ஷீதல் வேக்மேர் தொலைபேசி மணி அடித்தாலே அஞ்சுகிறார். அவர் தவிர்க்க விரும்பும் வங்கி ஏஜண்ட்டின் எண் அல்லாத வேறெந்த எண்ணாக இருந்தாலும் நிம்மதி அடைகிறார். “அவர்கள் கொரோனா வைரஸ்ஸை பொருட்படுத்துவதில்லை,” என்கிறார் 31 வயதான ஷீதல். நல்லவேளையாக ஒரு வாரத்துக்கு முன் தொலைபேசி அழைப்புகள் குறைந்தன. ஏனென்ற காரணம் ஷீதலுக்கு தெரியவில்லை. ஆனாலும் “அவர்கள் திரும்பத் தொடங்குவார்கள்…” என்கிறார் அவர்.

வேக்மேரின் குடும்ப உறுப்பினர்கள் தினக்கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். மகாராஷ்டிராவின் வேளாண் பகுதியான மராத்வாடாவில் உள்ள ஒஸ்மனாபாத்தில் வசிக்கிறார்கள். 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில், ஜெயலக்‌ஷ்மி நிதி நிறுவனம் என்கிற நிறுவனத்திலிருந்து ஷீதலின் தாய் மங்கள், 60,000 ரூபாய் கடன் வாங்கினார். “நாங்கள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்கினோம். நான் ரவிக்கைகள் தைக்கத் தொடங்கினேன். எம்பிராய்டரி என்கிற பூத்தையல் போன்ற பல தையல் வேலைகளை செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் 53 வயதான மங்கள். “என் கணவரும் மகனும் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். எங்களுக்கென சொந்தமாக நிலமில்லை.”

24 சதவிகித வட்டிக் கடனுக்கான தவணைத் தொகை ரூ.3230-ஐ ஒரு மாதம் கூட வேக்மேர் குடும்பம் தவற விட்டதில்லை. “ஆனால் ஊரடங்கு தொடங்கிய பின் எங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை,” என்கிறார் ஷீதல். “எங்களை சுற்றி இருக்கும் எவரிடமும் பணமில்லை. எல்லோரின் வாங்கும் சக்தியும் ஊரடங்கினால் குறைந்து போனது (மகாராஷ்டிராவில் ஊரடங்கு மார்ச் 23ம் தேதி தொடங்கியது). எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. துணி தைக்கக் கொடுக்கும் அளவுக்கான பணமும் யாரிடமும் இல்லை.”

ஆனாலும் இது எதுவும் கடன் வாங்கியவர்களை சிறுநிதி நிறுவனம் தொலைபேசியில் அழைப்பதிலிருந்து நிறுத்தவில்லை. “என்ன ஆனாலும் பரவாயில்லை, காசை கட்டுங்கள் என்கிறார்கள்,” எனச் சொல்கிறார் ஷீதல். “என்ன வேண்டுமானாலும் செய்து, மாதக் கடைசியில் பணத்தை கட்டுங்கள் என்கிறார்கள்.”

Sheetal Waghmare's home: the family has not missed a single instalment of the 24 per cent interest loan. 'But we have made absolutely no money since the lockdown', says Sheetal
PHOTO • Sheetal Waghmare

புகைப்படம்: ஷீதல் வேக்மேரின் வீடு: 24 சதவிகித வட்டிக் கடனின் ஒரு தவணையைக் கூட கட்ட குடும்பம் தவறியதே இல்லை. ‘ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் வருமானமே ஈட்டவில்லை’ , என்கிறார் ஷீதல்.

மங்கள் (மேலே உள்ள முகப்பு படத்தில் உள்ளவர்) 24 மாதங்களுக்கு தவணை கட்ட வேண்டும். இரண்டு வருட முடிவில் ரூ.77,520 கட்டி முடித்திருப்பார். கட்டணங்கள் பிடித்தது போக அவர் கைக்கு வந்து சேர்ந்த கடன் தொகை ரூ.53000தான் (கடன் கேட்டிருந்த தொகை ரூ.60,000).

வாங்கிய 53,000 ரூபாய்க்கு 77,520 ரூபாய் திருப்பி அடைப்பதென்பது வாங்கிய தொகையை விட 46 சதவிகிதம் அதிகம். ஆனால் இத்தகைய கடன்கள் கேட்டவுடன் சுலபமாக கிடைத்து விடுவதால் பலர் இவற்றை வாங்குவதாக கூறுகிறார் ஸ்வபிமானி ஷேத்கரி சங்கத்னாவின் தலைவர், ராஜு ஷெட்டி. உதவி என்கிற பெயரில் வழங்கப்படும் சிறுநிதிக்கடன்கள் உண்மையில் ஏழைகளை சுரண்டவே செய்கின்றன என அவர் குறிப்பிடுகிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகார்த்துக்குட்பட்ட சிறு நிதி  நிறுவனங்கள், சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் கடன்களை வழங்குகின்றன.

“சிறு குத்தகைக்காரர்கள், நிலமற்ற கூலி உழைப்பாளிகள் மற்றும் குறுவிவசாயிகள் போன்றோரே சிறு நிதி நிறுவனங்களின் இலக்கு” என்கிறார் ஷெட்டி. “பிணையாக எதுவும் கொடுக்க முடியாததால் வங்கிகள் அவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. சிறு நிதி நிறுவனங்களோ வெறும் அடையாள அட்டைகள் மட்டும் வாங்கி உடனடியாக பணத்தை கொடுத்து விடுகின்றன. புது வாழ்க்கையை உருவாக்க விரும்புகிற சாமானியர்களும் ஆர்வம் மேலிட நம்பிக்கையில் இருப்பார்கள்.”

வேக்மேர்களுக்கும் நம்பிக்கைகள் இருந்தன. தவணைகளைக் கூட அவர்கள் சரியாக கட்டினார்கள். “இப்படியொரு தொற்று வருமென யாருக்கு தெரியும்?” என கேட்கிறார் ஷீதல். அவருடைய தந்தை இருதய நோய் உடையவர். “இரண்டு வருடங்களுக்கு முன் அவர் ரத்தக்குழாய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர். இன்னும் அவர் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டும். நாள் முழுக்க வீட்டில் அமர்ந்திருப்பார். செய்திகள் பார்ப்பார். கொரோனா வைரஸ்ஸால் சூழல் பதட்டமாக இருக்கிறது. ஊரடங்கால் வேலையைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். நாங்களும் வெளியே போக முடியாது. ஒருவேளை எங்களை வைரஸ் தொற்றினால், என் தந்தை பெரும் பிரச்சினைக்கு உள்ளாகிவிடுவார்.”

குடும்பத்தை, குறிப்பாக தந்தையை காக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை ஷீதல் உணர்ந்திருக்கிறார். அவர்கள் மகர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தலித் காலனியில் வாழ்கிறார்கள். தெற்கு ஒஸ்மனாபாத்தின் மருத்துவ வசதிகளே இல்லாத மாவட்ட மருத்துவமனைக்கு அருகே காலனி இருக்கிறது. மேம்பட்ட மருத்துவம் தேவைப்படும் பட்சத்தில் 70 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் சோலாப்பூர் டவுனிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்படுவர். “கிராமப்புறங்களில் இருக்கும் சுகாதார வசதிகளை பற்றி உங்களுக்கே தெரியும்,” எனச் சொல்கிறார் ஷீதல். “கொரோனா வைரஸ் பாதிப்பை கையாள்வதே இப்போது மருத்துவமனைகளின் தலையாயப் பணியாக இருக்கிறது.”

Archana Hunde seeks an extension on paying her loan instalments
PHOTO • Sheetal Waghmare

புகைப்படம்: கடன் தவணைகளை கட்ட கால அவகாசம் கேட்கிறார் அர்ச்சனா ஹண்டே

சோலாப்பூர் மாவட்டத்தில் நூறு பேருக்கும் மேலாக கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவில் அதிகாரிகள் மாவட்டத்தின் எல்லைகளை மூடினர். “ஒஸ்மனாபாத்தில் எண்ணிக்கை அதிகரித்தால் (இப்போதைக்கு சற்று குறைவாகவே இருக்கிறது), சோலாப்பூர் வரை செல்வதற்கான நம்பிக்கையை கூட நோயாளிகள் இழந்துவிடுவார்கள்,” என்கிறார் ஷீதல். “கடன் மீட்க வருபவர்களுக்கு இது எதைப் பற்றியும் கவலை இல்லை.” மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 42 சிறு நிதி நிறுவனங்கள் இருப்பதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அனில் போண்டே தொலைபேசியில் தெரிவித்தார். ஷெட்டியின் கணக்குப்படி, பல்லாயிரங்கோடிகளுக்கு அவர்கள் கடன் கொடுத்திருக்கிறார்கள்.

“மிரட்டலுக்கும் பெண்களை அச்சுறுத்துவதுக்கும் அவர்கள் பெயர் பெற்றவர்கள்,” என்கிறார் போண்டே. “கடன் வாங்கியவர்களின் ட்ராக்டர்களை எடுத்துச் சென்று விடுவோம் என்றும் விளைச்சலை கொண்டு சென்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டுவார்கள். எத்தனை சிறு நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை அரசு கணக்கெடுத்து, நோய்ப்பரவல் நேரத்தில் அவர்கள் வேலை பார்ப்பதை தடுக்க வேண்டும்.”

கடந்த பத்து வருடங்களில், கணக்கில்லாமல் கடன் கொடுத்ததாலும் வாங்கிய கடனை அடைக்காமல் பலர் இருந்ததாலும் மகாராஷ்ட்ராவின் 31 கூட்டுறவு வங்கிகள் கடன்கள் வழங்க முடியாத நிலையை எட்டின. அவை உருவாக்கிய வெற்றிடத்தை சிறு நிதி நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. பெருவட்டிக்கடைகள் மட்டுமே வழி என இருந்த நேரத்தில் சிறு நிதி நிறுவனங்கள் பலருக்கு நல்வாய்ப்பாக தென்பட்டதென அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜபுர்கர் கூறுகிறார். “ரிசர்வ் வங்கி வேண்டுமென்றே சிறு நிதி நிறுவனங்களை அனுமதித்து சூழலை சுரண்டும் வாய்ப்பை உருவாக்கி தந்தது,” என்கிறார். “எல்லாப் பிரச்சினைகளையும் செய்கிறார்கள். தவணை கட்ட முடியாதவர்களை மிரட்டுகிறார்கள். சட்டப்பூர்வமான வட்டிக்கடைக்காரர்கள் போல் செயல்படுகிறார்கள்.”

கொரோனா பாதிப்பு ஏற்படுத்தும் பொருளாதார பின்னடைவை அனுசரித்து, இந்திய வங்கிகள் மூன்று மாத கால அவகாசத்தை (சர்ச்சைக்குரியது எனினும்) ஏப்ரல் 7ம் தேதி அறிவித்தன. சிறு நிதி நிறுவனங்கள் மட்டும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒஸ்மனாபாத்திலுள்ள ஜனலக்‌ஷ்மி நிதி நிறுவனப் பிரதிநிதியை பலமுறை இச்செய்தியாளர் தொலைபேசியில் அழைத்தும் தொடர்புகொள்ள முடியவில்லை.

மங்கள் இருக்கும் அதே சுய நிதி உதவிக்குழுவில் இருந்து கடன் வாங்கிய இன்னொருவர் அர்ச்சனா ஹண்டே. அவரும் பட்டியல் சாதியான மகர் சமூகத்தை சார்ந்தவர். அவருடைய கணவர் பாண்டுரங் 40 வயதானவர். கட்டுமான வேலைகளுக்கு தொழிலாளரையும் பொருட்களையும் கொடுக்கும் ஒப்பந்ததாரராக வேலை செய்கிறார். ஊரடங்கால் கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பாண்டுரங்குக்கு வேலை ஏதுமில்லை. “நாங்கள் தடையின்றி தொடர்ந்து தவணைகள் கட்டி வந்திருக்கிறோம்,” என்கிறார்  மங்கள் கட்டும் அதே அளவு தவணைத் தொகை கட்டுகிற 37 வயதான அர்ச்சனா. “கடனை தள்ளுபடி செய்யக்கூட நாங்கள் கேட்கவில்லை. மூன்று மாத காலம் மட்டும் தள்ளிப் போட மட்டும்தான் கேட்கிறோம். இரண்டு வருடங்களில் எல்லாத் தவணைகளையும் வாங்கி முடிப்பதற்கு பதிலாக, இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களுமாக நாங்கள் தவணை கட்டுகிறோம் எனச் சொல்கிறோம். இதை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?”

The Waghmare family lives in the Dalit basti right next to the district hospital in south Osmanabad
PHOTO • Sheetal Waghmare

தெற்கு ஒஸ்மனாபாத்தில் இருக்கும் மாவட்ட மருத்துவமனையின் அருகே உள்ள தலித் காலனியில் வேக்மேர் குடும்பம் வாழ்கிறது.

தலித் காலனியில் இருக்கும் குடும்பங்கள் பட்டினியில் தவிக்காமல் இருப்பதற்கான ஒரே காரணம் ஒரு மாதத்துக்கு முன்னரே அரசு கொடுத்த கோதுமையும் அரசியும்தான் என்கிறார் அர்ச்சனா. “இல்லையென்றால் சாப்பாட்டுக்கு கூட எங்களுக்கு வழி இருந்திருக்காது,” என்கிறார். “கையில் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும் என்கிற பதட்டம் எந்தளவுக்கு இருக்கிறதென்றால், பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்குகளில் 500 ரூபாய் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் சொன்னதிலிருந்து (மார்ச் 26) அதிகாலையிலேயே மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். தினமும் வங்கிகளின் கூட்டம் நிற்கிறது.”

ஒஸ்மனாபாத்திலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லதூரி தாலுகாவின் குந்தேஃபல் கிராமத்திலும் கூட சிறு நிதி நிறுவனங்களை எதிர்கொள்ளும் பயம் இருக்கிறது. அக்கிராமத்திலும் அருகே இருக்கும் மெடஃபல் கிராமத்திலும் பலர் சிறு நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருப்பதாக உள்ளூர் செயற்பாட்டாளர் ஒருவர் சொல்கிறார். 50,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கும் 35 வயதான விகாஸ் ஷிண்டே அவர்களில் ஒருவர். “என்னிடம் சிறு அளவில் 1.5 ஏக்கர் நிலம் இருக்கிறது,” என்கிறார். “வாழ்க்கை ஓட்டுவதற்கு அது போதாது என்பதால் கூலி வேலைகளும் நான் செய்கிறேன். பசு மாடு வாங்கி பால் பண்ணை வைப்பதற்கென இரண்டு மாதங்களுக்கு முன் கடன் வாங்கினேன்.”

இப்போது ஊரடங்கில் இருப்பதால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழும் விகாஸ்ஸால் மாதத் தவணையான 3200 ரூபாயை கட்ட முடியவில்லை. “ஊரடங்கால் நிலத்தில் அறுவடை செய்த பயிரை என்னால் விற்க முடியவில்லை,” என்கிறார். “நிலத்தில் கோதுமை அப்படியே கிடக்கிறது. அறுவடையை மண்டிக்கு எடுத்துச் செல்ல முடியாது. இப்போது என்ன செய்வது?”

விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் ஒரு நோய்க்காலத்தில் மிரட்டப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதை அரசு தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்கிறார் ஷெட்டி. “சிறு நிதி நிறுவனங்களை வேறெந்த வழியிலும் வழிக்கு கொண்டு வர முடியாது,” என்கிறார் அவர். “அவர்களை வழிக்கு கொண்டு வர சட்டத்தாலேயே முடியும்.”

மகாராஷ்டிராவின் விவசாயத்துறை அமைச்சர் தாதா பூசே என்னிடம் பேசுகையில், பாரம்பரிய நிதி நிறுவனங்களில் (கூட்டுறவு வங்கிகள்) கடன்கள் பெறவே மக்களை அரசு அறிவுறுத்துகிறது. “சிறு நிதி நிறுவன கடன்கள் மிகச் சுலபமாக கிடைத்துவிடுவதால் பலர் அங்கு கடன் பெறுவதும் உண்மைதான்,” என்கிறார். “மாவட்ட ஆட்சியர்களிடம் இதை பற்றி பேசி நான் ஆவன செய்கிறேன்.”

அதுவரை ஷீதல், அர்ச்சனா மற்றும் விகாஸ் போன்ற கடன் வாங்கிய மக்கள் சிறு நிதி நிறுவனத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்து விடுமென்கிற பயத்திலேயே வாழ்வார்கள். தொலைபேசி மணி எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம்.

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan