உத்தராகண்ட் மாநில மலை மாவட்டங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும்.

"குரங்குகளின் தொல்லைகள் தொடர்வதால் எங்கள் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்கு கேட்க மட்டும் எங்களிடம் வருகின்றன. நாங்கள் வாக்களிக்காவிட்டால், 'நீங்கள் வாக்களிக்கவில்லை, எனவே எங்களிடம் புகாரும் கூறாதீர்கள்,'” என்று சொல்வதாக புரான் லால் சிங் தெரிவிக்கிறார்.

அல்மோரா மாவட்டத்தின் சோமேஸ்வர் வட்டத்தில் உள்ள ஜல் தவுலர் கிராமத்தில் பிரகாசமான பிப்ரவரி காலை வேளையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தேர்தல் பேரணிகள் அரை கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து நடந்தபோதும் அவை, புரான் லால் மற்றும் அவரது மனைவி நந்தி தேவி ஆகியோரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருவரும் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர்.

PHOTO • Arpita Chakrabarty

அல்மோரா மாவட்டத்தின் சோமேஸ்வர் வட்டத்தில் உள்ள ஜல் தவுலர் கிராமத்தைச் சேர்ந்த நந்தி தேவி மற்றும் புரான் லால் ஆகியோர் தங்கள் கடுகு மற்றும் கோதுமை பயிர்களின் பெரும்பகுதியை இழந்துவிட்டனர். இப்போது உருளைக்கிழங்கு பயிர்களை வளர்க்க முயற்சிக்கின்றனர்

வயது 50களில் உள்ள இத்தம்பதியினர், கடந்த நவம்பரில் தங்கள் மூன்று ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் கடுகு விதைத்திருந்தனர். ஆனால், மார்ச்- ஏப்ரல் மாதங்களில் அறுவடை தொடங்குவதற்குள், குரங்குகள் கூட்டம் வந்து, பெரும்பாலான பயிர்களை நாசம் செய்தன. "ஒரு சில பயிர்கள் மட்டுமே எஞ்சின, அவை கடுகு கீரைகளை வளர்க்க போதுமானதாக இல்லை", என்று நந்தி தேவி வருத்தத்துடன் கூறுகிறார். அவர்கள் இப்போது உருளைக்கிழங்கு விதைக்க நிலத்தை தயார் செய்து வருகின்றனர். "சொந்த பயன்பாட்டிற்கு கிடைத்தால் கூட போதும்..." என்கிறார் அவர்.

கோஷி, சாய் ஆகிய இரண்டு ஆறுகள் சோமேஸ்வர் பள்ளத்தாக்கில் பாய்கின்றன. இங்குள்ள நிலம் வளமானது. ஆனால் நீர்ப்பாசனம் மற்றும் நீரேற்று அமைப்புகள் போதுமானதாக இல்லை. மேலும், குரங்குகள் - காட்டுப்பன்றிகள் கூட - மலைகளின் விவசாயத்தை பாதிக்கச் செய்கின்றன. ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை , குரங்குகளின் அட்டகாசம் இவ்வளவு இல்லை என்று கிராமமக்கள் கூறுகிறார்கள் - எப்போதாவது ஒரு சில குரங்குகள் உள்ளே வரும். ஆனால், உத்தராகண்ட் நகரங்களில் பிடிபட்ட குரங்குகளை வனத்துறையினர் மலை மாவட்டங்களின் வனப்பகுதிகளில் விட்டுச் செல்வதால் அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஹரித்வார் வனக்கோட்டத்தில் உள்ள சிடியாப்பூர் மீட்பு மையத்தில் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் சேர்த்து 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட குரங்குகள் கருத்தடை வசதி மையம் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், அல்மோரா போன்று பிற மலை மாவட்டங்களிலும் குரங்குகள் விடப்படுவது அதிகரித்துள்ளது. அவ்விலங்குகளுக்கு போதிய உணவு இல்லை. எனவே அவை கிராமங்களில் உள்ள பயிர்களை தாக்குகின்றன.

PHOTO • Arpita Chakrabarty

உத்தராகண்ட் மாநிலத்தின் மலை மாவட்டங்களில் பெருகி வரும் குரங்குகள், பயிர்களைத் தாக்குவதையும், கிட்டத்தட்ட முழு வயல்களையும் அழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன

பசியால் வாடும் உயிரினங்கள் ஒருபுறம் என்றால், போதிய நீர்ப்பாசனம் இல்லாமல், சோமேஸ்வர் பள்ளத்தாக்கு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்போது தரிசாக உள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். விவசாயப் பிரச்சினைகளைத் தவிர, மலை கிராமங்களில் வேலை வாய்ப்பின்மை, பள்ளிகளின் குறைவான எண்ணிக்கை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாமை ஆகியவையும் சமவெளி அல்லது மாநிலத்திற்கு வெளியே இடம்பெயரும் நிலைக்கு மக்களை தள்ளுகின்றன.

மாநிலத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உத்தராகண்ட் கிராமங்கள் மக்கள்தொகையின்றி வெறிச்சோடி வருகின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அல்மோராவில் உள்ள 105 கிராமங்களிலும் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள 331 கிராமங்களிலும் மக்களே இல்லை. ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் 16,793 கிராமங்களில் 1,053 கிராமங்கள் முற்றாக கைவிடப்பட்டுள்ளன என்றும், 405 கிராமங்களில் 10க்கும் குறைவான மக்களே இருப்பதாகவும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு சொல்கிறது.

PHOTO • Arpita Chakrabarty

சோமேஸ்வரில் பூட்டிய வீடுகளும், தரிசு நிலங்களும்: உத்தராகண்டில் முழு கிராமங்களும் காலியாகிவிட்டன

மாநிலம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மரச் சிற்பங்களுடன் கூடிய ஏராளமான குமானி பாணி வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. மேற்கூரைகள் சரிந்து, களைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. வீட்டின் உரிமையாளர்கள் ஹல்த்வானி, டேராடூன், டெல்லி போன்ற நகரங்களுக்குச் சென்றுள்ளனர் . அல்மோரா மாவட்டத்தின் பல வட்டாரங்களில், இப்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர் - அவர்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த கிராம வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவர்களின் குடும்ப ஆண்கள் நகரங்களில் வேலை செய்து, மாதந்தோறும் வீட்டிற்கு பணம் அனுப்புகின்றனர்.

அல்மோரா மாவட்டத்தின் பாசியா சானா வட்டத்தில் உள்ள பாபுரியா நயலில் பூட்டப்பட்ட வீடுகள் வறுமை, அவநம்பிக்கையை பேசுகின்றன. பின்சார் வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளதால் கிராமத்திற்கு சாலைவசதி கிடையாது. சரணாலயத்திற்குள் ஹோட்டல்களுக்குச் செல்லும் சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த கிராமத்தை அடைய எட்டு கிலோமீட்டருக்கு செங்குத்தான மலையேற்றம் தேவைப்படுகிறது. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில், 4ம் வகுப்பில், இரண்டு மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். ஒட்டுமொத்த கிராமத்தில் அவர்கள் மட்டுமே குழந்தைகள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாபுரியா நயலில் 130 பேர் இருப்பதாக பதிவாகியிருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை 60ஆக குறைந்துள்ளது என்று பள்ளி ஆசிரியரான சம்பா பிஷ்ட் மதிப்பீடு செய்கிறார்.

PHOTO • Arpita Chakrabarty

பாபுரியா நயலில் பூட்டப்பட்ட வீடுகள் வறுமையையும், அவநம்பிக்கையையும் பேசுகின்றன: பிப்ரவரி 15 தேர்தலைப் புறக்கணித்த இந்த கிராமத்தில் இன்னும் 60 பேர் மட்டுமே வசிப்பதாக இங்குள்ள பள்ளி ஆசிரியர் மதிப்பீடு செய்கிறார்

PHOTO • Arpita Chakrabarty

பாபுரியா நயலை அடைவது கடினமான எட்டு கிலோமீட்டர் மலையேற்றத்தை உள்ளடக்கியது; இங்கு சாலைவசதி கிடையாது

பாபுரியா நயல்வாசிகள் பிப்ரவரி 15 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். "அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யாதபோது தேர்தலால் என்ன பயன்?" என்று கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியரான பூஜா மெஹ்ரா கேட்கிறார்.

தேர்தலுக்கு முன்பு, அல்மோராவின் பெண்கள் ஒன்றுக்கூடி குரங்குகள் குறித்து புகார் அளித்தனர். மேலும் அரசியல் கட்சிகளும், அரசும் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரினர். அல்மோராவில் உள்ள 80 கிராமங்களைச் சேர்ந்த 4,000 பெண்களின் தளமான மகிளா ஏக்தா பரிஷத், இந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு இரண்டு மாதங்கள் வீடு வீடாக சென்று பெண்களிடம் பிரச்சாரம் செய்தது.

காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்து வேட்பாளர்களிடம் பிரமாண பத்திரங்களை இக்குழு வலியுறுத்தியது. துவாரஹாட் தொகுதியில் உத்தரகாண்ட் கிராந்தி தளத்தைச் சேர்ந்த புஷ்பேஷ் திரிபாதி மட்டும் பிரமாணப் பத்திரம் அளித்து, இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்வதாக குழுவிடம் உறுதியளித்தார்.

"மனித-விலங்கு மோதல் ஒரு சமூகப் பிரச்சினை, ஆனால் நாங்கள் அதை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்ற விரும்புகிறோம். பகலில் குரங்குகளும், இரவில் காட்டுப்பன்றிகளும் பயிர்களை தின்பது பெரிய பிரச்சனை தான். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. ஏனென்றால் கிராமங்களில் இருந்து ஆண்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.  பெண்கள் கிராமங்களில் தங்கி விவசாயப் பணிகளை செய்கின்றனர்", என்று பரிஷத்தின் தலைவர் மதுபாலா கண்ட்பால் கூறுகிறார்.

PHOTO • Arpita Chakrabarty

அல்மோராவில் உள்ள 80 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மகிளா ஏக்தா பரிஷத்தை உருவாக்கியுள்ளனர்: துவாராஹட் மற்றும் பிற தொகுதிகளில், பிப்ரவரி 15 தேர்தலுக்கு முன்பு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவர்கள் நடத்தினர்

"மக்கள் இடம்பெயராமல் இங்கு ஏன் இருக்க வேண்டும்?" என்று சோமேஸ்வரில் ஓய்வுப்பெற்ற வன அதிகாரி சங்கர் வர்மா கேட்கிறார். தனது இரண்டு மகன்களும் டெல்லி, ஹல்த்வானியில் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. "அவர்கள் நகரங்களில் கஷ்டப்பட்டாலும் கூட, பள்ளி வசதிகள், நல்ல மருத்துவம், வேலைவாய்ப்புகள் அங்கு உள்ளன."

நந்தி தேவி மற்றும் புரான் லாலின் மூத்த மகன், ஹோட்டல் மேலாண்மை படித்துவிட்டு சோமேஸ்வரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜஸ்பூரில் ஒரு ஹோட்டலில் பயிற்சியில் உள்ளார். "என் இளைய மகன் வீட்டில் தொலைக்காட்சிப் பார்க்கிறான்", என்று புரான் லால் கூறுகிறார். சோமேஸ்வரில் உள்ள அரசு இன்டர் கல்லூரியில் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்தாலும், ஓரளவு வருமானம் கிடைக்கிறது. "நிலத்தில் எதையும் பயிரிட வேண்டாம் என்று அவர் எங்களிடம் சொல்கிறார். ஏனென்றால் குரங்குகள் எல்லாவற்றையும் அழித்துவிடும்..."

மார்ச் மாதத் தொடக்கத்தில், தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில், நந்தி தேவியும், புரான் லாலும் உருளைக்கிழங்கை விதைக்கின்றனர். மார்ச் 11 அன்று அடுத்த உத்தராகண்ட் அரசு அமைப்பது யார் என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா என அவர்களிடம் நான் கேட்டேன். "தேர்தல்கள் வருகின்றன, செல்கின்றன. ஆனால் எங்கள் வாழ்க்கை மாறாது. அவை மோசமடைகின்றன", என்று புரான் லால் கூறுகிறார். "எங்கள் கிராமத்தில் குரங்குகள் மற்றும் பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முன்வந்தால் மட்டுமே, எங்கள் பயிர்களையும் உயிர்களையும் காப்பாற்ற முடியும்."

தமிழில்: சவிதா

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha