நம்தியோ தராலே நிலத்தில் கால்பதித்ததும் நிதானம் கொள்கிறார். 48 வயது விவசாயி குனிந்து, மிதிக்கப்பட்டு உண்ணப்பட்டிருந்த பாசிப்பயறு செடிகளை உற்று பார்த்தார். பிப்ரவரி 2022-ன் குளிர் நிறைந்த அழகிய காலைப்பொழுது அது. சூரியன் வானில் மென்மையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“இது புது வகையான பஞ்சம்,” என்கிறார் அவர்.

தராலேவின் விரக்தி மற்றும் அச்சங்களை அந்த வாக்கியம் வெளிப்படுத்துகிறது. ஐந்து ஏக்கர் நிலம் கொண்ட விவசாயியான அவர், மூன்று மாத உழைப்பில் விளைந்திருக்கும் துவரை மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை இழந்துவிடும் கவலையில் இருக்கிறார். 25 வருடங்களுக்கும் மேற்பட்ட விவசாய அனுபவத்தில், அவர் பல்வேறு வகை பஞ்சங்களை கண்டிருக்கிறார். மழை பொய்த்தோ அல்லது அதிகமாக பெய்தோ நேரும் வானிலை பஞ்சங்கள்; நிலத்தடி நீர் குறைந்து நேரும் நீராதாரப் பஞ்சங்கள்; மண்ணின் ஈரப்பதத்தால் விளைச்சல் பொய்க்கும் வேளாண் பஞ்சங்கள்.

நல்ல விளைச்சல் என கருதும்போதே, நான்கு கால் விலங்குகளாலோ நிலத்தின் மீது பறப்பவைகளாலோ அது அழிந்து போய்விடுகிறது என எரிச்சலுடன் கூறுகிறார் தராலே.

”பகலில் நீர்க்கோழிகளும், குரங்குகளும் முயல்களும்; மான்களும் காட்டுப்பன்றிகளும் புலிகளும் இரவில்,” என்கிறார் அவர் பிரச்சனைகளை பட்டியலிட்டு.

“எங்களுக்கு விதைக்க தெரியும். பயிரை பாதுகாக்க தெரியாது,” என்கிறார் அவர் தோற்றுப் போன தொனியில். வழக்கமாக பாசிப்பயறு, சோளம், துவரை போன்றவறையும் பஞ்சு மற்றும் சோயாபீன் போன்ற பணப்பயிரையும் அவர் விளைவிக்கிறார்.

Namdeo Tarale of Dhamani village in Chandrapur district likens the wild animal menace to a new kind of drought, one that arrives on four legs and flattens his crop
PHOTO • Jaideep Hardikar
Namdeo Tarale of Dhamani village in Chandrapur district likens the wild animal menace to a new kind of drought, one that arrives on four legs and flattens his crop
PHOTO • Jaideep Hardikar

சந்திரப்பூர் மாவட்ட தமானி கிராமத்தின் நம்தியோ தராலே, விலங்குகள் விளைவிக்கும் ஆபத்தை நான்கு கால்களில் வந்து பயிரை அழிக்கும் புதுவகை பஞ்சம் எனக் குறிப்பிடுகிறார்

Farmer Gopal Bonde in Chaprala village says, ''When I go to bed at night, I worry I may not see my crop the next morning.'
PHOTO • Jaideep Hardikar
Bonde inspecting his farm which is ready for winter sowing
PHOTO • Jaideep Hardikar

இடது: சப்ரலா கிராமத்தின் விவசாயி கோபால் போண்டே சொல்கையில், 'இரவில் உறங்கச் செல்லும்போது அடுத்த நாள் காலை பயிரை பார்க்க முடியாமல் போகலாமென கவலை கொள்வேன்,’ என்கிறார். வலது: குளிர்கால விதைப்புக்கு தயாராக இருக்கும் நிலத்தை ஆய்வு செய்யும் போண்டே

காடுகளும் கனிமங்களும் மிகுந்த மகாராஷ்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள தமானி கிராமத்தில், கோபம் கொண்டிருக்கும் விவசாயி தராலே மட்டுமல்ல. இம்மாவட்டத்தின் ததோபா அந்தாரி புலிகள் சரணாலயம் (TATR) சுற்றியிருக்கும் கிராமங்களிலும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் வசிக்கும் விவசாயிகளையும் இதே வகை விரக்தி பீடித்துக் கொண்டிருக்கிறது.

தராலேவின் நிலத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சப்ராலா கிராமத்தில் (2011 கணக்கெடுப்பின்படி சிப்ராலா) வசிக்கும் 40 வயது கோபால் போண்டேவும் கலக்கத்தில் இருக்கிறார். 2022ம் ஆண்டின் பிப்ரவரி நடுவில், அவரது 10 ஏக்கர் நிலத்தில் கடும் பேரழிவு நேர்ந்தது. பாதிக்கு மேல் பாசிப்பயறு விதைக்கப்பட்டிருந்தது. பயிர் நசுக்கப்பட்டிருந்தது. வன்மத்துடன் மேலே யாரோ உருண்டு பயிரை பிடுங்கி, பீன்ஸை விழுங்கி, நிலத்தை நாசமாக்கியிருந்தது போலிருந்தது.

“இரவில் உறங்க செல்லும்போது அடுத்த நாள் பயிரை பார்க்க முடியுமா என கவலை கொள்கிறேன்,” என்கிறார் போண்டே ஜனவரி 2023-ல். நாங்கள் முதன்முதலாக சந்தித்து ஒரு வருடத்துக்கு பிறகு. எனவே அவர் இரவுப்பொழுதில் இரண்டொரு தடவை மழையிலும் குளிரிலும் நிலத்துக்கு பைக்கில் சென்று பார்க்கிறார். நீண்ட நேரத்துக்கு தூக்கமின்றி இருப்பதாலும் குளிராலும் அடிக்கடி அவர் நோய்வாய்ப்படுகிறார். கோடைகாலத்தை போல் பயிர் இல்லாதபோது அவர் வழக்கத்தை நிறுத்துகிறார். மிச்ச நேரங்களில் இரவு ரோந்து அவர் செல்ல வேண்டியிருக்கிறது, குறிப்பாக அறுவடைக் காலத்தில் என்கிறார் அவர் ஒரு குளிர்கால காலையில் வீட்டுக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.

காட்டு விலங்குகள் வருடம் முழுக்க நிலத்தில்தான் உணவை எடுத்துக் கொள்கிறது. குளிர்காலத்தில் நிலம் பசுமையாக இருக்கும்போதும் மழைக்காலத்திலும் வளரும் பயிரை உண்கின்றன. கோடைகாலத்தில், நிலங்களில் இருக்கும் நீர் உட்பட எல்லாவற்றையும் அவை சூறையாடி விடுகின்றன.

எனவே போண்டே காட்டு விலங்குகளை “இரவு நேரத்தில் அவர் சுறுசுறுப்பாக இருக்கும்போது” எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பயிர்களை அவை அழித்தால் நாளொன்றுக்கு “சில ஆயிரம் ரூபாயை அன்றாடம்” அவர் இழக்க வேண்டியிருக்கும். பதுங்கி வரும் காட்டுப் பூனைகள் கால்நடைகளையும் கொன்று விடும். பத்தாண்டுகளில் அவர் கிட்டத்தட்ட இரண்டு டஜன் மாடுகளை புலி - சிறுத்தை தாக்குதகளில் இழந்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவரது கிராமம், சராசரியாக 20 கால்நடைகளை புலி தாக்குதல்களால் இழப்பதாக சொல்கிறார். இன்னும் மோசமாக, அவற்றின் தாக்குதல்களில் பல மக்களும் காயமடைகின்றனர். இறந்து கூட போகின்றனர்.

The thickly forested road along the northern fringes of the Tadoba Andhari Tiger Reseve has plenty of wild boars that are a menace for farmers in the area
PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

ததோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தின் வடக்கு பக்கம் இருக்கும் அடர்ந்த காட்டு சாலைப்பகுதியில் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல காட்டுப் பன்றிகள் உண்டு

மகாராஷ்டிராவின் பழமையான பெரிய தேசியப் பூங்காக்கள் மற்றும் வன உயிர் காப்பகம் ஆகியவற்றில் ஒன்றான ததோபா தேசியப் பூங்காவை, சந்திரப்பூர் மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் 1,727 சதுர கிலோமீட்டர் பரந்திருக்கும் அந்தாரி வன உயிர் சரணாலயத்துடன் TATR இணைத்திருக்கிறது. மனித-விலங்கு மோதல் நேரும் முக்கியமான தளம் அப்பகுதி. TATR இருக்கும் மத்திய இந்திய நிலப்பரப்பின் புலிகள் எண்ணிக்கை 2018ம் ஆண்டு இருந்த 1,033-லிருந்து அதிகரித்து 1,161 புலிகள் படம்பிடிக்கப்பட்டிருப்பதாக NTCA 2022 அறிக்கை குறிப்பிடுகிறது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) 2018ம் ஆண்டு அறிக்கையின்படி  மாநிலத்தின் 315க்கும் மேற்பட்ட புலிகளில் 82 ததோபாவில் இருக்கிறது.

இப்பகுதியில் விதர்பா வரை இருக்கும் கிராமங்களில் தராலே அல்லது போண்டே போன்ற, விவசாயத்தை தவிர வேறு வருமானங்கள் இல்லாதவர்கள், காட்டு விலங்குகளை விரட்ட பயங்கரமான உத்திகளை முயலுகின்றனர். சூரிய பேட்டரி மின்சாரத்தில் ஷாக் அடிக்கும் வகையில் வேலிகள் கட்டப்படுகின்றன. விலை மலிவான, வண்ணமயமான நைலான் புடவைகள் நிலங்களை சுற்றியும் காடுகளை சுற்றியும் கூட கட்டப்படுகின்றன.  பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. நாய்கள் நிறுத்தப்படுகின்றன. நவீன சீன உபகரணங்களை கொண்டு விலங்கு சத்தங்கள் எழுப்பப்படுகின்றன.

தீர்வுதான் இல்லை.

போண்டேவின் சப்ரலா மற்றும் தாரலேவின் தாமனி கிராமங்கள் TATR-ன் இலையுதிர் காட்டுக்கு அருகே அமைந்திருக்கிறது. இது, இந்தியாவின் முக்கியமான புலிகள் பாதுகாப்பு பகுதியும் சுற்றுலா தளமும் ஆகும். பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியின் மையத்துக்கு அருகே இருப்பதால், காட்டு விலங்குகளின் தாக்குதலால் அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் இருக்கும் மனித வசிப்பிடம் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியின் மையத்தை சுற்றி அமைந்திருக்கிறது. மையப்பகுதியில் மனித நடமாட்டம் அனுமதியில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது.

In Dhamani village, fields where jowar and green gram crops were devoured by wild animals.
PHOTO • Jaideep Hardikar
Here in Kholdoda village,  small farmer Vithoba Kannaka has used sarees to mark his boundary with the forest
PHOTO • Jaideep Hardikar

இடது: தாமனி கிராமத்தில் சோளம் மற்றும் பாசிப்பயறு பயிர்கள் காட்டு விலங்குகளால் அழிக்கப்பட்டன. வலது: இங்கு கோல்தோதா கிராமத்தில், சிறு விவசாயியான விதோபா கன்னகா புடவைகளை கொண்டு காட்டுக்கும் நிலத்துக்கும் எல்லை வகுத்திருக்கிறார்

Mahadev Umre, 37, is standing next to a battery-powered alarm which emits human and animal sounds to frighten raiding wild animals.
PHOTO • Jaideep Hardikar
Dami is a trained dog and can fight wild boars
PHOTO • Jaideep Hardikar

இடது: 37 வயது மகாதேவ் உம்ரே, வன விலங்குகளை பயமுறுத்த மனிதர் மற்றும் விலங்குகள் சத்தம் எழுப்பும் பேட்டரி மின்சார அலாரத்துக்கு அருகே நிற்கிறார். வலது: பயிற்சி பெற்ற நாய், தாமி. காட்டுப்பன்றிகளுடன் சண்டை போடக் கூடியது

சந்திரப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை கொண்ட விதர்பா இருக்கும் கிழக்கு மகாராஷ்டிரா பகுதியில் நிலைமை அபாயகரமாகவே இருக்கிறது. இந்தியாவில் புலிகளும் வனவிலங்குகளும் கொண்டு, மிச்சமிருக்கும் பாதுகாப்பு காடுகளில் சில விதர்பாவில் இருக்கின்றன. அப்பகுதியில் கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. கிராமப்புறத்தில் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவின் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்காந்திவாரின் அறிக்கையின்படி, 2022ம் ஆண்டில் மட்டும் சந்திரப்பூர் மாவட்டத்தில் புலிகளும் சிறுத்தைகளும் தாக்கி பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக பதிவாகி இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் TATR பகுதியில் கிட்டத்தட்ட 2000 பேர், காட்டு விலங்குகள் தாக்கி இறந்திருக்கின்றனர். அதிகமாக புலிகளும் கரடிகளும் காட்டுப் பன்றிகளும் பிற விலங்குகளும் தாக்கியிருக்கின்றன. மனிதர்களை தாக்கும் குறைந்தபட்சம் 30 ‘தனிப் புலிகள்’ சமாளிக்கப்பட வேண்டும் என்கிற தரவு, மனித - புலி மோதல் சம்பவத்துக்கான பிரதான இடமாக சந்திரப்பூர் இருப்பதற்கான ஆதாரமாக இருக்கிறது. விலங்கு தாக்குதல்களில் இறந்தோருக்கான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏதுமில்லை.

வனவிலங்குகளை ஆண்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை, பெண்களும் எதிர்கொள்கின்றனர்.

“அச்சத்துடன் வேலை பார்க்கிறோம்,” என்கிறார் நாக்பூர் மாவட்ட பெல்லார்பூர் கிராமத்தை சேர்ந்த அர்ச்சனாபாய் கெயிக்வாட். அவர் ஐம்பது வயதுகளில் இருப்பார். நிலத்தில் பல முறை அவர் புலியை பார்த்திருக்கிறார். “வழக்கமாக நாங்கள் புலியோ சிறுத்தையோ இருப்பது போல் தெரிந்தால், நிலங்களிலிருந்து வெளியேறி விடுவோம்,” என்கிறார் அவர்.

*****

“நிலத்தில் பிளாஸ்டிக் இருந்தாலும் அவை (காட்டு விலங்குகள்) உண்டு விடும்!”

கோண்டியா, புல்தானா, பந்தாரா, நாக்பூர், வர்தா, வாஷிம் மற்றும் யவாத்மால் ஆகிய இடங்களை சேர்ந்த விவசாயிகளுடன் மேலோட்டமாக தொடங்கிய உரையாடல் ஆழ்ந்து நீண்டது. விதர்பா முழுக்க பயணித்த கட்டுரையாளரிடம் பேசுகையில் அவர்கள், இப்போதெல்லாம் பருத்திப் பழங்களை காட்டு விலங்குகள் சாப்பிடுகின்றன என கூறுகின்றனர்.

Madhukar Dhotare, Gulab Randhayee, and Prakash Gaikwad (seated from left to right) are small and marginal farmers from the Mana tribe in Bellarpar village of Nagpur district. This is how they must spend their nights to keep vigil against wild boars, monkeys, and other animals.
PHOTO • Jaideep Hardikar
Vasudev Narayan Bhogekar, 50, of Chandrapur district is reeling under crop losses caused by wild animals
PHOTO • Jaideep Hardikar

இடது: நாக்பூரின் பெல்லார்பூர் கிராமத்தின் மனா பழங்குடியினக் குழுவை சார்ந்த சிறு விவசாயிகளான (இடமிருந்து வலம்) மதுகர் தோடாரே, குலாப் ரந்தாயி மற்றும் பிரகாஷ் கெயிக்வாட். காட்டுப் பன்றிகள், குரங்குகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியவற்றிடமிருந்து விவசாயத்தை காக்க இப்படித்தான் அவர்கள் இரவை கழிக்க வேண்டியிருக்கிறது. வலது: சந்திராப்பூரை சேர்ந்த 50 வயது நாராயண் போகேகர் காட்டு விலங்குகள் ஏற்படுத்திய பயிர் நஷ்டங்களில் உழலுகிறார்

“அறுவடைக்காலத்தில் நாங்கள் ஒன்றும் செய்யாமல், உயிருக்கே ஆபத்து நேரும் சாத்தியம் இருந்தாலும் பொருட்படுத்தாமல், இரவு பகலாக பயிரை காக்க நிலங்களில் இருப்போம்,” என்கிறார் நாக்பூர் மாவட்டத்தின் சிறு கிராமமான பெல்லார்பூரின் மனா சமூகத்தை சேர்ந்த 50 வயது பிரகாஷ் கெயிக்வாட்.

“நோய்வாய்ப்பட்டாலும் நாங்கள் நிலத்தில் தங்கி எங்களின் பயிர்களை காக்க வேண்டும். இல்லையெனில் அறுவடை செய்ய முடியாது,” என்கிறார் கோபால் போண்டே வசிக்கும் சப்ரலாவை சேர்ந்த 77 வயது தத்துஜி தஜானே. “அச்சமின்றி என் நிலத்தில் நான் தூங்கிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அது இல்லை. எல்லா இடங்களிலும் காட்டு விலங்குகள் வந்துவிட்டன.”

கடந்த பத்து ஆண்டுகளில் கால்வாய்கள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகள் வழியாக நீர்ப்பாசனம் கிராமங்களில் மேம்பட்டதை தராலேவும் போண்டேவும் பார்த்திருக்கின்றனர். இதனால் பாரம்பரியமாக விதைத்து வந்த பருத்தி மற்றும் சோயாபீன்ஸை தாண்டி இரண்டு அல்லது மூன்று பயிர்களை வருடந்தோறும் பயிரிட அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு எதிர்ப்பக்கமும் இருந்தது. நிற்கும் பயிர்களுடன் கூடிய பசுமை வயல்கள், சைவப்பட்சிணிகளான மான்கள், எருதுகள் போன்றவற்றுக்கு தீவனமாகும் வாய்ப்பு உண்டு. சைவப்பட்சிணிகள் வந்தால், சுற்றுவட்டாரத்தில் அசைவப்பட்சிணிகளும் வரத் தொடங்கும்.

”ஒருநாள்,” தராலே நினைவுகூருகிறார், “குரங்குகளாலும் காட்டுப்பன்றிகளாலும் பாதிப்படைந்தேன். இரண்டுமே என்னை சோதிக்க வந்ததை போல் இருந்தது. இரண்டு விலங்குகளும் என்னை சீண்டி பார்ப்பதை போல் இருந்தது,” என.

செப்டம்பர் 2022-ல் ஒருநாள், கையில் ஒரு மூங்கில் தடியுடன், சோயாபீன்ஸ், பருத்தி மற்றும் பிற பயிர்கள் முளை விட்டுக் கொண்டிருக்கும் வயலை சுற்றிக் காட்ட நம்மை அழைத்து செல்கிறார் போண்டே. வீட்டிலிருந்து இரண்டு - மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வயலுக்கு செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆகும். வயலின் முனையில் காட்டிலிருந்து பிரிக்கும் வகையில் ஓர் ஆறு. காடு அடர்ந்து அமைதியாக இருக்கிறது.

Gopal Bonde’s farms bear tell-tale pug marks of wild animals that have wandered in – rabbits, wild boar and deer
PHOTO • Jaideep Hardikar
Gopal Bonde’s farms bear tell-tale pug marks of wild animals that have wandered in – rabbits, wild boar and deer
PHOTO • Jaideep Hardikar

கோபால் போண்டேவின் வயல்கள் முயல், காட்டுப்பன்றி, மான்கள் போன்ற விலங்குகளின் கால் தடங்களை கொண்டிருக்கின்றன

வயலில் நடந்தபடி கிட்டத்தட்ட ஒரு டஜன் விலங்குகளின் கால்தடங்களை ஈர மண்ணில் நமக்கு காட்டுகிறார். உண்டு, கழிந்து சோயாபீன்ஸை பிய்த்து, முளை விட்ட பயிரை பிடுங்கி அவை எறிந்திருக்கின்றன.

“இப்போது சொல்லுங்கள், என்ன செய்வது!”, பெருமூச்செறிகிறார் போண்டே.

*****

ததோபாவின் காடுகள் ஒன்றிய அரசின் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பிரதான பகுதியாக இருந்தாலும் அப்பகுதியில் நெடுஞ்சாலைகளும் நீர்ப்பாசன கால்வாய்களும் புதிய சுரங்கங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்குள்ளும் உருவாகி, மக்களை வெளியேற்றி, காட்டின் சூழலியலை பாதித்திருக்கிறது.

புலிகளின் எல்லையாக கருதப்பட்ட பகுதியில் சுரங்கங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சந்திரப்பூர் மாவட்டத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 30 பொது மற்றும் தனியார்துறை நிலக்கரி சுரங்கங்களில் இரண்டு டஜன்கள் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த இருபதாண்டுகளில் வந்திருக்கின்றன.

“நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சந்திரப்பூர் அனல் மின் நிலைய (CSTPS) வளாகம் உள்ள பகுதிகளில் புலிகள் தட்டுப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளில்தான் சமீபத்திய மனித - விலங்கு மோதல் சம்பவங்களும் நேர்ந்திருக்கின்றன. அவற்றின் வசிப்பிடத்தை நாம் ஆக்கிரமித்திருக்கிறோம்,” என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பாந்து தோத்ரே. புலிகள் பற்றிய தரவுகள் கொண்ட NTCA 2022 அறிக்கையின்படி, மத்திய இந்திய நிலப்பரப்புகளில் அதிகரிக்கும் சுரங்கப் பணிகள், பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருக்குமென குறிப்பிடுகிறது.

இந்தியாவின் மத்திய இந்திய காட்டு நிலப்பரப்பில் TATR-ம் இடம்பெற்றிருக்கிறது. அதன் அருகாமை காட்டுப் பிரிவுகள் யாவத்மால், நாக்பூர் மற்றும் பந்தாரா மாவட்டங்களில் இருக்கின்றன. “இப்பகுதியில்தான் மனித - புலி மோதல்கள் அதிகம்,” என்கிறது 2018 NTCA அறிக்கை.

Namdeo Tarale with Meghraj Ladke, a farmer from Dhamani village. Ladke, 41, stopped nightly vigils after confronting a wild boar on his farm.
PHOTO • Jaideep Hardikar
Farmers in Morwa village inspect their fields and discuss widespread losses caused by tigers, black bears, wild boars, deer, nilgai and sambar
PHOTO • Jaideep Hardikar

நம்தியோ தராலே (வலது) தமானி கிராமத்தை சேர்ந்த மேக்ராஜ் லட்கே என்கிற விவசாயியுடன். 41 வயது லட்கே, வயலில் காட்டுப்பன்றியை எதிர்கொண்ட பிறகு இரவு ரோந்துகளை நிறுத்தி விட்டார். வலது: மோர்வா கிராம விவசாயிகள் தங்களின் நிலங்களை கண்காணித்து புலிகள், கரடிகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகியவற்றால் பரவலாக ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள் குறித்து பேசுகின்றனர்

“இப்பிரச்சினை, தேசிய அளவில் பெரும் பொருளாதார விளைவுகளை விவசாயிகளுக்கும் அரசின் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் ஏற்படுத்துகிறது,” என்கிறார் வனவிலங்கு உயிரியலாளரும் புனேவின் இந்திய அறிவியல் படிப்பு மற்றும் ஆய்வு நிறுவன (IISER) முன்னாள் பேராசிரியருமான டாக்டர் மிலிந்த் வாத்வே.

காப்புக் காடுகளையும் வன உயிர்களையும் சட்டங்கள் பாதுகாக்கின்றன. ஆனால் பயிர் மற்றும் கால்நடை நஷ்டங்களை விவசாயிகள் சுமக்க வேண்டியிருக்கிறது. விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர் சேதங்கள் விவசாயிகளை வெறுப்பு கொள்ள வைத்து, பாதுகாப்பு முயற்சிகளை தீவிரமாக பாதிக்க வைக்கிறது என வாத்வே விளக்குகிறார். மந்தையில் நீடிக்க முடியாத, இனவிருத்தி செய்ய இயலாத விலங்குகளை கொல்வதற்கும் சட்டங்கள் தடை விதித்திருக்கின்றன.

TATR சுற்றியிருக்கும் ஐந்து கிராமங்களின் 75 விவசாயிகளுடன் 2015 முதல் 2018 வரை வாத்வே கள ஆய்வு மேற்கொண்டார். விதர்பா மேம்பாட்டு வாரியத்தின் நிதியில் நடத்தப்பட்ட ஆய்வில், விலங்கு தாக்குதல்களால் வருடம் முழுக்க ஏற்பட்ட நஷ்டங்களை விரிவாக விவசாயிகள் பதிவு செய்யும் வண்ணம் ஒரு முறையை உருவாக்கினார். பயிர் நஷ்டமும் பொருளாதார பாதிப்புகளும் 50லிருந்து 100 சதவிகிதம் வரை இருக்குமென அவர் கணிக்கிறார். பயிரை சார்ந்து ஒரு ஏக்கருக்கு 25,000-லிருந்து 1,00,000 ரூபாய் வரை ஒரு வருடத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

நிவாரணம் வழங்கப்படாமல், பல விவசாயிகள் சில பயிர் வகைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். அல்லது நிலத்தை விதைக்காமல் விட்டுவிடுகின்றனர்.

மாநில வனத்துறை வருடந்தோறும் விவசாயிகளுக்கு பயிர் சேதங்களுக்காகவும் காட்டு விலங்குகள் பலி கொண்ட கால்நடைகளுக்காகவும் நிவாரணமாக 80 கோடி ரூபாய் வழங்குகிறது. இப்படித்தான் 2022 மார்ச் மாதத்தில் ம்காராஷ்டிராவின் முதன்மை காடுகள் பாதுகாப்பு அலுவலராக இருந்த சுனில் லிமாயே பாரியிடம் தெரிவித்தார்.

Badkhal says that farmers usually don’t claim compensation because the process is cumbersome
PHOTO • Jaideep Hardikar
Gopal Bonde (right) with Vitthal Badkhal (middle) who has been trying to mobilise farmers on the issue. Bonde filed compensation claims about 25 times in 2022 after wild animals damaged his farm.
PHOTO • Jaideep Hardikar

கோபால் போண்டே (வலது) இப்பிரச்சினைக்காக விவசாயிகளை திரட்டும் முயற்சியில் இருக்கும் வித்தால் பத்காலோடு (நடுவே). போண்டே 2022ல் காட்டு விலங்குகள் அவரின் வயலை சேதப்படுத்தியபின் 25 முறை நிவாரணம் கேட்டு பதிவு செய்தார். நிவாரணத்துக்கான முறை குழப்பமாக இருக்குமென்பதால் பல விவசாயிகள் நிவாரணம் கோருவதில்லை என்கிறார் பத்கால்

“தற்போதைய ரொக்க நிவாரணம் வெறும் வேர்க்கடலை போலத்தான் இருக்கிறது,” என்கிறார் 70 வயதுகளில் இருக்கும் வித்தால் பத்கல். பத்ராவதி தாலுகாவை சேர்ந்த அவர், இப்பிரச்சினைக்காக விவசாயிகளை திரட்ட ஊர்வலம் செல்கிறார். “குழப்பமான முறைகளை கொண்டு தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருப்பதால் விவசாயிகள் பொதுவாக நிவாரணம் கேட்பதில்லை,” என விளக்குகிறார் அவர்.

மாடு உட்பட இன்னும் பல கால்நடைகளை போண்டே சில மாதங்களுக்கு முன் இழந்தார். 25 முறை 2022-ல் அவர் நிவாரணம் கேட்டு பதிவு செய்தார். ஒவ்வொரு முறையும் அவர் படிவம் நிரப்ப வேண்டும். உள்ளூர் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல வேண்டும். கள ஆய்வு மேற்கொள்ள உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். செலவு ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். நிவாரணம் கோரி செய்த பதிவுகளை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். நிவாரணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும் என்கிறார் அவர். “எல்லா நஷ்டங்களுக்கும் அந்த பணம் போதாது.”

டிசம்பர் 2022-ல் ஒரு குளிர்காலையின்போது போண்டே, பாசிப்பயறு விதைக்கப்பட்ட அவரின் பசிய வயலுக்கு அழைத்து சென்றார். முளை விட்டிருந்த பயிர்களை காட்டுப் பன்றிகள் உண்டிருந்தன. விளைச்சல் என்னவாகுமென போண்டேவுக்கு உறுதியாக தெரியவில்லை.

பிறகு வந்த மாதங்களில் பயிரின் பெரும்பானவற்றை அவரால் மீட்க முடிந்தது. சில பகுதிகள் மட்டும் மான்களால் அழிக்கப்பட்டிருந்தன.

விலங்குகளுக்கு உணவு தேவை. போண்டே, தராலே போன்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கும் உணவு தேவை. வயல்களில்தான் இரண்டு தேவைகளும் மோதுகின்றன.

தமிழில் : ராஜசங்கீதன்

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Editor : Urvashi Sarkar

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan