துப்பாக்கிச்சூடு நடத்தப்படவே இல்லை. “காவல்துறையினரால் விவசாயி சுட்டுக்கொலை” என பலவகை தலைப்புச் செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பஹதுர் ஷா சஃபர் மார்கில் “கொலை” என செய்திகள் பரவின. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வதந்தி குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி டெல்லியின் புகழ்மிக்க வருமான வரித்துறை அலுவலகம் (ஐடிஓ) நோக்கி வந்த போராட்டக்காரர்களிடையே குழப்பம், கலவரத்தை ஏற்படுத்தியது. இது செங்கோட்டை போன்ற பிற பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது.

டிராக்டர் ஓட்டி வந்த இளம் விவசாயி ஒருவரை காவல்துறையினர் மிக நெருக்கமாக வந்து சுட்டுக் கொன்றதாக ஒரு கதை நிலவியது. சமூக ஊடகங்களும் சரிபார்க்காமல் அனைத்து திசைகளிலும் வதந்தியைப் பரவவிட்டன. சில தொலைக்காட்சி சேனல்களிலும் இச்செய்தி வந்தது. காவல்துறையினரின் வன்முறை, துப்பாக்கிச்சூடு என மக்களும் கண்டித்தனர். ஐடிஓ சந்திப்பின் அருகே இருந்த போராட்டக்காரர்களும் எல்லா இடத்திற்கும் சிதறி ஓடினர்.

உண்மையில் 45 வயது நவ்நீத் சிங் என்பவர் டிராக்டர் ஓட்டிவந்தபோது கவிழ்ந்ததில் உயிரிழந்தார் - யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. இச்செய்தி தெளிவுப்படுத்தப்பட்டபோதும் அதற்குள் செங்கோட்டையில் வன்முறை பரவிவிட்டது. இதனால் 2020 செப்டம்பர்  நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி தடைபட்டது.

இந்த நாள் வேறுவிதமாக விடிந்தது என்பதுதான் துயரமானது.

இருள், குளிருக்கு பிறகு இந்தியாவின் 72ஆவது குடியரசு தின கொண்டாட்டம் கதகதப்பான வெயிலில் தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேசிய தலைநகர எல்லையில் போராடி வரும் விவசாயிகளும் அவர்கள் திட்டமிட்ட வழித்தடத்தில் அமைதியான டிராக்டர் பேரணியை நடத்தி வரலாறு படைக்க இருந்தனர். டெல்லியின் மத்திய பகுதியான ராஜ்பாத்திற்கு மதியம் ஊர்வலம் வந்த பிறகு அவர்களுக்கு சிங்கு, டிக்ரி, காசிபுர் ஆகிய மூன்று எல்லைகள் தடுக்கப்பட்டன.

இந்த அணிவகுப்புகள் குடியரசு தினத்தின் மிகப் பெரிய குடிமக்கள் கொண்டாட்டங்களாக இருந்தன. ஆனால் அவையெல்லாம் மாலையில் பொதுமக்கள் கவனத்தையும் ஆர்வத்தையும் இழந்தன.
PHOTO • Shalini Singh

குடியரசு தின நாள் காலையில் சில்லா எல்லையில் விவசாய குழுக்களிடையே உரையாற்றும் பிகேயுவின் யோகேஷ் பிரதாப் சிங் (மேல் வரிசை). மதிய உணவிற்கு பிறகு டிராக்டர் பேரணியை தொடங்கிய குழுவினர் (கீழ் இடது) பிகேயுவின் உ.பி. பிரிவைச் சேர்ந்த பானு பிரதாப் சிங் வேளாண் பொருட்களின் விலைகள் குறித்து பாரியிடம் பேசினார்

குடியரசு தின நாள் காலையில் சில்லா எல்லையில் விவசாய குழுக்களிடையே உரையாற்றும் பிகேயுவின் யோகேஷ் பிரதாப் சிங் (மேல் வரிசை). மதிய உணவிற்கு பிறகு டிராக்டர் பேரணியை தொடங்கிய குழுவினர் (கீழ் இடது) பிகேயுவின் உ.பி. பிரிவைச் சேர்ந்த பானு பிரதாப் சிங் வேளாண் பொருட்களின் விலைகள் குறித்து பாரியிடம் பேசினார்

டெல்லி, உத்தரப்பிரதேசம் இடையேயான சில்லா எல்லையை (காசிபுர் அருகே) நோக்கி எங்கள் நாள் தொடங்கியது. ஒவ்வொரு முனையிலும் வழக்கத்திற்கு மாறாக தடுப்புகள்: எரிபொருள் சுமப்பான்கள், டெல்லி அரசுப் பேருந்துகள், மஞ்சள் நிற நகரும் இரும்பு கதவுகள் சிறிதளவு என நிறுத்தப்பட்டிருந்தன. சில்லா எல்லையில் வெள்ளை, பச்சை நிற பெரிய முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்ட வழிதடத்தில் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு முன்னேறிச் செல்லுமாறு விவசாய குழுக்களுக்கு அவர்களின் தலைவர்கள் அறிவுறுத்தினர்.

அதிகாலை 4 மணி முதல் தயார் செய்யப்பட்ட அரிசி, பருப்பு எனும் எளிய உணவை போராட்டக்காரர்கள் உண்டனர்… மதிய நேரம் குழுவினர் டிராக்டர்களில் ஏறி ‘பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என ஒரே மூச்சாக முழக்கமிட்டனர், பின்னணியில் புகழ்பெற்ற உள்ளூர் பாடல்களும் இசைக்கப்பட்டன. சில்லா-டெல்லி-நொய்டா நேர்வழி மேம்பாலம்- தாத்ரி-சில்லா என்று திட்டமிட்ட பாதையில் டிராக்டர்கள் செல்வதைக் கண்காணிக்க நீண்ட வரிசையில் காவல்துறையினரும், வெள்ளை நிற டிரோன் கேமராக்களும் இருந்தன.

விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்கள், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 . 2020 ஜூன் 5ஆம் தேதி முதலில் சட்டமாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதே மாதம் 20ஆம் தேதி அவசர அவசரமாக சட்டங்களாக இயற்றப்பட்டன.

பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் கருதுகின்றனர். இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவிக் கோரும் உரிமை யை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

சில்லா டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கவில்லை. வேகமாக ஒரு மணி நேரத்திற்குள் திரும்பியது. பிறகு நாங்கள் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்குவில் நடைபெறும் முக்கிய பேரணியை நோக்கிச் சென்றோம். விவசாயிகளில் சில குழுவினர் சிங்குவிலிருந்து ஐடீஓ வழியாக டெல்லிக்குச் செல்வதாக எங்கள் சக பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது. நாங்கள் எங்கள் பாதையை மாற்றி அவர்களைப் பின்தொடர்ந்தோம். நாங்கள் வெளிவட்டச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டெல்லிவாசிகள் பலரும் சாலைகளில் வந்து டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற விவசாயிகளுக்கு கை அசைத்தனர். மஜ்னு கா திலா அருகே கருஞ்சிவப்பு நிற உடையணிந்த சில துறவிகள் குழுவும் உற்சாகமாக கையசைத்தனர். போக்குவரத்து சிக்னலின் போது குடும்பத்துடன் காரில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தண்ணீர் புட்டிகளை டிராக்டரில் தொங்கி கொண்டிருந்தவர்களிடம் அளித்தார்.

நாட்டின் உணவு உற்பத்திக்கு உதவிய டிராக்டர்களின் பெரும் சக்கரங்கள் தேசிய தலைநகரின் கான்கிரீட் சாலையில் உருண்டது சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக இருக்கக்கூடும். சக்திவாய்ந்த, கடுமையான குறியீட்டு நடவடிக்கை இது.

PHOTO • Shalini Singh

சில்லா-டெல்லி-நொய்டா நேர்வழி மேம்பாலம்-தாத்ரி-சில்லா - என திட்டமிட்ட வழித்தடத்தை முடித்த பிறகு சில்லா டிராக்டர் பேரணி ஒரு மணி நேரத்தில் திரும்பியது

PHOTO • Shalini Singh

ஐடிஓ சந்திப்பில் செங்கோட்டை, காசிபுர், சிங்குவிலிருந்து வந்த டிராக்டர்கள் ஒன்றிணைந்தன

திடீரென காற்றில் ஏற்பட்ட ஒரு மாற்றம், மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில போராட்ட குழுவினர் பிரிந்து எவ்வித எச்சரிக்கையுமின்றி செங்கோட்டையை நோக்கி புறப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. வரலாற்று நினைவிடத்தில் மோதல்கள் ஏற்பட்டு சமய கொடி ஏற்றப்பட்டதாகவும் வதந்திகள் வட்டமிட்டன. சட்டென அரங்கேறிய ஒரு நாடகம், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் முக்கிய பிரச்னையிலிருந்தும், டிராக்டர் அணிவகுப்புகளிலிருந்தும் திசைதிருப்புவதை உறுதி செய்தது.

“இங்கு வராதீர்கள்,” என செங்கோட்டையிலிருந்து சற்றுமுன் வெளியேறிய எங்கள் சக பணியாளர் மாலை 3.15 மணியளவில் தொலைபேசியில் எங்களிடம் சொன்னார். சில போராட்டக்காரர்கள் பல்வேறு வதந்திகளால் ஆத்திரமடைந்து வெறிகொண்டு தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரது விலைமதிப்பு மிக்க கேமரா லென்ஸ்களும் உடைக்கப்பட்டன. நாங்கள் ஐடிஓ நோக்கி தொடர்ந்தோம். அப்போது காசிப்பூர், சிங்கு, செங்கோட்டையிலிருந்து வந்த டிரக்டர்கள் ஒன்றுகூடின. பழைய காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே டிராக்டர்களும், மக்களும் சென்றனர்.

பஞ்சாபின் குருதாஸ்பூரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்கள் கோபமடைந்தனர்: “ஜனவரி 22ஆம் தேதி நான் டிராக்டரில் சிங்கு வந்தேன். குடியரசு தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்தோம். இப்பேரணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உள்ளன. நாங்களும் நம் குடியரசைக் கொண்டாடுகிறோம். இச்சட்டங்கள் யாவும் பெருமுதலாளிகளுக்குத் தான் பலனளிக்கின்றன, விவசாயிகளுக்கு அல்ல.”  முறையான, பிரம்மாண்ட பேரணி அவர்கள் திட்டமிட்ட வழித்தடங்களில் அமைதியாக நடக்கப் போகிறது என அவர்கள் உண்மையாக நம்பினர் என்றே தோன்றுகிறது. பிற பகுதிகளிலும் போராட்டக்காரர்களிடையே இந்த குழப்பம் பிரதிபலித்தது.

ஆனால் நகரத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்களிடம் எந்த குழப்பமும் இல்லை. தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. இடையூறு செய்வது, அட்டூழியம் மற்றும் தாக்கும் திட்டம் அவர்களிடம் இருந்தது. தலைநகர எல்லைகளில் அமைதியாக, ஒழுக்கமான முறையில் பேரணி நடத்தி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்களில் சிலர் என்னிடம் கூறினர்: “செங்கோட்டையில் அக்கொடியை வைத்தது நல்ல விஷயம் தான், நாங்கள் தான் அவற்றைச் செய்தோம்” என்றதுடன் அவர்களிடம் உள்ள ஒரு கொடியையும் என்னிடம் காட்டினர்.
PHOTO • Shalini Singh

மேல் இடது: 'இச்சட்டங்கள் கார்ப்ரேட்டுகளுக்குத் தான் பலனளிக்கும்,' என்று குர்தாஸ்பூரிலிருந்து வந்திருந்த மூவர் தெரிவித்தனர். மேல் வலது: 'இன்றைய குடியரசு தினம் என்பது வரலாற்றில் அவமானம்'. கீழ் வரிசை: பவன்தீப் சிங் (ஆரஞ்சு நிறம்) உள்ளிட்ட போராளிகள், டிராக்டர்களால் நிறைந்த ஐடிஓ பகுதி

“அரசு வேறு எதுவும் இல்லாமல் தொடர்ந்து ‘இந்து ராஷ்டிரம்’ பற்றி மட்டுமே பேசி வருகிறது. செங்கோட்டையில் இன்று [சமயம் சார்ந்த] கொடி ஏற்றப்பட்டது, இச்சிந்தனைக்கு விடுக்கப்பட்ட சவால்,” என்கிறார் 26 வயதாகும் பவன்தீப் சிங்.

சில தெளிவின்மையும் ஒருசிலரின் அரைகுறை அர்ப்பணிப்பும் குழப்பத்திற்கான பாதையைத் திறந்து கொண்டிருந்தன.

“இன்றைய குடியரசு தினம் வரலாற்றில் ஒரு சரிவு, வரும் காலங்களிலும் மக்கள் இந்த டிராக்டர் பேரணியை நினைவில் கொள்வார்கள்,” என்கிறார் நம்மிடம் பேசிய 45 வயதாகும் ரஞ்ஜித் சிங்.

அச்சமயத்தில் தான் நவ்நீத் சிங்கின் டிராக்டர் கவிழ்ந்து வதந்திகள் பரவ காரணமானது. சாலையில் அமர்ந்திருந்த பெருந்திரளான போராட்டக்காரர்கள் அவரது உடலை சூழ்ந்து அஞ்சலி செலுத்தினர். சில மீட்டர் தொலைவில் இருந்தபடி காவல்துறையினர் அவர்களை கண்காணித்தனர்.

பஞ்சாபின் பிலாஸ்பூர்வாசியான 20 வயதாகும் ரவ்நீத் சிங்கில் காலில் தோட்டா துளைத்துவிட்டதாக ஒரு புரளி நிலவியது. இறந்துபோன நவ்நீத் சிங்கின் உடல் கிடத்தப்பட்டுள்ள சாலையில் காயமடைந்த ரவ்நீத்தும் இருந்தார். தன்னை எந்த தோட்டாவும் துளைக்கவில்லை என்றும் ஐடிஓ அருகே காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காயமடைந்ததாக அவர் ஊடகத்தினரிடம் தெளிவுப்படுத்தினார். அவரது குரலை ஒரு நடுத்தர வயதுக்காரர் அழுத்தினார். அவர் கேமரா வைத்திருந்தவர்களை பின்வாங்கச் சொன்னார். அவர்கள் முழு உண்மையையும் பார்வையாளர்களிடம் முன்வைக்கப் போவதில்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றார்.

ஐடிஓ அருகே 20 வயது மதிக்கத்தக்க இளம் விவசாயிகள் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான குழு தலைவரின் அறிவுரைக்காக காத்திருந்தனர். உளவுத்துறையினர் என கருதி நம்மிடம் அவர்கள் பேசத் தயங்கினர். நாங்கள் தெளிவுப்படுத்திய பிறகு, அவர்கள் போராட்டம் அமைதியாகத் தான் நடந்தது என்றும், டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினர் சுட்டது தவறானது, இது ஆத்திரமூட்டும் செயல் என்றும் கூறினர்.

PHOTO • Shalini Singh

ஐடிஓவை கடக்கும்போது டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்த நவ்நீத் சிங்கிற்கு திரண்டிருந்த கூட்டத்தினர் அஞ்சலி செலுத்தினர்

PHOTO • Shalini Singh

ஸ்ரீமதி அன்டில் (இடது) அரசு இதில் தலையிட வலியுறுத்தினார். அஜய் குமார் (வலது தொலைவில்) பேசுகையில்: ‘நான் போர்வீரனாகவும், விவசாயியாகவும் இருக்கிறேன். ஆனால் நான் எப்போதும் விவசாயி தான்’

“அரசு விவசாயிகளைக் கொலை செய்யாமல் இச்சட்டங்களைத்தான் நீக்க வேண்டும்,” என்று நம்மிடம் அவர்கள் கூறினர். “இந்நாட்டின் வரலாற்றில் இதுவே மிகப்பெரும் போராட்டமாக இருக்கும்,” என்று அவர்கள் பெருமையுடன் கூறினர்.

நவ்நீத் சிங் மரணத்திற்கான காரணத்தை அறிய முன்னேறிச் சென்று பிற போராட்டக்காரர்களிடம் பேசினோம். அப்போது உத்தராகண்டின் பாஜ்பூரை பூர்வீகமாக கொண்டு இப்போது உத்தரப்பிரதேசம் மீரட்டில் வசிக்கும் 45 வயதாகும் முன்னாள் இராணுவ வீரர் அஜய்குமார் சிவாச் பேச முன்வந்தார்.

“இந்நாட்டில் விவசாயம் நின்றுவிட்டால், அரசும் நின்றுவிடும். நான் ஓய்வூதியம் பெறுபவன். கரும்பு, கோதுமை விளைவிக்கிறேன். சுமார் 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்து ஜம்மு காஷ்மிர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், லடாக்கில் இருந்துவிட்டு விவசாயத்திற்கு வந்தவன். இராணுவ வீரனும் நானே, விவசாயியும் நானே. ஆனால் எப்போதும் நான் விவசாயிதான். இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். போராட்டத்தில் பங்கேற்பதற்கு டெல்லி வருவதற்காக நாங்கள் எங்கள் கிராமத்தில் ரூ.60,000 சேகரித்தோம்” என்று சொன்னார் சிவாச்.

ஹரியானாவின் சோனிபட்டில் சோளம், வெள்ளரி, உருளைக்கிழங்கு, கேரட் போன்றவற்றை விளைவிக்கும் வெளிர் பச்சை நிற தலைப்பாகை அணிந்திருந்த 48 வயதாகும் பெண் விவசாயி ஸ்ரீமதி அன்டில் நம் கண்ணில் பட்டார். நம்மிடம் பேசிய அவர் இரண்டு மாதங்களாக போராட்டக் களத்தில் உள்ளதாகவும், வீட்டிற்கும், சிங்குவிற்கும் வருவதும், போவதுமாக இருப்பதாகவும் தெரிவித்தார். “நான் சிங்குவில் இருக்கும்போது 17 வயது மகளையும், 10 வயது மகனையும் என் கணவர் பார்த்துக் கொள்வார். இன்றைய இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஒன்றிணைந்துள்ளன. எது நடந்தாலும் அனைவருக்கும் இழப்புதான். அண்மைக் காலங்களில் கிட்டதட்ட 200 விவசாயிகள் உயிர் நீத்துள்ளனர். அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் மட்டுமே பலன் தரும் இதுபோன்ற வேளாண் சட்டங்களால் எங்களுக்கு ஒன்றுமில்லை.”

அன்றைய நாளுக்கான சூரியன் அஸ்தமிக்கும்போது ஐடிஓவில் இருந்து சில டிராக்டர்கள் எல்லைகளை நோக்கி புறப்பட்டன. தலைநகரமும் அதன் சுற்றுப்புற பகுதிகளும் பெருந்திரளான, அமைதியான, கொண்டாட்ட அணிவகுப்பையும், சோகமான, சீர்குலைக்கும், சண்டையையும் கண்டது.

தமிழில்: சவிதா

Shalini Singh

Shalini Singh is a founding trustee of the CounterMedia Trust that publishes PARI. A journalist based in Delhi, she writes on environment, gender and culture, and was a Nieman fellow for journalism at Harvard University, 2017-2018.

Other stories by Shalini Singh
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha