நான்டெடின் மஹூர் தாலுக்காவில் உள்ள சவர்கேத் கிராமத்தில் பலரும் சிரிப்பதோ, புன்னகைப்பதோ இல்லை. தெரியாதவர்களிடம் பேசும்போது, மிகவும் கவனத்துடன் பேசுகின்றனர். “இது சங்கடமானது,” என்கிறார் ரமேஷ்வர் ஜாதவ். அவர் பேசும்போது பற்கள் அனைத்தும் அழுகி, உடைந்து, மஞ்சள் நிறத்திலிருந்து கரும் பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளதைக் காண முடிகிறது.

சுமார் 500பேர் வசிக்கும் சவர்கேத் கிராமத்தில் இதுபோன்ற பிரச்னையால் 22 வயது விவசாய கூலித்தொழிலாளியான ரமேஷ்வர் மட்டும் பாதிக்கப்படவில்லை. அங்குள்ள எல்லா பெரியவர்களின் பற்களும் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. பலரும் தளர்ச்சியுடன் அல்லது நிரந்தர கூன் முதுகுடன் குறுகிய பாதையில் அல்லது வயல்வெளிகளில் மெதுவாக நடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்களுக்கு அடிக்கடி ஓய்வுத் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த கிராமமும் வெவ்வேறு காலத்தில் நகர்ந்து செல்வதை போன்று தோன்றுகிறது.

பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை அதன் மீது நடமாடும் இம்மனிதர்கள் பிரதிபலிக்கிறார்கள்: இங்குள்ள நிலத்தடி நீரில் ஃபுளோரைட் உள்ளது. மண், பாறைகள், நிலத்தடி நீரில் இயற்கையாக காணப்படும் ரசாயனம். ஆனால் அடர்ந்த நிலையில் இது கடுமையான தீங்கை விளைவிக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மிகி மேல் ஃபுளோரைட் இருந்தால் பயன்படுத்துவதற்கு ஆபத்தானது என்கிறது. 2012-13 வாக்கில் நிலத்தடி அளவீடு மற்றும் வளர்ச்சி முகவம் (ஜிஎஸ்டிஏ) பரிசோதனை செய்தபோது சவர்கேதில் அது 9.5 மிகி ஆக இருந்தது.

“நீரில் உள்ள அதிகளவிலான ஃபுளோரைடினால் ஃபுளோரோசிஸ் உருவாகியுள்ளதால் அதன் வளர்ச்சி வேறுபடுகிறது,” என்கிறார் நான்டெட் நகர மருத்துவரான டாக்டர் ஆஷிஷ் அர்தாபுர்கார். ஒருமுறை சீர்கேடு தொடங்கிவிட்டால் அதை மாற்ற முடியாது என்று அவர் கூறுகிறார். “ஆனால் குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர். அறிவுப் பல் முளைத்த பிறகு தான் பற்களில் ஃபுளோரோசிஸ் பிரச்னை வரும், ஆனால் ஆறு வயதிற்கு பிறகு நடக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பிறகு ஃப்ளோரோசிஸ் அவற்றை பாதிக்கின்றன.”

Man with rotten teeth
PHOTO • Parth M.N.
Man with his two front teeth missing
PHOTO • Parth M.N.

குடிநீரில் அதிகளவு ஃப்ளோரைடினால் சவர்கேதில் பாதிக்கப்பட்ட பலரில் ரமேஷ்வர் ஜாதவ் (இடது) அவரது தந்தை சேஷாராவ் அடங்கும்

“தொடக்க நிலையிலேயே ஃப்ளோரோசிசை கண்டறிந்து விடலாம்” என்கிறார் லத்தூர் நகர புகழ்பெற்ற பல் மருத்துவரான சதிஷ் பெரஜ்தார். “இல்லாவிட்டால் பாதிப்பு எல்லை கடந்துவிடும். மக்கள் நிரந்தரமாக முடமாகி, பற்கள் அழிந்துபோகும். உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து ஒட்டுமொத்த செயல்திறனையும் பாதிக்கும், பிற நோய்களுக்கான இடமாகவும் உங்களை மாற்றும்.”

இதுபற்றி சவர்கேத் மக்கள் நீண்ட காலம் அறியவில்லை. 2006ஆம் ஆண்டு மாநில அரசு கிணறு தோண்டி குழாய் அமைத்தது முதல் அவர்கள் இந்த மாசடைந்த நீரை உபயோகித்து வருகின்றனர். ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த கிணறு இன்றும் ஒட்டுமொத்த கிராமத்தின் குடிநீர்த் தேவையை தீர்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வீட்டு வாசலின் அருகிலும் ஆழ்துளையில் கை பம்புகள் உள்ளன. “நாங்கள் குடித்த தண்ணீர் [கை பம்புகள் மூலம்] தூய்மையானது அல்ல என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. இது ஆபத்தானது என எங்களிடம் யாரும் சொல்லவில்லை. நீங்கள் தண்ணீருக்காக தவிக்கும் போது, கிடைக்கும் எதையும் நீங்கள் குடிப்பீர்கள்,” என்கிறார் விவசாய தொழிலாளியும், விவசாயியுமான 55 வயது மதுகர் ஜாதவ்.

விழிப்புணர்வு மெல்ல எழுவதற்குள் மதுகரின் சகோதரி அனுஷயா ரத்தோடிற்கு தாமதமாகிவிட்டன (முகப்புப் படத்தில் மேலே இருப்பவர்). “[ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு] முழங்காலில் வலி தொடங்கியது,” என்று கூறும் அவரது பற்கள் அனைத்தும் கொட்டிவிட்டன. “உடல் முழுவதும் வலி பரவியது. என் எலும்புகளின் வடிவம் மாறி முடமாகிவிட்டேன்.”

மூட்டுகளில் வலி தொடங்கியபோது தண்ணீரினால் தான் இப்பிரச்னை வருகிறது என்பதை அக்குடும்பம் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. “இது சாதாரண உடல் தொந்தரவுதான் என நினைத்தோம்,” என்கிறார் மதுகார். “ஆபத்தான பிறகுதான் கின்வத், நான்டட், யவத்மாலில் உள்ள பல மருத்துவர்களிடம் அவளை அழைத்துச் சென்றோம். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி என நான் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்துவிட்டேன். ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. என்னால் மேலும் செலவிட முடியவில்லை. நாளடைவில் அதையும் கைவிட்டேன்...”

குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் கருத்துபடி, மகாராஷ்டிராவில் 2,086 நீர் ஆதாரங்களில் ஃப்ளோரைடுடன் மிகவும் தீங்கான நைட்ரேட், ஆர்சனிக்கும் உள்ளன

காணொலியைக் காண: ஃப்ளோரோசிசால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை விளக்குகின்றனர்

இப்போது 50களில் உள்ள அனுசுயாவால் தனது கால்களால் ஒருபோதும் எழுந்து நிற்க முடியாது. எலும்பான கால்கள் மடங்கிவிட்டதால் அவர் கைகளைக் கொண்டே எங்கும் நகர்ந்து செல்கிறார். 10ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலையில்தான் அவர் இருக்கிறார். “நான் குடும்பத்திற்கு பாரமாகிவிட்டேன்,” என்கிறார் அவர். “நான் சகோதரருடன் வசிக்கிறேன், அவர் தான் என்னை பார்த்துக் கொள்கிறார். அவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எனக்கு குற்றவுணர்வாக உள்ளது.”

மதுகருக்கும் சில ஆண்டுகளாக சொந்த உற்பத்தியில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார். “வயலில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் கூட நான் அரை மணி நேரம் இடைவேளை விட வேண்டும். என் முதுகு பயங்கரமாக வலிக்கிறது.” “காலைக் கடன்களை முடிப்பதுகூட கடினமாக இருக்கும். உடல் வளைவதே கிடையாது,” என்கிறார் தனது ஆறு ஏக்கர் நிலத்தில் பருத்தி, துவரை, சோளம் பயிரிடுட்டுள்ள மதுகர். “தொழிலாளர்கள் இயல்பாக பெறும் [ஒரு நாளுக்கு சுமார் ரூ.250] கூலியை எனக்குத் தருவதில்லை. உங்களது மதிப்பு சரிவதை காண்பது துயரமானது.”

பங்கஜ் மஹேலியின் குடும்பம் கூட பல வகை சிகிச்சை முறைகளை முயற்சித்தும், அவரது 50 வயது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். “அவருக்கு எலும்பு ஃப்ளோரோசிஸ் இருந்தது,” என்கிறார் 34 வயது பங்கஜ். “அவருக்கு இடுப்பிலிருந்து வளைந்துவிட்டது. நாங்கள் அவரை நான்டட், நாக்பூரில் உள்ள எலும்பு வல்லுநர்களிடம் அழைத்துச் சென்றோம். எனது தந்தையின் எலும்புகள் எளிதில் முறியும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், சின்ன அதிர்வுகூட அவரது எலும்புகளை உடைக்கக்கூடும்  என்றனர். அவருக்கு மாதம் ரூ.3,000க்கு கால்சியம் மருந்துகளை அவர்கள் கொடுத்தனர். அவரை பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு  அழைத்துச் செல்ல வாடகைக்கு கார் எடுத்தோம். அவர் இறந்தபோது செலவு பல லட்சங்களை தொட்டது. மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எவ்வித மருத்துவ உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.”

A man limping towards his home
PHOTO • Parth M.N.

மராத்வாடாவின் பல கிராமங்களிலும் எலும்பு ஃப்ளோரோசிஸ், கூன் அல்லது வடிவமற்ற எலும்புகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்

சர்வகேதில் எங்கிருந்து கூடுதலான ஃப்ளோரைட் வருகிறது? இப்பிராந்தியத்தில் நிலவும் வறட்சியே ஃப்ளோரோசிசிற்கு ஆதாரமாகிறது. பல்லாண்டுகளாக பாசனம், அலசுதல், குளித்தல் போன்ற தேவைகளுக்கு விவசாயிகள் நிலத்தடியில் ஆழ்துளை கிணறுகளை இங்கு அமைத்து வருகின்றனர். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக வறண்ட மராத்வாடாவில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. அவர்கள் நிலத்தடி நீரையும் குடிக்க தொடங்கினர். சில நிலத்தடி நீர் ஆதாரங்களில் ஃப்ளோரைட் உள்ளது. ஆழ்துணை கிணறுகளை இன்னும் ஆழப்படுத்தும்போது ஃப்ளோரைட் இருப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கூடுதலாக உரங்கள், பூச்சிக்கொல்லிகள், கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றாலும் நிலத்தடி நீர் குறைந்து அதிகளவு ஃப்ளோரைடிற்கு காரணமாகின்றன.

மராத்வாடாவில் 200 அடிக்கு கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது (மகாராஷ்டிரா நிலத்தடி நீர் சட்டம் 2009ன்படி) என்று இருந்தாலும், 500 அடிக்கு மேல் அமைக்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளின் ஆழங்கள், எண்ணிக்கைகளை அறியாமல் இருப்பது, முறையற்ற மழையினால் நீர் தேவை அதிகரிப்பு, பணப் பயிர்களுக்கு மாறுவது என இப்பிராந்திய விவசாயிகள் கொஞ்சம் தண்ணீரை காணும் வரை நிலத்தை துளைக்கின்றனர்.

ஃப்ளோரைட் அதிகம் நிறைந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்த துரதிஷ்டவசமான கிராமம் என்றால் அது சவர்கேத் தான். ரசாயனம் மக்களை மெல்ல விழுங்கி வருவதால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சவர்கேதின் இப்போதுள்ள 517 குடியிருப்புவாசிகளில் 209 பேரை “வேலைக்குச் செல்ல முடியாதவர்கள்” என வகைப்படுத்தியுள்ளனர். ஃப்ளோரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்ட அறிக்கை குறிப்பில் (2013ஆம் ஆண்டு வரை), நான்டடில் 3,710 பேருக்கு பற்களில் ஃப்ளோரோசிசும், 389 பேருக்கு எலும்பு ஃப்ளோரோசிசும் இருந்தது.

இந்த நெருக்கடியை நெருக்கமாக கண்காணித்து வரும் உள்ளூர் பத்திரிகையாளர் தர்மராஜ் ஹல்யாலி, 2006ஆம் ஆண்டு சவர்கேதில் குழாய் தண்ணீர் அமைக்கப்பட்ட போதும், நான்கு ஆண்டுகளுக்கு அது முறையாக செயல்படவில்லை என்கிறார். “அங்கு மின்சாரம் இல்லை,” என்கிறார் அவர். “எனவே பம்புகள் வேலை செய்யாது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில அரசுக்கு நான் இதுபற்றி எழுதினேன். ஒரு மாதத்திற்கு அதை பின்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு அதை சரிசெய்தனர்.” மாநிலம் முழுவதிலும 25 மாவட்டங்களில் [மொத்தமுள்ள 36 மாவட்டங்களில்] பல்வேறு அளவுகளில் நீர் ஆதாரங்கள் ஃப்ளோரைடாக மாறி வருவது குறித்து அறிவதற்கு ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) ஹல்யாலி விண்ணப்பித்துள்ளார்.

A man sitting
PHOTO • Parth M.N.

சுனிகானின்(சங்வி) கிராமத்தின் சுகேஷ் தவாலி ஃப்ளோரைட் கலந்த தண்ணீரைக் குடித்த பிறகு பற்கள் ஃப்ளோரோசிசால் பாதிக்கப்பட்டார்

தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வேறுபடலாம். குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் கணக்குபடி, 2016-17 ஆண்டு வாக்கில், மகாராஷ்டிராவில் உள்ள 2,086 நீராதரங்களில் மிகவும் ஆபத்தான நைட்ரேட் மற்றும் ஆர்சனிக்குடன் ஃப்ளோரைட் இருந்தது. இந்த எண்ணிக்கை காலப் போக்கில் குறைந்துள்ளது. 2012-13 ஆண்டுகளின் போது அது 4,520ஆக இருந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் நான்டட் மாவட்டத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட் மனுவில், 383 கிராமங்களின் நீராதரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஃப்ளோரைட் இருந்துள்ளது. அதில் 257 இடங்களில் மாற்று நீராதாரம் அளிக்கப்பட்டன. 2015-16ஆம் ஆண்டுகளில் கூட ஜிஎஸ்டிஏ நான்டடில் உள்ள 46 கிராமங்களை ஃப்ளோரோசிஸ் பாதிக்கப்பட்டவையாக வகைப்படுத்தி அவற்றில் நான்கு மட்டுமே கையாளக்கூடியது  என்று தெரிவித்துள்ளது.

கிராம மக்கள் ஃப்ளோரைட் நீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டது பற்றி 2016, ஜனவரி 11ஆம் தேதி அசிம் சரோடி தலைமையிலான ஒன்பது வழக்கறிஞர்களைக் கொண்ட குழு தாக்கல் செய்த மனுவின்படி, மகாராஷ்டிராவின் 12 மாவட்ட ஆட்சியர்கள் ஜிஎஸ்டிஏவுடன் சேர்ந்து நீர் தரத்தை அளந்து, ஆராய்ந்து மாவட்ட வாரியாக தகவல் வெளியிட வேண்டும், மாற்று நீராதாரங்களை ஏற்படுத்த வேண்டும், நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும் என என்ஜிடி உத்தரவிட்டது. இந்த உத்தரவு மீறப்பட்டதால் 2017, நவம்பர் 28ஆம் தேதி நான்டட், சந்திராபூர், பீட், யவத்மால், லத்தூர், வாஷிம், பிரபானி, ஹிங்கோலி, ஜல்னா, ஜல்கான் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிராக என்ஜிடி ஆணை பிறப்பித்தது.

சவர்கேதிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுனேகான் (சங்வி) கிராமத்தில், இதுவரை இல்லாத ஆழ்துளை கிணறு உள்ளது. 2006ஆம் ஆண்டு லிம்போடி அணை கட்டப்பட்ட பிறகு லத்தூரின் அகமத்பூர் தாலுக்காவில் 630 பேர் வசிக்கும் கிராமத்தில் ஏரி அமைக்கப்பட்டது. இந்த ஊடுருவல் 2007ஆம் ஆண்டு கிணறு தோண்டியபோது நீரை பாதித்தது.

20 ஆண்டுகளுக்கு மேலாக ஃப்ளோரைட் கலந்த நிலத்தடி நீரைக் குடித்து வந்த 30 வயது சுகேஷ் தவாலே சவர்கேத் மக்களைப் போன்று தனது உடல்நிலையும் மோசமடைவதை கவனித்தார். “என் பற்களில் ஏதோ படிந்திருப்பதை தொடர்ந்து உணர்ந்தேன்,” என்கிறார் மரத்தடியில் இருந்து எழும்போதே மூட்டுகள் முறியும் சத்தத்துடன் காணப்படும் விவசாயத் தொழிலாளி ஒருவர். “சில காலங்களில் அந்த படிமம் விழுந்தது. அப்போது பற்களின் பகுதியும் உடைந்தது. என்னால் கடினமான எதையும் உண்ண முடியவில்லை. என் மூட்டுகளும் பாதிக்கப்பட்டன, என்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது.”

சுனேகானிலிருந்து (சங்வி) சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிஎஸ்டிஏ அஹமத்பூர் ஆய்வுக்கூடத்தில், ஃப்ளோசைஸ் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை கொண்ட பட்டியலை நம் வேண்டுகோளின் கீழ் கணினி பொறுப்பாளர் ஒருவர் ஆராய்ந்து அளித்தார். லத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற 25 கிராமங்களின் பட்டியலில் சுனேகான் ஷென்டிரியும் உள்ளது. என்னிடம் பேசிய சுனேகான் ஷென்டிரியின் 35 வயது கோவிந்த் கலே விளக்குகையில், “இப்போது நாங்கள் ஓராண்டாக நிலத்தடி நீரை குடிக்கிறோம். கிராமத்தில் உள்ள பொது கிணறு [தோண்டப்பட்டது] செயல்படவில்லை. ஒட்டுமொத்த கிராமமும் ஆழ்துளை கிணற்று நீரை குடிக்கிறது. இது பற்றி ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை? ஏன் யாரும் முன்கூட்டியே எங்களை எச்சரிக்கவில்லை?”

ஆந்திர பிரதேசத்தின் நல்கொண்டா கிராமத்தில் (இப்போது தெலங்கானாவில் உள்ளது) இப்பிரச்னை முதலில் தெரியவந்து, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு முடங்கிய உயிர்கள் என்ற பெயரில் ஆவணப்படம் வெளிவந்தது – எனினும் எந்த பாடமும் கற்கப்படவில்லை.

தமிழில்: சவிதா

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha