“எல்லா ஆன்மாக்களும் மரணமடையும்” என்கிறது ஒரு கல்லறைப் பதிவு. எதிர்காலத்தை கணிப்பதில் புதுதில்லியின் பெரிய இடுகாடான கப்ரிஸ்தானின் ஜதீத் அல் இ இஸ்லாம் கல்லறைகள் அளவுக்கு துல்லியம் வேறில் இல்லை.

-   كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ   كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ   -  என குரானில் வரும் ஒரு வசனத்தின் வரி இஸ்லாமிய இடுகாட்டுக்கே உரிய வாட்டத்துடன் அமைதியையும் துயரத்தையும் கூட்டுகிறது. ஒரு அவசர ஊர்தி இன்னொரு இறப்படுன உள்ளே வருகிறது. இறந்தவரின் உறவுகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். அவசர ஊர்தி காலியாகி ஒரு சவக்குழி நிரம்பியது. பிறகு ஒரு இயந்திரம் குழிக்குள் மண்ணை கொட்டியது

இடுகாட்டின் ஒரு மூலையில் அமர்ந்து 62 வயது நிசாம் அக்தர் இறந்து போனவர்களின் பெயர்களை கல்லறைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். சித்திர எழுத்துக்கான தூரிகையை லாவகமாக விரல்களுக்கு இடையில் பிடித்துக் கொண்டு உருது எழுத்துகள் சிலவற்றில் புள்ளி வரைந்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிக் கொண்டிருந்த பெயர், ‘துர்தனா’. கோவிட்19 தொற்றால் இறந்துபோனவர்.

பெயர்களை வண்ணத்தில் வரைந்து அவற்றுக்கான எழுத்துகளை சித்திர எழுத்து முறை கொண்டு நிசாம் கல்லறைகளில் வரைந்து கொண்டிருக்கிறார். சற்று நேரத்துக்கு பிறகு உடன் பணிபுரியும் ஒருவர், சுத்தியல் மற்றும் உளியை கொண்டு அந்த எழுத்துகளை அப்படியே கல்லறையில் செதுக்குவார். அவர் செதுக்கும்போது வண்ணம் மறைந்துவிடும்.

சித்திர எழுத்துக் கலைஞராக இருக்கும் நிசாம் இறந்தவர்களின் பெயர்களை கல்லறையில் எழுதும் வேலையை 40 வருடங்களாக செய்து வருகிறார். “எத்தனை கல்லறைகளில் எழுதினேன் என எண்ணிக்கை ஞாபகமில்லை,” என்கிறார் அவர். “இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 150 பேரின் பெயர்களை எழுதி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் கோவிட் தொற்றால் இறந்தவர்கள். அதே அளவில் கோவிட் பாதிப்பு ஏற்படாமலும் இறந்திருக்கிறார்கள்.அவர்களும் எழுதியிருக்கிறேன். ஒருநாளில் மூன்றிலிருந்து ஐந்து கல்லறைகள் வரை முடிப்பேன். கல்லறையின் பெயரிருக்கும் கல்லின் ஒரு பக்கத்தில் எழுத சுமாராக ஒரு மணி நேரம் ஆகும்,” என்கிறார் அவர். அதாவது உருது மொழியில் எழுத அந்த கால அளவு. கல்லின் மறுபக்கத்தில் இறந்தவரின் பெயர் மட்டுமே இடம்பெறும். அதுவும் ஆங்கிலத்தில்தான். “சில நொடிகளில் ஒரு பக்கத்தை நிரப்புவது போலல்ல,” என புன்னகைக்கிறார் நான் எடுக்கும் குறிப்புகளை சுட்டிக்காட்டி.

Left: One of the gates to the qabristan; on this side only those who died of Covid are buried. Right: Nizam Akhtar writing the names of the deceased on gravestones
PHOTO • Amir Malik
Left: One of the gates to the qabristan; on this side only those who died of Covid are buried. Right: Nizam Akhtar writing the names of the deceased on gravestones
PHOTO • Q. Naqvi

இடது: கப்ரிஸ்தானுக்கு செல்லும் ஒரு வழி; இந்த பக்கத்தில் கோவிட் தொற்றால் இறந்தவர் மட்டும் புதைக்கப்படுகிறார்கள். வலது: நிசாம் அக்தர் இறந்தவர்களின் பெயர்களை கல்லறை கற்களில் எழுதுகிறார்

வழக்கமாக ஜதீத் இடுகாட்டிலிருந்து நாளொன்றுக்கு ஒன்றோ இரண்டோ வேலைகள் வரும். தொற்று தொடங்கியதிலிருந்து நான்கு அல்லது ஐந்து என அன்றாடம் வேலைகள் வருகின்றன. 200 சதவிகிதம் வேலை அதிகரித்திருக்கிறது. அந்த வேலையை நான்கு பணியாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரத்தை பொறுத்தவரை புதிதாக எந்த வேலையும் அவர்கள் எடுக்கவில்லை. 120 கல்லறை கற்களில் பாதி வேலை முடிந்திருக்கிறது. இன்னும் 50 கல்லறை கற்கள் வேலை தொடங்கப்பட காத்திருக்கின்றன.

திடுமென வருமானம் அதிகரித்திருக்கும் தொழில் இது. ஆனாலும் இத்தொழில் செய்பவர்களுக்கு மனதில் சந்தோஷம் இல்லை. “நிறைய மனிதர்கள் இறந்திருக்கிறார்கள்,” என்கிறார் மூன்றாம் தலைமுறையாக இந்த வேலை செய்யும் முகமது ஷமீம். “அவர்களுடன் சேர்ந்து மனிதமும் இறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இறப்பிலும் நடக்கும் விஷயங்களை நினைத்து பல மணி நேரங்கள் என் இதயம் அழுகிறது.”

“வாழ்க்கையின் தத்துவம் இதுதான். இந்த பூமிக்கு வரும் மனிதர்கள், வாழ்ந்து. பிறகு இறுதியில் மரணத்துடன் அனைவரும் கிளம்பிவிடுகிறார்கள்,” என்கிறார் நிசாம். “மக்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள். எனக்கு கல்லறை கற்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன,” என்கிறார் அவர் மரணத்தை பற்றிய தத்துவ ஞானி போல். “ஆனாலும் இப்போது நடப்பதை போல் நான் எப்போதும் பார்க்கவில்லை.”

வேலை அதிகரித்திருக்கும் சூழலில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எல்லா குடும்பங்களாலும் கல்லறை கட்ட முடிவதில்லை. சிலர் வெறும் இரும்புப் பலகைகளை மட்டும் வைக்கின்றனர். பலகைகளில் பெயர்களை எழுத கட்டணம் குறைவு. பல கல்லறைகள் குறிப்புகளின்றியும் இருக்கின்றன. “ சில கல்லறைகளுக்கான வேலைகள் புதைக்கப்பட்ட 15 நாட்களிலிருந்து 45 நாட்கள் வரை கழித்தும் வருகின்றன,” என்கிறார் நிசாம். “நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலைக்கும் அக்குடும்பம் 20 நாட்களேனும் காத்திருக்க வேண்டும்,” என்கிறார் அவருடன் வேலை பார்க்கும் அசிம் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).

கடந்த வருடத்தில் நம்பிக்கையற்று இருந்த 35 வயது அசிம் தற்போது கொரோனா வைரஸ் இருப்பதை ஒப்புக் கொள்கிறார். “சடலங்கள் பொய் சொல்வதில்லை. பல சடலங்களை பார்க்கிறேன். நம்புவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.” குடும்ப உறுப்பினர்களுக்கென குடும்பத்தினரே சவக்குழி தோண்டவும் செய்கின்றனர். “சில நேரங்களில் சவக்குழி தோண்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர்.

”ஆரம்பத்தில், தொற்றுநோய் பரவுவதற்கு முன் நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து மரணங்கள் இடுகாட்டுக்கு வரும். ஒரு மாதத்தில் மொத்தம் 150,” என்கிறார் இடுகாட்டை நடத்தும் குழுவை சேர்ந்த நபர்.

Asim, Aas and Waseem (left to right) engraving the mehrab: 'Every order that we take, the family has to wait for at least 20 days'
PHOTO • Q. Naqvi
Asim, Aas and Waseem (left to right) engraving the mehrab: 'Every order that we take, the family has to wait for at least 20 days'
PHOTO • Amir Malik

அசிம் மற்றும் ஆஸ் (இடதிலிருந்து வலது) நினைவுக்குறிப்பு எழுதுகின்றனர். ‘நாங்கள் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு வேலையிலும் குடும்பத்தினர் 20 நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது

ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 1068 மரணங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் 453 பேர் கோவிட் தொற்றால் இறந்தவர்கள். அதுவும் இடுகாட்டு குழு கொடுக்கும் எண்ணிக்கை மட்டும்தான். அங்கு வேலை பார்க்கும், பெயரை வெளியிட விரும்பாத ஊழியர்கள், எண்ணிக்கை குறைந்தது 50 சதவிகிதமேனும் அதிகமாக இருக்கும் என கூறுகின்றனர்.

“ஒரு பெண் அவருடைய ஒன்றரை வயது குழந்தையுடன் இடுகாட்டுக்கு வந்தார்,” என்கிறார் அசிம். “வெளிமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரான அவரின் கணவர் கோவிட் தொற்றில் இறந்துவிட்டார். அவருக்கு இங்கு சொந்தமென யாருமில்லை. நாங்கள்தான் புதைத்தோம். குழந்தை தந்தையின் சாவுக்கு மண்ணை போடுகிறது.” ஒரு குழந்தை இறந்தால் அக்குழந்தை பெற்றோரின் இதயத்தில் புதைக்கப்படுகிறது என பழமொழி சொல்வார்கள். பெற்றோரை ஒரு குழந்தை புதைக்க வேண்டிய சூழலில் என்ன நடக்குமென சொல்ல ஏதேனும் பழமொழி உண்டா?

அசிமும் அவரின் குடும்பத்தினரும் கூட கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவரும் அவரின் இரு மனைவியரும் பெற்றோரும் கோவிட்டுக்கான அறிகுறிகளுக்கு உள்ளாகினர். அவர்களின் ஐந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தன. குடும்பத்தில் எவரும் பரிசோதிக்கவில்லை. ஆனால் தப்பித்துவிட்டனர். “இங்கு கற்களை உடைத்து என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன்,” என கல் செதுக்கும் வேலையை குறிப்பிடுகிறார். ஜதீதில் மாதந்தோறும் 9000 ரூபாய் ஊதியம் பெறும்  அசிம், இறந்து போன பலருக்கு இறுதி பிரார்த்தனை செய்திருக்கிறார். அவர்களில் கோவிட் நோயாளிகளும் அடங்குவர்.

“நான் இங்கு வேலை பார்ப்பதை என் குடும்பத்தினர் ஆதரிக்கின்றனர். இறுதி யாத்திரையில் செல்பவர்களுக்கு செய்யும் சேவைகள் மறுமை உலகில் அங்கீகரிக்கப்படும் என்கிறார்கள்,” என்கிறார் அசிம். நிசாமின் குடும்பமும் கூட அவர் இங்கு வேலை பார்ப்பதை ஆதரித்திருக்கின்றனர். இரு தரப்பும் முதலில் வேலையை பற்றி தயக்கம் காட்டியிருக்கின்றனர். பிறகு தயக்கம் போய்விட்டது. “ஒரு சடலம் தரையில் கிடக்கும்போது அதை புதைப்பதை பற்றிதான் யோசிப்பீர்கள். அது கொடுக்கும் தயக்கத்தை பற்றி அல்ல,’ என்றார் அசிம்.

ஜதீத் கர்பீஸ்தானில் ஒரு கல்லறை கட்டியெழுப்ப 1500 ரூபாய் கட்டணம். இதில் நிஜாம் செய்யும் சித்திர எழுத்து வேலைக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை கிடைக்கும். அவர் வேலை செய்யும் ஒவ்வொரு கல்லும் 6 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டது. இதிலிருந்து, 3 அடி நீளமும் 1.5 அடி அகலமும் கொண்ட நான்கு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.ஒவ்வொரு கல்லுக்கும் அதன் மேற்பகுதியில் வளைந்த தன்மை பிறகு கொடுக்கப்படும். சிலர் பளிங்கு கூட பயன்படுத்துவதுண்டு.

காணொளி: கப்ரிஸ்தானின் சித்திர எழுத்துக் கலைஞர்கள்

ஒவ்வொரு வேலையை பெறும்போதும் தேவையான தகவல்களை தெளிவாக எழுதித் தரும்படி குடும்ப உறுப்பினரை கேட்டுக் கொள்கிறார் நிசாம். இறந்தவரின் பெயர், கணவர் அல்லது தந்தையின் பெயர் (பெண்ணாக இருக்கும் பட்சத்தில்), பிறப்பு, இறப்பு தேதிகள் மற்றும் முகவரி போன்றவை. கூடுதலாக குரான் வசனம் எதையேனும் பொறிக்க விரும்பினால் அதையும் குடும்பம் எழுதிக் கொடுக்கலாம். “இதனால் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று, இறந்தவரின் பெயரை உறவினர் எழுதிக் கொடுக்கிறார். இரண்டு, எந்த தவறும் இருக்காது,” என்கிறார் நிசாம். சில நேரங்களில் பின் வருவதை போல் உருது செய்யுளும் கூட இருக்கும். பின்வரும் செய்யுள் ஜஹான் அரா ஹசனினின் கல்லறையில் எழுதுவதற்காக அவரின் குடும்பம் கொடுத்தது.

அப்ர் இ ரெஹ்மத் உங்கி மர்கத் பர் குஹார் பாரி கரே
ஹஷ்ர் தக் ஷான் இ கரிமி நாஸ் பர்தாரி கரே

ஆசிர்வாத மேகம் அவளின் சமாதியில் முத்துகளை தூவட்டும்
அவள் எப்போதும் எங்களுடன் இணைந்திருக்கட்டும்

சித்திர எழுத்தை 1975ம் ஆண்டிலிருந்து செய்து வருகிறார் நிசாம். அவரது தந்தை 1979ம் ஆண்டில் இறந்தபிறகு நிசாம் கல்லறையில் எழுதும் வேலையை தொடங்கினார். “என் தந்தை ஓவியர் என்ற போதும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ளவில்லை. அவர் வரைவதை நான் பார்த்திருக்கிறேன். இயல்பாகவே எனக்கு இந்த திறன் வாய்த்திருக்கிறது,” என்கிறார் அவர்.

1980ம் ஆண்டில் தில்லியின் கிரோரி மால் கல்லூரியில் உருது பட்டப்படிப்பு முடித்தார். இந்த வேலையை அப்போதிருந்து தொடங்கிய அவர், தற்போது மூடப்பட்டுவிட்ட ஜகத் சினிமாவுக்கு முன்பாக ஒரு கடை திறந்தார். நசீம் அராவை நிசாம் 1986ம் ஆண்டில் மணம் முடித்தார். மனைவிக்கு ஒரு கடிதம் கூட அவர் எழுதியதில்லை. எழுத வேண்டிய தேவையும் எழவில்லை. ஒரே பகுதியில் வசித்ததால் பெற்றோரின் வீட்டுக்கு சென்றதும் திரும்பி அவர் வந்துவிடுவார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஆறு பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர். பழைய தில்லியின் ஜமா மஸ்தித் அருகே வசிக்கின்றனர்.

Left: From across the graveyard, you can see the building of the Delhi police headquarters at ITO. Right: Nizam has been printing names of the deceased on these gravestones for over 40 years
PHOTO • Amir Malik
Left: From across the graveyard, you can see the building of the Delhi police headquarters at ITO. Right: Nizam has been printing names of the deceased on these gravestones for over 40 years
PHOTO • Amir Malik

இடது: இடுகாட்டிலிருந்து அந்த பக்கத்தில் இருக்கும் தில்லி காவல்துறையின் தலைமையிடத்தை பார்க்க முடியும். வலது: 40 வருடங்களாக நிசாம் இறந்தவர்களின் பெயர்களை கல்லறைகளில் எழுதி வருகிறார்

“அப்போதெல்லாம் உருது கவியரங்கக் கூட்டம், மாநாடுகள், விளம்பரங்கள், அரசியல் மற்றும் மத கூட்டங்கள் முதலியவற்றுக்கான பதாகைகளை நான் வரைவேன்.”  சித்திர எழுத்து வேலைகளையும் செய்கிறார். அவரின் கடையில் போராட்ட வாசகங்களும், பேனருகளும் பதாகைகளும் இருக்கின்றன.

அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 80களில் பாப்ரி மஸ்ஜித்தை திறப்பதற்கான அனுமதி கொடுத்ததாக அவர் கூறுகிறார். “அதனால் பெரும் போராட்டம் இஸ்லாமிய சமூகத்திலும் பிற சமூகங்களிலும் வெடித்தது.போராட்ட பேனர்களும் போஸ்டர்களும் நான் வரைந்திருக்கிறேன். 1992ம் ஆண்டில் பாப்ரி தகர்க்கப்பட்டபிறகு, போராட்டங்கள் படிப்படியாக ஒய்ந்து போயின,” என்கிறார் நிசாம். “கடும் கோபம் (தகர்ப்புக்கு எதிராக) மக்களிடம் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் வெளியே கூட வருவதில்லை.” சமூகத்திலேயே கூட அத்தகைய வேலைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளும் அடங்கிவிட்டதாக கூறுகிறார். “எட்டு பேரை நான் வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அவர்கள் எங்கு போனார்கள் என்பது கூட தெரியாதது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

“2009-10-ல் தொண்டை பாதித்ததில் என் குரல் போய்விட்டது. 18 மாதங்கள் கழித்து என் குரலின் பாதியை மட்டும் மீட்டெடுக்க முடிந்தது. என்னை நீங்கள் புரிந்து கொள்ள அதுவே போதும்,” என சொல்லி விட்டு சிரிக்கிறார். அதே வருடத்தில்தான் நிசாமின் கடையும் மூடப்பட்டது. “ஆனால் கல்லறையில் எழுதுவதை நான் நிறுத்தவேயில்லை.”

“பிறகு கோவிட் தொற்றுநோய் இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்த இடுகாட்டில் இருந்தவர்கள் என் உதவியை கேட்டனர். மறுக்க முடியாத நிலை. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இங்கு வந்தேன். என் குடும்பத்தை ஓட்டவும் எனக்கு இது தேவைப்பட்டது.” நிசாமின் மகன் ஜமா மஸ்ஜித்துக்கு அருகே சிறிய செருப்புக் கடை நடத்துகிறார். தொற்றுநோயும் ஊரடங்கும் அவருடைய வருமானத்தையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

2004ம் ஆண்டில் மூடப்பட்ட ஜகத் சினிமாவை போல், நிசாமின் பழைய வேலையிடத்தை சுற்றி இருந்த எல்லாமுமே தற்போது கடந்தகால நினைவுகளாகிவிட்டன. சகிர் லுதியான்வின் எழுத்துகள் அவருக்கு பிடிக்கும். அவருடைய பாடல்களை கேட்பார். நிசாம் பட்டப்படிப்பு முடித்த வருடத்தில்தான் அந்த கவிஞர் மறைந்தார். லுதியான்வின் வரிகளிலேயே அவருக்கு பிடித்தது, ‘வா. மீண்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்களாக மாறுவோம்’ என்கிற வரிதான். வேறுவிதமாக சொல்வதெனில், வாழ்வும் மரணமும் எப்போதும் உடன்பாடாக இருப்பதில்லை.

Nandkishore, an expert in cutting stones and shaping them with hammer and chisel, says, 'The graveyard has never seen such a horrible situation as it does now'
PHOTO • Amir Malik
Nandkishore, an expert in cutting stones and shaping them with hammer and chisel, says, 'The graveyard has never seen such a horrible situation as it does now'
PHOTO • Amir Malik

சுத்தியலும் உளியும் பயன்படுத்து கற்களை செதுக்கும் நந்த்கிஷோர், ‘இது போன்ற கொடூரமான சூழலை இடுகாடு எப்போதுமே சந்தித்ததில்லை’, என்கிறார்

“அந்த காலத்தில் உருது மொழியில் எழுதும் கலைஞர்கள் இருந்தனர். தற்போது கல்லறை கற்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்தான் இருக்கிறார்கள். உருது சித்திர எழுத்தில் பெயர்களை எழுதும் ஒருவரை தில்லியில் கண்டுபிடிப்பது கடினம்,” என்கிறார் ஆர். “இஸ்லாமியர்கள் மட்டுமே உருவாக்கினார்கள் என்கிற கட்டுக்கதையாலும் அரசியலாலும் அம்மொழி கடும் சேதத்துக்குள்ளாகி இருக்கிறது. உருது சித்திர எழுத்துக் கலையில் வேலைகள் முன்பைவிட தற்போது மிகக் குறைவாகவே இருக்கிறது.”

நிசாம் வரைந்து முடித்ததும், வண்ணம் கொஞ்ச நேரத்துக்கு காய்கிறது. பிறகு அசிம் சுலெய்மான் மற்றும் நந்த்கிஷோர் அதை செதுக்குவார்கள். 50 வயது நந்த்கிஷோர் இடுகாட்டில் 30 வருடமாக வேலை பார்த்து வருகிறார். கற்களை வெட்டி வளைந்த தன்மையை இயந்திரமின்றி வெறும் சுத்தியல் மற்றும் உளியால் கொண்டு வருவதில் திறன் படைத்தவர் அவர். “இது போன்ற கொடூரமான சூழலை இடுகாடு எப்போதுமே சந்தித்ததில்லை,” என்கிறார் அவர்.

கோவிட் தொற்றால் இறந்தவர்களின் கல்லறை கற்களில் நந்த்கிஷோர் வேலை செய்வதில்லை. வைரஸ்ஸில் இருந்த்து தன்னை காத்துக் கொள்வதாக எண்ணி கப்ரிஸ்தான் வளாகத்தின் மறுமுனையில் அமர்ந்து கொல்கிறார். “நான் செதுக்கி, வெட்டி, கழுவி முடிக்கும் ஒவ்வொரு கல்லுக்கும் 500 ரூபாய் வாங்குகிறேன்,” என்கிறார் அவர். “இது பிரிட்டிஷ் காலத்தைய இடுகாடு,” என்றும் குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் நமக்கு இடுகாட்டை மட்டும்தான் விட்டு சென்றிருக்கிறார்கள் அல்லவா என நான் கேட்டதும் அவர் சிரிக்கிறார்.

“இடுகாட்டில் வேலை பார்ப்பவரின் பெயர் நந்த்கிஷோர் என அறிந்ததும் பலருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. அச்சமயங்களில் என்ன செய்வதென தெரியாமல் அவர்களின் முகங்களை பார்த்து நான் புன்னகைப்பேன். சில நேரங்களில், ‘இஸ்லாமியர்களாக இருந்தும் நீங்கள் செய்யாத வேலையை நான் செய்து தருகிறேன். குரான் வசனங்களை செதுக்கி தருகிறேன்,’ எனக் கூறுவேன். அவர்கள் எனக்கு நன்றி கூறுவார்கள். என்னுடைய வீட்டில் இருப்பதை போல் நான் உணர்கிறேன்,” என்னும் நந்த்கிஷோர் மூன்று குழந்தைகளின் தந்தை. வடக்கு தில்லியின் சதார் பஜாரில் வசிக்கிறார்.

“கல்லறைகளுக்குள் கிடக்கும் இவர்கள் என்னை போன்றவர்கள்தான். வெளியே சென்றுவிட்டால் உலகம் எனக்கு அந்நியமாக இருக்கும். இங்குதான் அமைதி எனக்கு கிடைக்கிறது,” என்கிறார் அவர்.

Pawan Kumar and Aas Mohammad: the dust from the stone work often covers them entirely
PHOTO • Amir Malik
Pawan Kumar and Aas Mohammad: the dust from the stone work often covers them entirely
PHOTO • Amir Malik
Pawan Kumar and Aas Mohammad: the dust from the stone work often covers them entirely
PHOTO • Amir Malik

கல் செதுக்கும்போது எழும் தூசி பவன் குமார் மற்றும் ஆஸ் முகமது மீது படர்ந்து விடுகிறது

புதிய ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் பணியமர்த்தப்பட்டார். பிகாரின் பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்த பவன் குமார். அவரும் அவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் மீண்டும் பிகாருக்கு சென்றுவிட்டனர். 31 வயதாகும் பவனும் கல் செதுக்குகிறார். கல் வெட்டும் இயந்திரத்தை கொண்டு 20 கற்களை வெட்டியதில் “என்னுடைய முகம் சிவப்பாகிவிட்டது,” என்கிறார் அவர்.வேலையில் வரும் தூசு அவரின் முழு உடலிலும் படர்ந்துவிட்டது. “கோவிட் தொற்று இருக்கிறதோ இல்லையோ என் குடும்பம் உண்ண வேண்டுமெனில் வருடம் முழுவதும் நான் வேலை பார்க்க வேண்டும். இங்கு ஒரு நாளுக்கு 700 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.” ஆரம்பத்தில் நிலையான வேலை என எதுவும் அவருக்கு இருக்கவில்லை. நந்த்கிஷோர் மற்றும் ஷமீம் போல அவரும் பள்ளிக் கல்வி படிக்கவில்லை.

இன்னொரு தொழிலாளரான 27 வயது ஆஸ் முகமது உத்தரப்பிரதேசத்தின் அலிகரை சேர்ந்தவர். இடுகாடு வேலைகள் எல்லாவற்றையும் செய்பவர். ஆறு வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறார். ஆஸ்ஸின் குடும்பம் தூரத்து உறவினர் ஒருவரின் மகளை அவருக்கு நிச்சயித்திருக்கிறது.

“நான் அவளை காதலித்தேன். கடந்த வருடம் வந்த கோவிட் தொற்றுநோயில் அவள் இறந்துவிட்டால்,” என்கிறார் அவர். அவரின் குடும்பம் இன்னொரு பெண்ணை பார்த்தது. “இடுகாட்டில் வேலை பார்ப்பவரை மணம் முடிக்க முடியாது என அந்த பெண் நிராகரித்துவிட்டார்.

“சோகத்தில் இன்னும் அதிகமாக நான் வேலை பார்த்தேன். அதிக சவக்குழிகள் வெட்டினேன். அதிகமாக கற்களை செதுக்கினேன். நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை,” என்கிறார் ஆஸ். பேசுகையிலேயே அவர் கல்லை செதுக்கிக் கொண்டிருக்கிறார். கால் முதல் தலை வரை அவரையும் தூசு மூடியிருக்கிறது. மாதந்தோறும் 8000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

அருகே ஒரு பட்டாம்பூச்சி கல்லறைகள் மீது வைக்கப்பட்டிருக்கும் பூக்களை மொய்ப்பதா வேண்டாமா என தெரியாமல் பறந்து கொண்டிருந்தது.

நினைவுக்குறிப்பு எழுதும் நிசாம், “இறப்பவர்கள் இறக்கிறார்கள். அல்லாவின் கருணையால் அவர்களின் பெயர்கள் நான்தான் அவர்களுக்கு கடைசியாக கொடுக்கிறேன். இங்கு ஒருவர், யாருடைய நேசத்துக்கோ உரியவர் ஒருவர் இருக்கிறார் என குறிப்பிடுகிறேன்.” கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் கொண்ட அவரின் தூரிகைகள் அவரின் விருப்பத்துக்கேற்ப சித்திர எழுத்தை வரைகின்றன. அவர் எழுதும் கடைசி வார்த்தையின் கடைசி எழுத்தின் மேல் ஒரு புள்ளியை வரைகிறார். ‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சந்திக்கும்’ என இன்னொரு கல்லில் எழுதுகிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Amir Malik

Amir Malik is an independent journalist, and a 2022 PARI Fellow.

Other stories by Amir Malik
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan