கையிழு ரிக்‌ஷாவை பயன்படுத்த லல்லன் பஸ்வான் முதன்முறையாக கற்கும்போது ரிக்‌ஷா இழுக்கும் பிற தொழிலாளர்கள் பின்னால் பயணிகளை போல் அமர்ந்துகொள்வார்கள். “முதன்முறையாக ரிக்‌ஷாவின் முன்பக்கத்தை நான் தூக்கி இழுக்க முயற்சித்தபோது முடியவில்லை,” என்கிறார் அவர். “கற்றுக் கொள்ள இரண்டு, மூன்று நாட்கள் ஆனது.”

முகத்தில் வழியும் வியர்வையை கழுத்தில் இருந்த கட்டம் போட்ட துண்டை வைத்து துடைத்துக் கொண்டு, எப்படி கவிழ்த்துவிடாமல் ரிக்‌ஷா இழுக்க கற்றுக் கொண்டார் என்பதை விளக்குகிறார். “முன்னால் இருக்கும் கைப்பிடிகளை பயணிகளிடமிருந்து முடிந்த மட்டும் தூரத்தில் இருந்து பிடித்துக் கொண்டால், ரிக்‌ஷா கவிழாது,” என்கிறார் அவர். கவிழ்ந்து விடுமோ என்கிற பதட்டம் குறைய கொஞ்ச காலம் ஆகியிருக்கிறது. “இப்போது எனக்கு பயமில்லை. இரண்டு பயணிகளை கொண்டு என்னால் சுலபமாக ரிக்‌ஷா இழுத்துவிட முடியும். மூன்று பேர் இருந்தாலும் கூட, மூன்றாவது ஆள் ஒரு குழந்தையாக இருந்தால், நான் ரிக்‌ஷா இழுத்துவிடுவேன்.”

ரிக்‌ஷா இழுப்பதற்கான முதல் முயற்சிகளை அவர் எடுத்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போதுதான் அவர் பிகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்திலுள்ள ரகு நாத்பூர் கிராமத்திலிருந்து வந்திருந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். குடும்பத்தின் ஒரு பிகா நிலத்தில் (ஒரு ஏக்கருக்கும் குறைவு) கோதுமையும் நெல்லும் கொஞ்ச காலத்துக்கு பயிரிட்டார். விவசாயம் போதுமான வருமானத்தை கொடுக்கவில்லை. எனவே பஸ்வான் வேலை தேடி கொல்கத்தாவுக்கு வந்தார்.

சில மாதங்களுக்கு அலுவலக வேலை தேடிக் கொண்டிருந்தார். “வேலை ஏதும் கிடைக்காதபோது, என் கிராமத்தை சேர்ந்த ரிக்‌ஷாக்காரர்கள் இந்த வேலையை அறிமுகப்படுத்தினார்கள்,” என்றார் அவர்.

40 வயதாகும் பஸ்வான் தெற்கு கொல்கத்தாவின் கார்ன்ஃபீல்டு சாலையும் எக்தாலியா சாலையும் சந்திக்கும் முனையிலுள்ள  ரிக்‌ஷா ஸ்டாண்டிலிருந்து இயங்குகிறார். 30 ரிக்‌ஷாக்காரர்கள் காத்திருக்கும் ஸ்டாண்ட் அது. மார்ச் மாதம் தொடங்கிய பொது முடக்கத்தின்போது அவர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டதாக கூறுகிறார் பஸ்வான். “கொரோனாவினால் வேலை ஒழுங்காக நடக்கவில்லை. இங்கிருந்து அவர்கள் என்ன செய்ய முடியும்? அதனால் அவர்கள் ஊர்களுக்கு திரும்பி விட்டார்கள்.”

ஊரில் வீடு கட்டுவதற்காக வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனால் லல்லன் கொல்கத்தாவிலேயே தங்கிவிட்டார். திரும்பிச் சென்றால் கடன் கொடுத்தவர் பணம் கேட்பார். அவருக்கு கொடுக்க பஸ்வானிடம் பணமும் இல்லை.

'I can easily pull the rickshaw with two passengers, even three, if the third is a child,' says Lallan, who came to Kolkata from Bihar 15 years ago
PHOTO • Puja Bhattacharjee
'I can easily pull the rickshaw with two passengers, even three, if the third is a child,' says Lallan, who came to Kolkata from Bihar 15 years ago
PHOTO • Puja Bhattacharjee

இரண்டு பயணிகளை கொண்டு சுலபமாக ரிக்‌ஷா இழுத்துவிட முடியும்”, என்னும் லல்லன் பிகாரிலிருந்து கொல்கத்தாவுக்கு 15 வருடங்களுக்கு முன் வந்தவர்

தொற்றுக்கு முன் லல்லன் காலை 6 மணிக்கே வேலைக்கு சென்று விடுவார். இரவு 10 மணிக்கு முடிப்பார். ஸ்டாண்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளுக்கு பயணிகளை கொண்டு சென்று விடுவதில் 200லிருந்து 300 ரூபாய் வரை நாளொன்றுக்கு கிடைக்கும்.

பயணிகள் மற்றும் ரிக்‌ஷாவுடன் சேர்ந்த 150 கிலோ எடையை ஒரு கிலோமீட்டருக்கு பஸ்வான் இழுக்க 15 நிமிடம் வரை ஆகும். “என்னுடைய வழக்கமான வழியையும் தாண்டி ஒரு பயணியை கொண்டு செல்ல நேர்கையில் என் கால்களும் தோள்களும் பயணம் முடிகையில் வலிக்கத் தொடங்கிவிடும்,” என்கிறார் அவர். “மிகவும் சோர்வாகிவிடுவேன்.”

பொது முடக்கத்துக்கு முன் வரை தூரம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து ஒரு சவாரிக்கு 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை கட்டணம் கேட்டார். “சில மாதங்கள் 8000 ரூபாய் வருமானம் கிடைத்தது. பிற மாதங்களில் 10000 ரூபாய் கிடைத்தது,” என்கிறார் அவர். ரிக்‌ஷா ஓனருக்கு வாடகை 200 ரூபாய்யும் உணவு மற்றும் பிற செலவுகளுக்கு 2000 ரூபாயும் வைத்துக் கொண்டு மிச்ச பணத்தை ஊரிலிருக்கும் குடும்பத்துக்கு அனுப்பி விடுவார்.

பொது முடக்கத்தின் போது வருமானம் கிடைக்கும் என நம்பினார். உணவுப் பொருட்கள் கொஞ்சம், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழியில் கிடைத்தன. அவையும் பொதுமுடக்கம் முடியத் தொடங்கியதும் நின்றுவிட்டது.

பொது முடக்கத்துக்கு முன்பெல்லாம் மழை பெய்தாலும் பஸ்வான் ரிக்‌ஷா இழுப்பார். ஒரு நெகிழிப் பையை போர்த்திக் கொள்வார். இப்போது அது ஆபத்தாகிவிட்டதாக சொல்கிறார். “மழை பெய்கையில் நான் ரிக்‌ஷாவுக்குள் அமர்ந்து கொள்வேன். பயணிகளை ஏற்பதில்லை. மழையில் நனைந்து காய்ச்சல் வந்துவிட்டால், எனக்கு கொரோனா வந்துவிட்டதாக எல்லாரும் சொல்வார்கள். முன்பு எனக்கு பல தடவை காய்ச்சல் வந்திருக்கிறது. அப்போது சூழல் வேறாக இருந்தது. காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு இப்போது நான் சென்றால், கொரோனா பரிசோதனை எடுக்கச் சொல்வார்கள். அதனால்தான் நாங்கள் (ரிக்‌ஷா இழுப்பவர்கள்) நனைவதற்கு பயப்படுகிறோம்.

மே 20ம் தேதி அம்பான் புயல் கொல்கத்தாவை தாக்கிய நிகழ்வை நினைவுகூருகிறார் பஸ்வான். “அந்த புயல் மிகவும் பெரிதாக இருந்தது,” என்கிறார் அவர். பிற்பகல் மூன்று மணிக்கு ஸ்டாண்டிலிருந்து அறைக்கு கிளம்பியிருக்கிறார். வழக்கமாக செல்லும் நேரத்துக்கு முன்பே கிளம்பிவிட்டார். “அறைக்குள்ளிருந்து கொண்டு மரங்கள் விழும் சத்தங்கள் எனக்கு கேட்டது.” ககுலியாவில் உள்ள ஒரு குப்பத்தில் (ஸ்டாண்டிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரம்) அவர் வாழ்கிறார். கிழக்கு சம்பரத்திலிருந்து வந்த ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளர்கள் எட்டு பேருடன் வசிக்கிறார்.

Paswan operates from a rickshaw stand in South Kolkata along with around 30 others, many of whom returned to their villages during the lockdown
PHOTO • Puja Bhattacharjee
Paswan operates from a rickshaw stand in South Kolkata along with around 30 others, many of whom returned to their villages during the lockdown
PHOTO • Puja Bhattacharjee

தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் ஒரு ரிக்‌ஷா ஸ்டாண்டிலிருந்து பஸ்வான் இயங்குகிறார். ஸ்டாண்டிலிருந்து பிற 30 தொழிலாளர்கள் பொதுமுடக்கத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்

புயல் கடந்தபிறகு, அவர் அடுத்த நாள் மதியம் வேலைக்கு திரும்பினார். “சில பயணிகள் அப்போது கிடைத்துக் கொண்டிருந்தனர். சிலர் டாலிகுங்கே மற்றும் சீல்டா போன்று தூரமான இடங்களுக்கு போக விரும்பினர். அவர்களிடம் 500 ரூபாய் கட்டணம் வாங்கினேன்,” என்கிறார் அவர்.

“தற்போது பொதுமுடக்கம் முடிந்துவிட்டதால், அத்தகைய ( நெடுதூர) பயணிகள் கிடைப்பதில்லை. அருகே இருக்கும் இடங்களுக்கு கூட எனக்கு பெரிய அளவில் பயணிகள் கிடைக்கவில்லை. இன்று இதுவரை இரண்டு பயணிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றனர்,” என சில வாரங்களுக்கு முன் அவர் கூறினார். “ஒருவர் 30 ரூபாய்க்கு, இன்னொருவர் 40 ரூபாய்க்கு. ரிக்‌ஷாக்களை மக்கள் பயன்படுத்த விரும்புவதில்லை. கொரோனா வந்துவிடுமென பயப்படுகிறார்கள். வீடுகளை விட்டு வெளியே வரவே அவர்கள் அஞ்சுகிறார்கள்.”

லல்லனின் பல பயணிகள் அருகே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள். “இப்போது பள்ளிகள் எல்லாமும் மூடப்பட்டிருக்கிறது,” என்கிறார் அவர். “பொதுமுடக்கம் தொடங்கியதும் ரிக்‌ஷா உரிமையாளர் வாடகையில் 50 ரூபாய் குறைத்தார். ஆனாலும் எனக்கு பெரிய வருமானம் கிடைக்கவில்லை.” சில சமயங்களில் அடிமாட்டு விலைக்கு வாடிக்கையாளர் பேரம் பேசினாலும் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் பாஸ்வானுக்கு. “வேறென்ன செய்வது” எனக் கேட்கிறார்.

பள்ளிகள் திறந்திருந்தபோது சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்கிறார் பஸ்வான். “காவலர்கள் எங்களின் இயக்கத்தை தடுப்பார்கள். சில நேரங்களில் ‘அனுமதி இல்லை’ எனப் போர்ட்கள் வைப்பார்கள். எனவே நான் காலியான சாலைகளை பயன்படுத்துவேன்.” இத்தகைய சிரமங்கள் இருந்தாலும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை விட கையிழு ரிக்‌ஷாக்களே பஸ்வானுக்கு பிடித்திருக்கிறது. “அவர்களையும் காவலர்கள் பிடிப்பார்கள். எங்களை குறைவாக பிடிப்பார்கள்,” என்கிறார் புன்னகையோடு.

கொல்கத்தா நகரத்தின் அடையாளமாக இருக்கும் கையிழு ரிக்‌ஷாவை தடை செய்ய மேற்கு வங்க அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2006ம் ஆண்டு ஒரு மசோதாவை கூட கொண்டு வந்தது. ஆனால் அந்த மசோதா எதிர்க்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் மசோதாவை நிறுத்தி வைத்தது. ஆனாலும் கொல்கத்தா அதிகாரிகள் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிய உரிமங்கள் எதையும் கொடுக்கவில்லை என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

PHOTO • Puja Bhattacharjee

ரிக்‌ஷாவையும் பயணிகளையும் சேர்த்த 200 கிலோ எடையை ஒரு கிலோமீட்டருக்கு இழுக்க பஸ்வானுக்கு 15 நிமிடங்கள் ஆகிறது

பழைய கையிழு ரிக்‌ஷாக்கள் இன்னும் இருக்கின்றன. 5935 கையிழு ரிக்‌ஷாக்கள் கொல்கத்தாவில் இருப்பதாக குறிப்பிடும் 2005ம் ஆண்டு கணக்கெடுப்பை சுட்டிக் காட்டுகிறார் அனைத்து வங்க ரிக்‌ஷா சங்கத்தின் பொதுச் செயலாளர் முக்தார் அலி. 2015ம் ஆண்டின் செய்தித்தாள் அறிக்கைகளின்படி போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளர் 2000 கையிழு ரிக்‌ஷாக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அவை யாவும் உரிமங்கள் பெற்றவை அல்ல என்கின்றன அறிக்கைகள்.

மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கம் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. லல்லன் தற்போது 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை ஒரு நாளைக்கு வருமானம் ஈட்டுகிறார். காலை நேரங்களில் பால்லிகுங்கே நிலையத்தில் அவர் காத்திருக்கிறார். அங்கு சுலபமாக அவருக்கு பயணிகள் கிடைக்கின்றனர். தற்போது அவரால் பணமும் சேமிக்க முடிகிறது. குடும்பத்துக்கும் அனுப்ப முடிகிறது.

முன்பு, மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை பஸ்வான் கிராமத்துக்கு செல்வார். தந்தை, தாய் மற்றும் மனைவி ஆகியோருடன் நிலத்தில் வேலை பார்ப்பார். “நிலத்தில் விளையும் கோதுமையையும் அரிசியையும் குடும்பம் உணவாக கொள்கிறது,” என்கிறார் அவர். “உபரியாக ஏதேனும் இருந்தால், ஐந்து குவிண்டாலை விற்று விடுவோம். சமயங்களில் 10 குவிண்டால்களும் விற்போம். ஆனால் இந்த வருடம் விளைச்சலை மழை வெள்ளம் (ஜூலை 2020) அழித்துவிட்டது. “விற்பதைக் கூட விட்டுவிடுங்கள். எங்களுக்கே சாப்பிட உணவில்லை,” என்கிறார் அவர்.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்திலிருந்து அவர் ஊருக்கு செல்லவில்லை. இரு மகள்களான ஏழு வயது காஜல் மற்றும் நான்கு வயது கரிஷ்மா பத்து மாதங்களுக்கு பிறகு அவரை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக சொல்கிறார். “எப்போது வீட்டுக்கு வருவேன் என என் குழந்தைகள் கேட்கின்றன. தீபாவளி சமயத்தில் (நவம்பர் மாதம்) வருவதாக சொல்லியிருக்கிறேன்,” என்கிறார் அவர். கடன் இருந்ததால் அவரால் போக முடியவில்லை.

ஸ்டாண்டில் இருக்கும் பிற தொழிலாலர்களுடன் அவரும் காத்திருக்கிறார். சமயங்களில் சீட்டு விளையாடுகிறார். அல்லது தூங்குகிறார். “இந்த வேலையில் என் எதிர்காலத்துக்கு எந்த பயனும் இல்லை,” என்கிறார் அவர். “ஆனாலும் என் குழந்தைகளுக்காக என்னால் முடியும் வரை இந்த வேலையைச் செய்வேன்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Puja Bhattacharjee

Puja Bhattacharjee is a freelance journalist based in Kolkata. She reports on politics, public policy, health, science, art and culture.

Other stories by Puja Bhattacharjee
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan