இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருந்தது. சரியான தட்பவெப்ப நிலை. மகசூலும் அமோகமாக இருந்தது. 28 வயது சந்தீப் தாவ்கர், தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்தார்.

பாரம்பரிய சோயாபீன் அல்லது பருத்தியைப் பயிரிட்டுக் கொண்டிருந்த அவர், கடந்த ஆண்டு நாக்பூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விர்கண்டியில் அண்டை வீட்டாருக்குப் சிறந்த விளைச்சல் கிடைத்ததைக் கண்டு, நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் தக்காளி நடவு செய்தார்..

ஆனால் டிசம்பர் நடுப்பகுதியில் உள்ளூர் வகை தக்காளியை அவர் அறுவடை செய்யத் தொடங்கும் முன்பே விலை சரிந்தது. ஜனவரி முதல் வாரத்தில், அவரது 25 பெட்டி தக்காளிக்கு - ஒவ்வொன்றும் 25 கிலோ கொண்டிருந்தது - 1.20 ரூபாய் மட்டுமே கிலோவுக்குக் கிடைத்தது.

அந்த விலையில், தொழிலாளர் கூலி  கூட மீட்க முடியவில்லை என்கிறார். போக்குவரத்து மற்றும் வண்டிச் செலவு, சந்தைத் தரகரின் தரகுப் பணம் ஆகியவற்றைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவரது நடவுச் செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பு இதில் கணக்கிலேயே இல்லை.

டிசம்பர் 27-ம் தேதி வீடு திரும்பிய சந்தீப் தனது உறவினர் சச்சினின் டிராக்டரை கடன் வாங்கினார். நடவு, களையெடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சிகள் தாக்காமல் காத்தல் என நான்கு மாதங்களாக தனது மனைவி, மூத்த சகோதரி மற்றும் அத்தையுடன் 24 மணி நேரமும் உழைத்தார்.

PHOTO • Jaideep Hardikar

இடதிலிருந்து வலது) மூத்த சகோதரி புஷ்பா திஜாரே, அத்தை ஹேமலதா தாவ்கர் மற்றும் மனைவி மஞ்சுஷா ஆகியோருடன் குடும்ப நிலத்தில் சந்தீப் தாவ்கர்

அவர் அதை ஓரளவு விரக்தியிலும், ஓரளவு தனது இழப்பைக் குறைக்கவும் செய்தார். “மார்ச் மாதம் வரை தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. நான் ஏற்கனவே ரூ. 50,000 செலவழித்திருந்தேன். இன்னும் ஒரு ரூ. 20,000 பூச்சிக்கொல்லிகளுக்கும் மற்றும் தொழிலாளருக்கும் செலவழிக்க வேண்டியிருந்தது, ”என்று சந்தீப் கூறுகிறார்.

"அதிக இழப்புகள். விலைகள் உயராது என்பதை என்னால் உணர முடிந்தது. நான் இன்று வேறொருப் பயிருக்கு மாறி, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் அறுவடை செய்து எனது நஷ்டத்தை ஈடுகட்ட விரும்புகிறேன்,” என்றார்.

கிலோ 10 ரூபாய் என்கிற விலை கூட உதவியிருக்க முடியும் என்னும் சந்தீப், நவம்பர் 8ம் தேதி பணமதிப்புநீக்க அறிவிப்புக்குப் பிறகு விலைகள் சரியத் தொடங்கியதாக சொல்கிறார்.

ஆனால் விர்கண்டி கிராமத்தின் இருபுறமும் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிவாப்பூர் மற்றும் உம்ரெட் நகரங்களில் உள்ள உள்ளூர் வணிகர்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முழுவதுமாக குறை கூறவில்லை.

உம்ரெட் மண்டியில் 38 வயதான பாண்டி சாகோல் கூறுகையில், "ஒரு மகத்தான விளைச்சல் விலை சரிவை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர்-ஜனவரி மாதங்களில் காய்கறிகளின் விலை குறையும், இந்த ஆண்டு தக்காளி ஏராளமாக உள்ளது.”

ஆனால் நவம்பர் 8க்குப் பிறகு விலைகள் சரிந்தன என்று அவர் ஒப்புக்கொண்டார். "என்னுடைய 20 ஆண்டுகால வாழ்க்கையில் இந்த மோசமான நிலையை நான் பார்த்ததில்லை என்று சொல்ல வேண்டும்."

"பருவகாலம் காரணமாக காய்கறிகளின் விலைகள் ஆண்டின் இந்த நேரத்தில் குறையும். பணப் பற்றாக்குறையும் கூடுதல் காரணியாக இருக்கலாம்" என்று இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அசோக் குமார் லஹிரி, பணமதிப்பு நீக்கம் குறித்த சமீபத்திய ஆய்வறிக்கையில் எழுதினார்.

நாக்பூரின் விவசாயப் பொருள் சந்தைக் குழுவின் தரவு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் விலையில் கூர்மையான வேறுபாட்டைக் காட்டுகிறது.

நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன், நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிச்சோலியைச் சேர்ந்த பாண்டு கோர்மேட் என்பவர், தனது தக்காளியை கிலோ 8 ரூபாய்க்கு விற்றார். இன்று விலை கிலோவுக்கு ஒரு ரூபாய்.

PHOTO • Jaideep Hardikar

விர்கண்டி கிராமத்தின் தக்காளி விவசாயியான பண்டிட் தாவ்கரும் அவரது மனைவி சாந்தாபாயும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தக்காளிகளுடன். மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 1 ரூபாயை விடக் கீழே குறைந்திருப்பதால், இந்த ஆண்டு எந்தப் பணமும் திரும்ப வராது என்கிறார் பண்டிட்

2015-ம் ஆண்டு டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நாட்டுத் தக்காளி விலை சராசரியாக கிலோவுக்கு 15 ரூபாயாக இருந்தது. ஏற்றுமதி (கலப்பின) வகையின் விலை கிலோவுக்கு  37.5 ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை கலப்பின ரக விலை கிலோவுக்கு 29 ரூபாயிலிருந்து 5.50 ரூபாய்க்கு சரிந்தது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் உள்ள 29 பெரிய சந்தைகளில் அதுவே விலையாக இருந்தது.

ராய்ப்பூரில் கலப்பினத் தக்காளி விலை ரூ.4 ஆக குறைந்தது. சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் நாட்டு ரகம் கிலோ 50 பைசாவுக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் விரக்தியில் பல டன் தக்காளிகளை நெடுஞ்சாலைகளில் கொட்ட வேண்டியிருந்தது.

நாக்பூரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வார்தா நகரத்தில், விவசாயி பிரமோன் ரனித், டிசம்பர் 27 அன்று, ஒரு பரபரப்பான சதுக்கத்தின் நடுவில் டெம்போவை நிறுத்தி, நான்கு மணி நேரத்தில் 400 கிலோ தக்காளியை இலவசமாகக் கொடுத்தார்.

ஒன்பது ஏக்கர் விவசாயியான அவர், மூன்று ஏக்கருக்கு மேல் தக்காளி பயிரிட்டிருந்தார். 1 லட்சம் முதலீடு. ஆனால் வர்த்தகர்கள் கிலோவுக்கு 1 ரூபாய் விலை கொடுத்தனர். அதற்கு பதிலாக இலவசமாகக் கொடுத்து நற்பெயர் சம்பாதிக்க முடிவு செய்தார்.

ஜனவரி 2 அன்று, யூவ பிரகதிஷீல் கிசான் சங்கத்தின் உறுப்பினர்களான விவசாயிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக ராய்ப்பூரில் தக்காளி உட்பட சுமார் 1 லட்சம் கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விர்கண்டியில், சந்தீப் புதிதாக ஒரு டிராக்டருடன் பண்படுத்தியிருக்கும் நிலத்தில் என்ன நடுவது என்ற யோசனையில் இருக்கிறார். பீன்ஸ் வகையா, சுண்டைக்காயா அல்லது வெண்டைக்காயா? எதுவாக இருந்தாலும், லாபம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

"நான் சந்தை விலைகளை நம்பி ஒரு சூதாட்டத்தை ஆட வேண்டும்," என்று அவர் புன்னகைக்கிறார்.

இக்கட்டுரை (சிறிய அளவில் மாற்றப்பட்டிருக்கிறது) முதலில் ஜனவரி 7, 2017-ன் The Telegraph-ல் பிரசுரிக்கப்பட்டது

தமிழில் : ராஜசங்கீதன்

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan