கைகளிலும், உடலிலும் சங்கிலியால் கால்கள் வரை பிணைத்தபடி அவர் நடக்கிறார். வெள்ளை நிறத்தின் மீது கருப்பு கோடுகள் போட்ட முழங்கால் வரையிலான சட்டை, சிறைவாசியைப் போன்றே தோற்றமளிக்கிறது.

ஆனால் 42 வயதாகும் கபால் சிங் சிறை தண்டனைக்கு உள்ளாகும் அளவுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை.  சங்கிலியை உடலில் தானே பிணைத்துக் கொண்டுள்ளார். பஞ்சாபின் ஃபசிகா மாவட்டம்  ருக்கான்புராவைச் (குய் கெரா என்றும் அறியப்படுகிறது )சேர்ந்தவர் இந்த விவசாயி.

2020 ஜூன் 5ஆம் தேதி அவசர சட்டங்களாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதே மாதம் 20ஆம் தேதி அவசர அவசரமாக சட்டங்களாக இயற்றப்பட்ட மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்க்கும் லட்சக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர்.

உடலில் ஏன் இந்த சங்கிலி பிணைப்பு?

“விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடி வருகின்றனர், என்னால் அவர்களது வலியைத் தாங்க முடியவில்லை. அவர்களின் துயரத்தைப் பிரதிபலிக்கும் நோக்கில் என் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்துள்ளேன். அவர்கள் உள்ளுக்குள் உணர்வதை நானும் உணர்கிறேன்.”

“என்னைச் சுற்றியுள்ள சங்கிலியைப் பார்க்கும்போது, எங்களைச் சுற்றியுள்ள அனைவர் மீது சங்கிலி சுற்றப்பட்டுள்ளதை நீங்கள் உணரலாம். நீங்கள் அவற்றை பார்க்க வேண்டும்.” வரவேற்பைப் பெறாத இச்சட்டங்களையும் இச்சங்கிலியில் இணைந்துள்ளதாக கருதுகிறார் கபால் சிங்.

காணொலியைக் காண: ‘விவசாயிகள் அனைவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்’

டெல்லி எல்லைக்கு அருகே ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் சிங்குவில் உள்ள மிகப்பெரும் போராட்டக் களத்திலிருந்து அவர் நம்முடன் பேசுகிறார்.

“எங்களை நிலமற்றவர்களாக மாற்றத் துடிக்கும் கார்ப்ரேட்டுகளிடம் இருந்து இறைவன்தான் காக்க வேண்டும். எங்களுக்கு விவசாயம் செய்வதற்கு நிலம் இருக்கும்போது நாங்கள் ஏன் பணியாளர்கள் ஆக வேண்டும்? எங்களை நிலங்களை பெரிய கார்ப்ரேட்டுகள் கட்டுப்படுத்த நாங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்று அவர் கேட்கிறார்.

“என் மீதுள்ள சங்கிலியின் பூட்டைத் திறக்கும் சாவி அம்பானி, அதானிகளின் கைகளில் உள்ளன. அவர்களிடமிருந்து சாவியை மீட்டு இந்த பூட்டை மோடி அரசு திறக்க வேண்டும். பிரதமரிடம் இச்சட்டங்களை திரும்பப் பெறுமாறு இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.”

விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்கள்: விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 .  இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவிக் கோரும் உரிமையை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன

பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற விவசாயிகளுக்கான பல ஆதரவு அம்சங்களையும் இந்த சட்டங்கள் வலுவிழக்க செய்கின்றன.

“நாள் முழுவதும் ஐந்து கிலோ சங்கிலியை சுமப்பதால் உடல் மரத்துப் போகிறது. விவசாயிகளின் துயரங்களுக்கு முன்னால் எனது உடல் வலி ஒரு விஷயமில்லை” என்கிறார் கபால் சிங்.

Holding the five-kilo chain throughout the day makes Kabal Singh go numb. But it's nothing compared to the farmers' pain, he says
PHOTO • Amir Malik
Holding the five-kilo chain throughout the day makes Kabal Singh go numb. But it's nothing compared to the farmers' pain, he says
PHOTO • Amir Malik

ஐந்து கிலோ சங்கிலியை நாள் முழுவதும் சுமப்பதால் கபால் சிங்கின் உடல் மரத்துப் போகிறது. விவசாயிகளின் துயரத்தை ஒப்பிடும்போது இதெல்லாம் ஒன்றுமில்லை, என்கிறார் அவர்

நம்மிடம் பேசும்போதும் அவர் கைகளை உயர்த்தியபடி இருக்கிறார். நாள் முழுவதும் இப்படி செய்வது சோர்வையும்,  அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. “அதிகாலை 5 மணிக்கே என்னை சங்கிலியால் பூட்டிக் கொள்வேன்,” எனும் அவர், “சூரியன் அஸ்தமிக்கும் வரை இப்படி என்னை பூட்டிக் கொள்கிறேன்.”

இந்த விவசாயிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்துள்ளது.  “என் கிராமத்தில் செய்யப்பட்ட சங்கிலி இது.” இப்போது அவரிடம் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் கோதுமையும், பருத்தியும் விளைவிக்கிறார். உடல்நலம் குன்றிய தந்தை மற்றும் மகளுக்கு மருத்துவ செலவு செய்வதற்காக தனது இரண்டு ஏக்கர் நிலத்தை அவர் விற்றுள்ளார்.

நிலத்தை விற்றுப் பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை அவர்களின் உடல்நலத்திற்காக செலவிட்டுள்ளார். “என்னால் அவற்றை சேமிக்க முடியவில்லை.” மஞ்சள்காமாலை வந்து அவரது 20 வயது மகள் இறந்துபோனார். அவளைத் தொடர்ந்து அவரது தந்தையும் நாள்பட்ட நோயினால் இறந்தார். தன்னிடம் உள்ள இரண்டு பசுக்களின் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும் இல்லை என்றால் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறிதான்.

“போராட்டத்தில் பங்கேற்க என் தாய் பல்பிர் கவுரும் வந்திருந்தார். இங்கு வரும்போது (பலரையும் போன்று டிராக்டர் டிராலியில் வந்தபோது) அவர் கீழே விழுந்துவிட்டார். அவரது இடுப்பு எலும்பு உடைந்துவிட்டதாக சொன்னார்கள்,” என்கிறார் அவர். “என் முன்னோர்களும் விவசாயிகள் தான். அரசு எங்களுக்கு இழைக்கும் அநீதியை காண்கிறேன். இதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடுகிறோம். எங்கள் குழந்தைகள் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்க நான் விரும்பவில்லை.”

இந்திய எல்லைகளில் உள்ள வீரர்கள் விவசாயிகளின் பிள்ளைகள் என்கிறார் அவர். “அவர்கள் உயிர்நீத்தால் நீங்கள் அவர்களை நாயகர்கள் ஆக்குகிறீர்கள். அதுவும் சரிதான். ஆனால் நாங்கள் இங்கு எங்கள் உரிமைகளைக் கோருகிறோம், எங்களை ஏன் குற்றவாளிகள் ஆக்குகிறீர்கள்?”

இப்போது கபால் சிங் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கிறார்: வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறும் வரை என்னால் சங்கிலிகளை அவிழ்க்க முடியாது.”

முகப்புப் படம்: ஷ்ரத்தா அகர்வால்

தமிழில்: சவிதா

Amir Malik

Amir Malik is an independent journalist, and a 2022 PARI Fellow.

Other stories by Amir Malik
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha