”கொரோனா கொள்ளை நோய் தொற்றத் தொடங்கியதிலிருந்து (கொச்சியா) தரகர் எங்கள் ஊருக்கு வருவதையே நிறுத்திவிட்டார்” என்கிற ஜமுனா பாய் மண்டவி, ” பூக்கூடைகளை வாங்கிச் செல்ல அவர் இங்கு வந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. அதனால் எங்களால்  எதையும் விற்கவும் முடியவில்லை; வேறு பொருள்களை வாங்கவும் எங்களிடம் பணம் இல்லை.” என வெதும்புகிறார்.

நான்கு குழந்தைகளுடன் தாயான ஜமுனா பாய், தம்தாரி மாவட்டத்தின் நாக்ரி வட்டாரம்,  கௌகபாரா கிராமத்தில் வாழ்ந்துவருகிறார். கிட்டத்தட்ட 40 வயதான இவர், கமர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். சத்திஸ்கரில் இந்த சமூகமானது, ’ பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட பழங்குடியினர் குழு (பிவிடிஜி)’ என மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றாகும். ஊரின் ஒரு மையத்தில் இவரின் குடும்பத்தைப் போல 36 கமர் குடும்பங்கள் இருக்கின்றன. ஜமுனாவைப் போலவே மற்ற எல்லாருமே சுற்றுப்புறக் காட்டுப் பகுதியிலிருந்து மூங்கில் எடுத்துவந்து, கூடைமுடைந்து அவற்றின் மூலம் வாழ்க்கைக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

ஜமுனா பாய் குறிப்பிடும் 'கொச்சியா' அவருக்கு மட்டுமின்றி கூடைமுடையும் மற்றவர்க்கும் மிகவும் முக்கியம். அவர்கள்(கொச்சியா) இடைத்தரகர்கள் அல்லது வணிகர்கள், வாரம்தோறும் கிராமத்துக்கு வந்து மொத்தமாக கூடைகளை வாங்கிச் செல்வார்கள். பிறகு, அவற்றை நகரச் சந்தைகளிலும் கிராமங்களில் அவ்வப்போது கூடும்  சந்தைகளிலிலும் சில்லறை விற்பனை முறையில் விற்பார்கள்.

கௌகபாராவுக்கு அவர்கள் கடைசியாக வந்துபோய் விரைவில் ஒரு மாதம் ஆகப்போகிறது. கோவிட் -19 ஊர்முடக்கத்துக்குப் பிறகு, இங்கு அவர்கள் வருவது இல்லை.

ஜமுனாவுக்கு நான்கு பிள்ளைகள் - இலாலேஸ்வரி, 12, ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை; துலேஷ்வரி, 8, லீலா, 6, மற்றும் இலக்மி, 4. அவருடைய இணையர் சியாராம் தன் 40-களின் நடுக்கட்டத்தில் இறந்துபோனார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததை அடுத்து, குழந்தைகளை வைத்துக்கொண்டு உயிர்வாழவே கடுமையாகப் போராடிவருகிறார், ஜமுனா. ஊர்முடக்கமானது அவர்களின் கூடைவிற்பனை வருமானத்தை மட்டுமன்றி, வேறு ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் பாதிக்கச் செய்துள்ளது.

இப்போது, உள்ளூர் அளவிலான மது தயாரிப்பதற்குப் பயன்படும் காட்டுப்பகுதி மகுவா மலர்களுக்கான பருவம் ஆகும். கையில் ஒன்றுமில்லாத காலங்களில் இங்குள்ள பழங்குடியினருக்கு இது ஒரு வருவாய் வழியாகும்.

Top row: Samara Bai and others from the Kamar community depend on forest produce like wild mushrooms and  taramind. Bottom left: The families of Kauhabahra earn much of their a living by weaving baskets; even children try their hand at it
PHOTO • Purusottam Thakur

இடது மேல்: கௌபகாராவில் சமரி பாய் (முன்புறம்) மற்றும் ஜமுனா பாய். வலது மேல்: சமரி பாய் தன் கொல்லையில் மகுவா பூக்களை நல்ல வெயிலில் காயவைக்கிறார். கீழே: முடக்கம் தொடங்கியதிலிருந்து ஜமுனா பாய் ஒரு கூடையைக்கூட விற்கவில்லை

"நகரத்தின் நிரந்தரச் சந்தைகளும் வாரம்தோறும் கூடும் சந்தைகளும் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருக்கின்றன. இதனால், நாங்கள் சேகரிக்கும் மகுவா பூக்களை [ஒரு நியாயமான விலைக்கு] விற்கவும் முடியாது. இதனால் ஏற்படும் பணப் பற்றாக்குறையால் தேவையான பொருள் எதையும் வாங்கமுடியாது.” என்கிறார், ஜமுனா பாய்.

இவருக்கு  கணவரை இழந்தவருக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை உடையவர். சத்திஸ்கரில்  மாதத்திற்கு இது 350 ரூபாய் வரும். ஆனால், ஜமுனா ஒருபோதும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பதிவுசெய்துகொள்ளவே இல்லை. எனவே, இவருக்கு அத்திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை.

சத்திஸ்கர் அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கான அரிசியை - இலவசமாக முழு ஒதுக்கீட்டு அளவையும் வழங்க தீவிர ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அவர்கள் 70 கிலோகிராம் அரிசியை (மாதத்துக்கு 35 கிகி) முன்கூட்டியே பெற்று இருக்கின்றனர். மேலும், நான்கு பொட்டலம் உப்பு (மாதத்துக்கு இரண்டு) இலவசமாகக் கிடைக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு சர்க்கரை போன்ற பிற பொருள்கள் மானிய விலையில் (ஒரு கிலோ ரூ .17) கிடைக்கின்றன. அதாவது, அதற்கு உரிய விலையைத் தந்தாக வேண்டும். இதுதான் ஜமுனா பாயின் குடும்பத்தை இப்போது ஓடவைத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால், வருமானம் என்பது முற்றிலுமாக நின்றுவிட்டது; எந்த அத்தியாவசிய பொருளையும் வாங்குவதற்கு பணமே இல்லை. அரசாங்கத் தரப்பிலான வழங்கல்களில் காய்கறிகள் இல்லை. பளிச்செனத் தெரியக்கூடிய சில ஏழைக் குடும்பங்களிடம் ரேசன் பங்கீட்டு அட்டைகள் இல்லை. இந்த நிலையில் ஊர்முடக்கமானது மேலும் நீட்டிக்கப்படுமானால் தனிமைப்படுத்தப்பட்ட இந்த ஊரில் வசிக்கும் கமர் இனக் குடும்பங்கள் அனைத்துக்கும் பாடு இன்னும் மோசமாகிவிடும்.

ஜமுனா பாயும் அவரின் குடும்பத்தினரும் மரத்தாலும் மண் சுவராலும் களிமண் ஓடுகளாலும் ஆன வீட்டில் வசிக்கின்றனர். அவரின் இணையர் வீட்டினரும் உடன் வசிக்கின்றனர். வீட்டின் பின்புறத்தில் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள்.(அவர்களிடம் ரேசன் பங்கீட்டு அட்டை இருக்கிறது).

"கூடை முடைந்தும் வன விளைபொருள்களைச் சேகரித்தும் விற்பதன் மூலம் எங்களுக்கான வாழ்வாதாரத்தை ஈட்டுகிறோம்" என்கிற அவரின் மாமியார் சமரி பாய், ”ஆனால், கொரோனா காரணமாக காட்டுக்குள் செல்லக்கூடாதென அதிகாரிகள் எங்களிடம் கூறியிருக்கிறார்கள். அதனால், நான் அந்தப்பக்கம் போகவில்லை. என் கணவர் மட்டும் கடந்த சில நாள்களாக மகுவா பூக்களைப் பறிக்கவும் சிறிது விறகுகளை எடுத்துவரவும் செய்கிறார்.” என்று கூறுகிறார்.

Left: Sunaram Kunjam sits alone in his mud home; he too is not receiving an old age pension. Right: Ghasiram Netam with his daughter and son; his wife was gathering mahua flowers from the forest – they are being forced to sell the mahua at very low rates
PHOTO • Purusottam Thakur

மேல்: சமாரா பாய் மற்றும் கமர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காட்டு காளான்கள் மற்றும் தரமிண்ட் போன்ற வன உற்பத்தியை நம்பியுள்ளனர். கீழ் இடது: கௌகாரபாராவில் உள்ள குடும்பங்கள் கூடைமுடைதல் மூலம்தான் பெரும்பகுதி வருவாயை ஈட்டுகின்றனர். சிறு பிள்ளைகளும் அதைச் செய்ய முயல்கின்றனர்

"மகுவா மலர்களை தினமும் சரியான நேரத்தில் பறித்து எடுக்காவிட்டால், விலங்குகள் அவற்றை  உண்டுவிடும் அல்லது மலர்கள் கெட்டுப்போய், வீணாகிவிடக் கூடும்”என்று கூறுகிறார், சமரி பாய். பழங்குடியினரின் ஒரு பணப் பயிராகக் கருதப்படும் மகுவா மலர், வாராந்திர சந்தைகளில் விற்கப்படுகிறது. கூடை முடைந்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர, இதனால் கிடைக்கும் பணம், அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குத் தேவையான அளவுக்கு இந்த வருவாய் அவர்களுக்கு குறிப்பிடும்படியானதாக உள்ளது.

“கடைசியாக கோச்சியா (தரகர்) இங்கு வந்தபோது, நான் அவரிடம் கூடைகளை விற்றதில் 300 ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையை வைத்துதான் எண்ணெய், மசாலாப் பொருள்கள், சோப்பு மற்றும் சில பொருள்களை வாங்கினேன். ஆனால், கொரோனா வந்ததிலிருந்து எங்களுடைய அத்தியாவசியப் பொருள்களின் செலவு இரட்டிப்பு ஆகிவிட்டது” என்று சமரி பாய் கூறினார்.

ஜமுனா பாயின் கணவர் சியரம் உள்பட சமரி பாயின் நான்கு பிள்ளைகளும் இறந்துவிட்டனர். அதைப் பற்றிப் பேசுகையில், அவர் மிகவும் உணர்ச்சிவயப்படுகிறார். எப்படியும் அவருக்கு 65 வயதுக்கு மேல்தான் இருக்கும் என்பது கண்கூடு; அவருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 350 வழங்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், அவருடைய பெயர் அதில் சேர்க்கப்படவும் இல்லை; அதனால் அவருக்கு அத்தொகை கிடைக்கவுமில்லை.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (உரிய பாலின விகிதம் 1025) இந்தியாவில் 26,530 கமர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 8,000 பேர், அருகிலுள்ள மாநிலமான ஒதிசாவிலும் வாழ்கின்றனர். அங்கு அவர்கள்  பழங்குடியினர் என்றே அங்கீகரிக்கப்படவில்லை. அதன் பிறகுதானே பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட பழங்குடியினர் குழு (பிவிடிஜி)’ என்பதெல்லாம்.

Left: Sunaram Kunjam sits alone in his mud home; he too is not receiving an old age pension.
PHOTO • Purusottam Thakur
Ghasiram Netam with his daughter and son; his wife was gathering mahua flowers from the forest – they are being forced to sell the mahua at very low rates
PHOTO • Purusottam Thakur

இடது: சுனரம் குஞ்சம் தன் மண் வீட்டில் தனியாக உட்கார்ந்திருக்கிறார்; அவருக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. வலது: தன் மகள், மகனுடன் காசிராம் நேத்தம்; அவரின் இணையர் காட்டிலிருந்து மகுவா பூக்களைப் பறித்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் அந்தப் பூக்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்

கௌகபாராவில் 65 வயதுக்கு மேற்பட்ட மற்றொரு முதியவரான சுனாரம் குஞ்சம், தானும் முதியோர் ஓய்வூதியத்தை இதுவரை பெறவில்லை என்கிறார். “ எனக்கு வயதாகிவிட்டதால், வலுவில்லாமல் எங்கும் வேலைசெய்ய இயலாத நிலை...என் மகனின் குடும்பத்தைச் சார்ந்துதான் வாழ்கிறேன்.” என்று தன் மண் குடிசைக்குள் நம்மிடம் கூறியவர், “ என் மகன் அன்றாடம் பண்ணையில் கூலிக்கு வேலைசெய்கிறான். இந்த சமயத்தில் வேலை இல்லை. ஆகையால்,  அவனும் என் மருமகளும் மகுவா பூக்களைப் பறித்துக்கொண்டுவர காட்டுக்குப் போயிருக்கிறார்கள்” என விவரித்தார்.

மகுவா மலர்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் பழங்குடியினர் உள்ளனர்; வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய நெருக்கடி நிலை. "இப்போதைக்கு பக்கத்து ஊர்களில் இருப்பவர்களிடம் எங்கள் கூடைகளை வாங்குவதற்கு பணம் இல்லை. இதனால், கூடைகள் முடைவதையே நிறுத்திவிட்டோம்" என்று கூறுகிறார், 35 வயதான காசிராம் நேத்தம். “ நானும் என் இணையரும் மகுவா மலர்களைப் பறித்துக்கொண்டு வருகிறோம். வாரச் சந்தைகள் மூடப்பட்டு இருப்பதால், பக்கத்தில் உள்ள கடையில் ஒரு கிலோவுக்கு 23 ரூபாய் எனும் கணக்கில் சுமார் 9 கிலோ மலர்களை விற்றோம்.இதுவே, வாரச்சந்தையில் என்றால் ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் கிடைக்கும்.” என்கிறார் காசிராம்.

காசிராமுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் மாயாவதி, 5 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கே போகவில்லை. அந்தப் பிள்ளை அப்படிச் செய்தது, அவருக்குப் பிடிக்கவில்லை. “ நானும் நிறைய முயற்சி செய்துவிட்டேன். ஆனால், பழங்குடி மாணவர்க்கான உண்டு, உறைவிடப் பள்ளி எதிலும் மாயாவதிக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகையால், அவள் மேற்கொண்டு படிப்பதை நிறுத்திவிட்டாள்.” என்கிறார், காசிராம். மாயாவதியைப் போன்ற மற்றவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படாததால் கல்விநிலையங்களுக்குள் செல்ல முடியவில்லை.

இந்த ஊர்க்காரர்கள்- ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வலுவிழந்து, வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். நிறைய சமூக சேவைகள் அல்லது நலத் திட்டங்களைப் பெறமுடியாமல் விலக்கப்பட்டு உள்ளனர்; இந்நிலையில், குறிப்பாக ஒரு கொள்ளைநோய்த் தாக்கத்தின்போது பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரக்  கண்ணியை ஊர்முடக்கமானது அறுத்துவிட்டது. ஆனாலும் பலரும் அதன் சிறிதளவு வாழ்வாதாரத்தையாவது மீட்டெடுக்க முயல்கின்றனர்; மகுவா மலர்களைப் பறித்துக்கொண்டுவர காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டனர்.

தமிழில்: தமிழ்கனல்

Purusottam Thakur

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker and is working with the Azim Premji Foundation, writing stories for social change.

Other stories by Purusottam Thakur
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal