ஒக்லாவில் அரை டஜன் தாபாக்களும் காலியாகவே உள்ளன. தீரஜ் ஜிம்வால் தாபாவில் கூட நவம்பர் 8 பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு சில ஜீப்புகளே வருகின்றன. உத்தராகண்டின் பித்தோராகர், தார்ச்சுலா இடையில், இந்திய நேபாள எல்லையிலிருந்து 21 கிலோமீட்டருக்கு குறைவான இடத்தில் ஒக்லா உள்ளது. இப்பாதையில் செல்லும் வாகனங்கள் பொதுவாக ஓய்விற்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் இங்குள்ள தாபாக்களில் நின்றுச் செல்லும்.

“நாங்கள் உணவு உற்பத்தியை குறைத்துள்ளோம். இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதில்லை,” என்கிறார் ஜிம்வால். அவருக்கு சொந்தமான தாபா மற்றும் மளிகைக் கடையிலிருந்து கிடைத்து வந்த ரூ.20,000 வருவாய், மூன்றில் ஒரு பங்கு என சரிந்துவிட்டது. “ஒரு மாதம் ஆகிறது, எங்களுக்கு ரூ.7000 தான் கிடைக்கிறது,” என்கிறார். “நாங்கள் நினைத்தாலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாது. சார்மா வங்கியில் எளிதில் அவற்றை பரிமாற்றம் செய்ய முடியாது. பெரும் தொகையிலான நோட்டுகளை எடுத்துச் சென்றால், வங்கியில் 2,000 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுக்கின்றனர்! என் தாபாவிற்கு வரும் மக்களிடம் எப்படி என்னால் பழைய ரூபாய் நோட்டைப் பெற முடியும்? ”

PHOTO • Arpita Chakrabarty

'…இப்போதெல்லாம்[பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு]வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதில்லை,' என்கிறார் ஒக்லாவில் உள்ள தாபா உரிமையாளரான தீரஜ் ஜிம்வால்

தார்ச்சுலாவிற்கு ஜீப்பில் செல்லும் போது ஒக்லா, ஜால்ஜிபியை கடந்து செல்ல வேண்டும். ஓட்டுநர் ஹரிஷ் சிங் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்கிறார். அதைக் கொண்டு அவர் பிதோராகர் பெட்ரோல் நிலையத்தில் ஜீப்பிற்கு எரிபொருள் நிரப்பிக் கொள்கிறார்.“வங்கிகளில் பணமில்லை என்பதால் பலரும் பயணம் செய்வதில்லை,” என்கிறார் அவர். “இருக்கும் பணத்தில் மக்கள் முதலில் உணவுப் பொருட்களை வாங்குவார்களா, பயணம் செய்வார்களா?”

இந்தியா மற்றும் நேபாள எல்லையில் கோரி மற்றும் காளி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான  ஜால்ஜிபி சந்தைக்கான நேரமும் இதுதான். நவம்பர் 14-23ஆம் தேதி வரையிலான சந்தை அப்பகுதி மக்களுக்கு முக்கியமான நிகழ்வு. ஜால்ஜிபிக்கு என வளமையான வணிக வரலாறு உள்ளது. கீழ் பள்ளத்தாக்குகளில் விவசாயிகளிடம் வாங்கும் தானியங்களுக்கு தங்களது சரக்குகளை மாற்றுவதற்கு இந்தியா, நேபாளம், திபெத்திலிருந்து கூட வணிகர்கள் இங்கு வந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்தில் இருக்கும் இமய மலைகளின் மூலிகைகள், மசாலாக்களை சிலர் விற்கின்றனர். சில வணிகர்கள் நேபாளத்திலிருந்து உயர்ரக குதிரைகள், கழுதைகளை கொண்டு வந்து இங்கு விற்கின்றனர். காலப்போக்கில் சந்தைக்கு மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்திலிருந்தும் வணிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜால்ஜிபி சந்தை களையிழந்துள்ளது. 350 கடைகள் இருந்தும் வாடிக்கையாளர்கள் சொற்பமாகவே வந்துள்ளனர். “என் குடும்பத்திற்கு துணிகள், பிற பொருட்களை வாங்குவதற்கு இச்சந்தைக்கு வர நினைத்தேன். என்னிடம் நாணயங்கள் மட்டுமே உள்ளன. அவர்களிடம் எப்படி கொடுக்க முடியும்?” என கேட்கிறார் ஜிம்வால்.

PHOTO • Arpita Chakrabarty

பொதுவாக பரபரப்பாக இருக்கு ஜால்ஜிபி சந்தை இந்த ஆண்டு வரவேற்பின்றி உள்ளது. வலது: 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலிருந்து சந்தைக்கு வந்து வியாபாரமின்றி ஏமாற்றமடைந்துள்ள இயாசின், கடனை திருப்பி செலுத்துவது குறித்து எண்ணிக் கொண்டிருக்கிறார்

உத்தராகண்டின் உத்தம் சிங் நகர் மாவட்ட பாஜ்பூர் நகரிலிருந்து இச்சந்தைக்கு இயாசின் வந்துள்ளார். திரைச்சீலைகள், சோஃபா உறைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை 10 நாள் நிகழ்வில் விற்று ரூ.60,000 வரை சம்பாதிப்பார். ஆனால் இந்த ஆண்டு ரூ.20,000 மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது. “எனக்கு கடன் உள்ளது. வியாபாரம் இங்கு நன்றாக இல்லாமல் போனால் என்ன செய்வது?” என்கிறார் அவர் ஏமாற்றத்துடன்.

கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் உள்ள சால் கிராமத்திலிருந்து வந்துள்ளார் கியான் சிங் தர்யால். அவரது கடையில் இமயமலை மூலிகைகள், மசாலாக்கள், அதிக உயரத்தில் கிடைக்கும் கருப்பு பஹாடி ரஜ்மா போன்றவற்றை வியாபாரம் செய்கிறார். நவம்பர் முதல் ஏப்ரல் வரை தார்யால் குடும்பம் தார்ச்சுலாவில் வசிக்கின்றனர். கோடை காலத்தில் சால் செல்லும் அவர்கள், மூலிகைகளையும் மசாலாக்களையும் பயிரிட்டு சேகரிக்கின்றனர். தங்கள் நிலத்தில் விளையும் பெரும்பாலானவற்றை அவர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கின்றனர். “மூலிகைகள், மசாலாக்களை விற்றால் பணம் கிடைக்கும்,” என்கிறார் அவர். “முழு குடும்பமும் மூலிகை சேகரிப்பில் ஈடுபடுகிறோம். எங்கள் கடின உழைப்பிற்கு ஜால்ஜிபி நல்ல பரிசை அள்ளித் தரும்.”

இந்த ஆண்டு தர்யாலின் வியாபாரம் கடுமையாக சரிந்துவிட்டது. “சந்தைக்கு பலரும் வரவில்லை,” என்கிறார் அவர். தர்யாலுக்கு நிரந்தரமான கடை கிடையாது. ஜால்ஜிபி, முன்சியாரி, பாகேஸ்வரில் (அனைத்தும் உத்தராகண்டில் உள்ளது) அவர் கடை வைக்கிறார். அதன் மூலம் அவர் பணம் பெறுகிறார். அந்த வாய்ப்பை பணமதிப்பு நீக்கம் பறித்துவிட்டதாக அவர் சொல்கிறார்.

அர்ச்சனா சிங் குஜ்ஜிவாலும் சந்தைக்கு வந்துள்ளார். இவர் 10,370 அடி உயரத்தில் உள்ள குஜ்ஜி கிராமத்தின் தலைவர். இவர் ஜால்ஜிபியில் விற்பதற்காக சீனாவில் 12,940 அடி உயரத்தில் அமைந்துள்ள தக்லாகோட் மண்டியிலிருந்து கதகதப்பு ஆடைகள், மேல்சட்டைகளை வாங்கி வந்துள்ளார். ஜால்ஜிபியிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் மண்டி உள்ளது. இதில் பாதி தூரத்தை வணிகர்கள் நடந்தே கடக்கின்றனர்.

“சந்தையின் முதல் சில நாட்களில், வியாபாரம் ஆகிவிடும் என நினைத்தோம்,” என்கிறார் அவர். “இந்த ஆண்டு எனக்கு 50 சதவிகிதம் தான் வியாபாரம் நடந்துள்ளது.”  டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் முன்சியாரி, பாகேஸ்வர் சந்தைகளில் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என குஜ்ஜிவால் நம்புகிறார். “அப்போது அநேகமாக [பணம்] இந்த நெருக்கடி சரியாகிவிடும். ”

நேபாளத்தில் ஜூம்லா, ஹம்லா மாவட்டங்களில் இருந்தும் இச்சந்தைக்கு குதிரை வியாபாரிகள் வந்துள்ளனர். இதற்காக அவர்கள் கால்நடைகளுடன் 10 நாட்கள் நடந்தே வந்துள்ளனர். ஒரு குழுவில் 40 குதிரைகள், கழுதைகள் கொண்டு வரப்பட்டதில், 25 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில், எல்லா கால்நடைகளும் சந்தைகளில் விற்றுவிடும். ஒரு குதிரையின் விலை ரூ.40,000. ஒரு கழுதையின் விலை ரூ.25,000. குன்றுகளில் வசிப்பவர்களுக்கு இந்த விலங்குகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். சில சாலைகள் மட்டுமே உள்ள இப்பிராந்தியத்தில் பொதி சுமக்க இவற்றை பயன்படுத்துவதால் இந்த விலங்குகளுக்கான தேவை அதிகம் உள்ளது.

“இன்று சந்தையின் கடைசி நாள். எங்களால் ஏழு குதிரைகளை விற்க முடியவில்லை,” என்கிறார் ஹம்லாவின் மற்றொரு குழுவைச் சேர்ந்த குதிரை வியாபாரி நார் பஹதூர். “இந்த பணமதிப்பு நீக்கம் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஜால்ஜிபி வந்த பிறகு தான் எங்கள் தலைவிதி தெரிந்தது.”

PHOTO • Arpita Chakrabarty

சந்தையில் நேபாள குதிரை வியாபாரிகள்: எங்களுக்கு இந்த பணமதிப்பு நீக்கம் பற்றித் தெரியாது. ஜால்ஜிபி வந்த பிறகு தான் எங்கள் தலைவிதி தெரிந்தது (புகைப்படம்: கிருஷ்ணா கர்பியால்)

குன்றுகள் இருட்டுவதற்கு முன் ஜால்ஜிபியை விட்டுச் செல்ல வேண்டும். தார்ச்சுலாவில் அடுத்த நாள் காலை பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க ஆண்களும், பெண்களும் டஜன் கணக்கில் தனி வரிசைகளில் காத்திருக்கின்றனர். வங்கி இன்னும் திறக்கவில்லை.

இந்திய-நேபாள எல்லையில் கடைசி நகரம் தார்ச்சுலா. 155 கிலோமீட்டர் தூரத்தில் சீனாவின் திபெத்திய தன்னாட்சி பகுதியான தக்லாகோட்டிற்கு இப்பாதை செல்லும். இந்நகரம் நீண்ட காலமாகவே நேபாள மக்களையும், அவர்களின் பணத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது அண்டை நாட்டின் பணத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுவிட்டது. இங்கு இந்திய பணத்தை விட அவை தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

“எங்களிடம் இந்தியப் பணம் கிடையாது. வாடிக்கையாளர்கள் இந்தியப் பணமாக கொடுக்கின்றனர். நேபாள பணமாக நாங்கள் அதை மாற்ற வேண்டும். பெரும்பாலானோர் நேபாள பணம் கொண்டு மளிகைப் பொருட்கள், ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். எல்லோரும் பணப் பரிமாற்ற கவுன்டர்களில் [எல்லையில் உள்ளது] பணத்தை மாற்றிக் கொள்வோம்,” என்கிறார் டாக்சி ஸ்டான்டில் கடை வைத்துள்ள ஹரிஷ் தாமி.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களில், தார்ச்சுலாவில் உள்ள கவுன்டர்களில் இந்திய பணத்தை நேபாள பணத்திற்கு மாற்ற பலரும் திரண்டனர். அவர்களில் இந்தியாவில் வேலை செய்யும் நேபாள தினக்கூலித் தொழிலாளர்களும், இந்த எல்லை நகரில் வசிக்கும் இந்தியர்களும் அடங்குவர். “100 இந்திய ரூபாய் என்பது நேபாள பணத்தில் 160 ரூபாய்க்கு சமம். பொதுவாக மக்கள் நேபாள பணத்தை தான் இந்திய பணத்திற்கு மாற்றுவார்கள். அவர்கள் எல்லைப் பகுதிகளில் வசிப்பதால் இந்திய சந்தைகளுக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரவேண்டி இருக்கும்,” என்கிறார் தார்ச்சுலாவின் அமர் உஜாலா பத்திரிகையின் உள்ளூர் பத்திரிகையாளரான கிருஷ்ணா கர்பியால். “நவம்பர் 8-க்கு பிறகு இது தலைகீழாகிவிட்டது.”

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஆறு நாட்களில் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தார்ச்சுலா வந்தடைந்தன. “இந்நகரத்தில் 25,000 பேர் வசிக்கின்றனர். மூன்று வங்கிகள் உள்ளதால் தொடக்கத்தில் பெரிய கூட்டமில்லை,” என்கிறார் கர்பியால். “2-3 நாட்களுக்கு வங்கிகளும், ஏடிஎம்களும் பண விநியோகத்தை நிறுத்தியதால், மக்களுகு பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. பிறகு நேபாள பணம் தான் எப்போதும் போல காப்பாற்றியது.”

இக்கட்டுரைக்காக நவம்பர் இறுதியில் கட்டுரையாசிரியர் தார்ச்சுலா சென்றார்.

தமிழில்: சவிதா

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha