அந்த ஊருக்கு நான் போய் சேர்ந்தபோது, கூட்டம் கூடியிருந்தது. ரெண்டு கிராமங்களையும் ஒரு ரோடுதான் பிரிச்சிருந்தது. நிறைய போலீஸ் இருந்தாங்க. போலீஸ் வண்டிகளும் இருந்தது. சிவகாசியில இருக்கற கனிஷ்கா பட்டாசு ஃபேக்டரி விபத்துல 14 தொழிலாளர்கள் இறந்துட்டாங்கங்கற தகவல் மொத்த ஊரையும் உலுக்கியிருந்தது. ஆறு பேர் காந்தி நகர் கிராமத்தில் மட்டும் இறந்திருந்தாங்க.

இறந்தவங்களை நினைச்சு மக்கள் தெருக்கள்ல அழுதுக்கிட்டு இருந்தாங்க. சிலர் ஃபோன் வழியா, மத்த ஊர்களில் இருக்கும் சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு, கூட்டம் சுடுகாட்டுக்கு நடக்க, நானும் சேர்ந்து நடந்தேன். மொத்த ஊரும் திரண்டு, 2023, அக்டோபர் 17ம் தேதி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சுடுகாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இறந்த உடல்களை அப்புறப்படுத்திய தீயணைப்பு துறை வீரர் ஒருவர், போஸ்ட் மார்ட்டத்துக்காக உடல்களை எடுப்பதிலிருந்து கஷ்டத்தை சொன்னார்.

எட்டரைக்கு மேலதான்  பாடி வந்தது. ஆறு ஆம்புலன்ஸும் ஒண்ணா வந்தது. மக்கள் எல்லாரும் ஓடினதால,  அந்த இடம் ஒரு மாதிரி களேபரம் ஆயிடுச்சு. அதை பார்த்தப்போ எனக்கு போட்டோ எடுக்கணும்னு தோணல. அந்த இடம் பூராம் ஒரு மாதிரி இருட்டா, இருள் அடைஞ்சிருந்தது. சுடுகாட்டில ஒரே ஒரு லைட் மட்டும் எரிஞ்சிட்டு இருந்தது. அந்த விளக்கை சுத்தி நூத்துக்கணக்கான ஈசல் கூட்டம். அதைப் பார்க்கும்போது அந்த மக்கள் கூட்டமும் அதே மாதிரிதான் எனக்குத் தெரிஞ்சது.

ஆம்புலன்ஸிலிருந்து ஒவ்வொரு பாடியா இறக்குனாங்க. கொஞ்ச நேரத்தில் எல்லாரும் பின்வாங்குனாங்க. மூக்க மூட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பாடிங்க, விபத்துல பாதி வெந்து இருந்ததால, இருந்து ஒரு மாதிரியான நாத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. உடம்பெல்லாம் யாரோடதுன்னு யாருக்கும் தெரியல. ஆனா பேர் மட்டும் அதுல எழுதி இருந்தாங்க . அடுத்த கால் மணி நேரத்துலயே அங்க எல்லா வேலைகளும் முடிஞ்சு எல்லாரும் கலைஞ்சு போக ஆரம்பிச்சுட்டாங்க. அந்த இடமே ரொம்ப தனிமையாயிடுச்சு.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: சிவகாசியின் கனிஷ்கா பட்டாசு ஆலை விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வலது: விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான எம். பாலமுருகனின் வீட்டை சுற்றி திரண்டிருக்கும் மக்கள்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இறந்தவர்களின் உறவினர்களும் நண்பர்களும் சுடுகாட்டை நோக்கி செல்கின்றனர். வலது: இரவு கவிந்தாலும் உடல்கள் வந்து சேர மக்கள் காத்திருக்கின்றனர்

14 வயது எம்.சந்தியா, விஞ்ஞானி ஆக ஆசைப்பட்டாங்க. ஆனா இப்போ அவங்க அம்மா முனீஸ்வரி விபத்தில் இறந்துட்டதா, அவங்க கனவை கைவிட வேண்டிய நிலையில் இருக்காங்க. சந்தியாவோட அம்மா, எட்டு வருஷமா ஃபேக்டரில வேலை பார்த்தாங்க. மகளோட தேவைகளை பூர்த்தி செய்ய ஓவர்டைம் வேலை செஞ்சாங்க. வீட்டுக்காரர் இல்லாம, முடிஞ்ச மட்டும் நல்லா பார்த்துக்கட்டதா, சந்தியாவோட பாட்டி சொல்றாங்க. “பாட்டி இன்னும் எத்தனை நாள் என்னை பார்த்துக்க முடியும்னு தெரியல. அவங்களுக்கு ஏற்கனவே கடுமையான சர்க்கரை வியாதி இருக்கு,” அப்படின்னு சொல்றாங்க சந்தியா.

விபத்தில் கணவரை பறிகொடுத்திருக்காங்க பஞ்சவர்ணம். “சாம்பிள் பாக்குறதுக்கு வெளியே வச்சிருந்த வெடி வெடிச்சு, அது உள்ள வந்து விழுந்து  வெடிச்சிடுச்சு,” அப்படின்னு சொல்றாங்க. ”நான் வெளியே உக்காந்து இருந்ததுனால தப்பிச்சுட்டேன். புகை அதிகமா இருந்ததால அவரால வெளியில் வர முடியாம இறந்துட்டாரு.”

விபத்துல ஏற்பட்ட காயங்களை அவங்க காட்டுனாங்க. “வழக்கமா, பட்டாசு நிறைய வாங்கறவங்க, சாம்பிள் பார்க்கணும்னு நினைப்பாங்க. ஆனா, அவங்க ஒரு கிலோமீட்டர் தூரமாச்சும் ஃபேக்டரில இருந்து தள்ளி போய் சாம்பிள வெடிக்கணும். ஆனா அன்னைக்கு, அவங்க ஃபேக்டரிக்கு பக்கத்துலயே சாம்பிள வெடிச்சாங்க. நெருப்பு எல்லா பக்கமும் செதறுச்சு. ஃபேக்டரி கூரை மேல விழுந்துச்சு.  செஞ்சுக்கிட்டு இருந்த பட்டாசு மேலயும் விழுந்துச்சு. மொத்த ரூமையும் உடனே நெருப்பு புடிச்சுடுச்சு. 15 பேர்ல, 13 பேர் நெருப்புல மாட்டிக்கிட்டாங்க. காயத்தோட தப்புன மூணு பேரும் அந்த நேரம் பாத்ரூமுல இருந்தாங்க. இல்லன்னா, அவங்களும் செத்துருப்பாங்க. அவங்க வெளியே வந்தபோது புடவைல தீப்புடிச்சிருந்தது,” அப்படின்னு அவங்க நடந்தத சொன்னாங்க.

பஞ்சவர்ணமும் அவங்க வீட்டுக்காரர் பாலமுருகனும் சம்பாதிச்ச பணம், அவங்க வேலை பார்த்த நேரத்தை பொறுத்துதான் கிடைச்சது. கடுமையா உழைச்சு சம்பாதிச்ச வருமானத்த வச்சு, அங்களோட மகள் பிஎஸ்சி நர்சிங் முதல் வருஷம் படிச்சுக்கிட்டு இருக்காங்க. மகன் ஐடிஐ முடித்திருக்காரு. வீட்டுக்காரரை பத்தி சொல்லும்போது, “குழந்தைங்கள படிக்க வைக்க எவ்வளவு வேணாலும் செலவு செய்ய தயாரா இருந்தாரு,” அப்படின்னு சொல்றாங்க பஞ்சவர்ணம். அவரோட பொண்ணு பவானி, “அப்பா அடிக்கடி, படிப்பு தான் ரொம்ப முக்கியம்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. நாங்கதான் பட்டாசு கடைக்கு போய் ரொம்ப கஷ்டப்படறோம். நீங்களாவது படிச்சு நல்ல நிலைமைக்கு வாங்கன்னு சொல்லுவாரு,” அப்படின்னு அப்பாவை பத்தி சொன்னாங்க.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இரவு 8.30 மணிக்கு முதல் அவசர ஊர்தி (இடது) சுடுகாட்டை வந்தடைந்தது. தொடர்ந்து ஐந்து ஊர்திகள் (வலது) வந்து சேர்ந்தன

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இறந்து போன தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் வகையில், அவர்களை கட்டியிருந்த துணி மேல் எண்கள் எழுதப்பட்டிருந்தன. வலது: அவசர ஊர்தியிலிருந்து இறக்கப்படும் உடல்களை கண்டு அழும் குடும்பத்தினரும் நண்பர்களும்

ஏற்கனவே இருந்த நோயாலயும் விபத்துக்கு பிறகு ஏற்பட்ட செலவுகளாலயும் பஞ்சவர்ணத்தோட குடும்பம் கடன்ல இருக்கு. சிறுநீரகப் பிரச்சினையால அஞ்சு ஆபரேஷன் பஞ்சவர்ணம் செஞ்சிருக்காங்க. மாசாமாசம் 5,000 ரூபாய்க்கு மருந்து எடுத்துக்கறாங்க. “பொண்ணு காலேஜுக்கு 20,000 ஃபீஸ் கட்டணும். அதையே நாங்க இன்னும் கட்டல. தீபாவளிக்கு போனஸ் ஏதாவது கொடுப்பாங்க. அதை வச்சு கட்டலாம்னு இருந்தோம்,”னு சொல்றாங்க. மருத்துவக்குக் கூட பஞ்சவர்ணத்துக்கிட்ட பணம் இல்ல. உப்பு அளவை சரியாக வச்சிருக்க மாத்திரை போட்டு வாழறதா சொல்கிறார்.

பவானி, பாலமுருகனுக்கும் பஞ்சவர்ணத்துக்கும் பிறந்த இளைய மகள். 18 வயசு அவங்களுக்கு. அப்பாவோட இறப்பை இன்னும் அவங்களால கடக்க முடியலை. “அப்பா எங்கள எந்த வேலையும் பார்க்க விட மாட்டாரு. எல்லாம் வேலையும் அவர்தான் பார்ப்பாரு. எங்க அம்மாவுக்கு உடம்பு முடியாததால அவங்க எந்த வேலையும் செய்ய முடியாது. அவர்தான் செய்வாரு.” அக்காவும் தம்பியும் அதிகமாக அப்பாவைதான் சார்ந்திருந்தாங்க. அவரில்லாம இப்போ ரெண்டு பேரும் சிரமத்துல இருக்காங்க.

அரசாங்கம் ரூ.3 லட்சம் நிவாரணம் கொடுத்தது. அதற்கான செக்கை அவங்க கலெக்டர் ஆபிஸ்ல வாங்கனாங்க. ஃபேக்டரியும் அவங்களுக்கு அக்டோபர் மாசத்துல 6 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்துச்சு. பாலமுருகனும் பஞ்சவர்ணமும் 12 வருடஷமா வேலை பார்க்கறதால, ஃபேக்டரி உதவும்னு பஞ்சவர்ணம் உறுதியாக இருந்தாங்க.

கிராமத்து ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் விவசாய நிலத்துல தினக்கூலி தொழிலாளராவும் பட்டாசு ஃபேக்டரி தொழிலாளராவும் வேலை பார்க்கறாங்க. பஞ்சவர்ணத்தோட குடும்பம் ஃபேக்டரி வேலைக்கு போச்சு. காரணம், நெலம் வச்சிருந்தவங்கக் கொடுத்த கூலியை விட, ஃபேக்டரி அதிகக் கூலியைக் கொடுத்தது.

விபத்து நடந்த இடத்துக்கு போய் பார்த்ததிலிருந்து 19 வயசு மகன், பாண்டியராஜன் கஷ்டத்துல இருக்காரு. “எங்க அப்பா சாகிறது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் எனக்கு ஃபோன் பண்ணாரு. ’சாப்டியாப்பா’ன்னு விசாரிச்சாரு. அரை மணி நேரம் கழிச்சு, அங்க வேலை செய்ற ஒரு அண்ணன் ஃபோன் பண்ணாரு. ’இது மாதிரி பட்டாசு வெடிச்சிருச்சுயா’ன்னு சொன்னாரு. உடனே கிளம்பி வந்தேன். உள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஆஸ்பத்திரி தூக்கிட்டு போய்ட்டாங்க. அங்க போய் கேட்டப்போதான் அப்பா இறந்து போயிட்டாருன்னு சொன்னாங்க,”ன்னு சொல்றாரு பாண்டியராஜன்.

“எப்படி வாழறதுன்னு தெரியல. எங்க அம்மா என்ன முடிவு எடுக்கிறாங்களோ அதை நாங்க ஏத்துப்போம். எங்க அம்மா தற்கொலை பண்ண கூப்பிட்டா கூட நாங்க போயிடுவோம். எத்தனை நாளைக்கு சொந்தக்காரங்க எங்களப் பார்த்துக்க முடியும்?”ன்னு கேட்கிறாங்க பவானி.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: செல்போன் விளக்கு வெளிச்சத்தில் இறுதிச் சடங்குக்கான இடத்தை மக்கள் தயார் செய்கிறார்கள். வலது: ஆறு உடல்களும் ஒன்றாக எரிக்கப்படுகின்றன

PHOTO • M. Palani Kumar

உறவினர்களும் நண்பர்களும் சென்ற பிறகும் எரிந்து கொண்டிருக்கும் சிதைகள்

விபத்துல இறந்த தமிழ்செல்விக்கு வயசு 57. ஃபேக்டரி வேலைல 23 வருஷமா அவர் வேலை பார்த்து வராரு. சேர்ந்தப்போ இருந்த 200 ரூபாய், கொஞ்ச கொஞ்சமா கூட 400 ரூபா தினக்கூலியா மாறியது.

அவரின் இளைய மகன் டி.ஈஸ்வரன், “எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே எங்க அப்பா இறந்துட்டாரு. அம்மாதான் என்னையும் அண்ணனையும் பார்த்துக்கிட்டாங்க,”னு சொல்றாரு. ரெண்டு பேரும் பட்டப்படிப்பு முடித்திருக்காங்க. ”நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். அண்ணா பிஎஸ்சி முடிச்சிருக்காங்க,”ன்னு சொல்றாரு அவர்.

தமிழ்செல்வியோட மூத்த மகன், திருப்பூர்ல போலீஸ் ஆபிசரா இருக்கிறாரு. “வேல வேலைன்னு போயி, சாப்பிடாம கொள்ளாம இரண்டு பிள்ளைகளையும் ஆளாக்குச்சு. ஆனா அந்த பிள்ளைகளோட வளர்ச்சிய பார்க்க உசுரோட அது இல்லாமப் போச்சு,” அப்படின்னு சொல்றாங்க அவங்க சொந்தக்காரங்க.

விபத்துல பிழைச்ச குருவம்மாவுக்கு, வெடிய காயப் போட்டுட்டு அந்தப் பேப்பரை ஒட்டிட்டு, அதைத் திருப்பிப் போட்டு, கவர் பண்ணி, பேக் பண்ணி வைக்கிறதுக்கு தினக்கூலி 250 ரூபாய் கிடைக்கும். வாரம் பூராம் வேலை பார்த்தாதான் முழுசா பணம் கிடைக்கும். கூலி உயர்வுல்லாம் கிடையாது. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை போனஸ் கொடுப்பாங்க. லீவு இல்லாம வேலைக்கு போனா 5  ஆயிரம் போனஸ் கிடைக்கும்.

இவ்வளவு பிரச்சினை இருக்கற ஃபேக்டரின்னு தெரிஞ்சும் இங்க இருக்கற பல பெண்கள் இங்க வேலை பார்க்கறதுக்குக் காரணம், அவங்க வாழ்வாதாரம்தான்.  தீக்காயத்துல செத்துப் போன குருவம்மாளும் அப்படிப்பட்டவங்கதான். மொத்தக் குடும்பத்தையும் அவங்கதான் தோள்ல சுமந்தாங்க. அவங்க வீட்டுக்காரரு சுப்புக் கனி.  போர்வெல் வேலையப்போ, வெடி வெடிச்சு, அவருக்கு ஒரு கண்ணு தெரியாம போச்சு. ஒரு கண்ணு சுத்தமா தெரியாது. ஒரு கண்ணுல கால்வாசி தெரியும். அதுக்கப்புறம் குருவம்மாள்தான் வேலைக்கு போய் பாத்துக்கிட்டாங்க. அவங்க செத்துப் போனபிறகு, மூணு பேரு இருக்கற குடும்பம் நிர்க்கதியா இருக்கு.  ”அவங்கதான் எனக்கு  ஆறுதலா இருந்தாங்க. எல்லா இடமும் கூட்டிட்டு போவாங்க கையப் புடிச்சு,” அப்படின்னு கண் கலங்க பேசனாரு சுப்புக் கனி.

PHOTO • M. Palani Kumar

பாலமுருகனின் மனைவி பஞ்சவர்ணம் மற்றும் அவர்களின் குழந்தைகள் பாண்டியராஜன் மற்றும் பவானி

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: சுற்றுலாக்களுக்கு குடும்பத்தை பாலமுருகன் அழைத்துச் செல்வது வழக்கம். இப்படம் கன்யாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது எடுத்தது. வலது: பவானியின் செல்பேசியில் பாலமுருகனின் புகைப்படம்

விபத்துல செத்துப் போன இன்னொருத்தரு இந்திராணி. கால் வலி இருந்துச்சு அவங்களுக்கு. 30 நிமிஷத்துக்கு மேலே நிற்க முடியாது அவங்களால. வலிப்பு நோய் இருந்த வீட்டுக்காரருக்காவும் பிள்ளைங்களுக்காகவும் அவங்க வேலைக்கு போனாங்க. நாலு பேர் கொண்ட அவங்க குடும்பம் ஒரு ரூம் வீட்டுல வாழ்ந்தாங்க. பிறகு கடன் வாங்கி இன்னொரு ரூம் கட்டிக்கிட்டாங்க.

”இன்னும் ஒரு ஆறு மாசம் வேலைக்கு போனா கடன் எல்லாம் அடிச்சிட்டு அதுக்கப்புறம் என்னைக் கட்டிக் கொடுத்தடலாம்னு நெனச்சாங்க. வலிப்பு நோய் அப்பாவுக்கும் நோயாளி அம்மாவுக்கும் பொறந்த பொண்ண யார் கட்டிப்பாங்க?” அப்படின்னு இந்திராணி மகள் கார்த்தீஸ்வரி சொல்றாங்க. இந்த வருஷத்துல க்ரூப் 4 எக்ஸாம் எழுதப் படிச்சிக்கிட்டிருந்தாங்க. “கோச்சிங் ஃபீஸ் கட்டறதுக்கு எனக்கு வழியில்ல”ன்னு சொல்றாங்க.

அவங்க அப்பாவும்  2023 டிசம்பர்ல செத்துப் போயிட்டார். கிறிஸ்மஸுக்கு ஸ்டார் கட்டும்போது தடுமாறி விழுந்தாரு. அதுல உயிர் போயிடுச்சு. இப்போ கார்த்தீஸ்வரி தனியா, வீட்டுக் கடனையும் க்ரூப் 4 ஆசையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை.

குருவம்மா மாதிரி சில பேரு, தீப்பெட்டி ஃபேக்டரில வேலை பார்த்திட்டு இருந்தாங்க. 110 தீப்பெட்டி அடிச்சா 3 ரூபாய் கொடுப்பாங்க. ரொம்ப வேலைக்கு கம்மியான காசுன்னு தெரிஞ்சு, அவங்கல்லாம் சேர்ந்து முடிவெடுத்து பட்டாசு பேக்டரில வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: முனீஸ்வரியின் வார வருமானத்தை காட்டும் கணக்கு புத்தகம். அவரின் வார வருமானம் 1,000 ரூபாயை எப்போதும் தொட்டதில்லை. வலது: திருச்செந்தூரில் சந்தியாவும் முனீஸ்வரியும் எடுத்துக் கொண்ட புகைப்படம்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: விபத்தில் இறந்த தாய் முனீஸ்வரிக்கு சந்தியா எழுதிய கடிதங்கள். வலது: பாட்டியுடன் சந்தியா

கிராமத்துல விவசாயம் மட்டும்தான் இருக்கற இன்னொரு வாழ்வாதாரம். ஆனா அதுவும் பஞ்சத்தால செய்ய முடியறதில்ல. சில பகுதிகள்ல, தண்ணீ இருந்தாலும் கூலிய ஒழுங்கா கொடுக்க மாட்டாங்க. அதனாலேயே குருவம்மா மாதிரி ஃபேக்டரில வேலை பார்க்கறவங்க, ஆடு மாடும் வளர்க்கறாங்க. ஆனா அதுங்களுக்கும் தீவனம் ஒழுங்க கிடைக்கறதில்ல.

கிராமத்துல இருக்கறவங்களுக்கு இருக்கற இன்னொரு வாய்ப்பு நூறு நாள் வேலைதான். மனைவி தங்கமாலையை விபத்துல பறிகொடுத்த டி.மகேந்திரன், 100 நாள் வேலைய 365 நாளுக்கும் கொடுத்தா கிராமத்து பெண்களுக்கு நல்லாருக்கும்னு சொல்றாரு.

இவங்களுக்கெல்லாம் ப்ராப்பரா எந்த லைசன்ஸ்மே கிடையாதுன்னு சொல்றாரு மகேந்திரன். அஞ்சு ஆறு மாசம் வரைக்கும் சஸ்பெண்ட் பண்ணுவாங்க. ஏழாவது மாசம் ஆபீஸ் நல்லபடியா நடந்துட்டுதான் இருக்கும்ன்னு அவர் சொல்றாரு. இது முதல் விபத்து கிடையாது. எட்டு தலித் குழந்தைகள் அக்டோபர் 2023-ல கிருஷ்ணகிரில செத்தாங்க. வாசிக்க: ‘ஒவ்வொரு வீடும் சுடுகாடு போலிருக்கிறது’

கஷ்டத்த கொடுத்திருக்கற இந்த சம்பவத்தால் எல்லாருக்கும் கஷ்டம். உயிர் பிழைச்சவங்க சொல்றதையும் அவங்களோட வாழ்வியலையும் சூழலையும் பார்த்தும் கேட்டும் திரும்பும்போது அவங்களோட கோரிக்கை ஒண்ணே ஒண்ணாதான் இருந்துச்சு. இறந்து போனவங்களோட குழந்தைகளோட படிப்பு செலவ அரசாங்கம் ஏத்துக்கணும். அவங்கள படிக்க வைக்கணும். அப்புறம் பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மாதிரியான விஷயங்களையும் இந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் செய்யணும். ஒவ்வொரு விபத்துக்கு பின்னாலயும் பலரோட கனவுகளும் வாழ்க்கைகளும் அவங்க விட்டுட்டு போற உறவுகளோட கஷ்டங்களும் அடங்கியிருக்கு.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

எஸ்.குருவம்மாள் (இடது) விபத்தில் உயிரிழந்தார். அவரின் கணவர் சுப்புக் கனிக்கு பார்வையில் பாதிப்பு இருந்தது. ஆலையில் வேலை பார்த்து குருவம்மாள்தான் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இந்திராணி விபத்தில் உயிரிழந்தார். இக்காணொளியை அவரின் மகள் கார்த்தீஸ்வரி, ஒரு விடுமுறை நாளன்று தாயுடன் ஆலைக்கு சென்றபோது எடுத்திருக்கிறார். வலது: கணவர் முருகானந்தத்தை பார்த்துக் கொண்டது இந்திராணிதான். அவர் இறந்த பிறகு முருகானந்தத்தின் ஆரோக்கியம் மோசமானது. டிசம்பர் 2023-ல் நாற்காலியிலிருந்து தடுமாறி விழுந்து அவர் இறந்தார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: மரணத்துக்கு முன் இந்திராணி அணிந்திருந்த புடவை. வலது: இந்திராணி கட்டிய சிறு அறையில் கார்த்தீஸ்வரி

PHOTO • M. Palani Kumar

எஸ்.முருகாயி, விபத்தில் காயம் பட்டு உயிர் பிழைத்தார்

PHOTO • M. Palani Kumar

தங்கமாலையின் கணவர், மனைவியின் புகைப்படத்தை பார்க்கிறார். அவர் விபத்தில் இறந்துவிட்டார்

PHOTO • M. Palani Kumar

முத்துலஷ்மியின் கணவர், மனைவியுடன் கடைசியாக எடுத்த புகைப்படத்துடன்

PHOTO • M. Palani Kumar

‘விபத்து பத்திய இந்த கட்டுரை கார்த்தீஸ்வரி வாழ்க்கைல ஒளியேத்தும்னு நம்புறேன்,’ என்கிறார் புகைப்படக் கலைஞர் பழனி குமார்

M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Editor : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan