ஜூலை மாத இறுதியில் தெலுங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள சத்னாலா நீர்த்தேக்கம் நிரம்பியிருந்தது. தங்கள் பயிர்களுக்கு சம்பா மற்றும் குறுவை என இரண்டு பருவங்களிலும் நீர்ப்பாசனம் செய்யலாம் என்று கரஞ்சி கிராமத்து விவசாயிகள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் எதிர்பாராமல் 200 மிமீ மழை பெய்தது. இதனால் சத்னாலா நீரத்தேக்கத்தில் (கோதாவரியில் இணையும் பெங்கங்காவின் ஒரு துணை நதி இது), நீரோட்டத் திசையிலும் நீரோட்டத்தின் எதிர்திசையிலும் உள்ள கால்வாய்களின் இரு கரைகளிலும் உள்ள வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பயிர்கள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது – முக்கியமாகப் பருத்தி மற்றும் சிறிது சோயா. இப்போது நிலங்களில் கற்களும் மண்ணும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையே, வழக்கமாகப் பெய்யும் 880 மிமீ மழையை விட, அதிலாபாத் 44 சதவிகிதம் அதிக மழையைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதங்களில், மாவட்டத்தின் இயல்பை விட 27 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பல விவசாயிகளுக்கு 2017 குறைந்த வருமானம் உள்ள ஆண்டாக இருந்தது. ஆனால் 2018 வருமானமே இல்லாத ஆண்டாக மாறிவிட்டது.

அந்த விவசாயிகளில் ஒருவர்தான் குந்தவர் சங்கீதா. இவர் சத்னாலா அணையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 1360 மக்கள் வசிக்கும் கிராமமான ஜைனத் மண்டலத்தில் உள்ள கரஞ்சியைச் சேர்ந்தவர். ஜூன் மாதம் அவரும் அவரது கணவர் கஜானனும் தங்களது முதல் பயிரான பருத்தியைப் பயிரிட்டனர். 2019 ஜனவரி-பிப்ரவரியில் அறுவடை செய்யலாம் என்கிற நம்பிக்கையில்.

தங்களது சொந்த நிலத்தில் முதல் சாகுபடி செய்வதற்கு முன் சங்கீதா விவசாயக் கூலியாக வேலை செய்து வந்தார். கஜானனும் ஆண்டுக்கு ரூ.86,000 சம்பளத்திற்கு விவசாயக் கூலியாக வேலை செய்தார். சங்கீதாவும் அதே நிலத்தில் வேலை செய்ய வேண்டுமென்கிற நில உரிமையாளரின் நிபந்தனையின் படி அவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். சங்கீதாவுக்கு அங்கு எப்போதாவது தான் வேலை இருக்கும். நாட்கூலியாக ரூ.120 கிடைக்கும். “கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் ஒரு நில உரிமையாளர் கீழ் வேலை செய்தோம்”, என்கிறார் சங்கீதா. வேலை இல்லாத நாட்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MGNREGS) கீழ் வழங்கப்படும் கூலி வேலை கைகொடுக்கும். “அல்லது நான் [பெங்கங்காவிலிருந்து, ஒரு தனியார் ஒப்பந்தக்காரருக்கு] டிராக்டர்களில் மணல் ஏற்றவும் இறக்கவும் செய்வேன்,” என்கிறார் கஜானன்.

Kuntawar Gajanan (left) and Kuntawar Sangeetha (right) on the field where all the crops had been washed away
PHOTO • Harinath Rao Nagulavancha
Sangeetha's farm where the plants in all the three acres had been washed away up to the canal
PHOTO • Harinath Rao Nagulavancha

கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த குந்தவர் கஜானன் மற்றும் குந்தவர் சங்கீதா இருவரும் வெள்ளத்தில் தங்கள் பயிர்களை (வலது) இழந்துள்ளனர்: 'என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை...நாங்கள் முதல் முறையாக இப்போதுதான் சாகுபடி செய்கிறோம்'

விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களைச் சேர்ந்த நிலமற்ற தலித் பெண்களுக்காக, 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அரசின் நில கொள்முதல் மற்றும் நில விநியோகத் திட்டத்தின் (LPS) கீழ், மே 2018 இல் சங்கீதாவுக்கு மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கரஞ்சி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 340 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 170 பேர் பெண்கள். இவர்களில், முந்தையத் திட்டங்களின் கீழ் நிலம் பெற்றவர்கள் அல்லது குடும்பத்தில் யாராவது சொந்தமாக நிலம் வாங்கியவர்கள் ஆகியவர்களைத் தவிர்த்து, மொத்தம் 40 பெண்கள் மூன்று ஏக்கரோ அல்லது அதற்கும் குறைவாகவோ நிலத்தை பெற்றுள்ளனர்.

சங்கீதாவுக்கு விவசாயம் செய்ய நிலம் கிடைத்ததும், அவரும் கஜானனும் - அவர்களின் மூன்று குழந்தைகளான சௌந்தர்யா, 16; வைஷ்ணவி, 14; மற்றும் தனுஷா, 12 - கவலையுடன் இருந்தனர். “விவசாயக் கூலிகளான எங்களுக்கு பயிர் சாகுபடிக்கான வழிமுறைகள் தெரியாது. முதலாளி எங்களுக்கு கொடுக்கும் வேலைகளை மட்டுமே செய்யத் தெரியும்.”

குந்தவர் குடும்பத்தின் நம்பிக்கையை மழை தகர்த்துவிட்டது. “எங்களுக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. நாங்கள் சாகுபடி செய்வது இதுவே முதல் முறை,” என்கிறார் 35 வயதாகும் சங்கீதா. “வெள்ளம் எங்கள் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டத்தைப் போல இருக்கிறது.”

சங்கீதாவுக்கு இன்னும் நில உரிமை கிடைக்கவில்லை – அதாவது பட்டாதாரர் பாஸ்புக். ஒருவருக்கு (பட்டாதாரர்) சொந்தமான நிலத்தைப் பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு சிறிய பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் அது. வருவாய்த் துறையில் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது இந்தத் தாமதத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக, ஜூன் மாதம் அவர் பருத்தி விதைத்த நேரத்தில், வங்கியின் மூலம் கிடைக்கும் பயிர்க் கடன் அல்லது தெலுங்கானா அரசாங்கத்தின் ரைது பந்து (விவசாய முதலீட்டு ஆதரவுத் திட்டம்) ஆகியவற்றிலிருந்து உதவி பெற அவர் தகுதி பெற்றிருக்கவில்லை. இவற்றின் மூலம் அவருக்கு ஒவ்வொரு விதைப்புப் பருவத்திற்கும் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். நில உரிமை இல்லாததால், அவர் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் கிடைக்கும் பயிர்க் காப்பீடு மற்றும் ரைது பீமாவின் கீழ் கிடைக்கும் விவசாயிகளின் ஆயுள் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றையும் இழந்து விட்டார்.

“நாங்கள் கிராமத்து வட்டிக்கடைக்காரரிடமிருந்து ரூ. 30,000 கடன் வாங்கினோம்,” என்கிறார் சங்கீதா. அவரும் கஜானனும் இந்தப் பணத்தை நிலத்தை சுத்தம் செய்து உழுவதற்கும், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொண்டனர். “கடைசியில் எங்கள் அறுவடையை அவரிடம் எடுத்துச் செல்ல இருந்தோம். அவர் அதிலிருந்து கடன் மற்றும் வட்டித்தொகையை கழித்துவிட்டு மீதிப் பணத்தை எங்களுக்குத் தருவார். ஆனால் இப்போது எங்கள் பயிர் முழுவதும் சேதமடைந்துவிட்டது,” எனக் கூறுகிறார் சங்கீதா. அவருக்கு வட்டி விகிதம் எவ்வளவு என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 7 முதல் 8 மாத பயிர் பருவத்திற்கு வட்டிவிகிதம் 20 முதல் 25 சதவிகிதம் என்று இங்குள்ள மற்றவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நல்ல ஆண்டில், அதாவது வானிலை சாதகமாக இருந்து பூச்சித் தாக்குதல்களும் இல்லாமல் நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலையும்  கிடைக்கும் சமயத்தில், ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை பருத்தி அறுவடை செய்து, அதன்மூலம் ரூ.22,000 லாபம் ஈட்டலாம். அவ்வாறில்லாமல், இந்த வருடம் கரஞ்சி கிராமத்தில், நில விநியோகத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற 40 தலித் பெண்களுமே தங்கள் பயிர்களை இழந்துள்ளனர்.

கரஞ்சியில் 73 விவசாயிகளும் 323 ஏக்கரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையின் முதற்கட்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஜைனத் மண்டலம் முழுவதும், வெள்ளத்தால் 5,845 விவசாயிகளும், 21,260 ஏக்கர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

The damaged fields in Karanji village. The LPS beneficiaries’ lands were perpendicular to the canal. As the spread of the flood was larger, almost everything was washed away
PHOTO • Harinath Rao Nagulavancha
The Sathnala dam
PHOTO • Harinath Rao Nagulavancha

இடது: கரஞ்சி கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வயல். புதிய நில உரிமையாளர்களின் மனைகள் கால்வாய்க்கு செங்குத்தாக இருந்ததால் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன. வலது: சத்னாலா அணை நிரம்பினால் 25 கிராமங்களில் 24 , 000 ஏக்கர் வரை பாசனம் பெற முடியும்

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், கஜானனும் சங்கீதாவும் தெலுங்கானா கிராம வங்கி, கரஞ்சி கிளையில் கடனுக்காக விண்ணப்பித்தனர். அவர்கள், நிலப் பதிவு விவரங்கள் (தெலுங்கானா பட்டியல் சாதியினர் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து பெறப்பட்டது) மற்றும் மண்டல வருவாய் அதிகாரியிடமிருந்து (MRO) பெறப்பட்ட சான்றிதழையும் சமர்ப்பித்திருந்தனர். செப்டம்பர் இறுதிக்குள் அவர்களுக்கு ரூ. 60,000 கடன் தொகை கிடைத்தது.

“குறுவைப் பருவத்தில் [இந்த மாதம், அதாவது அக்டோபர் முதல்] கொண்டைக்கடலை பயிரிடலாம் என்றிருக்கிறோம். அதற்காக வெள்ளத்தில் வாடிப்போன பயிர்களை அகற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்காக மேலும் கடன் வாங்க வேண்டியதிருக்கும்,” என்கிறார் கஜானன். இவர், பருத்தியில் அடைந்த நஷ்டம் மற்றும் கொண்டைக்கடலையில் செய்த முதலீடு இரண்டையும் கொண்டைக்கடலையின் அமோக விளைச்சல் மூலம் மீட்டுவிடலாம் என்று நம்புகிறார்.

நில விநியோகத் திட்டத்தின்படி, நிலம் பெறுபவர்களே இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். கரஞ்சியில் கால்வாய்க்கு அருகில் உள்ள நிலம் மட்டும்தான்  இருந்தது. “நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த நிலங்களைத் தேர்வு செய்தோம். இது நல்ல வளமான பூமி. மேலும் எல்லா ஆண்டும் இரண்டாம் பருவத்தில் கூட பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். அதனால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்,” என்று தல்லாபெல்லி போச்சண்ணா கூறுகிறார். நில விநியோகத் திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கப்பட்ட 40 தலித் பெண்களில் அவரது மனைவி தல்லாபெல்லி கவிதாவும் ஒருவர்.

“வெள்ளம் வருவதற்கு முன்பு வரை, பருத்திச் செடிகளுக்குத் போதுமான தண்ணீர் கிடைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் இளஞ்சிவப்புக் காய்ப்புழு [pink bollworm] செடிகளைத் தாக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தோம். போதிய தண்ணீர் மற்றும் பூச்சித் தாக்குதல்கள் இல்லாமல், இந்த வருடம் நல்ல மகசூல் கிடைத்திருக்கும். ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? பயிர்கள் போனாலும், நிலமாவது மிஞ்சியிருக்கிறதே,” என்கிறார் நில விநியோகத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற சென்னூர் ஸ்ரீலதாவின் கணவர் சென்னூர் கங்கண்ணா.

“நிலம் ஒருபோதும் நம்மை ஏமாற்றாது. இந்த வருடம் இல்லையென்றாலும், அடுத்த வருடம் நல்ல மகசூல் கிடைக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. தேர்தலைப் போல, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு அளவுகளில் வெள்ளம் வரும். அதை நாங்கள் எதிர்கொள்வோம்,” என்று சொல்கிறார்கள், தங்கள் கதைகளைக் கூறுவதற்காகக் கூடியிருக்கும் சில விவசாயிகள்.

Left: Mentham Pentamma  and Mentham Suresh of Syedpur village were hoping to fund their daughter's education with the profit from the cotton harvest, but lost their entire crop.
PHOTO • Harinath Rao Nagulavancha
 As did Bavne Bhim Rao, who is now  working as a labourer, spraying pesticides
PHOTO • Harinath Rao Nagulavancha

இடது: சையத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மெந்தம் பெண்டம்மா மற்றும் மெந்தம் சுரேஷ் இருவரும் பருத்தியில் கிடைக்கும் லாபத்தை தங்கள் மகளின் படிப்புச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர் . ஆனால் பயிர் முழுவதையும் இழந்துவிட்டனர். வலது: அவர்களைப் போலத்தான் பாவ்னே பீம் ராவும், இவர் இப்போது விவசாயக் கூலியாக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் வேலையைச் செய்து வருகிறார்

நீர்த்தேக்கத்தின் கிழக்கே, நீரோட்டத்திற்கு எதிர்த் திசையிலிருக்கும் கிராமங்களிலும் கூட அழிவுகள் குறைவாக இல்லை. கரஞ்சியிலிருந்து 30 கிமி தொலைவில் உள்ள பேலா மண்டலத்தில், சுமார் 1700 பேர் வசிக்கும் சையத்பூர் கிராமத்தில், பயிர்களும் விளைநிலங்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.  இப்போது பல நிலங்களிலும் கற்கள் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றில் ஒன்றுதான் 35 வயதாகும் மெந்தம் சுரேஷின் நிலம். ஒவ்வொரு ஆண்டும் இவர் தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் மற்றும் குத்தகைக்கு எடுத்த 10 ஏக்கர் இரண்டிலும் பருத்தி பயிரிடுவார். ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்தை விட அதிக வருவாய் கிடைக்க வேண்டுமென்று மேலும் 12 ஏக்கரை குத்தகைக்கு எடுத்திருந்தார். இதிலிருந்து வரும் லாபத்தை தனது மகளின் படிப்புச் செலவுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. லாபத்திற்கு பதிலாக இப்போது இவரது கடன் 8.8 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு வட்டியும் வேறு கட்ட வேண்டும்.

“எனது மூத்த மகள் 12 ஆம் வகுப்பில் 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பொறியியல் படிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். நான்தான், எனது கணவரிடம், கால்வாயை ஒட்டிய நிலத்தை [குத்தகைக்கு] தேர்ந்தெடுக்கச் சொன்னேன். பயிர்களுக்கு நன்றாக பாசனம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை வைத்து கல்லூரிக் கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறினேன்,” என்கிறார் சுரேஷின் மனைவி பெண்டம்மா.

சையத்பூரில் உள்ள பாவ்னே பீம் ராவின் நிலமும் வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது. அவருடைய ஏழு ஏக்கரில், மூன்று ஏக்கர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. ஒரு ஏக்கரில் பருத்திப் பயிர்கள் வேரோடு சாய்ந்துவிட்டன மற்றும் மீதமுள்ள நிலத்தில் இருந்த பருத்திப்பூக்கள் வாடிவிட்டன. இவருக்குக் கடன் கொடுக்க வட்டிக்கடைக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. இதனால் பீம் ராவ் இப்போது நாளுக்கு ரூ. 200 சம்பளத்திற்கு விவசாயக்கூலியாக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கும் அவரது மனைவி உஜ்வாலாவுக்கும், ஜெயஸ்ரீ என்கிற 14 மாதம் பெண் குழந்தை இருக்கிறாள்.

இவர்கள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஒரு வாய்ப்பிருக்கிறது. வெள்ளத்தை இயற்கைப் பேரிடராக அரசு வகைப்படுத்தினால், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் விவசாயிகள் இழப்பீடு பெறலாம் - விளைந்த பயிர் இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.2720 மற்றும் நிலத்தில் குப்பைகளை அகற்ற ரூ.4,880. “அதிகாரிகள் வந்து எங்கள் நிலத்தை பார்வையிட்டனர். எங்களுக்கு இழப்பீடு கிடைக்குமென்று உறுதியளித்துள்ளனர்,” என்று கூறுகிறார் சங்கீதா. இவரும் அதிலாபாதின் மற்ற விவசாயிகளும் காத்துக்கொண்டிருக்கின்றனர் – நம்பிக்கையோடு.

தமிழில்: சுபாஷிணி அண்ணாமலை

Harinath Rao Nagulavancha

Harinath Rao Nagulavancha is a citrus farmer and an independent journalist based in Nalgonda, Telangana.

Other stories by Harinath Rao Nagulavancha
Translator : Subhashini Annamalai

Subhashini Annamalai is a freelance translator and voice artist based out of Bangalore. A life-long learner, she believes that there is something for her to learn from every person she meets.

Other stories by Subhashini Annamalai