01-Salihan 2003-PS-When 'Salihan' took on the Raj.jpg

ஆங்கிலேயர் தன் தந்தையை சுட்டதைப் பேசினால் சாலிஹானின் ஞாபகங்கள் கோபத்தால் கிளர்ந்து எழுகிறது.

 

பிற ஆதிவாசிப் பெண்களுடன் வயல்வெளியில் சபார் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு இளைஞன் வியர்க்க விறுவிறுக்கச் சாலிஹா கிராமத்தில் இருந்து அவளை நோக்கி ஓடிவந்தான். “அவர்கள் நம் கிராமத்தை தாக்குகிறார்கள். உன் அப்பாவை அடித்துவிட்டார்கள். நம் வீடுகளைக் கொளுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.” என்று இரைந்தான்.

அவர்கள் என்று அந்த இளைஞன் குறிப்பிட்டது ஆங்கிலேய காவல்துறை ஆட்களைத் தான். சாலிஹா ஆங்கிலேய அரசை எதிர்த்துத் தீரமாக நின்ற கிராமம். மற்ற கிராமங்கள் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டு, தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்குத் தரவேண்டியதை தந்து கொண்டிருந்தது ஆங்கிலேய அரசு.

சபார் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த திமதி தேய் சபார், நாற்பது நாற்பது இளம் பெண்களோடு கிராமத்தை நோக்கி விரைந்தார். “நிலத்தில் ரத்தம் வடிய என் தந்தை கிடந்தார்.” என்று நினைவுகூர்கிறார் முதுமை நிறைந்து அமர்ந்திருக்கும் இந்த விடுதலை வீராங்கனை.

நினைவு தப்பிக்கொண்டே இருக்கும் வயோதிகத்தில் இருந்தாலும் இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசினால் மட்டும் நினைவுகள் ஒளிர்கின்றன. “ஆத்திரம் பொங்க அந்த அதிகாரியை நான் துப்பாக்கியை கொண்டு தாக்கினேன். காட்டு விலங்குகள் வயற்காட்டுக்கு வேலைக்குப் போகும் பொழுது தொல்லை தரக்கூடும் என்பதால் லத்தியை கொண்டு போவது எங்களின் வழக்கம்.”

அந்த அதிகாரியை சபார் தாக்கியதும் நாற்பது பேர் கொண்ட பெண்கள் படை தங்களின் லத்தியை கொண்டு மீதமிருந்த படையினரை நையப்புடைத்தது. “அந்தக் கேடு கெட்டவனை நான் தெருக்கோடி வரை துரத்தியடித்தேன்.” ஆவேசம் ததும்பும் நிலையிலும் அவர் சிரித்தபடியே தொடர்கிறார், “பெருமழை போல அடி பின்னிவிட்டோம். அவன் அப்படியே திகைத்து விட்டான். ஓடினான், ஓடிக்கொண்டே இருந்தான்...” என்றார். அதற்குப் பின் தன் தந்தையைத் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். இன்னொரு கிளர்ச்சியை முன்னடத்தி சென்ற பொழுது அவரின் தந்தையான கார்த்திக் சபார் கைது செய்யப்பட்டார். சாலிஹானின் தந்தையான சபார் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டங்களை அப்பகுதியில் தொடர்ந்து நடத்தினார்.

திமதி தேய் சபார் நுபதா மாவட்டத்தில் அவர் பிறந்த சாலிஹா கிராமத்தில் ‘சாலிஹான்’ என்று அறியப்படுகிறார். ஆயுதமேந்தி இருந்த ஆங்கிலேய அதிகாரியை லத்தியை கொண்டு எதிர்கொண்ட வீராங்கனையாக அவரைக் காண்கிறார்கள். அவர் அச்சமில்லாதவர் என்றாலும் அது குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லை. தான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்கிறார். “எங்களின் வீடுகள், பயிர்களை அழித்தார்கள். என் தந்தையைத் தாக்கினார்கள். ஆகவே தான் அவர்களோடு போரிட்டேன்.” என்கிறார்.

அது 1930-ம் வருடம், அப்பொழுது சபாருக்கு பதினாறு வயது இருக்கும். ஓடிசாவின் இந்தப் பகுதி விடுதலைக் கிளர்ச்சிக்கு பெயர் பெற்றது. விடுதலைப் போராட்ட கூட்டங்களை ஆங்கிலேய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. திமதியின் தாக்குதலும், காவல்துறையினரை அடித்து விரட்டியதும் ‘சாலிஹா கிளர்ச்சி, துப்பாக்கிச்சூட்டின்’ பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.

திமதியை நான் சந்தித்த பொழுது அவர் தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டு இருந்தார். இன்னமும் அவரின் முகத்தில் தீரமும், அழகும் தவழ்வதைக் கண்டேன். பொலிவிழந்து, பார்வையைப் படிப்படியாகத் தற்போது இழந்து கொண்டிருக்கிறார்., இளம் வயதில் அழகாய், உயரமாய், வலிவுடன் இருந்திருப்பார். அவரின் நீளமான கரங்கள் அதற்குள் பொதிந்திருந்த வீரியத்தைப் பறைசாற்றுகிறது. அது லத்தியை தாங்கி போரிட்டிருக்கும் காட்சி நிழலாடுகிறது. அவரை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அதிகாரி, மிகச் சரியாக ஓடுவதைத் தேர்ந்தெடுத்தான். 

அவரின் அளவில்லாத வீரம் போற்றப்படவில்லை, அவரின் கிராமத்தை தாண்டி அவர் நினைவுகூரப்படுவதில்லை. ‘சாலிஹானை’ நான் சந்தித்த பொழுது அவர் வறுமையில் பர்கர்ஹா மாவட்டத்தில் வாடிக்கொண்டிருந்தார். அவரிடம் பல வண்ணங்களால் ஆன அரசாங்கச் சான்றிதழ் ஒன்று மட்டுமே உள்ளது. அதுவும் அவரின் தந்தையின் போராட்டத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறதே அன்றி, இவரின் எதிர் தாக்குதல் குறித்து அதுவும் மவுனம் சாதிக்கிறது. அவருக்கு ஓய்வு ஊதியமோ, உதவியோ மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்கவில்லை.

அவருக்குப் பெரும்பாலான விஷயங்களை நினைவுகூர முடியவில்லை. அவரின் தந்தை கார்த்திக் சபார் சுடப்பட்டதை நினைவுபடுத்தினால் அவரின் முகம் பிரகாசம் அடைகிறது. என்னவோ அது இப்பொழுது நடந்தது போல வெஞ்சினத்தோடு அவர் பேசுகிறார். அவரின் நினைவுகளை அது கிளறி விடுகிறது.


02-Salihan 1002-PS-When 'Salihan' took on the Raj.jpg

சாலிஹான்  அளவில்லாமல் பெரும்புன்னகையால், புன்னகைகளால் எங்களை நிறைக்கிறார். ஆனால், அவர் ஓய்ந்து கொண்டிருக்கிறார். 


“என் அக்கா பான்  தேய், தோழிகளான கங்கா தலேன், சக்ஹா தோரேன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். என் தந்தை ராய்ப்பூர் சிறையில் இரண்டு ஆண்டுகள் கழித்தார்.”

அவரின் பகுதி இப்பொழுது ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்து கொண்ட பண்ணையார்களால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சாலிஹான், ஏனையோர் போரிட்டு பெற்றுத் தந்த விடுதலையால் எளியவர்களை விட இவர்களே அதிகம் பயன் பெற்று உள்ளார்கள். செல்வத் தீவுகள், கொடும் வறுமைக் கடலின் நடுவே ஆங்காங்கே காணப்படுகின்ற அவலம் நிலவுகிறது.

சாலிஹான்  அளவில்லாமல் பெரும்புன்னகையால், புன்னகைகளால் எங்களை நிறைக்கிறார். ஆனால், அவர் ஓய்ந்து கொண்டிருக்கிறார். 

அவரின் மூன்று மகன்களான ப்ரிஷ்ணு போய், அங்கூர் போய், அகுரா போய் ஆகியோரை நினைவுகூர தடுமாறுகிறார். நாங்கள் நன்றி கூறி விடைபெறும் பொழுது அவர் கையசிக்கிறார். திமதி தேய் சபார் சாலிஹான் இப்பொழுதும் புன்னகைக்கிறார்.


‘சாலிஹானை’ நான்  சந்தித்த  ஒரு வருடத்திற்கு பிறகு அவர் 2002-ல் இயற்கை எய்தினார்..

திமதி சபார் சாலிஹானின் நினைவுகளுக்காக

சாலிஹானே உன்னுடைய கதையை அவர்கள் உச்சரிக்க மாட்டார்கள்

நீ செய்தித்தாளின் மூன்றாம் பக்கச் செய்தியாக ஆகமாட்டாய்

அது பதக்கங்கள் நிறைந்த அலமாரியை வண்ணங்களால் அலங்கரிப்பவர்கள் பெறுகிற இடம்

கொழுப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்தவர்கள் கொண்டாடப்படுவார்கள்

தொழிற்சாலைகளின் தளபதிகள் மீதமுள்ள இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள்

ப்ரைம் டைம் உனக்கில்லை சாலிஹான்

அது உனக்கானதில்லை என்பது வேடிக்கையானது

அது கொலை, கொடூரங்கள் செய்பவர்களுக்கானது

பொசுக்கிவிட்டு பழிசுமத்துபவர்களுக்கானது

அனைத்து அயோக்கியத்தனங்களும் செய்துமுடித்த பின்பு

சாமியாரைப் போலச் சாந்தம் பூசி சமாதானம் போதிப்பவர்களுக்கு ஆனது

பரங்கியர்கள் உன் கிராமத்தை கொளுத்தினார்கள்

துப்பாக்கிகள் ஏந்திய துஷ்டர்கள்

ரயிலேறி வந்தார்கள் ராட்சதர்கள்

பயங்கரங்கள், பரவி கிழிக்கும் காயங்களைக் கொண்டு வந்தார்கள்

நல்லறிவு நாசமாய்ப் போனதைப் போல நடந்து கொண்டார்கள் பாதகர்கள்

இருந்ததை எல்லாம் எரித்தார்கள் அந்தப் பாவிகள்

 

பணமும், பசிக்கு இருந்த தானியமெல்லாம் தட்டிப் பறித்தார்கள்

ஆங்கிலேய அரக்கர்கள் ஆயுதம் ஏந்தி அட்டூழியம் செய்தார்கள்

ஆனால், அவர்களை நீ துளியும் அஞ்சாமல் எதிர்கொண்டாய்

தெருவினில் தீரமாய்ப் பாய்ந்து போரிட்டாய்

சாலிஹாவில் நீ போரிட்டு பரங்கியரை புறமுதுகிட வைத்த

புராணத்தைப் பாடியபடியே இருக்கிறார்கள்

உன் உறவுகள் உதிர வெள்ளத்தில் மிதக்க

உற்ற தந்தை காலில் குண்டடிபட்டு குலைய

நீ குன்று போல நின்றாயே

ஆங்கிலேயரை அடித்து ஊர் வாசல்வரை விரட்டினாயே வீராங்கனையே

மண்டியிடாமல் மகத்தான போர் புரிய போனாய்

அந்த ஆங்கிலேய அதிகாரியை நகர்வதற்குள் நொறுக்கினாய்

இறுதியாக அவன் நகர்கையில் தத்தி தத்தி மறைந்து கொண்டான்

பதினாறு வயதான உன்னிடம் அடைக்கலம் தேடினார்கள்

ஆங்கிலேயருக்கு எதிரான நாற்பது பெண்கள், சாலிஹான்

வலிமையும், வாளிப்பும் மிக்கவர்கள் அவர்கள்

நீ இப்பொழுது நரைகூடி, துவண்டு விட்டாய்

உன் உடல் நலிவடைகிறது

ஆனால் அந்தக் கண்களில் ஒரு மின்னல் தெரிகிறது, அது நீதான்!

ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தோர் உன் ஏழை கிராமத்தை ஆள்கிறார்கள், சாலிஹான்

கற்களால் கோயில்கள் கட்டுகிறார்கள்

எங்கள் விடுதலையை அடமானம் வைத்துவிட்டு

செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடவே மாட்டார்கள்

நீ வாழ்ந்ததைப் போலவே இறந்தாய் சாலிஹான்

சாப்பிட சில கவளம் மட்டுமே கிடைத்து செத்துப் போனாய்

வரலாற்றின் நிழல்களில்

உன் நினைவுகள் மங்குகின்றன

ராய்ப்பூர் சிறைச்சாலையில் தொங்கும் துண்டுச் சீட்டுகள் போல

 

உன் இதயத்தைத் தந்திடு சாலிஹானே

திக்கெட்டும் வெற்றி முழக்கம் நான் கொட்டியிருப்பேன்

உனக்கான போரில்லை அது

உலகத்தின் விடுதலைக்கான ஒரு யுத்தம்

எம் குழந்தைகள் உன்னை அறிந்திட வேண்டும் சாலிஹான்

உன்னை எப்படிச் சொல்லி சீராட்டுவது?

எந்த ரத்தினக்கம்பளத்திலும் நீ நடக்கவில்லை

எந்தக் கிரீடத்தையும் அணிந்து நீ பெருமிதப்படவில்லை

பெப்சி, கோக்குக்கு உன் பெயரைத் தரவில்லை

என்னோடு பேசு சாலிஹான்

ஒரு மணிநேரமாவது உன் குரலோடு உறவாட வேண்டும்

இந்த அபலை பிரிகையில் உன் இதயத்தின் குரலை

ஏட்டில் வடித்துவிடத் துடிக்கிறேன்.

இந்தியாவின் அறமற்ற அரசர்களோடு காதல் புரிவதினும் உன்னதமல்லவா உன் உடனான உறவு?


இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான் 

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.

Other stories by P. Sainath