170 பேர் கொண்ட PARI-ன் தனித்துவமான மொழிபெயர்ப்பாளர்கள் குழுவின் அற்புதமான சாதனைகளை இன்று நாம் கொண்டாடுகிறோம். குறைந்தபட்சம் 45 பேரேனும் ஒவ்வொரு மாதத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் குழு அது. அப்படி கொண்டாடுவதில் எங்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். நல்ல உதாரணங்களை நாங்கள் பின்பற்றுக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 30ம் நாளை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அனுசரிக்கிறது.

இந்த நாளை பற்றிக் குறிப்பிடும் ஐநா, “நாடுகளை இணைப்பதிலும் உரையாடல்களை ஏற்படுத்துவதிலும் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ச்சிக்குப் பங்களிக்கும் மொழி வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவிக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்றெல்லாம் குறிப்பிடுகிறது. எனவே  இன்று நாங்கள் எங்களின் மொழிபெயர்ப்புக் குழுவுக்கும்  பாராட்டுகளை தெரிவிக்கிறோம். பிற செய்தித்தளம் எதிலும் எங்களுக்கு நிகராக மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதையும் பெருமையோடு உறுதியாகச் சொல்கிறோம்.

எங்களின் மொழிபெயர்ப்பாளர்களில் மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், மொழியியலாளர்கள், வீட்டில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் என பல வகையினர் இருக்கின்றனர். 84 வயது முதியவரும் இருக்கிறார். 22 வயதளவு இளையவரும் இருக்கிறார். சிலர் இந்தியாவுக்கு வெளியே வசிக்கின்றனர். பிறர் நாட்டின் தூரமான இடங்களில், இணையத் தொடர்பு வசதி குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கின்றனர்.

PARI-ன் பெரியளவிலான மொழிபெயர்ப்புச் செயல்பாடு, எங்களின் அளவுக்குட்பட்டு இந்த நாட்டை ஒன்றாக்கவும் அதன் மொழிகளை சமமாக நடத்துவதற்கும் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது. PARI-ல் இருக்கும் ஒவ்வொருக் கட்டுரையும் 13 மொழிகளில் கிடைக்கும். அல்லது விரைவிலேயே 13 மொழிபெயர்ப்புகளை அடையும். உதாரணமாக இந்தக் கட்டுரை 13 மொழிகளில் இருப்பதைப் பார்க்கலாம்: நம் விடுதலைகளுக்காக போராடும் பகத் சிங் ஜக்கியான் . எங்களின் குழு அத்தகைய மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட 6000 செய்திக் கட்டுரைகளுக்கு செய்திருக்கிறது. அதில் பலவை பல ஊடக வடிவங்களைக் கொண்டவை.

'ஒவ்வொரு இந்திய மொழியும் உங்கள் மொழி' என்கிற பி. சாய்நாத்தின் கட்டுரையை கவிதா முரளிதரன் வாசிப்பதை கேளுங்கள்

PARI இந்திய மொழிகளில் மெய்யான கவனம் செலுத்துகிறது. அல்லவெனின் எளிமையாக நாங்கள் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்திருப்போம். ஆனால் அப்படிச் செய்தால், அம்மொழி தெரியாத பெரும்பான்மை கிராமத்து இந்தியர்களை நாங்கள் புறக்கணிப்பதாக ஆகி விடும். இந்திய மக்களின் மொழியியல் கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் கிட்டத்தட்ட 800 மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் மட்டும் 225 மொழிகள் அழிந்து போயிருக்கின்றன. இந்தியாவின் பலதரப்பட்ட, வித்தியாசமான கலாசாரங்களுக்கு மொழிகளே இதயமாக இருப்பதாக கருதுகிறோம். தகவல்கள் மற்றும்  மதிப்புமிக்க அறிவு ஆகியவற்றை பெறுவதற்கு ஆங்கிலம் பேசும் வர்க்கங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என நாங்கள் நினைக்கவில்லை.

பிபிசி போல் 40 மொழிகளில் ஒளிபரப்பாகும் மாபெரும் ஊடக நிறுவனச் செயல்பாடுகளும் இருக்கவேச் செய்கின்றன. ஆனால் அது பல மொழிகளில் வெளியிடப்படும் வேறு வேறு உள்ளடக்கங்களாக இருக்கின்றன. இந்தியாவிலும் கூட, பல மொழிகளில் உள்ளடக்கத்தைக் கொடுக்கும் கார்ப்பரெட் நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றில் பெரிய நிறுவனம் 12 மொழிகளில் உள்ளடக்கத்தைக் கொடுக்கிறது.

ஆனால் PARI-யைப் பொறுத்தவரை இது மொழிபெயர்ப்புச் செயல்பாடு. இணையதளத்தில் வெளியாகும் ஒவ்வொருக் கட்டுரையும் 12 பிற மொழிகளிலும் கிடைக்கும். அந்த மொழிபெயர்ப்புகளும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் செய்யப்படுகிறது. 13 மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் எனத் தனியாக ஓர் ஆசிரியர் இருக்கிறார். விரைவிலேயே சட்டீஸ்கர் மற்றும் சந்தாளி ஆகிய மொழிகளிலும் கட்டுரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்தியா என்கிற கருத்தில் எங்களின் மொழிபெயர்ப்பாளர்கள் பல மொழிகளில் குறுக்கீடு செய்து அதைக் கையாளுகின்றனர். எங்களின் நோக்கம் ஒரு மொழியிலிருக்கும் வார்த்தைகளை வெறுமனே இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்ல. அத்தகைய முயற்சிகளின் நகைப்புக்குரிய விளைவுகளை கூகுள் மொழிபெயர்ப்புகளில் பார்க்க முடியும். ஒரு கட்டுரையின் உணர்வை, அதன் பின்னணியை, கலாசாரத்தை, மொழிநடையை அது எழுதப்பட்டிருக்கும் மூல மொழியின் நயத்துடன் மொழிபெயர்க்க எங்களின் குழு முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர் செய்யும் மொழிபெயர்ப்பும் தரப்படுத்தப்படவும் தவறுகள் களையப்படவும் இன்னொருவரால் ஆராயப்படுகிறது.

PARIயின் மொழிபெயர்ப்பு திட்டம், மாணவர்களை பல மொழிகளில் கட்டுரைகளை படிக்க உதவுவதன் மூலம் அவர்களது மொழியியல் திறன்களை வளர்க்க உதவுகிறது

மிகவும் சமீபத்திய எங்களின் PARI கல்விப் பிரிவு கூட பல இந்திய மொழிகளில் வெளியாகி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆங்கிலப் புலமை ஓர் உபகரணமாக, ஓர் ஆயுதமாகக் கூட பயன்படுத்தப்படும் ஒரு சமூகத்தில் ஒரே கட்டுரை பல மொழிகளில் வெளியாவது பல வகைகளில் உதவுகிறது. தனி வகுப்புகளோ விலையுயர்ந்த தனியார் கல்வியோ பெற முடியாத மாணவர்கள், இம்முறை அவர்களின் ஆங்கிலம் மேம்படுவதற்கு உதவுவதாக கூறியிருக்கிறார்கள். கட்டுரையை அவர்கள் சொந்த மொழியில் படிப்பார்கள். பிறகு ஆங்கிலத்தில் மீண்டும் படித்து பார்ப்பார்கள் (அல்லது இந்தி, மராத்தி போன்ற மொழிகள். எந்த மொழியில் பயிற்சி பெற வேண்டுமென விரும்புவதை பொறுத்து மொழி மாறும்). இவை எல்லாமும் இலவசமாகக் கிடைக்கிறது. PARI அதன் உள்ளடக்கத்துக்கென சந்தாக் கட்டணமோ எந்தவித கட்டணமோ விதிக்கவில்லை.

300க்கும் மேற்பட்ட காணொளி நேர்காணல்கள், ஆவணக் காணொளிகள் முதலியவற்றிலும் நீங்கள் ஆங்கிலத்துடன் பிற மொழி வசன வரிகளைக் காண முடியும்.

உள்ளூருக்கேற்ப தனித்த தளங்களாகவும் PARI இப்போது இந்தி, ஒடியா, உருது, பங்ளா மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது. தமிழும் அசாமியும் விரைவிலேயே வரவிருக்கின்றன. மேலும் சமூக தளங்களிலும் நாங்கள் ஆங்கிலம் மட்டுமென இன்றி, இந்தி, உருது, தமிழ் முதலிய மொழிகளிலும் இயங்குகிறோம். அதிகமான தன்னார்வலர்கள் கிடைக்கும்போது இன்னும் அதிகமான மொழிகளில் சமூக தளங்களில் நாங்கள் இயங்க முடியும்.

இன்னும் நாங்கள் விரிவடைய தன்னார்வ உழைப்பு மற்றும் நன்கொடைகளை அளிக்கும்படி வாசகர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, அழிந்த மொழிகள் பற்றிய எங்களின் அடுத்த பெரும் பிரிவை தொடங்குவதற்கு உதவுங்கள். சற்று இப்படி யோசித்துப் பாருங்கள்: ஒவ்வொரு இந்திய மொழியும் உங்களின் மொழிதான்.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Illustrations : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan