில்லா அந்த இரவுகள் கொசுக்கடிகளால் நிரம்பியவை. புதுமீன்கள் சந்தைக்கு வருவதற்காக சாலையோர நடைபாதையில் நாங்கள் காத்திருப்போம். அதிகாலையில் வேகமாக எழுந்து மீன் வாங்கச் சென்றதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் அப்போது அதெல்லாம் சாதாரணம். சிறு லாபத்தை அடையக்கூட மீனின் கடைசி துகள் வரை நாங்கள் விற்க வேண்டும்.

My father and mother selling fish at one of their old vending spots in 2008.
PHOTO • M. Palani Kumar
During the Covid-19 lockdown, we weren’t able to sell fish on the roadside but have now started again
PHOTO • M. Palani Kumar

இடது: 2008ம் ஆண்டில் ஒரு பழைய இடத்தில் என் தந்தையும் தாயும் மீன் விற்கின்றனர். வலது: கோவிட் ஊரடங்கின்போது சாலையோரத்தில் எங்களால் மீன் விற்க முடியவில்லை. ஆனால் இப்போது தொடங்கி விட்டோம்

மதுரை கரிமேடு மீன் சந்தையில் 5 கிலோ மீனை அம்மா வாங்குவார். மீனைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஐஸையும் சேர்த்துதான் அந்த எடை. அவர் அந்த சுமையை  தலையில் ஒரு கூடையில் சுமந்து மதுரையின் தெருக்களில் கூவி விற்கும்போது 1 கிலோ ஐஸ் உருகிப் போயிருக்கும்.

20 வருடங்களுக்கு முன் இந்தத் தொழிலை அவர் தொடங்கியபோது ஒருநாளுக்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். பிற்பாடு அது 200-300 ரூபாயாக அதிகரித்தது. அந்தக் காலக்கட்டத்திலெல்லாம் தெருத்தெருவாக சுற்றி விற்பதற்கு பதிலாக சாலையோரக் கடை அமைத்து விற்கும் நிலையை சொந்த முயற்சியில் அவர் எட்டினார். தற்போது மாதத்தின் 30 நாட்களும் உழைத்து, 12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

ஒவ்வொரு வாரநாளிலும் கரிமேட்டில் 1000 ரூபாயை முதலாகக் கொடுத்து அவர் மீன் வாங்கினார் என்பதை வளர்ந்த பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். வார இறுதி நாட்களில் அவருக்கு நல்ல வியாபாரம் நடக்கும். எனவே 2000 ரூபாய் வரை அவர் செலவழிப்பார். இப்போது அவர் தினசரி 1500 ரூபாயும் வார இறுதியில் 5-6000 ரூபாயும் முதலீடு செய்கிறார். ஆனால் அவர் அனைவருக்கும் உதவுபவர் என்பதால் குறைந்த லாபம்தான் கிடைக்கும். எடையில் அவர் எப்போதும் கெடுபிடி காட்டியதில்லை. அதிகமாகவே வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பார்.

கரிமேட்டில் என் அம்மா செலவழிக்கும் பணம் வட்டிக்குக் கொடுப்பவரிடமிருந்து பெறப்படும் பணம். அடுத்த நாளே என் அம்மா அந்தப் பணத்தை திரும்ப அடைக்க வேண்டும். தற்போதுபோல ஒவ்வொரு வாரநாளும் அம்மா 1,500 ரூபாய் கடன் வாங்கினால் 24 மணி நேரங்களில் அவர் 1,600 ரூபாய் திரும்பக் கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு 100 ரூபாய் வட்டி. எல்லா பரிவர்த்தனைகளும் ஒரே வாரத்தில் முடிந்து விடுவதால், இந்த வட்டியின் அளவு கவனிக்கப்படுவதில்லை. வருடத்துக்கு என கணக்குப் போட்டால், கிட்டத்தட்ட 2,400 சதவிகிதமாக இந்த வட்டி சதவிகிதம் இருக்கும்.

These are the earliest photos that I took of my mother in 2008, when she was working hard with my father to build our new house. This photo is special to me since my journey in photography journey began here
PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

என் தாயும் (இடது) தந்தையும் (வலது) 2008ம் ஆண்டில் வீடு கட்ட கடினமாக உழைத்துக் கொண்டிருந்தபோது நான் எடுத்த புகைப்படங்கள் இவை. புகைப்படக் கலையின் என் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது என்பதால் இந்த இரண்டு புகைப்படங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை

அவரிடமிருந்து அம்மா 5,000 ரூபாய் வார இறுதி நாளுக்காக கடன் வாங்கினால், திங்கட்கிழமையின்போது 5,200 ரூபாய் திரும்பக் கொடுக்க வேண்டும். வாரநாளோ வார இறுதிநாளோ ஒரு நாள் தாமதித்தாலும் 100 ரூபாய் ஏறிக் கொண்டே போகும். வார இறுதி நாள் கொடுக்கப்படும் வட்டிக்கான வருடாந்திர வட்டி சதவிகிதம் 730 ஆக இருக்கிறது.

மீன் சந்தைக்கு சென்றபோதெல்லாம் பல கதைகள் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சில கதைகள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. கால்பந்தாட்டங்களில் கேட்ட கதைகளும், அப்பாவுடன் பாசன வாய்க்கால்களில் மீன் பிடிக்கச் சென்றபோது கேட்ட கதைகளும் எனக்குள் சினிமா மற்றும் காட்சி பற்றிய ஆர்வத்தைத் தூண்டி விட்டன. என் அம்மா வாராவாரம் கைச்செலவுக்காக எனக்குக் கொடுத்த காசில்தான் சே குவேரா, நெப்போலியன் மற்றும் சுஜாதா புத்தகங்களை வாங்க முடிந்தது. அவைதான் தெருவிளக்குப் பக்கம் என்னை கொண்டு சென்றது.

*****

ஒரு கட்டத்தில் என் அப்பாவும் நல்லபடியாக மாறி வருமானம் ஈட்டத் துவங்கினார். பல தினக்கூலி வேலைகள் பார்த்து, அவர் ஆடுகளும் வளர்த்தார். முன்பு, வாரத்துக்கு 500 ரூபாய் அவர் வருமானம் ஈட்டினார். பிறகு அவர் உணவகங்களிலும் உணவு விடுதிகளிலும் பணியாற்றச் சென்றார். இப்போது நாளொன்றுக்கு அவர் 250 ரூபாய் சம்பாதிக்கிறார். 2008ம் ஆண்டில் முதல்வரின் வீட்டுக் காப்பீடு திட்டத்தின் கீழ் என் பெற்றோர் கடன் பெற்று, இப்போது நாங்கள் வசிக்கும் வீட்டைக் கட்டத் தொடங்கினர். ஒருகாலத்தில் மதுரைக்கு வெளியே கிராமமாக இருந்து, தற்போது விரிவடையும் நகரத்தால் விழுங்கப்பட்ட ஜவஹர்லால்புரத்தில் வீடு இருக்கிறது.

பல சவால்களை எதிர்கொண்டு வீட்டைக் கட்ட என் பெற்றோருக்கு 12 ஆண்டுகள் ஆனது. என் அப்பா துணிக்கு சாயம் போடும் ஆலைகள், உணவகங்கள் முதலிய இடங்களில் வேலை பார்த்தும் கால்நடைகளை மேய்த்தும் இன்னும் பல வேலைகள் செய்தும் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தார். அவர்களின் சேமிப்பைக் கொண்டு என்னையும் உடன் பிறந்த இருவரையும் பள்ளியில் படிக்கவும் வைத்தனர். செங்கல் செங்கல்லாக பார்த்து வீட்டையும் கட்டினர். அவர்கள் அதிகமாக இழந்து கட்டிய எங்களின் வீடு அவர்களின் விடாமுயற்சியின் அடையாளம்.

The house into which my parents put their own hard labour came up right behind our old 8x8 foot house, where five of us lived till 2008.
PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: 2008ம் ஆண்டு வரை நாங்கள் ஐந்து பேரும் வாழ்ந்த 8X8 அடி வீட்டுக்கு பின்னாடியேதான் என் பெற்றோர் கடின உழைப்பைச் செலுத்திக் கட்டிய வீடு இருக்கிறது. வலது: புது வீட்டுக்கான டெரகோட்டா ஓடுகளை பதிக்கும் என் தாயும் அம்மாயியும் (இடது) சித்தியும் (வலது). அந்த வீடு கட்டப்படும்போதே நாங்கள் குடிபுகுந்தோம்

கருப்பையில் பிரச்சினைகள் வந்ததும் என் தாய் ஓர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 30,000 ரூபாய் ஆனது. அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பொருளாதார ரீதியாக அவருக்கு உதவ முடியவில்லை. என் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவென பணியமர்த்தப்பட்ட செவிலியர் அவரை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை. நல்ல மருத்துவமனையில் அவரை சேர்க்க என் குடும்பம் நினைத்தபோது, அவர்களுக்கு உதவும் நிலையில் நான் இல்லை. ஆனால் அந்தச் சூழல் நான் PARI-ல் சேர்ந்ததும் மாறத் தொடங்கி விட்டது.

என் சகோதரர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்குக் கூட PARI உதவியது. ஊதியமாக எனக்குக் கிடைக்கும் பணத்தை அம்மாவிடம் என்னால் கொடுக்க முடிகிறது. விகடன் விருது போன்ற பல பரிசுகளை நான் பெற்றபோது, தன் மகன் ஏதோ நல்ல விஷயங்களை செய்யத் தொடங்கி விட்டான் என்கிற நம்பிக்கையை என் அம்மா கொண்டார். என் அப்பா இப்போதும் என்னைச் சீண்டுவார்: “நீ விருதுகள் வாங்கலாம், ஆனால் சொல்லிக் கொள்ளுமளவுக்கு நீ சம்பாதிக்க முடியுமா?”

அவர் சொல்வது சரிதான். 2008ம் ஆண்டில், உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கிய செல்பேசிகளில்  நான் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினாலும், பொருளாதார உதவிக்கு குடும்பத்தை நான் சார்ந்திருப்பதை 2014ம் ஆண்டில்தான் நிறுத்த முடிந்தது. அது வரை உணவகங்களில் பாத்திரங்கள் கழுவுவது, திருமண நிகழ்வுகளில் உணவு போடுவது முதலியப் பல வேலைகளை செய்தேன்.

சொல்லிக் கொள்ளுமளவுக்கான சம்பளம் பெற எனக்கு 10 ஆண்டுகள் ஆகின. கடந்த பத்து வருடங்களில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். என்னுடைய சகோதரி நோய்வாய்ப்பட்டார். அவரும் என் தாயும் மாறி மாறி நோய்வாய்ப்பட்டதில் மருத்துவமனை எங்களுக்கு இரண்டாம் வீடாக மாறியது. கருப்பையில் அம்மாவுக்கு இன்னும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. என் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. புகைப்படப் பத்திரிகையாளராக நான் ஆவணப்படுத்தும் உழைக்கும் வர்க்கம் பற்றியக் கட்டுரைகள்,  நான் பார்த்து  உத்வேகம் பெற்றவை. என்னுடன் பகிரப்பட்டவை. அவர்களின் விடாமுயற்சிதான் எனக்கான பாடம். தெருவிளக்குதான் எனக்கான வெளிச்சம்.

PHOTO • M. Palani Kumar

என் தாய் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மூன்று முறையும் அவர் உயிர் பிழைத்தது சாதாரண விஷயமல்ல


PHOTO • M. Palani Kumar

ஓரிடத்தில் என் அம்மா அமர்ந்து நான் பார்த்ததில்லை. ஏதோவொரு வேலையை எப்போதும் அவர் செய்து கொண்டிருப்பார். வேலை முடிந்து அலுமினியப்பாத்திரத்தை ஓர் ஓடையில் அவர் கழுவிக் கொண்டிருக்கிறார்


PHOTO • M. Palani Kumar

விவசாயி ஆக வேண்டுமென என் தாய் விரும்பினார். ஆனால் நடக்கவில்லை. பிறகு மீன் விற்கத் தொடங்கினார். ஆனால் விவசாயம் மீதான அவரது ஆர்வம் மறையவே இல்லை. எங்கள் வீட்டுக்கு பின்னால் பத்து வாழைகள் வளர்க்கிறோம். அவற்றில் ஒன்று பூத்தாலும் கூட அவர் பரவசமாகி விடுவார். வேண்டுதல் செய்து சர்க்கரைப் பொங்கல் ஆக்கிக் கொண்டாடுவார்

PHOTO • M. Palani Kumar

ஒரு கட்டத்தில் என் தந்தை ஆடு வளர்க்கத் தொடங்கினார். ஆட்டுக்கிடையை சுத்தப்படுத்துவது அம்மாதான்


PHOTO • M. Palani Kumar

விலங்குகளும் பறவைகளும் உடன் இருப்பதை என் அப்பா விரும்புவார். அவருக்கு ஐந்து வயதாகும்போதே வருமானத்துக்கென ஆடு மேய்க்கத் தொடங்கினார்


PHOTO • M. Palani Kumar

சைக்கிளும் மோட்டர் சைக்கிளும் ஓட்ட அம்மாவுக்கு விருப்பம். ஆனால் ஓட்டத் தெரியாது


PHOTO • M. Palani Kumar

அம்மாவின் மீன் விற்பனைக்கு உதவிக் கொண்டிருப்பது நான்தான்


PHOTO • M. Palani Kumar

என் தாயின் முடக்குவாதம் வலி தரக்கூடிய நோய். நடப்பதற்கே அவருக்குக் கடினமாக இருக்கும். ஆனாலும் அவர்தான் சமையலுக்கு விறகு சேகரிப்பார். விறகுகள் கிடைப்பதே அரிதாகி விட்டது


PHOTO • M. Palani Kumar

ஒவ்வொரு மாதமும் முடக்குவாதத்துக்கு மாத்திரைகள் வாங்க அவர் அரசு மருத்துவமனைக்குச் செல்வார். அவைதாம் அவரை இன்னும் இயங்க வைத்திருக்கின்றன. “என் கால்களை மட்டும் சரியாக்கு, குமார்,” என அவர் சொல்லும் ஒவ்வொரு முறையும் நான் குற்றவுணர்வு கொள்கிறேன்


PHOTO • M. Palani Kumar

15 வருடங்களாக என் தந்தைக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்தது. அறுவை சிகிச்சை செய்ய எங்களிடம் பணமில்லை. PARI-ல் நான் வேலை பார்க்கத் தொடங்கியபிறகுதான் அறுவை சிகிச்சைக்கான பணத்தை என்னால் ஈட்ட முடிந்தது


PHOTO • M. Palani Kumar

இந்த வீட்டில்தான் தற்போது வசிக்கிறோம். இதைக் கட்ட 12 வருடங்கள் ஆனது. இறுதியில் என் தாயின் கனவு நனவாகியிருக்கிறது


PHOTO • M. Palani Kumar

மீன் கொண்டு சென்ற பாத்திரங்களை கழுவிவிட்டு வீட்டுக்கு வருகிறார் என் அம்மா. அவரை எப்போதும் உவப்பாகவும் சிந்தனையுடனும் இருக்கும் வானமாகவே நான் யோசித்திருக்கிறேன். ஆனால் அவர் தன்னைப் பற்றி சிந்தித்ததே இல்லை


தமிழில்: ராஜசங்கீதன்

M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan