ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள சிங்கு-டெல்லி எல்லையில் அலைகடலென திரண்டு போராடும் விவசாயிகளை பார்த்து கொண்டிருக்கும் ஹர்ஜீத் சிங்கின் முகத்தில் மங்கலான குளிர்கால வெயில் பட்டுத் தெறிக்கிறது.

அருகில் பெரியவர்கள், இளைஞர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகளும் உள்ளனர் - அனைவரும் பல்வேறு பணிகளில் பரபரப்பாக உள்ளனர். இரண்டு ஆண்கள் இரவு உறங்குவதற்காக கம்புகளை கொண்டு படுக்கையை தட்டிக் கொண்டிருக்கின்றனர். அங்கிருப்பவர்களுக்கு சிலர் தேநீர், பிஸ்கட் விநியோகம் செய்கின்றனர். தங்கள் தலைவர்களின் உரையை கேட்பதற்காக பலரும் பெருங்கூட்டத்தை நோக்கி செல்கின்றனர். சிலர் இரவு உணவிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். சிலர் அங்கும், இங்கும் திரிகின்றனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கும் எதிராக டெல்லியின் வாயில்களில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஹர்ஜீத்தும் ஒருவர்.

பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் மஜ்ரி சோதியான் கிராமத்தில் உள்ள தனது நான்கு ஏக்கர் நிலத்தில் நெல், கோதுமை பயிர்களை பயிரிட்டு வருவதாக அவர் சொல்கிறார். 50 வயதுகளில் உள்ள ஹர்ஜீத் திருமணமாகாதவர். தனது தாயுடன் வசித்து வருகிறார்.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து அவரை நடக்க விடாமல் முடக்கிப் போட்டது. எனினும் அவர் தனது சக விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். “நான் என் வீட்டின் மேற்கூரையில் வேலை செய்துகொண்டிருந்தபோது வழுக்கி கீழே விழுந்துவிட்டேன்,” என்று விபத்து குறித்து அவர் சொல்கிறார். “என் இடுப்பு எலும்பு உடைந்தது.”

Harjeet Singh attending the meeting
PHOTO • Amir Malik
A farmer making placards at the protest site
PHOTO • Amir Malik

நடக்க முடியாவிட்டாலும் ஹர்ஜீத் சிங் 250 கிலோமீட்டர் பயணித்து லாரி மூலம் சிங்கு பகுதிக்கு வந்துள்ளார். வலது: போராட்டக் களத்தில் பதாகைகளை காட்டும் விவசாயி

அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. “முதலுதவி தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. முறையான சிகிச்சைக்கு மருத்துவமனையில் 2 முதல் 3 லட்சம் வரை பணம் கேட்டனர். இவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கு செல்வேன்?”

எனினும் இங்கு பங்கேற்க எப்படி வந்தார்? பேரணிகளிலும், உரைகளிலும் அவர் எப்படி நிற்கிறார்?

“டிராக்டர் சக்கரத்தை இங்கு நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? அதை ஒரு கையால் பிடித்தபடி மறுகையில் தண்டாவின் [கம்பு]  உதவியோடு எழுந்து நிற்கிறேன். சில சமயம் யாருடைய உதவியாவது தேவைப்படும் அல்லது சுவற்றில் சாய்ந்து கொள்வேன். தண்டாவை பிடித்துக் கொண்டு நான் நிற்க முயல்வேன்,” என்கிறார் அவர்.

“என் மக்கள் படும் துன்பத்தை என்னால் தாங்க முடியாததால் போராட்டத்திற்கு வந்தேன்,” என்கிறார் அவர்.  “டிரக்கின் டிராலியில் நான் சுமார் 250 கிலோமீட்டர் பயணித்தேன்.” போராட்ட களத்திற்கு வர மற்ற விவசாயிகளும் உதவியுள்ளனர். இங்கு திரண்டுள்ள விவசாயிகள் படும் துன்பத்தை ஒப்பிடும்போது, தனது வலி ஒரு பொருட்டல்ல என்கிறார் ஹர்ஜீத்.

சாலை தடுப்புகளை அகற்றுவது, கம்பிகளை நீக்குவது, கண்ணீர் புகைகுண்டுகள், தண்ணீர் பீரங்கிகளை எதிர்கொள்வது, காவல்துறையிடம் அடி வாங்குவது, சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட பள்ளங்களை கடப்பது – இப்படி பல துன்பங்களையும் சாலைகளில் விவசாயிகள் அனுபவிப்பதை அவர் பார்க்கிறார்.

“நம் முன் நிற்கும் துன்பங்கள் இன்னும் பெரியவை,” என்கிறார் ஹர்ஜீத். அவரது நண்பரான கேசர் சிங் எனும் விவசாயியும் அமைதியாக இதற்கு தலை அசைக்கிறார்.

“அதானிகள், அம்பானிகள் போன்ற பெருமுதலாளிகள் நம் சொந்த நிலத்தின் மீதான நம் உரிமையை பிடுங்கிவிடுவார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொன்னது சரிதான்.”

A large gathering listens intently to a speech by a protest leader
PHOTO • Amir Malik

மேல் இடது: பிற போராட்டக்காரர்களுடன் நாம் பேசுவதை மஜ்ரி சோதியான் கிராம விவசாயி பார்க்கிறார். மேல் வலது: கம்பு கொண்டு படுக்கையில் உள்ள தூசுகளை தட்டும் இரண்டு ஆண்கள். கீழ் இடது: பஞ்சாபின் சங்ருர் மாவட்டம் சிங்கு எல்லையைச் சேர்ந்த பெண் விவசாய குழுவினர். கீழ் வலது: போராட்டக் குழு தலைவரின் உரையை தீவிரமாக கேட்கும் பெருந்திரள் கூட்டம்

விபத்திற்கு பிறகு சொந்தமாக விவசாயம் செய்யமுடியாத காரணத்தால், ஹர்ஜீத் தனது நான்கு ஏக்கர் நிலத்தை மற்றொரு விவசாயிக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். தனது சொந்த நிலத்தை மற்றவர் விவசாயம் செய்வது குறித்து சொல்கிறார்: “உடனடி இழப்பு எனக்கு ஏற்பட்டது”

2019ஆம் ஆண்டு தனது நிலத்தை ஏக்கர் ரூ.52,000 என மற்றொரு விவசாயிடம் அவர் குத்தகைக்கு விட்டார். அதிலிருந்து அவருக்கு ஆண்டிற்கு ரூ.208,000  (கோதுமை, நெல் எனும் இரண்டு அறுவடைக்கு) கிடைத்தது. இதில் பாதி தொகையான ரூ.104,000 - குத்தகைப் பெற்றவரிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். அறுவடைக்கு பிறகு எஞ்சிய தொகை கிடைக்கும். இதுவே அவருக்கு நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய்.

“2018ஆம் ஆண்டு என் நிலத்தில் நான் விவசாயம் செய்தபோது அதே நிலத்தில் எனக்கு 2.5 லட்சம் ரூபாய் கிடைத்தது,” என்கிறார் அவர். “ஆண்டிற்கு ரூ. 46,000 வரை நேரடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பணவீக்கமும் சேர்ந்துகொண்டது. என்னிடம் சேமிப்பும் கிடையாது. எவ்வித ஓய்வூதியமும் கிடையாது.”

“என் முதுகுத்தண்டிலும் வெடிப்பு உள்ளது,” என்கிறார் ஹர்ஜீத். “கண்ணாடி டம்பளரில் நீங்கள் பார்க்கும் விரிசலைப் போன்றது,” என்கிறார் அவரது நண்பர் கேசர்.

இருப்பினும் அவர் டெல்லி எல்லைக்கு வந்துள்ளார். காயமடைந்த முதுகுத்தண்டு என்பது முதுகுத்தண்டு இல்லாததை போன்றது. ஹர்ஜீத் சிங்கினால் நடக்க முடியவில்லை எனினும் அவர் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்ந்து நிற்கிறார்.

தமிழில்: சவிதா

Amir Malik

Amir Malik is an independent journalist, and a 2022 PARI Fellow.

Other stories by Amir Malik
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha