மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் ஜூன் 6ஆம் தேதி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற உறுதியை ஊடகத்திற்கு சொன்னபோது, “வரலாற்றில் மிகப்பெரியது”  என்றார். ‘தள்ளுபடிக்கான’ தகுதி என்பது அதைவிட பெரிதாக மாறிவிட்டது.

தள்ளுபடிக்கான பல்வேறு நிபந்தனைகளைக் கேட்ட பிறகு, நிவாரணத்திற்காக காத்திருந்த அவுரங்காபாத் மாவட்டம் பருண்டியின் வறட்சியான கிராமத்தைச் சேர்ந்த பப்பாசாஹேப் இர்காலுக்கு சிரிப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை. “இதற்கான [தள்ளுபடிக்கான] உச்சவரம்பு 1.5 லட்சம் ரூபாய்,” என்று கூறியபடி தனது 16 ஏக்கர் நிலத்தில் மனைவி ராதா, தந்தை பானுதாஸ் ஆகியோருடன் சேர்ந்து களை எடுக்கிறார் இந்த 41 வயது விவசாயி. “எனக்கு 9 லட்சம் ரூபாய் கடன்தொகை உள்ளது. நான் 7.5 லட்சத்தை திரும்ப செலுத்தினால்தான் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடிக்கான பலன் கிடைக்கும்.”

வறட்சி ஆண்டுகளில் தொடர்ந்து விளைச்சல் சரிந்ததால் 2012-2015 ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கடன் குவிந்துவிட்டதாக சொல்கிறார் ராதா. 2014ஆம் ஆண்டு இக்குடும்பம் தாங்கள் தோண்டிய கிணற்றுடன் அருகில் உள்ள ஏரியை இணைப்பதற்காக நான்கு கிலோமீட்டருக்கு குழாய் அமைத்துள்ளது. “ஆனால் அந்த ஆண்டும் மழை நன்றாக பெய்யவில்லை,” என்கிறார் அவர். “துவரையும், பருத்தியும் முற்றிலுமாக கருகிவிட்டன. தேவையில் உள்ள விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஃபட்நவிஸ் அறிவித்தபோது, எங்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. இது எல்லோரையும் ஏமாற்றும் செயல். எங்களால் திரும்ப செலுத்த முடியும் என்றால் முதலில் எங்கள் தலையில் ஏன் கடனை வைத்துக் கொள்ள வேண்டும்?”

PHOTO • Parth M.N.

ரூ.1.5 லட்சம் தள்ளுபடி பெறுவதற்கு பருண்டி கிராமத்தைச் சேர்ந்த பப்பாசாஹேபும், ராதா இர்காலும் முதலில் ரூ.7.5 லட்சம் கடனை அடைக்க வேண்டும்! '... இது நம்மை ஏமாற்றும் செயல், என்கிறார் ராதா

ஜூன்1ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் திடீர் போராட்டத்தை அடுத்து முதலமைச்சர் இந்த வாக்குறுதியை அளித்தார். உற்பத்திச் செலவை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவிகிதம் மற்றும் ஒரு கடன் தள்ளுபடி ஆகியவற்றைப் அளிக்க வேண்டும் என்ற சுவாமிநாதன் ஆணையத்தின் நீண்டகால பரிந்துரை நிலுவையில் உள்ளது. விவசாயிகளின் கோபத்தை மட்டுப்படுத்த தள்ளுபடி எனும் வாக்குறுதியை ஃபட்நவிஸ் அளித்தார். தள்ளுபடிக்கான விண்ணப்பம் ஜூலை 24ஆம் தேதி இணைய வழியில் தொடங்கியபோது, இடம்பெற்ற எச்சரிக்கைகள் மராத்வாடா விவசாயிகளை கோபப்படுத்தியுள்ளன.

ரூ.1.5 லட்சம் என்ற வரம்பிற்கு வெளியே நிவாரணம் அதிகம் தேவைப்படும் பல விவசாயிகள் உள்ளனர் அல்லது சுமார் 1.5 லட்சம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை.

லத்தூர் மாவட்டம் மடிஃபால் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மங்கள் ஜாம்பிரி மகாராஷ்டிரா வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரூ.50,000 கடனை அடைத்துவிட்டால் தள்ளுபடிக்கான தகுதியைப் பெற்றுவிடலாம் என அவர் கருதினார். ஆனால் மற்றொரு நிபந்தனையில் அவர் சிக்கிக் கொண்டார். “என் மகன் [வீரன்] அசாமில் ராணுவத்தில் இருக்கிறான்,” என்கிறார் அவர். “குடும்பத்தில் அரசு ஊழியர்கள் இருந்தால் தள்ளுபடிக்கான தகுதியை விவசாயிகள் பெறுவதில்லை.”

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தனது கணவரை மங்கள் இழந்தார். அதிலிருந்து ஓய்வின்றி வீட்டு வேலைகளுடன் இரு மகன்கள், ஒரு மகளையும் வளர்த்துக் கொண்டு ஓய்வின்றி தனது நான்கு ஏக்கர் நிலத்தில் வேலை செய்து வருகிறார். அதில் அவர் துவரை, சோயாபீன் சாகுபடி செய்கிறார். அவர் ஏற்கனவே வங்கியில் ரூ.2 லட்சம் கடன்தொகையை திருப்பி செலுத்தாத காரணத்தால் புதிய கடன் வாங்க தகுதி பெறவில்லை. இதனால் ஜூன் மாத விதைப்பிற்காக தனியார் கந்துவட்டி நிறுவனத்திடம் அவர் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கினார். “கடன் தள்ளுபடி பற்றி அறிந்தவுடன், இந்தக் கடனை அடைக்க புதிய வங்கியில் கடன் பெறும் தகுதியை விரைவில் பெறுவேன் என நினைத்தேன்,” என்றார் அவர். “வங்கி வட்டியைவிட இங்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். நான் மேலும் 70,000-80,000 ரூபாய் வரை [கடன் தொகையைத் தாண்டி] நான்கு ஆண்டுகளின் இறுதியில் செலுத்த வேண்டும். வங்கியும் உங்களை அவமதிக்காது.”

காணொளி: மகன் இராணுவ வீரராக உள்ளதால் மதிஃபால் கிராமத்தின் மங்கல்  ஜாம்பிரே தகுதி இழக்கிறார். குடும்ப உறுப்பினர் அரசு வேலையில் இருந்தால் தள்ளுபடி கிடையாது

கந்துவட்டி முகவர்களின் தொடர் அழைப்பு, மிரட்டல்களால் மங்கல் அவமானப்படுத்தப்பட்டு வருகிறார். முதல் ஆறுமாத தவணையான ரூ. 28,800 தொகையை கூட அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.  “எங்கள் வீட்டை பிடுங்கிவிடுவோம் என அவர்கள் மிரட்டுகின்றனர்,” என்கிறார் அவர். “மாதத்திற்கு 4-5 முறை அவர்கள் வருகின்றனர். அச்சமயங்களில் அவர்கள் வருவதை பார்த்தால் நான் அண்டை வீடுகளில் ஒளிந்துகொள்வேன். மாநில அரசின் கடன் தள்ளுபடி உதவினால் அவர்களிடம் இருந்து நான் நிரந்தரமாக விடுபடுவேன்.”

கிராமத்தின் தேநீர் கடையில் 62 வயது திகம்பர் கோசேவும்கூட துயரத்தில் உள்ளார். அவரது பெயரில் மூன்று ஏக்கர் நிலமும், அவரது இருமகன்களின் பெயர்களில் தலா ஐந்து ஏக்கர் நிலமும், மருமகள் பெயரில் மூன்று ஏக்கர் நிலமும் உள்ளன. “நான் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்,” என அவர் விளக்குகிறார். “என் மருமகள் 1.5 லட்சம் ரூபாயும், ஒரு மகன் 4-5 லட்சமும், மற்றொருவன் சுமார் 2 லட்சமும் கடன் பெற்றுள்ளனர். கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இணைய மையத்திற்கு சென்று [கடன் தள்ளுபடி விண்ணப்பம்] நிரப்பி கொடுத்தோம். அனைத்து ஆவணங்களையும் அளித்துவிட்டோம். நேற்றிரவு குறுந்தகவல் வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்று.”

மாநில அரசு விவசாயிகள் மீது ஒரு மோசமான கேலியை செய்வதாக கோசே நம்புகிறார். “மக்களை முட்டாளுக்குவதே அவர்களின் நோக்கம்,” என்கிறார் கோபத்துடன். தேநீர் கடையின் தகரக் கொட்டகையில் திரண்டுள்ள மற்ற விவசாயிகளும் இதை ஆமோதிக்கின்றனர். “எங்களிடம் தனித்தனியே நிலம், தனித்தனியேக் கணக்குகள் உள்ளன, எங்களுக்கு ஏன் தகுதியில்லை? எங்களுக்கு நம்பிக்கையை அரசு ஊட்டியதே சிதைப்பதற்குத்தான்.”

காணொளி: ’ எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அரசு சிதைக்கிறது,’ என்று துயரத்துடன் சொல்கிறார் திகம்பர் கோசே

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத் தலைவர் ராஜே தேஸ்லே பேசுகையில், தள்ளுபடியில் நீக்கப்படுவது மகாராஷ்டிராவின் பெரும்பாலான விவசாயிகளை பாதிக்கும். ஜூன் போராட்டத்தின் போது மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுகானு (தனிக்குழு அல்லது கட்டுப்பாட்டுக் குழு) குழுவின் உறுப்பினராக தேஸ்லே இருந்தார். “மாநில அரசு ரூ.34,000 கோடிகளை தள்ளுபடி செய்யப்போவதில்லை என்று தோன்றுகிறது,” என்றார். (மொத்த கடன் தள்ளுபடி தொகை என ஃபட்நவிஸ் மதிப்பீடு செய்த தொகை). “விவசாயிகளின் துயரைப் போக்குவதற்குத் தான் இத்தனை நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றதா என்று எங்களுக்கு வியப்பாக உள்ளது.”

இந்த எண்ணிக்கை இதை உண்மை என்றே காட்டுகிறது: கடன் தள்ளுபடிக்கான கடைசித் தேதி செப்டம்பர் 22 என உள்ள நிலையில் இதுவரை சுமார் 57 லட்சம் விண்ணப்பங்களை மாநில அரசு பெற்றுள்ளதாக செய்தியாளரிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் தெரிவித்தார். அனைவரும் தகுதி பெற மாட்டார்கள். இந்த எண்ணிக்கை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில், உண்மையான இலக்கான 89 லட்சம் பலனாளிகள் என்பது 31 லட்சமாக சுருங்கியுள்ளது- மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவில் இருந்து பெறப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் பல தகுதி நெறிமுறைகளை எதிர்பார்க்கவில்லை.

2016 ஜூன் மாதம் ‘செயலற்ற சொத்துகளுக்கும்’ (NPAs) தள்ளுபடி உண்டு என்று ஃபட்நவிஸ் தெரிவித்தார். ஒரு NPA என்பது, கணக்கு வைத்திருப்பவர் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாதபோது, ​​செயலற்ற நிலையில் இருக்கும் கணக்கைக் குறிக்கிறது. ஆனால், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளரான தேவிதாஸ் துல்ஜாபுர்கர் கூறுகிறார்: “ஒவ்வொரு ஆண்டும், வங்கிகள் சாத்தியமான NPA கணக்குகளை மதிப்பாய்வு செய்து, அவற்றை டேர்ம் லோனாக மாற்றுகின்றன, அதனால் அவற்றின் NPA கணக்குகள் காகிதத்தில் மட்டுமே இருக்கும். கணக்கு பின்னர் ஒரு 'செயல்படும் சொத்து' ஆகிறது. இது ஒரு பெரிய செயல்முறை. இதனால் அதிக எண்ணிக்கையிலான விவசாயக் கணக்குகள் கடன் தள்ளுபடியை இழக்க நேரிடும்.”

பர்பானி மாவட்டம் ஜ்வாலா சுடே கிராமத்தில், சுரேஷ் சுடேயின் வங்கிக் கடன் புதுப்பிக்கப்பட்டதால் அந்த 45 வயது விவசாயி வங்கியின் NPAவிலிருந்து வெளியேற்றப்பட்டார். பர்பானி மாவட்ட கூட்டுறவு வங்கியில் அவர் ரூ. 1 லட்சத்திற்கும், அவரது மனைவியின் கணக்கில் ரூ.1.20 லட்சமும் கடன் பெற்றுள்ளனர். “என் அண்ணன் சந்திகாதாஸ் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனை பெற்றிருந்தார்,” என்கிறார் சுரேஷ். “அவர் NPA பிரிவில் வருவார், ஆனால் உச்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாய் என்பதால் அவரால் கடன் தொகையை ஒன்றும் செய்ய முடியாது.”

PHOTO • Parth M.N.

சுரேஷ் சுடே (வலது) அவரது உறவினர் லக்‌ஷ்மன் ஆகியோரது குடும்பத்தில் இருவர் கடன் தள்ளுபடிக்கான தகுதி பெறாததால் கடன் நெருக்கடியில் உயிரிழந்தனர்

ஆகஸ்ட் 3ஆம் தேதி பருத்தி பயிர்கள் கருகியதை உணர்ந்தவுடன் சந்திகாதாஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுரேஷின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள் ஜ்வாலா சுடேவில் உள்ள சுடேவின் வீட்டிற்குச் சென்றனர். அவரது இரு மகன்களும் சேலு, பீடில் படிக்கின்றனர். அவரது 18 வயது மகள் சரிகா பீடில் படித்து வந்தார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி துக்கம் விசாரிக்க வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு சரிகா தேநீர் தயாரித்து கொடுத்தார். பிறகு தனது அறைக்குள் சென்றவர், நீண்ட நேரம் ஆகியும், கதவை தட்டியபோதும் வெளியே வரவில்லை. சரிகா பதிலளிக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

அறையில் மராத்தியில் எழுதிய தற்கொலை குறிப்பில் அவர் கூறியுள்ளது: “அன்புள்ள அப்பா, பயிர் சேதத்தால் மாமா தற்கொலை செய்து கொண்டார். நமது பயிர்களும் கருகிவிட்டன. நீங்களும் கடன் வாங்கித் தான் விதைத்தீர்கள். உங்களது பண நெருக்கடியை என்னால் பார்க்க முடியாது. கடந்தாண்டு அக்காவை திருமணம் செய்து வைத்தபோது ஏற்பட்ட கடனை உங்களால் இப்போது வரை திருப்பி செலுத்த முடியவில்லை. எனது திருமணமும் உங்களுக்கு கூடுதல் சுமையை தரும். எனவே அதை தடுக்க என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்.”

ஒரு வாரத்திற்குள் குடும்பத்தில் இரு உறுப்பினர்களை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத சுரேஷ், இதுபோன்ற மோசமான முடிவை சரிகா எடுப்பார் என ஒருபோதும் கற்பனை செய்தது கிடையாது எனச் சொல்கிறார். “இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் வயலுக்குச் சென்றிருந்தோம், அங்கு பயிர்களின் நிலையை அவர் கண்டார்,” என கண்ணீர் மல்க அவர் நினைவுகூர்கிறார். “நான் படிக்காதவன். அவள் தான் என் கணக்குகளை சரிபார்க்க உதவுவாள். அக்காவின் திருமணத்திற்கு எவ்வளவு செலவிட்டோம் என்பது அவளுக்கு தெரியும். மகள்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களைப் போன்று பெற்றோரை கவனித்துக் கொள்ள யாராலும் முடியாது.”

ஒருவேளை கடன் தள்ளுபடிக்கு தான் தகுதி பெற்றிருந்தால் சரிகா இப்படி அச்சப்பட்டிருக்க மாட்டாள் என்கிறார் சுரேஷ். அவரது தற்கொலை ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கிவிட்டது. இத்துயரத்தால் அக்குடும்பத்தை நேரில் வந்து பார்த்து அவர்களின் வங்கிக் கடன் விவரங்களை கேட்க வேண்டிய நிலைக்கு தாசில்தார் தள்ளப்பட்டார். தகுதி அடிப்படையில் அவருக்கு கடன் தள்ளுபடி கிடைக்காவிட்டாலும், கடன் பற்றி கவலைப்பட வேண்டாம் என சுரேஷிடம் தாசில்தார் கூறியுள்ளார்.

மராத்வாடாவின் பிற விவசாயிகளைப் போலல்லாமல், சுரேஷின் கடன் தள்ளுபடி செய்யப்படலாம். ஆனால் அதற்கான விலை மிகவும் அதிகம்.

தமிழில்: சவிதா

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha