மார்ச் 2020-ல் கோவிட் தொற்று தொடங்கிய பிறகு, மகாராஷ்டிர ஒஸ்மனாபாத் மாவட்டத்திலிருக்கும் அருண் கெயிக்வாடின் 10 ஏக்கர் விவசாய நிலம் வெறிச்சோடி காணப்பட்டது. “நாங்கள் சோளமும் சுண்டலும் வெங்காயமும் அச்சமயத்தில் விளைவித்திருந்தோம்,” என்கிறார் அவரது மனைவியான 48 வயது ராஜஸ்ரீ.

ஆனால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சந்தைகள் மூடப்பட்டன. “எங்களுடைய விளைச்சலை மண்டிக்குக் கொண்டு செல்ல எங்களால் முடியவில்லை. மொத்த விளைச்சலும் எங்களின் கண்களுக்கு முன்னாடியே அழிந்து போனது,” என்கிறார் ராஜஸ்ரீ.

52 வயது அருணும் ராஜஸ்ரீயும் 10 குவிண்டால் சோளம், 100 குவிண்டால் வெங்காயம், 15 குவிண்டால் சுண்டல் ஆகியவற்றை விளைவித்தனர். அச்சமயத்தில் சோளத்தின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,550 ஆக இருந்தது. சுண்டலுக்கு ரூ.4,800-ம் வெங்காயத்துக்கு ரூ.1,300-ம் ஒரு குவிண்டால் விலையாக இருந்தது. விதைகள், உரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றுக்கான செலவுகளை தவிர்த்து மொத்தமாக 2,27,500 ரூபாயை அவர்கள் இழந்திருந்தனர்.

உழைப்பையும் கொட்டியிருப்பதாக ராஜஸ்ரீ சொல்கிறார். “கோவிட் வருவதற்கு சற்று முனனால்தான் அவர் ஒரு ட்ராக்டர் வாங்கினார். மாதத் தவணையான ரூ.15,000-த்தை கட்டுவது கடினமானது. வங்கியிலிருந்து நோட்டீஸ்கள் எங்களுக்கு வரத் தொடங்கின.”

எனினும் 2020ம் ஆண்டின் சம்பா பருவத்தில் (ஜுலை-அக்டோபர்) நஷ்டங்களை சரிகட்டி விட முடியுமென நம்பினார் அருண். கோவிட் தொற்றின் முதல் அலை தணியத் தொடங்கி, பாதிப்பு எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. மோசமான காலத்தை கடந்து விட்டதாக அவர் நினைத்தார். “இயல்பான நிலைக்கு திரும்பி விடுவோமென நினைத்தோம். அழிவுக்காலம் முடிந்ததாக நம்பினோம். பொருளாதாரமும் மெதுவாக உயிர்பெறத் தொடங்கியது,” என்கிறார் அருணின் 30 வயது மருமகன் பிரதீப் தாலே.

கடந்த வருட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் அருணும் ராஜஸ்ரீயும் அவர்களின் நிலத்தில் சோயாபீன் விதைத்தனர். அறுவடைக்காலமான அக்டோபர் மாதத்தில், பருவம் தப்பி பெய்த மழை மொத்த சோயாபீன் பயிரையும் ஒஸ்மானாபாத்தில் அழித்துச் சென்றது. “என்னுடைய மொத்த நிலமும் நீரில் மூழ்கியது,” என்கிறார் ராஜஸ்ரீ. “எங்களின் அறுவடை எதையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நஷ்டத்தின் அளவு என்னவென்பதை அவர் என்னிடம் சொல்லவில்லை. பதற்றத்தைக் கூட்ட வேண்டாமென நினைத்திருக்கலாம்.” கடந்த 4-5 வருடங்களில் சேர்ந்திருக்கும் கடனின் அளவு ரூ.10 லட்சம் என அவர் சொன்னதாக ராஜஸ்ரீ நினைவுகூர்கிறார்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: அருண் கெயிக்வாட் வாங்கிய ட்ராக்டருடன் பிரதீப் தாலே.வலது: அருண் தற்கொலை செய்து கொண்ட இடம்

அந்தக் கடன்களில் கொஞ்சம் மூன்று மகள்களின் திருமணங்களுக்காக வாங்கப்பட்டவை. “கோவிட்டுக்கும் முன்னமே எங்களின் நிலை கஷ்டமாகத்தான் இருந்தது. ஊரடங்கு மற்றும் பலத்த மழை ஆகியவை அந்த நிலையை மோசமாக்கி விட்டன,” என்கிறார் ராஜஸ்ரீ. “எங்களுக்கு 20 வயதில் மந்தன் என்கிற ஒரு மகன் இருக்கிறான். அவனது கல்விக்கு எங்களுக்கு பணம் தேவை.”

இன்னும் அருண் நம்பிக்கையிழக்கவில்லை. மோசமான காலகட்டம் கடந்து விட்டதாக நினைத்தார். மீட்டெடுக்கப்பட்ட உத்வேகத்துடன் நவம்பர் மாதத்தில் தொடங்கும் குறுவைப் பருவத்துக்காக வேலை பார்க்கத் தொடங்கினார். சோளத்தையும் சுண்டலையும் விதைத்தார். “குறுவை சாகுபடி நடக்கவிருந்த நேரத்தில் (மார்ச்), இரண்டாம் (கோவிட்) அலை தாக்கியது,” என்கிறார் பிரதீப். “முதலில் வந்ததைவிட இது மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. கடந்த வருடம் பார்த்ததைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் பயந்தனர். வெளியே இருக்க எவரும் விரும்பவில்லை.”

இம்முறை அவர்கள் 25 குவிண்டால் சோளமும் 20 குவிண்டால் சுண்டலும் அறுவடை செய்தனர். ஆனால் அருணுக்கும் ராஜஸ்ரீக்கும் முதல் வருடம் மீண்டும் திரும்ப வந்தது. நாடு திரும்ப ஊரடங்குக்குள் சென்றது. சந்தைகள் மூடப்பட்டன. எல்லா பெரிய பயிர்களின் விலைகளும் சரிந்தன.

இன்னொரு பேரிடரை தாங்க வேண்டுமென்கிற எண்ணமே அருணை வீழ்த்தியிருக்க வேண்டும். இந்த வருட ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் காலை, வீட்டுக்கு அருகே இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவிட் தொற்றிலிருந்து அருண் தப்பியிருக்கலாம். ஆனால் அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை.

மார்ச் 2020-ல் கோவிட் பரவத் தொடங்கிய பிறகான ஒரு வருடத்தில் 7.5 கோடி இந்திய மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2 டாலருக்கும் குறைவாகவே நாள் வருமானம் இருந்ததாக குறிப்பிடுகிறது அமெரிக்காவை சார்ந்த PEW ஆய்வு நிறுவனம் வெளியிட்ட மார்ச் 2021 அறிக்கை

கடந்த முப்பது வருடங்களாக கடன்களால் விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மராத்வடா பகுதியில் பொருளாதார பின்னடைவை நாம் துலக்கமாக பார்க்க முடியும்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இரண்டாம் அலையின்போது குப்பைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வெங்காயங்கள்

2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது மராத்வடாவில்தான். அப்பகுதியில் பல வருடங்களாக தொடரும் பஞ்சம், பணவீக்கம், காலநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகளுடன் உள்ளூர் பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சியும் சேர்ந்து விவசாயிகள் கொண்டிருக்கும் சிக்கல்களை அதிகமாக்கியிருக்கிறது. தொற்று தொடங்கியதிலிருந்து அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டம் மிகவும் கடினமாகியிருக்கிறது. பல விவசாயிகள் வறுமையில் வீழ்த்தப்பட்டிருக்கின்றனர்.

இரண்டாம் அலைக்கும் முன்னமே எல்லாவற்றையும் இழந்து விடும் பயம் 40 வயது ரமேஷ் சவுரேவை வீழ்த்தியது. அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை முதல் அலையே குலைத்துப் போட்டுவிட்டது.

ஒஸ்மனாபத்தில் ரகுச்சிவாடி கிராமத்தில் ரமேஷ் மூன்று ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். மனைவியின் டயாலிசிஸ் சிகிச்சைக்கென அவர் கடன் வாங்கினார். அந்த சிகிச்சைக்காக மாதமொருமுறை 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லதூருக்கு அவர்கள் செல்ல வேண்டும். "சிகிச்சைக்காக அவன் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது," என்கிறார் அவரின் மாமாவான ராம்ராவ். 61 வயதாகும் அவர் பக்கத்து வீட்டில் வசிக்கிறார். "செப்டம்ப்ர் 2019-ல் அவள் இறந்துவிட்டாள்."

மனைவியின் மரணத்துக்குப் பிறகு சோளத்தையும் சோயாபீனையும் நிலத்தில் விதைத்தார் ரமேஷ். வருமானம் என ஏதேனும் இருக்க வேண்டுமென்பதற்கு அவர் ஒரு டெம்பொ ஓட்டினார். 16 வயது மகனை ரோகித்தையும் பார்த்துக் கொண்டார். "ஓட்டுநராக பணிபுரிந்து 6000 ரூபாய் மாத வருமானம் அவன் ஈட்டினான்," என்கிறார் ராமராவ். "ஆனால் கோவிட் தொற்றால் அவனது வேலை பறிபோய்விட்டது. விவசாயியாகவும் அவன் மிகவும் கஷ்டப்பட்டான்."

பிற விவசாயிகளைப் போலவே ரமேஷ்ஷும் அவரது 25 குவிண்டால் சோளத்தை விற்க முடியவில்லை. கிட்டத்தட்ட 64,000 ரூபாய் அளவுக்கு நஷ்டம். அதற்கு மேல் 30,000 ரூபாய் அளவுக்கும் நஷ்டமாகியிருந்தது என்கிறார் ராம்ராவ். ஏனெனில் பயிர் வளர்க்க ஒவ்வொரு ஏக்கருக்கும் அவர் 12,000 ரூபாய் செலவழித்திருந்தார்.

வளர்ந்து கொண்டிருந்த ரமேஷ்ஷின் கடன், விவசாயச் செலவுகள் மற்றும் மருத்துவக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, 4 லட்ச ரூபாயை எட்டியது. ரமேஷ் கவலை கொண்டார். “சோயாபீன் விளைச்சல் நன்றாக இருந்தாலும் கடன் உடனடியாக தீராது என்பதை அவன் புரிந்து கொண்டான்,” என்கிறார் ராம்ராவ். கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். “மாலையில் நான் விவசாய நிலத்துக்கு சென்றேன். திரும்ப வந்த போது அவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான்,” என நினைவுகூர்கிறார் ராம்ராவ். “அக்டோபர் மாத மழை அவனது விளைச்சல் மொத்தத்தையும் அழித்தது. குறைந்தபட்சம், அதை பார்த்து அவன் துயருற வேண்டிய நிலை ஏற்படவில்லை.”

பெற்றோர் இருவரையும் ஒரு வருடத்திலேயே இழந்த ரோகித், படிப்பதற்காக ஒரு நியாய விலைக்கடையில் பணிபுரியத் தொடங்கினார். “பள்ளிப் படிப்பை முடித்துவிட்டேன். கல்லூரிக்கு சென்று இளங்கலை படிக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர். “அடுத்து என்ன செய்வதென அதற்குப் பிறகுதான் யோசிக்க வேண்டும்.”

PHOTO • Parth M.N.

'விவசாயியாக ரமேஷ் துயருற்றார்,' என்கிறார் ராம்ராவ் சவுரே

பல வருடங்களாக தொடரும் பஞ்சம், பணவீக்கம், காலநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகளுடன் உள்ளூர் பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சியும் சேர்ந்து விவசாயிகள் கொண்டிருக்கும் சிக்கல்களை அதிகமாக்கி இருக்கிறது. தொற்று தொடங்கியதிலிருந்து அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டம் மிகவும் கடினமாகியிருக்கிறது. பல விவசாயிகள் வறுமையில் வீழ்த்தப்பட்டிருக்கின்றனர்

நொறுங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாங்கும் சக்தி கடும் விளைவுகள் கொண்டிருந்தது.

அந்த விளைவுகளை, விவசாயச் சேவை மையத்தின் உரிமையாளரான 31 வயது ஸ்ரீகிருஷ்ணா பதேவால் உணர முடிந்தது. ஒஸ்மனாபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலிருகும் தேவ்தாகிபால் கிராமத்தில் அவரின் கடை இருந்தது. அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி முதலியவற்றை விற்பனை செய்யும் கடை அது. “பல நேரங்களில் விவசாயிகள் அவற்றைக் காசு கொடுத்து வாங்குவதில்லை. கடனாகதான் வாங்குகிறார்கள்,” என்கிறார் பதேவின் 24 வயது உறவினரான காண்டு பொடே. “விவசாயப் பருவம் முடிந்ததும், விளைச்சலை விற்று வரும் காசில்தான் கடனை அவர்கள் அடைப்பார்கள்.”

தொற்றுப் பரவத் தொடங்கிய பிறகு பல விவசாயிகளால் கடனைத் திரும்ப அடைக்க முடியவில்லை என்கிறார் பொடே. “ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. எனவே விவசாயிகள் பொய் சொல்லவில்லை என்பது அவருக்கு தெரியும்,” என்கிறார் அவர். “எனினும் பொருட்களை வாங்கிய இடத்தில் அவர் பணம் கொடுக்க வேண்டும். அதற்குக் கடன் வாங்க அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.”

பதேவின் பதற்றம் அதிகரித்தது. மே 2021-ல் ஒருநாள் அவர் விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “நஷ்டமும் விரக்தியும் மீண்டும் திரும்புமென அவர் பயந்தார்,” என்கிறார் பொடே. “உண்மை என்னவென்றால் நஷ்டத்தை சரி செய்வதற்கும் விவசாயி விவசாயம்தான் செய்ய வேண்டும்.”

அதைத்தான் ராஜஸ்ரீயும் செய்ய திட்டமிட்டிருக்கிறார். “சோயாபீன் பருவம் தொடங்கியபோது நாங்கள் 1 லட்சம் ரூபாய் (2021ம் ஆண்டில்) கடன் வாங்கினோம்,” என்கிறார் அவர். “பருவம் முடிந்து அறுவடை செய்யும்போது நாங்கள் கடனை திரும்ப அடைத்து விடுவோம். எங்களின் கடனை படிப்படியாக குறைக்க இது ஒன்றுதான் வழி.”

ராஜஸ்ரீக்கு அற்புதமான ஓர் அறுவடை தேவை. அவரின் மகள்களும் மருமகன்களும் அவருக்கு உதவிக் கொண்டிருக்கின்றனர். நிலைமை அவருக்கு மெல்ல சரியாகத் தொடங்கியிருந்தது. ஆனால் குலாப் புயலால் நேர்ந்த பெருமழை, அவருள் இன்னும் பயத்தைத் தக்க வைத்திருக்கிறது.

சுயாதீன இதழியலுக்கான மானியத்தின் மூலம் செய்தியாளர் எழுதியிருக்கும் இக்கட்டுரை புலிட்சர் மையத்தின் தொடருக்காக எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan