ஃபோர்ப்ஸ்ஸின் 2021 பட்டியலின்படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 102லிருந்து 140 என்கிற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளும் ”596 பில்லியன் டாலரளவுக்கு” இரட்டிப்பாகி இருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 140 தனிநபர்கள், அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகையின் 0.000014 சதவிகிதம் பேர், மொத்த உள்நாட்டு உற்பத்தியான 2.62 ட்ரில்லியன் டாலரின் 22.7 சதவிகிதத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதே.

பெரும்பாலான இந்திய நாளிதழ்கள் ஃபோர்ப்ஸ் செய்தியை ஏற்கும் தொனியில் வெளியிட்டன.

இந்த நாட்டை பற்றிய ஃபோர்ப்ஸ் அறிக்கையின் முதல் பத்தியில் “அடுத்த கோவிட் 19 அலை,” எனத் தொடங்கி, “இந்தியா முழுமையையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. மொத்த பாதிப்பு 1 கோடியே இருபது லட்சத்தை தாண்டி விட்டது. ஆனால் நாட்டின் பங்குச்சந்தையோ தொற்றை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் புதுப்புது உச்சங்களை தொட்டது. சென்செக்ஸ் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததை விட 75% உயர்ந்தது. இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தின் 102 என்பதிலிருந்து 140 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 596 பில்லியன் டாலர் அளவுக்கு இரட்டிப்பாகியிருக்கிறது,” என முடிந்தது.

140 கோடீஸ்வரர்களின் சொத்தும் மனித வள மேம்பாட்டு குறியீடு 7.7 சதவிகிதமாக சுருங்கிய வருடத்தில் 90.4 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.  பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து மீண்டும் தங்களின் கிராமங்களுக்கு திரும்புவதை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இத்தகைய சாதனை செய்திகளையும் நாம் பார்க்கிறோம். இடம்பெயர்வோரின் வேலை இழப்புகள் மனித வள மேம்பாட்டு குறியீடுக்கு நன்மை செய்யாது. அதே நேரம் நம் கோடீஸ்வரர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. அதற்கான ஃபோர்ப்ஸ்ஸின் உத்தரவாதம் நமக்கு இருக்கிறது.

மேலும் கோடீஸ்வரர்களின் சொத்துக் குவிப்பு கோவிட் நெருக்கடிக்கு எதிர்மறையில் இயங்குகிறது. அதிகமாக குவிக்கப்பட்டால், அதிகம் பரவுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

”வளமே உச்சத்தை ஆளுகிறது,” என்கிறது ஃபோர்ப்ஸ். “மூன்று பணக்கார இந்தியர்கள் மட்டுமே 100 பில்லியன் டாலரை அதிகரித்துக் கொண்டார்கள்.” அந்த மூவரின் மொத்த சொத்து மதிப்பான 153.5 பில்லியன் டாலர், மொத்த 140 பணக்காரர்களுடைய சொத்து மதிப்பின் 25 சதவிகிதத்துக்கு நிகர். முதல் இருவரான அம்பானி (84.5 பில்லியன் டாலர்) மற்றும் அதானி (50.5 பில்லியன் டாலர்) ஆகியோரின் சொத்து மதிப்பு, பஞ்சாப் (85.5 பில்லியன் டாலர்) அல்லது ஹரியானா (101 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட பன்மடங்கு அதிகம்.

பெருந்தொற்றின் வருடத்தில் அம்பானி 47.7 பில்லியன் டாலரை(3.57 ட்ரில்லியன் ரூபாய்) தன்னுடைய சொத்து மதிப்பில் கூட்டியிருக்கிறார். அதாவது சராசரியாக ஒவ்வொரு விநாடியும் 1.13 லட்சம் ரூபாய்.  ஆறு பஞ்சாபி குடும்பங்களின் (சராசரியாக 5.24 பேர் கொண்ட குடும்பம்) சராசரி மொத்த மாத வருமானத்தைவிட (18059 ரூபாய்) அதிகம்.

அம்பானியின் சொத்து மதிப்பு மட்டுமே பஞ்சாபின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகராக இருக்கிறது. அதுவும் விவசாய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவதற்கு முன்பே. அமல்படுத்தப்பட்டுவிட்டால் இன்னும் அதிகமாகும். மேலும் பஞ்சாப் விவசாயியின் சராசரி மாத தனி நபர் வருமானம் 3450 ரூபாய்தான் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் (70வது தேசிய மாதிரி கணக்கெடுப்பு).

ஃபோர்ப்ஸ் கட்டுரையை போல் எந்த பொருத்தப்பாடுகளை கொண்டும் விளக்காமல் இந்திய ஊடக அறக்கட்டளை (PTI) வெளியிட்ட அறிக்கையைதான் அப்படியே பல நாளிதழ்களும் சிலவை சிறிய அளவில் திருத்தியும் வெளியிட்டன. பிடிஐயின் கட்டுரையில் கோவிட், கொரொனா வைரஸ், பெருந்தொற்று போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அது மட்டுமின்றி பிற பத்திரிகைகளும் ஃபோர்ப்ஸ்ஸின் அறிக்கையை போல், “பத்து பணக்கார இந்தியர்களில் இருவர் அவர்களின் சொத்து மதிப்பை சுகாதாரத் துறையிலிருந்து பெறுகின்றனர். சுகாதாரத் துறை உலகளவில் தொற்று நோயால் உத்வேகம் அடைந்திருக்கும் துறையாகும்,” என்றெல்லாம் குறிப்பிடவில்லை.  ‘சுகாதாரத்துறை’ என்கிற வார்த்தையே கூட பிடிஐ அறிக்கை மற்றும் பிற கட்டுரைகளில் இடம்பெறவில்லை. ஃபோர்ப்ஸ்ஸோ நம் 140 கோடீஸ்வரர்களில் 40 பேரை சுகாதாரத்துறையில் தொடர்புபடுத்திக் காட்டுகிறது.

ஃபோர்ப்ஸ் பட்டியலின் 24 இந்திய சுகாதாரத்துறை கோடீஸ்வரர்களில் முதல் 10 பேர் மட்டும் 24.9 பில்லியன் டாலர் அளவை அவர்களின் சொத்துகளுடன் பெருந்தொற்றின் வருடத்தில் (சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பில்லியன் ரூபாய்) சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 75 சதவிகிதம் உயர்ந்து 58.3 பில்லியன் டாலராக (4.3 ட்ரில்லியன் ரூபாய்) மாறியிருக்கிறது.

Left: A farmer protesting with chains at Singhu. In the pandemic year, not a paisa's concession was made to farmers by way of guaranteed MSP. Right: Last year, migrants on the outskirts of Nagpur. If India levied wealth tax at just 10 per cent on 140 billionaires, we could run the MGNREGS for six years
PHOTO • Shraddha Agarwal
Left: A farmer protesting with chains at Singhu. In the pandemic year, not a paisa's concession was made to farmers by way of guaranteed MSP. Right: Last year, migrants on the outskirts of Nagpur. If India levied wealth tax at just 10 per cent on 140 billionaires, we could run the MGNREGS for six years
PHOTO • Satyaprakash Pandey

இடது: சிங்குவில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு விவசாயி. பெருந்தொற்று வருடத்தில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு பைசா தள்ளுபடி கூட வழங்கப்படவில்லை. வலது: கடந்த வருடத்தின் நாக்பூர் புறநகரில் புலம்பெயர் தொழிலாளர்கள். ஒருவேளை இந்தியா வெறும் 10 சதவிகிதம் சொத்து வரியை 140 கோடீஸ்வரர்களுக்கு விதித்தால் கூட ஊரக வேலை திட்டத்தை ஆறு வருடங்களுக்கு நம்மால் செயல்படுத்திட முடியும்.

மேக் இன் இந்தியாவை பற்றியும் ஃபோர்ப்ஸ் பேசுகிறது. முதலிடத்திற்கு இன்னும் இரண்டே இடம்தான். 140 எண்ணிக்கையில் ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருக்கும் இந்தியா தற்போது அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஜெர்மனி, ரஷியா போன்ற நாடுகளெல்லாம் நம்மை முந்திய காலங்கள் இருந்தது. அவர்களுக்கான இடம் எதுவென்பதை இந்த வருடத்தில் காட்டி விட்டோம்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பான 596 பில்லியன் டாலர் என்பது 44.5 ட்ரில்லியன் ரூபாய்க்கு நிகர். 75 ரஃபேல் ஒப்பந்தங்களுக்கு கொஞ்சம் அதிகம். இந்தியாவில் சொத்து வரி கிடையாது. ஒருவேளை இருந்தால், குறைவாக ஒரு பத்து சதவிகிதமென வரி விதித்தாலும், 4.45 ட்ரில்லியன் ரூபாய் கிடைக்கும். அதை வைத்து ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ஆறு வருடங்களுக்கு நடத்த முடியும்.  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான தற்போதைய நிதி ஒதுக்கீடு 73000 கோடி ரூபாய். கிட்டத்தட்ட 16.8 பில்லியன் மக்களுக்கான வேலை நாட்களை கிராமங்களில் அடுத்த ஆறு வருடங்களுக்கு உருவாக்க முடியும்.

நம் மீது நம்பிக்கையற்று இரண்டாம் முறையாக புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு இடம்பெயரும் சூழலில் எப்போதையும் விட அந்த வேலைநாட்கள் கிராமங்களில் நமக்கு வேண்டும்.

அற்புதமான 140 பேருக்கு அவர்களின் நண்பர்களிடமிருந்து குறைவான உதவி கிடைத்தது. இரு பத்தாண்டுகளாக கடும் வேகத்துடன் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருந்த கார்ப்பரெட்டுகளுக்கு ஆகஸ்டு 2019ல் அளிக்கப்பட்ட பெருமளவிலான வரி குறைப்பு இன்னும் அதிக வேகத்தை அவர்களுக்கு கொடுத்தது.

பெருந்தொற்றின் வருடத்தில் ஒரு பைசா தள்ளுபடி கூட விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் வழங்கப்படவில்லை. தினசரி 12 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்க வழிவகை செய்யும் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன (சில மாநிலங்களில் கூடுதல் உழைப்புக்கு ஊதியமும் கிடையாது). இயற்கை வளங்களும் பொது சொத்துகளும் காப்பரேட் கோடீஸ்வரர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. பெருந்தொற்று வருடத்தில் சேமிப்பு தானியங்கள் ஒரு கட்டத்தில் 104 மில்லியன் டன்களை எட்டியது. ஆனால் மக்களுக்கு ஆறு மாதங்களுக்கு 5 கிலோ கோதுமையும் அரிசியும் 1 கிலோ பருப்பும் மட்டும் வழங்கப்பட்டன. அதுவும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும்தான். தேவையுள்ள கணிசமான எண்ணிக்கை  மக்கள் அச்சட்டத்துக்குள் இடம்பெறவில்லை. இதுவும் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியில் கிடந்தபோது நடந்தது.

ஃபோர்ப்ஸ் குறிப்பிடும் சொத்துக் குவிப்பு உலகம் முழுக்க நடந்திருக்கிறது. “ஒரு புதிய கோடீஸ்வரர் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரங்களுக்கு கடந்த வருடத்தில் பணமீட்டியிருக்கிறார். உலகின் பெரும் பணக்காரர்கள் கடந்த வருடத்தை காட்டிலும் 5 ட்ரில்லியன் டாலர் அதிக பணக்காரர்களாகி இருக்கிறார்கள்.” இந்தியாவின் கோடீஸ்வரர்கள் அந்த புதிய 5 ட்ரில்லியன் டாலரில் 12 சதவிகிதம். இதன் அர்த்தம் என்னவெனில், இங்கு எல்லா துறைகளிலும் சமத்துவமின்மை என்பது எதிர்க்கப்படாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான்.

இத்தகைய சொத்துக்குவிப்பு வழக்கமாக துயரங்களை குவிப்பதில்தான் நேரும். தொற்றுநோய் மட்டுமென இல்லை. பேரிடர்கள் அற்புதமான வியாபாரம். பலரின் துயரங்களில் எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஃபோர்ப்ஸ் சொல்வது போல் நம் ஆட்கள் தொற்றுநோய் அச்சத்தை பயன்படுத்திக் கொள்ளாமலில்லை. அந்த பேரலையில் மிக அழகாக அவர்கள் சவாரி செய்தனர். “உலகம் முழுவதும் தொற்றுநோய் கொடுத்த ஏற்றத்தை சுகாதாரத்துறை பயன்படுத்துவதாக” போர்ப்ஸ் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த ஏற்றமும் எழுச்சியும் உருவாகும் பேரிடரை சார்ந்து பிற துறைகளிலும் ஏற்பட முடியும்.

2004 டிசம்பரில் நேர்ந்த சுனாமிக்கு பிறகு உலக பங்குச்சந்தையில் பெரும் ஏற்றம் நேர்ந்தது. குறிப்பாக சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில். லட்சக்கணக்கான வீடுகளும் படகுகளும் ஏழைகளின் சொத்துகளும் முற்றிலும் அழிந்திருந்தது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை பறிகொடுத்திருந்த இந்தோனேசியாவின் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. நம் சென்செக்ஸிலும் அதே நிலைதான். அச்சமயத்தில் மீண்டும் கட்டியெழுப்பபட வேண்டிய கட்டுமானங்களில் இருந்த டாலரும் ரூபாயும் கட்டுமானத்துறைக்கு பெரும் ஆதாயத்தை வழங்கியது.

இம்முறை ‘சுகாதாரத்துறை’ மற்றும் தொழில்நுட்பத்துறை (குறிப்பாக மென்பொருள் சேவைகள்) ஆதாயம் கண்டன. இந்தியாவின் முதல் 10 தொழில்நுட்ப அதிபர்கள் 12 மாதங்களில் 22.8 பில்லியன் டாலர் பணம் ஈட்டி  (அல்லது ஒருநாளுக்கு சராசரியாக 4.6 பில்லியன் ரூபாய்)  மொத்த சொத்து மதிப்பான 52.4 பில்லியன் டாலர் (3.9 ட்ரில்லியன் ரூபாய்) அடைந்திருக்கிறார்கள். 77 சதவிகிதம் அதிகம். ஆமாம், அரசு பள்ளிகளில் படிக்கும் பல கோடி ஏழை மாணவர்களை தவிர்க்கும் ஆன்லைன் கல்வியால் சிலருக்கு ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. பைஜு ரவீந்திரன் 39 சதவிகிதம் அவருடைய சொத்து மதிப்பில் கூட்டி 2.5 பில்லியன் டாலர் மதிப்பை (187 பில்லியன் ரூபாய்) எட்டியிருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளுக்கு அவற்றுக்கான இடம் எது என்பதை நாம் காட்டிவிட்டோம் என சொல்வது சரியென நினைக்கிறேன். நம்முடைய இடத்தையும் நாம் காட்டிவிட்டோம். ஐநாவின் மனித மேம்பாட்டு அட்டவணையின் 189 நாடுகளில் நாம் 131வது இடத்தில் இருக்கிறோம். எல் சல்வேடோர், தஜிகிஸ்தான், கேபோ வெர்டே, குவாதமாலா, நிகாரகுவா, பூட்டான், நமிபியா போன்ற நாடுகள் நமக்கு முன்னால் இருக்கின்றன. நம்மை கீழ்மையாக காட்டுவதற்காக நடக்கும் சர்வதேச சதி மீதான உயர்மட்ட விசாரணையின் முடிவுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலதிக தகவலுக்கு இந்த தளத்தை கவனித்திருங்கள்.

இந்த கட்டுரை முதன்முதலாக The Wire-ல் பிரசுரமானது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Illustrations : Antara Raman

Antara Raman is an illustrator and website designer with an interest in social processes and mythological imagery. A graduate of the Srishti Institute of Art, Design and Technology, Bengaluru, she believes that the world of storytelling and illustration are symbiotic.

Other stories by Antara Raman
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan