இது தினகர் ஐவாலேவுக்கு ஒரு அமைதியான ஆண்டாகும்.  பல மாதங்களாக அவரது புல்லாங்குழல் எந்த இசையையும் உருவாக்கவில்லை. “இந்த கருவி நேரடியாக வாயுடன் தொடர்பு கொள்கிறது. இந்த கொரோனா காலங்களில் இதுபோன்ற தொடர்புகளில் ஆபத்து உள்ளது, ”என்று அவர் தனது மண் மற்றும் செங்கல் வீட்டிற்குள் இருக்கும் பட்டறையில் அமர்ந்து கூறுகிறார்.

அவருக்கு அடுத்ததாக ஒரு பழைய மர பெட்டியில் கருவிகள் நிறைந்துள்ளது. ஒரு வருடம் முன்பு வரை அவர் பயன்படுத்தியதைப் போலவே அவர் இதைப் பயன்படுத்தினால், ஒரு மூலையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூல ’லகுனா’ மஞ்சள் மூங்கில் குச்சிகளை ஒரு நல்ல புல்லாங்குழலாக மாற்ற அவருக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.

அதற்கு பதிலாக, 74 வயதான  தினகர் நாம் பேசும்போது உயிரற்ற மூங்கிலை வெறித்துப் பார்க்கிறார். அவர் தனது கைவினைப்பொருளை உருவாக்க சுமார் 150,000 மணிநேரம் பணியாற்றி, ஒரு நாளைக்கு 10 மணிநேரம் உழைத்து, ஆண்டுக்கு 250 முதல் 270 நாட்களுக்கு ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக உழைத்திருக்கிறார் -  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவரது பணிகள் நின்று போனது.

அவர் 19 வயதில் புல்லாங்குழல் தயாரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஐவாலே இவ்வளவு நீண்ட இடைவெளி எடுத்ததில்லை. அவர் வழக்கமாகச் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முழுவதும் பல கண்காட்சிகளில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை கடந்து விற்பனை செய்ய செல்வதுப்போல, கடந்த வருடம் செல்லவில்லை.  கண்காட்சிகள்  போன்ற பெரிய கூட்டங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

Top left: The flute-makers toolkit with (left-to-right) a hacksaw blade, two types of patli, hatodi, three types of chaku (knives) a cleaning chaku, two varieties of masudichi aari, pakad, two aari for making holes, and the metal rod on top is the gaz. Top right: The tone holes on a flute are made using these sticks which have marks for measurements. Bottom: Dinkar Aiwale has spent over 1.5 lakh hours perfecting his craft and now takes less than an hour to make a flute
PHOTO • Sanket Jain

மேல் இடது: புல்லாங்குழல் தயாரிக்க உதவும்  டூல்கிட் (இடமிருந்து வலமாக) ஒரு ஹாக்ஸா பிளேடு, இரண்டு வகையான உளி, சுத்தி, மூன்று வகையான கத்திகள், சுத்தம் செய்யும் கத்தி, இரண்டு வகையான ரம்பம், இடுக்கி, துளைகள் ஈட இரண்டு கடையாணி, மற்றும் மேலே உள்ள இரும்பு கம்பி அளவீட்டிற்கு ஆகும். மேல் வலது: அளவீடுகளுக்கான குறியீடுகள் கொண்ட இந்த குச்சிகளைப் பயன்படுத்தி ஒரு புல்லாங்குழலின் தொனி துளைகள் தயாரிக்கப்படுகின்றன. கீழே: தினகர் ஐவாலே தனது கைவினைப்பொருளை துள்ளியமாக செய்ய 1.5 லட்சம் மணி நேரத்திற்கும் மேலாக செலவழித்திருக்கிறார், இப்போது ஒரு புல்லாங்குழல் தயாரிக்க ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே அவருக்கு ஆகும்

ஊரடங்கிற்கு முன்பே, தினகர் ஐவாலேவின் குடும்பம் - அவர்கள் ஹோலார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு பட்டியல் சாதியினர் என பட்டியலிடப்பட்டவர்கள் - கோடோலியில் புல்லாங்குழல் உருவாக்குவதில் ஈடுபட்ட ஒரே குடும்பமாகும். இவரின் கிராமத்தில் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தின் பன்ஹாலா தாலுகாவில் சுமார் 29,000 நபர்கள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) உள்ளனர்.

கடந்த காலத்தில், அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பாரம்பரியமாக ஷெஹ்னாய் மற்றும் டஃப்டா (தம்பூரி) வீரர்கள், பெரும்பாலும் மத அல்லது சமூகக் கூட்டங்களுக்கு, கிராமத்திலிருந்து கிராமத்திற்குச் செல்வார்கள். அவர்கள் ஒரு இசைக்குழுவை உருவாக்கினர். மேலும் 1962 -ஆம் ஆண்டு,  குழுவில் சேர்ந்த 14-15 இசைக்கலைஞர்களில் தினகரும் ஒருவர். அவருக்கு அப்போது 16 வயதாக இருந்தது. மேலும், 8 ஆம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் அவரது தந்தை, மறைந்த பாபுராவ், உடன் செல்லத் தொடங்கினார். அவர் இரண்டு இசைக்குழுக்களில் வாசிக்க ஆரம்பித்தார், ஒன்று தனது சொந்த கிராமத்திற்கும், மற்றொன்று பக்கத்து கிராமத்திற்கும், இரண்டுமே 'அனுமன்' இசைக்குழு என்று அழைக்கப்பட்டது.

"என் தந்தையைப் போலவே, நான் 38 ஆண்டுகளாக இசைக்குழுவில் கிளாரினெட் மற்றும் ஊதுகுழல் வாசித்தேன்," என்று ஐவாலே பெருமிதத்துடன்   கூறுகிறார். இந்த பரம்பரை பற்றி அவர் வெளிப்படையாக பேசுகிறார்: "வஜந்த்ரி சா முல்கா ஜார் ராட்லா தார் டு ஸ்வரதச் ரட்னா [ஒரு இசைக்குழு இசைக்கலைஞரின் குழந்தை அழுதாலும், அதன் அழுகை கூட இசைக்கு ஒத்துப்போகும்]." அவர் புல்லாங்குழல் மற்றும் ஷெஹ்னாய் ஆகியவற்றை சமமாகவும் திறமையாகவும் வாசித்தார்.

இருப்பினும், இசைக்குழுவில் வாசிப்பதன் மூலம் கிடைத்த வருமானம் மிகக் குறைவு, ஒருபோதும் போதுமானதாக இல்லை. "14-15 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு மூன்று நாள் விழாவிற்கு மொத்தமாக 60 ரூபாய் கிடைக்கும்", என்று அவர் நினைவு கூர்ந்தார். அது அவருக்கு இசைக்குழுவின் மூன்று நாட்கள் வேலைக்கு ரூ.4 மட்டுமே கிடைக்கும்.  எனவே தினகர் கூலித் தொழிலாளியாக அதிக வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லாதபோது, வேறு சில திறன்களைப் பெற விரும்பினார்.

காணொளி: கொலாப்பூரிலிருந்து கொடோலி கிராமம் வரை புல்லாங்குழல் இசை

"வேறு வழியில்லை," அவர் எப்படி புல்லாங்குழல் செய்யத் தொடங்கினார் என்பதைப் பற்றி பேசுகிறார், "நான் எப்படி என் குடும்பத்தை நடத்த முடியும்? கூலி உழைப்பு போதுமானதாக இல்லை.” 1960-க்களில் ஒரு விவசாயத் தொழிலாளியாக பத்து மணிநேர வேலையில், அவருக்கு வெறும் பத்தண்ணா மட்டுமே கிடைத்தது (1 அண்ணா ஒரு ரூபாயில் 1/16  பங்கு). தினகர், "ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட எனக்கு உதவக்கூடிய" ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக ஒரு தொழிலாளியாக பணிபுரிந்தார்”, என்று கூறுகிறார்.

20 கிலோமீட்டர் தொலைவிலிருந்த சவர்தே கிராமத்தில், அவரது மாமனார், மறைந்த தாஜிராம் தேசாய், மூங்கில் புல்லாங்குழல் செய்வது எப்படி என்று அவருக்குக் கற்பிக்க அவருக்கு பதில் கிடைத்தது. அவர் அவ்வப்போது பயணம் செய்து இசைக்குழுவுடன் கூட தொடர்ந்து வாசித்தார். (2000 ஆம் ஆண்டில், அவரது மனைவி தாராபாய் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது பயணங்கள் நிறுத்தப்பட்டன, அவரை கவனித்துக்கொள்ள அவர் வீட்டில் இருக்கவேண்டியிருந்தது. தாராபாய் 2019ஆம் ஆண்டு காலமானார்).

அவர்களின் மகன், 52 வயதான சுரேந்திராவும், தனது தந்தையிடமிருந்து சிறந்த கருவியை உருவாக்கும் அறிவைப் பெற்றிருக்கிறார். (தினகர் மற்றும் தாராபாயின் இரண்டு மகள்கள் திருமணமாகி, அதில் ஒருவர் காலமாகிவிட்டார்). சுரேந்திரா 13 வயதிற்குள் புல்லாங்குழல் விற்பனை செய்யத் தொடங்கினார், அவருக்கு 16 வயதாக இருந்தபோது, அவரது தந்தை செய்ததைப் போலவே, அவரும் 10 ஆம் வகுப்பிலிருந்து முழுநேர வேலைக்காக பள்ளிப்படிப்பை நிறுத்தினார். "ஆரம்பத்தில், [தெருவில் புல்லாங்குழல் விற்பதில்] நான் தயங்கினேன், வெட்கப்பட்டேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், தினகர் மேலும் கூறுகிறார், "ஆனால் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டியிருக்கும் போது, நீங்கள் தயங்குவதற்கு எல்லாம் இடம் இருக்காது."

கடந்த ஆண்டில் ஊரடங்கு தொடங்கும் வரை, சுரேந்திரா தனது தந்தையுடன் புனே, மும்பை போன்ற நகரங்கள் உட்பட பல இடங்களுக்கு புல்லாங்குழல் விற்க தவறாமல் பயணம் செய்தார். ஆனால் அவரும் தினகரும் 2020ம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஒரு புல்லாங்குழலைக்கூட விற்க முடியவில்லை. அவர்களுக்கு வெவ்வேறு அளவிலான ஐந்து டஜன் புல்லாங்குழல்களுக்கு (அவர் செய்யும் மிக நீளமான புல்லாங்குழல் தோராயமாக 2.5 அடி)பெற்ற ஒரே ஆர்டர் நவம்பரில் வந்தது. அவர்களின் கிராமத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் சாங்லி நகரத்தில் ஒரு வியாபாரிக்கு தேவைப்பட்டது. அவர்கள் 60 புல்லாங்குழல் - ரூ. 1,500க்கு வாங்கினர். விற்பனையும் வருமானமும் இல்லாத அந்த மாதங்களில், அவர்களின் குடும்பம் நகரங்களில் பணிபுரியும் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனுப்பிய பணத்தை சார்ந்திருந்தது.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

தனது புல்லாங்குழல்களை வடிவமைத்ததற்காக அஞ்ச்ரா மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தின் சந்த்கட் தாலுகாவின் சந்தைகளில் இருந்து மிகச்சிறந்த தரமான மூங்கில் தினகர் ஐவாலே தேர்வு செய்து வாங்குவார். வலது: தேவையான நீளத்திற்கு ஏற்ப மூல மூங்கில் குச்சியை வெட்டிய பிறகு, மூங்கிலில் உட்குழி செய்ய ஒரு உலோக கம்பியில் விரைவாக நகர்த்துகிறார்

நவம்பர் மாதத்திற்குப் பிறகும், வியாபாரம் நடக்கவில்லை. தினகரும் சுரேந்திராவும் சென்ற கடைசி கண்காட்சி ஒரு வருடத்திற்கு முன்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அன்று சாங்லி மாவட்டத்தில் ஆதம்பர் கிராமத்தில் நடந்தது. "எந்த கண்காட்சியிலும், நாங்கள் 2-2.5 மொத்த (1 மொத்த = 144 அலகுகள்) புல்லாங்குழல்களை எளிதாக விற்க முடியும்”, என்று சுரேந்திரா கூறுகிறார். 500க்கும் மேற்பட்ட புல்லாங்குழல்களைக் செய்வதன் மூலம் ஒரு கண்காட்சிக்கு முன்கூட்டியே தயார் ஆகிறார்கள் ஐவாலேக்கள்.

ஒவ்வொரு ஆண்டும், மேற்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு கர்நாடகாவில் உள்ள கிராமங்களில் 70 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளுக்கு அவர்கள் செல்வார்கள். "நாங்கள் குறைந்தது 50 புல்லாங்குழல்களை ஒரு ஸ்டாண்டில் தொங்கவிட்டு எங்கள் புல்லாங்குழலை வாசிப்போம். இசை மக்களை மகிழ்வித்தால் மட்டுமே, அவர்கள் புல்லாங்குழலை வாங்கப் வருவார்கள், ”என்கிறார் தினகர்.

இந்த புல்லாங்குழல்களை வடிவமைப்பதற்காக அஜ்ரா மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தின் சந்த்கட் தாலுகா சந்தைகளில் இருந்து மிகச்சிறந்த தரமான மூங்கிலை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஒரு ஷெண்டா (மரத்தின் உச்சி), சுமார் 8 முதல் 9 அடி வரை இருக்கும், அது இப்போது 25 ரூபாய். "1965 ஆம் ஆண்டில் நான் புல்லாங்குழல் தயாரிக்கத் தொடங்கியபோது அதற்கு 50 பைசா செலுத்த வேண்டியிருந்தது. ஒரு ஷெண்டா மூலம், நாங்கள் 7-8 புல்லாங்குழல்களை எளிதாக உருவாக்க முடியும், ”என்று தினகர் விளக்குகிறார்.

தேவையான நீளத்திற்கு ஏற்ப மூல மூங்கில் குச்சியை வெட்டிய பின், ஃபிப்பிள் வகையான (தரையிளவில் செங்குத்தாக வைக்கப்படும்)  புல்லாங்குழல்களுக்கு  - அவர் 15 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவிலான புல்லாங்குழல்களை உருவாக்குகிறார் - மூங்கிலில் உட்குழி உருவாக்க ஒரு உலோக கம்பியைப் பயன்படுத்துகிறார். ஒரு சிறிய பிழை கூட மோசமான தரத்தில் புல்லாங்குழல் உருவாகி, மிகவும் சாதாரணமான இசையை உருவாக்கும்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: மர தக்கை அடைப்பு  துளைக்குள் வைக்கப்படுவதற்கு முன்பு, புல்லாங்குழலின் பரிமாணங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட வேண்டும். வலது: அடி துளைக்குள் தக்கையை சுத்தியல் கொண்டு அடிக்கிறார்

புல்லாங்குழல் தயாரிப்பதற்கு முன், தினகர் ஒரு கிலோகிராம் எடையுள்ள சாக்வான் (தேக்கு மரம்) துண்டை மராத்தியில் குட்டியா என அழைக்கப்படும் சிறிய செவ்வக துண்டுகளாக வெட்டுகிறார் (கார்க் அல்லது ஃபிப்பிள் பிளக்). மூங்கில் சுத்தம் செய்தபின், தேக்கு தக்கை அடைப்பு, ஊதும் காற்றும் வெளியில் போகாமல் இருக்க, ஒரு சுத்தியலைப் பயன்படுத்தி அடி துளைக்குள் வைக்கப்படுகிறது.

தினகரின் மனைவி தாராபாயும் புல்லாங்குழல்கள் தயாரிப்பார். குறிப்பாக,  குட்டியாவை தயாரிப்பதில் அவர் திறமையானவர் ”அவர் நினைவாக, நான் அவரால் தயாரிக்கப்பட்ட இந்த ’குட்டியா’வை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்," என்று அவர் கண்ணீருடன் கூறுகிறார்.

ஒரு புல்லாங்குழலில் உள்ள தொனி துளைகள் தேக்கு குச்சிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, அவை அளவீடுகளுக்கு குறீயிடுகள் கொண்டுள்ளன. இந்த பணியை துல்லியமாக செய்ய தினகருக்கு இதுபோன்ற 15 குச்சிகள் உள்ளன. அவரும் சுரேந்திராவும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலாப்பூர் நகரில் உள்ள பட்டறைகளுக்குச் செல்வார்கள். அங்கு திறமையான ஹார்மோனியம் தயாரிப்பாளர்கள் இந்த அளவீடுகளைக் குறிக்கின்றனர்.

குறிக்கப்பட்ட இடங்கள் பிறகு பாரம்பரிய உபகரணங்கள் கொண்டு துளைகளாக்கப்படும். “வழக்கமான உபகரணம் மொத்த புல்லாங்குழலையும் உடைத்துவிடும். எனவே அவற்றை நாங்கள் பயன்படுத்துவதில்லை,” என்கிறார் தினகர்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: தொனி துளைகளைக் குறிக்கும் முன் தினகர் குறிப்பு குச்சியையும் மூங்கில் துண்டையும் ஒன்றாக வைத்திருக்கிறார். வலது: புல்லாங்குழலில் குறிக்கப்பட்ட தற்காலிக துளைகள் சூடான இரும்பு கம்பியால் நிரந்தரமாக செய்யப்படுகின்றன

பின்னர், அவர் மூங்கிலில் சரியான துளைகளை உருவாக்க குறைந்தது ஆறு இரும்பு கம்பிகளை (மராத்தியில் காஸ்) சூடாக்குகிறார். "வழக்கமாக, நாங்கள் ஒரு நேரத்தில் குறைந்தது 50 புல்லாங்குழல்களை எடுத்து மூன்று மணி நேரத்தில் இந்த செயல்முறையை முடிக்கிறோம்," என்று தினகர் கூறுகிறார். அதிகாலையில், அவர் அதே சுலியில் (மண் அடுப்பில்) கம்பி மற்றும் தண்ணீரை (குளிக்க) சூடாக்குகிறார். "இந்த வழியில் நாங்கள் இரண்டு பணிகளையும் முடிக்க முடியும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

தொனி துளைகளை துளையிட்ட பிறகு, அவர் பட்டைச்சீலைப் பயன்படுத்தி புல்லாங்குழல் மெருகூட்டுகிறார். இப்போது தக்கை அடைப்பின் கூடுதல் பகுதி ஒரு வளைவைக் கொடுப்பதற்காக வெட்டப்படுகிறது. இது புல்லாங்குழலின் வடக்கு முனைக்கும் கூடுக்கும் இடையில் வீசப்படும் காற்றுக்கு ஒரு சிறிய வழியை உருவாக்க உதவுகிறது.

"ஒவ்வொரு மூங்கில் துண்டுகளும் குறைந்தது 50 தடவைகள் எங்கள் கைகளில் வந்து செல்கின்றன," என்று கடினமான செயல்முறையை விளக்கியப்படி தினகர் கூறுகிறார்,. "ஒரு புல்லாங்குழல் பார்க்க எளிமையானது, ஆனால் ஒன்றை உருவாக்குவது எளிதல்ல."

சுரேந்திராவின் மனைவி சரிதா, கிட்டதட்ட 40 வயதாகும் அவரும், குறிக்கப்பட்ட துளைகளை துளையிடுவது, தடியை சூடாக்குவது, தேக்கு துண்டுகளை வெட்டுவது மற்றும் ’குட்டியா’க்களை உருவாக்குவது போன்றவற்றிலும் பணியாற்றுகிறார். "எங்களைப் பொறுத்தவரை, இந்த திறமை கடவுள் பரிசளித்தது," என்று அவர் கூறுகிறார், "நாங்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை."

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: அடி துளைக்கு அருகில் ஒரு கூடுக்கான குறியீடு குறிப்படுக்கிறது. வலது: ஒரு உலோக கம்பியைப் பயன்படுத்தி புல்லாங்குழலில் நிரந்தர துளைகளைத் துளைத்தல்

ஊரடங்கிற்கு முன்பு, கண்காட்சிகளில், தினகர் மற்றும் சுரேந்திரா வழக்கமாக பெரிய புல்லாங்குழல்களை (இசைக்கலைஞர்கள் பயன்படுத்துகின்ற) தலா ரூ.70 முதல் ரூ.80 வரை  விற்பனை செய்வார்கள்.  குழந்தைகளுக்கு சிறிய புல்லாங்குழல்களை ரூ. 20-25க்கு  விற்பனை செய்வார்கள்.  ஒரு வருடம் முன்பு வரை வெவ்வேறு அளவிலான ஒரு டஜன் புல்லாங்குழல் அவர்களுக்கு ரூ. 300 முதல் 350 வரை ஈட்டி தந்தன.

ஐவாலேக்கள் குறுக்கு புல்லாங்குழல் அல்லது தரையில் இணையாக வாசிக்கப்படும் பக்கவாட்டு புல்லாங்குழல் போன்றவையும் செய்கின்றன. “நாங்கள் அதை கிருஷ்ண புல்லாங்குழல் என்று அழைக்கிறோம். இது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்படுவதால் மக்கள் அதை தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விடுகிறார்கள், ”என்று தினகர் கூறுகிறார். “ஒவ்வொரு கிருஷ்ண புல்லாங்குழலும் குறைந்தது ரூ. 100 விற்கப்படுக்கிறது, மற்றும் நகரங்களில் இதற்கு நிறைய தேவை உள்ளது, ”என்று அவர் மேலும் கூறுகிறார். அவர்கள் பெறும் விலைகள் அவர்களின் தீவிர உழைப்புக்கு ஈடுகட்டவில்லை என்றாலும், “இது போதுமான பணத்தையே தருகிறது” என்று ஊரடங்கிற்கு முந்தைய காலங்களைக் குறிப்பிடுகிறார் தினகர்.

ஐந்து தசாப்தங்களாக சிறந்த புல்லாங்குழல்களை வடிவமைத்த பின்னர், துல்லியமாக வேலைப்பாட்டில் செலுத்தப்படும் கவனம் தினகரின் கண்களைப் பாதித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு கண்புரை ஏற்பட்டது. “இப்போது நன்றாகப் பார்க்கமுடிகிறது”,  2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு அறுவை சிகிச்சைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டு கூறுகிறார், "ஆனால் இந்த வேலை நிறைய முதுகுவலியை ஏற்படுத்துகிறது."

யாராவது அவரிடம் ‘உங்கள் முழு வாழ்க்கையையும் நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், தினகர் கூறுகிறார், “இந்த புல்லாங்குழல் தயாரிப்பால் மட்டுமே, என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனைவருமே வாழ்க்கையில் படித்து முன்னேற முடிந்தது என்பதை நான் பெருமையுடன் சொல்ல முடியும்; நான் அவர்களை சரியான பாதையில் நடத்த முடிந்தது. இந்த திறமை எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. ”

PHOTO • Sanket Jain

மேல் இடது: புல்லாங்குழலில் தினகர் செய்த நிரந்தர துளைகள். இங்கே எந்த பிழையும் மோசமான குறிப்புகள் மற்றும் தாளங்களுக்கு வழிவகுக்கிறது, இது புல்லாங்குழலின் தரத்தை பாதிக்கிறது. மேல் வலது: புல்லாங்குழலின் மூக்கு போல செயல்படும் கூட்டை தினகர் மிக நுணுக்கமாக செதுக்குகிறார். கீழே இடது: புல்லாங்குழல் தயாரிப்பாளரும், ஒரு புல்லாங்குழல் கலைஞருமான சுரேந்திர ஐவாலே, 52, கலை வடிவத்தை உயிரோடு வைத்திருக்கும் ஐவாலேயின் கடைசி தலைமுறை ஆவார். கீழ் வலது: தினகர் மற்றும் தாராபாயின் பழைய புகைப்படம்

2000 ஆம் ஆண்டு முதல், தினகர் மற்றவர்களுக்கு புல்லாங்குழல் இசைக்கக் கற்றுக் கொடுத்து வருகிறார், மேலும் கோடோலி கிராமத்தில் ‘மாஸ்டர்’ என்று அறியப்படுகிறார். அவரது மாணவர்கள் - இதுவரை குறைந்தது 50 பேர் இருந்ததாக அவர் மதிப்பிடுகிறார் - அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த பாடங்களுக்கு அவர் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. "மக்கள் எனது பெயரை நினைவில் வைத்திருந்தால் போதும்," என்று அவர் கூறுகிறார்.

ஊரடங்கு மற்றும் அதன் பின்விளைவுகள் அவரது வியாபாரத்தை கடுமையாக பாதித்திருந்தாலும், புல்லாங்குழலுக்கான தேவை வலுவாக இருக்கும் என்று தினகர் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் இளம் தலைமுறையின் லட்சியங்கள் வேறுபட்டவை என்பதையும் அவர் அறிவார், மேலும் சிலர் புல்லாங்குழல் செய்யும் கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். "நீங்கள் [இதில்] போதுமான பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் இப்போது யார் இவ்வளவு கடினமாக உழைக்க விரும்புகிறார்கள்? ஒருவர் லட்சியத்துடன் இருக்கும்போது அதற்கு போதுமான நேரத்தைக் கண்டறிபார். இது உங்கள் விருப்பத்தைப் பற்றியது, "என்று அவர் கூறுகிறார்.

74 வயதில், அது தினகரில் உறுதியைக் காட்டுகிறது, மேலும் அவர் இப்போது புல்லாங்குழல் வாசிக்கும் போது சில சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும், அவர் புல்லாங்குழல் வடிவமைப்பதைத் தொடர்கிறார். "இது [புல்லாங்குழல் தயாரித்தல் மற்றும் வாசித்தல்] நான் இருக்கும் வரை வாழும்," என்று அவர் கூறுகிறார்.

தமிழில்: ஷோபனா ரூபகுமார்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Shobana Rupakumar

Shobana Rupakumar is a Chennai based journalist and she has worked on women and environmental issues.

Other stories by Shobana Rupakumar