உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களின்போது கட்டாய தேர்தல் பணிக்கு சென்றிருந்த பள்ளி ஆசிரியர்கள் கோவிட் பாதிப்பில் இறந்திருக்கின்றனர். தற்போது வரை 1621 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 1181 பேர் ஆண்கள், 440 பேர் பெண்கள் எனக் கூறுகிறது உத்தரப்பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பின் பட்டியல். பாரி அப்பட்டியலை ஆங்கிலத்திலும் இந்தியிலும் இங்கு பதிவிட்டிருக்கிறது.

இப்பேரழிவுக்கான காரணங்களாக என்னவெல்லாம் இருந்தன என்பதை விவரிக்கும் கீழ்காணும் கட்டுரையை மே 10ம் தேதி நாம் பிரசுரித்தோம். தேர்தல்களை தள்ளி வைக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையமும் உத்தரப்பிரதேச அரசும் பொருட்படுத்தவில்லை. தேர்தல் பணிக்கு சென்றதால் கோவிட் பாதிப்படைந்து மரணமுற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அச்சமயத்தில் 713 ஆக இருந்தது. 540 ஆண்கள், 173 பெண்கள்.

கிட்டத்தட்ட 8 லட்சம் ஆசிரியர்களை அரசு ஆரம்பப் பள்ளிகளில் கொண்டிருக்கும் இம்மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். தேர்தலும் பெரிய அளவில் நடந்தது. 13 லட்சம் வேட்பாளர்கள் 8 லட்ச தொகுதிகளில் போட்டியிட, 13 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலில், அதிகாரிகள் (ஆசிரியர்களும் பிறரும்) நிச்சயமாக பல்லாயிரக்கணக்கானோரை கையாள வேண்டிய சூழலே இருந்திருக்கும். அதுவும் எந்தவகை பாதுகாப்பு முறைகளும் இல்லாத நிலையில்.

உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டதற்கான உதாரணமும் இதற்கு முன் உண்டு. செப்டம்பர் 1994லிருந்து ஏப்ரல் 1995 வரை கூட தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. “எதிர்பாராத ஒரு பெருந்தொற்றையும் மனிதாபிமான நெருக்கடியையும் நாம் எதிர்கொண்டிருக்கும்போது ஏன் இந்த அவசரம் ?,” எனக் கேட்கிறார் முன்னாள் மாநில தேர்தல் ஆணையரான சதீஷ் குமார் அகர்வால்.

தேர்தல்களுக்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மரணங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை உத்தரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மறுத்து வருகிறார். “தில்லியில் தேர்தல் நடந்ததா? மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்ததா?” என செய்தியாளர்களிடம் மே 12ம் தேதி நொய்டாவில் கேட்டார் . அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மீது பழி போடும் முயற்சியும் நடந்தது. “பஞ்சாயத்து தேர்தல்கள் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே நடத்தப்பட்டன,” என செய்தியாளர்களிடம் கூறினார் முதல்வர் ஆதித்யநாத்.

இது பாதி உண்மைதான். தேர்தல்களை தள்ளி வைப்பதற்கான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உண்மையே. அது தனிநபர் மனு. அரசின் மனு அல்ல. (அரசியல் சாசனத் தேவையின்படி, பஞ்சாயத்து தேர்தல்கள் ஜனவரி 21, 2021க்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்). எனினும் தேர்தல்கள் கோவிட் 19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேசம் அறிவித்திருந்த கோவிட் 19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படுமென நம்பியிருந்ததாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 6ம் தேதி குறிப்பிட்டது. மேலும் அது, “மக்கள் கூட்டம் ஏற்படாத வண்ணம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்களிப்பு முதலிய எல்லா நிகழ்வுகளிலும் கோவிட்19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” எனவும் கூறியது. சரியாக சொல்வதெனில், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலை மீறியதால் ஆசிரியர்களுக்கு பேரழிவு ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆசிரியர்கள் எழுதிய சமீபத்திய கடிதத்தின்படி , “உச்சநீதிமன்ற விசாரணையின்போது கூட, கூட்டமைப்பு அதன் வாதத்தை வழக்கறிஞரின் மூலம் முன் வைத்தது. வாக்கு எண்ணிக்கையின்போது கோவிட் பாதிப்பு ஏற்படாத வகையில் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்,” எனக் குறிப்பிட்டிருக்கிறது,

“தொடக்கக் கல்வித்துறையோ உத்தரப்பிரதேச அரசோ இத்தனை பெரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இறந்திருப்பதற்கு, இப்போது வரை வருத்தம் கூட தெரிவிக்காதது மிகவும் துயரத்துக்குரிய விஷயம்,” என கடிதத்தின் ஒரு வரி நம்மை துயருறச் செய்கிறது.

முகக்கவசம், தனிநபர் இடைவெளி முதலிய அவசியமான பாதுகாப்பு முறைகள் கூட கடைபிடிக்கப்படாததற்காக ஏப்ரல் 26ம் தேதி, உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசுக்கோ மாநில தேர்தல் ஆணையத்துக்கோ உயர்நீதிமன்ற உத்தரவுகளில் உடன்பாடு இல்லாமலிருந்திருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கலாம். அவர்கள் செல்லவில்லை. இன்னும் முன்பே கூட, மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் பெருமளவில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களிலும் கோவிட்-19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை.

முக்கியமாக பஞ்சாயத்து தேர்தல் பணிக்கு பிறகு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த தேர்தல் அதிகாரிகளின் (ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்கள்) குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயேனும் நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் மே12ம் தேதி கூறியது. நீதிபதிகள் சித்தார்த் வர்மா மற்றும் அஜித் குமார் ஆகியோரின் வார்த்தைகள்: “யாரோ சிலர் தன்னார்வத்தில் தேர்தல் பணி செய்ய வந்ததாகவும் இச்சூழல் இல்லை. தயக்கம் காட்டியபோதும் கட்டாயப்படுத்தப்பட்டு தேர்தல் பணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.”

போலவே, நாட்டின் எந்த நீதிமன்றமும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளை ஒரு வருடத்துக்கு முன்பே கும்பமேளாவை நடத்தச் சொல்லி உத்தரவிடவில்லை. ஹரித்வாரில் கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். அடுத்த கும்பமேளா 2022ம் ஆண்டில்தான் நடப்பதாக இருந்தது. ஆனாலும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கு நிகராக அதே காலகட்டத்தில் பல நாட்களுக்கு நடத்தப்பட்ட பெரிய நிகழ்வாக கும்பமேளா இருந்தது. 2022க்கு முன்னால் 2021ம் ஆண்டிலேயே கும்பமேளா நடத்தப்படுவதற்கான உணர்ச்சிமிகுந்த மதரீதியான நியாயங்களும் ஆரூட விவாதங்களும் நடந்தன. ஆனால் கும்பமேளாவையும் பஞ்சாயத்து தேர்தல்களையும்  உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பே நடத்தப்படுவதற்கான அரசியல் தேவை பற்றிய  விவாதம் எதுவும் நடக்கவில்லை. இத்தகைய சம்பவங்களின் அழிவுத்தன்மை பேசப்படவில்லையெனில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் பெரும் சாதனைகளாக இவை முன்னிறுத்தப்படலாம்.

இந்த துயரத்தை பற்றி பாரியில் (மே 10ம் தேதி) வெளியான முதல் கட்டுரை:

பலியெடுத்த உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல்கள்

உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியிலிருந்த 700க்கும் மேலான பள்ளி ஆசிரியர்கள் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் பலர்  ஆபத்தில் இருக்கின்றனர். 30 நாட்களுக்குள் 8 லட்சம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜிக்யாசா மிஷ்ரா | முதன்மை ஓவியம்: அந்தரா ராமன்

சீதாப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது கூட ரிதேஷ் மிஷ்ராவின் செல்போன் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2ம் தேதி, ரிதேஷ் வரக் கேட்டு வரும் அழைப்புகள் அவை.

“போன் அடிப்பது நிற்கவேயில்லை,” என்கிறார் அவரின் மனைவி அபர்ணா. ”அழைப்பை ஏற்று, ரிதேஷ் மருத்துவமனையில் இருப்பதால் பணிக்கு வர முடியாது என நான் சொன்னபோதும் அவர்கள் ஏற்கவில்லை. மருத்துவமனை படுக்கையில் அவர் இருக்கும் புகைப்படத்தை நிரூபிப்பதற்காக அனுப்பக் கேட்டனர். நானும் அனுப்பினேன். உங்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்புகிறேன்,” என்றவர் அனுப்பவும் செய்தார்.

தேர்தல் பணிக்கு செல்ல வேண்டாம் என கணவரை எவ்வளவு வலியுறுத்தினார் என்பதையே அதிகமாக சொல்லிக் கொண்டிருந்தார் 34 வயது அபர்ணா மிஷ்ரா. “அவருக்கான வேலை அறிவிப்பு வந்த நேரத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால் தேர்தல் பணியை ரத்து செய்ய முடியாது என திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார். பணிக்கு செல்லவில்லை எனில் அதிகாரிகள் அவர் மீது வழக்கு கூட பதிவு செய்யலாம் என்றார்.”

ஏப்ரல் 29ம் தேதி கோவிட்டால் ரிதேஷ் இறந்தார். பஞ்சாயத்து தேர்தல்களின் பணிக்கு போய் இறந்த 700 உத்தரப்பிரதேச பள்ளி ஆசிரியர்களில் அவரும் ஒருவர். பாரியிடம்  மொத்த பட்டியலும் இருக்கிறது . மொத்தமாக 713 பேர். 540 ஆண்கள். 173 பெண்கள். பட்டியல் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் மாநிலம் இது. அவர்களில் லட்சக்கணக்கானோர் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

ரிதேஷ் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். சீதாப்பூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்தவர், லக்னோவின் கோசைகஞ்ச் ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணிபுரிந்தார். ஏப்ரல் 15,19,26 மற்றும் 29ம் தேதிகளில் நான்கு கட்டமாக நடந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான பணி அவருக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

'When I said Ritesh is hospitalised and could not accept the duty – they demanded I send them a photograph of him on his hospital bed – as proof. I did so. I will send you that photograph', says his wife Aparna. Right: Ritesh had received this letter asking him to join for election duty.
PHOTO • Aparna Mishra
'When I said Ritesh is hospitalised and could not accept the duty – they demanded I send them a photograph of him on his hospital bed – as proof. I did so. I will send you that photograph', says his wife Aparna. Right: Ritesh had received this letter asking him to join for election duty.
PHOTO • Aparna Mishra

’ரிதேஷ் மருத்துவமனையில் இருப்பதால் பணிக்கு வர முடியாது என நான் சொன்னபோதும் அவர்கள் ஏற்கவில்லை. மருத்துவமனை படுக்கையில் அவர் இருக்கும் புகைப்படத்தை நிரூபிப்பதற்காக அனுப்பக் கேட்டனர். நானும் அனுப்பினேன். உங்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்புகிறேன்,’ என்றார் அபர்ணா. வலது: தேர்தல் பணியில் சேர கோரும் இக்கடிதத்தை ரிதேஷ் கிடைக்கப்பெற்றார்.

உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை பஞ்சாயத்து தேர்தல்கள் மிகப் பெரிய நடைமுறை ஆகும். தற்போதைய தேர்தலில் 13 லட்சம் வேட்பாளர்கள் 8 லட்ச தொகுதிகளில் போட்டி போடுகின்றனர். நான்கு நேரடி பதவிகளுக்கு தேர்வு செய்ய 13 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். 52 கோடி வாக்குச்சீட்டுகள் புழங்கப்படும். இத்தகைய ஒரு தேர்தலை நடத்துவதில் எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இத்தகைய ஒரு வேலை கொடுக்கப்படுவதை எதிர்த்து ஆசிரியர்களும் ஆசிரிய சங்கங்களும் நடத்திய போராட்டங்கள் பொருட்படுத்தப்படவில்லை. உத்தரப்பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 12ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியது. எந்த வித பாதுகாப்பும் தனிநபர் இடைவெளி கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளும் ஆசிரியர்களை வைரஸ்ஸிலிருந்து காப்பதற்கான வழிகளும் இல்லை என அக்கடிதம் முறையிட்டது.  ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலும் வாக்குப்பெட்டிகளை கையாள்வதிலும் ஆயிரக்கணக்கான மக்களை எதிர்கொள்வதிலும் ஆசிரியர்களுக்கு விளையக் கூடிய ஆபத்துகளை பற்றியும் கடிதம் எச்சரித்தது. தேர்தலை தள்ளிவைக்கும்படி கூட்டமைப்பு கேட்டிருந்தது. ஏப்ரல் 28 மற்றும் 29ம் தேதிகளில் அடுத்தடுத்து அனுப்பப்பட்ட கடிதங்கள் வாக்கு எண்ணும் நாளையேனும் தள்ளி வைக்குமாறு மன்றாடியது.

”மாநில தேர்தல் ஆணையருக்கு தபால் வழியாகவும் நேரடியாகவும் நாங்கள் கடிதங்களை அனுப்பினோம். ஆனால் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. கடிதம் கிடைத்தது என்பதற்கான உறுதிபடுத்துதல் கூட இல்லை,” என்கிறார் உத்தரப்பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் சந்திரா ஷர்மா.  “எங்கள் கடிதங்கள் முதல்வருக்கும் அனுப்பப்பட்டன. அங்கிருந்தும் எந்த பதிலும் கிட்டவில்லை.”

ஒருநாள் பயிற்சிக்கும் இரு நாள் தேர்தல் பணிக்கும் ஆசிரியர்கள் சென்றனர். ஒருநாள் தயாரிப்பு வேலைகளுக்கு, இன்னொரு நாள் தேர்தலுக்கு. வாக்கு எண்ணுவதற்கும் ஆயிரக்கணக்கானோர் செல்ல வேண்டியிருந்தது. இந்த வேலைகளை செய்ய வேண்டியது கட்டாயம். பயிற்சி முடிந்த பிறகு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் பணிக்கு ரிதேஷ் சென்றிருந்தார். “பல துறைகளை சேர்ந்த பல அரசு ஊழியர்களுடன் அவர் வேலை பார்த்தார். அவர்களில் எவரையும் முன்பு அவருக்கு தெரியாது,” என்கிறார் அபர்ணா.

“பணியிடத்துக்கு செல்லும்போது அவர் எடுத்து அனுப்பிய செல்ஃபியை உங்களுக்கு காட்டுகிறேன். சுமோ அல்லது பொலேரோ போன்றவொரு வாகனத்தில் இரண்டு பேருடன் அவர் அமர்ந்திருந்தார். அதே போன்றவொரு வாகனத்தில் பத்து பேருடன் தேர்தல் பணிக்கு செல்லும் புகைப்படம் ஒன்றையும் அனுப்பினார். பெரும் அச்சத்துக்குள்ளானேன்,” என்கிறார் அபர்ணா. “தேர்தல் மையத்தில் இன்னும் அதிகமாக நெருக்கத்துடன் செயல்பட வேண்டியிருந்தது.”

ஓவியம்: ஜிக்யாசா மிஷ்ரா

வாக்கு எண்ணவும் ஆயிரக்கணக்கானோர் செல்ல வேண்டியிருந்தது. இந்த வேலைகளை செய்ய வேண்டியது கட்டாயம்

“ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் முடிந்தபிறகு அவர் வீடு திரும்பினார். 103 டிகிரி அளவுக்கு காய்ச்சல் இருந்தது. வீட்டுக்கு கிளம்பும் முன் அவர் என்னை தொடர்பு கொண்டு உடல்நிலை சரியில்லை என்றார். வேகமாக வரும்படி நான் கூறினேன். வேலைப்பளுவினால் வந்த சாதாரண காய்ச்சல் என சில நாட்களுக்கு நாங்களே பார்த்துக் கொண்டோம். மூன்றாம் நாளும் (ஏப்ரல் 22) காய்ச்சல் நீடித்த பிறகுதான் மருத்துவரிடம் சென்றோம். அவர் உடனே சென்று கோவிட் பரிசோதனையும் சிடி ஸ்கேனும் எடுக்கச் சொன்னார்.

“அவற்றை செய்தோம். அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியானது. பிறகு மருத்துவமனை படுக்கைக்காக நாங்கள் தேடி அலைந்தோம். லக்னோவில் மட்டும் 10 மருத்துவமனைகளில் கேட்டிருப்போம். ஒருநாள் முழுக்க அலைந்தபிறகு சீதாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் அவரை சேர்த்தோம். அந்த நேரத்திலெல்லாம் அவருக்கு தீவிரமான மூச்சுத் திணறல் வந்துவிட்டது.

“மருத்துவர் ஒரு நாளில் ஒருமுறைதான் வருவார். வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு வருவார். நாங்கள் அழைத்தாலும் எந்த மருத்துவ ஊழியரும் பொருட்படுத்தவில்லை. கோவிட்டுடனான போராட்டத்தில் தோற்று ஏப்ரல் 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு அவர் உயிர் துறந்தார். முடிந்தளவுக்கு போராடினார். நாங்களும் எங்களால் முடிந்தளவுக்கு முயன்றோம். ஆனால் எங்களின் கண் முன்னாலேயே அவர் இறந்து போனார்.”

அபர்ணா, அவர்களின் ஒரு வயது குழந்தை மற்றும் பெற்றோர் இருக்கும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ரிதேஷ் மட்டும்தான் சம்பாதிப்பவர். 2013ம் ஆண்டில் அபர்ணாவை மணம் முடித்தார். முதல் குழந்தை ஏப்ரல் 2020ல் பிறந்தது. “மே 12ம் தேதி எங்களின் எட்டாவது திருமண நாளை நாங்கள் கொண்டாடியிருப்போம். ஆனால் அவர் என்னை விட்டு போய்விட்டார்…” என வாக்கியத்தை முடிக்க முடியாமல் அழுகிறார் அபர்ணா.

*****

அரசியல் ஊர்வலங்களை கொரொனா தொற்று சமயத்தில் அனுமதித்ததற்காக ஏப்ரல் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்சீப் பேனர்ஜி தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம் இப்படி சொன்னார்:  “உங்களின் நிறுவனம் மட்டும்தான் கோவிட் தொற்றின் இரண்டாம் அலைக்கு காரணம்.” இன்னும் ஒருபடி மேலே சென்று தலைமை நீதிபதி, “ உங்களின் அதிகாரிகள் மீது கொலை குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் ,” என்றார்.

நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் முகக்கவசம் அணிவதையும் சானிடைசர் பயன்படுத்துவதையும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் தேர்தல் பிரசாரங்களில் செயல்படுத்த தவறிய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோபமூட்டியிருந்தது.

At Lucknow’s Sarojini Nagar, May 2, counting day: Panchayat polls in UP are gigantic and this one saw nearly 1.3 million candidates contesting over 8 lakh seats
PHOTO • Jigyasa Mishra
At Lucknow’s Sarojini Nagar, May 2, counting day: Panchayat polls in UP are gigantic and this one saw nearly 1.3 million candidates contesting over 8 lakh seats
PHOTO • Jigyasa Mishra

மே 2ம் தேதி வாக்கு எண்ணும் நாளன்று லக்னோவின் சரோஜினி நகரில்: பஞ்சாயத்து தேர்தல்கள் மிகப் பெரும் நடைமுறை.  13 லட்சம் வேட்பாளர்கள் 8 லட்சம் தொகுதிகளுக்கு போட்டியிட்டனர்.

ஏப்ரல் 27ம் தேதி, கோபத்திலிருந்து அலகாபாத் நீதிமன்ற அமர்வு உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையத்துக்கு, “கோவிட் விதிமுறைகள் பஞ்சாயத்து தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஏன் பரிசோதிக்கவில்லை” என்றும் ”ஆணையத்தின் மீதும் அதன் அதிகாரிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்றும் ”அத்தகைய விதிமீறல்களை செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இன்னும் ஒரு கட்ட தேர்தலும் வாக்கு எண்ணிக்கையும் மிச்சம் இருக்கும் சூழலில், “கோவிட் விதிமுறைகளை நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும்” எனவும் “பின்பற்றப்படவில்லையெனில் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்” என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

அச்சமயத்தில் மரணங்களின் எண்ணிக்கை 135 என்பதாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தது. அதை பற்றி அமர் உஜாலா என்கிற நாளிதழ் வெளியிட்ட செய்தியறிக்கையின் அடிப்படையிலேயே வழக்கை நீதிமன்றம் கையில் எடுத்திருந்தது.

ஆனாலும் எதுவும் மாறவில்லை.

வாக்கு எண்ணுவதற்கு ஒரு நாளுக்கு முன் மே 1ம் தேதி உச்சநீதிமன்றமும் கோபத்தில் அரசை இப்படி கேட்டது : “கிட்டத்தட்ட 700 ஆசிரியர்கள் இந்த தேர்தலில் இறந்திருக்கிறார்கள்.  அதற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?” (கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 34,372 புதிய கோவிட் தொற்றுகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியிருக்கின்றன).

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் பதில் இப்படி இருந்தது: “தேர்தலில்லாத மாநிலங்களில் கூட எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தில்லியில் தேர்தல்கள் இல்லை. அங்கும் அதிக எண்ணிக்கைதான். தேர்தல் தொடங்கியபோது நாம் இரண்டாம் அலைக்கு நடுவே இருக்கவில்லை.”

வேறுவார்த்தைகளில் சொல்வதெனில், தேர்தல் மற்றும் வாக்கு செலுத்துதல் ஆகியவற்றுக்கும் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

'The arrangements for safety of the government staff arriving for poll duty were negligible', says Santosh Kumar
PHOTO • Jigyasa Mishra
'The arrangements for safety of the government staff arriving for poll duty were negligible', says Santosh Kumar
PHOTO • Jigyasa Mishra

தேர்தல் பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்தன,” என்கிறார் சந்தோஷ் குமார்.

“யாருக்கு தொற்று இருக்கிறது, யாருக்கு இல்லை என்பதை பற்றிய உண்மையான தரவு நம்மிடம் இல்லை,” என்கிறார் ஆரம்பக்கல்விக்கான உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சதீஷ்சந்திரா த்விவேதி. “எந்த ஆய்வும் நாம் செய்யவில்லை. மேலும் தேர்தல் பணிக்கு சென்றதால் மட்டும் ஆசிரியர்களுக்கு தொற்று வந்ததாக சொல்லிவிட முடியாது. அதற்கு முன்னரே அவர்களுக்கு கோவிட் தொற்று இல்லை என்பது எப்படி தெரியும்?,” என கேட்கிறார்.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை நமக்கு அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கிறது. ஜனவரி 30, 2020 தொடங்கி ஏப்ரல் 4, 2021 வரையிலான 15 மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தமாக 6.3 லட்ச கோவிட் பாதிப்புகள் நேர்ந்தன. ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி வெறும் 30 நாட்களில் 8 லட்சம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டு மொத்த பாதிப்பை 14 லட்சமாக உயர்த்தியது. குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் ஊரக தேர்தல்கள் நடைபெற்றன.” வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், கோவிட் தொற்று வந்திருந்த மொத்த காலத்தையும் விட தேர்தல் நடந்த ஒற்றை மாத நடவடிக்கைகளில்தான் மாநிலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான தொற்று பாதிப்புகளை கண்டிருக்கிறது.

கோவிட் பாதிப்பு அதிகமிருந்த அசாம்கர் மாவட்டத்தில்தான் இறந்து போன 706 ஆசிரியர்களுக்கான பணியும் ஏப்ரல் 29ம் தேதி அளிக்கப்பட்டது. 34 பேர் அங்கு பலியாயினர். அதே போல் அதிகம் பாதித்திருந்த கோரக்பூர் மாவட்டத்தில் 28 பேரும் ஜன்பூரில் 23 பேரும் லக்னோவில் 27 பேரும் பலியாகியிருந்தனர். ஆசிரியர் கூட்டமைப்புக்கான லக்னோ மாவட்டத்தலைவர் சுதன்ஷு மோகன் மரணங்கள் ஓயவில்லை எனக் குறிப்பிடுகிறார். மே 4ம் தேதி சொல்கையில், “கடந்த ஐந்து நாட்களில் தேர்தல் பணியிலிருந்து திரும்பிய ஆசிரியர்களில் 7 பேர் இறந்திருக்கின்றனர்,” என்றார். (பாரியின் சேமிப்பகத்தில் இருக்கும் பட்டியலில் இந்த பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன).

ரிதேஷ் குமாருக்கு நேர்ந்த துயரம் 713 குடும்பங்கள் சந்திக்கும் துயரத்தில் ஓரளவைத்தான் காட்டுகிறதே தவிர முழுவதையும் அல்ல. இன்னும் பலர் தற்போது கோவிட் 19 தொற்று பாதிப்புடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இன்னும் பரிசோதிக்கப்படவில்லை. இன்னும் பலர் பரிசோதனை முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் திரும்புகையில் எந்த நோய்க்குறி தென்படாத போதும் தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களின் கதைகள் எல்லாமும் பிரதிபலிக்கும் கசப்பான யதார்த்தம்தான் சென்னை, அலகாபாத் உயர்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத்தையும் கோபப்படுத்தியிருக்கிறது.

“தேர்தல் பணிக்காக வந்த அரசு ஊழியர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் புறக்கணிக்கத்தக்கவையாகவே இருந்தன,” என்கிறார் 43 வயது சந்தோஷ் குமார். லக்னோவின் கோசைகஞ்ச் ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர். இரண்டு நாள் தேர்தல் பணியும் வாக்கு எண்ணிக்கை பணியும் பார்த்தவர். “தனிநபர் இடைவெளி பற்றிய எந்த யோசனையுமின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளையும் பிற வாகனங்களையும்தான் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. பிறகு மையத்தில் எங்களுக்கு என எந்த கையுறையும் இல்லை. சானிடைசர் போன்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லை. நாங்கள் எடுத்து சென்றவை மட்டும்தான் எங்களிடம் இருந்தது. நாங்கள் வைத்திருந்த உபரி முகக்கவசங்களையும் கூட முகக்கவசம் அணியாமல் வாக்களிக்க வந்தவர்களுக்கு வழங்கினோம்.

ஓவியம்: அந்தரா ராமன்

‘அங்கிருக்கும் மக்கள் எதனால் சாகிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள்’

”பணியை ரத்து செய்யும் வாய்ப்பு எங்களிடம் இல்லை என்பது உண்மை,” என்கிறார் அவர். “பணிக்கான அட்டவணையில் உங்களின் பெயர் வந்துவிட்டால், நீங்கள் சென்றுதான் ஆக வேண்டும். கர்ப்பிணி பெண்களும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டும். விடுப்பு கேட்டு அவர்கள் கொடுத்திருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.” இதுவரை குமாருக்கு எந்த வித நோய் அறிகுறியும் இல்லை.

லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மிட்டு அவஸ்தி துரதிர்ஷ்டசாலி.  பயிற்சிக்கு அவர் சென்றிருந்தபோது, அறைக்குள் 60 பேர் இருந்திருக்கின்றனர். “லக்கிம்பூர் ஒன்றியத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள். தோளுடன் தோள் உரசுமளவுக்கு நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள்.  ஒரே ஒரு வாக்குப் பெட்டி மட்டும்தான் இருந்தது. அனைவரும் அதை வைத்துதான் பயிற்சி எடுத்தனர். எந்தளவுக்கு அச்சமூட்டும் சூழலாக அது இருந்தது என்பதை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.”

38 வயது அவஸ்திக்கு கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. பயிற்சியை மட்டும் முடித்தார். அதில்தான் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் என நம்புகிறார். வாக்களிக்கவும் வாக்கு எண்ணும் பணிக்கும் அவர் போகவில்லை. ஆனால் அவரின் பள்ளியை சேர்ந்த பிறருக்கு அந்த வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

“எங்களின் உதவி ஆசிரியர்களில் ஒருவரான இந்திராகாந்த் யாதவுக்கு இதற்கு முன் எந்த தேர்தல் பணியும் கொடுக்கப்பட்டதில்லை. இப்போது கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். “யாதவ் ஒரு மாற்றுத் திறனாளி. அவருக்கு ஒரு கைதான் உண்டு. ஆனாலும் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டார். திரும்பி வந்த சில நாட்களிலேயே அவருக்கு உடல்நலம் குன்றியது. இறுதியில் இறந்துவிட்டார்.”

“ஒருநாள் விட்டு ஒருநாள் ரசோயா (பள்ளியில் சமையல் வேலை செய்பவர்) என்னை தொடர்பு கொண்டு அவரின் கிராமத்தில் நிலைமை எப்படி மோசமாகிக் கொண்டிருக்கிறது என சொல்லிவிடுவார். அங்கிருக்கும் மக்கள் ஏன் சாகிறோம் என்று கூட தெரியாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் காய்ச்சல் மற்றும் இருமல் பற்றி எந்தவித புரிதலும் அவர்களுக்கு இல்லை. அவை கோவிட்டாக கூட இருக்கலாம்,” என்கிறார் அவஸ்தி.

27 வயது ஷிவா. கே ஆசிரியராக இருக்கிறார்.  சித்ராகூட்டீன் மாவ் ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தேர்தல் பணிக்கு செல்வதற்கு முன்பே கோவிட் பரிசோதனை எடுத்துக் கொண்டார். “எச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் பணிக்கு முன்பே பரிசோதனை செய்து கொண்டேன். எல்லாம் சரியாக இருந்தது.” பிறகு அவர் பியாவால் கிராமத்தில் தேர்தல் பணிக்கு ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதி சென்றார். “ஆனால் தேர்தல் பணி முடிந்து நான் இரண்டாம் முறை பரிசோதனை செய்தபோது கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.”

Bareilly (left) and Firozabad (right): Candidates and supporters gathered at the counting booths on May 2; no distancing or Covid protocols were in place
PHOTO • Courtesy: UP Shikshak Mahasangh
Bareilly (left) and Firozabad (right): Candidates and supporters gathered at the counting booths on May 2; no distancing or Covid protocols were in place
PHOTO • Courtesy: UP Shikshak Mahasangh

பாரெய்லி (இடது) மற்றும் ஃபிரோசாபாத் (வலது): வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடியிருக்கின்றனர்; இடைவெளியோ கோவிட் பாதுகாப்பு முறைகளோ பின்பற்றப்படவில்லை.

”சித்ராகூட் மாவட்டத்திலிருந்து வாக்கு மையத்துக்கு பேருந்தில் எங்களை அழைத்து செல்லும்போதுதான் கோவிட் எனக்கு தொற்றியிருக்கும் என எண்ணுகிறேன். அந்த பேருந்தில் காவலர்களோடு சேர்த்து குறைந்தது 30 பேரேனும் இருந்தனர்.” தனிமை சிகிச்சையில் இருக்கிறார் அவர்.

ஒரு முக்கியமான அம்சமும் இந்த பேரிடர் சூழலில் வெளிப்படுகிறது. மையத்துக்கு செல்லும் ஊழியர்கள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஆனால் அப்படியொரு விஷயமே அங்கு நடக்கவில்லை. இது மட்டுமின்றி எந்தவித கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளும் மையங்களில் பின்பற்றப்படவில்லை என்கிறார் வாக்கு எண்ணும் பணியிலிருந்த சந்தோஷ் குமார்.

*****

“ஏப்ரல் 28ம் தேதி உத்தரப்பிரதேச மாநில தேர்தல் ஆணையத்துக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் மே 2ம் தேதி நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையை ஒத்திப் போட வேண்டி நாங்கள் கடிதம் அனுப்பினோம்,” என்கிறார் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் தினேஷ் சந்திர ஷர்மா. “ஒன்றிய வாரியாக இருந்த சங்கக் கிளைகளின் மூலம் தகவல் திரட்டி, இறந்து போன 700 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை அடுத்த நாளே மாநில தேர்தல் ஆணையத்துக்கும் முதல்வருக்கும் அனுப்பினோம்.”

சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கண்டித்த விஷயம் ஷர்மாவும் அறிந்திருந்தார். ஆனால் அதை பற்றி கருத்து சொல்ல மறுத்துவிட்டார். எனினும் சோகத்துடன் அவர், “நாமெல்லாம் சாதாரணமானவர்கள். பணக்காரர்கள் கிடையாது. நம் வாழ்க்கைகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. தேர்தல்களை தள்ளி வைத்து அதிகாரம் கொண்டோரின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள அரசு விரும்பவில்லை. ஏனெனில் ஏற்கனவே பெரும் பணத்தை அவர்கள் தேர்தல்களுக்காக செலவு செய்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக, நாங்கள் கொடுத்த எண்ணிக்கை தவறு என நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்கின்றனர்.

“இங்கு பாருங்கள். ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளின் 3 லட்சம் அரசு ஆசிரியர்களை கொண்டு நூறு வருட சங்கம் இது. பொய்யும் புரட்டும் கொண்ட ஒரு சங்கம் இத்தனை காலம் நீடித்திருக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா?

“நாங்கள் கொடுத்த எண்ணிக்கையை ஏற்காததோடு மட்டுமல்லாமல், அவர்களின் மீது விசாரணைகள் நடத்துகிறார்கள். 706 பெயர்களை கொண்ட முதல் பட்டியலிலேயே பலரின் பெயர் இடம்பெறவில்லை என நாங்கள் தெரிந்து கொண்டோம். அப்பெயர்களையும் பட்டியலில் நாங்கள் சேர்க்க வேண்டும்.”

ஓவியம்: ஜிக்யாசா மிஷ்ரா

’நாமெல்லாம் சாதாரணமானவர்கள். பணக்காரர்கள் கிடையாது. நம் வாழ்க்கைகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது’

லக்னோ மாவட்ட சங்கத்தின் தலைவராக இருக்கும் சுதான்ஷு மோகன் சொல்கையில், “வாக்கு எண்ணிக்கை முடிந்து கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை நாங்களும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பலர் நோய்க்குறி தென்பட்டதாலேயே பரிசோதனை கூட செய்யாமல் 14 நாட்கள் தனிமை சிகிச்சைக்கு சென்றுவிட்டார்கள்.”

சங்கத்தின் முதல் கடிதத்தின் கோரிக்கையான, “தேர்தல் பணிகளில் ஈடுபடும் எல்லா ஊழியர்களுக்கும் கோவிட்டிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டும்,” என்பதே நடக்கவில்லை என்கிறார் தினேஷ் ஷர்மா.

“என் கணவனை இப்படி இழப்பேன் என தெரிந்திருந்தால், அவரை போகவே விட்டிருக்க மாட்டேன். அதிகபட்சம் அவருடைய வேலை போயிருக்கும். உயிர் போயிருக்காது,” என்கிறார் அபர்ணா மிஷ்ரா.

ஆசிரியர் கூட்டமைப்பின் முதல் கடிதமும் கூட, “கோவிட் 19 பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் அவரின் சிகிச்சைக்கு அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை விபத்தோ மரணமோ நேர்ந்தால், இறந்தவரின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் கொடுக்கப்பட வேண்டும்,” எனக் கேட்டிருந்தது.

ஒருவேளை அப்படி நடந்தால்  அபர்ணா போல் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு: தற்போது வந்த செய்தியின்படி, இறந்துபோன தேர்தல் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முடிவெடுத்திருப்பதாக உத்தரப்பிரதேச அரசு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. ஆனாலும்  மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர், அரசிடம் 28 மாவட்டங்களில் இறந்த 77 பேரின் தகவல்கள்தான் இருப்பதாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் .

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Illustration : Antara Raman

Antara Raman is an illustrator and website designer with an interest in social processes and mythological imagery. A graduate of the Srishti Institute of Art, Design and Technology, Bengaluru, she believes that the world of storytelling and illustration are symbiotic.

Other stories by Antara Raman
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan