தாதர் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவொன்றின் சாலையோரத்தில், ஒவ்வொரு காலைப் பொழுதின் போதும் சிவம் சிங் சிவப்புநிறக் கம்பளம் ஒன்றை விரித்துப்போடுகிறார்.  நான்கைந்து அடி உடைய அந்தக் கம்பளத்தின் மீது கவனத்தோடு ஐந்து பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு ,அதில் ஒரு நாற்காலியின் மீது சட்டகமிடப்பட்ட பெண்கடவுள் லக்ஷ்மியின் படத்தினை வைத்து, சில ஊதுபத்திகளைக் கொளுத்தி வைக்கிறார்.

இவ்வாறு அங்குள்ள அரச மரத்தின் அடியில் அவரது கடையை அமைக்கிறார். அந்த மரத்தின் கிளையில் “சிவம் மெஹந்தி கலைஞர்” என்று கூறக்கூடிய பேனர் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள நாற்காலிகளின் மீது மெஹந்தி போடப்பட்ட கைகள் மற்றும் பாதங்களின் படங்களைக் கொண்ட பேனர் மற்றும் பல்வேறு புகைப்படத் தொகுப்புகள் பரப்பி வைத்த அவர், அதன்பின்னர், அன்றைய நாளின் முதல் வாடிக்கையாளருக்கு போடுவதற்கான- பூ,பைஸ்லி மற்றும் வோர்ல்ஸ் போன்ற வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார் அல்லது சிலசமயம் வாடிக்கையாளர்களின் கைகளைக் கண்டு வியந்து புதிய வடிவமைப்புகளை வரைகிறார்.  இந்நிலையில்,அன்றைய நாளை குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர் “யாராவது வருவார்கள்...” என்று கூறினார்.

சிவமின் கடையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில், தாதர் புறநகர் தொடர்வண்டி நிலையத்திற்கு அண்மையில், ரானடே சாலையில் சிவ நாயக்கும்  மெஹந்தி தொழில் செய்யும் கடையினை அமைத்துள்ளார். அவரும் அன்றைய நாள் தொ ழில் செய்வதற்கு தேவையான ஹென்னாவை (மருதாணி) கைகளால் செய்யப்பட்ட கோன்களில் நிரப்புகிறார். இரண்டு ஹென்னாக் கலைஞர்களும் கடை அமைத்துள்ள நடைபாதை பரபரப்பாக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களைப் போன்றே- சோளப்பூரைச் சேர்ந்த பூ வியாபாரி,லக்னோவிலிருந்து இங்கு வந்து நகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டவர், கொல்கத்தாவிலிருந்து வந்த காலணி வியாபாரி மற்றும் ராஜஸ்தானிலிருந்து வந்து ஐஸ் விற்பவர் என பிற புலம்பெயர் தொழிலாளர்களால், இந்தப்பகுதியில் பல்வேறு பொருட்கள் வர்த்தகமாகிறது.

PHOTO • Samyukta Shastri

சிவ நாயக் மத்திய மும்பையின் ரானடே சாலையில் உள்ள அவரது தற்காலிக கடையில் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கிறார்

சிவாவும் சிவமும் அவர்களது தற்காலிகக் கடைகளில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் அமர்ந்திருக்கின்றனர். இவர்களைப் போன்றே இந்தப் பகுதியில் உள்ள மெஹந்திக் கலைஞர்களும் காத்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் குறைந்தப்பட்சம் 30 மெஹந்திக் கலைஞர்களாவது இருப்பார்கள் என்றும், அனைவரும் ஆண்கள் என்றும் சிவா குறிப்பிட்டார். “மெஹந்தி போடுவதில் பெண்களைவிட ஆண்கள் வேகமானவர்கள். பெண்களுக்கு  (மெஹந்தி பயிற்சி எடுக்க) அழகு நிலையங்கள் உள்ளன. ஆண்களோ தொழிலுக்காக இதனை அமைத்துள்ளனர். பெண்கள் நடைபாதையில் அமரமாட்டார்கள்” என்றார் சிவம்.

இந்த நகர் முழுதும் உள்ள புறநகர் தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் அமர்ந்து மெஹந்தி போடும் பலரை அல்லது ஹென்னாக் கலைஞர்களைப் போன்று சிவாவும் சிவமும் புலம்பெயர் தொழிலாளர்களே; இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சார்ந்தவர்கள். 19 வயதுடைய சிவம் சுமார் 6 வருடங்களுக்கு முன்னர், அலிகார் மாவட்டத்தின் காவனா தாலுக்காவின் ஜமா கிராமத்தில் இருந்து இங்கு இடம்பெயர்ந்துள்ளார். “நான் எட்டு அல்லது ஒன்பது வயதாக இருக்கும் போது, எனது கிராமத்தை விட்டு வந்தேன்” என்று கூறிய அவர்; “எனது குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய ஒருவரும் இல்லை- எனது இரண்டு மூத்த சகோதரர்களும் திருமணம் ஆகி தனியே வசித்து வருகின்றனர்” என்று கூறினார் .

ஆனால், சிவம் மும்பைக்கு இடம்பெயர்வதற்கு முன்னர், டெல்லியில் உள்ள அவரது தாய்மாமன் இடத்தில், மெஹந்தி வரையும் கலையைக் கற்பதற்காகச் சென்றுள்ளார். இதுகுறித்து கூறிய அவர்,” இரண்டிலிருந்து மூன்று மாதங்கள்,ஒவ்வொரு நாளும்,நான் அட்டையில் அச்சு வைத்து வரைந்து பயிற்சி எடுத்தேன். நான் போதிய தன்னம்பிக்கையைப் அடைந்த பிறகு,அவர்கள் வாடிக்கையாளர்கள் கையில் வரைய என்னை அனுமதித்தார்கள்” என்றார். இந்நிலையில்,சிறிய உணவகம் அல்லது டிராக்டர் மற்றும் கார் ஒட்டி வேலை செய்தபிறகு தான், சிவம் மும்பையினை அடைந்துள்ளார்.

இருபது வயதுடைய சிவா, பத்து வருடங்களுக்கு முன்பு பெரோசாபாத் மாவட்டத்தின் துண்டா தாலுக்காவில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார். உண்மையில் மெஹந்தி தொழிலுக்கு அவர் வந்தது இயற்கையானது. “மொத்தக் கிராமமும் இதனைச் செய்து வருகிறது” என்றுக் கூறிய அவர்,”நான் இங்கு வந்த போது, என் சகோதரரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்;அவர் எங்கள் மைத்துனரிடம் இருந்துக் கற்றுக்கொண்டார். எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய வேலை. எல்லோரும் செய்வார்கள்” என்று கூறினார்.

மும்பையில் மெஹந்தி கடை வைத்துள்ள  சிவாவின் உறவினரான குல்தீப் நாயக் கூறுகையில்,”பிற பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கின்றனர். ஆனால்,எங்கள் கிராமத்தில் உள்ள பிள்ளைகள் மெஹந்தி போடுவதற்கு கற்றுக்கொள்கின்றனர். வாடிக்கையளர்கள் என்ன மாதிரி கேட்டாலும் எங்களால் வரைய முடியும்”. என்று கூறிய அவர், அவருக்கு தெரிந்த வடிவமைப்புகளை வரிசையாகக் கூற ஆரம்பித்தார். “எந்த வகையானாளும்-அரபிக், பாம்பே ஸ்டைல், மார்வாடி, இந்தோ-அரபிக், இந்தோ-வெஸ்டர்ன்,துபாய்...எதுவானாலும்” என்று தெரிவித்தார்.

மும்பைக்கு மெஹந்தி கலைஞராக பணிபுரிய இடம்பெயர்வது லாபம் மிகுந்ததாகும். சிவம் கூறுகையில்,“முன்பு எங்கே பணம் வந்தது? இங்கு வந்ததற்கு(புலம்பெயர்வது) பின்னர் தான், வருமானம் ஈட்ட ஆரம்பித்து பணத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். கிராமத்தில், ஒரு தொழிலாளராக பணிபுரிந்தால் நீங்கள் ஒருநாளைக்கு 200-300 வரை மட்டும் தான் சம்பாதிக்க முடியும். ஆனால்,டெல்லியில்,ஓட்டுநராக நான் 7,000-9,000 வரை சம்பாதித்தேன். தற்போது, நான் மாதத்திற்கு 30 முதல் ஐம்பது ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

PHOTO • Samyukta Shastri

சிவம் சிங்கின் கடையில்(வலது) உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் மெஹந்தி வடிவமைப்புகள் அடங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது  மற்றும் நாற்காலியின் கீழே பெண் கடவுளான லக்ஷ்மியின் புகைப்படம் ஓட்டப்பட்டுள்ளது

சிவம் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை திருமணங்களில் மருதாணி வரைவதன் மூலமாகவே ஈட்டிவருகிறார். “இங்கு(தெருக்களில்) ஒரு நாளைக்கு 800-2000 ருபாய் வரை ஈட்ட முடியும்- இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 10 வாடிக்கையாளர்கள் வரை கிடைப்பார்கள். ஒருவேளை ஐந்து பேர்  வந்தால்(குறைந்தபட்சம்) 1000-1500 வரை கிடைக்கும். ஒருவேளை வாடிக்கையாளர்கள் எங்களை வீட்டுக்கு அழைத்தால் (மெஹந்தி போடுவதற்கு),அதன் மூலமாக குறைந்தபட்சம் 1௦௦௦ ரூபாயாவது கிடைக்கும்.” என்று கூறினார்.

ஜெய்பூரைச் சேர்ந்த சிவமின் மாமா மனோஜ், கிழக்கு தாதர் பகுதியில் சொந்தமாக மெஹந்திக் கடை வைத்துள்ளார். சிவமை சந்திக்க வந்த அவர் கூறுகையில்,”ஒவ்வொரு வாடிக்கையாளருமே ஒரு கைக்கு கிட்டத்தட்ட 500 ருபாய் வழங்குகின்றனர். மெஹந்திக்  கட்டணம் 100 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. எனினும், அதை யாரும் தெரிவு செய்வதில்லை. எல்லோரும், 300  அல்லது 400 வழங்குகின்றனர். மணப்பெண்களுக்கான மெஹந்தி 5,௦௦௦ லிருந்து தொடங்குகிறது.’’ என்று கூறினார்.

ஆனால்,பணத்திற்காக மட்டுமே ஹென்னாக் கலைஞர்கள் இந்தத் தொழிலைச் செய்வதில்லை. இதன் வழியாக கிடைக்கும் சுதந்திரத்தை விரும்புவதாக சிவம் கூறினார். இந்தத் தொழிலில் அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், மனோஜ் கூறுகையில்,இதனால் அவர் விரும்புகின்ற இடத்திற்கு பயணிக்க முடிகிறது என்று கூறினார். அவர் அரிதாகவே கடையில் அமர்கிறார். பெரும்பாலும் நண்பர்களைச் சந்திக்கவே செல்கிறார். “நான் நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை மும்பையில் இருப்பேன். இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் கடை வைத்திருந்தேன். நாங்கள் தமிழ்நாடு,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்  என்று அலைந்துக் கொண்டே இருப்போம்.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல்லுங்கள். இன்று நான் கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்று உணர்கிறேன், அதனால் நான்…”. என்று மனோஜ் குறிப்பிட்டார்.

சிவம், மனோஜ் ஆகிய இருவரும் உதவியாளர்களை  நியமித்துள்ளனர். “இந்த தொழிலின் வழியாக கிராமத்தில் உள்ள மற்றவர்கள் சம்பாதிப்பதைப் பார்த்தவர்களும் இங்கு வேலைக்கு வருகின்றனர்” என மனோஜ் தெரிவித்தார். மனோஜ் தனது கடையை உதவியாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். எப்போதாவது அளவுக்கதிகமாக கூட்டம் அலைமோதும் போதும் அல்லது வீட்டு அழைப்புகளுக்கும் மட்டுமே செல்கிறார்.

இந்த வேலையின் மூலமாக கிடைத்த சுதந்திரத்தின் காரணமாக சிவம் ஜமா கிராமத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அடிக்கடி சென்று வரவும், அவரது குடும்பத்திற்கு சொந்தமான 20 பிகாஸ்(கிட்டத்தட்ட நான்கு ஏக்கர்) பார்த்துக்கொள்ளவும் முடிந்துள்ளது. இந்நிலையில், அவரது கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பையனுக்கு 5000- 7000 வரை மாதச்சம்பளமாக வழங்குகிறார். மேலும்,அவரது ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பிற்காக உள்ளூரைச் சார்ந்த ஒருவருக்கு(strongmen) வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். சிவம்,மனோஜ் ஆகிய இருவரும் ஒன்றாக வட-கிழக்கு மும்பையில் உள்ள ஒரே குடியிருப்பில் தங்கியுள்ளனர். அவர்களுடன் காட்கோபாரை சேர்ந்தவர் சிலரும் தங்கியுள்ளார். மற்றொரு பகுதி வாடகைக்காக பயன்படுத்தப்படுகிறது.

அவரது வருமானத்தில் மிச்சமான அனைத்து தொகையையும் சிவம் அவரது வீட்டுக்கு அனுப்புகின்றார். “பணத்திற்கு இங்கு(மும்பையில்) என்ன தேவை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இதை வீட்டிற்காகவே செய்கிறோம், ”என்று அவர் கூறினார்.  மேலும் கூறுகையில், "நாங்கள் ஏன் இந்த பணத்தை சம்பாதிக்கிறோம் ... இங்கே செலவழிப்பதற்காகவா அல்லது வீட்டிற்காகவா?" என்று குறிப்பிட்டார்.

PHOTO • Samyukta Shastri

சிவம் அரச மரத்தின் அடியில் அமர்ந்துள்ளார்: ‘யாராவது வருவார்கள்...’ என்று அந்த நாளை குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்

ஜமா கிராமத்தில் உள்ள சிவமின் வீட்டில், அவரது தாய் மற்றும் 15 வயது தங்கை அஞ்சு ஆகியோர் சிவமை சார்ந்து உள்ளனர். அஞ்சு பத்தாம் வகுப்பு வரை முடித்துள்ளார். வீட்டில் அவரது தாய்க்கு உதவி வருகிறார். அவரது திருமணத்தின் போது யார் மெஹந்தி போடுவார்கள் என்று சிவமிடம் கேட்ட போது, சகோதரன் என்ற பெருமிதத்துடன் தானே செய்வேன் “அல்லது என் சகோதரன் போடுவார். வேறுயார் இருக்கிறார்கள்?” என்று கூறினார். இதேவேளையில், மனோஜ் வேறுவிதமாக கூறினார்;“எங்கள் வீட்டில்(ஜெய்ப்பூர்) இருக்கும் போது மெஹந்தி வரைய விரும்பவில்லை. எனினும்,சில நேரம், சிலர் வற்புறுத்தும் போது வரைகிறேன்.” என்றார்.

இதற்கிடையில் சிவமின் கடையில், ஒரு வாடிக்கையாளர் நின்றார். அவர் அவரது மருமகளின் திருமணத்திற்கு முன்பாக, மெஹந்தி விழாவிற்கு வரவேண்டும் என்று சிவமிடம் கேட்டுக்கொண்டார். சிவம் கூறுகையில்: “மும்பையில் மெஹந்தி போடுவதற்காக எங்களை எங்கு வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒருவேளை மும்பைக்கு வெளியில் இருந்தால் நீங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்கு வேண்டுமேனாலும் செல்வோம்.” என்றார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Samyukta Shastri

Samyukta Shastri is an independent journalist, designer and entrepreneur. She is a trustee of the CounterMediaTrust that runs PARI, and was Content Coordinator at PARI till June 2019.

Other stories by Samyukta Shastri
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan