பீப்பள்ஸ் ஆர்கைவ் ஆப் ரூரல் இந்தியாவிற்கு (PARI) இன்று வயது ஏழு. தொற்றுக்காலத்திலும் அதன் ஊரடங்குகளிலும் நாங்கள் பிழைத்திருந்ததோடு மட்டுமல்லாமல், எங்களது மிகச் சிறந்த படைப்புகளையும் தந்திருக்கிறோம்.

கடந்த வருட ஊரடங்கின் முதல் நாளிலேயே, அச்சு மற்றும் தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகங்களை, அத்தியாவசியச் சேவை என இந்திய அரசு அறிவித்தது. அது நல்ல விஷயம். இதழியல் மற்றும் ஊடகவியலாளர் தேவை,  இந்திய மக்களுக்கு இந்தளவுக்கு முன்பு இருந்திருக்காது. மக்களின் வாழ்க்கைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பற்றிய ஏராளமானச் செய்திகள் சொல்லப்படக் காத்திருந்தன. ஆனால் நாட்டின் பெரும் ஊடக நிறுவனங்களின் எதிர்வினை என்ன? 2,000லிருந்து 2,500 பத்திரிகையாளர்களையும் 10,000க்கும் மேலான ஊடகத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்தன.

முக்கியமான செய்திகளை அவர்கள் எப்படி சொல்லப் போகிறார்கள்? சிறந்த செய்தியாளர்களைப் பணி நீக்கம் செய்தா? பணிநீக்கம் செய்யப்படாத பிற செய்தியாளர்களின் ஊதியம் 40லிருந்து 60 சதவிகிதம் வெட்டப்பட்டது. செய்தியாளர்கள் பயணிப்பது தடுக்கப்பட்டது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் எச்சரிக்கையுணர்வால் அல்ல, செலவுகளை கட்டுப்படுத்தும் விருப்பத்தால்தான் தடுக்கப்பட்டது. மார்ச் 25, 2020-க்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்படி வெளியான செய்திகளும் நகரங்களையும் சிறுநகரங்களையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஏப்ரல் 2020க்குப் பிறகு PARI 11 பேரை கூடுதலாக பணிக்கு அமர்த்தியது. ஒரு பைசா கூட ஊதியத்தில் வெட்டப்படவில்லை. ஆகஸ்டு 2020-ல் கிட்டத்தட்ட எல்லா ஊழியர்களுக்கும் பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் கொடுத்திருக்கிறது.

பிற வகை எழுத்துகள் வெளிவந்து கொண்டிருந்தபோதும் தொற்று தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 270 (பெரும்பாலும் பல்லூடக) கட்டுரை களையும் முக்கிய ஆவணங்களையும் ஊரடங்கு கால வாழ்க்கைகள் என்கிற அடிப்படையில் PARI பதிப்பித்தது. நாட்டின் எல்லாப் பிரதான பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய கிராமங்களிலிருந்தும் நாட்டின் 23 மாநிலங்களிலிருந்தும் இச்செய்திகளை, ஊரடங்கு காலத்தில் கிடைத்த போக்குவரத்துகளை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து நம் செய்தியாளர்கள் சேகரித்தனர். இந்தச் செய்திகளில் 65 வெவ்வேறு செய்தியாளர்களின் பெயர்களை நீங்கள் காண முடியும். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை PARI தொற்றுக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக எழுதி  வருகிறது. எனவே அவர்களை மார்ச் 25, 2020ம் ஆண்டு புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

வாசகர்களுக்குத் தெரியும். தெரியாத பிறர், PARI-யை  ஒரு இதழியல் தளமாகவும், சுவாசித்து உயிர்வாழும் ஒரு ஆவணக் காப்பகமாகவும் புரிந்துக் கொள்ளலாம்.  கிராமங்கள் பற்றியக் கட்டுரைகள், செய்திகள், அறிக்கைகள், நாட்டுப்புற இசை, பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் களஞ்சியம் நாங்கள். உலகின் பெரிய கிராம வாழ்க்கைத் தகவல் களஞ்சியங்களில் PARI-யும் ஒன்று. அன்றாட மனிதர்களின் அன்றாட வாழ்க்கைகளைச் செய்திகளாகத் தருவதே PARI-ன் இதழியல்.  83 கோடியே 30 லட்சத்து கிராமப்புற இந்தியர்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் மற்றும் குரல்களின் ஊடாக சொல்கிறோம்.

PHOTO • Zishaan A Latif
PHOTO • Shraddha Agarwal

நாங்கள்தான் PARI, தொற்று-ஊரடங்கு காலத்தில் எங்களின் சிறப்பான சில படைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். பெண்க ளின் உடல்நலன் பற்றியக் கட்டுரைத்தொடரும் (இடது) தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் பற்றிய விரிவானச் செய்திகளும் (வலது) அவற்றில் அடக்கம்

தொடங்கப்பட்ட முதல் 83 மாதங்களிலேயே PARI, 42 விருதுகளைப் பெற்றுள்ளது. சராசரியாக 59 நாட்களுக்கு ஒரு விருது. இவற்றில் 12 விருதுகள் சர்வதேச விருதுகள் ஆகும்.  16 விருதுகள் ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்ட செய்திகளுக்கு கிடைத்தன. ஏப்ரல் 2020-ல் அமெரிக்க நாடாளுமன்ற நூலகம், அவர்களுடைய இணைய ஆவணக்காப்பகத்தில் PARI-யையும் சேர்த்துக் கொள்ளக் கேட்டு எங்களை தொடர்பு கொண்டபோது, “உங்களின் இணையதளம், சேகரிப்பு மற்றும் வரலாற்றின் முக்கியமான பகுதியாக இருக்குமென கருதுகிறோம்,” என்றார்கள்.

பெண்களின் உடல்நலன் பற்றிய விருது பெற்ற கட்டுரைத் தொடரை நாட்டின் 12 மாநிலங்களிலிருந்து PARI பிரசுரித்தது. குறிப்பாக பெண்களின் உரிமை குறைவாக இருக்கும் மாநிலங்களிலிருந்து வெளியானக் கட்டுரைகள் இந்த  தொடரில் இடம்பெற்றிருக்கின்றன. கட்டுரைத் தொடரின் 37 கட்டுரைகளில் 33 கட்டுரைகள், தொற்றுக்காலம் தொடங்கி ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரசுரிக்கப்பட்டன. கிராமப்புற பெண்களின் குரல் வழியாக சொல்லப்பட்ட இந்த கட்டுரைகள், பெண்களின் உடல்நலன் சார்ந்த உரிமைகள் பற்றிய தேசிய அளவிலான கணக்கெடுப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது எனலாம்.

மிகக் கடினமான நேரத்தில் நாங்கள் ஆற்றியப் பணியால் எங்களின் வாசகப்பரப்பு கிட்டத்தட்ட 150 சதவிகிதம் அதிகரித்தது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளத்தின் வாசகர்கள் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளனர். முக்கியமாக நாங்கள் வெளியிட்டக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு PARI-ன் இன்ஸ்டாகிராம் வாசகர்கள் பல லட்சம் பணத்தை நேரடியாக அனுப்பியிருக்கின்றனர்.

இவற்றோடே 25 செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் கொண்டு, தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கும் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயப் போராட்டங்கள் பற்றி நாங்கள் 65 விரிவானக் கட்டுரைகளையும் 10 முக்கியமான ஆவணங்களையும் பிரசுரித்திருக்கிறோம். வெகுஜன ஊடகத்தில் நீங்கள் பார்க்க முடியாத செய்தி வகை இது. தில்லியின் எல்லைகளிலிருந்து மட்டுமில்லாமல், அரை டஜன் மாநிலங்களின் பல பகுதிகளிலிருந்து இச்செய்திக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு விவசாயியின் ஊர் எது, அவர்களின் விவசாய நிலை என்ன, அவர்களது கோரிக்கை என்ன, தில்லி வரை வந்து போராடுமளவுக்கு அவர்களைத் தூண்டியது எது, ஒரு வருடத்துக்கும் மேலாக குடும்பங்களை விட்டு விலகியிருக்கும் நிலை எனப் பல விஷயங்களை எங்களின் கட்டுரைகள் ஆராய்ந்தன. பிரச்சாரகர்கள் அல்லது மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் போன்றவர்களின் குரல்களல்லாமல் அன்றாட விவசாயிகளின் குரல்களை முன்னுக்குக் கொண்டு வந்தோம். பல வருடங்களில் உலகம் கண்டிராத அளவுக்கான பெரிய, அமைதி வழியிலான ஜனநாயகப் போராட்டத்தை முதன்முதலில் செய்தியாக்கியது PARI-தான். தொற்றுக்காலத்துக்கு நடுவே கட்டி எழுப்பப்பட்ட போராட்டம் அது.

PHOTO • Vandana Bansal

PARI-ன் விரிவான மொழிபெயர்ப்புகளால், வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட வாசகர்களும் மாணவர்களும் கட்டுரைகளை பல மொழிகளில் வாசிக்க முடியும் (இடது). தொடங்கி ஒரு வருட காலத்திலேயே, 63 பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் 135 கட்டுரைகளை (வலது) PARI கல்வி பிரசுரித்திருக்கிறது

டிசம்பர் 2014-ல் ஆங்கிலத்தில் மட்டும் தொடங்கப்பட்ட PARI தற்போது 13 மொழிகளில் அநேகமாக ஒரே நேரத்தில் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறது. எண்ணிக்கை இன்னும் கூடும். நாங்கள் சமத்துவத்தை நம்புபவர்கள். எனவே எந்தக் கட்டுரை எங்களுக்கு வந்தாலும் அது 13 மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டு விடும். இந்திய மொழிகள் அனைத்தும் கிராமப்புற இந்தியாவின் ஆன்மா என்றும் ஒவ்வொரு இந்திய மொழியும் உங்களின் மொழி என்றும் நாங்கள் நம்புகிறோம். தற்போது எந்த இணையதளமும் நடத்தாத அளவுக்கு பெரிய மொழிபெயர்ப்பு பணித் திட்டத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், மொழியியலாளர்கள், கவிஞர்கள், வீட்டில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் எங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கின்றனர். 82 வயதிலிருந்து 22 வரையிலான வயதினர் இருக்கின்றனர். சிலர் இந்தியாவுக்கு வெளியில் வசிக்கிறார்கள். பலர் நாட்டுக்குள் தொலைதூரங்களில் இணைய வசதி குறைவான பகுதிகளில் வசிக்கின்றனர்.

PARI இலவசம். சந்தாக் கட்டணம் எதுவும் கிடையாது. எந்தக் கட்டுரையும் கட்டணச்சுவருக்குப் பின்னால் மறைத்து வைக்கப்படவில்லை. விளம்பரங்களும் நாங்கள் கொண்டிருப்பதில்லை. ஏற்கனவே பல ஊடக நிறுவனங்கள் இளையோரை விளம்பரங்களில் மூழ்கடித்து போலியான தேவைகளையும் ஆசைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை ஏன் வளர்த்துவிட வேண்டும்? நமது வாசகர்களில் 60 சதவிகிதம் பேர் 34 வயதுக்குக் கீழுள்ளவர்கள். அதில் 60 சதவிகிதம் பேர் 18-24 வயதுகளுக்குள் இருப்பவர்கள். அதே வயதுகளை சேர்ந்தோர்தான் செய்தியாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் புகைப்படக் கலைஞர்களாகவும் நம்முடன் இயங்குகின்றனர்.

எங்களின் சமீபத்தியப் பகுதியான PARI Education , அறிமுகமாகி ஒரு வருட காலத்திலேயே, எதிர்காலத்துக்கான பாடப்புத்தகங்களை உருவாக்குவது என்கிற எங்களின் அடுத்தப் பணியை நோக்கி வேகமாக நகர்ந்து விட்டது. 95 கல்வி நிறுவனங்களும் 17 கல்வித்துறை நிறுவனங்களும் PARI-யைப் பாடப்புத்தகமாக பயன்படுத்துகிறார்கள். கிராமப்புற இந்தியாவைப்  தெரிந்துகொள்ளவும் ஆராயவும் ஒரு கருவியாக PARI-யைப் பயன்படுத்துகிறார்கள். விளிம்புநிலை மக்களுடன் நேரடியாக மாணவர்கள் உரையாடக் கூடிய வகையிலான, PARI-யை அடிப்படையாக கொண்ட ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் எங்களோடு இணைந்து கிட்டத்தட்ட 36 பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வேளாண் சிக்கல்கள், மறைந்து வரும் வாழ்வாதாரங்கள், பாலினப் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி, 63 பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் 135 செய்தி அறிக்கைகள் PARI கல்வியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. ஜனவரி 2021 தொடங்கி தற்போது வரையில், இப்பகுதி 120க்கும் மேற்பட்ட இணையவழி உரையாடல்களையும் பயிற்சிப் பட்டறைகளையும் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கிராமப் பள்ளிகளிலும் நடத்தியிருக்கிறது.

PARI-யைப் பொறுத்தவரை 'கிராமப்புறம்' என்பது ஒரு அழகிய அல்லது கொண்டாடப்படும் கற்பனாவாத இந்தியக் கிராமப்புறம் அல்ல. கலாச்சார நடைமுறைகளின் புகழ்பெற்றக் கலவையும் அல்ல. அல்லது வாழ வேண்டுமென்ற ஏக்கம் கொண்ட சூழல் நிரம்பிய இடமும் அல்ல. நுட்பங்களாலும் புறக்கணிப்புகளாலும் கட்டப்பட்டிருக்கும் கிராமப்புற இந்தியாவை ஆராய்வதே PARI-ன் பயணமாகும். அழகான, திறன்மிகுந்த, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான எல்லாமுமே உள்ளடங்கியதுதான் இந்தியக் கிராமப்புறமாக இருக்கிறது. அதில் பணிபுரியும் நாங்கள் அனைவருமே தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சாமானிய இந்தியர்கள் கையளிக்கும் அறிவையும் திறமைகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களின் கட்டுரைகளை நம் காலத்தின் முக்கியமான பல பிரச்சினைகளில் அவர்களின் குரல்கள் மற்றும் வாழ்வனுபவங்களினூடாக கொடுக்கிறோம்.

PHOTO • Rahul M.
PHOTO • P. Sainath

விருது பெற்ற காலநிலை மாற்றக் கட்டுரைத் தொடர் (இடது) அன்றாட மக்களின் வாழ்வனுபவங்கள் மற்றும் குரல்களினூடாக அப்பிரச்சினையைப் பேசுகிறது. இந்தியாவில் எஞ்சியிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் (வலது) பற்றிய தனித்துவமானப் பகுதியையும் நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்

காலநிலை மாற்றம் பற்றிய எங்களின் விருது பெற்ற கட்டுரைத் தொடர் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தில் புத்தகமாக வெளியாகவிருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், காட்டில் வசிப்பவர்கள், கடற்பாசி அறுவடை செய்பவர்கள், மேய்ச்சல் பழங்குடிகள், தேன் சேகரிப்பவர்கள், பூச்சி பிடிப்பவர்கள் போன்ற வாழ்க்கைகளை அந்த மக்களின் வாழ்வனுபவங்கள் மற்றும் குரல்களின் வழியாக இந்த கட்டுரைத் தொடர் பேசுகிறது. மலைகளின் மெல்லிய வாழ்க்கைச் சூழல்கள், காடுகள், கடல்கள், கடலோரங்கள், ஆற்றுப்படுகைகள், பவளத்தீவுகள், பாலவனங்கள், வறட்சிப் பகுதிகள் முதலிய இடங்களை கட்டுரைகள் பின்புலங்களாக கொண்டிருக்கின்றன.

பொதுமையான விளங்க முடியாத வாசகங்கள் கொண்டு ஊடகங்களில் வரும் செய்திகள் வாசகர்களை உண்மைகளிலிருந்து விலக்கி வைக்கிறது. காலநிலை மாற்றம் என்பது அண்டார்டிகாவின் பனிப்படல உருகுதலாகவோ அமேசான் காடுகளை அழிப்பதாகவோ ஆஸ்திரேலிய காட்டுத் தீயாகவோ அவை சுருக்கிவிடுகின்றன. அல்லது உலக நாட்டு அரசுகளின் மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளாகவும் காலநிலை மாற்ற மாநாட்டின் புரியாத அறிக்கைகளாகவும் பிரச்சினையை அவை நீர்த்துப் போக வைக்கின்றன. நம் வாழ்க்கைகளில் எந்தளவுக்கு நெருக்கமாக காலநிலை மாற்றம் வினையாற்றுகிறது என்பதை வெளிப்படுத்தக் கூடிய செய்திகளை PARI-ன் செய்தியாளர்கள் கட்டுரைகளாக்குகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தின் 75வது வருடத்தில் நம் நாடு பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எழுத்துகள், காணொளி மற்றும் ஒலி வடிவங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய எங்களின் தனித்துவமான பகுதியை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 5-7 வருடங்களில் அந்த பொற்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். நாட்டின் சுதந்திரத்துக்காக உண்மையாகப் போராடியவர்களுடன் பேசவோ அவர்கள் பேசுவதைக் கேட்கவோ பார்க்கவோ  இந்தியாவின் குழந்தைகளுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். PARI-ல் அவர்களின் பேச்சுகளை கேட்க முடியும். பார்க்க முடியும். சொந்த வார்த்தைகளில் சுதந்திரப் போராட்டம் என்னவென அவர்கள் விளக்குவதை கேட்டறிந்து கொள்ள முடியும்.

இளைய ஊடகமாக நாங்கள் இருக்கலாம். மிகக் குறைந்த வசதிகளே எங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்தியப் பத்திரிகைத்துறையின் பெரிய மானியப்பணித் திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். எங்களது நோக்கம் எளிமையானது: நாட்டின் (இயற்கையாக அல்லது வரலாற்றுரீதியாக உருவாகியிருக்கும்) 95 பகுதிகள் பற்றி, அதில் அடங்கியிருக்கும் கிராமங்களைப் பற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் PARIயின் நல்கையை பெற்று எழுத வேண்டுமென்பதுதான். இதுவரை PARIயின் நல்கையை பெற்ற 30 பேரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெண்களாகவும் சிறுபான்மையினராகவும் சமூகம் மற்றும் ஊடகம் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் பிரிவினராகவும் இருக்கின்றனர்.

7 வருடங்களில் 240 பயிற்சிப் பணியாளர்களுக்கு பயிற்சிக் கொடுத்திருக்கிறோம். அவர்களில் 80 பேர் PARI கல்வியில் இருக்கின்றனர். 2-3 மாதப்  பயிற்சியை PARI-ல் எடுத்து வித்தியாசமான இதழியல் முறையைக் கற்றுக் கொள்கின்றனர்.

PHOTO • Supriti Singha

உலக மொழிகளிலேயே மிக அதிக அளவில் ஏழைப் பெண்கள் இயற்றிப், பாடியிருக்கும் பாடல்களின் மிகப் பெரும் தொகுப்பை Grindmill Songs Project (இடது) என்கிறப் பெயரில் PARI கொண்டிருக்கிறது. மேலும் எங்களின் FACES திட்டம் நாட்டிலிருக்கும் பல்வேறு முகங்களை அடையாளப்படுத்தியிருக்கிறது (வலது)

பலதரப்பட்ட பண்பாடுகள், மொழிகள், கலை வடிவங்கள் போன்றவற்றின் ஆவணங்களையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். உலக மொழிகளிலேயே மிக அதிக அளவில் ஏழைப் பெண்கள் இயற்றிப், பாடிய எண்ணற்றப் பாடல்கள் கொண்ட உலகின் பெரும் தொகுப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். Grindmill Songs Project -ல் கிராமப்புற மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகப் பெண்கள் பாடிய 1,10,000 பாடல்கள் இருக்கின்றன. ஒரு தனிக்குழு அவற்றில் 69,000 பாடல்களை ஆங்கிலத்துக்கு இதுவரை மொழிபெயர்த்திருக்கிறது.

நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இசை, கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள், கதைகள் மற்றும் கவிதைகள் பற்றிய எங்களின் செய்திகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கட்டுரைகள் மற்றும் காணொளிகள் கொண்ட மாபெரும் சேகரிப்பை கட்டியெழுப்பியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. 20-30 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட  இந்தியக்  கிராமப்புறங்களின் 10,000 கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை கொண்ட ஒரே களஞ்சியமாகவும் நாங்கள் இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்களாகவும் சிலவை மட்டும் ஓய்விலிருக்கும் மக்களின் புகைப்படங்களாக இருக்கின்றன.

நாட்டின் பலவித முகங்களை அடையாளப்படுத்தும் திட்டமான FACES எங்களின் பெருமைக்குரியத் திட்டமாகும். இவை யாவும் பிரபலங்களின் முகங்கள் அல்ல. அன்றாட மக்களின் முகங்கள். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒன்றியத்திலிருந்தும் முகங்களை கொண்டு வருவதுதான் நோக்கம். இதுவரை 220 மாவட்டங்களிலிருந்தும் 628 ஒன்றியங்களிலிருந்தும் 2,756 முகங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இவை யாவும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் உள்ளடக்கிய 164 புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டவை. மொத்தத்தில் PARI இந்த 7 வருடங்களில் 576 புகைப்படக் கலைஞர்களின் படைப்புகளை பிரசுரித்திருக்கிறது.

எங்களின் தனித்துவமான நூலகம் உங்களுக்கு புத்தகங்களை கடனாக கொடுக்காது. இலவசமாகவே கொடுக்கும். PARI நூலகத்தில் கிடைக்கும் முக்கியமான அறிக்கைகள், ஆவணங்கள், சட்டங்கள், அச்சிலில்லாப் புத்தகங்கள்  எல்லாவற்றையுமே பதிவிறக்கி, அச்சடித்து சரியான ஒப்புகையளித்துக் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் படைப்பாங்க பொதும காப்புரிமையின் அடிப்படையில் இயங்குகிறோம். இந்த நூலகத்தின் இன்னொரு தனித்துவமான அம்சம் Health Archive ஆகும். தொற்று தொடங்கிய முதல் வருடத்தில் இப்பகுதி தொடங்கப்பட்டது. பல்லாண்டுகளுக்கு முன் வந்த சுகாதார அறிக்கைகள் தொடங்கி சமீபத்திய அறிக்கைகள் வரை மொத்தமாக 140 முக்கிய சுகாதார அறிக்கைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அரசு மற்றும் கார்ப்பரெட் உரிமையோ கட்டுப்பாடோ அற்றது PARI. விளம்பரங்கள் நாங்கள் போடுவதில்லை. எங்களின் சுதந்திரத்துக்கு அதுவே அடிப்படை. உங்களைப் போன்ற வாசகர்கள் அளிக்கும் நன்கொடைகளைச் சார்ந்துதான் நாங்கள் இயங்குகிறோம். ஏதோ வழக்கமாக சொல்வதைப் போல் சொல்லவில்லை. நீங்கள் முன்வரவில்லை எனில் நாங்கள் சிக்கலுக்குள்ளாவோம். தயவுசெய்து PARI-க்கு நன்கொடை அளியுங்கள் . எங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள். நல்ல இதழியலுக்கான வாய்ப்பை வழங்குங்கள்.

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan