கல்லியசேரிக்கு அருகில் உள்ள பரஸ்சினியில் உள்ள ஆலயம் வித்தியாசமானது. இது எல்லா ஜாதியினருக்கும் திறந்திருப்பது. இங்கே அர்ச்சகர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த ஆலய தெய்வம் முத்தப்பன், ‘ஏழைகளின் தெய்வம்’ என அறியப்படுபவர். வெண்கல நாய்களை வழிபாட்டு சிலைகளாகக் கருதும் ஆலயம் இது. அவருக்குக் கள்ளும், மாமிசமும் படையல்கள். கன்னூரில் இருக்கும் இந்த முத்தப்பன் ஆலயத்தின் மூலவரான முத்தப்பன் வேட்டையாடுபவர்களின் தெய்வம்.

193௦-களில் முத்தப்பன் வேட்டையாடப்படுபவர்களின் தெய்வமாகவும் திகழ்ந்தார். குறிப்பாக இடதுசாரி தேசியவாதிகள், கம்யூனிஸ்ட்கள் ஆங்கிலேய அரசிடம் சிக்காமல் தப்பி ஓடிக்கொண்டு இருந்த போது அடைக்கலம் தந்தது. “இந்தக் கோயில் எங்களுடன் கைகோர்த்துக் கொண்டு ஜன்மிக்கள் எனப்படும் நிலப்பண்ணையார்களை எதிர்த்தது. விடுதலைப்போரில் ஈடுபட்ட முக்கியமான இடதுசாரிகள் இங்கே அடைக்கலம் புகுவது அடிக்கடி நடந்தது.” என்கிறார் K.P.R. ராயரப்பன். இவர் விடுதலைக்கு முந்தைய, பிந்தைய எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

எப்படி இறை மறுப்பாளர்களும், பக்தர்களும் கைகோர்க்க முடியும்? அதற்கு ஒரு நியாயமான அடிப்படை இருந்தது. இரு தரப்பும் ஒரே வர்க்கத்தைத் தான் எதிர்த்தார்கள். ஆதிக்க ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே இரு தரப்பும் போராடியது. இரு தரப்பும் பண்ணையார்களின் கோபத்துக்கு ஆளானது. மேலும், தேசிய உணர்வு ஊறிப் பெருக்கெடுத்த காலத்தில் இயங்கிய இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இயங்கினார்கள்.

"பெரிய ஜன்மி இந்தக் கோயிலை கையகப்படுத்த முயன்றார். இந்த ஆலயத்துக்கு வந்து கொண்டிருந்த வருமானம் அவர் கண்ணை உறுத்தியது.” என்கிறார் ராயரப்பன். இன்றும் வார நாட்களில் முத்தப்பன் கோயில் 4,000 பேருக்கும், வார இறுதி நாட்களில் 6,000 பேருக்கும் அன்னதானம் இடுகிறது. இதனால் ராயரப்பன் சொல்வது உண்மை என்றே தோன்றுகிறது. இந்தப் பகுதியில் உள்ள எல்லாப் பள்ளி குழந்தைகளுக்கும் அனுதினமும் அன்னமிடுகிறது.

1930-40 களில் இப்படி அடைக்கலம் தருவது தேவையில்லாத ஆபத்துக்களைத் தேடிக்கொள்வது ஆகும். எனினும், கல்லியசேரி மக்களும், அவர்களின் அண்டை ஊரினரும் வேறுபட்டவர்கள். அவர்களின் அரசியல் விழிப்புணர்வு நெடிய வரலாறு உடையது. பாப்பினசேரியில் உள்ள நூற்பாலையை எடுத்துக்கொள்வோம். நாற்பதுகளில் ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரமான போராட்டம் இங்கே நடைபெற்றது. நாற்பத்தி ஆறில் நடந்த ஒரு போராட்டம் நூறு நாட்களைக் கடந்து நீடித்தது. பம்பாயில் நிகழ்ந்த ராயல் இந்திய கப்பற்படை எழுச்சிக்கு அனுதாபம் கொண்டு மக்கள் கிளர்ந்து எழுந்த போராட்டம் அது.

முப்பதுகளில் இருந்து ஆசிரியர்கள் இயக்கத்தை முன்னெடுத்தவர் பயநாடன் யசோதா. மலபாரின் அரசியலில் முக்கியப் பங்காற்றியவர், “எங்கள் பகுதியில் நாங்கள் இயங்க ஆரம்பித்த காலத்தில் ஒரு வருடம் முழுக்க 144 தடையுத்தரவு (ஊரடங்கு உத்தரவு) போடப்பட்டது.” என நினைவுகூர்கிறார்.

எது இங்கே நடந்த போராட்டங்களை மற்ற இடத்தின் போராட்டங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது? “நாங்கள் ஒன்றிணைந்து போராடினோம். அரசியல் தளத்தில் இயங்கினோம். எங்கள் குறிக்கோள்கள் தெளிவாக இருந்தன. மக்களிடையே விழிப்புணர்வும், பங்களிப்பும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது. நாங்கள் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டோம். நாங்கள் சமூகச் சீர்திருத்தம், ஜாதி எதிர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டோம்.” அதற்குப் பிறகு நிலவுரிமை போராட்டங்கள் நடைபெற்றன. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாக இருந்தன." என்கிறார் யசோதா.

கல்லியசேரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஐம்பது ஆண்டுகால விடுதலையைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட நூறு சதவிகித கல்வியறிவு உள்ளது, எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குப் போகிறார்கள். சில சமூக வள குறியீடுகள் மேற்கின் சமூகங்களோடு ஒப்பிடும் அளவுக்கு உள்ளது. இந்தச் சாதனைகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் செயல்பாடுகளின் பலன்கள் என்று கருதுகிறார்.

இது மிகைப்படுத்திச் சொல்வதாக இருக்கிறதே எனக் கேட்டோம். அதுவும் திட்டமிட்டுச் செயல்படும் அரசியல் இயக்கங்கள் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அதற்கு முன்னரே கேரளாவில் கல்வியறிவு அளவு அதிகமாக இருந்தது அல்லவா? தன்னுடைய மாவட்டத்தின் முதல் பெண் ஆசிரியரான யசோதா இப்படிப்பட்ட கேள்விகளை நிராகரிக்கிறார். “முப்பதுகளில் மலபாரின் கல்வியறிவு எட்டுச் சதவிகிதம். திருவிதாங்கூரில் நாற்பது சதவிகிதம். உண்மையில் எங்களுடைய இடைவிடாத முயற்சிகளால் இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம்.” என்கிறார்

அந்த வகையில் மலபார் இந்தியாவில் தனித்துவமான சாதனையைச் செய்திருக்கிறது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்த மலபார் அதை மிகக்குறைந்த காலத்தில் சரி செய்துள்ளது. “திருவிதாங்கூர், கொச்சின் ஆகிய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வெகுவாகப் பின்தங்கி இருந்த மலபார் திட்டமிட்ட அரசியல் செயல்பாட்டால் சாதித்திருக்கிறது. ஐம்பது, அறுபதுகளின் நில சீர்திருத்தங்கள் பல்வேறு கட்டமைப்புகளை அசைத்துப் பார்த்தன, சாதியை வெகுவாக அசைத்தது.” என்கிறார் ராயரப்பன். கல்வி, பொதுநலம் சார்ந்த குறியீடுகளும் வேகமாக முன்னேறின 1928-ல் வெறும் 24 வீடுகள் கல்லியசேரியின் 43% நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருந்தன. இப்போது பதிமூன்று குடும்பங்கள் மட்டுமே ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு உரிமையாளர்களாக உள்ளன. அவர்களின் பங்கு ஒட்டுமொத்த நிலப்பரப்பில் வெறும் 6% .

கல்லியசேரி மக்களின் உணவு வழக்கங்கள் வெகுவாக முன்னேறி உள்ளன. பால், அசைவம் உண்பது அதிகரித்து உள்ளது. ஒரு கூலித் தொழிலாளியை அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை அவர் உடுத்தும் ஆடையில் இருந்து கண்டறிய முடியாது.

எண்பதுகளில் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று கேரளா முழுக்க நிகழ்த்தப்பட்ட முயற்சிகள் பலன்கள் தந்தன. கேரள சாஸ்த்ரா சாஹித்ய பரிஷத்தின் செயல்பாடுகள் புதிய திறப்புகளைத் தந்தது. இவை அனைத்தும் வலிமையான உள்ளூர் அரசியல் பாரம்பரியத்தின் அடித்தளத்தின் மீது தங்களுடைய கோட்டைகளைக் கட்டி எழுப்பின. மலபாரும், கல்லியசேரியும் இதில் முன்னோடியாகத் திகழ்ந்தன.

"கல்லியசேரி 30கள், 40களில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டது. அது உற்பத்தியாளர், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களை அனைவருக்கும் திறந்து விட்டன. இது வெகுகாலத்துக்குப் பின்னர் வந்த நியாயவிலைக் கடைகளுக்கு முன்னோடி.” என்கிறார் கன்னூரில் உள்ள கிருஷ்ண மேனன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மோகன் தாஸ்.

"கடும் பஞ்சம், பசி நிலவி வந்த காலத்தில் இவை எழுந்தன. ஜன்மிக்கள் விவசாயிகளிடம் மேலும் மேலும் தானியங்கள் வேண்டும் என்று கடுமையாக நடந்து கொண்டார்கள். உண்மையில் ஜன்மிக்களே ஆங்கிலேய அரசின் கடுமையான தானிய இலக்குகளை அடைய போராடிக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்புவரை பஞ்சகாலத்தில் விவசாயிகள் தரவேண்டிய தானியங்களின் அளவில் சலுகைகள் தரப்பட்டது உண்டு. நாற்பதில் அவையெல்லாம் காணாமல் போய்விட்டன.

டிசம்பர் 1946-ல் நிலைமை மோசமானது. “மக்கள் ஜென்மிக்கள் கரிவேல்லூரில் தானியத்தைப் பிடுங்க முயன்ற போது எதிர்த்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு பெரும் அடக்குமுறை கையாளப்பட்டது. அது மக்களிடையே ஜென்மிக்கஓய்வு பெற்ற ஆசிரியரான அக்னி ஷர்மன் நம்பூதிரி. ளுக்கு எதிராகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.” என்கிறார் இந்த எழுச்சியே இப்பகுதியின் வெற்றிகரமான நிலசீர்த்திருத்த போராட்டத்துக்கு முன்னோடி.

கல்லியசேரியின் சாதனைகளோடு அதன் முன்னுள்ள சவால்கள் பெரிது. “விவசாயம் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. உற்பத்தி குறைந்து விட்டது. விவசாயக் கூலிகளுக்குப் போதுமான வேலையில்லை.” என்கிறார் ராயரப்பன்.

“நெல் வயல்களை வீடுகளாக மாற்றியதும், பணப்பயிர் பயிரிட பயன்படுத்தியதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஜன்மியின் நிலத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் பெரிய நிலத்தில் தான் கல்லியசேரியின் பாதி உணவுத் தேவை பூர்த்திச் செய்யப்பட்டது. இப்போது அது வீடுகள், பணப்பயிர் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகி விட்டது. ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. ஆனால், மிக மோசமான அளவு சேதாரம் நடந்து விட்டது.” என்று குமுறுகிறார் மோகன் தாஸ்.

வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது. வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களோடு ஒப்பிடும் போது பாதியாகவே உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. அதாவது வேலை செய்யக்கூடிய பெண்களில் பாதிப் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளிலேயே ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களுக்குச் சம்பளமும் குறைவாகவே கிடைக்கிறது.

அசரவைக்கும் சவால்கள். எனினும், மக்கள் அவநம்பிக்கை கொள்ளவில்லை. கேரளாவில் கிராம சுயாட்சி சார்ந்த பரிசோதனைகளில் கல்லியசேரியே முன்னணியில் உள்ளது. கேரளாவில் உள்ள மற்ற 9௦௦ பஞ்சாயத்துகள் போலத் தனக்கான வளர்ச்சி திட்டத்தைத் தானே தீட்டிகொண்டது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான செயல்கள் உள்ளூர் முதலீடு, தன்னார்வலர்களின் உழைப்பைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது.”மக்கள் பலவற்றைப் புத்தம் புதிதாகக் கட்டி எழுப்பி உள்ளார்கள். அதிலும் இந்தப் பஞ்சாயத்துக்கு என்று 62 கிலோமீட்டர் சாலைகளைத் தாங்களே கட்டியுள்ளார்கள்.” என்கிறார் ராயரப்பன்.

கிராமசபை கூட்டங்களில் மக்கள் பெருமளவில், ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள். கல்லியசேரியில் உள்ள 1,2௦௦ தன்னார்வலர்கள் இந்தியாவின் முதல் மக்கள் வள வரைபடத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடித்துள்ளார்கள் கிராமத்தின் இயற்கை, மனித வளங்கள் குறித்த தெளிவான பார்வை உள்ளூர் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றை எப்படிச் சேகரிப்பது என்பதற்கான வழிகாட்டுதல் அறிஞர்களிடம் இருந்து பெறப்பட்டது. கிராமத்துக்கான இந்த வரைபடத் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .

தன்னார்வலர் தொழில்நுட்ப படையினர் என்றொரு குழு உருவாக்கப்பட்டு அதில் ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகிறதா என்று கண்காணிக்கிறார்கள். இப்படிப்பட்ட உறுப்பினர்கள் மாநிலம் முழுக்க 5,௦௦௦ பேர் உள்ளார்கள்.

சவால்கள் ஏராளம். அதற்கான காரணங்கள் இந்தக் கிராமத்தின் எல்லையைத் தாண்டி உள்ளன. எனினும், கல்லியசேரி நம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கிறது. “நாங்க எப்பவும் போராடுவதை நிறுத்தியதில்லை” என்று ராயரப்பன் சொல்வது எத்தனை சத்தியமானது?

1947-க்கு பிறகும் நாளும் போராட்டம் தொடர்கிறது..

இந்த கட்டுரை முதன்முதலில்  The Times of India-ல் ஆகஸ்ட்  29, 1997-ல் வெளிவந்தது.

இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

கல்லியசேரிக்கு அருகில் உள்ள பரஸ்சினி கடவு ஆலயம் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டே இருந்த தேசியவாதிகளுக்கு 193௦-40 களில் அடைக்கலம் தந்தது. இந்த ஆலயத்தின் தெய்வமான முத்தப்பன், வேடர்களின் தெய்வம், இக்கோயிலில் வெண்கல நாய் சிற்பங்கள் உண்டு.

தமிழில்: பூ கொ சரவணன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan