நூலிழையில் ஊசலாடும் லக்ஷ்மிபாயின் திறமை

“பரி” யின் தன்னார்வலர் சங்கேத் ஜெயின், இந்தியா முழுவதும் உள்ள 300 கிராமங்களுக்கு பயணம் சென்று அங்குள்ள பிற கதைகளுடன், ஒரு கிராமிய காட்சி அல்லது ஒரு நிகழ்வின் புகைப்படம் மற்றும் அந்தப் புகைப்படத்தின் ஒரு ஓவியம் ஆகிய இரண்டையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.  அந்த வரிசையில் இது “பரி” யின் ஒன்பதாவது கட்டுரை. சறுக்கும் அம்புக்குறியை இருபுறமும் இழுப்பதன் மூலம் புகைப்படம் அல்லது ஓவியத்தை முழுமையாகக் காணலாம்

“நூல் நூற்பதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்”, தன்னுடைய இராட்டையை பார்த்துக்கொண்டே மெல்லிய சிரிப்புடன் கூறிகிறார் லக்ஷ்மிபாய் தங்கர். தற்போது 70 வயதாகும் லக்ஷ்மிபாய், அரை நூற்றாண்டுக்கும் மேலாக செம்மறியாட்டு ரோமம் மற்றும் கம்பளியைக் கொண்டு கைகளால் நூல் நூற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் அபரிமிதமான திறமை இருக்கிறது, ஆனால் அதற்கான சந்தைதான் இல்லை.

முன்பெல்லாம், அவர் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை நூல் நூற்பார். “எனக்குத் திருமணம் (சுமார் 15 வயதில்) ஆவதற்கு முன்பு, என்னுடைய மாமியார் 12 மூட்டைகள்  (கிட்டத்தட்ட 120 கிலோ) செம்மறியாட்டு ரோமம் சேர்த்து வைத்திருந்தார்,” என்று நினைவுகூர்கிறார் லக்ஷ்மிபாய். “ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மணிநேரம் வேலை செய்து, அந்த 12 மூட்டை ரோமங்களிலிருந்தும் நூல் நூற்று முடிக்க எனக்கு ஆறு மாதங்கள் ஆனது,” என்றபடி பழைய நினைவுகளை அசைபோடுகிறார். ஆனால் இப்போது அவரது உழைப்பு நாளுக்கு இரண்டு மணி நேரமாகக் குறைந்துவிட்டது.

லக்ஷ்மிபாய் “தங்கர்” சமுதாயத்தை சேர்ந்தவர்.  பாரம்பரியமாக வெள்ளாடு மற்றும் செம்மறியாடு மேய்க்கும் சமூகமான இது, தற்போது மகாராஷ்டிராவில்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாக (ஓ. பி. சி) வகை படுத்தப்பட்டுள்ளது. இவர் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டதில் உள்ள கர்வீர் தாலுகாவில், அடூர் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். இங்கு ஆட்டின் ரோமம் மற்றும் கம்பளி வருடத்தில் இரண்டு முறை அகற்றப்படும். தீபாவளிக்குப் பிறகு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஒருமுறையும் அக்ஷய திரிதியைக்குப் பிறகு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒருமுறையும்.

“காலம் காலமாக பெண்கள் தான் நூல் நூற்று வருகிறார்கள். ஆண்கள் செம்மறியாடுகளின் ரோமத்தை அகற்றுவது மற்றும் பால் கறப்பது ஆகிய வேலைகளைச் செய்வார்கள்”, என்கிறார் லக்ஷ்மிபாய். பாரம்பரியமாக, ஆண்கள் மட்டும்தான் கால்நடைகளை மேய்க்க வெளியே செல்வார்கள், ஆனால் இப்போது பெண்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள் .

தங்கர்கள் இப்போது கிலோவிற்கு 8 ரூபாய் கொடுத்து, இயந்திரங்களின் உதவியுடன் கரடுமுரடான ஆட்டு ரோமத்தை மென்மையாகவும் ஒரே சீராகவும் மாற்றிக்கொள்கிறார்கள். அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆட்கள் இந்த வேலையை செய்து கொடுக்கிறார்கள், முன்பெல்லாம், மரத்தால் செய்யப்பட்ட வில் போன்ற கருவிகளைக் கொண்டு பெண்கள் இதைக் கைகளால் செய்வார்கள்.

மென்மையாக்கப்பட்ட ஆட்டு ரோமம் ஒரு இராட்டையில் நூலாக நூற்கப்படுகிறது. இந்த நூல் பிறகு “சங்கர்”களிடம் அனுப்பிவைக்கப்படுகிறது. (தங்கர் சமூகத்தின்  ஒரு துணை சாதியான சங்கர் சமூகத்தினர் பாரம்பரியமாக கைத்தறியில் கம்பளி நெய்வதில் தேர்ந்த நெசவாளர்கள்). சங்கர் சமூக ஆண்கள் இந்த நூலைக் கொண்டு கோங்காடியா  என்றழைக்கப்படும் போர்வைகளை  நெசவு செய்வார்கள் . 7.5 அடி நீளமும் 2.5 அடி அகலமும் கொண்ட ஒரு கோங்காடியை நெய்ய சங்கர்களுக்கு 6 கிலோ ஆட்டு ரோமம் தேவைப்படும். மேலும் கூலியாக ரூபாய் 400 வாங்குவார்கள். தங்கர் பெண்கள், தாங்கள் நூல் நூற்க எடுத்துக்கொண்ட பலமணி நேர கடின உழைப்பையும் கணக்கில் கொண்டு, ஒரு கோங்காடியா வை  ரூபாய் 1300 க்கு விற்க முயற்சிப்பார்கள்.

“இப்போதெல்லாம் ஒரு கோங்காடியாவை 1300 ரூபாய்க்கு விற்பது சிரமமாக இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் விசைத்தறி போர்வைகளின் விலை ரூபாய் 500 தான் . மேலும் ஒரு கோங்காடியா  வை வடிவமைக்கத் தேவையான கடின உழைப்பை மக்கள் புரிந்துகொள்வதில்லை”, என்கிறார் லக்ஷ்மிபாய், தன்னால் மூன்று மாதங்களாக விற்க முடியாமல் இருக்கும் ஒரு போர்வையை சுட்டிக்காட்டிக்கொண்டே. பத்து வருடங்களுக்கு முன்பு வரை அவர்களால் மாதத்திற்கு நான்கு ஐந்து போர்வைகளை எளிதாக விற்க முடிந்தது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்து விட்டது.

முன்பெல்லாம் கோலாப்பூர் மாவட்டதின் கலம்பே, தார்ஃப் காலே, பாமதே, சூயே, கோபார்டே  ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள்  லக்ஷ்மிபாயின் வீட்டிற்கே வந்து கோங்காடியா  வாங்கிச் செல்வார்கள். “ஆனால் இப்போது வயதானவர்கள் மட்டும்தான் வாங்குகிறார்கள்,” என்கிறார் அவர்.

“முப்பது வருடங்களுக்கு முன்பு வரை ஏறத்ததாழ 30 தங்கர் பெண்கள் எங்கள் கிராமத்தில் நூல் நூற்கும் வேலையைச்  செய்வார்கள். இப்போது நாங்கள் 12 பேர் மட்டும்தான் எஞ்சியிருக்கிறோம்,” கணக்கிடுகிறார் லக்ஷ்மிபாய். இந்த எண்ணிக்கை குறைவிற்கான முக்கிய காரணங்கள்: குறைவான லாபம் , முதுமை, மற்றும் கோங்காடியா  விற்கான வரவேற்பு குறைவது ஆகியவைதான்.

நூல் நூற்பது, வயல்களில் கூலி வேலை செய்வது மற்றும் கோங்காடியா  விற்பது என்று லக்ஷ்மிபாய் செலவிடும் பலமணி நேர உழைப்பிற்கு பலனாக அவருக்கு கிடைப்பது மாதம் ரூபாய் 5000 க்கும் குறைவாகவே. பத்து வருடங்களுக்கு முன்பு வரை, அடூர் கிராமவாசிகளின் வயல்களில் பருவ காலத்தில் விவசாயக் கூலியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.  தினசரி எட்டு மணி நேர வேலைக்கு அவருக்கு கூலியாக 100 ரூபாய் கிடைக்கும்.  “என்னுடைய பெற்றோரும் விவசாயக் கூலிகளாகத்தான் வேலை செய்தார்கள். அவர்களால் என்னை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை,” நினைவு கூர்கிறார் லக்ஷ்மிபாய்.

ஒவ்வொரு வருடமும், லக்ஷ்மிபாயின் கணவர் ஷாம்ராவ் தங்கர் (வயது 75) கிட்டத்தட்ட  200 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை மேய்ச்சலுக்காக, புனே, சாங்கிலி, கோலாப்பூர், சதாரா மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டதில் உள்ள கிராமங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அழைத்துச் செல்வதுண்டு. பொதுவாக, மேற்கு மகாராஷ்டிராவில் கனமழை (ஜூன் முதல் செப்டெம்பர் வரை) தொடங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு தங்கர்கள் இடம் பெயர்வது வழக்கம்.

ஷாம்ராவ் மற்றும் லக்ஷ்மிபாய் தம்பதியினரின் இரண்டு மகன்களான, பீர்தேவ் (வயது 35) மற்றும் சுரேஷ் (வயது 40) இருவரிடமும் கூட்டாக 64 செம்மறியாடுகள் மற்றும் 6 வெள்ளாடுகள் மட்டும்தான் இருக்கின்றன. ஆடுகளின் எண்ணிக்கை குறைவைக் குறித்து ஷாம்ராவ் கூறுவது, “மேய்ச்சல் நிலங்களில் கூட இன்று எல்லோரும் கரும்பு பயிரிடத் தொடங்கிவிட்டார்கள். மேலும் விவசாயிகள் எங்களைத் தங்கள் நிலங்களுக்குள் நுழைய விடுவதில்லை. கால்நடைகளை மேய்ப்பது இப்போது மிகவும் சிரமமான காரியம்”

இவர்களின் இரண்டு மகள்கள், 40 வயதாகும் பாரதி மற்றும் 30 களின் தொடக்கத்தில் இருக்கும் சங்கீதா ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரில், பாரதி மட்டுமே நூல் நூற்பதைத் தொடர்ந்து வருகிறார். “என்னுடைய மருமகள்: ‘என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது. இதை விட விவசாயக் கூலியாக வேலை செய்வது எவ்வளவோ மேல்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்”, லக்ஷ்மிபாய் கூறுகிறார். இளைய தலைமுறையினர் பலரும் வருமானத்திற்கான வேறு வழிகளை தேடிச் செல்கிறார்கள். உதாரணமாக, தொழிற்சாலை வேலை வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்கு.

இராட்டையில் லக்ஷ்மிபாயின் தினசரி உழைப்பு இப்போது இரண்டு மணி நேரமாகக்  குறைந்துவிட்டது. அதிகரிக்கும் முதுகுவலி மற்றும் அவருடைய திறமைக்கான வரவேற்பு குறைந்துவருவது இரண்டும் தான் இதற்கான காரணம். “இளைய தலைமுறையினர் கண்டிப்பாக இந்தத்  தொழிலை விரும்பமாட்டார்கள். என்னுடைய ஒரே கனவு, எங்களுடைய கடின உழைப்பின் அடையாளமான  எங்கள் கோங்காடிகளுக்கு ஒரு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்பதே,” என்கிறார் லக்ஷ்மிபாய்.

தமிழில்: சுபாஷினி அண்ணாமலை

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Subhashini Annamalai

Subhashini Annamalai is a freelance translator and voice artist based out of Bangalore. A life-long learner, she believes that there is something for her to learn from every person she meets.

Other stories by Subhashini Annamalai