சதி மணி இரவு கிளம்புவதற்கு முன் ஒருமுறை வீட்டை சுற்றி பார்த்துக் கொள்கிறார். முக்கியமான ஆவணங்களும் துணிகளும் நெகிழிப்பையில் வைக்கப்பட்டு சுவர்களில் தொங்குகின்றன. சமையல் பாத்திரங்கள் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் இருக்கும் சிமெண்ட் திண்டுகளில் இருக்கின்றன.

”பல முறை அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்திருக்கிறேன். வீட்டுக்குள் தண்ணீர் வந்திருக்கும். எவ்வளவு துவைத்தாலும் மாறாத கறைகளாலும் நாற்றத்தாலும் பல தலையணைகளையும் போர்வைகலையும் தூக்கி எறிந்திருக்கிறேன், என்கிறார் 65 வயது சதி. கொச்சியின் தேவரா பெரந்தூர் நீரோடையின் கரையில் இருக்கும் காந்தி நகரில் வசிக்கிறார்.

வடக்கே இருக்கும் பெருந்தூர் புழாவிலிருந்து தெற்கே கொச்சி வரை பெரந்தூர் புழா பாய்கிறது. கிட்டத்தட்ட 9.84 கிலோமீட்டர் தொலைவுக்கு பாயும் நீரோடை அது. கொச்சியின் 11 பிரதான நீர்வழிப்பாதைகளில் அதுவும் ஒன்று. எர்ணாகுளத்தை சுற்றி இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய அரசு அந்த நீர்வழிப்பாதை சரியான தீர்வாக இருக்குமென அரசு சொல்லி வருகிறது.

கடந்த முப்பது வருடங்களில் கொச்சி நகரத்தின் மக்கள்தொகை இரட்டிப்பாகி 21 லட்சமாகி விட்டதால், ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தை கொண்டிருக்கும் நீரோடை திறந்தவெளி சாக்கடையாக மாறி வருகிறது. இரு இடங்களில் மெட்ரோ கட்டுமான வேலைகளாக அடைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை கழிவுகளும் நீரோடைக்கு பக்கத்தில் இருக்கும் உள்ளூர் சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் யாவும் அவற்றின் குப்பைகளை நீரோடைக்குள்தான் கொட்டுகின்றன. கிட்டத்தட்ட 632 குழாய்களும் 216 சாக்கடை கால்வாய்களும் தொழிற்சாலை கழிவுகளும் மழைநீரும் நேரடியாக நீரோடைக்குள்தான் கலக்கின்றன. குப்பைகள் கரைகளில் தேங்கியிருப்பதால் நீரோடையின் அகலம் பல இடங்களில் வெறும் 8 மீட்டர்களுக்கு சுருங்கியிருக்கிறது.

சதியின் வீடு நீரோடையின் கரைப்பகுதியில் எர்ணாகுளம் ரயில்வே நிலையத்துக்கு பின் இடம்பெற்றிருக்கிறது. அவர் வசிக்கும் பி&டி காலனி கிட்டத்தட்ட 250 மீட்டர் நீளத்துக்கு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. உடனடியாக மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு வீட்டை பொறம்போக்கு நிலத்தில் அமைத்துக் கொள்வது வாடகைக்கு வசிப்பதை காட்டிலும் செலவு குறைந்த விஷயம் என்கிறார்கள் இங்கு வசிப்பவர்கள். வைக்கோல் கூரை மற்றும் தார்பாலினில் அமைக்கப்பட்ட வீடுகளை இருபது வருடங்களுக்கு முன்பு உள்ளூர் பாதிரியார்களின் உதவி கொண்டு பாதி கான்கிரீட் வீடுகளாக தகரக் கூரைகளை வைத்து அவர்கள் அமைத்துக் கொண்டனர்.

'I have woken up many times to find water flooding my home', says Sathi; she and her husband Mani live next to this canal where all the waste of the area is dumped
PHOTO • Adarsh B. Pradeep
'I have woken up many times to find water flooding my home', says Sathi; she and her husband Mani live next to this canal where all the waste of the area is dumped
PHOTO • Adarsh B. Pradeep

‘வீட்டுக்கள் தண்ணீர் வந்து பலமுறை நான் தூக்கம் கலைந்திருக்கிறேன்,’ என்கிறார் சதி. அவரும் கணவர் மனைவியும் குப்பைகள் கொட்டப்படும் நீரோடைக்கு அருகே வசிக்கின்றனர்

“நான் இங்கு முதன்முதலாக வந்தபோது நீரோடை சுத்தமாக இருந்தது. அவ்வப்போது நல்ல அளவுக்கு மீன்கள் பிடித்திருக்கிறோம். பலர் அந்த மீன்களை விற்றிருக்கிறார்கள். இப்போது மீன்கள் இல்லை. சாக்கடை குழாய்கள் மட்டும்தான் இதில் பாய்ந்து கொண்டிருக்கின்றன,” என்கிறார் சதி, வீட்டுக்கு பின் நீரோடையில் இருக்கும் அழுக்கான தண்ணீரை காட்டியபடி. எல்லா வீடுகளின் சமையலறை மற்றும் கழிப்பறை கழிவுகள் நேரடியாக நீரோடைக்குள் கலக்கின்றன. “ஒவ்வொரு முறை நான் அழுக்க நீரில் கால் வைக்கும்போதும் காலில் வெடிப்புகள் தோன்றுகின்றன,” என்கிறார்.

வீட்டுவேலை பார்த்துக் கொண்டிருந்தவர் சதி. “இரண்டு வீடுகளின் வேலை பார்த்து மாதந்தோறும் 4500 ரூபாய் நான் சம்பாதித்தேன். நீரோடை நிரம்பி வெள்ளம் வருகையில் வீட்டை விட்டு நான் வெளியேற முடியாது. அந்த நாளுக்கான கூலியும் பறிபோகும். நீரடித்து வரும் கிழிந்த நெகிழிகள், சாக்கடை மற்றும் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தின் க்ரீஸ் முதலியவற்றை என் வீட்டிலிருந்து அகற்றுவதில் அந்த நாள் எனக்கு போய்விடும்,” என்கிறார் அவர்.

அவரின் கணவர் 69 வயது கே.எஸ்.மணி தினக்கூலியாக வேலை பார்த்தார். யாத்திரை காலத்தில் 160 கிலொமீட்டர்கள் தொலைவில் இருக்கும் சபரிமலை கோவிலுக்கு வெளியே சிறிய ஒரு டீக்கடையை வாடகைக்கு எடுத்து நடத்துவார். அவரின் வழக்கமான வருமானமான 3000 ரூபாய் என்பது யாத்திரை காலமான நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை 20,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்கிறார் சதி.

பல வருடங்களாக மணி படுத்தபடுக்கையாக கிடக்கிறார். சர்க்கரை வியாதி கொண்ட அவர், ஒரு தொற்றால் சில வருடங்களுக்கு முன் இடது காலை இழக்க வேண்டியிருந்தது. அவருக்கு இருக்கும் ஆஸ்த்மா மற்றும் சர்க்கரை வியாதிகளுக்கான மருந்துகளுக்காக மாதந்தோறும் 2000 ரூபாய் செலவழிக்கின்றனர். “நாங்கள் இருவருமே அரசின் முதியோர் ஓய்வூதியமான 1400 ரூபாய்க்கு தகுதியானவர்கள். மணிக்கு வந்த நான்கு மாத ஓய்வூதியத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அவரின் கை சரியாக வேலை செய்யாததால் அவரின் பெயரை சரியாக கையெழுத்தில் போட முடியவில்லை,” என்கிறார் சதி. சதிக்கு வரும் ஓய்வூதியம் மட்டும்தான் குடும்பத்துக்கான வருமானம். அதற்கும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூனியன் வங்கிக்கு செல்ல வேண்டும். இதுதான் அவர்.

கொச்சியின் வடக்கே இருக்கும் பரவூரை சார்ந்த சதி, 46 வருடங்களுக்கு முன் மணியை திருமணம் செய்து கொண்ட பின் பி&டி காலனிக்கு வாழ வந்தார். “இந்த இடம் எங்களுக்கு நகரத்துக்கு செல்வதற்கு சுலபமான இடமாக இருந்தது. பயணச்செலவுகள் கூட எங்களுக்கு மிச்சமானது,” என்கிறார் சதி.

Left: during high tide, the canal overflows. Right: Invasive weeds grows in the stagnant water, where mosquitoes, files, snakes and rats proliferate
PHOTO • Adarsh B. Pradeep
Left: during high tide, the canal overflows. Right: Invasive weeds grows in the stagnant water, where mosquitoes, files, snakes and rats proliferate
PHOTO • Adarsh B. Pradeep

இடது: நீர்ப்பெருக்கு அதிகரிக்கையில் நீரோடை நிரம்பி வழியும். வலது: கொசுக்களும் ஈக்களும் பாம்புகளும் எலிகளும் பெருகும் வாய்ப்பை கொடுக்கும் கொடிகள் தேங்கிய நீரில் வளர்கின்றன

61 வயது துளசி கிருஷ்ணன் மணியின் சகோதரி. அண்டை வீட்டுக்காரர். “முதன்முதலாக நாங்கள் 50 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தபோது சில வீடுகள்தான் இருந்தன. இப்போது 85 வீடுகள் இருக்கின்றன. 81 குடும்பங்கள் வாழ்கின்றன,” என்கிறார் அவர். உள்ளூர் தேர்தலுக்காக நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று இங்கு வசிப்பவர்களுக்கு காலனி பற்றிய தகவல்களை கொடுத்திருக்கிறது.

எலும்புப்புரை நோய் இருப்பதால் துளசிக்கு எழுந்து நிற்பதும் நடப்பதும் கஷ்டம். “பெரிதாக மழை பெய்கையில் நீரினூடாக நடந்து பிரதான சாலையை அடைவது எனக்கு கஷ்டமாக இருக்கும். எனவே நானும் என் கணவரும் என் மகளின் வீட்டுக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். ஆனால் அவர்களுடன் எத்தனை காலத்துக்கு நாங்கள் தங்கியிருப்பது?” என்கிறார் அவர். அவரின் மகளான ரேகா சஜன், பி&டி காலனியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காந்தி நகரில் வசிக்கிறார்.

காலனியின் நிலம் நகராட்சியின் கொச்சி பெருநகர வளர்ச்சி ஆணையத்தை (GCDA) சேர்ந்தது. ‘பி’ என்பதும் ‘டி’ என்பதும் மின்சாரத்தையும் தொலைத்தொடர்பையும் குறிப்பதாக அங்கு வசிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். 50 மீட்டர் தொலைவில் ஒரு பிஎஸ்என்எல் நிலையமும் இருக்கிறது.

72 வயது ஆஜீரா தனியாக வீட்டில் வாழ்ந்து வருகிறார் அவரின் காலம் சென்ற மகள் மற்றும் மருமகனுக்கு உரிமையான வீடு அது. சாலையருகே ஒரு சிறு காய்கறி கடையை கொண்டிருந்ததாகவும் அரசு அதை காலி செய்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டிலிருந்து சில பொருட்களை தற்போது விற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு நாளுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறார். “பலரும் இங்கு கடனில் வாங்கிச் செல்வதால் யாரென்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. செயல்படாத கால் மற்றும் சுவாசக் கோளாறு ஆகியவற்றை வைத்துக் கொண்டு, அதிக பொருட்களை  வாங்க நடப்பதும் எனக்கு மிகவும் சிரமம்,” என்கிறார் அவர்.

தென்மேற்கு பருவமழையில் சராசரியாக கேரளா 2855 மிமீ மழையை (ஜூனிலிருந்து செப்டம்பர் வரை) பெறுகிறது. பெருமழை கொச்சி தெருக்களின் சாக்கடையை சேறு மற்றும் நெகிழி கொண்டு நிரப்புகிறது. சாலையில் நிரம்பிய நீர் ஓடி வந்து நீரோடையில் கலந்து நீரோடையில் நீர்ப்பெருக்கு அதிகரித்து அழுக்கு நீர் பி&டி காலனியில் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. நீர்ப்பெருக்கு வழக்கமாக சாக்கடையை அடித்து செல்ல வேண்டும். ஆனால் கரையோரங்களில் அதிக கட்டுமானங்கள் மற்றும் உயரம் குறைந்த பாலங்கள் முதலியவற்றால் கடலுக்கு செல்வது தடைபட்டு நீரோடையின் பல இடங்கள் அப்படியே தேக்கம் கண்டுவிடுகின்றன.

Left: Mary Vijayan remembers a time when her brothers swam in the canals. Right: Aajira's small grocery store was demolished by the government
PHOTO • Adarsh B. Pradeep
Left: Mary Vijayan remembers a time when her brothers swam in the canals. Right: Aajira's small grocery store was demolished by the government
PHOTO • Adarsh B. Pradeep

இடது: மேரி விஜயன் அவரின் சகோதரர்கள் நீரோடையில் நீச்சலடித்த காலத்தை நினைவுகூர்கிறார். வலது: ஆஜிராவின் சிறு காய்கறி கடை அரசால் காலி செய்யப்பட்டது

தேங்கும் நீரால் எளிதாக பல கொடிகள் வளர்ந்து நீரோட்டத்தை இன்னும் தடை செய்து விடுகின்றன. கொசுக்களும் ஈக்களும் உற்பத்தியாகும் இடங்களாக அவை மாறி விடுகின்றன. கழிவறை குழாய்களின் வழியாக பாம்புகளும் எலிக்களும் அவ்வப்போது வீடுகளுக்கு வருகை தருவதுண்டு. “என்னுடைய பீரோவுக்குள் எலிகள் நுழைந்து என் துணிகளை நாசம் செய்துவிட்டன,” என்கிறார் சதி.

கேரளாவின் உள்ளூர் படகு மற்றும் பயண அமைப்பு நடத்திய 2017ம் ஆண்டின் ஆய்வுபடி நீரோடை குறைந்த உயர பாலங்கள், ஆக்கிரமிப்புகள் வசிப்பிடங்கள் முதலியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் “நீர்வழிப்பாதையாக ஆக்கவும் போக்குவரத்துக்கான சாத்தியத்தையும் உருவாக்கவும் நீரோடை அகலப்படுத்தப்பட வேண்டும்” என்றும் குறிப்பிடுகிறது.

சதியின் அண்டை வீட்டுக்காரரான மேரி விஜயன், அவரின் சகோதரர்கள் நீரோடையில் நீச்சலடித்த காலத்தை நினைவுகூர்கிறார். அவரும் கணவர் விஜயனும் 30 வருடங்களாக காலனியில் வசிக்கின்றனர். அவரின் கணவர் ரயில் நிலையத்தில் சுமைதூக்கியாக பணிபுரிகிறார். திருமணமான பிறகு கொச்சியிலிருந்து இங்கு அவர்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். “பெருந்தூர் புழாவின் கிளைதான் இந்த நீரோடை. இங்கு வந்து மக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் தொடங்கினார்கள். நீர் மிகவும் சுத்தமாக இருந்தது.  நீருக்கடியில் 1 ரூபாய் நாணயம் கிடந்தாலும் தெளிவாக தெரியுமளவுக்கு இருந்தது. இப்போது பிணமே கிடந்தாலும் கண்டுபிடிக்க முடியாது,” என்கிறார் 62 வயது மேரி.

அவரை நாங்கள் சந்தித்தபோது லாட்டரி சீட்டுகளை வீட்டுத்தரையில் அமர்ந்து எண்ணிக் கொண்டிருந்தார். “ரயில் நிலையத்தை சுற்றி இந்த சீட்டுகளை விற்று 100லிருந்து 200 ரூபாய் ஒரு நாளுக்கு சம்பாதித்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். தொற்றுக் காலம் தொடங்கியதிலிருந்து சீட்டுகள் விற்பனை குறைந்துவிட்டது..

“அரசு, பல வருடங்களாக காலனியில் வசிப்பவர்களை முண்டம்வெளிக்கு (10 கிலோமீட்டர் தொலைவு) நிரந்தரமாக இடம்பெயர்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது,” என்கிறார் தினக்கூலியான அஜித் சுகுமாரன். “எனக்கு பத்து வயது கூட ஆகாத காலத்திலிருந்த அந்த திட்டத்தை நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன. எதுவும் நடக்கவில்லை.” அஜித்தின் மனைவி சவுமியா வீட்டுவேலை பார்த்து மாதம் 6000 ரூபாய் சம்பாதிக்கிறார். அஜித் நாட்கூலியாக 800 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் மாதத்தில் 15 நாட்களுக்கு வேலை கிடைப்பதே கஷ்டம். அடுத்த வீட்டில் இருக்கும் அஜித்தின் பெற்றோரான 54 வயது தாய் கீதா மற்றும் 60 வயது தந்தை கே.சுப்ரமணியம் ஆகியோரையும் இருவரும் பார்த்துக் கொள்கின்றனர்.

Left: A bridge on the canal that reduces its width and slows down the flow of water. Right: Waste dumped by Kochi city residents on the canal banks
PHOTO • Adarsh B. Pradeep
Left: A bridge on the canal that reduces its width and slows down the flow of water. Right: Waste dumped by Kochi city residents on the canal banks
PHOTO • Adarsh B. Pradeep

இடது: நீரோடைக்கு மேல் இருக்கும் பாலம் அதன் அகலத்தை குறைத்து நீரோட்டத்தை பாதிக்கிறது. வலது: கொச்சி நகரவாசிகள் நீரோடையின் கரைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்

“2018ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, கவுன்சிலர் பூர்ணிமா நாராயண் (காந்தி நகர் வார்டு கவுன்சிலராக 2015லிருந்து 2020 வரை இருந்தவர்) ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒருவரை முண்டம்வெளிக்கு கொண்டு செல்ல பேருந்து ஏற்பாடு செய்தார். போக்குவரத்துக்காக ஒவ்வொரு குடும்பத்திலிருந்து 100 ரூபாய் வசூலித்தனர். அங்கு கட்டடத்துக்கான ஆரம்பக் கல்லை நட்டனர். 10 மாதங்களில் கட்டப்பட்டுவிடும் என உறுதியளித்தார் பினராயி விஜயன் (அப்போதைய முதல்வர்),” என நினைவுகூர்கிறார் சதி

மூன்று வருடங்கள் கடந்தன. அவ்வப்போது நிவாரண முகாம்கள் மட்டும் நடத்தப்பட்டதாக வசிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். 2019ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் 2375.9 மிமீ அளவுக்கு கனமழை பெய்தது (வழக்கமான தென்மேற்கு பருவமழை அளவான 2038 மிமீ விட 17 சதவிகிதம் அதிகம்). ஆகஸ்ட் 8 முதல் 15 வரை வெள்ளம் கரைபுரண்டோடியது. தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். நீரோடையில் பெருவெள்ளம் ஓடியது. ”அண்டைவீட்டாரும் நானும் சேர்ந்து எங்களின் தோள்களில் மணியை சுமந்து நிவாரண முகாமுக்கு கொண்டு சென்றோம்,” என்கிறார் சதி. எங்களின் வீடுகளுக்கும் வேலிகளுக்கு இடையே இருவர் நடப்பதற்கு இடம் இல்லாத காரணத்தால் அது மிகவும் சிரமான விஷயமாக இருந்தது.”

டிசம்பர் 2020ல் நடந்த உள்ளூர் தேர்தல்களின்போது 10 மாத காலத்தில் சரியாகிவிடுமென கொடுக்கப்பட்ட வாக்குறுதியை வேட்பாளர்கள் மேலே கொண்டு வந்தனர். இறுதியில் கொச்சி பெருநகர வளர்ச்சி ஆணையம் முண்டம்வெளியில் நிலமற்றோருக்கும் வீடுகட்ட முடியாதோருக்கும் உதவும் வகையில் ‘லைஃப் மிஷன்’ திட்டத்தின் கீழ் 88 குடியிருப்புகளை கட்ட முடிவெடுத்தது. ஆனால், திட்டத்துக்கென பொருட்களை கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் திவாலாகிப் போனதில், திட்டங்கள் நின்று போயிருக்கின்றன. “தற்போது ஒரு புதிய திட்டத்துக்கான வரைவு உருவாக்கப்பட்டு பரிசோதித்திருக்கிறோம். கேரள அரசின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்,” என்கிறார் வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் வி.சலீம்.

காலனியின் வசிப்பவர்களுக்கோ இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. “நாங்கள் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ள கூட யாரும் வருவதில்லை,” என்கிறார் துளசி. “முண்டம்வெளிக்கு நாங்கள் சென்ற பயணம் எங்களின் நினைவுகளிளிருந்து மறைந்ததை போலவே அதிகாரிகளும் மறைந்துவிட்டனர்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Adarsh B. Pradeep

Adarsh B. Pradeep is studying print journalism at the Asian College of Journalism, Chennai

Other stories by Adarsh B. Pradeep
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan