கந்தன் கோராவின் வீட்டில் உள்ள இருட்டறையில் இருக்கக்கூடிய பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் மீன்தொட்டிகளில் தேவதை மீன், மயில் மீன், கப்பீஸ், மோலி மற்றும் இதர மீன்கள் நீந்துகின்றன. இதுகுறித்து கூறிய அவர், “இது ஆத்மார்த்தமான வேலை. அவைகளைக் குழந்தைகள் போன்று வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தின்  தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள உதய்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மீன்வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த ஊர் தெற்கு கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவரது குடும்பம் முழுவதும் அலங்கார மீன்வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது குடும்பத்தைப் போலவே கோரா பரா, மண்டல் பரா மற்றும் மிஸ்திரி பரா ஆகிய மூன்று குக்கிராமங்களைச் சேர்ந்த 50-60 குடும்பங்களும், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 540 குடும்பங்களும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் மதிப்பிட்டுக் கூறினார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள்,  கிட்டத்தட்ட 200 வகையான வண்ணமயமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலங்கார மீனினங்களை நாடுமுழுவதும் உள்ள அலங்கார மீன் ஆர்வலர்களிடம் விற்பதற்காக வளர்த்து வருகின்றனர்.

PHOTO • Barnamala Roy

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய மண் பாத்திரத்தில் அலங்கார மீன் வளர்ப்பது தொடங்கி குளங்களில் வளர்ப்பது வரை கந்தன் கோராவின் குடும்பம் மீன்வளர்ப்பில்  முன்னேறி வருகின்றனர்

அவர்களது குடிசைகளுக்கு பக்கவாட்டில் உள்ள தென்னை மற்றும் பாக்கு மரங்கள் குளங்களின் மீது பசுமையினைப் போர்த்துகின்றன. அதனைச் சுற்றி பல வீடுகளைச் சார்ந்த கோழிகள் சுற்றித் திரிகின்றன. நண்பகல் சமயத்தில்  அவர்களது குழந்தைகள் சைக்கிளில் பள்ளியிலிருந்து வீடு திரும்புகின்றனர். சிலசமயம், கொல்கத்தாவின் கலிப் தெருவில் உள்ள செல்லப்பிராணிகள் சந்தையில் விற்பதற்காக மீன்களை வாங்க வரும்  முக்கிய வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன்னர்  மீன்களை தங்களுக்கு பரிச்சயம் ஆக்கிக் கொள்கிறார்கள்.  கலிப் தெரு அலங்கார மீன்களை வாங்குவதற்காக ஞாயிறுகளில் வாடிக்கையாளர்கள் குவியும் இடமாகும்.

கந்தன் வீட்டின் பின்புறம், அவரது குடும்பத்திற்கு  சொந்தமான  குளங்கள்  வலைகளால் மூடப்பட்டுள்ளது. அது தவிர மற்றவை மீன்வளர்க்கும் பிறருக்கு சொந்தமானவை ஆகும். “மீன்வளர்ப்பு உச்சத்தில் இருக்கும்  மழைக்காலத்தில் முழுவதுமாக  பிரவாகிக்கும் குளத்தை அதற்கேற்றவாறு தயார்ப்படுத்த வேண்டூம்”. என அவர் கூறினார்.  அவரது சிறிய வீட்டிற்குள்ள அறையில் வளர்ப்பதற்கு தேவையான மீன்வகைகளை வளர்த்து வருகிறார். பெரும்பாலான மீன்முட்டைகள் அழிந்து விடுவதால், சந்தையில் விற்கக்கூடிய மீன் அளவும் வேறுபடும்: ஒரு வாரத்திற்கு சராசரியாக 1,500 ருபாய் கிடைக்கிறது என அவர் குறிப்பிட்டார். “இந்த வியாபாரத்தின் வழியாகக் கிடைக்கும் வருமானம் ஏற்ற இறக்கம் கொண்டதாக உள்ளது. அதனால் மாதவருமானம்  6000-7000 ரூபாயைத் தாண்டியதே இல்லை” என கந்தன் கூறினார்.

மீன்களை வளர்ப்பது மற்றும் அவைகளைச் சந்தைக்கு தயார் செய்வது என்பது பல தலைமுறைகளாக  உதய்ராம்பூரில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கைதேர்ந்த  கலையாகும். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் மீன்களை எவ்வாறு கவனிப்பது என்பதனை அறிந்து வைத்துள்ளனர்.  மேலும், மீன்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டாலும் கூட அதனைக் கண்டறிவதற்கும் கூட அனைவரும் அறிந்துள்ளனர். “மீன்கள் நோயுற்றாலோ அல்லது காயப்பட்டலோ, நீரின்  மேற்பரப்பில் நீந்தும். அவை உணவு எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடும். சில வெளிர் நிறமாகவும், அதன் வால் பகுதி வெள்ளை நிறமாகவும் மாறுகின்றன ” என்று கந்தன் கூறினார்.  மேற்கொண்டு கூறுகையில், ”மீன்களுக்கான மருந்துகள் அம்தலா பகுதியில் உள்ள உள்ளூர் கடைகளிலேயே கிடைக்கிறது. அவைகளின் உடல் நலனை சரிசெய்வதற்கு, அவற்றைத் தனியே தனிப்பாத்திரத்தில் வைக்கின்றோம்.  அவைகள் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவை நிறுத்திவிட்டு, கடுமையான மருத்துவ  உணவை அளிக்கிறோம்” என்றார் கந்தன்.

PHOTO • Barnamala Roy

கந்தன் கோரா அவரது மனைவி புதுல் (இடது) மற்றும் மகள் திஷாவுடன்(வலது):  'நான் வீட்டிலிருந்து பாடம் கற்று கொடுத்துக்கொண்டு, மீன்களை வளர்ப்பேன்'

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னர் மீன்வளர்ப்பு பயணத்தைத் தொடங்கிய கந்தன் கோராவின் குடும்பம்,   சாதாரண  மண் பாத்திரத்தில் மீன்வளர்க்கத் தொடங்கி,  பின்னர் மண்ணாலான மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் (அல்லது மைலா)  மீன் வளர்த்து, தற்போது குளங்களிலும்,உட்புற அக்வாரியங்களில் மீன் வளர்ப்பது வரை வளர்ச்சியடைந்துள்ளனர். கந்தனுக்கு மீனின் மீதான காதல் அவரது  தந்தையிடம் இருந்து வந்ததாக அவர் தெரிவித்தார், இது குறித்து கூறிய அவர்,  “இந்த உலகில் நாங்கள் சம்பாதிக்கும் ஒரே வழி இது தான். அதை நாங்கள் கைவிட்டுவிட முடியாது. எங்கள் குழந்தைகள் நகரத்தில் படிக்கின்றனர். எனினும், இறுதியில் அவர்களும் இந்த வர்த்தகத்திற்கு திரும்புவார்கள்.” என்றார்.  அவரது மனைவி புதுலும் இதனை ஏற்றுக்கொண்டார்: அவரும் கூட மீன் வளர்க்கும் குடும்பத்திலிருந்து வந்தவரே ஆவார்.

அவரது மகள் திஷா வித்யாநகர் கல்லூரியில் தத்துவவியல் பட்டபடிப்பு படித்து வருகிறார். நாங்கள் அங்கு சென்றிருந்த போது, அவரது அறைக்கு முன்புறமுள்ள திண்ணையில் சில குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.  இதுகுறித்து கூறிய அவர், “மீன்களைப் பார்த்துக் கொண்ட பிறகு, அனேகமாக நான்  என் வீட்டில் குழந்தைகளுக்கு  பாடம் சொல்லிக்கொடுப்பேன்” என்றார்.

PHOTO • Barnamala Roy

உதய்ராம்பூரில் வசிக்கக்கூடியவரான தருபாலா மிஸ்திரி தங்கத்திலான  மீனைப் போன்றக் காதணியை அணிந்துள்ளார்.  'இந்த வேலையின் வழியாக நாங்கள் சம்பாதிப்பது எங்கள் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை . ஆனால், இதைவிட்டால் எங்களுக்கு வேறு எந்த வழியுமில்லை' என்றார்

மேற்கொண்டு, கிராமத்தை நோக்கி நாங்கள்  செல்லுகையில், ஆண்களும் பெண்களும் முழங்கால் அளவு தண்ணீரில் இளம் மீன்களுக்கு  உணவாக வழங்குவதற்காக  குளத்தின் மேற்பரப்பில் உள்ள பூச்சிகளை வலைகளில் சேகரித்தபடி  நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம்.  அந்த மீன்கள் பெரிதானதும் கசடு புழுவை உணவாக உட்கொள்கின்றன. இந்த  இரண்டு புழுக்களும் நீரின் மேற்பரப்பில் ஆடையைப் போன்று மிதக்கின்றன.  அந்த வழியாக நாங்கள் சென்று கொண்டிருந்த போது விறகுகளை எடுத்துக்கொண்டுச் சென்ற தருபாலா மிஸ்திரியைச் சந்தித்தோம். அவர் கூறுகையில், “இந்த வேலையின் வழியாக நாங்கள் சம்பாதிப்பது எங்கள் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை . ஆனால், இதைவிட்டால் எங்களுக்கு வேறு வழியுமில்லை “ என்றார். அவரது (அவரது சமூகத்தின்) மீன் மீதான காதல் அவரது காதணிகளில் எதிரொலிக்கிறது.

இவரைப் போன்றே மீன் வளர்க்கக்கூடிய மற்றொருவரான, உத்தம் மிஸ்திரியின் வீட்டில், மீன்களை கிணற்றில் வளர்த்து வருகிறார்: இது மீன்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க போதிய இடம் அளிக்கின்றன. அவர் சண்டை மீன்களை வளர்ப்பதில் சிறந்து விளங்குகிறார்.  இளம் மீன்களை மண் பானைகளிலும், வளர்ந்த மீன்களை பாட்டில்களில் வரிசையாக அடுக்கி வைத்து நிழலிலும் பாதுகாத்து வைக்கிறார். நாங்கள் அங்கு சென்றிருந்த போது உத்தம் மீன்களுக்கான வார உணவான கசடுப் புழுக்களை பாட்டில்களில்  போட்டுக் கொண்டிருந்தார்.  இதுகுறித்து கூறிய அவர், “ அவை அடிக்கடி சாப்பிட்டால் , சீக்கிரம் இறந்துவிடும்” என்றார்.

இடது: உத்தம் மிஸ்திரி சண்டை மீன்களுக்கான வார உணவான கசடு புழுக்களை அளிக்கிறார். வலது: இளம் சண்டை மீன் மற்றும் அதன் உமிழ்நீரால் உண்டாக்கும் குமிழிக்கூடு

சுற்றுப்புறங்களில்  மீன் வளர்ப்பவர்கள், உள்ளார்ந்த புரிதலோடு யார் எந்த மீனைப் பெரிய அளவில் வளர்த்து வியாபாரம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து எவ்வித பிரச்னைகளும் இன்றி சமஅளவில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மிஸ்திரி, கோராவைப் போன்று மீன்களை விற்க கலிஃப் தெரு சந்தைக்குச் செல்வதில்லை; அவர் அவற்றை சில்லறை விற்பனையாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

மண்டல் பராவை நோக்கி செல்லும் வழியில், களைகளைப் பிடுங்கிக்கொண்டிருந்த  கோலக் மண்டலை கடந்து சென்றுக் கொண்டிருந்தோம். அருகில்,  பப்பாளி மரமொன்று குளத்தின் மீது நிழலைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்தக் குளத்தில் பெண்கள் புழுக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். கோலக்  அவர் வளர்த்து வரும் கப்பிகள் மற்றும் மோலி மீன்களைக் காட்டினார். இவர் தொட்டிகளிலும், சில பாத்திரங்களிலும், அவர் குடும்பத்திற்கு சொந்தமான சிறிய நிலத்தில் உள்ள குளத்திலும் மீன்களை வளர்த்து  வருகிறார். மேலும், சண்டை மீன்களை அவரது சிறிய வீட்டின் கூரைப்பகுதியில் பாட்டில்களில் வைத்தும் வளர்த்து வருகிறார்.

PHOTO • Barnamala Roy

பாப்பா மண்டல் ஒளிர் ஆரஞ்சு நிற மோலிகள் உட்பட பலவகை மீன்களை வளர்த்து வருகிறார்(வலது). மேலும், அதிக அளவிலான நிலத்தை பெறுவதன் வாயிலாக தனது மீன் வளர்ப்பை அதிகரிக்க முடியுமென அவர் நம்பிக்கைக் கொண்டுள்ளார்

மண்டல் வளர்க்கும்  தங்கம் மற்றும் தேவதை மீன் ஒன்று  முறையே   5 மற்றும் 2 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது..  இதேவேளையில் சண்டை மீன் மற்றும் 100 கப்பி மீன்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டை 150 ரூபாய்க்கும் விற்றுவருகிறார். இதுகுறித்து கூறிய அவர்,“எங்கள் லாபம் நிச்சயமற்றதாக உள்ளது. ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதில்லை “ என்று கூறிய அவர், “சிலசமயங்களில், நஷ்டத்திற்கு தான் மீன்களை விற்கிறோம்” என்று குறிப்பிட்டார்.  குடும்பத் தொழிலான மீன் வளர்ப்பை  அதிகப்படுத்துவதைக் கனவாகக் கொண்டுள்ள மண்டல், அதற்காக  அருகில் உள்ள நிலங்களை வாங்குவதின் வாயிலாக மீன் வளர்ப்பையும் அதிகப்படுத்த விரும்புகிறார்.

அவரது மகன் பாப்பா,27 , தானியங்கி மோட்டார் வாகன நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் வேளையிலும், மீன்வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட திட்டம் கொண்டுள்ளார். “தகுதி வாய்ந்த நபர்களுக்கே நகர்புறத்தில் வேலைக்கிடைக்காத போது , நாங்கள் அதிக நம்பிக்கைக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் நன்றாக உள்ளோம். குறைந்தபட்சம் நாங்கள் மேற்கொள்ள ஒரு தொழில் உள்ளது.” என்று கூறினார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்.

Barnamala Roy

Barnamala Roy has a postgraduate degree in English from Presidency University, Kolkata; she has worked as a sub-editor at ‘Kindle’ magazine, and is a translator and freelance writer.

Other stories by Barnamala Roy
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan