டிசம்பர் 7, 2023 அன்று பாலஸ்தீனத்தை சேர்ந்த நம் சக மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் எழுத்தாளரும் கல்வியாளரும் பத்தி எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ரெஃபாட் அல்ரீர், காசாவில் தொடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையில் இலக்காக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது குரல் அடங்கிய அந்த நாளில், அவரது கவிதை உலகம் முழுக்க டஜனுக்கும் அதிகமான மொழிகளில் எதிரொலித்தது.

இத்தகைய உலகில் இத்தகைய காலக்கட்டத்தில் பாரி கொண்டிருக்கும் மொழிகளின் உலகத்தில் எங்களின் பங்கையும் பணியையும் நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம். ரெஃபாத்தின் வார்த்தைகளை நினைவுகூருவதிலிருந்து நாங்கள் தொடங்குகிறோம்:

போராட்டத்துக்கு குரல் கொடுக்கவும் திருப்பி சண்டை போடவும் நம்மிடம் இருப்பது மொழி மட்டும்தான். வார்த்தைகள்தான் நம்முடைய பொக்கிஷம். அவற்றைக் கொண்டுதான் நாமும் பயிற்சி கொள்ள வேண்டும். பிறரையும் பயிற்றுவிக்க வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லா மொழிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சொல்லப்பட வேண்டும். அதிகபட்சமான எண்ணிக்கையில் மக்களின் இதயங்களையும் மனங்களையும் தொடுகிற மொழி மீதுதான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித சமூகத்துக்கு நேர்ந்த அற்புதங்களிலேயே சிறப்பானது மொழிபெயர்ப்புதான். மொழிபெயர்ப்பு, தடைகளை உடைத்து இணைப்புகளை உருவாக்கி புரிதலை தருகிறது. அதே நேரத்தில் “மோசமான” மொழிபெயர்ப்புகள் தவறான புரிதல்களை கொடுக்கவும் வல்லது.

மக்களை ஒருங்கிணைத்து புதிய புரிதலை கட்டமைக்கும் திறனை மொழிபெயர்ப்பு கொண்டிருக்கிறது என்கிற இந்த நம்பிக்கைதான் பாரிபாஷை  பணியின் மையம்.

2023ம் ஆண்டு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ஆக இருந்தது.

சட்டீஸ்கரி மற்றும் போஜ்பூரி ஆகிய இரண்டு மொழிகளை கடந்த வருடத்தில் இணைத்ததில் பாரி கட்டுரைகள் பதிப்பிக்கும் மொழிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

பாரிபாஷை  என்ற பெயர் சூட்டப்பட்டதாலும் இந்த வருடம் எங்களுக்கு முக்கியமான வருடம் ஆனது. ஆங்கில மொழி கட்டுரைகளை மொழிபெயர்ப்பதையும் தாண்டி, பாரியை கிராமப்புற இதழியலுக்கான முழுமையான பன்மொழி தளமாக ஆக்கத் தேவையான அனைத்தையும் செய்யும் எங்களின் பங்கை அந்த பெயர் பிரதானப்படுத்துகிறது.

நாடு முழுவதும் இருக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைகளில் மொழிகள் கொண்டிருக்கும் பங்கை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். மொழிபெயர்ப்பு மற்றும் மொழிகளை குறித்த கட்டுரைகள் மற்றும் உரையாடல்களின் வழியாக, இந்த வெளியில் பாரியின் பணியை நாங்கள் முன்னிறுத்துகிறோம்.

எண்களை பொறுத்தவரை பாரிபாஷை  எந்தளவுக்கு செயலாற்ற முடிந்தது என்பதற்கான படம்

மேம்பட்ட முறைகள் மற்றும் பல்வேறு பாரி குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றால், எங்கள் மொழிகளின் கட்டுரைகளை, அதிகரித்து வரும் பணிக்கு இடையிலும் சரியாகவும் துல்லியமாகவும் உருவாக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் இதுவரை இருந்திராத அளவுக்கு அதிகமான கட்டுரைகளை எல்லா மொழிகளிலும் பிரசுரிக்கிறோம். ஆங்கிலம் அல்லாத வார்த்தைகளுக்கென ஆடியோ ஃபைல்கள், புகைப்பட தலைப்புகள் சரியாக வரவென புகைப்பட பிடிஎஃப்கள் போன்ற அவசியமான விஷயங்கள், எங்களின் மொழிபெயர்ப்புகளுக்கும் மொழி பயன்பாட்டுக்கும் புதிய பரிமாணங்களை கொடுத்திருக்கின்றன. ஒரு புதிய மொழியில் கட்டுரையை பிரசுரிக்கும்போது மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய இடைவெளிகளை குறைப்பதுதான் எங்களின் நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது.

மக்களின் குரல்களில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளின் வழியாக பாரிபாஷை  ஆங்கில மொழிபெயர்ப்பில் துல்லியத்தை கொண்டு வருகிறது. ஆவணப்படத்தின் சப் டைட்டில்கள் அல்லது கட்டுரையில் கையாளப்பட்டிருக்கும் மேற்கோள்கள் மற்றும் இந்திய மொழிகளின் வார்த்தைகள்/குறியீடுகள் போன்றவற்றை பரிசீலனைக்கு உட்படுத்துவதால், மக்களின் குரல்களுக்கு ஆங்கில மொழியிலும் உண்மைத்தன்மையையும் தனித்துவ சுவையையும் வழங்க முடிகிறது.

சரியான நேரத்துக்கு வரும் நல்ல மொழிபெயர்ப்புகள், மொழி பேசப்படும் இடத்துக்கு முன்னுரிமை கொடுத்தல் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளின் டிஜிட்டல் ஊடகத்தில் வாசகப்பரப்பு அதிகரிப்பு போன்றவை எங்களின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கு அதிக வாசிப்பை கொடுத்து களத்தில் தாக்கத்தையும் உருவாக்கி தருகிறது.

ஸ்மிதா காடோரின் புகைமயமாகும் பெண் பீடித் தொழிலாளர்களின் ஆரோக்கியம் கட்டுரையின் வங்காள ( ঔদাসীন্যের ধোঁয়াশায় মহিলা বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য ) மொழி பதிப்பு பரவலாக பகிரப்பட்டு, இறுதியில் தொழிலாளர்களின் ஊதியங்களில் உயர்வை பெற்று தந்தது. போலவே உர்ஜாவின் காணொளியுடன் கூடிய ப்ரிதி டேவிட்டின் காற்றாலைகளால் காணாமலடிக்கப்படுதல் கட்டுரைக்கு பிரபாத் மிலிந்த் எழுதிய இந்தி பதிப்பு ( जैसलमेर : पवनचक्कियों की बलि चढ़ते ओरण ), உள்ளூர் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டு, ’புறம்போக்கு நிலங்களை’ அரசாங்கம் மீண்டும் புனிதத் தோப்புகளாக திருப்பி டெக்ரேவில் தரும் சூழல் நேர்ந்தது. இவை சில உதாரணங்கள்தாம்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மொழிபெயர்ப்பிலும் மொழிப் பணிகளிலும் சர்வதேச அளவில் அதிகரித்திருக்கும் போக்குக்கு எதிராக பாரி இருந்து பாரிபாஷையின் நிர்வாகக் கட்டமைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகமான மக்களை பணிக்கமர்த்தும் உறுதியோடு இயங்குகிறது. 2023ம் ஆண்டில் பல்வேறு இடங்கள் மற்றும் சமூகப் பின்னணிகளை சார்ந்த மக்கள் பாரிபாஷையில் இணைந்து இயங்குதல் அதிகமானது

பல பாரி மொழிபெயர்ப்புகள் அந்தந்த மொழி சார்ந்த மாநிலங்களின் கிராமப்புற தளங்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பூமிகா, மாத்ருகா, கனஷக்தி, தேஷ் ஹிடாய்ஷி, பிரஜவாணி போன்றவை அவற்றில் சில. பெண்களுக்காக நடத்தப்படும் மராத்தி மாத இதழான சர்யாஜனி , ஜனவரி 2023-ல் பாரி பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. பெண்கள் சார்ந்த பாரி கட்டுரைகளின் மராத்தி மொழிபெயர்ப்புகளை வரும் வருடங்களில் அது பதிப்பிக்கும்.

பாரிபாஷை , மொழிபெயர்ப்பு துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை, அதன் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் பணி சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றால் உருவாக்கியிருக்கிறது. பல்வேறு அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் பல இந்திய மொழிகளை கொண்ட பன்மொழித் தளங்களின் வாயிலாக ஆழமான பார்வைகளையும் ஆதரவையும் அது வழங்கியிருக்கிறது.

பாரி மொழிபெயர்ப்புகளில் இருந்து பாரிபாஷைக்கு

இந்த வருடத்திலிருந்து நாங்கள் இந்திய மொழிகளிலிருந்து நேரடிக் கட்டுரைகளை பெறத் தொடங்கியிருக்கிறோம். ஆங்கிலத்தில் இறுதி தொகுப்பு செய்வதற்கு முன்னால், முதல் கட்ட சரிபார்த்தலை மூல மொழியில்தான் செய்கிறோம். இந்திய மொழிகளில் சொல்லப்படும் கட்டுரைகளை அதன் மூல மொழியிலேயே சரிபார்த்து, பின் இறுதி பிரதியை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்கான எங்களின் சாத்தியங்களை கட்டியெழுப்பும் நோக்கத்தில் இருக்கிறோம். இதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இரு மொழியில் இயங்கும் ஆசிரியர்களும் இதற்கென ஒரே நேரத்தில் இயங்குகின்றனர்.

பாரிபாஷையில் கட்டுரைகளையும் படைப்பாற்றல் மிக்க பதிவுகளையும் ஆவணப்படங்களையும் கொண்டு வருவதற்கென பல செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர்: ஜிதேந்திர வாசவா, ஜிதேந்திர மெயிட், உமேஷ் சொலாங்கி, உமேஷ் ரே, வஜேசிங் பார்கி, கேஷவ் வாக்மாரே, ஜேய்சிங் சவான், தர்பான் சர்க்கார், ஹிமாத்ரி முகெர்ஜி, சாயன் சர்கார், லபானி ஜங்கி, ராகுல் சிங், ஷிஷிர் அகர்வால், பிரகாஷ் ரான்சிங், சவிகா அப்பாஸ், வாகிதுர் ரஹ்மான், அர்ஷ்தீப் அர்ஷி.

பாரிபாஷையுடன் இணைந்து பாரி கல்விக்குழு, மாணவக் கட்டுரைகளை இந்திய மொழிகளில் பிரசுரித்து வருகிறது. ஆங்கிலமல்லாத பின்னணிகளிலிருந்து வரும் இளம் செய்தியாளர்கள், அவர்கள் விரும்பும் மொழியில் எழுதுகின்றனர். செய்தி சேகரிக்கவும் பாரியில் அதை ஆவணப்படுத்தவும் கற்றுக் கொள்கிறார்கள். இக்கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் அவர்களை பெரியளவு வாசகப்பரப்புக்கு கொண்டு போய் சேர்க்கிறது.

பாரிபாஷையின் ஒடியா குழு, பழங்குடி குழந்தைகளின் ஓவியங்கள் கொண்ட பெட்டகத்தை பாரிக்கு மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அப்பணி ஒடியா மொழியில் செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவின் Grindmill Songs மற்றும் குஜராத்தின் Kutchi songs போன்ற களஞ்சியங்களை சீராக்கி அளிப்பதில் தெளிவான அனுபவத்தை பாரி பெற்றிருக்கிறது. செய்தித்தளங்கள் தன்னார்வ நிறுவனங்கள் என பல குழுக்கள், பங்களிக்கவும் உள்ளூர் மொழிகளில் கூட்டாக இணைந்து இயங்கவும் விருப்பம் தெரிவித்து பாரியை அணுகியிருக்கின்றன.

பாரிபாஷை  பாரியை மக்களுக்கான மொழிகளில் மக்களுக்கான பெட்டகமாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறது. வரும் வருடங்களில் அதை நோக்கிய பல முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.

முகப்புப் படம்: ரிக்கின் சங்க்ளேச்சா

எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.

லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின் பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் DONATE என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

PARIBhasha Team

PARIBhasha is our unique Indian languages programme that supports reporting in and translation of PARI stories in many Indian languages. Translation plays a pivotal role in the journey of every single story in PARI. Our team of editors, translators and volunteers represent the diverse linguistic and cultural landscape of the country and also ensure that the stories return and belong to the people from whom they come.

Other stories by PARIBhasha Team
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan