ராமா அதெல்லு கண்டேவாட் எல்லா நேரமும் கவலையுடன் இருக்கிறார். கவலைக்கான காரணம் அவருக்குதான் தெரியும். கோவிட்டின் இரண்டாம் அலை ஓய்ந்தாலும் அதன் நினைவுகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை. “சுடுகாட்டில் கொஞ்ச நாட்களாக வேலை குறைவாக இருக்கிறது,” என்கிறார் அவர். “ஆனால் மூன்றாம் அலை வந்தால் என்ன செய்வது? மீண்டும் ஓர் அழிவு நேர்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.”

சுடுகாட்டுப் பணியாளராக 60 வயது ராமா, ஒஸ்மனாபாத்தின் கபில்தர் ஸ்மஷன் பூமியில் வேலை பார்க்கிறார். சுடுகாட்டுக்குள்ளேயே குடும்பத்துடன் அவர் வாழ்கிறார். உடன் 78 வயது தாய் அடில்பாய், 40 வயது மனைவி லஷ்மி மற்றும் நான்கு மகள்களான 18 வயது ராதிகா, 12 வயது மனிஷா, 10 வயது சத்யஷீலா, 3 வயது சரிகா மற்றும் ராதிகாவின் 22 வயது கணவர் கணேஷ் ஆகியோர் வசிக்கின்றனர்.

சுடுகாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டியது ராமாவின் வேலை. “சடலங்களுக்கு சிதைகளை அமைப்பேன். உடல் எரிந்தபிறகு சாம்பலை சுத்தப்படுத்துவேன். இன்னும் பல வேலைகள் செய்வேன்.” இந்த வேலைகளில் கணேஷ் அவருக்கு உதவுகிறார். “இந்த வேலை செய்ய எங்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊதியமாக நகராட்சி சபையிலிருந்து கிடைக்கிறது,” என்கிறார் ராமா. இருவரும் சேர்ந்து செய்யும் வேலைக்கான அந்தத் தொகைதான் குடும்பத்துக்கான ஒரே வருமானம்.

12 வருடங்களுக்கு முன்பு, 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நந்தெத் பகுதியிலிருந்து இங்கு ராமாவும் அவரின் குடும்பமும் இடம்பெயர்ந்தனர். அவர்கள் மசான்யோகி சமூகத்தை சேர்ந்தவர்கள். மேய்ச்சல் பழங்குடிச் சமூகம் அது. பாரம்பரியமாக சுடுகாட்டில் வேலை செய்பவர்கள் அவர்கள். கண்டேவாடின் குடும்பத்தைப் போல் சுடுகாட்டிலேயே வசிக்கும் குடும்பங்களும் இருக்கின்றன.

Ganesh (in blue and white t-shirt) gathers the ashes after cremation of bodies. He helps Rama Gandewad, his father-in-law, in the cremation work
PHOTO • Parth M.N.
Ganesh (in blue and white t-shirt) gathers the ashes after cremation of bodies. He helps Rama Gandewad, his father-in-law, in the cremation work
PHOTO • Parth M.N.

சடலங்கள் எரிந்த பிறகு கணேஷ் ( நீலம் மற்றும் வெள்ளை நிறச் சட்டை) சாம்பலை சேகரிக்கிறார். அவரின் மாமனார் ராமாவுக்கு தகன வேலைகளில் உதவுகிறார்

”வாழ்க்கை முழுக்க” சுடுகாடுகளில் பணிபுரிந்திருப்பதாக ராமா சொல்கிறார். ஆனால் கோவிட் தொற்றுக்காலத்தில் கண்டதைப் போல் எண்ணற்ற சடலங்களை எப்போதும் அவர் கண்டிருக்கவில்லை. “குறிப்பாக இரண்டாம் அலையின்போது (மார்ச் - மே 2021) நேர்ந்ததைப் போல் நான் எப்போதும் பார்த்ததில்லை. மரணமுற்ற நோயாளிகளின் உடல்கள் நாள் முழுவதும் எரிந்து கொண்டிருந்தன. அந்தப் புகையை நாள் முழுவதும் நாங்கள் சுவாசித்தோம். எங்களில் யாரும் கோவிட்டால் சாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

நாட்களின் முடிவில் குடும்பத்தை நல்லக் காற்றுக்கு ஏங்கும் நிலைக்கு தொற்றுநோய் ஆக்கியிருந்தது. அவர்களின் தகரக் கூரை வீடு, சுடுகாட்டின் வாசலுக்கு அருகே இருக்கிறது. சிதை எரியும் இடத்திலிருந்து 100-150 மீட்டர் தூரம்தான். மரக்கட்டைகள் எதிரில் குவிக்கப்பட்டு, 12 அடிகள் தள்ளி சிதைகள் இருந்தன. எரியும் சடலங்களிலிருந்து எழும் நாற்றம் நிறைந்த புகைக்காற்று அவர்களின் வீட்டை நோக்கி வரும்.

மரண எண்ணிக்கை கோவிட் சமயத்தில் அதிகமாக இருந்தபோது கண்டேவாடின் வீடு புகையால் நிரம்பியிருந்தது. மதியமும் மாலையும் ஒஸ்மனாபாத் மாவட்ட மருத்துவமனையிலிருந்து தகனத்துக்கான சடலங்கள் வந்து சேரும். ராமாவும் கணேஷும் ஒவ்வொரு சடலம் வருவதற்கு முன்னும் சிதைகளை தயார் செய்து வைப்பார்கள்.

“அந்த மாதங்களில், 15-20 சடலங்கள் ஒவ்வொரு நாளும் சுடுகாட்டில் எரியும். ஒருநாள் 29 சடலங்கள் எரிந்தன,” என்கிறார் கணேஷ். “முதல் அலையின்போது (ஏப்ரலிலிருந்து ஜூலை 2020 வரை)  5-லிருந்து 6 சடலங்கள் ஒவ்வொரு நாளும் வந்தன. அச்சமயத்தில் அதுவே அதிக எண்ணிக்கை என நினைத்தோம். அதிக எண்ணிக்கையை திரும்ப எங்களால் கையாள முடியாது. பெரும் மன அழுத்தமும் சோர்வும் உருவாகிறது,” என்கிறார் அவர்.

Left: Piles of wood in front of the Gandewad's home on the cremation grounds. Right: Rama Gandewad and Sarika, his three-year-old daughter
PHOTO • Parth M.N.
Left: Piles of wood in front of the Gandewad's home on the cremation grounds. Right: Rama Gandewad and Sarika, his three-year-old daughter
PHOTO • Parth M.N.

இடது: கண்டேவாடின் வீட்டுக்கு எதிரே இருக்கும் மரக்கட்டைகள். வலது: ராமா கண்டேவாட், சரிகா மற்றும் அவரின் மூன்று வயது மகள்

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உறவினர்களின் கூக்குரல் கேட்டே அவர்கள் விழித்திருக்கின்றனர். எரியும் கண்களுடன்தான் உறங்கச் சென்றிருக்கின்றனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபிறகு அவர்கள் சற்று நிம்மதி அடைந்தாலும் வீட்டை நிரப்பிய துர்நாற்றத்தை ராமாவால் மறக்க முடியவில்லை.

அக்டோபர் 14ம் தேதி நிலவரப்படி, ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் 390 பேர் கொரோனா பாதிப்பு கொண்டிருந்தனர். மார்ச் 2020லிருந்து 67,000-க்கும் மேலான பாதிப்புகளும் 2000-க்கும் மேலான மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நிலைகுலைந்த உறவினர்களின் ஓலம் இன்னும் ராமாவுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கூட்டமாகி கோவிட் பாதுகாப்பு முறைகளை மீறுவார்கள் என்கிறார் அவர். “அவர்களைக் கையாளுகையில் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார். “பாதுகாப்பான தூரத்தில் அவர்களை நிறுத்தி உங்களின் வேலையை நீங்கள் செய்ய வேண்டும். சிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் கோபமடைவார்கள்.”

ஆனால் அவற்றின் பாதிப்பு ராமாவின் குடும்பத்தில் இருந்தது தெளிவாகப் புலப்பட்டது. குறிப்பாக இரண்டாம் அலையின் பாதிப்பு. ஒவ்வொரு முறை ஓர் அவசர ஊர்தி சுடுகாட்டின் கற்பாதைக்குள் வரும்போதும் மூன்று வயது சரிகா, “புகை, புகை” எனக் கத்துவார்.  “அவசர ஊர்தியிலிருந்து சடலங்கள் இறக்குவதற்கு முன்னமே கண்களை அவள் கைகளால் தேய்க்கத் தொடங்குவாள்,” என்கிறார் கணேஷ். கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தாலும் புகை உள்ளே வந்து விடும். “இரண்டாம் அலை சற்று தணிந்ததும் எங்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி பிறந்தது. அவளும் அப்படிச் செய்வதை நிறுத்திக் கொண்டாள். ஆனால் இப்படியே வளருவது அவளை எதிர்காலத்தில் பாதிக்கலாம். மூன்றாம் அலைக்கான சாத்தியம் அச்சத்தைக் கொடுக்கிறது.”

Left to right: Rama, in the shade of a tree outside his house, his mother Adilbai, and daughter Radhika (Ganesh's wife)
PHOTO • Parth M.N.
Left to right: Rama, in the shade of a tree outside his house, his mother Adilbai, and daughter Radhika (Ganesh's wife)
PHOTO • Parth M.N.
Left to right: Rama, in the shade of a tree outside his house, his mother Adilbai, and daughter Radhika (Ganesh's wife)
PHOTO • Parth M.N.

இடதிலிருந்து வலது: வீட்டுக்கு வெளியே இருக்கும் மரநிழலில் ராமா. அடுத்து தாய் அடில்பாய். கடைசியில் மகள் ராதிகா (கணேஷின் மனைவி)

ஒவ்வொரு காலையும் ராமாவும் அவரின் குடும்பமும் மாவட்ட நிர்வாகம் செல்பேசிகளுக்கு அனுப்பும் கோவிட் எண்ணிக்கையை பார்ப்பார்கள். “ஒவ்வொரு நாளும் நாங்கள் தூங்கி எழுந்ததும் தரவுகளை பரிசோதிப்போம். நிம்மதி பெருமூச்சு விடுவோம். பயப்படும் அளவுக்கு சமீபத்தில் எண்ணிக்கை வரவில்லை,” என்கிறார் ராமா. “ஆனால் மூன்றாம் அலை வந்தோலோ எண்ணிக்கை உயர்ந்தாலோ எங்களுக்குதான் முதலில் தெரிய வரும்.”

தொற்றிலிருந்து குடும்பம் இதுவரை தப்பியிருந்தாலும் கூட, ராமாவின் தாய் பாதிப்புகளை பற்றி சொல்கிறார். “நாங்கள் அனைவரும் ஏதோவொரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டோம்,” என்கிறார் அடில்பாய். “அதிக சடலங்கள் இல்லாத இப்போதும் கூட  நாங்கள் இருமிக் கொண்டிருக்கிறோம். தலை வலியும் தலைச்சுற்றலும் இருக்கிறது. எல்லா நேரமும் மயக்கமாய் இருக்கிறது. இன்னொரு கோவிட் தாக்குதலை எங்களால் தாங்க முடியாது என எண்ணுகிறேன். எப்போதும் மரணத்துக்கு நடுவே இருக்கவும் முடியாது.”

அங்கேயே தங்கியிருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. “நாங்கள் எங்கே செல்வது?” எனக் கேட்கிறார் ராமா. “வாடகைக்கு வீடு எடுக்க எங்களிடம் வசதி இல்லை. வேறு எந்த வேலையும் நான் வாழ்க்கையில் செய்ததும் இல்லை.”

சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் நகராட்சியின் அரை ஏக்கர் நிலத்தில் அவர்களுக்கு தேவையான அளவில் சோளமும் கம்பும் விளைவித்துக் கொள்கின்றனர். “சுடுகாட்டு வேலையால்தான் எங்கள் கைக்கு பணம் வருகிறது. அது இல்லாமல் எங்களால் வாழ முடியாது,” என்கிறார் அடில்பாய்.

வேறு எந்த வருமானமும் இல்லாமலும் அடிப்படைத் தேவைகளும் இல்லாமல் குடும்பம் சமாளித்துக் கொண்டிருக்கிறது. “எங்களிடம் எந்த பாதுகாப்பும் இல்லை. சானிடைசர் இல்லை. எங்களின் வெறுங்கைகளைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் அடில்பாய். எவரைக் காட்டிலும் அவர் தனது பேரக் குழந்தைகளைப் பற்றிதான் கவலைப்படுகிறார். “அவர்களும் வளர்ந்து சுடுகாட்டில் வேலை செய்ய நான் விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

இக்கட்டுரை, புலிட்சர் மையத்தின் சுயாதீன இதழியல் மானியம் பெறும் செய்தியாளர்  எழுதும் தொடரின் ஒரு பகுதி.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan