“போராட்டக் களத்திற்கு அனுப்புவதற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை அளிக்கக் கோரி கிராமம் முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நான் ரூ.500 பணமும், மூன்று லிட்டர் பால், ஒரு கிண்ணம் சர்க்கரை கொடுத்தேன்,” என்கிறார் ஹரியானாவின் ஹிசார் மாவட்டம் பெட்வார் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது சோனியா பெட்வார்.

அவரது கிராமம் அமைந்துள்ள நர்நாந்த் தாலுக்காவில் டிசம்பர் 2020 நடுவாக்கில் ரேஷன் பொருட்கள் முதன்முறையாக சேகரிக்கப்பட்டன. அவை பெட்வாரிலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 26ஆம் தேதி முதல் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

“என்னிடம் போதிய பணம் இல்லை. எனவே நான் விறகுத் துண்டுகளை கொடுத்தேன்,” என்கிறார் சோனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதாகும் ஷாந்தி தேவி. “அப்போது குளிராக இருந்தது, எனவே போராட்டக்காரர்கள் வெப்பமூட்டிக் கொள்ள விறகுகள் உதவும் எனக் கருதினேன்.”

ஜனவரி தொடக்கத்தில் இரண்டாவது முறையாக டிராக்டர் பேரணி நடைபெற்றது. “போராட்டக் களத்திற்கு யார் புறப்பட்டாலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னால் இயன்றவற்றை கொடுத்து அனுப்பினார்கள்,” என்கிறார் சோனியா. கால்நடைகளை வளர்க்கும் பெண்கள் பால் தானம் செய்தனர். இதுவே விவசாயிகளின் போராட்டத்தை பின்னால் இருந்து ஆதரிக்கும் அவர்களின் வழி.

டிக்ரி, சிங்கு (டெல்லி-ஹரியானா எல்லை) மற்றும் காசிப்பூர் (டெல்லி- உத்தரபிரதேச எல்லை) ஆகிய பகுதிகளில் திரண்டுள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இப்போது மூன்றாவது மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் பிப்ரவரி 3ஆம் தேதி மதிய நேரத்தில் டிக்ரியில் சோனியாவை முதலில் சந்தித்தேன். 10,000 மக்கள்தொகை (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) கொண்ட பெட்வார் கிராமத்தின் 150 பெண்கள் கொண்ட குழுவில் அவர் இருந்தார். போராட்டத்திற்கு வந்த அவர்கள் திரும்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். “எங்கள் போராட்டங்களைப் பார்க்கும் ஒருவர் புத்துணர்வு கொள்வார்,” என்று பிப்ரவரி 7ஆம் தேதி பெட்வாரில் அவரை நான் சந்தித்தபோது தெரிவித்தார்.

Sonia (left) and her family give their share of land in Petwar village (right) to their relatives on rent. They mainly grow wheat and rice there
PHOTO • Sanskriti Talwar
Sonia (left) and her family give their share of land in Petwar village (right) to their relatives on rent. They mainly grow wheat and rice there
PHOTO • Sanskriti Talwar

சோனியா (இடது) மற்றும் அவரது குடும்பத்தினர் பெட்வார் கிராமத்தில் (வலது) உள்ள தங்களின் நிலத்தின் ஒரு பகுதியை உறவினர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். அவர்கள் அங்கு கோதுமை, அரிசி அதிகம் விளைவிக்கின்றனர்

“நாம் இப்போது வேறு காலத்தில் இருக்கிறோம், முன்பு போல பெண்கள் எதுவும் செய்யாமல் பின்னால் மறைந்து கொள்ள முடியாது,” என்கிறார் சோனியா. “இப்போராட்டத்தில் நாம் இணைய வேண்டும். பெண்களின் ஆதரவின்றி இப்போராட்டம் எப்படி முன்னேறிச் செல்லும்?”

இப்போராட்டத்தில் பெண்கள் முழு மனதுடன் பங்கேற்றதாகச் சொல்கிறார் பஞ்சாப் கிசான் யூனியனின் மாநிலக் குழு உறுப்பினர் ஜஸ்பிர் கவுர் நட். “அங்கு தங்களது இருப்பை தெரிவிப்பதற்காக கிராமத்திலிருந்து இனிப்பு அல்லது மளிகைப் பொருட்களை களத்திற்கு அனுப்பி வைகின்றனர். எல்லா வகையிலும் தங்களின் பங்களிப்பை பெண்கள் அளிக்கின்றனர்.”

சோனியாவும், அவரது 43 வயதாகும் கணவர் வீரேந்தரும் ஹரியானாவின் நில உரிமை பெற்ற ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வீரேந்தரின் தந்தையும் அவரது ஐந்து சகோதரர்களும் பெட்வாரில் தலா 1.5 ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர். சோனியாவின் மாமனார் உள்ளிட்ட நால்வர் இறந்துவிட்டதால் அவர்களின் நிலம் மகன்களிடம் சென்றுவிட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வீரேந்தரும், அவரது சகோதரரும் இப்போது கூட்டாக நிலத்திற்கு உரிமை கொண்டுள்ளனர்.

“எனக்கு 20 வயது இருந்தபோது கணவர் இறந்தார்,” என்கிறார் கணவனை இழந்த, வீரேந்தரின் அத்தைகளில் ஒருவர். 14 வயதில் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. “அது முதல் நான் எங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.” சோனியாவின் வீட்டிற்கு நான் சென்றபோது அருகே வசிக்கும் ஷாந்தியும் வந்திருந்தார். உடனடியாக சோனியாவின் விரிவான குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.

சோனியாவின் சின்ன மாமியாரான (மாமனாரின் சகோதரர் மனைவி) கணவனை இழந்த வித்யா தேவி என்னிடம் பேசுகையில்,“ நாங்கள் முன்பு அனைத்தையும் கைகளால் செய்தோம். இப்போது பெரும்பாலும் மின்சாரத்தில் செய்யப்படுகிறது,” 60களில் உள்ள அவர், அதிகாலை 4 மணிக்கு முன்பு தனது வாழ்க்கை தொடங்கியதை நினைவுகூர்ந்தார். “நாங்கள் கோதுமையை அரைத்து மாவு தயாரித்து கால்நடைகளுக்கு உணவளித்து பசுக்களிடம் பால் கறப்போம். பிறகு முழு குடும்பத்திற்கு உணவு தயாரிப்போம்.”

Left: Vidya Devi does not farm anymore, but supports the farmers' protests. Right: Shanti Devi started working on her family's land when she was 20 years old
PHOTO • Sanskriti Talwar
Left: Vidya Devi does not farm anymore, but supports the farmers' protests. Right: Shanti Devi started working on her family's land when she was 20 years old
PHOTO • Sanskriti Talwar

இடது: விவசாயம் எதுவும் செய்யாத வித்யா தேவி, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார். வலது: ஷாந்தி தேவி தனது 20 வயதில் குடும்ப நிலத்தில் வேலை செய்யத் தொடங்கினார்

காலை 8 மணிக்கு நான்கு கிலோமீட்டர் நடந்து வயலுக்குச் செல்வோம் என்கிறார் வித்யா தேவி.“ நாங்கள் அங்கு களையெடுத்தல், விதைத்தல், அறுத்தல் பணிகளை முடித்துவிட்டு மாலை 6 மணிக்குத்தான் வீடு திரும்புவோம்.” பிறகு கால்நடைகளுக்கு தீனி வைத்துவிட்டு, உணவு தயாரித்துவிட்டு இரவு படுக்க 10 மணி ஆகிவிடும். “அடுத்த நாளும் இதே சுழற்சி தான்” என்கிறார் வித்யா.

“சூரியன் மறையும் வரை ஒருபோதும் வயலில் இருந்து அவர்கள் திரும்புவதில்லை,” என்கிறார் சோனியா. மேலும் இப்போது பெண் விவசாயிகளுக்கு வேலைகள் எளிதாகிவிட்டன என்கிறார். “ இப்போது கதிர் அறுக்க, பூச்சிக்கொல்லி தெளிக்க இயந்திரங்கள் வந்துவிட்டன. டிராக்டரும் நிறைய வேலைகளைச் செய்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் அதிகம் பணம் செலவிட வேண்டும்.”

வித்யாவின் குடும்பம் தங்களுக்குச் சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதை கைவிட்டனர். “நாங்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்தவுடன் நிறுத்திவிட்டோம். என் கணவரின் பள்ளி வேலையை [ஆசிரியர்] படிப்பு முடிந்தவுடன் மகன் வாங்கி கொண்டான்,” என்கிறார் அவர்.

வித்யாவின் நிலத்தை ஷாந்தியும், அவரது 39 வயது மகன் பவன் குமாரும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியாவின் குடும்பமும் தங்களுக்குச் சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஷாந்திக்கும் பவனுக்கும் ஆண்டிற்கு ரூ.60,000க்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். இந்த வருவாயை வீரேந்தரும், அவரது சகோதரரும் பகிர்ந்து கொள்கின்றனர். சிறிதளவு நிலங்களில் ஷாந்தியும், பவனும் குடும்பத் தேவைக்கு காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்கின்றனர். சிலவற்றை குடும்ப உறவுகளுக்கும் தருகின்றனர்.

நெல் பயிரிடுவது நல்ல லாபத்தை தருவதில்லை. “நாங்கள் நெல் பயிரிட ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் ரூ.25,000 செலவிடுகிறோம்” என்கிறார் ஷாந்தி. கோதுமைக்கான அவர்களின் செலவு குறைவு. “கோதுமைக்கு அரிசியைப் போன்று அதிக நீர், உரம், பூச்சிக்கொல்லி தேவைப்படுவதில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 செலவிட்டால் போதும். பயிர்களை மழை சேதம் செய்யாவிட்டால் உற்பத்தியை நல்ல விலைக்கு விற்கலாம்,” எனும் அவர், 2020ஆம் ஆண்டு ஹரியானா விவசாயிகள் ஒரு குவிண்டால் கோதுமையை ரூ.1,840 என குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) விற்றதாகவும் தெரிவித்தார்.

Sunita (left) hasn't been to Tikri yet. She gets news about the protests on her phone. Her mother-in-law, Shanti (right), went to Tikri in mid-January
PHOTO • Sanskriti Talwar
Sunita (left) hasn't been to Tikri yet. She gets news about the protests on her phone. Her mother-in-law, Shanti (right), went to Tikri in mid-January
PHOTO • Sanskriti Talwar

சுனிதா (இடது) டிக்ரிக்கு இன்னும் செல்லவில்லை. தொலைப்பேசி வாயிலாக போராட்டங்கள் குறித்த செய்திகளை அவர் பெறுகிறார். அவரது மாமியார் ஷாந்தி (வலது) ஜனவரி மத்தியில் டிக்ரிக்குச் சென்று வந்துள்ளார்

போராட்டக் களத்தில் மகளிர் விவசாயிகள் தினத்தில் பங்கேற்க ஷாந்தி, வித்யா, சோனியா ஆகியோர் ஜனவரி 18ஆம் தேதி முதன்முறையாக டிக்ரிக்கு சென்றனர்.

“பயிர்களுக்கான விலை குறையும் என்பதால் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க நாங்கள் சென்றோம். நிர்ணயித்த விலையில் எங்களால் பயிர்களை விற்க முடியாது. நாங்கள் அடிமைகளாகி விடுவோம். எனவே தான் விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்,” என விளக்குகிறார் வித்யா. “இப்போது எங்களால் விவசாயம் செய்ய முடியாது, ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்.”

சிறு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேச சோனியா விரும்பினார். “பெரிய அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் அறுவடையை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சேமிக்க முடியும் அல்லது நல்ல விலை கிடைக்கும் போது விற்க முடியும். ஆனால் சிறிதளவு நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் அறுவடைக்கு முன்பே அடுத்த பருவத்திற்கான செலவுகள் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடுகின்றனர்,” என்கிறார் சோனியா. “எத்தனைக் காலத்திற்கு எங்களை அவர்கள் [அரசு] இப்படி அல்லாட விடுவார்கள், வேளாண் சட்டங்களின் பிரச்னைகளைத் தீர்க்காமல் இருப்பார்கள்?”

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

Vegetables and fruits, planted by Shanti in small patches of the family lands, are plucked by the women for consumption at home
PHOTO • Sanskriti Talwar
Vegetables and fruits, planted by Shanti in small patches of the family lands, are plucked by the women for consumption at home
PHOTO • Sanskriti Talwar

சிறிதளவு குடும்ப நிலத்தில் ஷாந்தியால் பயிரிடப்பட்ட காய்கறி, பழங்களை வீட்டு உபயோகத்திற்காக பறிக்கும் பெண்கள்

பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர். மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

பவனின் 32 வயதாகும் இணையர் சுனிதா, தனது இரண்டு மகன்களும் சிறுபிள்ளைகளாக இருப்பதால் டிக்ரிக்கும் இன்னும் செல்லவில்லை. போராட்டக் களத்தை ஒருமுறை பார்த்துவிட அவர் விரும்புகிறார். “அங்கு நடக்கும் அனைத்தையும் நான் அறிவேன். சமூக ஊடகத்தில் பார்த்தும், செய்திகளின் மூலமும் அவற்றை பின்தொடர்கிறேன்,” என்று அவர் என்னிடம் சொன்னார். ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது நடைபெற்ற மோதல் தொடர்பான செய்திகளை அவர் தொலைப்பேசியில் பார்த்தார்.

குடியரசு தினத்திற்குப் பிறகு விவசாயிகளின் போராட்டத்தை எவ்வாறு தொடர்ந்து ஆதரிப்பது என பெட்வாரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. “இப்போது அவர்கள் [போராட்ட களத்தில்] ஆணி பதிக்கின்றனர். போராடும் மக்களை இப்படித்தான் நடத்துவதா?” என்று என்னிடம் வித்யா கேட்டார். நிகழ்வுகள் குறித்து அவர் கோபமடைந்துள்ளார்.

“போராட்டக் களத்தில் இருக்கவே எங்கள் கிராமத்தின் பல பெண்களும் விரும்பினர். ஆனால் எங்களுக்கு இங்கு பொறுப்புகள் உள்ளன. எங்கள் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு தயாரித்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,” என்கிறார் சோனியா. அவருக்கு பதின் பருவத்தில் மூன்று மகள்களும், ஏழு வயதில் மகனும் உள்ளனர். “தேவைப்பட்டால் எங்கள் பிள்ளைகளையும் எங்களுடன் அழைத்துச் செல்வோம்,” என்கிறார் சுனிதா.

விவசாயிகளின் போராட்டத்தில் தங்களின் பங்கு முக்கியமானது என சோனியா நினைக்கிறார். “இது தனி ஒருவரின் போராட்டம் கிடையாது. நம்மில் ஒவ்வொருவரும் இதனை முன்னெடுக்க வேண்டும், வலிமை பெறச் செய்ய வேண்டும்.”

தமிழில்: சவிதா

Sanskriti Talwar

Sanskriti Talwar is an independent journalist based in New Delhi, and a PARI MMF Fellow for 2023.

Other stories by Sanskriti Talwar
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha